
எனக்கு அப்போது ஏழெட்டு வயதிருக்கும். எங்கள் முந்திரிக்காட்டில் அப்பா மரத்திலிருக்கும் முந்திரிப் பழத்தை ஒவ்வொன்றாகத் தொரட்டிக்கொண்டு தட்ட, அம்மா கீழே விழும் பழங்களையெல்லாம் கூடையில் பொறுக்கிக்கொண்டிருந்தாள். அக்கா சற்றுத் தொலைவில் பழங்களைக் கும்பலாகக் கொட்டிய இடத்தில் உட்கார்ந்து பழத்தையும் கொட்டையையும் தனித்தனியாகத் திருகிப் போட்டுக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு மரத்தடியிலும் அதன் சருகுகள் ஓரிடத்தில் கூட்டிவிடப்பட்டிருக்கும். அதில் விழுந்து விளையாடுவதும் மரக்கிளைகளில் தொங்கி விளையாடுவதும்தான் என் பொழுதுபோக்கு அங்கே.
அன்றும் அந்தச் சருகுகளில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தேன். அம்மா சொன்னாள், “பூச்சி பொட்டு இருக்கப்போவுதுய்யா. இந்தாண்ட வந்துரு”. நான் சட்டென எழுந்து தாழ்வான கிளையொன்றைப் பிடித்துத் தொங்க, நான் எழுந்த இடத்திலிருந்து ஒரு நல்ல பாம்பு தலைதூக்கி நின்றது. அம்மா கத்திவிட்டாள். அப்பா பதறி ஓடிவந்தார். சிறிது நேரத்தில் என்னை லாவகமாகக் கிளையிலிருந்து தூக்கி வந்துவிட்டார் அப்பா. பெரிய பாம்புதான், படமெடுத்து நின்றது. மூன்று பேரும் விழியசைக்காமல் பார்த்திருக்க, அப்பா திடீரென வேறு எங்கோ ஓடினார். அம்மா அக்காவை அழைத்து என்னை அவள் பொறுப்பில் விட்டாள். அக்கா என்னைத் தூக்கிக்கொண்டாள். அம்மா, பாம்பு எங்கும் போய்விடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பா மூன்று ஆட்களுடன் வந்தார். வந்தவர்கள் கையில் நீள நீளமான கழிகள். சருகிலிருந்து பாம்பை வெளியே தள்ளி வந்ததும் ஆளாளுக்கு நாலு அடி. பாம்பு செத்தது. பிறகுதான் பேசிக்கொண்டார்கள், கெண்டைக்கால் மொத்தம் தடிமனும் எட்டு அடி நீளமுமாம். செத்த பாம்பை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை அப்பா. அவர்களை அனுப்பிவிட்டு பாம்பைத் தானே தூக்கிச்சென்று எங்கள் குலதெய்வமான பாவாடைராயன் கோயிலில் வைத்துப் பாலூற்றி கற்பூரம் கொளுத்தி ஒரு சிறிய பூசையையே நடத்தினார். எனக்கு இரண்டு சந்தேகம் எழுந்தது, இதை ஏன் அப்பாவே அடிக்கவில்லை? அடித்தபின் ஏன் இந்தப் படையல்?
என்னுடைய அப்பாவின் உருவம் கிட்டத்தட்ட அந்தப் பாவாடைராயனைப் போலத்தான் இருக்கும். கத்தையான முறுக்கு மீசை, அகன்ற விழிகள், அகலமான முகவாட்டம், வாட்டசாட்டமான உடல்வாகு. நெடுமுடிதான் இல்லை, ஆனால் எப்போதும் தலைப்பாகை கட்டுவார். எண்பது-தொண்ணூறு கிலோ முந்திரிக்கொட்டை மூட்டையைக்கூடத் தலையில் தூக்கிக்கொண்டு மூன்று கிலோமீட்டர் நடந்தே வீட்டிற்குக் கொண்டு வந்து போட்டுவிட்டு மீண்டும் தோப்புக்குச் சென்றுவிடுவார். சிறுவயதில் நிறைய முறை பாவாடைராயனுடன் அப்பாவை ஒப்பிட்டுப் பார்த்ததுண்டு. சில சமயம் அப்பாவைப் பார்த்துப் பயந்திருக்கிறேன். அவ்வப்போது அப்பா வீட்டில் கண்ணாடிப் பார்த்து முகத்தை ஒரு மாதிரி விகாரமாக வைத்து மீசையை முறுக்கிக்கொள்வார். இவர் ஏன் பாம்புக்குப் பயப்படுகிறார்? வீட்டிற்கு வந்தபின் அம்மாவிடம் கேட்டேன்.
“உங்கப்பாவ நீ பாவாடராயனா பார்க்கற, ஆனா அவருக்கு என்ன நெனப்புத் தெரியுமா? அவுருக்குள்ள எப்பவுமே பாவடராயன் இருந்துட்டே இருக்கானாம். அதனாலதான் அந்த மீச முறுக்கு, தலப்பாக்கட்டு எல்லாம்”.
அப்பா ஒரு தெய்வப் பக்தனாகவெல்லாம் நடந்துகொண்டதேயில்லை; அடிக்கடி கோயில் குளங்களுக்குச் செல்பவருமில்லை. எனக்குத் தெரிந்து ஒரே ஒருமுறை கெடா வெட்டி படையல் வைத்திருக்கிறோம். அதுவும் மாமா நேர்ந்துவிட்ட கெடா. வெட்டும்போது அப்பா அங்கில்லை. சாமி கும்பிட மட்டும் வந்தார். ஆங்… ஊரில் கோயில் திருவிழா சமயங்களில் பம்பை மேளம் அடிக்கும்போது மட்டும் அங்கு இருக்கமாட்டார். மற்ற நேரங்களில் அவர்தான் எல்லா வேலைகளையும் செய்வார். ஒருநாள் பம்பை அடிக்கும்போது அங்கிருந்த அவருக்கு சாமி வந்துவிட்டதாகச் சொன்னார்கள். நான் கோயில் மதில் சுவரில் உட்கார்ந்து அதைப் பார்த்தேன். அது அப்பாவே இல்லை; பாவாடைராயன். முதல் பத்துப் பேர் அடிவாங்கிச் சென்றபின் இன்னொரு பத்துப் பேர் வந்து அப்பாவைப் பிடித்து மலையேற்றினார்கள்.
“ஊருல இருக்குற ஆம்பளைங்க எல்லாம் கெட்டு குட்டிச்சுவரா போறானுவளே, உங்கப்பா ஒரு தப்பு தண்டாக்கு போனதுண்டா… அந்த ராயனே சாராயம் குடிக்கிறவன்தான்; சுருட்டு புடிக்கிறவந்தான். உங்கப்பா எதையும் தொட்டதில்ல. காரணம், இதான்… அவுருக்குள்ள பாவாடைராயன் எப்பவும் இருக்கானாம். அப்படிப்பட்ட உங்கப்பா தப்பு பண்ணிட்டதா நெனச்சி இனிமே பண்ணமாட்டேன்னு சொல்லி செஞ்ச ஒரு சத்தியம்தான் அந்த பாம்ப அடிக்காததுக்குக் காரணம்.”
நான் வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
“நம்ம தோப்புல தண்ணி எறைக்குற கெணறு இருக்கே, ஏழு வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் தூர்ந்துபோய்தான் கெடந்துது. உன் சித்தப்பனும் பெரியப்பனும் சேர்ந்து அண்ணன் தம்பி சண்டைல கெணத்த அப்பிடியே போட்டுட்டானுங்க. மூனு பேருக்கும் பொதுவு அது. பொறுத்துப் பொறுத்து பார்த்த உங்கப்பா, எவனும் எதுவும் பண்ண வேணா போங்கடா நானே பார்த்துக்குறேன்னு முடிவு பண்ணி ஒத்த ஆளா கெணத்துல எறங்கி தூர்வார ஆரம்பிச்சிட்டாரு. நாப்பதடி கெணறு. அப்ப நீ என் வவுத்துக்குள்ள எட்டு மாசம். தண்ணி குடுக்குறது, ஏணி கயித்த போடுறதுன்னு நான் மட்டும்தான் ஒத்தாச. முள்ளு செடி, பொதரு, மண்ணு கல்லுன்னு நாலு நாள் எல்லாத்தையும் வெட்டி வாரிப்போட்டாரு. ஆழத்துக்கு போனப்ப மண்ணுமுட்டுன்னு நெனச்சி ஒரு பாம்பு புத்த வெட்டிபுட்டாரு. அவ்ளோதான் மொதல்ல ரெண்டு நல்ல பாம்புதான் வந்துச்சு. பயத்துல மேல ஏறி வந்துடலாம்ன்னு ஏணி கயித்துகிட்ட வர பாத்தப்ப இன்னும் மூனு பாம்பு அங்க. சுத்தி இருவது பாம்பு. தப்பிக்க முடியாம நின்னவரு ஒரு நிமிஷம் கண்ணமூடி என்ன நெனச்சாரோ தெரியல, அத்தன பாம்பையும் அடிச்சே கொன்னுட்டாரு. அப்பிடி ஒரு வேகமும் தைரியமும் எப்பிடித்தான் வந்துச்சோ! பாவாடராயா!… செத்த பாம்ப எல்லாம் எரிச்சிடலாம்னு எடுக்கப் போகும்போதுதான் பார்த்திருக்காரு அங்க கொத்துகொத்தா கெடந்த பாம்பு குஞ்சுங்கள. இருவது செத்த பாம்புங்களையும் தோள்ல போட்டுக்கிட்டு மேல வந்தவரு என்ன பார்த்ததும், ஒரு பெரிய தப்பு பண்ணிட்டோம்ன்னு நெனச்சி அப்புடியே உக்காந்து அழுவ ஆரம்பிச்சிட்டாரு.”
அம்மா சற்று அமைதியானாள்.
“இப்பவரைக்கும் உன் காலு இப்பிடி ஆனதுக்கு அதுதான் காரணம்ன்னு நெனச்சி நெதம் அழுதுட்டுதான் இருக்குறாரு.”
ஆம், சொல்ல மறந்துவிட்டேன். நான் ஒரு மாற்றுத் திறனாளி. பிறந்ததுமே போலியோ காய்ச்சலால் ஒரு கால் பாதிக்கப்பட்டுவிட்டது.
“அப்பகூட உங்கப்பா என்ன சொன்னாரு தெரியுமா? பாவாடைராயன தப்பு பண்ண வச்சிட்டேன். இனிமே எப்பிடி அவன் என்கிட்டே வருவான். நான் எப்பிடி அவன் மொகத்துல முழிப்பேன்னுதான். அன்னைக்கு ராத்திரி எட்டடி ஒசரத்துல நாலடி நீள அருவாளோட சட்டை இல்லாம கருகருன்னு நெஞ்சு நெறைய நக தொங்க, கால்ல சலங்கையோட விரிஞ்ச கண்ணும் பெரிய மீசையும் துருத்துன நாக்குமா பாவாடைராயன் உங்கப்பா முன்னாடி வந்து உர்ர்ர்ர் உர்ர்ன்னு உறுமிக்கிட்டே ஆடிருக்காரு. உங்கப்பன் உடம்புல உசுரு இல்ல, அவ்ளோ பயம். திம்மு திம்முன்னு ஆடிகிட்டு இருந்த ராயன் பெருங்கொரலெடுத்து கத்தியிருக்கான், “ஏன்டா கொன்ன? ஏன் கொன்ன? எங்கப்பனோடதுடா அது… எங்கப்பனோடது… உன் புள்ளைய…” அவ்ளோதான் உங்கப்பன் தூக்கத்துல இருந்து சடார்ன்னு எழுந்து அப்டியே தலைக்கு மேல கைய கூப்பி தொப்புன்னு குப்புற படுத்து, “அப்பா பாவாடராயா… எஞ்சாமி… எம்புள்ளைய ஏதும் பண்ணிடாத. உனக்கு என்ன வேணும்னாலும் பண்ணிடறேன். எம்புள்ளய வுட்ரு… எம்புள்ளைய வுட்ரு… இனிமே என் வாழ்நாள்ல எந்த உசுரையும் கொல்லமாட்டேன். இது சத்தியம்… இது சத்தியம்… இது சத்தியம்…” இப்டியே ரொம்ப நேரம் சொல்லிச் சொல்லி கத்திகிட்டு இருந்தாரு. அதுக்கப்பறம் காலைல மொத வேலையா ராயன் கோயிலுக்குப் போயி கற்பூரத்து மேல அடிச்சி சத்தியம் பண்ணிட்டுதான் வந்தாரு.”
அப்போது வீட்டின் கதவைத் திறந்து உள்ளே வந்த பாவாடைராயனுக்குள் இருந்த என் அப்பனைப் பார்த்தேன்.



