
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்த் மாகாணத்தில் இருக்கும் குயின்ஸ்லாந்து தமிழ்மன்றத்தினர் – எழுத்தாளர், கதைசொல்லி திரு.பவா செல்லதுரை அவர்களுக்காக இளவேனில் 2026 என்னும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். நான் வசிக்கும் இடத்தில் இருந்து வெகுதொலைவில் இருந்தது நிகழ்ச்சி நடக்கவிருந்த இடம். போகலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் பவ்யா போவோமா என்று குறுந்தகவல் அனுப்ப ‘சரி’ என்று கூறிவிட்டேன். அந்த நாளும் வந்தது. என் அண்ணாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் பவா அவர்களுக்கு நான் எழுதிய ‘திம்மராஜபுரத்துக் கதைகள்’ புத்தகத்தைக் கொடுக்கலாம் என்ற நினைப்பைப் பகிர்ந்த போது, ‘நிச்சயமாகச் சந்தித்துக் கொடு’ என்று ஊக்கமளித்தான். இதற்குள்ளாக ரவி சார் எழுதிய ஒரு பதிவில் ரஜினியும் இந்துவும் பவா அய்யாவுடன் இருப்பதைக் கண்டு ரஜினி அவர்களுக்கே என் விருப்பத்தை செய்தியாக அனுப்பினேன். உடனடியாக அழைத்துப் பேசியவர், “நீங்கள் எழுத்தாளர் என்று சொல்லவே இல்லையே” என்றபடிக்கு அடுத்தநாள் “சீக்கிரமே வாருங்கள், எழுத்தாளர்கள்தான் விளக்கேற்ற வேண்டும்” என்று கூற, எனக்கோ வார்த்தைகளில்லை. “அதெல்லாம் வேண்டாம், ரஜினி. அவரை ஒரு நிமிடம் சந்தித்துப் புத்தகத்தைக் கொடுத்தால் போதும்” என்றேன். “அதெல்லாம் கொடுக்கலாம், வாங்க” என்றார்.
“சேர்ந்து போகலாம்” என்று சூர்யா கூற, நான் மூன்றாவதாக ஒரு தோழியிடம் “சேர்ந்து போவோம்” என்று வாக்குக் கொடுத்து வைத்திருந்தேன். சோதனையாக என்னுடைய காரில் ப்ரேக் பிரச்சனை செய்ய கணவர் உபேர் எடுத்து போய்விட்டு வா என்றார். எனக்கோ அப்படியான காரில் கப்சிப் எனப் போவதில் விருப்பம் இல்லை. கணவருடன் அல்லது நண்பர்களுடன் இளையராஜாவின் இசையைக் கேட்டப்படி கதைத்துக் கொண்டும் சாலையை வீடியோ எடுத்துக் கொண்டும் செல்வது பிடிக்கும். இப்படி பிரயாணங்களில் எனக்குப் பேசுவதற்கு ஏதேனும் இருந்துக் கொண்டே இருக்கும். நிகழ்வு முடிய இரவு 9 மணிக்கு மேலாகும், மழைநாளாக வேறு இருக்கிறது, தூரமும் அதிகம் என்ற குழப்பங்களிடையே தோழி பவ்யா “நீங்க வந்துட்டீங்கன்னா, திரும்ப நான் கொண்டு விடுகிறேன்” என்று கூறினார். இங்கே பொது போக்குவரத்து 50 செண்ட்ஸில் இருந்தே இருந்தாலும் காரில் 45 நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரம் 2 மணி நேரமாகும். எல்லா இடங்களுக்கும் அது சரிபடாது. முக்கியமாகப் புடவையைச் சுற்றிக் கொண்டு மழைநாளில் ஏறி இறங்கி போக சங்கடமாக இருக்கும். சரி இங்கிருந்து வேறு யாராவது போகிறார்களா என்று கேட்டதில், நண்பர் மாதவன் சட்டெனத் தொலைபேசியில் அழைத்து விவரம் அறிந்து, ‘அட இப்ப என்னங்க நம்ம வீட்ல இரண்டு கார் இருக்கு. நம்ம காரை எடுத்துட்டுப் போங்க’ என்று கூறுகையில் நிஜமாகவே ஆச்சரியப்பட்டுப் போனேன். தமிழ்ப்பள்ளியில் சக ஆசிரியராகவும் அங்கே பயிலும் குழந்தைகளின் தந்தையாகவும் அவரையும் அவர் துணைவி நித்யாவையும் அறிந்திருந்தேன். இரண்டு பேரும் எவ்வளவோ மறுத்தும் கேட்கவில்லை. வாகனத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு போனார், மாதவன். இப்படியான சிலர்தான் மழை பொழியக் காரணமாய் இருக்கிறார்கள் என்ற எண்ணம் அந்த மழைநாள் முழுமைக்கும் இருந்தது.
தன் குடும்பத்தோடு சேர்ந்து வராமல் எங்களோடு வருகிறேன் என்று தோழி சூர்யா “நான் ட்ரைவ் பண்றேன் பா(அவருக்கு நான் அத்தனை தூரம் ஓட்டிவிடுவேனா என்ற சந்தேகமும், அக்கறையும்தான்)” என்று காரை எடுக்க தோழிகள் மூவரும் உற்சாகமாகக் கிளம்பினோம்.
ஒரு மனிதரைப் பற்றி அறியதானே முகநூல் இருக்கிறது. தோழிகளிடம் முகநூல் ஆராய்ச்சிக்குப் பின் பவாவிற்கும் எனக்கும் ஐம்பது பரஸ்பர நண்பர்கள் இருக்கிறார்கள் என்றேன். அதில் நாலைந்து நெருங்கிய நண்பர்களிடம் “நான் பவாவைப் பார்க்கப் போறேனே” என்று சொல்லி வைத்திருந்தேன். “சந்தோஷமா போயிட்டு, கதை கேட்டுட்டு வாங்க” என்றார்கள். அதிலும் இருவர் “என் தோழி என்று அவரிடம் நிச்சயமாய் கூறுங்கள்” என்றும் அங்கிருந்தே என்னை அவருக்கு அறிமுகப்படுத்த நினைத்தார்கள். ஒருவர் அவர் பிக்பாஸ் போயிருக்கக் கூடாது என்று வருந்தினார். பவாவின் நலம் விரும்பிகள் எல்லோரும் சொல்வதுதானே அது.
பவா அவர்களை நான் கதைச்சொல்லியாகவே முதலில் அறிந்தேன். ஆச்சியிடம் கதைகள் கேட்டு வளர்ந்த என் பால்யத்தை மனதிற்குள் அசைபோட்ட வண்ணமிருந்தது அவரைக் காண ஏற்பட்ட அந்தப் பயணம். அடித்துப் பெய்யும் மழை, சில நினைவுகள், தோழிகளோடு உரையாடல், மனதிற்குப் பிடித்த பாடல்கள் என உற்சாகத்தோடும் பேராவலோடும் அந்த நிகழ்விற்காகப் பயணித்தோம்.
இங்கே இந்திரோபிளி நூலகம் அல்லாமல் தமிழ் ஆர்வலர்கள் முன்னெடுத்து பிரிஸ்பேனில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கலாம் நூலகத்திற்குப் போக வெகுநாளாய் எனக்கு ஆசை, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதிய காரணங்களால் போக முடியாமல் போனது. ஒருநாள் நிச்சயமாகப் போகலாம் என்று நட்புகளிடம் கூறியும் வைத்திருந்தேன். கூல்வின்பின் அரசுப் பள்ளி அரங்கத்தின் உள்ளே நுழைந்ததும் வாயிலின் அருகே வரிசையாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களைக் கண்டபோது மனம் சிறகடித்துப் பறக்கத் துவங்கியது. சிறுவயது முதலே அடிக்கடி செல்ல முடியாத திம்மராஜபுரத்து நூலகத்தின் மீது பெரும் விருப்பம் இன்னும் இருக்கிறது. நூலகம் என்றாலே தனி உற்சாகம். ஒவ்வொரு புத்தகத்தையும் ஒரு மனிதரைப் போல ஒரு புதிய உலகத்தைப் போலவே பார்க்கிறேன். முதன்முதலில் எனது பதினொரு வயதில் திம்மராஜபுரத்தின் நூலக அலமாரிகளில் புத்தகங்களைக் கண்டபோது விரிந்த அந்தச் சிறிய கண்கள் சட்டென உயிர் பெற்றது அப்பொழுது.
கடையில் கலர் கலராய்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மிட்டாய்களில்
எதைக் கேட்பது என்று குழம்பி தவிக்கும்
சிறுகுழந்தையெனத் திகைத்து நிற்கிறேன்
மேசை மீது அணிவகுத்திருந்த புத்தகங்களைக் கண்டு…
நான் சந்திரமுகியாக உள்ளுக்குள் மாறிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. சுஜாதா, அசோகமித்திரன், தோப்பில் முகம்மது மீரான் என்று கண்கள் பரபரக்கையில் விழியன், விஷ்ணுபுரம் சரவணன் என்று நண்பர்களின் புத்தகங்கள். இந்திரோபிளி நூலகத்தில் நண்பர் சரவணன் சந்திரன், நடுகல் ஆசிரியர் வாமு கோமு, நண்பர் விழியன் மற்றும் சரவணன் புத்தகங்களை ஏற்கனவே பார்த்து அவர்களுக்குப் புகைப்படங்கள் அனுப்பியும் வைத்திருந்தேன். மீண்டும் மீண்டுமா என்பது போல விழியன், சரவணன் புத்தகங்களைப் புத்தக அணிவரிசையில் பார்க்கையில் குழந்தைகள் உலகத்தில் தவிர்க்க முடியாத உயரத்தில் இருக்கும் இருவரையும் மனதார வாழ்த்தி விட்டு, இன்னும் வாசித்திராத ஸ்ரீரங்கத்து தேவதைகள் கண்டு கைகள் பரபரத்தாலும் மனதை அடக்கி ‘அசடே புத்தகத்தை எடுக்கலாம் இப்பொழுது, ஆனால் எப்படி கொண்டு கொடுப்பது’ என்று வாஞ்சையுடன் புத்தகங்களைப் பார்த்துவிட்டு அந்த மேசையைத் தாண்டி உள்நுழைந்தேன்.
தாய்த் தமிழ்ப் பள்ளியின் முதல்வர் சிவா கைலாசம் மற்றும் செயலாளர் ரஜினிகாந்த் அவர்கள் இங்கேயும் அங்கேயும் வேலையாக நடந்தபடி இருப்பதைக் காண முடிந்தது. ஏற்கனவே அறிமுகமான முகமாய் சாரதா அக்கா மட்டுமே அங்கிருந்தார். சாரதா அக்காவின் பெண் திருச்செந்தூரில் திருமணமாகி இருக்கிறார் என்பதில் கூடுதல் நெருக்கமும் கூட. ஒருமுறைதான் சந்தித்து இதையெல்லாம் பேசியிருந்தோம். ‘ஞாபகம் இருக்கிறதா’ என்ற கேள்விக்கு, ‘அதெப்படி மறப்பேன் வாருங்கள் எல்லோரையும் சந்திக்கலாம், நீங்கள் எழுத்தாளர் என்று இதுவரை தெரியாது’ என்றுவிட்டு என்னைக் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்று அவரது கணவர் ரவி அய்யா, வாசுகி அக்கா, செந்தாமரை அம்மா, சியாமளா அக்கா, மேகலா அக்கா என்று எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். வாசுகி அக்காவை ஏற்கனவே பிரிஸ்பேன் பறையிசை குழுவின் சார்பில் கரகம் வாங்க சந்தித்திருக்கிறேன். அவரது புத்தகங்கள் மாயோள் மற்றும் பிறைநுதற் சிறை அங்கே இருந்தது. கவிதையும் கதைகளும் எழுதியிருக்கிறார் என்று அறிந்தேன்.

தமிழ்த்தாய் வாழ்த்து, ஆஸ்திரேலிய தேசியக் கீதத்தைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றுதல். முதலாவதாக ராணி கணேஷ் என்ற பெயரை அழைத்து என்னைப் பற்றிய குறிப்புகளையும் திரையில் புகைப்படத்தோடு பகிர்ந்து வாசித்தார், ஜோஸ்லின். ஜோஸ்லின் மற்றும் நதியா இருவரின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். நன்றாகத் தமிழ் பேச வேண்டியவர்கள் கூட தமிழ்நாட்டில் தடுமாறும் காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவில் நல்ல தமிழில் அழகாகத் தொகுத்து வழங்கினார்கள். தொடர்ந்து புலவர் ரவி அய்யா, செந்தாமரை அம்மா, சியாமளா அக்கா, வாசுகி அக்கா மற்றும் நமது நிகழ்ச்சியின் நட்சத்திரம் கதைச்சொல்லி பவா செல்லதுரை அவர்களும் மேடைக்கு வந்தார்கள். அவரோடு மேடையைப் பகிர்ந்த தருணம் வாழ்வில் மறக்க முடியாதது. அவர் விளக்கேற்ற நாங்கள் ஒவ்வொருவராய் விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தோம். பிஎன்ஜியில் இந்திய சங்கத்தில் துணைத்தலைவராய் இருந்தபோதும் பப்புவா நியுகினி தமிழ்ச்சங்கத்தில் பொறுப்பில் இருந்தபோதும் இப்படியான பேறுகள் கிட்டியது என்றாலும் நான் யார் என்று தெரியாத ஆஸ்திரேலிய நாட்டில் என் எழுத்தை மதித்து இப்படி ஒரு வாய்பை ஏற்பாடு செய்த ரஜினி அவர்களுக்கும் குயின்ஸ்லாந்து தமிழ் மன்றத்தினருக்கும் பேரன்பும் நன்றிகளும். எழுத்தால் கிடைக்கும் மதிப்பு கொடுக்கும் உவகை அனுபவித்தால்தான் விளங்கும். மிக சமீபமாகத்தான் கொஞ்சம் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். ஆரம்ப காலத்தில் என் எழுத்துக்களைப் பிரசுரித்த வாசகசாலை, நுட்பம், தமிழ்வெளி, நடுகல் இதழ்களை நன்றியோடு நினைவுகூர்கிறேன். போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. இன்னும் சொல்லப்படாத கதைகளும் எழுதப்படாத வாழ்வியலும் குவிந்து கிடக்கிறன. சிட்டுக்குருவி ஒன்று அருவி நீர் அத்தனையும் அள்ளிக் குடிக்க ஆசைப்படுவதற்கு ஒப்பானதே அனைத்தையும் எழுதி விட துடிப்பதும். இங்கே ஆஸ்திரேலியாவில் சமயம் அதிகம் கிடைக்கையில் கணகாலமாய் கிடப்பில் வைத்திருக்கும் அரியநாயகிபுரம் நாவலை முடித்து விட வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தேன். சிறுகதை, கவிதை என்று கூட பொறுப்போடு அமர்ந்து எழுதுவதில்லை என்று என்னை நான் நோகும் முன் நண்பன் நிலாரசிகனிடம் அன்றாடம் திட்டுக்களை வாங்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு பாவமாய் முகத்தை வைத்துக் கொள்கிறேன். அதனையெல்லாம் தனி கட்டுரையாக ஆஸ்திரேலிய வாழ்க்கை என்று எழுத வேண்டும். சரி நிகழ்வுக்கு வருவோம்.
நாட்டிய நிகழ்ச்சியும் வாசுகி அக்கா வழங்கிய குழந்தைகளின் நாட்டுப்புறக் கலைகள் சார்ந்த நாட்டிய நாடகமும் கண்களுக்குப் பெரும் விருந்தாயின. காவடி ஆட்டமும், பொய்க்கால் குதிரையும் உருமி மேளமும் கடல் கடந்த தேசத்தில் மேடையில் பார்க்கையில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. எத்தனை மெனக்கெடல் இருக்க வேண்டும் பிள்ளைகளுக்கு இதை பழக்கிக் கொடுத்து, காவடி குதிரை எல்லாம் செய்பித்து அரங்கேற்றம் செய்வதற்கு. கருப்பசாமியின் ஆட்டமும் கருப்பா பாடலோடு அமர்க்களமாக இருந்தது. பிள்ளைகளின் ஒலிவாங்கி துவங்கி, உடை, மாலை என ஓடி ஓடி உதவிக்கொண்டிருந்தார், வாசுகி அக்காவின் கணவர் சித்திரசேனன் அய்யா. அப்பொழுதும் கூட பவா அவர்கள் தனக்கான நாற்காலியில் அமராமல் இரண்டாவது வரிசையில் சென்று அமைதியாக அமர்ந்து நிகழ்வை ரசித்துக் கொண்டிருந்தார்.
அந்தப் பொழுதும் வந்தது. ஆமாம். எதற்காக ஓடி வந்தேன். கதைச்சொல்லியின் கதைகளைக் கேட்க. அவர் பேசப் போகிறார். கதை கேட்க யாருக்குத்தான் பிடிக்காது. கதை சொல்வது ஒரு கலை. எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஒரு விடயத்தை ஏற்ற இறக்கத்தோடு நேரில் பார்ப்பது போல எதிராளியின் ஆர்வம் குறைந்திடாமல் சொல்வது பெரிய விஷயம்தானே. ஆச்சியிடம் கதைக் கேட்டு வளர்ந்த எனக்குக் கதைகள் கேட்பதும் சொல்வதும் விருப்பம். பால்யத்தில் மின்சாரமற்ற இரவுகளை ஆச்சியின் கதைகளுடனேயே கடந்தோம். வாசலில் அமர்ந்து அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு நிலா சோறு உண்டு, கதைகள் கேட்ட நாளினை இன்றைய பிள்ளைகள் அனுபவிக்கக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு எப்போதும் உண்டு. இப்போதும் விடுமுறைக்கு இந்தியாவிற்கு வருகையில் என் பிள்ளைகளுக்கு ஆச்சி கதைகள் சொல்கிறாள். ‘உங்க அம்மா என்ன செய்வா தெரியுமா, ராஜா மாமாவும் உங்க அம்மாவும் எப்படி விளையாடுவார்கள் தெரியுமா என்று எங்கள் சிறு சண்டைகள் வரை சொல்லிச் செல்வாள். ஆச்சி சொல்லச் சொல்லக் கேலியும் கிண்டலுமாகக் கதை கேட்பார்கள் என் பிள்ளைகள். ஆகக் கதை கேட்பதில் எனக்கு எத்தனைப் பிரியம் இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.
பவாவின் கதையாடல் எத்தனை பிரசித்தி. நானும் அவர் கதைகளை யுட்யூபில் கேட்டு இருக்கிறேன்தான். கதைச்சொல்லியின் கதைகளை யுட்யூப் அல்லாமல் நேரடியாக அதுவும் முதல் வரிசையில் அமர்ந்து கேட்கப் போகிறேன். மேடையில் அவருக்கு மரியாதை செய்த பின்னர் அவர் ரஜினிகாந்த் ஸ்டைலில் விடுவிடுவெனக் கீழே இறங்கி வந்துவிட்டார். அலங்கார நாற்காலியை இருவர் கீழே கொண்டு வந்து அவர் அமர ஏதுவாக இட்டனர். ஓ… அருகே இருந்து பேசப் போகிறார் என்று சந்தோஷமானோம். மனிதர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கதைகள் கூறினார், பேசினார், சிரித்தார், கேள்விகள் எழுப்பினார், பதில் கூறினார்… ஆச்சரியம் என்னவென்றால் அவருக்கோ மற்றவர்களுக்கோ சோர்வென்பதே இல்லை. தேநீர் இடைவேளை குறித்த எண்ணம் கூட வராமல் அத்தனை சுவாரசியமான பேச்சாடல் அது. ஒரு மனிதர் … ஆம்! ஒற்றை மனிதரின் உரையைச் சலிப்பு ஏற்படாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். வந்திருந்த குழந்தைகளும் பெரிய தொந்தரவு தராமல் சமத்தாக இருந்தார்கள். வெளியே பெருமழை பெய்து கொண்டிருந்தது, பவாவின் கதைமழையில் அது லேசாகத்தான் கேட்டது. இங்கே சனிக்கிழமை என்பது ஓய்வு நாளல்ல. அன்றுதான் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும், அன்றுதான் பாட்டு, பரதம், சிலம்பம் என்று பல வகுப்புகள் இருக்கும். பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட, அவர்கள் தோழமைகள் வீட்டிற்கு வருவார்கள், பிறந்தநாள் விழா இருக்கும். இத்தனையும் தாண்டி அங்கே அத்தனை பேர் வந்தமர்ந்திருந்தார்கள்! வீட்டில் குழந்தைகளை விட்டு வந்தவர்கள், குழந்தைகளைக் கூடவே அழைத்து வந்தவர்கள், அடுத்த நாள் இந்தியாவிற்கு மகள் கிளம்பும் சூழ்நிலையிலும் பவாவிற்காக அவர் கூறும் கதைகளுக்காக அங்கு வந்திருந்த தாய் எனப் பலதரப்பட்ட நண்பர்களைக் காண முடிந்தது. அத்தனைப் பேர் அமர்ந்திருப்பதைப் பார்த்துப் பவா கூறினார், இலக்கிய கூட்டத்தில் கூட்டமிராது. ஆகையால் கேமிராவை அந்தப் பக்கம் காண்பிப்பதில்லை. பேச்சாளரை மட்டும் தான் ஃபோக்கஸ் செய்வார்கள். ஆனால் இங்கு அப்படியில்லை, இத்தனைப் பேர் வந்திருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார். உள்ளபடியே எனக்கும் மகிழ்வாக இருந்தது. ஒரு நிமிடம் கூட அவர் இளைப்பாறவுமில்லை, அமரவும் இல்லை. தன்மேல் இவருக்கு என்ன கோபம் என்று மேலிருந்து கீழே குதித்த நாற்காலி யோசித்துப் பின்னர் அதுவும் அவர் கூறும் கதைகளில் ஆழ்ந்தது.
அவர் கூறிய சில கதைகளை ஏற்கனவே கேட்டிருந்தாலும் நேரில் கேட்க சுவாரசியமாகவே இருந்தது. ஓட்டம் கதையும் டாக்டர், நாய் கதையும் அவரின் சொந்தக் கதைகளும் சிரிக்கச் சிரிக்கச் சொன்னார். சேவல் கதை நான்
இதுவரையிலும் கேட்டிராத கதைதான். புதிய கதைகளை இன்னும் அதிகமாக அவர் சொல்ல வேண்டும் என்பது என் அவா. இப்படியான கதைச்சொல்லியின் வாயிலாகப் புதிய மற்றும் நல்ல எழுத்தாளர்கள் அறியப்பட்டால் நல்லது தானே. அதற்கு அவர் இன்னும் பல நல்ல கதைகளை இதே அழகியலோடு சொல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எழுத்தாளர்களுக்கும் சாமானியனுக்குமான வித்தியாசங்களைப் பற்றிக் கூறியவர், ‘எழுத்தாளனுக்குக் கொம்பா முளைத்திருக்கிறது… பிரபஞ்சன் ஆமாம் முளைச்சிருக்குன்னு சொல்வார்’ என்றார். ‘ஒரு விடயத்தைச் சாதாரணன் பார்ப்பதற்கும் எழுத்தாளன் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது’ என்றார். அவருக்குக் கிடைக்கும் மாலைகளும் மரியாதைகளும் எழுத்திற்குக் கிடைக்கும் வெகுமதி என்றே குறிப்பிடுகிறார். அயல்நாட்டில் எல்லோரும் அவருக்கு அளிக்கும் அன்பைக் கதைகளே கொடுத்தது என்கிறார். எழுத்தாளராக ஒரு செருக்கு மனதிற்குள் மின்னி மறைந்தது அவர் உரையைக் கேட்கையில்.
இறுதியாகக் கேள்வி பதில் நேரம். எல்லோருக்கும் கேள்விகள் கேட்கும் வாய்ப்பு கிட்டும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தோம். இப்பொழுதும் முதல் வரிசை நாற்காலியை இழுத்து அதில் அமர்ந்து கேள்விகளுக்குத் தயாரானார். ஆனால் நேரப்பற்றாக்குறை காரணமாக தொகுப்பாளினி தோழி நதியா அவர்கள் சில கேள்விகளை முன் வைத்தார். முடிக்கக் கூடிய தருவாயில் இங்க இருந்து யாரும் கேள்விகள் கேட்கவில்லையே என்று எங்கள் பக்கம் கைக்காட்ட அவரைப் பாராட்டவேணும் பேசுவோம் என்று மைக்கை வாங்கினேன். நான் பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய புத்தகத்தை எழுதியுள்ளேன். திடீரென்று ஒரு கதையைக் கேட்டால் அதில் அந்த கதாபாத்திரத்திற்கு என்ன பெயர் வைத்தேன் என்று யோசிக்கதான் வேண்டும். ஆனால் பவா பெயரோடு கதையை அத்தனை ஞாபகமாய் சொல்கின்றாரே என்ற ஆச்சரியம் அன்று அவர் கூறிய ஒவ்வொரு கதையிலும் எனக்கு இருந்தது. மேலும் இவருக்கு இத்தனைப் பணிகளை செய்ய எப்படி வாய்க்கிறது, எப்போது எழுதுவார், எப்போது வாசிப்பார் என்று அறியவும் ஆவல். என் கேள்வி இதுதான்.
” வணக்கம்… நீங்கள் எத்தனையோ கதைகளைச் சொல்கின்றீர்கள். பக்கத்து வீட்டுப் பெண்மனிகூட சரி ஞாபகம் இருக்கும். ஆனால் வசந்தி, தனுஸ் என்றெல்லாம் கதைமாந்தர்கள் பெயரைச் சொல்கின்றீர்களே, உங்களுக்கு எப்படி ஞாபகம் இருக்கிறது என்று வியப்பாக உள்ளது. மிகுந்த பாராட்டுகள். இப்பொழுது எனது கேள்வி. நீங்கள் பன்முகத்திறமையாளராய் இருக்கின்றீர்கள். எழுத்தாளனாக, கதைச்சொல்லியாக, நடிகராக, விவசாயியாக, இன்னும் பல பாத்திரங்களை ஏற்றும், நண்பர்களுக்காக நேரம் செலவழித்தும் இயல்பாக இருக்கின்றீர்கள். உங்களால் நேரத்தை எப்படிப் பங்கீடு செய்ய முடிகிறது”
இதற்கு அவர் கூறிய பதிலாவது “பெயரில் என்ன இருக்கிறது. நான் எனக்குத் தோன்றிய பெயர்களையே கூறுகிறேன். உண்மையில் அந்தக் கதையில் அந்தப் பெண்ணின் பெயர் என்னவென எனக்கு ஞாபகமில்லை. அதை வாசித்துப் பார்த்தீர்களானால் உங்களுக்கு புரிய வரும். ஜெயகாந்தனின் கதையைப் பத்து லட்சம் பேர் பார்த்திருந்தார்கள். அந்தக் கதையில் மனநலம் சரியில்லாதவள் மாங்காய் பறித்துச் சாப்பிடுவதாகக் கூறினேன். ஒருவர் அதைக் கண்டுபிடித்து என்ன சார் பெரிய தப்பு பண்ணீட்டிங்க என்றார், என்னவெனில் அது புளியமரம் தானே நீங்கள் மாங்கா என்று சொல்லிவிட்டீர்கள் என்றார். ஆக அவள் மசக்கையில் புளிப்பாகச் சாப்பிட்டாள் என்பது தானே சாராம்சம். அது மாங்காயாக இருந்தால் என்ன புளியங்காயாக இருந்தால் என்ன என்பது என் கருத்து. எனவே பெயரையெல்லாம் அப்பப்போ நான் மாற்றிச் சொல்வேன். அந்தக் கதைகளை வாசித்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். ஏனெனில் அதில் என் கதையும் கொஞ்சம் சேர்ந்து இருக்கும். ஆனால் எந்த எழுத்தாளரும் அது குறித்து என்னிடம் வந்து கேட்டதில்லை. நேரமின்மை காரணமாக இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லி முடித்துக் கொள்கிறேன். ஒரு தடவை மேடையில் பிரமாதமான கதை ஒன்றை சொல்கிறேன். பிரபஞ்சன் நான் பேசிக்கொண்டிருக்கும் போதே வியந்து யார் எழுதின கதை சார் என ஆச்சரியமாய் கேட்க, நீங்க எழுதின கதை தான் சார் என்று நான் கூறினேன். அவரால் நம்பவே முடியவில்லை போலும். இருபது வருடம் கழித்து அந்தக் கதையை நான் கூறுவேன் என்று நினைத்திருக்க மாட்டார்.” என்று பேசியவர் நேரப் பங்கீடு குறித்த கேள்வியை மறந்து விட்டார். இறுதியாக மறக்காமல் இந்து மற்றும் ரஜினி அவர்களை மனதார பாராட்டி வாழ்த்தினார். இந்துவை மகளே என்றே அழைத்தார். விதவிதமாய் அவர் சமைத்துக் கவனித்துக் கொண்டதில் தனக்குக் கஞ்சி சாப்பிட ஆசை வந்ததாகக் கூறினார். அவர் மீன் குழம்பு, மீன் வறுவல், எறா தொக்கு, ஹாப் பாயில் என்று அடுக்க இந்து வீட்டிற்குப் போக வேண்டும் என்று அங்கிருந்த அனைவரும் நினைத்திருப்பார்கள்.

பவா பரிந்துரைக்கும் புத்தகங்கள் எனத் திரையில் புத்தகங்கள் தோன்ற என் நட்புவட்டமே அங்கே மீண்டும் வந்தது. விழியன், விஷ்ணுபுரம் சரவணன், அமிர்தம் சூர்யா, செந்தில் ஜெகந்நாதன், ப.திருச்செந்தாழை … எனக் கண்டு பெருமிதம் அடைந்த நொடிகள். அமிர்தம் சூர்யா தன் பக்கத்தில் அதனைப் பகிர்ந்து தன் மகிழ்ச்சியையும் தெரிவித்திருந்தார்.
பவா அவர்களுடன் புகைப்படம் எடுக்கும் தருணம் வந்தது. என் புத்தகத்தைப் பரிசளித்து, அவரின் கையெழுத்தையும் வாங்கிக் கொண்டு, அங்கிருந்த அனைவரும் (சிலர் நிகழ்வு முடிந்ததும் கிளம்பியிருந்தனர்) அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டோம். நேரம் பத்தைத் தாண்டியிருக்க மீண்டும் புத்தகங்களைக் கடக்க வேண்டிய சூழல். ஊரிலிருந்து கொண்டு வந்த புத்தகங்கள் இருக்கின்றன. தோழி சோபியிடம் வாங்கிய ஜேகேயின் கொள்ளைப்புரத்துக் காதலிகள், இந்திரோபிள்ளி நூலகத்தில் எடுத்த ஆதவனின் கருப்பு அம்பை எல்லாம் கைவசம் இருந்தும் பேராசை துளிர்த்தது புத்தகத்தைக் கண்டதும். என் நண்பர் ராம் கையில் இரண்டு புத்தகங்களைப் பார்த்ததும் அப்ப சரி அவரிடம் கொடுத்து விடலாம் என்று மூன்று புத்தகங்களை எடுத்தேன். என் தயக்கத்தைப் புரிந்து கொண்ட நூலக பொறுப்பாளர் அய்யா, ‘நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள், யாரேனும் வந்தால் நான் கொடுத்தனுப்புகிறேன்’ என்று கூறினார். இதையெல்லாம் தான் நான் ஆசிர்வாதமாய் நினைக்கிறேன். வாசிக்க வேண்டிய வரிசையில் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள், கமலா தாஸின் என் கதை, ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே… சேர்ந்திருக்கின்றன. என் ஆசையெல்லாம் நித்தம் வாசிக்க வேண்டும், நிறைய எழுத வேண்டும், கதைகளைக் கேட்க வேண்டும், கூற வேண்டும், புதிய மனிதர்களை அறிய வேண்டும் என நீண்டுக்கொண்டே இருக்கின்றன. அன்றாடப் பணிகளுக்கு இடையே முதற்கண் சமயம் கிட்ட வேண்டும். மழையினூடே மீண்டும் பயணித்து வீடு வந்து சேர பதினொன்றரை ஆனது.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்த குயின்ஸ்லாந்து தமிழ் மன்றத்திற்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், கலாம் நூலகத்தினருக்கும், கதைச் சொல்லி பவா அய்யாவிற்கும், பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துகள். நான் அங்கே செல்லக் காரணமாய் இருந்த என் அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.



