
நாளந்தாவை நோக்கிய சாலை
வறுமையின் உச்சத்தில் நான் கண்ட வாழ்க்கையின் செழுமை.
மலைகள் வழி காட்டிய சாலை அது. கற்களின் மௌனத்தில் கதைகள் புதைந்திருந்த சாலை அது. ஒரு பக்கம் வானத்தைத் தொடும் மலைகள், மறுபக்கம் மண்ணோடு மண்ணாகக் கிடந்த மனித வாழ்வுகள்.

நான் நாளந்தாவை நோக்கிப் பயணித்தேன். ஆனால், அந்தச் சாலை என்னிடமே என்னை அழைத்துச் சென்றது.
போத்கயாவில் இருந்து காலை எட்டு முப்பது மணியளவில் நாளந்தா பல்கலைக்கழகத்தை நோக்கிக் கிளம்பியபோது, அந்தப் பயணம் எனக்குள் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.
ஒரு சாதாரணச் சாலைதான் இருக்கும். கார் போகும். இருபுறமும் வழக்கமான ஊர்கள் இருக்கும். சில கடைகள், சில வீடுகள், சில வயல்கள்… அவ்வளவுதான் என்று நினைத்துத்தான் நான் புறப்பட்டேன். ஆனால், ஒரு தேசாந்திரியின் பயணத்தில் சில சாலைகள் இலக்கை நோக்கி மட்டும் அழைத்துச் செல்வதில்லை. அவை நம்முடைய உள்ளுக்குள் பல வருடங்களாக மூடிக்கிடக்கும் கதவுகளையும் திறந்துவிடுகின்றன.

போத்கயாவிலிருந்து நாளந்தாவை நோக்கிய அந்தச் சாலை எனக்கு அப்படிப்பட்ட ஒரு சாலையாக மாறியது. ஆட்டோ நகர நகர, சுற்றியிருந்த நிலப்பரப்பு மாறிக்கொண்டே இருந்தது. முதலில் என் கண்களை நிறுத்தியது அந்த மலைகள். நான் இதற்கு முன்பு தமிழ்நாட்டில் பார்த்த மலைகளைப் போல அவை இல்லை. அவற்றின் உருவமே வேறாக இருந்தது. ஒரு மலையைப் பார்த்தால் அது முழுவதும் கற்களால் ஆனது போலத் தெரிந்தது. இன்னொரு மலைக்கு வேறு ஓர் உருவம்.
மற்றொன்றின் சரிவுகள் வேறு விதமாக இருந்தன. ஒவ்வொரு மலையும் தனக்கென்று ஒரு முகத்தைக் கொண்டிருந்தது.
சில மலைகள் வெறுமையாக, கல்லின் நிர்வாணத்தோடு நின்றுகொண்டிருந்தன. சில மலைகள் தொலைவில் பார்த்தால் இமயமலையின் ஏதோ ஒரு சிறிய உறவினரைப் போலத் தோன்றின.
அவற்றின் உயரம், அமைப்பு, நிறம், சரிவுகள், எல்லாமே எனக்குப் புதிது. நான் இதுவரை பார்த்திராத ஒரு புவியியல் உலகத்துக்குள் நுழைந்த உணர்வு. ஒரு தேசாந்திரி பயணம் செய்யும்போது வரைபடத்தை மட்டும் படிப்பதில்லை. அவள் நிலத்தையே படிக்கிறாள். அந்த நாளில் அந்த மலைகள்தான் எனக்கு முதல் புத்தகமாக இருந்தன. அவற்றைப் பார்த்துக்கொண்டே நான் சென்றுகொண்டிருந்தேன்.
ஒரு கட்டத்தில் அந்த மலைகளின் அடிவாரத்தைப் பார்த்தபோது என் மனம் திடீரென்று நின்றுபோனது.
மலைக்குக் கீழே… கூடாரங்கள், சிறு குடிசைகள், மண்ணோடு ஒட்டிய வீடுகள். அந்தப் பெரிய மலைகளின் நிழலில், தங்களுடைய சிறிய உலகத்தை அமைத்துக்கொண்டு மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
மேலே வானத்தைத் தொட்டுக்கொண்டிருந்த மலை. கீழே வாழ்க்கைக்காக மண்ணைப் பற்றிக்கொண்டிருந்த மனிதர்கள். அந்தக் காட்சி என்னை நீண்ட நேரம் பேசவிடவில்லை.

ஒரு பக்கம் இயற்கையின் பிரம்மாண்டம். மறுபக்கம் மனித வாழ்வின் மிகச்சிறிய எல்லை. அந்த முரண்பாடு என்னைத் தொடர்ந்து வந்தது.
ஆட்டோ முன்னோக்கிப் போய்க்கொண்டே இருந்தது. மலைகள் ஒன்றன்பின் ஒன்றாக மாறிக்கொண்டே இருந்தன. அவற்றின் உருவங்களும் மாறின.
ஒரு மலை கற்களாக இருந்தது. மற்றொரு மலை மென்மையான சரிவுகளுடன் இருந்தது. இன்னொரு மலை தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு பழமையான கோட்டையைப் போலத் தோன்றியது. நான் அவற்றைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்போது எனக்குத் தெரியவில்லை. அந்த மலைகளைக் கடந்து இன்னும் சில மணி நேரங்களில் நான் பார்க்கப்போகும் காட்சிகள், அந்த மலைகளின் பிரம்மாண்டத்தையே என் கண்களில் சிறியதாக மாற்றப்போகின்றன என்று. சில மணி நேரங்கள் சென்ற பிறகு அந்தச் சாலை என்னை வேறொரு உலகுக்குள் அழைத்துச் சென்றது.
வறுமையின் உச்சத்தை நான் அங்கே பார்த்தேன்.
‘வறுமை’ என்ற வார்த்தையை நாம் நகரங்களிலிருந்து பேசும்போது அது ஒரு புள்ளிவிவரம். ஒரு செய்தித்தாள் செய்தி. ஓர் அறிக்கையின் ஒரு வரி. ஒரு புகைப்படத்தின் பின்னணி. ஆனால் அந்த நாளில் அந்த வார்த்தைக்கு முகங்கள் இருந்தன. வீடுகள் இருந்தன. குழந்தைகள் இருந்தனர். மாடுகள் இருந்தன. பசி இருந்தது. வாழ்வதற்கான போராட்டம் இருந்தது.
அதிலும் முக்கியமாக, அந்த எல்லாவற்றுக்கும் நடுவே வாழ்ந்துகொண்டிருந்த மனிதர்களின் கண்களில் ஒரு விதமான அமைதியும் இருந்தது.
அந்தக் கிராமங்களின் பெயர்களை இப்போது என்னால் நினைவுபடுத்திக்கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த ஊர்களின் காட்சிகள் மட்டும் என் நினைவில் இன்னும் அழியாமல் இருக்கின்றன.
ஒரு கிராமம் முடிந்தது.

இன்னொரு கிராமம் தொடங்கியது. மீண்டும் இன்னொரு கிராமம்.
இப்படியே தொடர்ந்து இரண்டு, மூன்று மணி நேரம்… நான் பார்த்தது ஒரே ஒரு கிராமத்தின் வறுமை அல்ல. மலைகளின் அடிவாரத்தில் நீண்டுகொண்டே சென்ற ஒரு வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் கடுமை என்னை மெதுவாக உள்ளுக்குள் உடைத்துக்கொண்டிருந்தது. ஒரு வீட்டை முதலில் பார்த்தபோது, ‘சிறிய வீடு’ என்றுகூடச் சொல்ல முடியவில்லை. அவ்வளவு குறுகிய இடம்.
அந்தச் சிறிய இடத்துக்குள்ளேயே சமையல். அதே இடத்துக்குள்ளேயே மனிதர்கள் வசிப்பது.
அதே இடத்துக்குள்ளேயே மாடுகளை வளர்ப்பது.
அங்கேயே மாட்டுச் சாணம். அங்கேயே கோமியம். சமையல் புகை. மண்ணின் வாசனை. கால்நடைகளின் வாசனை. மனிதர்கள் வாழும் வாசனை. எல்லாம் ஒன்றோடொன்று கலந்திருந்தது. சில இடங்களில் அந்தக் கிராமம் முழுவதும் தாங்க முடியாத அளவுக்கு ஒரு வாசனை இருந்தது. ஒரு நகரத்தில் வளர்ந்த என் மூக்கு அந்த வாசனையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆனால், அந்த வாசனையைச் சுமந்துகொண்டே வாழ்ந்துகொண்டிருந்த அந்த மனிதர்களின் முகத்தில் அதற்கான எந்தப் புகாரும் இல்லை. அதுதான் என்னை அதிகமாகப் பாதித்தது.
“எப்படி இவர்கள் இங்கே வாழ்கிறார்கள்?”
எனக்குள் மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வி எழுந்தது.
“எப்படி?”
“இந்த இடத்திலேயே எப்படி வாழ முடியும்?”
“இந்தச் சூழலிலேயே எப்படிக் குழந்தைகளை வளர்க்க முடியும்?”
“இங்கே எப்படிச் சமைக்கிறார்கள்?”
“எப்படித் தூங்குகிறார்கள்?”
“எப்படி நாளை பற்றிய நம்பிக்கையோடு எழுந்திருப்பார்கள்?”
எனக்குப் புரியவில்லை. ஆனால் அவர்களுக்குப் புரிந்திருந்தது.
அது அவர்களுடைய வாழ்க்கை. நான் வெளியிலிருந்து பார்த்தது வறுமை. அவர்கள் உள்ளிருந்து வாழ்ந்தது வாழ்க்கை. இந்த இரண்டிற்கும் இடையில்தான் அந்தப் பயணம் எனக்கு மிகப்பெரிய பாடம் கற்றுக்கொடுத்தது.
நமக்கு எவ்வளவு இருக்கிறது? இந்தக் கேள்வியை நாம் நம்மிடம் எப்போது கேட்கிறோம்?
பெரும்பாலும் நமக்குக் கிடைக்காததைப் பார்க்கும்போதுதான். நம்மிடம் இருக்கும் ஒன்றை எண்ணுவதற்குப் பதிலாக, அடுத்தவரிடம் இருப்பதை எண்ணுகிறோம். நமக்கு இருக்கும் வீட்டை விட அடுத்தவருடைய வீடு பெரியதா என்று பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையை விட அடுத்தவருடைய வாழ்க்கை அழகா என்று பார்க்கிறோம். நம்மிடம் இருக்கும் பணத்தைவிட இன்னொருவரிடம் அதிகமா என்று பார்க்கிறோம்.
நம்மிடம் இருக்கும் உறவைவிட இன்னொருவருடைய உறவு சந்தோஷமாக இருக்கிறதா என்று பார்க்கிறோம். நமக்குக் கிடைத்ததை எண்ணுவதற்குப் பதிலாக, கிடைக்காததை எண்ணிக்கொண்டே இருக்கிறோம்.
ஆசை, பேராசை, ஒப்பீடு, பொறாமை, எதிர்பார்ப்பு – இவை எல்லாம் சேர்ந்து நமக்குக் கிடைத்த வாழ்க்கையையே நமக்குக் குறைவாகத் தோன்றச் செய்கின்றன. அந்தக் கிராமங்களுக்குள் சென்றபோது இந்த உண்மை என்னை மிகக் கொடூரமாகத் தாக்கியது.
நமக்கு வீடு இருக்கிறது. கதவு இருக்கிறது. சமையலறை இருக்கிறது. படுக்கை இருக்கிறது. தண்ணீர் இருக்கிறது. மின்சாரம் இருக்கிறது. உணவு இருக்கிறது. உடை இருக்கிறது. வேலை இருக்கிறது. பயணம் செய்யும் வசதி இருக்கிறது. நாம் விரும்பிய இடத்துக்குச் செல்ல முடிகிறது. நாம் விரும்பிய உணவைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. நாம் விரும்பிய உடையை அணிய முடிகிறது. நாம் விரும்பிய வாழ்க்கையைப் பற்றி கனவு காண முடிகிறது.
ஆனால், இவ்வளவு இருந்தும்,
“எனக்கு இது இல்லை…”
“அது கிடைக்கவில்லை…”
“அவளுக்குக் கிடைத்துவிட்டது…”
“எனக்கு மட்டும் ஏன் இல்லை?”
என்று நம்முடைய வாழ்க்கையை நாமே தண்டித்துக்கொண்டிருக்கிறோம்.
அந்த நாளில் அந்தக் கிராமங்கள் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்: “உன்னிடம் இருப்பவை உனக்குப் போதவில்லையா?”
அந்தக் கேள்விக்கு என்னிடம் உடனடி பதில் இல்லை. அவர்களிடம் பேச வேண்டும் என்ற ஆசை எனக்குள் வந்தது. எனக்குக் கொஞ்சம் ஹிந்தி தெரியும். அதனால் தெரிந்த அளவுக்கு ஹிந்தியில் பேச ஆரம்பித்தேன். என்னுடன் வந்த ஆட்டோ ஓட்டுநர் அண்ணாவும் எனக்கு உதவினார். நான் கேட்பதை அவர் புரிந்துகொண்டு, சில விஷயங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தார். நான் அவர்களிடம் கேட்டேன்.
“எத்தனை வருடங்களாக இங்கே இருக்கிறீர்கள்?”
“ஏன் இங்கேயே இருக்கிறீர்கள்?”
“வேறு இடத்துக்குப் போக நினைத்ததில்லையா?”
“இப்படிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்கிறீர்கள்?”
என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு பெரியவர் என்னிடம் சொன்ன பதில் இன்னும் என் காதில் இருக்கிறது.
“ஐம்பது வருடங்களாக இங்கேதான் இருக்கிறேன்.”
இன்னொருவர் அறுபது வருடங்களாக இதே இடத்தில் வாழ்ந்ததாகச் சொன்னார். நான் அதிர்ந்து போனேன்.
நமக்கு ஒரு சிறிய சிரமம் வந்தால்கூட இடத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறோம். ஒரு பிரச்சினை வந்தால் வாழ்க்கையையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறோம். ஓர் உறவில் காயம் ஏற்பட்டால் உலகமே முடிந்துவிட்டது என்று நினைக்கிறோம். ஒரு வசதி குறைந்தால் நம்முடைய வாழ்க்கையே தண்டனை என்று நினைக்கிறோம்.
ஆனால்…
ஐம்பது ஆண்டுகள்.
அறுபது ஆண்டுகள்.
அதே மண். அதே வீடு. அதே மலை. அதே வாழ்க்கை. அதே போராட்டம். அதற்குள்ளேயே அவர்கள் வாழ்ந்திருந்தார்கள்.
நான் அவர்களிடம் மீண்டும் கேட்டேன்,
“உங்களுக்கு வேறு வாழ்க்கை வேண்டாமா?”
“இதைவிட நல்ல வீடு வேண்டாமா?”
“வேறு இடத்துக்குப் போக ஆசை இல்லையா?”
“இன்னும் வசதியாக வாழ வேண்டும் என்று நினைக்கவில்லையா?”
அவர்கள் சொன்ன பதில், அந்தப் பயணத்தின் மிகப்பெரிய பதில்.
“நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.”
நான் அமைதியாகிவிட்டேன்.
அவர்கள் தொடர்ந்து சொன்னார்கள்,
“எங்களுக்கு இதுவே போதும்.”
“நாங்கள் பேராசைப்பட மாட்டோம்.”
“கடவுள் என்ன கொடுத்திருக்கிறாரோ அதில் வாழ்கிறோம்.”
“குறைந்தது உயிரோடு இருக்கிறோம்.”
“சாப்பிட ஏதாவது கிடைக்கிறது.”
“தங்குவதற்கு இந்த இடம் இருக்கிறது.”
“எங்களுக்கு இதுவே போதும்.”
இந்த ‘போதும்’ என்ற ஒரு வார்த்தை என்னை அந்த நாளில் முழுவதுமாகத் தோற்கடித்தது. நான் வாழ்க்கையில் எத்தனை முறை ‘இன்னும் வேண்டும்’ என்று சொல்லியிருப்பேன்? எத்தனை முறை கிடைத்ததைவிடக் கிடைக்காததை எண்ணியிருப்பேன்? எத்தனை முறை ஒருவரிடம் அன்பு இருந்தும், அவரிடமிருந்து இன்னும் ஏதாவது எதிர்பார்த்திருப்பேன்? எத்தனை முறை வாழ்க்கை கொடுத்த பரிசுகளைப் பார்க்காமல், வாழ்க்கை கொடுக்காததை நினைத்து அழுதிருப்பேன்? அந்தக் கிராமத்தில் ஒரு மனிதர் சொன்ன ‘எங்களுக்கு இதுவே போதும்’ என்ற வார்த்தை, என்னுடைய பல வருடங்களுடைய ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் எதிரே நிறுத்தியது.
‘போதும்’ என்று சொல்லத் தெரிந்தவன் ஏழையா? அல்லது, ‘இன்னும் வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பவன்தான் உண்மையான ஏழையா?
இந்தக் கேள்வி என்னை நீண்ட நாட்கள் விடவில்லை.
அவர்களுடைய வீடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது இன்னொரு விஷயம் என்னைப் பாதித்தது. அங்கே வாழ்க்கை முழுவதும் ஒன்றோடொன்று கலந்திருந்தது. மனிதர்களும் மாடுகளும் தனித்தனி உலகங்களில் இல்லை. சமையலும் வாழ்வும் தனித்தனி இடங்களில் இல்லை. வேலையும் வீடும் தனித்தனியாக இல்லை. வாழ்க்கை என்ற ஒன்று மட்டும் இருந்தது. அதை அவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு நடத்திக்கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்குத் தெரிந்த வேலைகளைச் செய்தார்கள். கிடைத்த வேலை செய்தார்கள். அன்றாடப் பிழைப்புக்காக உழைத்தார்கள். அந்த உழைப்பில் பெரிய கனவுகள் இருக்காமலும் இருக்கலாம். ஆனால் ஒரு நாளை முடித்து இன்னொரு நாளைத் தொடங்க வேண்டும் என்ற அடிப்படை மனித விருப்பம் இருந்தது. அதுவே அவர்களுடைய நம்பிக்கை.
ஆனால் அந்தக் கிராமத்தின் குழந்தைகளைப் பார்த்தபோதுதான் என் மனம் உண்மையாக உடைந்தது. அந்தக் குழந்தைகள், அவர்களின் வயதுக்கு உரிய உலகத்தில் இல்லை. பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயது; புத்தகங்களைத் தூக்க வேண்டிய வயது; வகுப்பறையில் உட்கார வேண்டிய வயது; விளையாட வேண்டிய வயது; கனவு காண வேண்டிய வயது. ஆனால் அவர்கள் சாலையோரங்களில் இருந்தார்கள்; சிறுசிறு வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள்; சிலர் வீட்டைச் சுற்றி வேலை செய்துகொண்டிருந்தார்கள்; சில குழந்தைகள் அப்படியே அலைந்துகொண்டிருந்தார்கள்.
அவர்களின் முகங்களைப் பார்த்தேன். அந்த முகங்களில், குழந்தைத்தனம் இருக்க வேண்டிய இடத்தில் வாழ்க்கையின் தடங்கள் இருந்தன. அந்தக் காட்சியைப் பார்த்தபோது என்னால் என்னுடைய கண்களைத் தடுக்க முடியவில்லை. நான் அழுதேன். அப்படியே தேம்பித் தேம்பி அழுதேன். எனக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.
“நமக்கெல்லாம் இவ்வளவு இருக்கிறது…”
“நமக்குக் கிடைத்த வாழ்க்கை எவ்வளவு பெரியது…”
“அப்படியிருக்க நாம் ஏன் இவ்வளவு குறைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்?”
என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன்.
அந்தக் குழந்தைகளின் கண்களைப் பார்த்தபோது, என்னுடைய வாழ்க்கையில் நான் ‘பிரச்சினை’ என்று நினைத்திருந்த பல விஷயங்கள் திடீரென்று மிகச் சிறியதாகத் தோன்றின.
ஒரு தேசாந்திரியாக நான் பல இடங்களைப் பார்த்திருக்கிறேன்.
மலைகளைப் பார்த்திருக்கிறேன்; கடல்களைப் பார்த்திருக்கிறேன்; காடுகளைப் பார்த்திருக்கிறேன்; அரண்மனைகளைப் பார்த்திருக்கிறேன்; கோயில்களைப் பார்த்திருக்கிறேன்; பழமையான நகரங்களைப் பார்த்திருக்கிறேன்; அழகான தெருக்களில் நடந்திருக்கிறேன்; பெரிய நகரங்களின் விளக்குகளைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால்… ஒரு சிறிய குடிசையின் வாசலில் நின்று ஒரு மனிதன் சொன்ன,
“எங்களுக்கு இதுவே போதும்”
என்ற வார்த்தை அளவுக்கு எந்தப் பெரிய கட்டிடமும் எனக்கு வாழ்க்கையைப்பற்றிக் கற்றுக்கொடுத்ததில்லை. ஒரு குழந்தையின் கண்களில் பார்த்த அந்த அமைதியற்ற அமைதி அளவுக்கு எந்தப் புத்தகமும் என்னை உலுக்கியதில்லை. ஒரு மலைக்குக் கீழே நின்றுகொண்டிருந்த அந்தச் சிறிய மனித வாழ்வுகள் அளவுக்கு எந்தப் பிரம்மாண்டமும் என்னை ஆச்சரியப்படுத்தியதில்லை.
அந்த நாள் எனக்குப் புரிந்தது. பயணம் என்பது இடங்களைப் பார்ப்பதல்ல; நாம் இதுவரை பார்த்துக்கொண்டிருந்த வாழ்க்கையை வேறொரு கண்களால் பார்க்கத் தொடங்குவது.
அந்தக் கிராமங்களில் ஒரு விஷயம் என்னை இன்னும் ஆழமாகத் தொட்டது. அவர்கள் தங்களுடைய வறுமையைப் பற்றி எங்களிடம் நீண்ட புகார் சொல்லவில்லை.
“எங்களிடம் இது இல்லை.”
“அது இல்லை.”
“அவர்களிடம் இருக்கிறது.”
“எங்களிடம் ஏன் இல்லை?”
என்று அவர்கள் சொல்லவில்லை.
அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அதை அழகுபடுத்திப் பேசவில்லை. அதே நேரத்தில் அதை வெறுத்தும் பேசவில்லை. அவர்களால் முடிந்ததைச் செய்து வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அந்த ஏற்றுக்கொள்ளுதல் எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது.
ஏற்றுக்கொள்வது என்பது தோல்வியல்ல. சில நேரங்களில், நம்மால் மாற்ற முடியாத ஒன்றை ஏற்றுக்கொண்டு, நம்மால் செய்யக்கூடியதைச் செய்வதே வாழ்க்கையின் மிகப்பெரிய வலிமை.
ஆனால் அந்தக் குழந்தைகள் படிக்காத நிலை போன்ற சமூக அநீதிகளை ஏற்றுக்கொள்வது மட்டும் போதாது. அங்கே என் மனதில் இன்னொரு கேள்வியும் எழுந்தது.
“ஒரு குழந்தைக்குக் கனவு காணும் உரிமையை யார் கொடுப்பார்கள்?”
அவர்கள் ‘சந்தோஷமாக இருக்கிறார்கள்’ என்று சொல்வதால், அந்த வறுமையின் கடுமை குறைந்துவிடாது.
அவர்களின் மனநிறைவை மதிக்கலாம். ஆனால் அவர்களுக்குக் கிடைக்காத வாய்ப்புகளையும் நாம் பார்க்க வேண்டும்.
அந்த நாளில் நான் பார்த்த குழந்தைகள் எனக்கு இதைத்தான் கற்றுக்கொடுத்தார்கள்.
வாழ்க்கையில் திருப்தி அவசியம். ஆனால் வாய்ப்பும் அவசியம்.
“எங்களுக்கு இதுவே போதும்” என்று ஒரு பெரியவர் சொல்ல முடியும். ஆனால் ஒரு குழந்தை, ‘எனக்கு இதைவிட வேறு வாழ்க்கை வேண்டும்’ என்று கனவு காணும் உரிமையையும் பெற்றிருக்க வேண்டும். அந்த இரண்டிற்கும் நடுவில்தான் மனித வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்வி இருக்கிறது.
ஆட்டோ தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது. மலைகள் பின்னால் போய்க்கொண்டிருந்தன. கிராமங்கள் முடிந்துகொண்டிருந்தன. ஆனால் என் மனதுக்குள் அந்த மக்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தார்கள்.
சில நேரங்களில் பயணம் முடிந்த பிறகுதான் அதன் உண்மையான பயணம் தொடங்குகிறது.
நான் நாளந்தாவை அடைந்திருக்கலாம். ஆனால் அந்தச் சாலை என்னுள் இன்னும் முடிவடையவில்லை. அந்த மலைகள் இன்னும் என்னுள் நிற்கின்றன. அந்தக் கூடாரங்கள் இன்னும் என் கண்களில் இருக்கின்றன. அந்தச் சிறிய வீடுகள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. அந்த வீடுகளுக்குள் இருந்த மாடுகளும் அந்த வாசனையும் அந்த மண்ணும் அந்தக் குழந்தைகளும் அந்தப் பெரியவர்களின் முகங்களும்… எல்லாமே என்னுள் ஏதோ ஓர் இடத்தில் பதிந்துவிட்டன.
நான் அடிக்கடி வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறேன். பயணத்தைப் பற்றி எழுதுகிறேன். மனிதர்களைப் பற்றி எழுதுகிறேன். பெண்களின் பயணங்களைப் பற்றி எழுதுகிறேன். ஆனால் அந்த நாள்… நான் வாழ்க்கையை எழுதவில்லை. வாழ்க்கை என்னை எழுதிக்கொண்டிருந்தது. ஒரு சாலையின் இருபுறமும் அது தன்னுடைய பாடங்களை விரித்துப் போட்டிருந்தது.
ஒரு பக்கம் மலை. மற்றொரு பக்கம் குடிசை. ஒரு பக்கம் இயற்கையின் பிரம்மாண்டம். மற்றொரு பக்கம் மனித வாழ்வின் குறுகிய இடம். ஒரு பக்கம் கல். மற்றொரு பக்கம் கண்ணீர். ஒரு பக்கம் வறுமை. மற்றொரு பக்கம் மனநிறைவு.
இந்த முரண்பாடுகளுக்கிடையேதான் அந்தப் பயணம் நடந்தது. அந்த நாளுக்குப் பிறகு நான் ‘வசதி’ என்ற வார்த்தையை வேறு விதமாகப் பார்க்கத் தொடங்கினேன்.
வசதி என்றால் என்ன?
பெரிய வீடா? அதிகப் பணமா? அதிகப் பொருட்களா? அதிகத் தேர்வுகளா?
அல்லது…
இரவில் படுத்தபோது, ‘இன்று கிடைத்தது போதும்’ என்று மனதுக்குள் சொல்லிக்கொள்ள முடிவதா? நமக்குத் தேவையானவற்றைவிட நம்முடைய ஆசைகள் பெரிதாகிவிட்டால், நம்மிடம் இருக்கும் வாழ்க்கை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அது நமக்குச் சிறியதாகத்தான் தெரியும். ஆனால் தேவைகள் குறைந்து, நன்றியுணர்வு பெருகும்போது, ஒரு சிறிய வீடும் ஓர் உலகமாகிவிடுகிறது. ஓர் எளிய உணவும் விருந்தாகிவிடுகிறது. ஒரு நாள் உயிரோடு இருப்பதும் ஒரு பரிசாகிவிடுகிறது.
அந்த மக்களின் வாழ்க்கையைப் பார்த்தபோது நான் என்னைப் பற்றியும் யோசித்தேன். எனக்கு எத்தனை கனவுகள்? எத்தனை ஆசைகள்? எத்தனை எதிர்பார்ப்புகள்? எத்தனை கேள்விகள்? எத்தனை ‘ஏன்?’கள்?
வாழ்க்கை எனக்குக் கொடுத்தவற்றைக் காட்டிலும், வாழ்க்கை எனக்குக் கொடுக்காதவற்றை எண்ணிக்கொண்டிருந்த நாட்கள் எத்தனை?
ஒருவேளை நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் அந்தக் கிராமங்களுக்குள் சென்று வர வேண்டும். நம்முடைய குறைகளைச் சுமந்துகொண்டு அல்ல; நம்முடைய அகங்காரத்தைச் சுமந்துகொண்டு அல்ல; நம்மிடம் இருப்பதைப் பார்க்கும் கண்களுடன்.
அப்போது ஒருவேளை நமக்குப் புரியும்.
நாம் ஏழைகள் அல்ல. நாம் பல நேரங்களில் நன்றியற்றவர்கள்.
நமக்கு இல்லாதவற்றால் அல்ல; நமக்கு இருப்பவற்றை மறந்துவிடுவதால்தான் நம்முடைய வாழ்க்கை ஏழையாகிறது. அந்தச் சாலையில் நான் கண்ட வறுமை என்னை அழ வைத்தது. ஆனால் அதைவிட என்னை அதிகமாக அழ வைத்தது, அந்த வறுமைக்குள்ளும் அவர்கள் வாழ்க்கையைத் தாங்கிக்கொண்ட விதம்.
அவர்கள் சிரித்தார்கள்; பேசினார்கள்; வேலை செய்தார்கள்; மாடுகளைப் பார்த்துக்கொண்டார்கள்; குழந்தைகளைப் பார்த்துக்கொண்டார்கள்; அவர்களால் முடிந்த அளவுக்கு நாளை நோக்கி நடந்தார்கள்.
அவர்கள் வாழ்க்கையைப் பற்றி பெரிய தத்துவங்கள் பேசவில்லை. ஆனால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையே ஒரு தத்துவமாக இருந்தது.
“வாழ்க்கை எவ்வளவு கொடுக்கிறது என்பது முக்கியமல்ல;
கிடைத்ததை எவ்வளவு மனதோடு வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். ”
அந்தப் பயணம் எனக்கு இன்னொரு உண்மையையும் சொல்லிக் கொடுத்தது.
ஒரு பெண்ணாக நான் தனியாகப் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் நான் ஓர் இடத்தைக் கடந்து செல்வதில்லை. நான் என்னுடைய பழைய பார்வைகளையும் கடந்து செல்கிறேன். என்னுடைய பயங்களையும் கடந்து செல்கிறேன். என்னுடைய முன் தீர்மானங்களையும் கடந்து செல்கிறேன்.
ஒரு தேசாந்திரியாக மாறும்போது அவள் முதலில் உலகத்தைப் பார்க்கிறாள். பிறகு உலகம் அவளைப் பார்க்கிறது. ஆனால் இறுதியில், அவள் தன்னையே பார்க்கத் தொடங்குகிறாள்.
நாளந்தாவை நோக்கிய அந்தச் சாலை எனக்கு அப்படித்தான் இருந்தது.
நான் மலைகளைப் பார்க்கப் போனேன். மனிதர்களைக் கண்டேன்.
நான் நாளந்தாவைப் பார்க்கப் போனேன். என்னுடைய வாழ்க்கையைப் பார்த்தேன்.
நான் ஓர் இடத்தை அடையப் போனேன். ஆனால், என்னுடைய உள்ளுக்குள் இன்னொரு இடத்தை அடைந்துவிட்டேன்.
அந்தக் குழந்தைகளின் முகங்கள் இன்னும் என்னை விடுவதில்லை. அவர்களுக்காக என்ன செய்ய முடியும் என்று அந்த நேரத்தில் எனக்குத் தெரியவில்லை. அவர்களின் வாழ்க்கையை மாற்றிவிடும் அளவுக்கு என்னிடம் எந்த மந்திரமும் இல்லை. ஆனால் அவர்களைப் பார்த்த பிறகு என்னுடைய வாழ்க்கையை நான் மாற்றிப் பார்க்கத் தொடங்கினேன்.
அது சிறிய மாற்றமல்ல. ஒரு பார்வையின் மாற்றம். சில நேரங்களில் ஒருவருடைய வாழ்க்கையை மாற்ற முடியாமல் போகலாம்.
ஆனால், அவர்களைப் பார்த்த பிறகு நம்முடைய வாழ்க்கையை மாற்றிப் பார்க்க முடியும். அதுவும் ஒரு மாற்றம்தான்.
அந்த நாளில் நான் எடுத்த புகைப்படங்கள் இன்றும் என்னிடம் இருக்கின்றன. சில புகைப்படங்களில் மலைகள். சிலவற்றில் வீடுகள். சிலவற்றில் குழந்தைகள். சிலவற்றில் அந்தக் கிராமத்தின் வாழ்க்கை.
ஆனால் ஒவ்வொரு புகைப்படத்திற்குப் பின்னாலும் நான் கேட்காத கேள்விகள் இருக்கின்றன.
“இந்தக் குழந்தை நாளை என்ன ஆகும்?”
“இந்த வீட்டில் பிறந்தவனுக்கு என்ன கனவு?”
“இந்த மலைக்குக் கீழே வாழும் இந்த மனிதனுக்கு உலகம் என்றால் என்ன?”
“ஐம்பது ஆண்டுகளாக இங்கே வாழ்ந்த அந்தப் பெரியவர் தன்னுடைய வாழ்க்கையை எப்படி நினைத்திருப்பார்?”
“அவருக்கு மகிழ்ச்சி என்றால் என்ன?”
“அவருக்குப் போதுமென்றால் என்ன?”
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் எனக்குத் தெரியாது.
ஆனால், அந்தக் கேள்விகளை என்னுடன் எடுத்துக்கொண்டு நான் அங்கிருந்து கிளம்பினேன். ஒரு தேசாந்திரியின் பயணத்தில் சில இடங்கள் புகைப்படங்களாக மட்டுமே மிஞ்சுகின்றன.
சில இடங்கள் நினைவுகளாக மிஞ்சுகின்றன. சில இடங்கள் கதைகளாக மிஞ்சுகின்றன. ஆனால் சில இடங்கள், நம்முடைய பார்வையாகவே மாறிவிடுகின்றன.
நாளந்தாவை நோக்கிய அந்தச் சாலை எனக்கு அப்படிப்பட்டது.
இன்று நான் என்னுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைப்பற்றிக் குறை சொல்லத் தொடங்கும்போது, அந்த மலைகள் நினைவுக்கு வருகின்றன. அந்தச் சிறிய வீடுகள் நினைவுக்கு வருகின்றன. அந்தக் குழந்தைகள் நினைவுக்கு வருகின்றனர்.
“எங்களுக்கு இதுவே போதும்” என்று சொன்ன அந்தக் குரல் நினைவுக்கு வருகிறது.
அப்போது என் மனம் மெதுவாக என்னிடம் சொல்கிறது: “உன்னிடம் இருப்பதை முதலில் பார்.”
பயணம் எனக்குக் கற்றுக்கொடுத்த மிகப்பெரிய பாடம் இதுதான்.
நாம் உலகத்தைப் பார்க்கப் புறப்படுகிறோம் என்று நினைக்கிறோம். உண்மையில், உலகம் நம்முடைய கண்களை மாற்றுவதற்காக நம்மை அழைத்துச் செல்கிறது.
அந்த நாள்…
ஒரு சாலை என்னுடைய கண்களை மாற்றியது.
ஒரு மலை என்னுடைய அகங்காரத்தைச் சிறிதாக்கியது.
ஒரு குடிசை என்னுடைய வசதிகளின் அர்த்தத்தை மாற்றியது. ஒரு குழந்தையின் கண்கள் என்னுடைய குறைகளை வெட்கப்பட வைத்தன.
ஒரு பெரியவரின் ‘போதும்’ என்ற வார்த்தை என்னுடைய ‘இன்னும் வேண்டும்’ என்ற வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கியது.
அதனால்தான், நான் பார்த்த ஆயிரம் அழகான இடங்களுக்கிடையில், நாளந்தாவை நோக்கிய அந்தச் சாலைக்கு என் நினைவில் தனி இடம்.
அது அழகான பயணம் என்பதற்காக அல்ல. அது என்னை அழ வைத்த பயணம் என்பதற்காக.
அது என்னைத் துயரப்படுத்தியதற்காக மட்டும் அல்ல. அது என்னைத் திருத்திய பயணம் என்பதற்காக.
இப்போது அந்தப் பயணத்தை நினைத்துப் பார்க்கும்போது, மலைகளின் உயரத்தைவிட அந்த மக்களின் மனதை நினைக்கிறேன்.
அந்தக் கிராமங்களின் வறுமையைவிட, அந்த வறுமைக்குள் அவர்கள் தேடிக்கொண்டிருந்த சிறிய சந்தோஷங்களை நினைக்கிறேன்.
அந்த வீடுகளின் குறுகிய இடத்தைவிட, அந்தச் சிறிய இடத்துக்குள் அடங்கியிருந்த ஒரு குடும்பத்தின் முழு உலகத்தை நினைக்கிறேன்.
அந்தக் குழந்தைகளின் வறுமையைவிட, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை நினைக்கிறேன்.
அந்தப் பாதையின் தூசியைவிட, அந்தப் பாதை என்னுள் விட்டுச் சென்ற கேள்விகளை நினைக்கிறேன்.
“வாழ்க்கை நமக்குக் கொடுத்தவற்றின் பட்டியல் நீளமானதா என்பது முக்கியமல்ல;
அவற்றைப் பார்த்து நன்றி சொல்லும் மனம் நம்மிடம் இருக்கிறதா என்பதுதான் முக்கியம். ”
“பேராசை என்பது பொருட்களை அதிகமாக விரும்புவது மட்டும் அல்ல;
நம்மிடம் இருப்பது போதாது என்று மனம் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பதும் பேராசைதான். ”
“வறுமை மனிதனிடம் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் மனநிறைவை அவனிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியாது. ”
“அதே நேரத்தில், மனநிறைவு என்பது வாய்ப்புகளின் மறுப்பாக இருக்கக்கூடாது.
ஒவ்வொரு குழந்தைக்கும் கனவு காணும் உரிமை இருக்க வேண்டும். ”
“நமக்குக் கிடைக்காததை எண்ணிக்கொண்டிருக்கும் வரை வாழ்க்கை குறைவாகத்தான் தெரியும்.
கிடைத்ததை எண்ணத் தொடங்கும் நாளிலிருந்து வாழ்க்கை பெரிதாகத் தெரியும். ”
அந்த நாளில் நாளந்தாவை நோக்கிச் சென்றது என் கார். ஆனால், என்னுள் பயணம் செய்தது என் வாழ்க்கை.
மலைகளைத் தாண்டிச் சென்றது கார். கிராமங்களைத் தாண்டிச் சென்றது சாலை. ஆனால் என்னுள் கடந்து சென்றது, என் பழைய பார்வை.
அந்தப் பயணம் முடிந்தபோது நான் நாளந்தாவை அடைந்திருந்தேன். ஆனால் அதைவிட முக்கியமாக, என்னுடைய வாழ்க்கையைப் பார்க்க ஒரு புதிய கண்களை அடைந்திருந்தேன். அதனால்தான் அந்தப் பாதையை என்னால் மறக்க முடியாது. அந்த மலைகளை மறக்க முடியாது. அந்தக் குடிசைகளை மறக்க முடியாது. அந்தக் குழந்தைகளை மறக்க முடியாது. அந்தப் பெரியவர்களின் முகங்களை மறக்க முடியாது. “எங்களுக்கு இதுவே போதும்” என்ற அந்த ஒரு வாக்கியத்தை என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாது.
ஏனென்றால், நான் நாளந்தாவுக்குச் சென்றது வரலாற்றைக் காண. ஆனால் அந்தச் சாலையில், மனித வாழ்க்கையின் மிகப் பழமையான வரலாற்றையே நான் பார்த்துவிட்டுத் திரும்பினேன்.
ஒரு மனிதன் எவ்வளவு குறைவானவற்றோடும் வாழ முடியும் என்பதையும், அதே நேரத்தில், எவ்வளவு அதிகமானவற்றோடும் ஒரு மனிதன் உள்ளுக்குள் வெறுமையாக இருக்க முடியும் என்பதையும் அந்தப் பாதை எனக்குக் கற்றுக்கொடுத்தது.
ஒரு தேசாந்திரியாக நான் உலகத்திடம் இன்னும் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும்.
ஆனால் அந்த நாளிலிருந்து வாழ்க்கையிடம் நான் கேட்கும் ஒரு கேள்வி மட்டும் மாறிவிட்டது.
முன்பு:
“எனக்கு இன்னும் என்ன வேண்டும்?” என்று கேட்ட நான்…
இப்போது:
“என்னிடம் இருப்பதை நான் உண்மையாக வாழ்ந்துவிட்டேனா?” என்று கேட்கிறேன்.
அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடித்தான், என் பயணங்கள் இன்னும் தொடர்கின்றன. என் பாதைகள் இன்னும் நீள்கின்றன. என் காலடிகள் இன்னும் பல அறியாத நிலங்களைத் தேடுகின்றன.
ஏனென்றால், தேசாந்திரி என்பது இடம் மாறுகிற பெண் மட்டும் அல்ல. ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும் தன்னுடைய பார்வையை மாற்றிக்கொண்டு திரும்புகிற பெண்.
நாளந்தாவை நோக்கிய அந்தச் சாலையில், நானும் அப்படித்தான் திரும்பினேன்.
சற்றே அமைதியாக.
சற்றே உடைந்துபோய்.
சற்றே வெட்கப்பட்டு.
ஆனால்…
முன்பைவிட நன்றியுடன். முன்பைவிட மனிதர்களைப் புரிந்துகொள்ளும் கண்களுடன். முன்பைவிட வாழ்க்கையைப் பற்றிய ஓர் ஆழமான மரியாதையுடன்.
ஒரு சாலை என்னை நாளந்தாவுக்கு அழைத்துச் சென்றது. ஆனால் அந்தச் சாலை என்னை என்னிடமே திரும்ப அழைத்துக்கொண்டு வந்தது. அதுவே என் தேசாந்திரி பயணங்களில், மறக்க முடியாத ஒரு பயணம்.
இறுதியில்… வாழ்க்கையை வேறொரு பார்வையில் பார்க்கக் கற்றுக்கொடுத்த பயணம்.



