
சோமநாதபுரா
தலக்காடு ஆலயங்களைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான சோமநாதபுரம் சென்னகேசவா ஆலயத்திற்குச் சென்றோம். தற்போது சோமநாதபுரமும் தலக்காடு போலவே ஒரு சிற்றூராக உள்ளது. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மூன்றாம் வீரநரசிம்மனின் படைத்தளபதியான சோமநாத தண்டநாயக்கனால் கட்டப்பட்ட இவ்வாலயம் மூன்று கருவறைகளைக் கொண்ட திரிகுடாச்சல ஆலயமாக விளங்குகிறது. 14ஆம் நூற்றாண்டின் சுல்தானியப் படையெடுப்புகளில் இவ்வாலயம் தாக்கப்பட்டிருந்தாலும் பெரும் சேதாரங்கள் ஏதுமின்றி ஏறக்குறைய முழுமையாக (மூன்று கருவறை விமானங்கள் உட்பட) கிடைக்கப்பெறும் ஒரே ஹொய்சாளப் பேராலயம் இது. ஹொய்சாளர்களின் பிந்தைய காலகட்டத்தில் கட்டப்பட்ட இவ்வாலயமே அவர்களால் கட்டப்பட்ட கடைசிப் பேராலயம் எனலாம். ஆகவே இது அவர்களின் கலையழகு நன்றாகவே கைகூடிய ஆலயமும் கூட. அடுத்த சில பதிற்றாண்டுகளுக்குள் தென்னகத்தின் ஒட்டுமொத்த அரசியல் காட்சிகளும் மாறிவிடுகின்றன. பின்னாட்களில் விஜயநகர அரசாலும் கடந்த நூற்றாண்டில் மைசூர் அரசாலும் இவ்வாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது. இப்போது இது வழிபாட்டில் இல்லை என்றாலும் இந்தியத் தொல்லியல் துறையால் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 2023ல் பேலூர் சென்னகேசவா ஆலயம் மற்றும் ஹளேபீடு ஹோய்சாளேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றுடன் இதனையும் சேர்த்து உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ.
இது விஷ்ணுக்காக எழுப்பப்பட்ட பேராலயம். மூன்று கருவறைகளிலும் விஷ்ணுவின் மூன்று வெவ்வேறு வடிவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மையத்தில் உள்ள மேற்குக் கருவறையில் சென்னகேசவனும் (தமிழில் அழகிய கேசவன் எனலாம், கிழக்குதிசையை நோக்கியவாறு நிற்கிறார்) தெற்குக் கருவறையில் வேணுகோபாலனும் (குழலூதும் ஆயன் / கண்ணன்) மற்றும் வடக்கு கருவறையில் ஜனார்த்தனனும் நிறுவப்பட்டிருந்திருக்கின்றனர்.
பெரும் சுற்றுமதிலைக் கொண்ட இவ்வாலய வளாகத்தின் கிழக்குப் புறம் அமைந்துள்ள மகாதுவாரம் (பெரு நுழைவாயில்) வழியாக உள்ளே நுழைந்ததும் அதன் இடப்புறம் ஒரு கல்வெட்டுத்தூண் காணப்படுகிறது. அத்தூணைக் காணும்போது அது ஒரு பண்டையகால கல்வெட்டு என கூறத் தோன்றாது, நம் நவீனப் பள்ளிகளின் கரும்பலகைகள் போன்று மென்மையான மேற்பரப்பு கொண்ட செங்குத்தான கரும்பலகை என்று வேண்டுமானால் அதனைச் சொல்லலாம். அதில் எழுத்துக்கள் வெட்டப்பட்டதல்ல, ஏறக்குறைய அச்சடிக்கப்பட்டது எனத் தோன்றுமளவு அழகாக பொறிக்கப்பட்டு இருக்கின்றன. இதுவே இந்த மாவுக்கல் செய்யும் மாயம் எனத் தோன்றியது. கல்வெட்டுத் தூணின் உச்சியில் கருவறை தெய்வங்களான வேணுகோபாலன், கேசவன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோரின் சிற்பங்களும் அவர்களின் வலதுபுறம் கருடன் வணங்கிய நிலையிலும் இடதுபுறம் கன்றுக்கு முலையூட்டும் பசுவும் காணப்படுகின்றன. அதற்கும் மேலே தூணின் உச்சியில் கீர்த்திமுகனின் உருவம் வடிக்கட்டிருந்தது. மூன்றாம் நரசிம்மனின் 1268ஆம் ஆண்டு கல்வெட்டு முதல் 1326ஆம் ஆண்டைய மூன்றாம் வீரவல்லாளன் கல்வெட்டு வரை அதில் காணப்படுகின்றன.


இதேபோல மற்றொரு கல்வெட்டுத்தூணும் இருந்தது. முன்பக்கம் மெழுகுப்பரப்பைக் கொண்டுள்ள இத்தூணின் பின்புறமும் பக்கவாட்டு பரப்புகளும் மற்றெந்தவொரு கற்பாறையையும் போன்று கரடு முரடாகவே காணப்பட்டன. தூணின் அப்பகுதிகள் சிற்பியின் கைகள் தம்மீது பட்டால் போதும், என்னவாக வேண்டுமானாலும் ஆவோம் என்று பல நூற்றாண்டுகளாக தவம் கிடக்கின்றன போலும்!
ஆலயத்தின் முகப்பில் உபபீடத்திற்கான (ஜெகதி) படிக்கட்டுகளின் இருபுறமும் இரண்டு சிற்றாலயங்கள் உள்ளன. அவற்றில் தற்போது விக்கிரகங்கள் ஏதுமில்லை. ஆலயத்தின் நுழைவாயிலின் இருபுறமும் இரு துவாரபாலகர் சிலைகள் உள்ளன. அவை விஷ்ணுவின் சிலைகளே என்று சொல்லத்தக்க அளவுக்கு சமபாதஸ்தானத்தில் நின்ற நிலையில் அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. தலக்காடு வைத்தியநாதேஸ்வரர் கோவிலில் உள்ள துவாரபாலகரிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஹொய்சாளர்களின் துவாரபாலகரகள் இவர்கள்.


உபபீடம்
முதலில் ஆலயத்தை வலம் வந்துவிட்டு பின்னர் உள்ளே நுழையலாம் என்று ஆசிரியர் கூறவே உயரமாக அமைக்கப்பட்டுள்ள நன்கு அகன்ற அந்த நட்சத்திர வடிவ உபபீடத்தின் மீது நடந்தவாறு வெளிப்புறச் சிற்பங்களை காணத் தொடங்கினோம். அந்த உபபீடம் பல நட்சத்திர நுனிகளின் அணிவகுப்பு எனலாம். நகரும்போது சற்றே கவனம் குறைந்தாலும் நாம் நட்சத்திர கூம்புகளின் இடைவெளியில் கீழே விழுந்து விட வாய்ப்பு அதிகம். ஆலயத்தின் அடி முதல் நுனி வரை நிரம்பிக்கிடக்கும் சிற்பங்களும் நட்சத்திரங்களைப் போலவே எண்ணற்றவை எனத் தோன்றியது. எதைப் பார்ப்பது எதை விடுவது, எங்கே தொடங்குவது என்று பல குழப்பங்களுக்கு இடையில் ஆசிரியர் ஜெயக்குமார் எப்போதும் போல அவருடைய கட்டுக்கோப்பான முறைமையில் அதிஷ்டானம் அதாவது அடித்தளத்திலிருந்து சிற்பங்களைக் கண்டு ரசிக்க ஆயத்தப்படுத்தினார்.

அதிஷ்டானம்
அதிஷ்டானப் பகுதி பல வரிகளாக பிரிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிலும் பல நூறு சிற்பங்கள் வடிக்கப்பட்டிருந்தன. அதில் ஒவ்வொன்றாக காணத் தொடங்கினோம். அதிஷ்டானத்தின் அடிப்பகுதி அதாவது முதல்வரி யானைகள் நிறைந்த கஜவரி. இரண்டாவது வரி குதிரைகள் நிறைந்த அஸ்வவரி. பலநூறு யானைகளையும் குதிரைகளையும் தொலைவிலிருந்து பார்க்கும்போது ஒரேபோலத் தோன்றினாலும் அவற்றிலும் ஒன்று மற்றொன்றைப் போலல்லாது பல்வேறு வேறுபாடுகளை சிற்பிகள் செய்திருக்கின்றார்கள். சில இடங்களில் யானை வீரர்களை தூக்கி எறிகிறது, சில இடங்களில் பாகனோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. குதிரைகளின் மீதமர்ந்த வீரர்கள் வெவ்வேறு நிலைகளில் உள்ளனர், குதிரைகளின் முதுகின் மீதுள்ள வஸ்திரத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றன, சில குதிரைகளின் முன்னங்காலுக்கு அருகில் குரங்குகளோ மனிதர்களோ வெவ்வேறு நிலைகளில் காணப்படுகிறார்கள்.
அதற்கு மேலே மூன்றாவது வரி வல்லிமண்டலம் என்னும் கொடிக் கருக்கு நிரம்பிய வரி. அதிலும் எல்லாம் கொடிக் கருக்குகளே எனத் தோன்றும், ஆனால் அதன் நட்சத்திர அமைப்பின் ‘V’ வடிவ கூர் பகுதியை நோக்கினால் கூரின் இருபுறமும் உள்ள இரு கொடிக் கருக்குகள் சேர்ந்து கீர்த்திமுகனின் (சிங்கம் போன்ற) முகமாக மாறுவதைக் கண்டதும் அனைவர் முகத்திலும் புன்னகை. அதற்கும் மேலே நான்காவது வரி புராணக் காட்சிகளின் வரி. ராமாயணம், மகாபாரதம் மற்றும் பாகவதம் ஆகியவற்றின் காட்சிகள் வெகு அழகாக ஒன்றன்பின் ஒன்றாக பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு வரிகளும் முழு ஆலயத்திற்கும் பொதுவானது.
இதற்கு மேலே கருவறை மற்றும் சுகநாசி பகுதிகளிலுள்ள வரிகள் மண்டபப் பகுதிகளிலுள்ள வரிகளிலிருந்து மாறுபட்டுள்ளன. கருவறைகளின் அதிஷ்டானப் பகுதியில் ஐந்தாவது வரி மகரவரி, ஆறாவது வரி ஹம்ச (அன்னம்) வரி.

ஆனால் மண்டபப் பகுதியின் ஐந்து மற்றும் ஆறாவது வரிகள் மற்ற வரிகளைவிட இருமடங்கு உயரமானவை. இங்கு ஐந்தாவது வரியில் தூண் போன்ற புடைப்புகளும் அத்தூண்களுக்கிடையே விஷ்ணுவின் பல்வேறு வடிவங்களையும் வடித்துள்ளனர். அதன் மேல் உள்ள ஆறாவது வரியில் விமானங்களின் சிறு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விரு வரிகளையும் இணைத்துப் பார்க்கும்போது தூண்களையும் விமானங்களையும் கொண்ட ‘ஆலயங்களின் மீச்சிறு (miniature) வடிவங்கள்’ என்றும், அவற்றில் இறையுருவுகள் குடி கொண்டிருப்பதாகவும் தோன்றும். அதற்கும் மேலே கக்ஷாசனம். இதில் இசைக்கலைஞர்களும் மற்றும் அன்றாட வாழ்வியலின் காட்சிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

அதிஷ்டானத்தில் மட்டும் பல்லாயிரம் சிற்பங்கள் காணப்படினும் அதன் நான்காவது வரியான புராணவரியில் தான் அனைவரின் கவனமும் குவிந்தது. கையேட்டின் துணைகொண்டு இராமாயண மகாபாரத பாகவதக் காட்சிகளைக் கண்டுபிடித்ப்பதென்பது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு போலத் தொடர்ந்தது. உச்சி வெயிலில் சுடும் தரையில் நின்று அனைவரும் அவற்றை ரசித்துக் கொண்டிருந்தோம். அரை அடிக்கும் குறைவான உயரம் கொண்ட அந்தச் சிறிய இடத்தில் ஒவ்வொரு காட்சியிலும் பல கதாபாத்திரங்களையும் காட்சிப் பின்னணிகளையும் அவ்வளவு நேர்த்தியாக செதுக்கியிருப்பது வியப்பையே அளித்தது. சில காட்சிகளைக் கண்டுபிடிப்பதில் ஏதேனும் சிறு விடுபடல்கள் நேர்ந்தால் திரும்பச்சென்று முதலில் இருந்து ஆரம்பித்து ஒவ்வொரு காட்சிகளையும் சரியாக கண்டுபிடித்து எங்களுக்கு காண்பித்து விளக்கித் தந்தார் ஆசிரியர் ஜெயக்குமார்.
ராமாயணத்தில் புத்திர காமேஷ்டி யாகம் தொடங்கி ராமனின் பிறப்பு, சீதா சுயம்வரம் ராவணன் சீதையை கடத்திச் செல்லுதல் என பல காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளன. மகாபாரதத்திலும் பாண்டவர்களும் கௌரவர்களும் மரத்தில் விளையாடுவதும் பீமன் அந்த மரத்தை அசைத்து கௌரவர்களை விழவைப்பதும், பகாசுரனைக் கொல்ல பீமன் உணவு எடுத்துச் செல்வதும் என பல காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. பாகவதத்தில் கண்ணன் வெண்ணெய் கவர்தல் முதலான பல இளமைக்கால விளையாட்டுகளும், அவன் கோவர்தனகிரியைத் தூக்கி நிற்பது உட்பட பல லீலைகளும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.
பாதவர்க்கம்
மண்டபப்பகுதியின் அதிஷ்டானத்திற்கு (கக்ஷாசனத்திற்கு) மேலேயுள்ள பாதவர்க்கப் பகுதியில் பல துளைகள் கொண்ட சாளரச்சுவர்கள் காணப்படுகின்றன. ஆலயத்திற்குள் நல்ல காற்றோட்டத்தையும் வெளிச்சத்தையும் அளிப்பவை இவை. இச்சுவர்ப் பகுதிகளின் தூண்களிலும் சாளரங்களின் மேற்பகுதிகளிலும் அழகிய வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. அதற்கும் மேலே கபோதம். கபோதத்தின் நுனியிலும் நுண்மையான அழகிய ஹொய்சாளபாணி வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.

கருவறைப் பகுதியின் சுவர்களில் அதிஷ்டானத்திற்கு (ஹம்சவரிக்கு) மேலே இரு நிலைகளிலாக சிற்பங்கள் காணப்படுகின்றன. கீழுள்ள வரிசையில் பல தெய்வங்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன, அதுவே காண்போரைக் கவரும் பகுதி. அதற்கு மேலே பல்வேறு கருவறை விமானங்களின் சிறு வடிவங்கள் புடைப்புச்சிற்பங்களாக காணப்படுகின்றன. அதில் வேசரபாணி விமானங்கள் மட்டுமல்லாது பூமிஜா போன்ற மற்ற விமான அமைப்புகளும் காணப்படுவதை சுட்டிக் காட்டினார் ஆசிரியர் ஜெயக்குமார். இப்பகுதியில் சிற்பங்களைக் காணத் தொடங்கும்போதுதான் ஆலயத்தின் நட்சத்திர வடிவத்தின் உண்மையான பிரம்மாண்டமும் அதன் சிக்கலான அமைப்பும் புலப்படத் தொடங்குகிறது. மண்டபப்பகுதியில் உள்ள நட்சத்திர அமைப்பு அளவில் பெரியது ஆகையால் சற்றே விலகி இருந்து பார்த்தால்தான் அதை நம் கண்கள் கண்டுகொள்ளும். கருவறைப் பகுதியில் நட்சத்திர அமைப்பின் கூம்புகள் மிக நெருக்கமாக அமைந்து மையம் நோக்கி மேலே சென்றபடி உள்ளன. பாதி விரித்த மடங்கல் விசிறி போன்றோ அல்லது சேலையின் முன் மடிப்பு போன்றோ இவ்வமைப்பு காணப்படுகிறது.

இங்குள்ள நட்சத்திரக் கூம்புகளின் புடைப்புப் பகுதியில் தெய்வச் சிலைகளும் உள்நோக்கிய பகுதிகளில் அழகிய பெண்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் தெய்வமாக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவன் பாம்பின் மீது அமர்ந்த நிலையில் அழகிய வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக நித்தியசூரிகள் புடைசூழ காட்சித் தருகிறார். அவருக்கு மேலே குடை பிடிக்கும் ஏழுதலை பாம்பும் அதற்கும் மேலே அழகிய விருட்சமொன்றையும் அமைத்திருக்கிறார்கள். இவருக்கும் மண்டபச்சுவருக்கும் இடையிலுள்ள உள்நோக்கிய பகுதியில் அழகிய பெண் சிற்பம் காணப்படுகிறது. அவள் ஒரு கையில் மலர்ச்செண்டும் மற்றொரு கையில் உரிக்கப்பட்ட சோளக்கதிர் போன்ற ஒன்றையும் (இதனை கல்பமஞ்சரி என்று அழைப்பதாக ஆசிரியர் சொன்னார்) ஏந்தி நிற்கிறாள். வாசுதேவருக்கு வலப்புறம் உள்நோக்கிய பகுதியில் மத்தளம் இசைக்கும் கலைஞர் சிற்பம் உள்ளது. ஹொய்சாள ஆலயங்களில் மத்தளம் இசைக்கும் கலைஞர்களில் ஆண்களின் எண்ணிக்கையே அதிகமெனினும் இங்கே உள்ளது ஓர் அழகி. அடுத்ததாக இவ்வாலயத்தின் புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்றான நடனமாடும் நர்த்தன கணபதி காணப்படுகிறார். அவரின் தும்பிக்கை நுனி ஒரு முழு சுற்று சுருண்டு மலர்ச்செண்டை ஏந்தியிருப்பது மிக அழகு. பின்னர் சரஸ்வதி எட்டுக் கரங்களுடன் அக்ஷமாலை ஓலைச்சுவடி வீணை ஆகியவற்றுடன் பாசாங்குத்தையும் ஏந்தி நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்.

பின்னர் விஷ்ணுவின் பல்வேறு வடிவங்கள் காணக் கிடைக்கின்றன. நாமறிந்த விஷ்ணு என்பவர் பொதுவாக வலத்துறையும் சுடராழியும் (சக்கரம்) இடத்துறையும் பாஞ்சசன்யமும் (சங்கு) கொண்டு திகழ்பவர். ஆனால் மேலும்மேலுமென நுணுக்கங்களை நோக்கிச் சென்று கொண்டே இருக்கும் ஹொய்சாளக் கலையின் சாத்தியக்கூறுகளுக்கு விஷ்ணுவின் இந்த உறைந்த ஒற்றைப் பொதுச்சட்டகம் போதவில்லை போலும். அவர்களின் மாக்கல்லைப் போலவே நெகிழும் ஆடல் ஒன்றை விஷ்ணுவின் கைகளிலும் நிகழ்த்தியிருக்கிறார்கள் சிற்பிகள். சக்கரம், சங்கு, கதை மற்றும் பத்மம் (தாமரை) ஆகிய நான்கினையும் முன் பின் என நான்கு கைகளில் மாறி மாறி ஏந்தி இருக்கும் விதங்களைக் கொண்டு 24 வகையான விஷ்ணு ரூபங்களை வடித்திருக்கிறார்கள். இவ்வடிவங்களை ‘சதுர் விம்ஷதி (24 வடிவங்கள்)’ என்கிறார்கள். உதாரணமாக கேசவன் என்றால் பின் வலக்கையில் சங்கும் பின் இடக்கையில் சக்கரமும் முன் வலக்கையில் பத்மமும் முன் இடக்கையில் கதையும் கொண்டிருப்பார். முன் கைகளில் இதே அமைப்பு இருக்க, பின் கைகளில் மட்டும் இடம் மாற்றி (வலக்கையில் சக்கரமும் இடக்கையில் சங்கும்) ஏந்தியிருந்தால் அவர் ஜனார்த்தனன். இதுபோல இவற்றின் மாறுபாடுகளுக்கு ஏற்ப அச்சுதன், மாதவன், கோவிந்தன், வாசுதேவன், நாராயணன், தாமோதரன் பிரதியும்னன், அனிருத்தன், சங்கர்ஷணன் என அப்பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். பயணத்திற்கு முன்பே இந்த விவரங்கள் அடங்கிய ஒரு அட்டவணையை ஆசிரியர் எங்களோடு பகிர்ந்திருந்தார். அதை நினைவிலெல்லாம் வைத்துக் கொள்ள இயலாது, வேண்டுமென்றால் நாம் அந்த அட்டவணையைக் கையில் கொண்டு நோக்கி அடையாளம் காணலாம். எங்களுடன் பயணித்த சிறுவர்களுக்கு அதுவும் ஒரு சிறிய விளையாட்டு போல சுவாரசியமாகத்தான் இருந்தது.
மேலும் விஷ்ணுவின் தசாவதார உருவங்கள் சிலவும், அமுதகலசம் ஏந்திய தன்வந்திரியும் தியானத்திலமர்ந்த பெருமாளும் என பல வேறு வடிவங்களில் விஷ்ணு காணப்பட்டார். தியானத்தில் அமர்ந்த விஷ்ணு சிற்பத்தை முதன் முதலாக இங்குதான் காண்கிறேன், புத்தர் போலவே காட்சியளித்தார் (சங்கு சக்கரங்கள் மட்டுமே கூடுதல்). ஆசிரியரிடம் வினவியபோது அவரை ‘யோக நாராயணன்’ என்றார். புத்தரையும் இவ்வாலயங்களில் சாதாரணமாகக் காணலாம், தசாவதாரத்தில் ஒன்றாக – பலராமனுக்கு பதிலாக. ஹொய்சாள ஆலயங்களில் பலராமனை அரிதாகவே காணமுடிகிறது.

மற்ற பல தெய்வங்களின் சிற்பங்களையும் இந்த வரிசையில் காணலாம். நான்கு தலையுடன் கூடிய பிரம்மனை அக்ஷமாலை, அமுதகலசம், வராகவீணை மற்றும் வஜ்ராயுதம் ஆகியவற்றை ஏந்தி நின்ற நிலையில் கண்டதும் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “புடவி சமைத்த கலைஞன். படைக்கும் சொல் இசையும் சுவையும் தியானமும் மின்னலின் வேகமும் கொண்டிருக்க வேண்டும்” என்ற வாசகம் மின்னல்போல வந்து சென்ற அக்கணம் அரிய ஒன்று. அவரால் மட்டும்தான் ஒரு சிலையை இப்படிப் பார்க்க முடியும், அதைச் சொல்லாக்கி நமக்குக் கடத்தவும் இயலும். மேலும் நடனமாடும் துர்க்கை, ரதி-மன்மதன், ஐராவதத்தின் மீது இருக்கும் இந்திரனும் இந்திராணியும் காணப்படுகின்றனர் (இங்கு ஐராவதத்தைக் கண்டறிய அவற்றின் ஒவ்வொரு புறமும் உள்ள இரட்டைத் தந்தங்களைக் காண்பித்தது போல புதிய சிற்பங்களைக் காணும் போது அவற்றின் இலக்கணங்களையும் கூறி அடையாளப்படுத்துவார் ஆசிரியர்). மகிஷாசுரமர்த்தினி மகிஷனின் சொந்த மண்ணிலேயே (மகிஷனுர்- மைசூர்) அவனை வதம் செய்வதை காணக்கிடைத்த முதல் காட்சி, அந்த உக்கிரக் காட்சியிலும்கூட பேரழகுடன் திகழ்கிறாள் அன்னை. சூரியனின் சிற்பமும் காணப்படுகிறது. ஹொய்சாள ஆலயங்களில் சூரியன் இருப்பக்கமும் இரண்டு வில்லேந்திய சிற்பங்கள் காணப்படுகின்றன. அவர்கள் அம்பெய்தி இருளை கிழித்து வெளிச்சம் தருபவர்கள் என்கிறார்கள். உஷை மற்றும் சாயாதேவி என்றும் கூறுகின்றனர். மேலும் பற்பல சிற்பங்கள் காணப்படுகின்றன, எல்லாச் சிற்பங்களையும் இவ்வாறு கூறிக்கொண்டே செல்வதென்பது இயலாதவொன்று.

திராவிடபாணிச் சிற்பங்களோடு ஒப்பிடுகையில் ஹொய்சாளச் சிற்பங்களின் மகுடம், ஆடையலங்காரம் என்று முடி முதல் அடி வரை பல்வேறு வேறுபாடுகளை கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் சிற்ப இலக்கணங்களிலும் கூட பல மாற்றங்கள் உள்ளன, பாசாங்குசம் ஏந்தி நிற்கும் சரஸ்வதி போல, நடனமாடும் காளியின் ஒரு கையில் அக்ஷமாலையும் இருப்பது போல. ஆனால் வேறெங்கும் சிற்பங்களில் அதிகமாக காணக்கிடைக்காத சோளக்கதிர் போன்ற அந்த ‘கல்பமஞ்சரி’ இங்கு மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. சாதாரண பெண் சிலைகள் மட்டுமல்ல சரஸ்வதி, லக்ஷ்மி உட்பட பல பெண் தெய்வங்களின் கைகளிலும் அதைக் காணமுடிகிறது. மேலும் சில கோவில்களில் ஆண் தெய்வங்களின் கைகளிலும் அதைக் காணலாம். ஆசிரியர் ஜெயக்குமாரிடம் இந்த கல்பமஞ்சரியைப் பற்றி வினவியபோது கூறினார் ‘அது இந்த நிலத்தின் அடையாளம்’ என்று. ஆம், இன்று நாம் அப்பகுதியில் எங்கு பார்த்தாலும் நெல் வயல்களும் கரும்புத் தோட்டங்களும் பாக்கு மற்றும் தென்னந்தோப்புகளுமே காணப்படுகின்றன. ஆனால் அவை எல்லாம் ஹொய்சாளர்களின் நீர்ப்பாசன கட்டமைப்புக்குப்பின் உருவானவை. அவர்களுக்குமுன், இன்றும் கர்நாடகத்தின் மற்ற பகுதிகளில் காணப்படும் குறைந்த நீர் வளத்தில் விளையும் சோளம் போன்றவையே இந்நிலத்தின் முதன்மை தானியமாக இருந்துள்ளது. அந்த சோளத்தைத்தான் அவர்கள் கலையில் கொண்டுவர முயற்சித்துள்ளனர். முதலில் சாதாரண பெண் சிற்பங்களின் கையில் கொடுத்து பின்னர் பரம்பொருளின் கைவரை கொண்டு சேர்த்திருக்கிறார்கள். ஆகமங்களும் சிற்பசாஸ்திரஙகளும் ஒரு பக்கம் பொது இலக்கணங்களை வகுத்துக் கொண்டே சென்றாலும், அதைத் தாண்டி ஒரு கலை தோன்றி நிலைகொள்ளும் நிலமும் அதன் பண்பாடும் அதன் தவிர்க்க முடியாத கூறுகளும் அக்கலையில் வந்து சேர்வதென்பது அம்மண்ணின் அம்மாந்தரின் ஆன்மா கலையில் கலப்பதுதான். கலையை நிலத்திலிருந்து முழுமையாக பிரித்து விட முடியாது. இது போன்ற செயல்பாடுகளின் பரந்துபட்ட மற்றும் ஒட்டுமொத்த விளைவே இந்த அகன்ற இந்தியநிலத்தில் ஒற்றுமைகள் எவ்வளவோ அதைவிட கூடுதலாக அதன் ஒவ்வொரு சிறுஅலகிலும் தனித்தன்மையுடன் கூடிய எண்ணற்ற வேற்றுமைகளும் காணக்கிடைப்பது. ஆம், சோளம் அவர்களின் அன்னம். எனில், அவர்களின் அன்னபூரணி வேறெதை ஏந்தி நிற்க முடியும்!.

மண்டபங்கள்
ஆலயத்தின் வெளிப்புறத்தைச் சுற்றிப்பார்த்தபின் துவாரபாலர்களைக் கடந்து ஆலயத்தினுள்ளே நுழைந்தோம். முதலில் நம் கண்களைக் கவர்வது முகமண்டபத்திலும் நவரங்க மண்டபத்திலும் உள்ள அழகிய ஸ்ரீகாரத் தூண்கள். மாவுக்கல்லை கடைசலில் (lathe) உருட்டி செய்யப்பட்ட உருளைத் தூண்கள் (திராவிட பாணியில் தூண்கள் சதுரம் பலகோணம், சதுரம் பலகோணம் என மாறி மாறி வருவது போல செதுக்கப்படுபவை). ஸ்ரீகாரத் தூண்களோ பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை, பல வளையங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போலத் தோன்றும். இத்தூண்கள் கருமையானவை, ஆனால் கண்ணாடியைப் போன்று மென்மையான பரப்பையும் பளபளப்பையும் கொண்டவை. ஒளி படும்போது மின்னுபவை. நம் உருவத்தைக் கூட அதில் கண்டுவிடக் கூடிய அளவுக்கு பளபளப்பானவை. அவற்றிலும் பல நுண்ணிய வேலைபாடுகளைச் செய்திருக்கிறார்கள். சில தூண்களில் பல செங்குத்தான கோடுகளால் அதன் வெளிப்புறத்தை சிறு சிறு அலகுகளாகப் (ஆரஞ்சுச் சுளை போன்று) பிரித்து அதிலும் பல நுண்ணிய வேலைப்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்.


இவ்வாலயத்தின் ஆகச்சிறந்த தனித்தன்மையாகக் கூறப்படும் ஒன்று அதன் முகமண்டபத்திலும் நவரங்கமண்டபத்திலுமுள்ள பிரஸ்தாரம்/ விதானங்களில் (கூரை) செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகள். கீழே இருந்து நோக்கும்போது குவை மாடங்கள் போலவே காணப்படும் இவ்விதானங்களை கவிழ்த்து வைக்கப்பட்ட தாமரையைப் போன்று வடித்திருக்கிறார்கள். அவற்றின் மையத்தில் தாமரையோ அல்லது வாழைப்பூ போன்றோ கீழ்நோக்கித் தொங்கும் மலரும், அம்மலரைச் சுற்றி பல்வேறு அடுக்குகளில் நுண்ணிய வேலைப்பாடுகளையும் தெய்வச்சிற்பங்களையும் கொண்டு விளங்குகின்றன அவை. இது கூரையை குடைந்து செய்யப்பட்டது போலவே தோன்றும், ஆனால் பல்வேறு கற்களால் செய்யப்பட்டு அதை ஒரு குவைமாடம் போல அருமையாக அங்கே அமர்த்தியிருக்கிறார்கள். இத்தனை கலையழகுடன் கூடிய பல சிற்பங்களடங்கிய கற்களை தனித்தனியாக செய்து அவற்றை சரியாக பொருத்தி இத்தனை நூற்றாண்டுகள் வரை நீடிக்கவைக்க வேண்டுமெனில் அதற்குப் பின்னால் உள்ள கட்டுமானக் கணக்கீடுகள் வியக்க வைப்பவை.


இவ்வேலைப்பாடுகளை அண்ணாந்து பார்த்து ரசித்து விட முடியாது, கழுத்து வலிக்கத் தொடங்கிவிடும். திடீரென, கீழே பார்த்தால் கவிஞர் சாம்ராஜ் அவர்கள் தரையில் படுத்து விதானத்தை பார்க்கத் தொடங்கிவிட்டார் (ஹொய்சாள ஆலயங்களில் விஷ்ணு கிடந்தகோலத்தில் அவ்வளவாக இல்லை என்று ஜெ கூறிய குறை இன்று இவரால் தீர்த்து வைக்கப்பட்டது!). ஆம், அவ்வளவு அழகை ரசிக்க வேண்டுமெனில் அதுவே உகந்த வழி என்று பலரும் தரையில் கிடந்து விதானத்தைப் பார்க்கத் தொடங்கினோம். எப்படிப் பார்த்தாலும் அதன் முழு அழகையும் கண்டு ரசித்து விட முடியாது. மேலும் அவை ஒன்றல்ல இரண்டல்ல, அங்கு பல விதானக் குவைமாடங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றில் மையமலரைச் சுற்றி கயிற்றால் மட்டுமே சாத்தியமென எண்ணத்தக்க வலைப்பின்னலை கல்லில் செதுக்கியிருந்தார்கள், அத்தகையப் பின்னலை கல்லில் வடிக்கமுடியும் என்பதை மனம் நம்ப மறுத்தது.

கருவறை
பின்னர் ஆலயக் கருவறைகளை பார்க்கச் சென்றோம். மேற்குப் புறமுள்ள மையக்கருவறையில் மூலவிக்கிரகமான சென்னகேசவன் தற்போது இல்லை, அங்கே காணப்படுவது வேறொரு விஷ்ணு சிலை. பின்வலக்கரத்தில் சங்கும் பின்இடக்கரத்தில் கதையும் முன்வலக்கரத்தில் பத்மமும் முன்இடக்கரத்தில் சக்கரமும் கொண்டு விளங்குவதால் இவரை ‘தாமோதரன்’ எனலாம் (விஷ்ணு என்று பொத்தாம்பொதுவாக இவரை அழைத்து விட முடியாது, ஏனெனில் இவர்களின் சதுர் விம்ஷதி கணக்குகளின் படி ‘விஷ்ணு’ என்ற வடிவத்திற்கு வேறு இலக்கணங்கள்!). தெற்குக் கருவறையில் வேணுகோபாலன் கருமையும் ஒளியும் முயங்கித் ததும்பும் மிகவும் அழகான காரொளி வண்ணனாகத் திகழ்ந்தார். அவனைச் சுற்றியிருந்த பிரபாவளயத்தில் ஆநிரைகளும் கோபியரும் ஆயர்களும் அவனுடைய குழலோசையில் மயங்கி நிற்பது போல அழகாக வடிக்கப்பட்டிருந்தனர். அதன் உச்சியில் ஒரு விருக்ஷமும் அதற்கு மேலே கீர்த்தி முகமும் காணப்பட்டன.

வடக்குக் கருவறையில் ஜனார்த்தனன் (பின்வலக்கையில் சக்கரமும் பின்இடக்கையில் சங்கும் முன்வலக்கையில் தாமரையும் முன்இடக்கையில் கதையும் கொண்டு திகழ்ந்தார்). தமிழகத்திலும் கேரளத்திலும் நம் மனதிலுள்ள பொதுவான விஷ்ணு வடிவம் இதுவே. நம் பெருமள்கள் எல்லாமே இவர்கள் கணக்கில் ஜனார்த்தனன்கள் எனலாம்! (கேரளத்திலும் குருவாயூரப்பன் முதலானோர் காட்சியளிப்பது இந்த வடிவில்தான்). இவ்வாலயத்தில் மட்டும்தான் வடக்குக் கருவறையில் நின்றகோலத்தில் விஷ்ணுவைப் பார்க்க முடிகிறது. நாங்கள் கண்ட மற்ற திரிகுடாச்சல ஆலயங்களிலெல்லாம் மூலவருக்கு இடப்பக்கக் கருவறையான இது நரசிம்மருக்குரியது. மூலவரின் வலப்பக்கம் இங்குள்ளது போலவே எங்கும் வேணுகோபாலனுக்கானதுதான். மையக்கருவறையில் எப்போதுமே நின்ற நிலையில்லுள்ள ஏதேனும் ஒரு சதுர் விம்ஷதி வடிவப் பெருமாள், பெரும்பாலும் ‘கேசவன் அல்லது நாராயணன்’ போன்ற வடிவங்களில் காட்சியளிக்கிறார். கருவறைகளின் நுழைவாயிலும் அபாரமான அலங்காரங்கள் கொண்டவை. வடக்குக் கருவறை நுழைவாயில் அலங்காரத்தின் உச்சியில் மீண்டும் யோக நாராயணனைக் காண முடிந்தது.
இத்தகைய பிரமாண்டமான பேராலயம் இப்பொழுது வழிபாட்டில் இல்லை. எங்கோ கம்போடியாவிலோ அல்லது இந்தோனேசியாவிலோ அல்ல, அக்கடவுளை வணங்கும் கோடானகோடி மக்கள் வாழும் நம் மண்ணில். ஒப்பு நோக்குகையில் ஹொய்சாளர் காலத்து மற்ற பல சிற்றாலயங்களும் இதைவிட மேலும் சிதைக்கப்பட்ட சில ஆலயங்களும் கூட இன்னும் வழிபாட்டில் உள்ளன. ஆனால் இவ்வாலயம் ஏன் வழிபாட்டில் இல்லாமல் போனது? மையக் கருவறை மூலவர் இல்லாமல் போனதாலா? இத்தனைக்கும் மூன்று கருவறைகள் வாய்க்கப்பெற்று அவற்றில் இன்னும் இரண்டு அசல் மூலவிக்கிரகங்கள் வீற்றிருந்தும்கூட!. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திருவரங்கனையும் மீனாட்சியையும் உயிரைப் பணயம் வைத்து தூக்கித்திரிந்து ஒளிந்துவாழ்ந்து காலம் கனிந்ததும் மீளமர்த்தியது இதனால் தானோ?
விமானம்
திராவிடபாணி ஆலயங்களோடு ஒப்பிடுகையில் பொதுவாகவே ஹொய்சாள ஆலயங்களின் விமானங்கள் சிறியவை. கருவறையின் மீது அமைந்த இவற்றை ‘விமானம்’ என்றே கூற வேண்டும், ‘கோபுரம்’ என்றல்ல என்பார் ஆசிரியர் ஜெயக்குமார். கோபுரம் என்பது ஆலய சுற்றுச்சுவரின் வாயில்களின் மீது அமைக்கப்படுவது (நம்மவர்கள் கூறிக் கொண்டிருப்பது போல தஞ்சை பெரிய கோயிலின் கருவறை மீது அமைந்திருப்பது விமானமேயன்றி, கோபுரமல்ல). ஹொய்சாள ஆலயங்களில் சுற்றுச்சுவரின் மகாதுவாரங்களின் மீது பொதுவாக கோபுரங்கள் காணப்படுவதில்லை, அவ்வாறு இருப்பினும் அவை பிற்காலத்தில் குறிப்பாக விஜயநகர காலத்தில் கட்டப்பட்டவையாக இருக்கும். இவ்வாலயத்தின் மூன்று கருவறை விமானங்களும் அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. ஒப்பு நோக்க அவை அளவில் சிறியவை ஆதலாலும் உயரத்தில் அமைந்திருப்பதாலும் அவற்றை விரிவாகக் காண்பது இயலாது. சற்றே தள்ளி இருந்து அதனைப் பார்க்கும்போது ஒட்டுமொத்த விமானமுமே ஒரு கல்பமஞ்சரி (சோளக்கதிர்)யின் வடிவிலிருப்பதாக ஒரு கணம் தோன்றிற்று. மண் அருளிய அமுதை விண்ணோக்கி விண்ணவர்க்கும் விளம்பினரோ!.

விமானத்தைப் பார்த்தபடி ஆசிரியர் ஜெயக்குமார் சுட்டிக்காட்டினார், இவ்வாலயங்களின் கீழ்ப்பகுதியில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளின் அளவுக்கு விமானப் பகுதியில் இல்லை என்பதை. அங்குள்ள சிற்பங்கள் அளவில் சிறியனவும் கூட. அவை மேலே செல்லச் செல்ல ஒருவித எளிமை அல்லது இன்மையை நோக்கி ஒரு தாவுதல் நிகழ்வத்துவதைப் போல அங்கு உணர்ந்தோம். உருவங்களின் எண்ணற்ற பிரம்மாண்டமான சாத்தியக்கூறுகளின் பேரழகில் திளைத்தாலும் ஆன்மீகத்தின் அடுத்தப் படிநிலை என்பது அருவை நோக்கியதே அல்லவா!.

இறுதியாக சோமநாதபுரம் ஆலயத்தை விட்டு கிளம்பவேண்டிய நேரம் வந்தது, ஆனால் விட்டுச் செல்ல மனமில்லை. இந்த நட்சத்திர அமைப்புதான் எத்தனை அழகானது, விசித்திரமானது. இதனை கட்டமைப்பதென்பது சாதாரண காரியமல்ல. ஒரு குழந்தை தன் கையால் சதுரங்களையும் செவ்வகங்களையும் வரைவதை ஒப்பிடும்போது பலமுனைகளைக் கொண்ட நட்சத்திரத்தை சீராக வரைவதற்கு எத்தனை ஒழுங்கும் தேர்ச்சியும் வேண்டுமோ அத்தனை மடங்கு அதிக கணக்கீடுகளும் உழைப்பும் தேவைப்படும் ஒன்று இது. ஆனால் இவ்வமைப்பின் விளைவாக உருவாகும் கலையனுபவம் அந்த உழைப்பைவிட பல மடங்கு மேலானது என்றே தோன்றுகிறது. இவ்வாலயங்களின் கருவறை வெளிப்புறச் சுவர்ப்பகுதியைப் பார்க்கையில் நமக்கு எதிரிலுள்ள 4 அல்லது 5 அடி பரப்புக்குள் எத்தனை மடிப்புகள்? எத்தனைச் சிற்பங்கள்?. நாம் ஒரு சிற்பத்தை காணவேண்டுமெனில் அதன் பின்புலமாக அதே அளவுக்கு பேரழகுடன்கூடிய பற்பல சிற்பங்களைப் பின்னணியாகக் கொண்டே பார்க்க இயலும். மலரைக் காணச்சென்றால் மலர்க் காட்டையும் சேர்த்தே பார்த்தாக வேண்டும் என்பதைப் போல!.
ஒரு சிற்பத்தின் நேரழகைக் காணும் வேளையில் மற்றொரு சிற்பத்தின் பக்கவாட்டுச் சாயலும் வேறொன்றின் சற்றே சாய்ந்த கோணமும் பிறிதொன்றின் நேரெதிர் கோணமும் சேர்ந்தே காட்சி தரும். சிற்பங்களின் தரப்பிலிருந்து பார்த்தால் ஒன்று நம்மை நேராக நோக்க மற்றொன்று பக்கவாட்டில் பார்க்கிறது (பக்கவாட்டில் அதன் சிரிப்பு புன்னகையா அல்லது நமட்டுச்சிரிப்பா என மயக்கம் தோன்றும்). வேறொரு சிற்பம் நம்மை பின்னாலிருந்து பார்க்கிறது, உள்நோக்கிய மடிப்புகளிலுள்ள சிற்பங்கள் நம்மை எட்டிப் பார்க்கின்றன, சில சிற்பங்கள் உன்னையெல்லாம் பார்க்க முடியாது என திரும்பி நிற்கின்றன. சில சிற்பங்கள் நம்மை அஞ்சி இடைவெளிகளில் ஒளிந்தும் கொள்கின்றன. இத்தனையும் ஒரு சேர நிகழாது ஒரு சிலையை காண்பது இயலாது. அதுமட்டுமின்றி ஒளியும் நிழலும் சேர்ந்து அவற்றின் மீது உண்டாக்கும் மாயங்களோ முடிவிலி. சிலசிலைகளின் மீது முழுமையாக வெளிச்சம்பட, சில சிலைகளின் பாதிமட்டும் ஒளிபெற, சிலவற்றின் சிறுபகுதிகள் மட்டும் ஒளிர, சில சிலைகள் முழுநிழலில் இளைப்பாறவும் செய்கின்றன. இது அந்நேரத் தோற்றம் மட்டுமே. சில நாழிகை கழித்து வந்து பார்த்தால் ஒட்டுமொத்தமுமே வேறொரு ஒளியமைப்பின் பின்னணியில் காணப்படுகின்றன. முன்பு நேராக வெட்டிய நிழல் இப்போது சாய்ந்தும், முன்பொரு கோணத்தில் வெட்டிய நிழல் தற்போது வேறொரு கோணத்திலும் வெட்டி நிற்கும். வெளிச்சத்திலிருந்த சில நிழலிலும், நிழலிலிருந்த சில வெளிச்சத்திற்கும் மாறிநிற்கும். அந்தியிலும் புலரியிலும் அவை என்னென்னவாகும்?. இவ்வனைத்தையும் நம் கண் முன்னே உள்ள ஒரு சிறிய சட்டகத்தில் நிகழ்த்திக் காட்டும் இதனை மானுடன் வடித்த கட்டிடம் என்பதா? இல்லை, அந்த மயன் சமைத்த மாயம் என்பதா!
அற்றை நாளில்
அகல்களின் ஒளியில்
எத்தனை நெளிவில்
நர்த்தனமாடினவோ?
ஆனந்த கூத்தில்
அலையாடிய சிலைகடலோ?
காலத்தில் பின்செல
கருவிதான் உளவோ?
பிந்திப் பிறந்தது
பிழையும்தானோ?
கருத்தில் கொள் – என்
காரொளி வண்ணா!
கனவிலேனும்
காருண்யம் செய்!
*********
படங்கள் உதவி; சேதுராமன் சீனிவாசன்



