இணைய இதழ் 128சிறுகதைகள்

மூன்றாம் கண் – சூர்ய ரத்னா

சிறுகதைகள் | வாசகசாலை

      ‘நேச்சர் டிரேய்லில்’ ஒரு நடை போகலாம் என்பது நீண்ட நாட்களாகவே அனிதாவும் ஜானுவும் போட்டிருந்த திட்டம். அன்று அமைந்துவிட்டது. கொசுக்கடியிலிருந்தும் வெயில் தாக்கத்திலிருந்தும் ஓரளவு பாதுகாப்பு தரும் லெக்கிங்ஸ், சன்ஸ்கிரீன், கல்லுக்கும் முள்ளுக்கும் ஏதுவான காலணிகள், பூச்சி ரிப்பெல்லண்ட், பெரிய தண்ணீர் பாட்டில் மற்றும் நூறு கிலோ உற்சாகத்தோடு அனிதா கிளம்பினாள்.

      என்ன, மாதவிடாய் வராமல் இருந்திருக்கலாம். மூன்றாவது நாள். அனிதாவுக்கு மாதவிடாய் தேதி ஓரிரு நாள் முன்பின் வரும். மற்றபடி வலி மிகுந்தோ அதிக இரத்தப்போக்குடனோ இருந்தது கிடையாது. மாதவிடாய் நேரத்தில் நீச்சலடிக்கவே போயிருக்கிறாள், டாம்பொன்ஸ் அணிந்து. அதனால், இதற்காக நடைத்திட்டத்தைத் தள்ளி வைக்க அவள் விரும்பவில்லை.

      நேச்சர் டிரேய்ல் இருந்த சிறிய சாலையை முதலில் அடைந்தாள் அனிதா. அதன் நுழைவாயிலில் செல்ஃபிகளை எடுத்துத் தன் சமூக வலைதளத்தில் பதிவேற்றினாள். சிறிது நேரத்தில், ‘பார்த்துப் போ. என்ஜாய் பண்ணு. யாரோட போறே? என்னை ஏன் கூப்பிடவில்லை?’ போன்ற வழக்கமான பதில் பதிவுகள். ஒரு பதிவு மட்டும், “பல வருஷத்துக்கு முன்னால் அங்கே ஒரு பெண்ணைக் கொன்று போட்டாங்க. அவள் ஆவி அங்கே சுத்திட்டு இருக்காம். ஜாக்கிரதை,” என்றிருந்தது. அப்படி யாரும் அங்கே கொல்லப்பட்டதாக அனிதா கேள்விப்படவில்லை. குறும்புக்காரப் பதிவாக இருக்கும் எனப் புன்னகைத்தாள்.

    ‘சும்மா அள்ளி விடறது!’

    ஜானு  வந்துவிட்டாள்.

    அதிகம் நவீனப்படுத்தப்படாத நேச்சர் டிரெய்ல் அது. எளிய நடைப்பாதைகள். இருந்தாலும் காலங்காலமாக நடந்து திரிந்த காலடிகளால் உருவான மண்பாதைகளில் வளைந்து நெளிந்து நடந்து செல்வதே சுகம்.

    வாரநாள் காலை என்பதால் அதிகம் பேர் இல்லை. இயற்கையின் ஊட்டச்சத்தில் பெரணிச் செடிகள் வஞ்சனையின்றிப் பெரிது பெரிதாகப் பல இடங்களில் விரிந்திருந்தன. சிறிய, பெரிய பழுப்பு நிறப் பாம்புகளின் நீளமான முதுகுகளைப் போலப் புல்தரையின் ஊடே தெரிந்த தொன்மையான மரங்களின் வேர்கள், பரந்து ஒன்றோடொன்று பின்னிய கிளைகள், கிளைகளின் இடைவெளிகளுக்கிடையே வடிகட்டி விழுந்த சூரிய ஒளி, ஆங்காங்கே காலுக்கடியில் நறநறவெனச் சரளைக் கற்கள், போக்குவரத்து இரைச்சலுக்கு மாற்றாகப் பறவைகளின் அழைப்பொலிகள். பொன்னும் பச்சையும் பழுப்பும் கலந்த அழகானதோர் ஓவியத்துக்குள் ஜானுவும் அனிதாவும் பேசிக் கொண்டே சென்றனர்.

      அரைமணி நேரம் சென்றிருக்கும். தாழ்வான மணல் மேடு ஒன்றின்மீது இரண்டு வெள்ளைக்காரப் பெண்கள் ஓய்வாக அமர்ந்திருந்தனர். எட்டிலிருந்து பத்து வயதுக்குள் இருந்த அவர்களின் மூன்று குழந்தைகளும் களைப்பாகத் தென்பட்டாலும் அந்த வயதுக்கே உரிய உற்சாகம் குறையாமல் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    “இண்டர்நேஷனல் ஸ்கூலில் இப்போ விடுமுறை, இல்ல?” என்ற ஜானு, பொன்னிறச் சுருள்முடிச் சிறுமியின் அழகை மிகவும் ரசித்தாள். சிறுவர்களில் ஒருவன் பழரசம் குடிக்கத் தாயிடம் வந்தான். குடித்துவிட்டுப் பாக்கெட்டை கீழே வீசினான். அவன் தாய் ஓர் அதட்டலைப் போட்டதும், பழரச பாக்கெட்டை அவள் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் போட்டான். இன்னொரு சிறுவன் அவனாகவே தன் பழரச பாக்கெட்டை பையில் போட்டான்.      

   “சோ கியூட்’லே?” என்றாள் அனிதா சாதாரணமாக. அசாதாரணமாக ஜானுவுக்குத் தோன்றியது எது என்றால், சிறுமி எதையோ பார்த்துப் பார்த்துச் சொந்தமாகப் பேசுவதும் சத்தமின்றிச் சிரிப்பதும். சிறுமி தன்னுடைய பழரச பாக்கெட்டை எதனிடமோ நீட்டினாள். தாய் அழைத்ததும் ஓடி வந்தாள். திரும்பிப் பார்த்து எதனிடமோ புன்னகைத்தாள். தாய்கள் தங்களின் உரையாடலில் ஆழ்ந்திருந்ததால், சிறுமியின் செயல்களைப் பெரிதாக நினைக்கவில்லை.

      அவர்களைக் கடந்ததும், “அந்தப் பொண்ணு சொந்தமா பேசுது, யாருகிட்டேயோ ஜுஸ்ஸை நீட்டுது, கவனிச்சியா?” என்றாள் ஜானு.

    “கவனிச்சேன். அந்த ரெண்டு பயலுங்களும் அதை விளையாட்டிலே சேர்த்திருக்க மாட்டானுங்க. அதனாலே அதுவே ஒரு கூட்டாளியைக் கற்பனை பண்ணிருக்கும். நடக்கிறதுதானே? ஒரே பிள்ளையாகூட இருக்கலாம், பாவம்.”

      அவர்களைக் கடந்ததும் அடுத்த இருபது நிமிடங்களுக்குப் பாய்பிரண்டோடு சண்டை போட்டக் கதையை அனிதா பகிர்ந்துக் கொண்டிருந்தாள். பல்கலைக்கழக மாணவர்களைப் போலத் தோன்றிய மூன்று ஆண்களும் இரு பெண்களும் வேறொரு பாதையிலிருந்து கேலியும் கிண்டலும் சிரிப்புமாக வந்து கொண்டிருந்தனர். அவர்களில் அதிகச் சத்தமும் சேட்டையுமாக ஓர் இளைஞன் இருந்தான். தாழ்வாகப் பூத்துக் குலுங்கிய ஒரு மெல்லியக் கிளையை ஒடித்தான்.

     “ஏய், லாம்! செய்யாதே, சிசிடிவி இருக்கப் போகுது. அப்புறம் வாண்டலிஸ்ம் பண்ணதுக்கு மொய் எழுதணும்!” என எச்சரித்தாள் கூட்டத்திலிருந்த ஒருத்தி.

      “மெயின் பாதைகளிலே வேணா சிசிடிவி இருக்கும். இங்கே இருக்காது,” என்றவாறு எச்சரித்தவளிடமே பூங்கொத்துக் கிளையை அவன் நீட்டினான். மகிழ்ச்சி கூப்பாடுகள், விசில் சத்தம். ஜானுவின் முகம் மாறியது.

       “கொட்டமடிக்குதுங்க…. எல்லா இடத்திலேயும் சிசிடிவி வச்சாதானே பயம் இருக்கும்?”

       “சும்மா ‘ஃபன்’தானே பண்ணிட்டிருக்குதுங்க. ஏன் சீரியசா எடுத்துக்கிறே? இருந்தாலும் கிளையை உடைக்காமல் இருந்திருக்கலாம்.” 

       லாம் தனது காலி மினரல் வாட்டர் பாட்டிலை ஒரு மரத்தை நோக்கி வீசினான். மரத்தின் பட்டையில் ஆடாமல் அசையாமல் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு குட்டி ஓணான் திடுக்கிட்டுக் குதித்தோடியது. அவனைக் கிண்டலடித்து, மற்றவர்களிடமிருந்து ஒரு குபீர் சிரிப்பு.

    “சரியான அறுந்த வால்! தூக்கிப் போட்டு இரண்டு மிதி மிதிச்சா தானா புத்தி வரும், சிசிடிவியே தேவையில்லை!” என ஜானு முணுமுணுத்தாள்.   

     லாம் ஓணானைத் தேடிப் பாதையை விட்டு விலகிப் போக, நண்பர்களும் மெதுவாகப் பின்தொடர்ந்தனர். அப்போதுதான் ஜானு கவனித்தாள்.

     மங்கலாகக் கானல் நீர் போன்று ஏதோ…….. இளைஞர்களுக்குப் பின்னால். கண்களைச் சுருக்கிப் பார்த்தாள். இளைஞர்கள் நகரும்போது, அவர்களைத் தொடர்ந்து அந்த நிழலுருவமும் நகர்ந்தது. மரங்களின் நிழல்கள் நீண்டனவா, என்ன?  

    “அனி! அவங்க பின்னாலே பாரேன். என்னவோ நகர்ந்து போகுதுதானே? நிழல் மாதிரி.”

     அனிதா உற்று நோக்கினாள்.   

    “ஹ?”  

     அனிதாவைப் போலவே லாமோ அவன் நண்பர்களோ எதையும் கவனித்திருக்கவில்லை என அவர்களின் உடல்மொழி சொன்னது. லாம் வேறு எதன் மீதோ ஒரு கல்லை விட்டெறிந்தான். அங்கிருந்து வந்த சிறிய ‘கீச்’ சத்தம், வலியின் வெளிப்பாடு. லாமின் பின்னாலிருந்த மங்கலான நிழலுருவம் இப்போது சுமார் எட்டு, ஒன்பது அடி உயரத்துக்குச் சற்று அடர்த்தியாகத் தெரிந்தது. அனிதாவின் பக்கம் நடுக்கத்துடன் திரும்பினாள் ஜானு.

   “ஒழுங்கா பாரு, அங்கே என்னவோ இருக்கு.” 

   இருவரும் திரும்புவதற்குள் ஒரு கதறலுடன் முன்னால் இருந்த மரத்தில் லாம் பலமாக மோதி விழுந்தான். ‘என்னவோ’வை எங்கும் காணவில்லை.

   லாமின் அடிபட்ட மூக்கிலிருந்தும், கிழிந்த உதட்டிலிருந்தும் இரத்தம். கன்னத்தில் இரத்தக்கீறுகள். அனிதாவும் ஜானுவும் உதவ ஓடினார்கள்.   வலியும் அவமானமும் ஒருசேர, “யார் என்னை அறைந்தது?” என ஆத்திரத்தோடு லாம் கத்தினான். நண்பர்களுக்குக் குழப்பம்.

   “நாங்க இங்கே நிற்கிறோம், எங்களைச் சொல்றே? பெரிய பெரிய வேர்களா இருக்கு, ஒழுங்கா பார்க்காம நீயாதானே தடுக்கி விழுந்தே? நாங்க எதுக்கு உன்னை அடிக்கிறோம்?” 

   லாம் உதிர்த்த கெட்ட வார்த்தைகள், தள்ளிவிடவில்லை என அவர்கள் சொன்னதை அவன் நம்பாததால் இருந்திருக்கலாம். அல்லது வலியின் வெளிப்பாடு. கீச்சிட்டுச் சென்ற அந்தச் சிறிய விலங்கைப் போலவே……….

   டீ-சர்ட் எல்லாம் இரத்தம். அனிதா, ஜானு உட்பட, பெண்கள் தங்களிடமிருந்த டிஷ்யூ தாள்களைத் தந்தனர். ஆண்கள் தண்ணீர் பாட்டிலிலிருந்த நீரால் லாமின் இரத்தக்காயங்களைத் துடைத்துவிட்டனர்.   

     லாமின் காதில், “பெ..ர்..கி…,” (pergi) என ஒரு குரல் கிசுகிசுத்தது.   அடிபட்ட முகப்பகுதி வீங்கத் தொடங்கியிருந்ததால், நண்பர்கள் ஏதோ சொன்னார்கள், காதில் சரியாக விழவில்லை என விட்டுவிட்டான். மீண்டும் கேட்டது. இந்த முறை சற்று அழுத்தமாக. எச்சரிக்கை தொனியில். 

     “பெர்கி!”

     லாம் கண்டுகொள்ளவில்லை.

     “பெர்கி!”

     கடைசி அலறலின் எதிரொலி அதிர்வுகள் லாமைத் தடுமாறி விழ வைத்தன.

     “என்ன, சும்மா பெர்கி, பெர்கி’னு? வாட் தி ‘எஃப்’ இஸ் பெர்கி?” எனக் கத்தினான். நண்பர்களும் ஜானுவும்  ஒருவரையொருவர் புரியாமல் பார்த்தனர்.    

    பெர்கி என்ற சொல்லை அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை. பின்,  சொல்வது எப்படி?   

   “பெர்கி’னா வெளியேறு’னு அர்த்தம். மலாய், இந்தோனிசியா மொழியில்.”

   அனிதாவை அனைவரும் ஒரே நேரத்தில் பார்த்தனர்.  “கேட்ட வார்த்தை பெர்கி’னா, வெளியாவு’னு அதுக்கு அர்த்தம். ஆனா யாருமே பெர்கி’னு சொல்லலையே,” என்றாள் அவள் உறுதியாக.

   மரத்தில் மோதி அடிபடாத லாமின் மறுபக்க முகப்பகுதியில் அறைந்ததற்கான விரல்களின் அடையாளம் இப்போது தெளிவாகத் தெரிந்தது. அறைந்த கை பெரிது என்பதை விரல்களின் அளவு சொன்னது. 

   லாம் குழுவிலிருந்த தோழி சீக்கிரமாகத் தன் பையைத் திறந்து, சாப்பிடுவதற்காக வைத்திருந்த முழு ஆப்பிள் பழத்தை எடுத்தாள். லாம் ஒடித்த கிளையின் மரத்தினடியில் பழத்தைப் பயத்துடன் வைத்தாள். கைகளைக் கூப்பி  சில வழிபாட்டுச் சொற்களைச் சொல்லி வணங்கினாள். தாய்லாந்து மொழி, புத்த மந்திரங்கள். 

      கலக்கத்துடன் திரும்பி வந்தவள், “நாம இந்த இடத்துக்குள்ளே வரலை. இந்த இடம் நம்மை உள்ளே வர அனுமதிச்சிருக்கு. ஆத்திரப்படுத்திட்டோம்….. நம்மை இங்கிருந்து வெளியே போகவிடாம கூடப் பண்ணலாம். சீக்கிரம் கிளம்புவோம்,” என்றாள். அவள் சொன்னதற்காக இல்லையென்றாலும், லாமை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்குக் கிளம்பியாக வேண்டும். இளைஞர்கள் தாங்களே பார்த்துக் கொள்வதாகச் சொல்ல, அனிதாவும் ஜானுயும் தங்கள் வழியில் தொடர்ந்தனர்.

     “அந்தப் பொண்ணு என்ன, திடீர்’னு பழத்தை எல்லாம் எடுத்து மரத்துக் கிட்டே வைக்குது? இது ‘கோஸ்ட் மன்த்’கூட இல்லையே?”

     “நான்தான் சொன்னேனே, அங்கே என்னவோ இருந்தது’னு?”

     “அந்த இன்னொருத்தன் மேலேதான் எனக்குச் சந்தேகம். லாம் பய ஒரு பொண்ணுக்கு லைன் விட்டுட்டு இருந்தானே, அவளை இவனுக்கும் பிடிக்குமோ என்னவோ? பார்க்காதப்போ பொளேர்’னு ஒன்னு வச்சிருப்பான்! அதுக்குள்ளே இங்கிட்டிருந்தவ சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திட்டு, ஒரு ‘அட்டன்ஷன்-சீக்கிங்’ வேலையைப் பார்த்துட்டா! பெரிய பக்திமான் மாதிரியும்,   அவளுக்கு மட்டும்தான் அக்கறை இருக்கிற மாதிரியும்! இந்த இடம் நம்மை வெளியே போகவிடாம பண்ணுமாம்? ரியலி?”

      ஜானு வாதம் செய்யவில்லை. சமாதானமும் ஆகவில்லை. ‘இன்னொருத்தன் ஒல்லிப்பிச்சான். அறை கொடுத்த கை அவனது இல்லை.’.

      ஒரு சிறிய குடியிருப்பின் சிதைந்த மிச்சங்கள் தென்பட்டன. பாசி படர்ந்த செங்கற்களும் தடிமனான மரப்பலகைத் துண்டுகளும் மண்ணோடு மண்ணாகவும் கிடந்தன. காலத்தால் துருப்பிடித்த வேலிகள், அவற்றைச் சுற்றிப் படர்ந்து வளர்ந்திருந்த புதர்களும் தாவரங்களும் சற்றுத் தள்ளி, எளிதில் செல்ல முடியாத புதர்கள் நிறைந்த இடத்தில் மூடப்பட்ட நிலையில் ஒரு பழைய கிணறு என மறந்தும் மறைந்தும் போன என்றோ ஒரு காலகட்டத்து வாழ்க்கையின் மீதங்கள். 

      காலையில் ஜானுவுக்குக் காத்திருந்த நேரத்தில் அனிதா அருகிலிருந்த உணவகத்தில் புதிய நாப்கின் மாற்றியிருந்தாள். இப்போது சேனிட்டரி நாப்கின் கூடுதல் ஈரமான காரணம் புரியவில்லை. ஈரப்பதம் அதிகரித்த வெப்பநிலை? வியர்வை? லாமின் சம்பவத்தால் நேரம் கடந்து போனது? உடல் வாடை வருவது போலவும் இருந்தது. அருகில் கழிவறையும் இல்லை. கைப்பேசியைத் தன் பையில் போட்டு ஜானுவிடம் நீட்டினாள்.       

    “யாராவது வரதுக்குள்ளே கீழே போய்ப் பேடு (pad) மாத்திட்டு வந்திடறேன். ரொம்ப கசகச’னு இருக்கு.”

    “சிசிடிவி இருக்கப் போகுது, பார்த்து மறைவா போய்க்க.”

    “அங்கேயே இல்லை. இந்த இடிஞ்சு போன இடத்திலேயா சிசிடிவி இருக்கப் போகுது?” என அலட்சியத்துடன் விரைந்தாள் அனிதா.  

        சிதிலமடைந்த ஓர் அனாதைச் செங்கல் படிக்கட்டில் ஜானு ஓய்வாக அமர்ந்தாள். ஒவ்வொரு சலசலப்பும் ஒரு நோக்கத்துடன் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நிழல்களுக்குள் பதுங்கியபடி ‘என்னவோ’வின் விழிகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்ற எண்ணத்தை மட்டும் அவளால் உதற முடியவில்லை.

        மறைவான, தாழ்வான பகுதிக்குச் சென்றதும், டீ-ஷர்ட் கீழே மறைக்கும் அளவுக்கு லெக்கிங்சையும் உள்ளாடையையும் ஜானு கீழிறக்கினாள். அசெளகரியம். யாராவது பார்த்து விடுவார்கள் என்ற கூச்சம், அவசரம். புது நாப்கினுடைய பிளாஸ்டிக் கவருக்குள் திணிக்கும் முன்பாகவே இரத்தத்தில் நனைந்த நாப்கின் கைதவறிக் கீழே விழுந்தது. பிளாஸ்டிக்கில் சுற்றினாலும் குப்பைத்தொட்டி கண்ணில் படும்வரை இரத்த நாப்கினைத் தன் பையில் வைக்க வேண்டும்…..

     கீழே கிடந்த இரத்த நாப்கினை புதர்களுக்குள் வீசினாள். யாருக்குத் தெரியப் போகிறது?

     ‘கைகளைக் கழுவணும், பிசுபிசுக்குது….’

     சுருட்டப்பட்டிருந்த நாப்கின் பசைவிட்டு திறந்து கொண்டது. அவளுக்கும் அவள்  உதைத்திருந்த இரத்த நாப்கினுக்கும் நடுவில் ஜானு சொன்ன அந்த ‘என்னவோ’, உருவம் பெற்றிருந்ததை அவள் உணரவில்லை. அந்த ‘என்னவோ’வின் முகம், உடல் முழுவதையும் போர்த்திப் படர்ந்திருந்தது, பாசி இறுகப் பற்றியிருந்த மரப்பட்டைத்தோல். கூரிய நகங்கள். கண்கள் அணைந்து கொண்டிருந்த நெருப்புத் தணலின் அம்பர் நிறத்தில் ஒளிர்ந்தன. மண்டை ஓடு மூக்கு. அதாவது, துவாரம் மட்டுமே. அனிதா முன்னால் நடந்து போக, நின்றிருந்த இடத்திலிருந்தே ‘என்னவோ’வின் வாயின் இருளிலிருந்து நாக்கு நீண்டு கொண்டே போய் இரத்த நாப்கினைத் தொட்டது.

     மறுகணம், உலகத்தையே இருளால் போர்த்திவிட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் இருண்டு வந்த வானம் அனிதாவின் சிந்தனையைக் கலைத்தது. நாப்கினிலிருந்த மாதவிடாய் இரத்தம் முழுவதும் ‘என்னவோ’வால் உறிஞ்சப்பட்டதும், நாப்கின் வெள்ளையாக மாறிப் பின்னர் கருகிக் கறுத்துச் சுருங்கியது. அனிதாவுக்குக் காய்ச்சல் வந்து உடல் நடுங்கத் தொடங்கியதும் அதே நேரத்தில்தான்.

    ‘காய்ச்சலா….?’    

    குழப்பம்.

    தாழ்வான பகுதியிலிருந்து மேலேறுவதற்காக அனிதா புல்மேட்டில் தன் வலது காலை ஊன்றினாள். ‘என்னவோ’வின் கரம், அனிதாவின் இடது காலைப் படக்கெனப் பிடித்து ஒரே இழு. தடுமாறிக் குப்புறச் சறுக்கி விழுந்தாள். அனிதாவின் மூளை சில வினாடிகள் ஸ்தம்பித்தது. எழுந்தாள். மேலேறினாள். இழுக்கப்பட்டாள். சற்றுத் தள்ளிப் போய் ஏறினாள். சறுக்கி விழுந்தாள். நிமிர்ந்து பார்த்தால், அவள் முதன்முதலில் ஏற முயன்ற புல்மேடு. மறுபடியும் முன்நோக்கி விரைய, மீண்டும் அதே இடத்தில்தான் எல்லா பக்கமும் ஒரே காட்சிகள். பதட்டம். இறுக்கமான மனநிலை. திசை தெரியாமல், ஒவ்வொரு திருப்பத்திலும் வட்டமடித்து மூச்சிறைக்கத் தொலைந்துக் கொண்டிருந்தாள்.

    தொலைவில் ஜானு இன்னமும் காத்திருந்தாள். அங்கே இருள் இல்லை. 

    “ஜானு…..”

   அனிதாவால் பலவீனமாக முணுமுணுக்கத்தான் முடிந்தது. காய்ச்சலும் தொண்டை வறட்சியும் அனிதாவைச் சத்தமாக ஒலி எழுப்ப விடவில்லை. கால்கள் தடுமாறின.

    ‘இரண்டு மணி நேரமாகிவிட்டது. என்னைக் காணவில்லை என்று தேடக்கூடவா மாட்டாள்?’

    யோசித்து முடிப்பதற்குள், மாதவிடாய் இரத்தத்தின் கடுமையான இரும்புச்சத்து வாசனை அவளைச் சூழ்ந்தது. அவசரமாகத் தன் லெக்கிங்ஸைப் பார்த்தாள். ஒன்றுமில்லை. வாடையின் பொருள் புரியவில்லை. உலோகத்தன்மை நிறைந்த அந்த மணம் குடலைப் புரட்டியது. சிறிது நேரத்தில் அந்த மணம் கடுமையான அழுகிய மீனின் வீச்சமாக மாறியது.

    ஆயாசத்துடன் தரையில் சாய்ந்தாள் அனிதா. சருகுகளும் சுள்ளிகளும் கனமாக மிதிபடும் ஓசை கேட்டது.

    யாருமில்லை.

    தொண்டையின் ஆழத்திலிருந்து உறுமலா முனகலா எனப் புரியாத ஓர் ஓசை. திடுக்கிட்டுப் பயத்துடன் பார்த்தாள் அனிதா. ‘சண்டையிடு அல்லது தப்பியோடு’ மனநிலை. தப்பிப்பது இரண்டாம் பட்சம். எதனோடு சண்டை போடுகிறோம் என்றே தெரியவில்லையே…. அதுவே மிகப் பெரிய மிரட்டல்.

     ‘ப்ளீஸ், யாராவது வாங்களேன்…..’

     புற்களின் ஊடே சரசர என்ற சத்தம். அனிதாவின் காலணிகள் மீதேறியவை – சிவப்பு எறும்புகள். ஒவ்வொன்றும் நடுவிரல் நீளத்துக்கும் அகலத்துக்கும் இருந்தன. சிவப்பு எறும்புகள் பெரியவைதான். இவ்வளவு பெரிதா? பயத்தில் தட்டிவிட முயன்று கடிபட, வலியில் துடிதுடித்தாள் அனிதா. கவச உடல் இயந்திரங்களாய் அவள்மீது ஏறிய கால்கள். அவற்றின் பகைப்பட்டியலில் அவளது பெயர் இருந்திருக்க வேண்டும். போர் வெறியுடன் பத்து, நூறு, ஆயிரம் எனப் படையெடுத்து வந்தன.

    “ஆ…!”

     காலணிகளை முழுவதுமாகத் துளைத்தன. இரும்புக் கம்பிகளையும் வெட்டும் வலிமையோடு எறும்புகள் தங்களின் அரிவாள் தாடைகளால் அனிதாவின் சதையைப் பற்றிக் கிழித்தன.

    “பெர்கி! பெர்கி! பெர்கி!”

    கணுக்கால்கள், கெண்டைக்கால்கள், முழங்கால்கள், தொடைகள். முகம்வரை ஒவ்வொரு கடியும் நெருப்பில் காய்ச்சிய ஊசிகளாய் உடலுக்குள். நரக வேதனை.

   “பெர்கி! பெர்கி! பெர்கி!”

   இருண்டு கொண்டு வந்தது அனிதாவின் நினைவுகள் மட்டுமல்ல……

  “அனி! அனி!”

  ஜானுவின் குரல். முகத்தில் நீர்.

  கண் விழித்த அனிதாவுக்குள் இன்னும் நடுக்கம் இருந்தது.

   “அரை மணி நேரமாச்சு, போன ஆளைக் காணோம்’னு தேடிப் பார்த்தா, இங்கே கிடக்கிறே….?”

    ‘அரை மணி நேரந்தானா?’

    வெப்பமும் வெளிச்சமுமாக இருந்தது வெயில். எறும்புகள் நினைவுக்கு வந்தன. திகிலுடன் தன் கைகால்களை, உடலைப் பார்த்தாள். உராய்ந்த அடையாளங்கள், சிறு காயங்கள் மட்டுமே.

    “ஆம்புலன்ஸ் கூப்பிடவா?” என்று ஜானு கேட்டுக் கொண்டிருக்கும்போதே கடுங்காய்ச்சலின் தாக்கம் தாங்காமல் அனிதா மீண்டும் மயங்கிப் போனாள். 

   நேச்சர் டிரேய்லுக்குள் நுழைவதற்குமுன் அனிதா போட்ட புகைப்படத்திற்குப் புதிதாக ஒரு பதிவு.

      “நூறு வருஷமா அங்கே ஒரு பெனுங்கு (penunggu) வசிக்குதாம். அந்த வட்டாரத்திலே வாழ்ந்த என் பாட்டி சொன்னது. பழங்களைப் பறிக்கிறப்போ,           “பசிக்குது, இரண்டு பறிச்சிக்கிறேன்’னு” அந்தக் காலத்திலே அனுமதி கேட்பாங்களாம். நேச்சர் டிரேய்லை உருவாக்கிறதுக்கு முன்னாலே கண்ட்ராக்ட் எடுத்தவங்க வழிபாடு பண்ணாங்களாம். பெனுங்கு பாதுகாப்பிலே இருக்கிற இடம். காட்டுக்குள்ளே ஒரு ஆன்மா. ரொம்ப பழைய கட்டடங்கள், ஆற்றோரப்பகுதிகளிலே கூட நாம செய்யறதைப் பார்த்திட்டு இருக்குமாம்.  நம்ம ‘ஈக்கோ சிஸ்டம்’குள்ளே கண்ணுக்குத் தெரிந்தது தெரியாதது எல்லாத்துக்கும் ஒரு இடம் இருக்குது. நினைச்சாலே ரொம்ப ஆச்சரியம், இல்லை?”        

     அதற்கு அனிதா பதிவு போடச் சில நாட்கள் எடுக்கும். பதில் போடாமலும் இருக்கலாம்.  

     பொழுது சாய்ந்தது. மறுநாள் காலை மீண்டும் திறக்கப்படும் வரை நேச்சர் டிரெய்ல் மூடப்பட்டது. ஆள் நடமாட்டம் இல்லை. அப்போதும் ‘பெனுங்கு’ தூங்கவில்லை. அசைவற்ற முகத்தில், இமைக்காத தணல் விழிகள். அதன் பார்வையில், மர வேர்களின் ஆழம். அந்த விழிகளில் இரக்கமும் இல்லை. வன்மமும் இல்லை. காலங்காலமாகத் தொடர்ந்துவரும் ஒரு காவலனின் அசைக்க முடியாத கடமையுணர்வு மட்டுமே இருந்தது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button