
“நீ இத செஞ்சேதான் ஆகணுமா?”
“எனக்கு வேற வழி தெரியல”
“உனக்கு ஏதாவது ஆயிடுச்சுனா என்ன பண்றது?”
“அத பத்தி எனக்குக் கவலை இல்ல”
“….. இது தப்பு இல்லையா?”
“தப்பு சரிக்குலாம் இப்போ இடம் இல்ல”
“மறந்துட்டியா? அதிபர் கையால டாப் மோஸ்ட் மிலிட்டரி ஹானர், தி கோல்டன் ஈகில் மெடல் வாங்கினவ நீ. இப்போ இப்டி கொலகாரி ஆகுறேன்னு சொல்றியே”
“ஹாஸ்பிடல், ஸ்கூல், மார்கெட், வீடுங்கனு ஒரு இடம் விடாம குண்டு போட்டு அழிச்சுட்டாங்க. நம்ம தலைல எப்போ குண்டு விழும்னு நமக்கே தெரியாது. எவளோ நாள்தான் அதிர்ஷ்டம் நம்மள காப்பாத்தும் சொல்லு”
“ஆனா ஒன்னுதான் புரியல. நீ எதுக்கு இத செய்யணும்? நம்மளோ இங்க ஃபாஸால இருக்கோம். இதுக்காக இஸ்ராத்துக்குள்ள அத்துமீறி நுழையணும். அது எவளோ பெரிய ரிஸ்க்! அதும் அவர் என்ன சாதாரண ஆளா? இஸ்ராத்தோட அதிபர்! அதுக்கு அவங்க அங்க இருக்க யாரையாச்சும் வச்சே இத செய்யலாமே. எதுக்கு இவளோ ரிஸ்க் எடுக்கணும்? எனக்கு என்னமோ நம்மளே போயி இதுல மாட்டிக்கிற மாரி இருக்கு”
“எனக்கும் இந்தக் கேள்வியெல்லாமே வந்துது. ஆனா இது எல்லாத்துக்கும் காரணமே கோல்டன் ஈகிள்தான். ஏன்னா நீ சொன்ன மாரி அவர் சாதாரண ஆள் இல்ல, இஸ்ராத் அதிபர நெருங்கவே முடியாது. அதனால பத்துக் கிலோமீட்டர் தூரத்துலேந்து ஸ்நைப்பர் யூஸ் பண்ண தெரிஞ்ச ஆள் அவங்களுக்கு வேணும். நமக்கும் இப்போ அவங்கள விட்டா உதவ வேற ஆளே கிடையாது“
“என்னால உன்ன மட்டும் இழக்கவே முடியாது அஸ்மா. அத மட்டும் ஞாபகம் வச்சுக்கோ”
“எனக்கும்தான்… உனக்கே தெரியும் ஏர்போர்ட்ஸதான் முதல்ல பாம்ப் பண்ணாங்க. இப்போ பார்டர க்ளோஸ் பண்டாங்க. அதனால கமெர்ஷியல் ஏர்லைன்ஸ், ரோட்வேஸ், சீவேஸ் எதுவுமே சாத்தியம் இல்ல. லீகல்லா இந்த நாட்டவிட்டு வெளிய போக என்னால முடிஞ்ச எல்லாத்தையுமே செஞ்சு பாத்துட்டேன். எதுவுமே வேலைக்கு ஆகல. அவங்க சொல்றபடி செஞ்சா நம்ம வெளியேறுறது அவங்களோட பொறுப்புனு சொல்றாங்க. அதனால இத தவிர வேற வழியில்ல. நமக்காக நம்ம இத செஞ்சுதான் ஆகணும்”
“ஆனாலும் எனக்குப் பயமா இருக்கு. கட்டின மணல் வீட்ட ஒரே கடலலை ஒரு நொடில கரைக்கிறதுபோல இந்தப் போர் இவளோ வர்ஷம் நம்ம வாழ்ந்த வாழ்க்கைய ஒரே ராத்திரில புரட்டிப் போட்டுருச்சு. அதனாலதான், எனக்கு இருக்குறது நீ மட்டும்தான். உன்ன என்னால இழக்கவே முடியாது”
“எல்லாமே சரிதான். அதனாலதான் இத விட்டா நமக்கு வேற வாய்ப்பே கிடையாது. போன மாசம் இருந்த நம்ம வீடு இப்போ இருந்த இடம் தெரியாம போயிடுச்சு. அப்டி இருக்கப்போ இந்த கேம்போட ப்ளாஸ்டிக் டெண்ட் எத்தன நாள் நம்மள காப்பாத்தும்? நம்மதான் நம்மள காப்பாத்திகணும். உன்னால இங்க இருக்க முடியுதா சொல்லு? இப்படியே எவளோ நாள் இருக்க முடியும்?”
“என்னால சுத்தமா முடியல. கண்ணயே மூட முடியல. எந்நேரமும் என் மண்டைக்குள்ள குண்டு வெடிச்சுகுட்டே இருக்கு. இந்த மூத்தர நாத்தம், டாய்லெட் போக, சாப்புடனு எல்லாத்துக்கும் க்யூ, சுத்திலும் நிக்காத அழுகை, இன்னிக்கே… இன்னிக்கி இல்லனா நாளக்கி இந்த கேம்ப் மேல குண்டு போட போறாங்கங்கற வதந்தி எதையுமே பொறுக்க முடியல. கண்ண மூடி நிம்மதியா தூங்கணும்னு ஆசையா இருக்கு. ஒரேதடியா தூங்கிட்டாகூட சந்தோசம்தான்”
“இல்ல. அப்டி சொல்லாத யூஹா. எல்லாம் மாறும். நம்ம திரும்பவும் பழையபடி சந்தோசமா இருப்போம். ஒரே ராத்திரில எல்லாத்தையும் அப்டி புரட்டிப்போட்ட வாழ்க்கையால மறுபடி அத இப்டி புரட்டிப்போட முடியாதா என்ன? எல்லாம் மாறும். வா இங்க, நம்ம பேசுறத யாரும் கேட்டுற போறாங்க. பேசாம கண்ண மூடி தூங்கு”
எல்லோரும் கண்களை மூடித் தூங்குவதுபோல் படுத்திருந்தாலும் அந்த நேரத்திலும் ஓயாமல் புகையைக் கக்கிக்கொண்டேயிருந்த பாதி இடிந்த கட்டடங்களைப்போலக் கோரமான கற்பனைகளையும் அதைவிடக் கோரமான நிஜங்களையும் கண்முன் நிறுத்தி அவர்களைத் தூங்கவிடாமல் தவிக்கச் செய்திருந்தது ஒவ்வொருவரின் மனமும்.
ஆனால் யூஹா மட்டும் போர்களைவிட அன்பான அணைப்பொன்றே வலிமையானதோ என்று ஐயம் வரும்படி அஸ்மாவின் அணைப்பில் எல்லாவற்றையும் மறந்து தூங்கிப் போயிருந்தான்.
இரவு ஆமைபோல் நகர்ந்திட அந்த முகாமுக்குத் தண்ணீர் கொண்டு வந்திருந்த சிற்றுந்தின் இரவைக் கிழிக்கும் ஓசையில் அரைத் தூக்கத்திலிருந்த அஸ்மா கண்விழித்தாள். கடந்த இரண்டு நாள்களாய் இந்தச் சத்தத்தில் எழுந்துவிடுபவள் தண்ணீர்த் தொட்டியில் நீர் நிரம்பும் சலசலக்கும் ஓசையைக் கேட்டபடியே படுத்திருந்தாள். நீர் நிரப்பி முடித்தபின் கிளம்புமுன் அந்தச் சிற்றுந்தின் முகப்பு விளக்குகள் தொடர்ந்து இரண்டு முறை மின்னி மறைந்தன. அதைத் தொடர்ந்து அடுத்த கணமே சிற்றுந்து நின்றிருந்த இடத்தை ஒட்டியபடி இருக்கும் கழிவறையை நோக்கி நடந்த அஸ்மா அதனுள்ளே நுழைந்தாள்.
அந்தத் தற்காலிகக் கழிவறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த பையிலிருந்து துடைதாள் கற்றையை (டிஷ்யூ பேப்பர்) வெளியில் எடுத்தாள். அந்தக் கற்றையில் சமமான அளவுகளை மேல் பக்கமும் கீழ்ப்பக்கமும் ஒதுக்கிவிட்டு நடுவிலிருந்த தாளை உருவினாள். அவள் எதிர்பார்த்தது அதிலிருந்தது. அந்தத் தாளின் ஒரு பக்கத்தில் மூன்று சிறிய கோடுகள் போடப்பட்டிருந்தன. அவற்றுள் முதல் கோடு வட்டமிடப்பட்டிருந்தது. அப்படியென்றால் நாளை காலையில் தயாராக இருக்க வேண்டும் என்று பொருள் எனப் புரிந்துகொண்டாள். பின்னர் அந்தத் தாளை நீரில் அமிழ்த்தி அழித்துவிட்டு வெளியே வந்து கூடாரத்துக்குள் நுழைந்து படுத்திருப்போர் யாரையும் மிதிக்காமல் கவனமாய் நடந்து சென்று படுத்துக்கொண்டாள்.
அடுத்த நாள் விடிந்தது. எல்லாம் வழக்கம்போலவே நடந்துகொண்டிருந்தது. அதற்குள் அவள் யூஹாவிடம் விசயத்தைச் சொல்லியிருந்ததால் அவன் பதற்றத்துடன் காணப்பட்டான். அதன் காரணமாய் அவனுக்குக் கொடுக்கப்பட்ட உணவுப் பொட்டலத்தைக்கூட வாங்க மறுத்துவிட்டான். அவளே கட்டாயப்படுத்தி அந்தத் தன்னார்வலர்க் குழு கொடுத்துக்கொண்டிருந்த உணவுப் பொட்டலத்தையும் போர்வை ஒன்றையும் வாங்கி அவனிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னாள். அவன் அவளையும் சாப்பிடச் சொல்லிட, பொட்டலத்தைப் பிரிக்கப் போனவள் அப்போதுதான் பார்த்தாள். அவளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த போர்வைக்குள்ளே மட்டும் அந்தத் தன்னார்வலர்க் குழுவினர் அணிந்திருப்பதைப் போன்ற வெள்ளைநிறச் சட்டை இருந்தது. உடனே புரிந்துகொண்டவள் யாரும் பார்க்காத நேரத்தில் அந்தச் சட்டையை அணிந்துகொண்டு அந்தக் குழுவினரோடு ஒருவராய் ஒன்றிப் போனாள்.
அன்று இரவு கூடாரத்திலிருப்போர் தாம் படுத்துக்கொள்ள அரை சாண் இடம் கூடுதலாய்க் கிடைத்திருப்பதையன்றி தன் மறைவை உணர்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருந்தாள் அஸ்மா.
அதற்குள் இன்னும் சில முகாம்களுக்கு உணவளித்தபடியே பல மைல்கள் கடந்திருந்தாள். ஆயினும் யாரும் யாரோடும் பேசிக்கொள்ளவில்லை.
ஓர் இரவின் நடுவில் அழிந்தன போக இயங்கிக்கொண்டிருந்த துறைமுகத்தின் சிறு பகுதியை வந்தடைந்திருந்தார்கள். துறைமுக அலுவலர் அஸ்மாவை அழைத்து வந்திருந்த இருவரையும் பார்த்துச் சைகை காட்டினார். அவர்கள் அவரைப் பின்தொடர்ந்து அலுவலகத்திலிருந்து வெளியேறினர். துறைமுகத்தின் இரைச்சலுக்கு நடுவே, நிவாரணப் பொருள்களை இறக்கிக்கொண்டிருந்த கப்பலின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த நடைப்பாலத்தின் அருகே ஒருவர் காத்திருந்தார். அவர்களில் ஒருவன் அவரிடம் ஏதோ மெல்லச் சொல்ல, அவர் அஸ்மாவைப் பார்த்துவிட்டுத் தலையசைத்தார்.
அடுத்த சில நாள்கள் கப்பலிலேயே கழிந்தது. கட்டுக்கடங்காத கடலின் இழுத்தடிப்புகளில் சிக்கி அதற்கு ஏற்றவாறு ஏறியிறங்கி ஆடிக்கொண்டேயிருந்த அந்தக் கப்பலின் அடிப்பாகத்திலிருந்த அறையில் படுத்திருந்தவள் தன் வாழ்வும் இந்த அறையைப் போலவே நிலையற்றதாகிவிடுமோ என்று ஒரு கணம் எண்ணிட, வரவிருக்கும் சில நாள்களைக் கடத்திவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தாள். இறுதியில் எங்கு இருக்கிறோம் என்றே தெரியாதபடியான தீவு ஒன்றில் அவர்கள் இறக்கிவிடப்பட்டார்கள்.
அங்கு அவர்களுக்காகக் காத்திருந்த ஜீப் ஒன்றில் மூவரும் ஏறினர். அப்போதுதான் இனி எல்லாம் தம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்பதன் அறிகுறியாய் மூவரும் முதல் முறையாகப் பேசிக்கொண்டனர்.
“அஸ்மா, ரெடியா?”
“யூஹா எப்டி இருக்கான். ஃபாஸால நிலைமை எப்டி இருக்கு இப்போ?”
“அதெல்லாம் ஒன்னும் கவலைபட வேண்டாம். முகாம்லயே நம்ம ஆள்கள் இருக்காங்க. ஒரு பிரச்சனையும் இல்ல”
“நாம எங்க இருக்கோம்? இஸ்ராத்துக்கு எப்போ போகப் போறோம்?”
“அத நான் சொல்றேன்”
“என்னது, சொல்லு…”
“கொஞ்சம் பொறு”
மலைமீதிருந்த ஒற்றை வீட்டை அடைந்திருந்தது அந்த ஜீப். அந்தக் கரடுமுரடான மேடுகளிலான பயணத்தில் திட்டத்தைப் பற்றி அறிய அவளுக்கிருந்த ஆர்வத்தையெல்லாம் இழந்திருந்தாள். அதற்கு ஏற்றபடி, “ராத்திரி ஆகிடுச்சு இன்னிக்கி நல்லா ரெஸ்ட் எடு. அதுதான் ரொம்ப முக்கியம்” என்று அஸ்மாவிடம் அவர்களில் ஒருவன் சொன்னான். யூஹா பத்திரமாக இருக்கிறான் என்று அறிந்ததில் கிடைத்த நிறைவே அவள் தூங்கப் போதுமானதாய் இருந்தது.
சன்னலுக்குள் நுழைந்த சூரியவொளி அவள் கன்னங்களைத் தொட்டு எழுப்பியது. இத்தனை நாள்கள் மேற்கொண்ட திசையறியாப் பயணத்திற்குப்பின் இந்த ஓய்வு அவளுக்கு மிகவும் தேவைப்பட்டது. உடல் ஓய்வு பெற்றபோதிலும் மனம் ஓயவில்லை. தன்னைத்தானே நொந்துகொண்டாள். அப்போது மேசைகள், பொருள்கள் என்று பலவற்றை நகர்த்தும் சத்தம் அவளுக்குக் கேட்டது. என்னவென்று தன் அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தாள். அவளை அழைத்து வந்திருந்த இருவரும் நாலைந்து அட்டைப் பெட்டிகளைத் திறந்து வைத்துக்கொண்டு சுற்றியெங்கும் சின்ன சின்ன மரையாணிகளையும் மரை வில்லைகளையும் (Nuts & Bolts) சிதறிப்போட்டு வைத்திருந்தார்கள். அவர்கள் கண்களைப் பார்க்கையில் இருவரும் இரவு முழுக்க சற்றும் தூங்கவில்லை என்று தெரிந்தது.
“என்ன செய்றீங்க ரெண்டு பேரும்?” என்று அஸ்மா கேட்டாள்
“துப்பாக்கிய அப்படியே எடுத்து வர முடியாது. அதுவும் இது ஸ்நைப்பர் ரைஃபில், சோ நம்மதான் அசெம்பிள் பண்ணி ஆகணும்”
“அது தெரியுது. ஏன் இப்பவே பண்றீங்க. இத எப்டி இஸ்ராத்துக்கு எடுத்துட்டு போறது?”
“இப்போ நிலமை ரொம்ப மோசமா இருக்கு. இந்த நேரத்துல இஸ்ராத்துக்குள்ள நம்மால போக முடியாது”
“என்ன போக முடியாதா? அப்புறம் ஏன் என்ன இங்க கூட்டிட்டு வந்தீங்க? ப்ளான்ல இவ்ளோ பெரிய மாற்றம் ஆகிருக்கப்போ என்கிட்ட ஏன் நீங்க சொல்லல?”
“மாற்றம்லாம் எதுமில்ல. முன்னாடிலேந்து ப்ளானே இதுதான். இஸ்ராத்துக்குள்ள போக போறோம்னு நாங்க உன்கிட்ட சொல்லவே இல்லையே”
“என்னது! அப்புறம் எப்டி?”
வீட்டைவிட்டு வெளியே வந்தவன் அந்த மலையிலிருந்து கடலை நோக்கி ஒரு பக்கமாகக் கையைக் காட்டிச் சொன்னான், “அதோ அங்க தூரத்துல கடலுக்கு நடுவுல ஒரு புள்ளி மாரி தெரியுது பாரு, அதுதான் இஸ்ராத்தோட நேவல் போர்ட், இவளோ நாள் ஃபாஸாவ வான்வழியா அட்டாக் பண்ணாங்க. இப்போ நாளைலேந்து நேவல் அட்டாக் ஆரம்பிக்க போகுது. அத இந்த நேவல் போர்ட்லேந்துதான் இஸ்ராத் அதிபர் ஸ்டார்ட் பண்ணி வக்க போறாரு. சோ இங்கேந்துதான், இங்க வச்சுதான் நீ அவர சுடணும்”
“என்ன விளையாட்றீங்களா? இங்கேந்து எப்டி சுட முடியும்? அந்த இடம் எப்டியும் முப்பது நாப்பது கிலோமீட்டர் இருக்கும் போலயிருக்கு. ஸ்நைப்பர்ஸ்ல அதிகபச்ச ரேஞ்சே பத்துக் கிலோமீட்டர்தான். அதுவே கஷ்டம்”
“அத பத்தி உனக்குக் கவலை வேண்டாம். இது ரொம்ப நாளா ஆர்.என்.டில இருந்த லேசர் ப்ரிசிஷன் அல்ட்ரா ஃபோகஸ்டு ஸ்நைப்பர். சோ இன்னும் தூரமா இருந்தாகூட அது வேலை செய்யும். உனக்காக ரொம்ப கஷ்டப்பட்டு ஸ்மக்குள் பண்ணி கொண்டுவந்துருக்கோம். நமக்கு தேவை பிசிறில்லாத நேர்த்தி மட்டும்தான். நீ அதுல மட்டும்தான் கவனம் செலுத்தணும்” என்று சொல்லிவிட்டு சுவரில் மாட்டப்பட்டிருந்த இஸ்ராத் அதிபரின் படத்தில் தலையில் நடுவில் வட்டமிட்டு “இதுதான் உன் டார்கெட்” என்று சொன்னான்.
“நீ சொல்றது எல்லாம் எந்த அளவு சாத்தியம்னு தெரில. புதுவித ஸ்நைப்பரா இருந்தாலும் அத வச்சு ட்ரயல் பாக்கணும்ல நானு. அப்டியே எப்டி சுட முடியும்?”
“அதுக்குலாம் நமக்கு நேரம் இல்ல. ஆனா நாளக்கி நீ இத செஞ்சுட்டா யூஹாவ பத்திரமா வெளிய கூட்டிட்டு வரது எங்க பொறுப்பு” எனச் சொல்லி, “இத எப்டி யூஸ் பண்ணணும்னு நாங்க சொல்றோம் வா” என்று அவளை மீண்டும் அறைக்குள் அழைத்துப் போனார்கள்.
அன்று இரவு அடுத்த நாளில் நடக்கப்போவனவற்றை நினைத்துத் தூங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள் அஸ்மா. மனத்தைத் திசை திருப்ப அந்த அறையில் இருந்த வானொலியை இயக்க முயன்றாள். ஆனால் அது வேலை செய்யவேயில்லை. ஒருவேளை அது வேலை செய்திருந்தால் அவள் அறிந்திருப்பாள் ஃபாஸாவில் உள்ள போரால் பாதிக்கப்பட்டோர் அடைக்கல முகாம்களில் இஸ்ராத்துக்கு எதிரான தீவிரவாதச் செயல்கள் நடப்பதால் அந்த முகாம்கள் யாவின்மீதும் குண்டு வீச இஸ்ராத் அதிபர் ஆணையிட்டுள்ளார் என்பதை.
தூக்கமின்றியே இரவும் கடந்தது. இஸ்ராத் அதிபரின் வரவுக்காக எல்லாவற்றையும் தயாராய் வைத்தபடி அஸ்மா காத்திருந்தாள். இதைச் செய்ய ஏன்தான் ஒப்புக்கொண்டோம் என்று அவள் மனம் அரற்றியது. அவளுக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை. இவ்வளவு தூரத்திலிருந்து சுடுகையில் குறி தவறிவிட்டால்… ஏன், ஒருவேளை குறி தவறாது சுட்டுவிட்டால்கூட அதற்குப் பின்னரான அவர்களது நிலை என்ன என்று யோசிக்க, பதிலின்றித் தவித்தாள்.
அந்தத் துப்பாக்கி அவர்கள் சொன்னதுபோல் மிகவும் சக்தி வாய்ந்ததாகவே இருந்தது. அதை வைத்து இஸ்ராத்தின் கடற்படைத் தளத்தை அவள் பார்த்துக்கொண்டே இருந்தாள். அங்கு நடப்பன அவளுக்கு ஓரளவு தெளிவாகவே தெரிந்தன. இவ்வளவு துல்லியமாகத் தொலைதூரத்தில் இருப்பனவற்றைக் காட்டும் துப்பாக்கியொன்றை அவள் பார்த்ததே இல்லை என்று மனத்தின் ஓரத்தில் தோன்றினாலும் அவற்றை எண்ணி வியக்கவெல்லாம் அவளால் முடியவில்லை.
அப்போது திசையின்றி நீளும் அவளின் கலவையான எண்ணவோட்டங்களைப் பிடித்திழுத்து ஒற்றைப் புள்ளியில் கொண்டுவந்து நிறுத்தியது கடற்படைத் தளவாடத்தில் வந்து நின்ற அதிபரின் கருப்பு நிற மகிழுந்து.
அதிலிருந்து இறங்கி அவர் நடந்து வருவதைத் துப்பாக்கியின் குறுகலான தொலைகுறி நோக்கியின் மூலம் பார்க்கையில் இருள்நிறைந்த குகைக்குள் அவரே அடியெடுத்து வைப்பதைப்போல் இருந்தது. ஆனால் இந்தப் புள்ளியில் அவளுக்கு நம்பிக்கை வந்திருந்தது. ஏனென்றால் மரியாதை நிமித்தமாக யாருமே அதிபரை நெருங்கக்கூட இல்லை. கடற்படைத் தளபதிகூட பத்தடி இடைவெளியிலேயே இருந்தார். அதனால் எந்தத் தடையுமின்றி தெளிவாக அவளால் அவரைப் பார்க்க முடிந்தது. குறிநோக்கியின் மையப்புள்ளியைத் திட்டமிட்டபடி அவரின் தலையில் அதுவும் தலையின் நடுவில் வைத்துச் சரிபார்த்துக்கொண்டாள்.
தயாராக இருந்த போர்க் கப்பல்களையும் கடற்படை வீரர்களையும் பார்த்துக் கையசைத்துவிட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறு மேடையில் ஏறி கடற்படையினர்க்கான உரையை நிகழ்த்தத் தொடங்கினார். பேச்சு ஆவேசமானதாய் இருந்ததால் அஸ்மாவால் திட்டமிட்டபடி துல்லியமாய் அவர் தலையில் குறிநோக்கியின் மையப்புள்ளியை நிலைக்கச் செய்ய முடியவில்லை. சரியான தருணத்திற்காகக் காத்திருந்தாள். அதற்கேற்றபடி அதிபரும் தன் நீண்ட உரையை நிறைவு செய்தபின் போரில் உயிர்நீத்த இஸ்ராத் இராணுவ வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்.
அஸ்மாவின் கண்கள் பிரகாசம் கொண்டன. கண்களை மூடி அசையாமல் நின்றிருந்த இஸ்ராத் அதிபரின் தலையில் அதுவும் மயிரிழையும் பிசகாமல் தலையின் மையத்தில் குறிநோக்கியின் மையப்புள்ளியைப் பதித்து உறுதிப்படுத்தி துப்பாக்கியின் விசையை அழுத்தினாள்.
அவர்களுக்கு இடையில் இருந்த அத்தனை தூரத்தையும் எப்படிக் கண்ணிமைப்பதற்குள் கடந்து சென்றது எனத் தெரியாதபடி அடுத்த கணமே நெஞ்சில் கைவைத்துத் தரையில் வீழ்ந்தார் இஸ்ராத் அதிபர்.
___________
ஃபாஸாவின் போரால் பாதிக்கப்பட்டோர் முகாம்களில் இருப்போரின் மனதுக்குள் போர் விமானத்தின் சத்தம் கேட்பது வழக்கம்தான். ஆனால் இந்தமுறை உண்மையாகவே கேட்டது. முகாம்களின்மீது குண்டு வீசியபடியே போர் விமானங்கள் நெருங்கிக்கொண்டிருந்தன. யூஹா அஸ்மாவை நினைத்தபடியே தன் இறுதி நொடிகளை இறுகப் பிடித்தபடி அமர்ந்திருந்தான்.
யூஹா இருக்கும் முகாமின்மீது குண்டு வீசுவதற்கான விசையைப் போர் விமானி அழுத்துமுன் அவர் விமானத்தின் தொலைப்பேசி சிவப்பு விளக்கு ஒளிர உறுமியது. “தீவிர அவசர நிலை… தீவிர அவசர நிலை… தாக்குதலை அப்படியே நிறுத்திவிட்டுத் திரும்பி வரவும். திரும்பி வரவும்” என்று அலறியது. விமானிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவ்வாணைக்கு இணங்க குண்டு வீசாமல் இஸ்ராத்துக்குத் திரும்பின போர் விமானங்கள்.
___________
சில நாள்கள் கழிந்தன.
ஹென்ரி சிரித்தான்.
ஹென்ரியின் மேசைமீது தலையில் வட்டமிடப்பட்ட இஸ்ராத் அதிபரின் புகைப்படம்.
ஆனால் அந்த அறை முழுக்க ஆயுதங்கள் இல்லை; மாறாய்ப் புத்தகங்கள்!
நீரின் மேற்பரப்பில் மிதக்கும் ஒற்றை உயிரணுவே கொண்ட மெல்லிய பச்சைப் பாசி முதல் பூமியின் அடியாழம் வரை செல்லும் வேர்களைக்கொண்ட ஆலமரம் வரை என, தாவரங்கள் யாவும் (சூரிய) ஒளியை நோக்கி நகரக்கூடியன அல்லது ஒளியால் இயங்கப்படக் கூடியன எனும் உயிரியல் பண்பை அடிப்படையாகக்கொண்டு இயற்கையின் அதிசயமான நீண்ட உயிர்ச் சங்கிலியின் தொடர்ச்சியாய்த் தாவரங்களில் உள்ள ஒளியால் இயங்கப்படவும் தூண்டப்படவும் கூடிய அதே உயிரணுக்களும் அயனிகளும் மனித மூளையிலும் உள்ளன என்றும் அவற்றை ஒளியால் இயக்கலாம் எனும் ஆப்டோஜெனிடிக்ஸ் எனும் ஒளியியல் மரபியல் கோட்பாட்டுக்குச் செயலுருவம் கொடுக்க முடிவு செய்தான் ஹென்ரி.
அப்படிச் செய்யும் தூண்டுதல் நீண்ட காலம் நிலைக்கக் கூடியதாய் இருக்கும்படியான ஒளியின் வேகத்தில் பயணிக்கும் சீரொளி எனும் லேசரை உமிழும் ஒளித் துப்பாக்கியை வடிவமைத்த ஹென்ரியின் இலக்கு இஸ்ராத் அதிபரானார்.
அதுவும் சரியாக அதிபரின் தலையின் நடுப்பகுதியில் இருக்கும் மூளையில் அன்பும் பரிவும் இரக்கமும் சுரக்கும் இடமான முன்புற இன்சுலா புறணியில் ஒளியைச் செலுத்தி அப்பகுதியைத் தூண்டும் திட்டத்தைத் தீட்டி அதனை ஒரு மாபெரும் சிம்பொனி இசைக் கச்சேரியை ஒற்றை இசையமைப்பாளர் இயக்குவதைப்போல எல்லாப் புள்ளிகளையும் இணைத்துத் துல்லியமாய் நடத்திக் காட்டிவிட்டான். அந்தக் களிப்பே அவன் சிரிக்கக் காரணம்.
ஆனால் அந்தச் சிரிப்போடு சேர்ந்து இப்போது மனமும் நிறைந்து போனான். ஏனென்றால் அவ்வறையில் ஓடும் தொலைக்காட்சியில் பின்வருமாறு பேசிக்கொண்டிருந்தார் இஸ்ராத் அதிபர், “ஃபாஸாவில் நடந்த உயிர் நேயமற்ற அனைத்துச் செயல்களுக்கும் இஸ்ராத் பொறுப்பேற்கிறது. இப்படிப்பட்ட வரலாற்றுப் பிழைகளை அன்பு வழியில் எப்படிச் சரி செய்ய வேண்டும் என்பதில் உலக நாடுகளுக்கு இஸ்ராத் முன்னுதாரணமாக இருக்கும்”.



