
“உங்களுக்கென்ன பைத்தியமா? முதல்ல கருவைக் கலைக்கச் சொன்னீங்க, இப்போ கர்ப்பப்பையை எடுத்துப் போடச்சொல்றீங்க, இதுக்குச் சட்டத்துல தண்டனை இருக்கு தெரியுமா?” கோபத்தில் எரிச்சலோடு கத்தினார் மருத்துவர் சுபத்ரா.
அவளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாததுபோல் மேசைமேல் இருந்த காலண்டர் காகிதங்கள் கோர்த்த வளையங்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் கிட்டு. சற்றுமுன் வாந்தியெடுத்த களைப்பு முகத்தில்.
மருத்துவரை ஏறெடுத்துப் பார்க்கும் திராணிகூட இல்லை பரமுவுக்கு. கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு, கன்னம் வரை வடிந்துவிட்ட கண்ணீரைத் துடைக்க மறந்துபோன சாமிநாதன் மருத்துவரிடம் “எத்தனை நாளைக்கிம்மா நாங்க காவல் காத்துட்டு இருக்கமுடியும்? நாளைக்கி இன்னொருத்தனால வயித்தத் தள்ளிக்கிட்டு வரமாட்டான்னு என்ன நிச்சயம், தயவுசெஞ்சி…” அவர் சொல்லி முடிப்பதற்குள் மருத்துவர் சுபத்ரா “அதுக்காக, அந்தப் பாவத்தைச் செய்ய நான் தயாராயில்லை, பெத்தவங்க நீங்கதான் அவளுக்கு முழு பொறுப்பு, நீங்க போகலாம்” என்றவர் அழைப்புமணியின் மீது கைவைக்க, நர்ஸ் அடுத்த நோயாளியின் டோக்கன் எண்ணைச் சத்தமாகச் சொல்வது பரமுவுக்குக் கேட்டது. அவள் தன் மகள் கிட்டுவின் கையை வெடுக்கென்று பிடித்து இழுத்து வேகமாக வெளியே அழைத்துச் சென்றாள்.
வாசலைக் கடக்கும் வரையிலுங்கூட மருத்துவரைக் கெஞ்சிக் கொண்டேயிருந்தது சாமிநாதனின் பார்வை.
***
அன்று மதியம் பள்ளிக்கூடத்தில் சாப்பாட்டு மணி அடிக்கும் சத்தம் கேட்டதுமே எவர்சில்வர் தட்டோடு ஓடினாள் கிட்டு.
தரை புரளப்புரள உடுத்தியிருந்த பாவாடையில் அச்சுக்களாக இருக்கும் பூக்களைச் சிந்தவிடாமலிருக்க லாவகமாகப் பிடித்திருப்பதுபோல் உடம்போடு ஒட்டி வைத்திருந்தாள். தடுக்கி விழாமல் இருப்பதற்காக அவளது அம்மா சொல்லிக்கொடுத்த வித்தையது.
காசிலிங்காபுரம் ஒன்றும் அவ்வளவு பெரிய ஊர் கிடையாது. மொத்தமே நூற்றம்பது வீடுகள் கொண்டதுதான். விவசாயமும் மண்பானை செய்தலும்தான் முக்கியமான தொழிலாக முன்பு இருந்தது. ஆனால் இந்தத் தலைமுறையில் விவசாயம் பார்ப்பதற்கென்று ஆள் குறைவுதான். இருக்கும் நாலைந்து சம்சாரிகளின் புண்ணியத்தால்தான் கொஞ்சமேனும் பசுமை தங்கிக்கொண்டிருக்கிறது ஊரில்.
வெறிச்சோடிக்கிடந்த அன்றைய மதியத்தில், கட்டிலை விட்டு எழுந்திரிக்க முடியாத முதியவளான மூக்கம்மா பாட்டியின் இருமலுக்கும் புலம்பலுக்கும் மத்தியில் முற்றத்துப் புங்கை மரத்தில் இரண்டு குருவிகள் மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தன. காதலா? சண்டையா? என யோசிக்கும் அளவுக்குக் கிட்டுவுக்குப் புத்தியில்லை. ஆனால், இவளென்னவோ அவை தன்னை நோக்கிக் குரல்கொடுப்பதாக நினைத்து பதிலுக்கு இஷ்டத்துக்குக் கத்தியபடி நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அப்போது கிட்டுவுக்கு எதிரில் நின்று வழிமறித்தான் தவசு. ஆனால், அவளோ அவன் நீட்டியிருந்த கையின் உயரத்துக்கும் குறைவாகக் குனிந்து கடந்து போய்விட்டாள்.
திரும்பி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். மெதுவாக அவளைத் தொடர்ந்து நடந்தான்.
மலையாங்குளத்து நூல் மில்லில் மிஷின் ஓட்டும் வேலை தவசுக்கு. வாட்ட சாட்டமான உடல்வாகு. தாடியும் மீசையும் அவனை முரட்டு உருவமாகக் காட்டும். சதா ஏதேனும் ஒரு பாடலை முணுமுணுத்தபடி இருப்பான்.
இப்படித்தான் பஞ்சாலையில் ஒரு நாள் ‘பாராமல் பார்த்த மஞ்ஜம் ஜம் ஜம்’ என்ற பாடலின் இடையில் ஒரு வரி மறந்து போய்விடவே, திரும்பத் திரும்ப அந்த ஜம்ஜம் வரிகளுக்குள்ளே சுற்றிக்கொண்டிருந்தது அவன் மனது. அறுந்துபோன நூலினை இணைப்புக்கு விட்டுக்கொண்டிருந்தவனின் விரல்கள் கவனப்பிழையால், இயந்திரத்துக்குள் சிக்கிக்கொண்டுவிட ஆட்காட்டி விரலும் பெருவிரலும் நசுங்கித் தொடுக்கிய நிலையில், சுயநினைவு தொலைந்து போய் கீழே விழுந்தான்.
பாளையங்கோட்டை அரசாங்க ஆஸ்பத்திரியிலிருந்து குணமாகி வெளியே வருகையில் ஒவ்வொரு விரல்களிலும் இரண்டு கணுக்கள் நீக்கப்பட்டு வளரமுடியாத மொட்டைமரமாக உள்ளங்கை நிலத்தில் நிலையாக நின்றுவிட்டது. அதனைத் தொடர்ந்து கொஞ்சம் பணத்தைக் கையில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டது நிர்வாகம்.
அதன் பிறகான நாட்களில் சேக்காளிகள் மத்தியில் அவன் பெயர் ‘ஜம்ஜம்’ தான். அவர்களோடு சேர்ந்து ஊர் சுற்றுவது, பீடி, சிகரெட் வீச்சத்தைக்கூட பபிள்கம்மை மென்றால் மறைத்துவிடலாம் என்ற கள்ளத்தனத்தையும் கற்றுக்கொண்டிருந்தான்.
சொல்லெல்லாம் கொய்யாக்காய் வாசனையோடு நிதானமின்றி
குடித்துவிட்டு வந்த ஒருநாளில், அப்பாவிடமிருந்து தவசுக்கு விழுந்த அடி அவன் வாழ்நாளுக்கும் மறக்கமுடியாத ஒன்றாகிவிட்டது.
மறுநாள் வீட்டுத் தொழுவத்தில் பத்து ஆடுகளை வாங்கி கட்டிய தவசுவின் அப்பா “நீ ஆச்சு, இந்த ஆடுகளாச்சு, நயா பைசா கேட்டு எங்கிட்ட வந்துராதே, இதுகள கட்டி மேய்ப்பியோ இல்லை கண்டந்துண்டமா வெட்டிக் காசாக்குவியோ எனக்குத் தெரியாது, இவ்வளவுதான் நான் ஒனக்குக் கொடுக்குற சொத்து” என்றபடி அவன் பதிலுக்குக் காத்திராமல் கட்டளையாகச் சொல்லிச் சென்றுவிட்டார்.
வேறுவழியில்லாமல் அதன் பிறகான நாட்களில் ஆடுகளோடு ஒன்றிப் போகத் தொடங்கிவிட்டான். இன்னும் சொல்லப்போனால் அந்த வேலை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஊர்க் காடுகளில் சத்தமாகப் பாட்டுப் பாடிக்கொண்டே சுதந்திரமாகத் திரிவது போல நிறைவு அவனுக்கு.
அது ஐப்பசி மாதம். தொடர் மழை நசநசப்பில் ஊர் முழுக்கக் காய்ச்சல் பரவியிருக்க, தவசியும் அதில் மாட்டிக் கொண்டான். ஆடு மேய்ச்சலைச் சக தோழனான குண்டாலத்திடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான்.
குண்டம்பட்டியில் ஒரு திருமணத்திற்கென்று அவனது அம்மாவும் அப்பாவும் சென்றுவிட அன்று இவன் மட்டும்தான் வீட்டில் இருந்தான்.
இவனைக் கடந்து வந்த கிட்டு, அவன் வீட்டு முற்றத்தில் கிடந்த ஆட்டுரலில் உட்கார்ந்து கொண்டு, சிந்தித் சிதறிச் சத்துணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
பக்கத்துக்குச் சென்றவன் “ஏம்புள்ள கிட்டு, எனக்கு ஒத்த வாய் சோறு கொடேன்” என்று அருகில் வந்து கை நீட்டினான் தவசு.
“போ…ண்ணே எனக்குத்தான். எங்க அம்மா வைவா” என்று தட்டைத் தூக்கிக்கொண்டு ஓடப்போனாள்.
அவள் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்து “சரி சரி அண்ணனுக்கு வேணாம், நீ சாப்புடு. நான் போறேன்” அவளிடம் இரக்கம் கொண்டவனைப் போல் பாவ்லா காட்ட, அவளோ “இந்தா சாப்புடு” என்றபடி ஒரு கை நிறைய சோற்றை அள்ளி அவனிடம் நீட்டினாள், அவனோ வாயைத் திறந்து ‘ஆ’ காட்டினான்.
ஊட்டும்போது அவன் கன்னமெல்லாம் ஒட்டியிருந்த பருக்கைகளைத் தன் மேற்பாவடைத் துணியால் துடைத்துவிட்டாள் கிட்டு.
அவனுக்குள் பதுங்கியிருந்த விசமம் தலைதூக்க “வீட்டுக்குள்ள வர்ரியா, சர்பத் போட்டுத் தர்ரேன்” என்று அன்பாக அழைத்தான். தப்பான அவன் பார்வையைப் புரிந்துகொள்ளத் தெரியவில்லை கிட்டுவுக்கு.
ஒரு பலகையை எடுத்துப் போட்டு “மரத்துல எலுமிச்சம்பழம் பிடுங்கிட்டு வாரேன் இன்ன…” என்றவன் அவளிடம் நசுங்கியும் அழுக்கானதுமான ஒரு பொம்மையைக் கையில் கொடுத்துவிட்டுப் பின்வாசல் கதவைத் திறந்து புழக்கடைப் பக்கம் சென்றான்.
இரண்டடி உயரம் இருக்கும் அந்தப் பொம்மையை மடியில் வைத்துக்கொண்டு வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தாள் கிட்டு.
தவசு வீட்டுக்கு வெளிப்புறத்திலிருந்து திறந்திருந்த சன்னல்களை மெதுவாகப் பூட்டினான். அவளோடு பேச்சுக் கொடுத்தபடியே வீட்டுக் கதவையும் மூடினான்.
மெலிதாகச் சிணுங்கியபடி “அண்ணே இருட்டாருக்குண்ணே, லைட்ட போடு, அப்பத்தான் பொம்மையைப் பாக்கணும்” என்று சொன்ன கிட்டுவுக்குப் பக்கத்தில் சென்ற தவசு
“வா, அங்கதான் இருக்கு சுவிட்சு என்று கைத்தாங்கலாகத் தூக்கிவிட்டவன். கட்டிலுக்கு அழைத்துச் சென்றான். அந்த இருட்டுக்குள் கிட்டுவின் உடலெங்கும் விவஸ்தையின்றி அலைந்து திரிந்தது தவசியின் கை.
“அண்ணே வேர்க்கு, வீட்டுக்குப் போகணும்” என்று அழத்தொடங்கிய கிட்டுவின் வாய்க்குள் அவனுக்குக் கைவாக்கில் இருந்த கரித்துணியை எடுத்துத் திணித்து, சத்தம் வெளியேறாமல் காரியத்தைச் செய்து முடித்துவிட்டான்.
முதலில் அவன் மட்டும் கதவைத் திறந்து வெளியே எட்டிப்பார்த்தான். தெருவில் யாருமில்லையென்ற உறுதிக்குப் பிறகு, அவள் உடுத்தியிருந்த துணிகளை ஒழுங்கு செய்வதாக மறுபடி அவன் தொடவந்தபோது பதறியடித்து வெளியே ஓடிவந்துவிட்டாள் கிட்டு.
மிகச் சரியாக அந்த நேரத்தில் காட்டுவேலையிலிருந்து வீடு திரும்பிய ஈஸ்வரி “என்னடி கிட்டு வீடு மாறிப் போயிட்டியா, போ உங்க வீட்டுக்கு” என்று சொன்னதைக் காது கொடுத்துக் கேட்காமல், பேந்தப் பேந்த முழித்தபடி வீட்டை நோக்கி ஓடினாள்.
“புள்ள மூஞ்சி சரியில்லையே, பேயறைஞ்ச மாதிரில்ல பாக்க” என்ற சந்தேகத்தோடு கிட்டுவைத் தொடர்ந்து போனாள் ஈஸ்வரியும்.
கிட்டுவைப் பார்த்த பரமு “சனியனே, கைய வச்சிக்கிட்டு சும்மாயிருக்க மாட்டியா, சட்டைப் பொத்தானைத் திருக்கித் திருக்கி பிச்சிப் போடலைன்னா உனக்கு ஆகாதோ? நெஞ்சக் காட்டிக்கிட்டு வார, பாவாடையை ஒழுங்காத்தானே கட்டிவிட்டேன். கசக்கிச் சுருட்டிக் கொண்டாந்துருக்க, எந்த வீட்டு அழுக்க இப்படி அப்பிட்டு வந்துருக்க” என்ற வையத்தொடங்கியதில், அம்மாவிடம் தான் சொல்ல வந்தது மறந்துபோனது கிட்டுவுக்கு.
ஈஸ்வரி “செல்லத்தாயக்கா வீட்டுக்குள்ளயிருந்துள்ள ஓடியாந்த ஒம் மக, அவளும் கல்யாணத்துக்குப் போயிருக்காளே. அந்தப் பய மட்டும்தான் இருந்தான் வீட்ல. அங்குட்டெல்லாம் விடாதக்கா” என்றபடி அங்கிருந்து கடந்து அவளது வீடு நோக்கிப் போய்விட்டாள் ஈஸ்வரி.
“ம்கும், இவளுக்கு வேற வேலையில்லை. அந்தப் பய அண்ணன் மொறையில்ல வேணும்” என்று தனக்குள்ளாகவே பேசியவள் மேற்படி அரிவாள்மனையை எடுத்து வைத்துக் கொண்டு, தென்னை ஓலையில் ஈக்கி உருவுவதில் மும்முரமானாள் பரமு.
ஆனாலும் உள்ளுக்குள் ஒரு உறுத்தல் அவளையும் அறியாமல் வந்து சென்றது. உள்ளறையை எட்டிப் பார்த்தாள். தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த ஒரு பாடலுக்கு, நாற்காலியைச் சுற்றிச் சுற்றி ஆடிக் கொண்டிருந்தாள் கிட்டு.
இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பின் ஒரு நாளிலிருந்து கிட்டுவுக்கு வாந்தியும் மயக்கமும் வரவே, வீட்டுப் பொருட்களைக்கொண்டு வைத்தியம் பார்த்தாளே தவிர, வெற எந்தச் சந்தேகமும் வரவில்லை பரமுவுக்கு.
அன்று காலை வேலைக்குச் செல்லுமுன் சாமிநாதன் “புள்ள ரொம்ப வாடிப்போய்ட்டா, ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டுப் போய்ட்டு வா இன்னைக்கி” சொல்லிச் சென்றார்.
மருத்துவர் சுபத்ரா கிட்டுவின் நாடி பிடித்துப் பார்த்ததுமே அவள் கர்ப்பத்தை உறுதிப்படுத்திவிட்டார்.
அதைக் கேட்டதும் கைகால் நடுங்கத் தலையெல்லாம் சுற்றியது பரமுவுக்கு. சமாளித்துக்கொண்டு டாக்டரிடம் “நாளைக்கி இவுக அப்பாவைக் கூட்டியாறேன் ம்மா” சொல்லிவிட்டு கிட்டுவை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டாள்.
வழியில் ஒரு வார்த்தைகூட பேசவில்லை கிட்டுவிடம். “அய்யோ கேவலமாப் போச்சே சனங்களுக்கு என்ன பதில் சொல்வேன், அன்னைக்கி ஈசுவரி சொன்னது சரியாப்போச்சோ, அந்தப் பயல வெட்டிப்போட்டாதான் ஆத்திரம் அடங்கும்” என்றெல்லாம் எண்ணம் ஓட வீட்டுக்குள் நுழைந்தவள், தன் ஆத்திரம் தீருமட்டும் கிட்டுவை அடித்து உதைத்தாள்.
“எம்மா அடிக்காதம்மா, வலிக்கி, எம்மா அடிக்காத…எம்மா” சுவரோரமாக ஒட்டி விரித்திருந்த பாயில், உடல் நடுங்க அணத்திக் கொண்டிருந்தாள் கிட்டு. பல்லைக் கடித்துக்கொண்டு திரும்பிப் படுத்திருக்கும் அவளின் முதுகை முறைத்தபடி தலையில் கை வைத்தபடி அவளையே வெறித்துக் கொண்டிருந்தாள் பரமு.
அடிக்கடி வாசலை எட்டிப்பார்த்தாள். வழக்கமான நேரம் தாண்டியும் இன்னமும் வீடுவந்து சேராத கணவனின் மீது எழுந்த கோபம், கிட்டுவின் மீது மிதியாக விழுந்தது.
அப்போதைய நேரத்து பரமுவின் முகத்தில் ஆழாக்கு எள் போட்டுப் பார்த்தால் எல்லாம் படபடவெனப் பொரிந்து தள்ளிருயிக்கும். அவ்வளவு ஆங்காரத்தில் இரத்தம் கொதித்து, ஆவி படர்ந்தது போல் சிவந்து இருந்தது பரமுவின் கண்கள்.
தெருவில் அந்நேரம் மொதுமொதுவென்று புழுதிக் கிளம்ப நடந்துபோகும் ஆடுகளை ஒன்றுகூட்டிப் பத்திச் சென்றான் தவசு. இடையிடையே “டுர்ர்ர்… டுர்ர்ர்… இன்னா… ஹோய்….” என்று அவன் எழுப்பும் குரல், வீதியோரத்துச் சன்னல் வழியாகக் கிட்டுவுக்குக் கேட்க, அலுத்து அடங்கிப்போயிருந்த அவள் அழுகை மீண்டும் வீறுகொண்டு தொடங்கியது.
ஓடிவந்து அவள் புட்டத்தில் இரண்டு மிதி மிதித்தாள் பரமு. சன்னல் கதவுகளை வேகமாகச் சாத்தியபடி “எடுபட்டப் பய எம்புட்டு மப்பேறிப் போறான் பாத்தியா, சோத்தத் திங்கானா? இல்ல…” அதற்கு மேலும் நீண்ட அவள் வசைச் சொற்களை நிறுத்தும்படிச் செய்தது, வாசலில் வந்து நின்ற டி.வி.எஸ் பிஃப்டி வண்டி.
கணவன் சாமிநாதன் வந்துவிட்டாரெனத் தெரிந்து கதவைத் திறந்துவிட்டாள் பரமு. மூச்சிரைத்தது அவளுக்கு.
புரிந்துகொண்டவராய் “தாய்க்கும் மகளுக்கும் வேற வேலை இல்லை, சக்களத்திக மாதிரி எப்பப் பார்த்தாலும் சண்டை, வெலகு, எங்க எம் மக?” என்றவாறு பரமுவை விலக்கி ஒதுக்கி உள்ளே சென்றார் சாமிநாதன்.
அப்படியொன்றும் அழகி இல்லை, வளர்ந்திருக்கிறாளேத் தவிர ஏழு வயது சிறுமியினது மூளை வளர்ச்சிதான் கிட்டுவுக்கு. பருவமடைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலிருக்கும். கோயில், குளம், பரிகாரமெனச் சகலத்தையும் கூலியாக வாங்கிக்கொண்டு, சாமி கொடுத்த வரம்தான் இவள் பிறப்பு.
பத்து வருடக் காத்திருப்புக்குப் பலன் என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும், அவளுக்கு ஒச்சத்தைக் கொடுத்த கடவுளின் மீது பரமுவுக்கும் சாமிநாதனுக்கும் வெளியே சொல்லமுடியாத கோபம் உண்டு.
சிலசமயங்களில் திறமையும் அழகும் உள்ள பெண் பிள்ளைகளை உறவு வீடுகளில் பார்த்துவிட்டு வந்தாளென்றால், நேராக சாமிப்படத்தின்முன் நின்றுகொண்டு “கழுத, குடுக்க மனமில்லைன்னா, என்னை மலடியாவே விட்டுத் தொலைச்சிருக்கலாம்ல, நான் பாட்டுக்குச் செத்த அழுதுட்டு செத்த வைதுட்டுக் கிடந்திருப்பேன். கருமம் என்னோட மட்டும் போயிருக்கும். பேருக்குப் புள்ளயக் குடுத்துட்டு, நாளுக்கொரு வகையில சீவனப் புடுங்குதியே, கருணையத்த கடவுளே” என்று புலம்புவாள். கிட்டு அருகில் இருந்தாலும் அவளுக்கு ஒன்றும் புரியாது. குத்துவிளக்கு திரி நுனியிலிருந்து அசராமல் நிமிர்ந்து நிற்கும் சுடருக்கு அருகில் முகத்தைக் காட்டிக் கொண்டிருப்பாள். அது தரும் நிழலைக் கைகளால் அள்ளி அள்ளி சட்டைப் பைக்குள் போட்டு விளையாடுவாள்.
அந்த வயதுக்கேயுரிய இயல்பான உடல்வாகு என்றாலும், ஒட்டினாற்போன்ற கன்னத்து தசைகளும் முன்னெத்திய மூன்று பற்களுமாக, பார்ப்பதற்கு முப்பது வயதுடையவள் போல் தோற்றம் அவளுக்கு.
கற்களைக் கடிப்பது போலச் சொற்களை அழுத்தி அழுத்தி சிரமத்தோடு வெளியேற்றுவாள். அவை கேட்பவர் காதுக்கு நசுங்கித்தான் போய்ச் சேரும். கடைவாயிலில் எப்போதும் எச்சில் குமிழ் விட்டுக்கொண்டிருக்கும். ஆனாலும் சிரித்தவண்ணமாக இருக்கும் அவளின் கண்கள், அருகில் அமரச்செய்து பேசச்சொல்லி ரசிக்கும்.
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ள உள்ளூர்ப்பள்ளியில் அவளுக்கு விருப்பப்பட்ட நாளில் விருப்பப்பட்ட வகுப்பில் அமர்ந்து எழுந்து வருவாள். ஆனால், ஒருநாளும் சத்துணவைத் தவறவிட்டதில்லை.
ஊருக்குள் எங்கேயாவது சுற்றித்திரியும் அவளைச் சிலர் அக்கறையாக அழைத்து வந்து வீட்டில் விட்டுவிடவும் செய்வர். ஒருவகையில் கிட்டு அத்தனைப் பேருக்கும் செல்லப் பிள்ளை.
தகப்பனான சாமிநாதனுக்கு அவள்தான் குலதெய்வம்.
குப்புறப்படுத்து அழுதுகொண்டிருக்கும் கிட்டுவுக்கு அருகில் அமர்ந்த சாமிநாதன் “பாப்பா எந்திரிடா பால்பன்னு வாங்கிட்டு வந்திருக்கேன் அப்பா” என்றதும் எழுந்து அவரது மடியில் தலை வைத்துக்கொண்டாள்.
எல்லாப் பெண்பிள்ளைகளையும் போல, அப்பா என்றால் கொள்ளைப் பிரியம் கிட்டுவுக்கு. அவர் சாப்பிடத் தட்டு எடுத்துக்கொடுப்பது, வெளியில் சென்று வீட்டுக்குள் வந்ததும் தண்ணீர் மோந்து கொடுப்பது, சட்டைப் பொத்தான்களைப் போட்டுவிடுவதுயென அத்தனையையும் விருப்பமாகச் செய்வாள். என்னதான் வயதுக்கு வந்த மகளாக இருந்தபோதும் குழந்தையிலிருந்தே கிட்டுவுக்குத் தலைவாரி விடுவது அப்பா சாமிநாதன்தான். பரமுவிடம் தப்பித் தவறிக்கூட தலையைக் கொடுக்கமாட்டாள் கிட்டு.
அப்பாவையும் மகளையும் பார்க்கப் பார்க்க வயிற்றெரிச்சலாக இருந்தது பரமுவுக்கு.
“ம்கும், அவ செஞ்சிருக்குற வேலைக்குக் கொஞ்சுமானம் கேட்குதாக்கும்” என்று சீறிய பரமுவைப் பளாரென்று எக்கிக் கன்னத்தில் அறைந்து ‘உஷ்ஷ்ஷ்’ என்றபடி உதட்டின் மேல் விரலை வைத்து அவளை முறைத்தவர் மகளிடம் “அம்மா அடிச்சாளா? அழாத எந்திரி, அப்பா வந்துட்டேன்ல, வா… அவளை என்னன்னு கேட்போம்” தொட்டுத் தூக்கி உட்கார வைத்தார்.
ஓங்கரித்துக் குமட்டிக்கொண்டு வர, அடக்கமுடியாமல் கிட்டு எடுத்த வாந்தி சாமிநாதனின் மடியெல்லாம் நனைத்துவிட்டது.
கடும்பனிக்கு உதறலெடுப்பது போலக் கிட்டுவின் உதடுகள் நடுங்கின. பயந்துபோய் அம்மாவைப் பார்த்தாள். நின்றிருந்த சுவரோரமாகச் சரிந்து அமர்ந்து தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் பரமு.
கண்ணீரில் நனைந்து முகமெல்லாம் ஒட்டியிருந்த கிட்டுவின் தலைமயிர்களை ஒதுக்கிவிட்டார் சாமிநாதன்.
வெடுக்கென்று எழுந்த பரமு அறைமூலையில் அட்டைப்பெட்டிக்குள் இருந்து எடுத்த டப்பாவை நீட்டி “இந்தாங்க பூச்சிமருந்து, ஆளுக்கொரு டம்ளர் எடுத்துட்டு வாரேன். ஊத்திக் குடிச்சிட்டுப் போய்ச் சேருவோம். மானம் போனாப்பெறகு மசுரும் உசுரும் ஒன்னுதான். கழுதையைப் போக்கிக்கிறதுதான் உத்தமம். இனி ஊருக்குள்ள தலைகாட்ட முடியாதுய்யா” வேகவேகமாக மனதிலுள்ள ரணத்தைக் கொட்டும் பரமுவைப் புரியாமல் பார்த்த சாமிநாதன், பின் வேகமாக எழுந்து அவள் கழுத்தில் கையை வைத்து சுவரோரம் சாத்தி நிறுத்தி “ஒழுங்கா விசயத்தச் சொல்லாம ரோடு அளந்துக்கிட்டு இருக்க நீ” என்று அவர் கத்தியதும்…
“நம்ம புள்ள மோசம் போயிட்டா, புத்தி குறைஞ்சவன்னு இரக்கங்கூட இல்லாம நாசம் பண்ணிட்டான் தெக்கு வீட்டுச் செல்லத்தாயி மகன் தவசு” அவள் சொல்லும்போதே பரமுவை இறுக்கிக் கொண்டிருந்த சாமிநாதனின் கை வலுவிழந்து அவளிலிருந்து விடுபட்டது. அப்படியே பின்னோக்கி நாலு எட்டுத் தள்ளி மகளைத் திரும்பிப் பார்த்து, முடியாமல் தலை கவிழ்ந்து நின்றார்.
“நீங்க செயிலுக்குப் போனாலும் பரவாயில்லை, அந்தப் பயலை வெட்டிக் கொன்னுட்டு வாங்க” என்றவள், சாமிநாதனிடம் அரிவாளை நீட்டினாள்..
ஆனால் அவர் “இருக்குறது ஒத்தப் பொட்டப்புள்ள அவளை நீ ஒழுங்கா பார்த்துக்கிடாம, வீட்ல என்ன வெட்டி முறிஞ்சிக்கிட்டு இருந்த? நாந்தான் நாயா உழைச்சிட்டு வந்து கொட்டுறேன்ல” கோபத்தைப் பரமுவின் மீது கொட்டினார்.
“நம்ம ஊருதானே நம்ம ஆளுகதானேன்னு நம்பக்கூடாதுங்கிறீங்களா? சத்துணவுக்குத்தானே வெளில அனுப்புனேன். மத்தபடி அந்தப் பிள்ளையவிட்டு இம்மி நகருதேனா நானு. ஊரு உலகத்துல பொம்பளைகயெல்லாம் எப்படி வாழுதாக, அவ மட்டும்தான் என் உலகம்னு வீட்டைஞ்சிகிடக்குற என்னைப் போய் வைதீக” கல்லெறிந்த குளமாகக் கலங்கி, மனதின் அடி ஆழத்திற்குள் கூராகப் பாய்ந்த அந்தச் சொல்லால் அவள் தன் மொத்த வாழ்கையையும் வெறுக்க வேண்டியதிருந்தது அப்போது.
உடனே தன் தவறு புரிந்துகொண்டவராய், சாமிநாதன் பரமுவை நெருங்கி அவள் தலையைத் தன் தோளோடு சாய்த்து “ஏன் பரமு, ஒருவேளை நம்ம மகளுக்கு முழுப் புத்தியைக் கடவுள் கொடுத்திருந்தா, அவளை இப்படி ஒருத்தன் ஏமாத்திக் கெடுத்துருக்க முடியாதுல்ல. ஏன் இல்ல நமக்கு அந்தக் குடுப்பினை” துண்டால் வாயைப் பொத்திக்கொண்டு அழுதார்.
ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்ல வழியற்று, அவர்களுக்குள் எழுந்த சொற்கள் மௌனத் தீக்குள் இரையாகித் தம்மை மாய்த்துகொண்டன.
சற்று நேரத்தில் முகத்தைத் துடைத்துக்கொண்டு ஏதோ முடிவு செய்தவராய் “இந்த விசயம் நமக்குள்ள மட்டும் இருக்கட்டும், நான் போய் கணபதி செட்டியார்கிட்ட கடனா கொஞ்சம் பணம் வாங்கிட்டு வந்துருதேன். மேற்கொண்டு ஆகுறத பார்ப்போம் பரமு” என்றவர் விளக்கு வைக்கும் நேரத்துக்கு முன்பாகப் பணத்தை வாங்கி விடவேண்டுமென்ற கணக்கில் விறுவிறுவென நடந்து போனார்.
***********
நாலைந்து நாட்களாக வெளியில் வராத கிட்டுவைப் பார்க்க வீடு தேடி வந்துவிட்டனர் சிலர். கழுத்தைப் புறங்கையால் தொட்டுக் காண்பித்துத் தனக்குக் காய்ச்சல் என்றும் நாக்கை சற்று வெளியே நீட்டி ஓங்கரிப்பதுபோல் செய்துகாட்டி வாந்தி வருது என்றும் கிட்டுவே பதில் சொன்னாள். பரமுவுக்குத்தான் அவர்களிடமெல்லாம் தன்னைச் சகஜமாகக் காட்டிக்கொள்ள நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது.
அன்று இரவே மறுபடியும் கிட்டுவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்கள், சாமிநாதனும் பரமுவும்.
காலையில் காட்டிய கோபம் சிறிதும் இன்றி, மருத்துவர் சுபத்ரா “உங்க கஷ்டம் புரியுது. அரைகுறை மூளை வளர்ச்சியா இருக்குறவங்களை மட்டுமில்ல, அவனுகளுக்குப் பொண்ணுகன்னாலே தான் உடம்புக்குச் சுகம் கொடுக்குற பொருளுனுதான் மனசுல பதிஞ்சிகிடக்கு. அந்த நேரத்துல அது உயிருக்கும் உணர்வுக்கும் நாம செய்யுற பங்கம்ன்னு வெறிபிடிச்ச வேகத்துக்குப் புரியரது இல்ல. ஆள் யாருன்னு தெரிஞ்சா நீங்க போலீஸ்ல புகார் கொடுக்கலாம்ல” சொன்னதும்…
“அதத்தான் செய்யனும்னு நினைச்சேன். ஆனா அவன் பங்காளி மகனாப் போய்ட்டான். கொஞ்ச வீடுக இருக்குற எங்க ஊரு ரெண்டுபட்டுப் போய்ரும். இந்தக் கருவைக் கலைச்சி விட்ருங்க டாக்டர். இனி என் மகளை வீட்டை விட்டு வெளில விடாம இருந்துக்குறோம்” டாக்டரிடம் சொல்லிவிட்டுக் கண்கலங்க பரமுவைப் பார்த்தார், சாமிநாதன்.
ஆனால், பரமுவின் கண்கள் சாமிநாதனை வெறித்தது “என்ன? கால்ல சங்கிலியக் கட்டிக் கைதி மாதிரி நடத்தனும்னு பார்க்கீகளா? நமக்கு மகளாப் பெறந்ததுக்கு நாம செய்யுற உபகாரம் இதுதானா அவளுக்கு. உங்களுக்கு வேணும்னா ஊரு, உறவுதான் முக்கியமா படலாம். ஆனா, எனக்கு எம்புள்ளைதான் எல்லாமே. நீங்க இங்க பாப்பாகூட ஆசுபத்திரில இருந்து பார்த்துக்கோங்க. நான் போலீஸ் ஸ்டேசனுக்குப் போய்ட்டு வாரேன். இவ்வளவு அக்கிரமம் பண்ணுன பயலுக்குப் பாடம் கத்துக்கொடுக்காம விடமாட்டேன்” என்றவள் டாக்டரை பார்த்து வணங்கிவிட்டு அறையிலிருந்து வெளியேறினாள். தடுக்கவில்லை சாமிநாதன்.



