
வீட்டு வாசலுக்கு வந்ததும் மரத்தின் நிழலில் நின்று குடையை மடக்கினார் பெரியசாமி.
வாசற்பக்கம் இருந்த அறையின் திறந்திருந்த ஜன்னல் வழியாகச் சபேசன் பேசுவது பெரியசாமியின் காதில் விழுந்தது.
“பூமா, அண்ணனுக்கு ஒன்னும் தெரிய வேண்டாம். நான் இப்போ அவர்கிட்ட சொல்லப் போறது இல்ல.”
“எதை என்னிடம் சொல்ல வேண்டாம் என்கிறான்? எதாவது பணச் சிக்கலில் மாட்டிக்கொண்டானா?”
குழப்பத்துடன் யோசித்தார் பெரியசாமி.
பூமாவுக்கும் அதிசயமாகத்தான் இருந்தது.
“என்னங்க, இப்படிச் சொல்றீங்க? எங்க அண்ணனைக் கேக்காம எதுவும் செய்யமாட்டேன்னு சொல்லுவீங்க!”
சபேசனின் குரல் தொடர்ந்தது.
“ஆமா, எங்களுக்காகத்தான் அவருங்கறதுதான் இப்போ மாறிப் போச்சே. அவர் கல்யாணியை இந்த வயசுல கல்யாணம் கட்டிட்டு வந்து நிக்கறாரு. அடிக்கடி நெஞ்சுவலின்னு வேற சொல்றாரு. நாம இவரை நம்பி, சொத்து சுகம் சேக்காம இருக்க முடியுமா?”
“அதுக்காக?”
அண்ணனுக்குத் தெரியாமல் வீடு ஒன்றை வாங்க முடிவு செய்திருந்தான் சபேசன். அதைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“என்ன அதுக்காக? நாளைக்கு அவருக்கொன்னு ஆகி, கல்யாணி ‘வீட்டை விட்டுப் போங்க’ன்னு நம்மளைச் சொல்லிட்டா, குழந்தைகளை வெச்சுகிட்டு நடுவீதில நிக்கறதா?”
வாசலில் செருப்பைக் கழற்றிக்கொண்டிருந்த பெரியசாமி, எதிர்பாராமல் காதில் விழுந்த இந்தப் பேச்சைக் கேட்டுத் திகைத்து நின்றார்.
சபேசனா பேசுகிறான்? தன் கூடப் பிறந்தவனா? சபேசனைப் பெற்றோர் இல்லாத குறை தெரியாமல் வளர்த்ததாய் நினைத்தாரே! இவனே இப்படியென்றால் சித்தியின் மகள் வளர்மதியும் மகன் சுகுமாரும் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ, தெரியவில்லையே?
அப்பாவின் இடத்தில் தான் நின்று தன் கடமையை முடித்துவிட்டதாக நினைத்து நிம்மதியாக இருந்த பெரியசாமிக்கு, மனது துவண்டது. இனம் புரியாத வேதனை அவரை ஆட்கொண்டது.
‘அவரைக் காணோமே, வெளியே போய் வெகு நேரமாயிற்றே’ என்று நினைத்தபடி வெளியே வந்த கல்யாணி, பெரியசாமியைப் பார்த்ததும், “இங்க நின்னுகிட்டு என்ன பண்றீங்க?” என்று கேட்டபடி அருகில் வந்தாள்.
அவர் முகத்தைப் பார்த்ததுமே உள்ளே சபேசன் பேசியது, பெரியசாமி காதில் விழுந்திருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டாள்.
கல்யாணி திருமணமாகி வந்ததிலிருந்தே அவள் காதுபடவே குற்றம் கூறுவதைக் கேட்டிருந்தாள்.
பெரியசாமி கேட்டால் வருத்தப்படுவாரே என்று அவரிடம் எதையும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தாள்.
“கை, கால் கழுவிட்டு, சாப்பிட வாங்க” மெதுவான குரலில் சொன்னாள் கல்யாணி. ஒன்றும் பேசாமல் உள்ளே நுழைந்தவர், இலேசான குரலில் இருமினார்.
சபேசனும் பூமாவும் திடுக்கிட்டு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். ‘இவர் எப்போது வந்தார்? பேசியது அண்ணனுக்குக் கேட்டிருக்குமா?’
பேசும்போது இல்லாத தயக்கமும் பயமும் சபேசனுக்கு இப்போது ஏற்பட்டது.
எப்போதும்போல் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். ஆனால், எப்போதும் இருக்கும் கலகலப்பு மட்டும் காணாமல் போயிருந்தது.
‘பெரியப்பா பக்கத்தில் நான்தான் உக்காருவேன்’ என்று பிள்ளைகளுக்குள் சண்டை நடக்கும். எட்டும் பன்னெண்டும் பதினைந்துமான வயதுக் குழந்தைகளுக்குப் பெரியவர்களின் மௌனம் புரிந்தது. ஆனால், காரணம் தெரியவில்லை.
பெரியசாமியின் மௌனம் சபேசனுக்கும் பூமாவுக்கும் கலக்கத்தைத் தந்தது.
‘இப்போதே வீட்டைவிட்டுப் போகச் சொல்லுவாரோ? இதுவரை செய்த உதவிகளை இனி செய்யமாட்டேனென்று சொல்லிவிடுவாரோ?’ என்ற பயம் சபேசனுக்குள் எழுந்தது.
ஆனாலும் பெரியசாமி ஒழுங்காகச் சாப்பிடாதது சபேசனுக்கு வருத்தமாக இருந்தது.
படுத்தவுடன் ஏதாவது படித்துக்கொண்டிருப்பது பெரியசாமியின் வழக்கம். அன்று படுத்ததும் விளக்கை அணைத்தார்.
படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார்.
ஒன்றும் பேசாமல் அவரைப் பார்த்துக்கொண்டிருந்த கல்யாணியின் கண்கள் கலங்கின.
‘நான் வராம இருந்திருந்தா..’ அந்த எண்ணம் முழுமையடையும் முன்னே, பெரியசாமி நெஞ்சைப் பிடித்தபடி இருமுவது தெரிந்தது. எழுந்து போய், வெந்நீரைக் குடிக்கச் செய்து, முதுகில் தேய்த்துவிட்டாள்.
ஆசுவாசப்படுத்திக்கொண்ட பெரியசாமி, “நம்மள போயி…” ஏதோ சொல்லத் தொடங்கினார். மறுபடியும் இருமல் வர, பேச்சை நிறுத்திக்கொண்டார்.
தைலத்தை எடுத்து முதுகில் தேய்த்த கல்யாணி, “எது வேணா சொல்லட்டும். நாமளாவே இருப்போம்” என்று அவரைச் சமாதானம் செய்தாள்.
சிறிது நேரத்தில் பெரியசாமியின் சிரமம் கொஞ்சம் குறைந்தது. “நான் வந்ததால்தானே உங்களுக்கு…” என்று கல்யாணி தொடங்க,
பெரியசாமி, தலையைச் சற்றுத் திருப்பி, “எனக்கு ஆதரவு கிடைச்சிருக்கு. நீ இப்போ தூங்கு” என்றார்.
அவளுக்கு எப்படித் தூக்கம் வரும்? அந்த ஆலமரத்தின் நிழலில் ஒண்ட வந்த சிறு பறவை அவள். விழுதுகளே வேரை வளைக்கும்போது, வேதனையுடன் பார்த்துக்கொண்டிருப்பதைவிட வேறெதுவும் செய்ய முடியவில்லை என்பது அவளுக்குத் துக்கமாக இருந்தது.
கல்யாணி அவருக்குத் தூரத்து உறவு. ஒரு திருமணத்திற்கு வந்திருந்தபோது, அவளுக்கு யாருமில்லை என்பதையும், தனியாகத்தான் வாழ்ந்து வருகிறாள் என்பதையும் தெரிந்துகொண்டு எல்லோர் முன்னிலையிலும் அவளைக் கேட்டார். “என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?”
அவளுக்கு ஆலோசனை சொல்லவோ, அவளுக்காக முடிவெடுக்கவோ, எடுத்துச் செய்யவோ யாரும் இல்லை. “யோசிச்சுச் சொல்றேன்” என்றாள்.
தனிமையில் அவளிடம் மறுபடியும் கேட்டார். “கல்யாணி, நீ என்னை நம்பணும்னுதான் எல்லோர் எதிரிலேயும் கேட்டேன். அது உனக்குச் சங்கடத்தைத் தந்திருந்தா, என்னை மன்னிச்சுடு. ஆசைப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்கற வயசை இரண்டு பேரும் கடந்து வந்துட்டோம். ‘கடைசி வரை பிரியமாட்டேன்’ என்ற நம்பிக்கையும் உறுதியையும் உனக்குத் தரேன். நீயும் அப்படிச் சொல்ல முடிஞ்சா, என்னை நம்பி வா. இல்லேன்னா, அவரவர் வழி அவரவர்களுக்கு. என்ன சொல்றே?”
அவர் வார்த்தைகளில் இருந்த நேர்மை அவளை அதிகம் யோசிக்கவிடவில்லை.
நேராகக் குலதெய்வம் கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போனார். தாலியைக் கட்டி, வீட்டிற்குக் கூட்டி வந்துவிட்டார்.
தம்பி, தம்பிகளின் மனைவியர், தங்கை என்று எல்லோருக்கும் கல்யாணியை அறிமுகம் செய்தார். முதலில் அவர்களுக்கு ஏற்பட்டது திகைப்புதான்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணனின் வாழ்வில் வந்திருக்கும் புதிய உறவை முக்கியமாக சபேசனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைப் புதிதாக வந்த கல்யாணி புரிந்துகொண்டாள்.
உறவுக்காகவும் அன்புக்காகவும் மட்டுமேதான் அந்த வீட்டிற்கு வந்திருப்பதை அவர்கள் விரைவில் உணர்வார்கள் என்று நம்பினாள்.
ஆனால் சபேசனும் பூமாவும் இன்னும் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இப்போது உணர்ந்தாள்.
பெரியசாமிக்குத் தன் தாய் இறந்தபோது, தனக்கு ஏற்பட்ட திகைப்பு ஞாபகம் வந்தது. பெரியசாமிக்கு பன்னிரண்டு வயது. சபேசனுக்கு ஆறு வயதிருக்கும்.
மனைவி இறந்ததைக் காரணமாக்கி, தந்தை குடிக்க ஆரம்பித்தார்.
குடியை நிறுத்தவும், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவும் உறவினர்கள் வற்புறுத்தி, பெரியசாமியின் தந்தைக்கு மறுமணம் செய்து வைத்தனர்.
நல்லவேளையாய் சித்தி கொடுமைக்காரியில்லை. கணவனுடன் போராடி பெரியசாமி படிக்கவும் உதவி செய்தாள். ஆனால் அவளால் கணவனின் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை.
பெரியசாமியின் தந்தை இறந்தபோது, சித்திக்குப் பத்தும் எட்டுமாய் குழந்தைகள் இருவர்.
பெரியசாமியின் அப்பா திடீரென்று இறந்துவிட்டார் என்பார்கள். ஆனால் திடீரெனப் போனது உடல் மட்டும்தான். குடி, அவர் உடலை மட்டுமல்ல, வீட்டுப் பொருட்களையும் முன்பே காலி செய்துவிட்டிருந்தது.
அப்போது பெரியசாமி படித்து முடித்து, வேலை தேடிக்கொண்டிருந்தார்.
அப்பாவின் இறப்புக்கு வந்த தாய்மாமா, “இனிமே நீதான் எல்லாத்தையும் பாத்துக்கணும். அப்பா இல்லேங்கறதால, இவங்க உன்னோட தம்பி, தங்கை இல்லேன்னு ஆயிடாது” என்று கூறியதைக் கேட்டதும், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இனிமேல் தன்னுடையது என்று பெரியசாமி உணர்ந்தார்.
‘இவர்களுக்காக எதுவும் செய்வேன்’ தனக்குள் உறுதி செய்துகொண்டார்.
மாமாவின் உதவியால் வெளிநாட்டில் வேலை கிடைத்தது. ஐந்து வருடங்களில் நல்ல சேமிப்புடன் திரும்பினார்.
அதற்குப் பிறகும் அவருக்குத் தன்னைப் பற்றி நினைக்க நேரம் இல்லை. திருமணம் பற்றிய பேச்சு வந்தபோதுகூட சிரித்துக்கொண்டே தவிர்த்தார்.
வருடங்கள் ஓடின. சித்தியின் மரணம், தங்கை வளர்மதியின் கல்யாணம், அவள் குழந்தைகள், சபேசன் வேலை, அவன் திருமணம், அவன் குழந்தைகள், மற்றொரு தம்பி சுகுமார் கல்லூரிப் படிப்பு, வெளியூரில் வேலை, திருமணம் என்று வாழ்க்கை ஓடியது.
‘என் கடமையை ஒழுங்காக முடிச்சேனா?’ என்ற கேள்வி அவருக்குள் எழுந்து, தன்னைப் பற்றி அவர் நினைத்துப் பார்க்கும் நேரத்தில் அவருடைய இளமை தொலைந்திருந்தது.
பெரியசாமிக்கு மட்டுமல்ல, சபேசனுக்கும் தூக்கம் வரவில்லை. தந்தை இறந்தபோது பெரியசாமி சொன்ன, “பயப்படாதீங்க, நான் இருக்கேன்” என்ற வார்த்தைகள் இப்போது அவன் காதில் பலமாக ஒலித்தன.
குற்ற உணர்வுடன் கண்களை மூடிக்கொண்டான். “சே! எவ்வளவு கீழ்த்தரமாக நினைச்சுட்டேன்! அவர் காதுபடவே பேசியும் விட்டேன். இனி எப்படி அவர் முகத்தில் முழிப்பேன்? சித்தியின் பிள்ளைகளைக்கூட, தன் உடன்பிறந்தவர்களாய் நினைக்கும் அவரைப் போய்…”
அண்ணனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் போலத் தோன்றியது. “போய்ப் பேசலாமா”? என்ற எண்ணத்தை, “என்ன சொல்வாரோ?” என்ற பயம் தடுத்தது.
அதிகாலையில்…
“சபேசன்” என்ற கல்யாணியின் உரத்த குரலில் சபேசனும் பூமாவும் அவசரமாக ஓடி வந்தார்கள்.
பெரியசாமி நெஞ்சில் கை வைத்துக்கொண்டு துடித்தபடி இருந்தார். வியர்வையில் சட்டை நனைந்திருந்தது.
“அண்ணா, என்னாச்சு?” பதற்றத்துடன் கேட்ட சபேசனைப் பெரியசாமி பார்த்தார். முகத்தில் வலி வெளிப்படையாகத் தெரிந்தது. அதைப் புன்னகையால் மறைக்க முயன்று தோற்றார்.
“ஹாஸ்பிடல் போகணும்”
கல்யாணியின் குரலில் பதற்றமிருந்தது.
“இதோ அண்ணி” சபேசன் குரலில் அதே பதற்றம்.
அந்த நிலையிலும் பெரியசாமியின் உதட்டில் புன்னகைக் கீற்று தெரிந்தது.
சபேசன் வண்டியை ஓட்டிக்கொண்டே மருத்துவமனைக்குப் போன் செய்தான். மருத்துவமனை வாசலில் உதவியாளர்கள் நின்றிருந்தார்கள். பெரியசாமி உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்.
அன்று மாலை வரை அனைவரும் பதற்றமாகவே இருந்தார்கள். டாக்டர் வெளியே வந்து அபாயக் கட்டத்தைத் தாண்டியதைத் தெரிவித்தார். எல்லோருக்கும் மூச்சு வந்தது.
விதவிதமான மாத்திரைகள் மற்றும் பலவிதமான எச்சரிக்கைகளுடன் நான்கு நாட்கள் கழித்து பெரியசாமி வீடு திரும்பினார். அதற்குள் சுகுமாரும் வளர்மதியும் வந்துவிட்டார்கள். அனைவரையும் பெரியசாமி அழைத்தார்.
அனைவரும் இருக்கிறார்களா என்று உறுதிப்படுத்திக்கொண்டவர், “கல்யாணி அந்தக் கருப்புப் பையை எடு” என்றார். கல்யாணி தயக்கத்துடன் பையை எடுத்து வந்தாள்.
அவர் பையைத் திறந்தார். அதில் வங்கி ஆவணங்களோடு, குழந்தைகளுக்கான காப்பீட்டுப் பத்திரங்களும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உரிய சொத்து விவரங்களும், தனித்தனியாக இருந்தன.
“நான் யாரையும் மறக்கல” பெரியசாமியின் குரல் கம்மியது. “நானே இதை வெச்சிருந்தது, உங்களைப் பிரிச்சுப் பாக்க என்னால முடியாததாலதான். மறைச்சு வைக்க இல்ல”
“அண்ணா” சபேசனின் சந்தேகம் உடைந்ததில், அவன் கண்ணீரால் மன்னிப்பு கேட்டான்.
பெரியசாமி மெதுவாகப் பேசினார்.
“நீங்க வாழ்க்கையைப் பார்த்து பயப்படுவீங்கன்னு நினைச்சு, உங்களுக்காகவும் சேர்த்தேன். என்னையே சந்தேகப்படுவீங்கன்னு நினைக்கல.
நான் உங்களுக்காகத்தான் வாழ்ந்தேங்கறது, சொல்லாமலே புரிஞ்சிப்பீங்கன்னு நினைச்சேன்.
கல்யாணி வந்தது என்னோட வாழ்க்கைக்காக; உங்களுக்குத் தடையா இருக்க இல்ல. நான் இருக்கும்போதே நீங்க என்னை இழந்திடாதீங்க. உங்க சந்தேகத்தை என்னால் தாங்க முடியாது.”
பேச்சு தந்த அயற்சியில் கண்களை மூடிக்கொண்டார் பெரியசாமி. “அவர் கொஞ்ச நேரம் தூங்கட்டும்” கல்யாணியின் குரல் மெதுவாகக் கேட்டது. “சரிங்க அண்ணி” என்று எல்லோரும் நகர்ந்தார்கள்.
வீட்டின் பின்புறம் இருந்த வேப்பமரம், ஜன்னல் வழியாகப் பெரிய சாமியின் கண்களில் பட்டது.
மழையில் முறிந்திருந்த ஒரு கிளையின் இடம் மட்டும் கருப்பாக இருந்தது. அதைப் பார்த்தபடி பெரியசாமி முணுமுணுத்தார். “சில மரங்கள் வெட்டப்படுவது கோடாரியால் மட்டும் அல்ல.”



