இணைய இதழ் 128

டாக்சிக்

சிறுகதைகள் | வாசகசாலை

“இணைய வழி சந்திப்பைத் துவங்கிவிடலாமா?” என்றாள் மைலான்.

“இரு. அகழ்வாராய்ச்சியில்  ஈடுபடும் லெவி இன்னும் வரவில்லையே? அவள் இல்லாமல் எப்படித் துவங்குவது?” என்றாள் அவெரி.

“ஆணாதிக்கத்திற்கான மரபணுக் கூற்றை அடையாளம் காணும் ஆராய்ச்சிக்கு அகழ்வாராய்ச்சி செய்பவள் தேவையா? மரபணு ஆராய்ச்சி செய்யும் நீயும் நானுமே போதாதா அவெரி?” என்றாள் மைலான், பொறுமை இழந்தவளாய்.

“உன் கூற்றைப் புரிந்துகொள்கிறேன். ஆனால், ஒரு பிரச்சனையை எல்லாக் கோணங்களிலிருந்தும் பார்க்க வேண்டும், மைலான்.” என்றாள் அவெரி.

“நீ இந்தச் சந்திப்பை இன்று வைத்திருக்கக்கூடாது. க்ளவுட் சீடிங் (cloud seeding) வாரம் இது. முன்பெல்லாம் க்ளவுட் சீடிங் (cloud seeding) வாரங்களில் மிதமான மழைதான் இருக்கும். இந்த வாரம் செமத்தியான மழை. இத்தனையை அரசாங்கமே எதிர்பார்த்திருக்காது” என்றாள் மைலான்.

“சில சமயங்களில், செயற்கை நுண்ணறிவின் கணக்கைப் பொய்க்க வைத்துவிடுகிறது, இயற்கை. இயற்கையை இன்னும் செயற்கை நுண்ணறிவு முழுமையாக சிமுலேட் செய்யவில்லை என்பதற்கு இது போன்ற ஆதாரங்கள் நமக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும்வரை, இந்த ஆராய்ச்சிப் பணியிலிருந்து பணி ஓய்வு என்கிற கேள்விக்கே இடமில்லை. நாம் தொடர்ந்து ஓடத்தானே வேண்டியிருக்கிறது? அடுத்தடுத்த வாரங்களும் க்ளவுட் சீடிங்  (cloud seeding) வாரங்கள்தான் மைலான். வாரக்கணக்கிலா ஒத்திப்போட முடியும்? தொடர்ந்து ஓட வேண்டுமே? அதனால்தான் இன்றே வைத்துவிட்டேன்.” என்றாள் அவெரி.

“ப்ச்சு.. நேரம் வேறு கடந்துகொண்டிருக்கிறது.  நள்ளிரவுக்கு இன்னும் எட்டே மணி நேரங்கள்தான். அதற்குள் வந்துவிடுவாள் இல்லையா?” என்று தனது அதிருப்தியைப் பரிகாசமாய் வெளிக்காட்டினாள் மைலான்.

நேரம் கடந்துகொண்டிருந்தது. கணினித் திரைக்குள் மைலானும் அவெரியும் ஒருவரையொருவர் பார்த்தபடி நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தார்கள். ஆயினும், லெவி இன்னும் வந்திருக்கவில்லை.

சட்டென ஒரு யோசனை தோன்றியவளாய், “வேண்டுமானால் இப்படிச் செய்யலாம்.  நாம் நமது சந்திப்பைத் துவங்குவோம். அதைப் பதிவு செய்துகொள்வோம். லெவி எப்போது இணைகிறாளோ அப்போது, பதிவை அவள் பார்த்துக்கொள்ளட்டும்” என்றாள் மைலான் ஆர்வத்துடன்.

மைலானுக்கு பொறுமை சற்று குறைவுதான். இதற்கு மேல் மைலானைக் காத்திருக்கச்செய்ய முடியாது என்பதை உணர்ந்து, அரை மனதாய், “சரி, நாம் துவங்குவோம். இந்தச் சந்திப்பை நான் பதிவு செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு சில பொத்தான்களை அழுத்த, ’05-11-2881 மாலை மணி 3′ என்று பெயரிட்டு மடிக்கணினி அவர்களது சந்திப்பைப் பதிவு செய்யத் துவங்கியது.

“நான் முதலில் துவங்குகிறேன். ஆணாதிக்கத்திற்கான மரபணுவைக் கண்டுபிடிக்க அமர்ந்த நேற்றைய அமர்வில், ஆண்களுக்கான ஒய் க்ரோமோசோமில் (Y Chromosome) ஒரு தினுசான மரபணுத் தொகுப்பைக் கண்டுபிடித்தேன். அதைத் தனியே எடுத்திருக்கிறேன். எனது ஊகம் சரியானால், அதுதான் ஆண்களுக்கு ஆணாதிக்கத்தைத் திணிக்கும் மரபணுவாக இருக்க வேண்டும். அதை நீக்கிவிட்டால், ஆண்களிடமிருந்து ஆணாதிக்க உணர்வு போய்விடும் என்றே கருதுகிறேன்” என்றாள் மைலான்.

“என்ன! நிஜமாகவா சொல்கிறாய்? அடடா! இந்த  நேரம் பார்த்து லெவி இல்லாமல் போய்விட்டாளே! அவள்தான் இந்த ஆணாதிக்கத்தைப் பூண்டோடு ஒழித்துக்கட்டக் கங்கணம் கட்டியிருந்தாள். அவளுக்கு இந்தச் செய்தி, மிகவும் உவப்பானதாக இருந்திருக்கும்” என்றாள் அவெரி.

“எனது ஆராய்ச்சியில் கவனம் வை, அவெரி. எப்போதும் லெவி நினைவாகவே இருக்கிறாயே” என்றாள் மைலான், ஓர் உதட்டுச் சுழிப்புடன்.

“இல்லைடி. மன்னித்துவிடு. ஓர் ஆர்வத்தில் சொல்லிவிட்டேன். சரி, இப்போது உனது ஆராய்ச்சியில் நீ எந்தக் கட்டத்தில் இருக்கிறாய்?”

“ஆணின் ஒய் க்ரோமோசோமில் ஆண் குறி, டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் (Testosterone Hormone) போன்ற இனவிருத்தி தொடர்பான மரபணுக்களுக்குப் பிறகு இந்த ஒரு மரபணுத் தொகுதி மட்டும்தான் இருக்கிறது. ஆக, தேவையற்றவற்றை விலக்கிவிட்டால் எஞ்சியது தேவையானதுதானே? அதன் பிரகாரம் பார்த்தால் இந்த மரபணுத் தொகுதிதான் ஆணாதிக்கத்திற்குக் காரணமான தொகுதி என்று கணித்தேன். இந்தப் பகுதியை நீக்கிவிட்டபிறகு உருவாகும் ஆண்கள், ஆணாதிக்கம் காட்டுகிறார்களா என்று ஒரு பாவனை நிரல் (simulation) கூட நடத்திப்பார்த்தாகிவிட்டது. இந்தப் பகுதியை நீக்கிவிட்ட ஆண்கள் ஆணாதிக்கம் காட்டாமல் நடந்துகொள்கிறார்கள். நானும் பலமுறை அதே பாவனை நிரலை மீண்டும் மீண்டும் நடத்திப்பார்த்துவிட்டேன். விளைவுகள் மாறவே இல்லை”

“எதிர்மறை சோதனை வழக்கு -அதாவது- Negative test case?”

“அதைச் செய்யாமல் விடுவேனா? அந்தக் குறிப்பிட்ட மரபணுத் தொகுப்பைக் கொண்ட ஆண்களின் செயல்பாடுகளையும் பாவனை நிரலில் வைத்துச் சோதித்துவிட்டேன். எல்லோருமே ஆணாதிக்க மனோபாவத்துடன்தான் நடந்துகொண்டார்கள். இது ஒவ்வொரு முறை, பாவனை நிரல் நடத்தியபோதும் கச்சிதமாக நடந்தது”

“வாவ்!! இது ஓர் அற்புதக் கண்டுபிடிப்பு மைலான். உனக்கு என் கட்டி முத்தங்கள். இதை எப்படிச் சாதித்தாய்?” என்றாள் அவெரி, ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியுடன்.

“ஓர் ஆண் விடாமல் எல்லோரிடமும் ஆணாதிக்கம் நிறைந்திருக்கிறது. அதற்கு என்ன சாத்தியம் இருக்கிறது என்று யோசித்தேன், அவெரி. அது மரபணுக்கூற்றிலேயே இருந்தால் மட்டும்தான் சாத்தியம் என்று தோன்றியது. ஆணின் ஒய் க்ரோமோசோமை (Y Chromosome) எடுத்துத் தேடலானேன். சிக்கிக்கொண்டுவிட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்த ஒய் க்ரோமோசோம் (Y Chromosome), எக்ஸைவிட மிக மிகச் சிறியதாக இருந்ததால், இருக்கும் அல்காரிதங்கள் போதுமானதாக இருந்தன. பாவனை நிரல்களும் செயற்கை நுண்ணறிவும் இல்லாவிட்டால் இதைக் கண்டுபிடித்திருக்கச் சாத்தியமே இல்லை. இந்தச் சிறிய பகுதியிலேயே கிட்டத்தட்ட கோடிக்கணக்கான மரபணுக்கூறுகள். செயற்கை நுண்ணறிவுதான் பிராய உதவியது.” என்றாள் மைலான்.

பேசிக்கொண்டிருந்தபடியே அவெரி மணி பார்க்க, நேரம் ’05-11-2881 மாலை மணி 3:30′ ஐக் காட்டியது.

“சரி, மைலான், இது சரிவராது. நாம் இனிமேலும் காத்திருக்க வேண்டாம். லெவி இனிமேல்…” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, ஒரு சிணுங்கல் ஒலி, சட்டென இணையச் சந்திப்பில் லெவி இணைவதைக் குறிப்புணர்த்தியது.

“பெண்களே, நான் தாமதமாய்ச் சந்திப்பில் இணைவதற்கு என்மீது கோபமாக இருப்பீர்கள் என்று தெரியும். சுடச்சுட ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறேன். அதனால்தான் இந்தத் தாமதம். நீங்கள் யாரும் நான் சொல்லப்போவதை நம்பமாட்டீர்கள் என்றுதான் கணிக்கிறேன்” என்றவள், அவெரி மற்றும் மைலானின் பதிலுக்குக்கூடக் காத்திராமல்,

“நாம் இதற்கு முன்பு என்ன கணித்திருந்தோம்? ஆணாதிக்கம் நிச்சயமாக ஆணின் மரபணுத்தொகுப்பில் இருக்கும் என்றுதானே கணித்தோம். அதனால்தான் அது தொடர்ந்து ஆணின் பண்பாக வெளிப்படுகிறது என்றுதானே கருதினோம். 2025ஆம் ஆண்டில் உயிரோடு வாழ்ந்த மனிதன் ஒருவனின் பதப்படுத்தப்பட்ட உடல் எவரெஸ்ட் உச்சியிலிருந்து மீட்கப்பட்டு சமீபத்தில் எனது பரிசோதனைக்கூடத்திற்கு வந்திருந்தது. அது ஓர் ஆணின் உடல். அதனை நான் ஆராய்ந்ததில் அவனது மரபணுக்கூற்றைப் பிரித்தெடுக்க முடிந்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள், அந்த ஆணின் மரபணுவான ஒய் க்ரோமோசோமில் (Y Chromosome), ஆணின் குறி மற்றும் ஹார்மோன், இனவிருத்திக்கான மரபணுக்கள் மட்டும்தான் இருந்தன” என்றாள் லெவி.

லெவி சொன்னதில் அதிர்ந்தவர்களாய், புருவச் சுருக்கங்களுடன் லெவியையே தங்கள் கணினித் திரையில் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள் மைலானும் அவெரியும்.

“சுமார் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான ஆணின் புதைபடிமங்கள் வழி நாம் தெரிந்துகொண்டது என்னவென்றால், அக்காலத்தில் ஆணின் ஒய் க்ரோமோசோமில் (Y Chromosome) சுமார் 800 மரபணுக் கூறுகள் இருந்திருக்கின்றன. ஆனால், 2025இல் கிடைத்த ஆண் பிரேதத்திலிருந்த மரபணுவில் சுமார் 40 முதல் 50 மரபணுக்கூறுகளே இருந்தன. என்ன தோழிகளா, இதற்கே வாயடைத்துப் போய்விட்டீர்கள்! நம்பமாட்டீர்கள் என்று நான் முதலிலேயே சொன்னேன் இல்லையா?” என்று சொல்லிச் சிரித்தாள் லெவி.

மைலானும் அவெரியும் எதுவும் பேசத்தோன்றாதவர்களாய் பிரமை பிடித்தாற்போல் அமர்ந்திருக்க, சற்றே துணுக்குற்றவளாய்,

“என்னங்கடி, எத்தனை பெரிய விடயத்தைச் சொல்கிறேன். அமைதியாக இருக்கிறீர்கள்?” என்றாள் புருவச் சுருக்கங்களுடன்.

“நீ வருவதற்கு முன் நாங்கள் என்ன பேசினோம் என்பதைக் கேட்டாயா?” என்று மைலான் கேட்க, “இல்லையே என்ன பேசினீர்கள்?” என்றாள் லெவி சுருங்கிய புருவங்கள் விரிவடையாமல்.

ஆனால், மைலானும் அவெரியும் சிந்தனையில் ஆழ்ந்தவர்களாய்த் தன்னைக் கவனிக்காமல் இருப்பதைக் கவனித்தவள், அதுகாறுமான பதிவைச் சொடுக்கிக் கேட்கத் துவங்கினாள். அவள் மீண்டும், இணையவழிச் சந்திப்பில் கவனம் திருப்பியபோதும் மைலானும் அவெரியும் ஆழ்ந்த சிந்தனையிலிருந்து மீளாதவர்களாகத்தான் இருந்தார்கள்.

“என்னடீ இது? 2025இல் இருந்த ஆணின் ஒய் க்ரோமோசோமில் (Y Chromosome), பாலுணர்வு தொடர்பான மரபணுக்கள், இனவிருத்தி தொடர்பான மரபணுக்கள் அன்றி வேறு எதுவும் இருக்கவில்லை. ஆனால், 2881ஆம் ஆண்டான இக்காலத்து மனிதனின் மரபணுவில் கூடுதலாக மரபணுக்கள் இருக்கின்றன. இது எப்படிச் சாத்தியம்? ஆண்டுகள் செல்லச்செல்ல, மரபணுக்கள் தேய்ந்துதானே போயிருக்க வேண்டும்? வளர்ந்திருக்கின்றன?” என்றாள் லெவி அதிர்ச்சியுடன்.

“என்னவாக இருக்குமென்று நீ நினைக்கிறாய்?” என்றாள் அவெரி ஒரு தெளிவுக்கு வந்தவளாய்.

“தெரியவில்லை. உனக்கு ஏதேனும் தெரிகிறதா?” என்றாள் மைலான்.

“நடப்பதற்கு ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றாள் அவெரி.

“என்ன அது?” என்றார்கள் மைலானும் லெவியும் கோரசாக.

“இப்படி யோசித்துப் பார். 2025 அதற்கு முன்னான காலகட்டங்களில், ஆணின் ஒய் க்ரோமோசோமில் (Y Chromosome) இந்தக் கூடுதல் மரபணுக்கள் இல்லை. 2881இல் காணப்படுகிறது. இப்போது நீ 2025இல் இருப்பதாக நினைத்துக்கொள். உன் சிந்தனை என்னவாக இருக்கும்?” என்றாள் அவெரி.

“எனக்கு விளங்கவில்லை. என்ன சொல்ல வருகிறாய்?” லெவி.

“இப்போது போல் அப்போதும் ஆணின் ஆணாதிக்கப்போக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருந்திருக்கும். ஆனால், ஒய் க்ரோமோசோமில்  (Y Chromosome) குறிப்பிடத்தக்கனவாய் மரபணுக் கூறு ஏதும் இல்லை. இருந்தது எல்லாமும், பாலுணர்வு மற்றும் இனவிருத்திக்கான உடற்கூறுகள் சார்ந்த மரபணுக் கூறுகளே. அப்படியானால், ஆணாதிக்க நடத்தை எங்கிருந்து வந்ததாக இருக்க முடியும்?”

“எக்ஸ் க்ரோமோசோம் (X Chromosome) தானே இருக்கும் ஒரே வாய்ப்பு?” என்றாள் மைலான். லெவி ஆமோதிப்பாய்த் தலையசைக்க,

“அப்படியானால், பெண் தன்மைக்கான க்ரோமோசோமான எக்ஸில் (X Chromosome) ஆணாதிக்கத்திற்கான மூலக்கூறா?” என்றாள் அவெரி தொடர்ந்து.

“ஏய்!! என்னடி சொல்கிறாய்? உனக்கு நானே பரவாயில்லை போலிருக்கிறதே” என்று அலறினாள் லெவி, அவெரி சொல்ல வருவதைப் புரிந்துகொண்டவளாய்.

“நீ சொல்வது ஊகம்தானே அவெரி?” என்றாள் மைலான்.

“நடந்திருப்பதை வைத்து, அதை ஊகம் என்றா கணிக்கிறாய்?” என்றாள் அவெரி.

மைலான் ஊர்ஜிதமில்லாமல் குழப்பத்துடன் அவெரியையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“ஆணின் ஆணாதிக்க நடத்தைக்குக் காரணமான மரபணுக்கள் உண்மையில் எக்ஸ் க்ரோமோசோமில் (X Chromosome) உள்ளவை. பெண்களில் இது இரு மடங்காக வந்து சேர்கிறது. அதாவது, ஆணிடம் உள்ள ஒன்றுடன் இது சேரும்போது ஆதிக்கத்திற்குக் காரணமாகிறது?” என்றாள் அவெரி.

“பெண்களிடம் இது இரு மடங்காக இருக்கிறதே? அப்படியானால், ஆணிடம் உள்ளது பெண்களிடம் இல்லாத ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அது என்ன?” என்று அவெரி கேட்க,

“டெஸ்டோஸ்டீரான்!?” என்று ஐயம் கலந்த ஆர்வத்துடன் கூவினாள் மைலான்.

“அப்படியானால், அது வெறும் சூழல் என்றுதானே அர்த்தமாகிறது. கோபத்தில் இருக்கையில் கையில் வாள் இருப்பது போல? வாள் இல்லாதவர்களிடம் அக்கோபம் வெளிப்பட வாய்ப்பின்றி மட்டுப்பட்டுவிடுகிறது. ஆனால், வாள் இருக்கும் இடத்தில், அது ரத்தம் பார்த்துவிடுகிறது. இல்லையா?” என்றாள் அவெரி.

“ஆக, வாள் என்பது வெறும் கருவிதான் என்கிறாய். ரிஷிமூலம் எக்ஸ் க்ரோமோசோமில் உள்ளது இல்லையா?” என்றாள் லெவி.

“நீ இல்லை என்பாயா?” என்றாள் அவெரி.

லெவி இடமும் வலமுமாய்த் தலையசைத்தாள்.  அவளது பார்வை, இலக்கின்றி நிலத்தைப் பார்த்தபடி இருந்தது. சற்றைக்கெல்லாம் நீண்ட பெருமூச்சு ஒன்றைப் பிரசவித்தாள்.

“ஒருக்கால் ஏன் இப்படி இருந்திருக்கக்கூடாது? மரபணுக் கூறு இல்லாமல் ஆணைக் குறை சொல்வது அர்த்தமற்றதாகிவிடலாம் என்று கருதி, ஆணுக்குள் செயற்கையாக இந்த மரபணுக் கூற்றை 2025க்குப் பிறகு யாரேனும் விதைத்திருக்கலாமல்லவா?” என்றாள் அவெரி.

“அதாவது, காலங்காலமாய் ஆணாதிக்கவாதி என்று சொல்லப்பட்ட ஆணுக்கு, அவ்வாணாதிக்கவாதத்திற்கு அவனை மட்டுமே காரணமாகக் காட்டக்கூடிய ஒன்றை, அதன் பிறகே அவனுக்குள் திணித்திருக்கிறார்கள் என்கிறாயா?” என்றாள் லெவி.

“நடப்பதை வேறெப்படியும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியுமா என்ன?” என்றாள் அவெரி.

மேலும் வாசிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button