இணைய இதழ் 128சிறுகதைகள்

கனவில் வந்தவர் – உமா மஹேஷ்

சிறுகதைகள் | வாசகசாலை

“அக்கா.. ஒரு கதை எழுதணும்”

“எழுதேன்”

“ஆனால் வரல… நீங்க என்ன படிச்சுட்டு இருக்கீங்க?”

புத்தகத்தைக் காட்டினாள்.

‘சுதர்சனாவின் அழகில் அக்னி தேவன் கிறங்கிக் கிடந்தான். அவள் அப்பாவின் அணையா யாகத்தீயை அவள்தான் அவ்வப்போது வந்து உதடுகளைக் குழித்து ஊதிவிட்டுப் போவாள். சுதர்சனா ராஜகுமாரி. மாஹிஷ்மதி அரசன் நீலனின் பெண். அரசனின் தினசரி யாகத்தில், விசிறியால் கிளர்ந்தெழாத அக்னி சுதர்சனாவின் உதடுகள் உரசிய காற்றால் பிழம்பென மேலெழுவான். ஒருநாள் மனித உருக்கொண்டு அவளிடம் தன் காதலைச் சொன்னான். அவளுக்கும் பிடித்திருந்தது. அக்னி தேவனின் தேஜஸ் யாரைத்தான் கவராது? அவர்கள் நெருக்கமாயிருந்ததை ஒருநாள் ஒரு சேவகன் பார்த்துவிட்டான்..’

“என்னக்கா இது.. அம்புலிமாமா கதை மாதிரி போவுது”

“தெரியல.. இதுல ஏதோ படிமம் இருக்கு. புதிர் இருக்கு. அதைத்தான் டிகோட் செய்யணும். இதை விடு”

“எனக்கு இதெல்லாம் வாணாம்.. மாடர்னா ஒரு கதை.. நம் காலத்து மக்களின் பிரச்சனையை பேசறா மாதிரி வேணும்”

“நீ இன்ஸ்டா, ஃபேஸ்புக் எதிலாவதுல இருக்கயா”

“எல்லாத்துலேயும் அக்கவுண்ட் இருக்கு!”

“சரி, இன்ஸ்டா திற” திறந்தாள். ஒவ்வொரு ரீலாகத் தள்ளினாள்.

‘பாட்டு

பார்க்க வேண்டிய சினிமாக்கள்

பொதிகை மலைப் பயணம்

ரகசிய வெப்சைட்டுகள் (மெம்பர்ஷிப் பே பண்ணிட்டிங்களா)

பஜ்ஜி செய்முறை

தாய்லாந்து செல்வோர் கவனத்திற்கு’

அடுத்ததாக ஒரு பக்கத்தில் ஒரு பெண் தன் கணவனை ஆசையுடன் மிக இறுக்கமாகக் கட்டிக்கொண்டு இருக்க, அருகில் வடிவாய் ஒரு பெண்குழந்தை பட்டுப் பாவாடையில் கேமராவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது.

“நிறுத்து.. இது யார் தெரியுமா?”

“தெரியுமே”

“சொல்லு”

“இந்தப் பொண்ணு ஒரு நல்ல பாடகி. இதைப் பாருங்க”

இறுதிப்போட்டியில் உருக்கமாய்ப் பாடிக்கொண்டிருந்தாள்.

“…இளமையெல்லாம் வெறும் கனவு மயம்

இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது

மயங்குது எதிர்காலம்”

அரங்கம் எழுந்து நின்று கைதட்டியது.

“அந்தப் பெரிய பாட்டுப் போட்டில முதல் பரிசு. அதன் வழியா சினிமா வாய்ப்பு. திடீர்னு பிரபலமாச்சு. அவர் கம்பெனிதான் அந்த நிகழ்ச்சிக்கு விளம்பரதாரர். பரிசு கொடுக்க வந்தார்”

 “அப்புறம்?”

“பழகினாங்க. பொது நிகழ்ச்சிகளுக்கு ஒன்னா வந்தாங்க”

இன்னொரு ரீலில் அவர்கள் பகட்டான உடையுடன் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு இணைந்து வந்து முதல் வரிசையில் அமர்ந்தார்கள்.

“.. அரசியல் குடும்பம். நல்ல பணம்.. ஒரே வீட்ல இருந்தாங்க.. இன்ஸ்டால தினம் அவங்க அன்யோன்யமா இருக்கற படங்கள். ட்ரெண்டங்ல இருந்தாங்க. அதை ரசிக்க ஏராளமான பக்த கோடிகள். திடீர்னு அவர் அவளை விட்டுட்டு போயிட்டார்”

“ஆமா”

“அதுக்கப்றம் தினமும் ஒருத்தர ஒருத்தர் தரக்குறைவா விமர்சனம் செஞ்சுப்பாங்க. அதை பொது விவாதமா செய்ய வேலையில்லாத இருவது பேர். இப்பத்தான் மொபைல் வச்சுருக்கறவன் எல்லாம் பத்திரிகையாளராச்சே”

“ஹ்ம்”

“அவள் தான் கர்ப்பமா இருக்கறதாகவும் அவன்தான் குழந்தைக்கு தகப்பன்னும் ஒரு பேட்டி குடுக்க.”

“அவன் என்ன சொன்னான்?”

“அவளுக்கு நிறைய பேரோட பழக்கம்; என்னை மாட்டிவிடப் பாக்கறான்னு சொன்னான்”

“சகிக்கல”

“அது கேஸ் போட, நீதிபதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க உத்தரவிட்டார். அவன்தான் தகப்பன்னு ரிசல்ட் வந்துது”

“போடு.. அவங்க வாழ்க்கை வரலாற க், ச், ப் விடாம சொல்ற”

“ஒரு விதமான வம்புதான். நாம மறந்தாலும் இன்ஸ்டா படிக்க வச்சுரும்”

“அப்றம் என்ன ஆச்சு?”

“தேர்தல் நேரம். இவனால அவங்க அப்பாவுக்குச் சிக்கல். அவன் பிசினஸ்லேயும் இதனால பிரச்சனை. அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியல. திடீர்னு ஒருநாள், மனம் திருந்திய மைந்தனா ‘அது என் குழந்தை.. அவள்தான் என் அன்பு மனைவி’ அப்படின்னு அறிக்கை விட்டான். அவ வீட்டுக்கே போய்ட்டான்னு நியூஸ்”

திரையைக் காட்டினாள்.

“இப்போ இந்தப் படம். அவங்க நெருக்கமா இருக்கறா மாதிரி”

“இதை கதையா எழுது”

“இதுல என்ன கதை இருக்கு?”

“நடந்ததை ரிப்போர்ட் செஞ்சா அது செய்தி; கதையில்லை”

“அப்போ?”

“சம்பவங்களைச் செய்தியாக விவாதிப்பதைத் தாண்டி, கதாபாத்திரங்களின் அகவுலக உணர்வுகளை நுட்பமாகக் காட்சிப்படுத்தணும்”

“அப்படின்னா?”

“அவங்க எடுக்கும் முடிவுகளுக்குப் பின்னால் இருக்கும் மனித மனங்களின் கேள்விகள், நியாயங்கள், வஞ்சகம், புதிர்கள்… அதை அவிழ்க்க முடிந்தால் அதில் கதை இருக்கும். கதைக்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்கும்”

“புரியல”

“இவ்வளவு தூரம் அவமானப்படுத்திய ஒருவனை ஒரு பெண் மீண்டும் எப்படி ஏற்றுக்கொள்வாள்? தினமும் அவன் முகத்தைப் பார்க்கும்போது, அவன் செய்த துரோகமும் சொன்ன வார்த்தைகளும் அவளுக்கு நினைவுக்கு வந்து வலிக்காதா? அவன் சொன்னதெல்லாம் மறந்து போகுமா? அத்தனையும் மறந்துட்டு இப்படிச் சிரித்துக்கொண்டு எப்படிப் படம் போட முடியுமா?”

“சிந்திக்க வேண்டிய விசயம்தான்”

“இப்படிக் கேக்கறேன், இந்த மாதிரியான சூழலில் உன்னால இப்படி இருக்க முடியுமா?”

 “சே, கண்டிப்பா இல்லை”

“வேற என்னவாக இருக்க முடியும்?”

“குழந்தைக்காக இருக்கலாம்”

மாதவி அவளைப் பார்த்தாள்.

“ஒரு குழந்தை அப்பா இல்லாமல் வளரும்போது அது சந்திக்கும் அவமானங்கள், அதனால் கிடைக்கும் கசப்பான நினைவுகள், அது தரும் பாதிப்பு”

மாதவியின் கண்கள் மூடின. ஒவ்வொரு பிடிஏ மீட்டிங்க், ஸ்போர்ட்ஸ் டே. எந்த ஒரு விழாவும் அவளுக்குள் பதற்றத்தைத் தந்துகொண்டே இருக்கும். குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டே கண்கள் கூட்டத்தில் அவன் முகத்தைத் தேடிக்கொண்டே இருக்கும். சுற்றிலும் இருப்பவர்கள் வேறு ஏதாவது பேசிக்கொண்டிருந்தாலும் தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என யோசிக்க வைக்கும். இப்போது நினைத்தாலும் அந்தப் பதற்றம் வந்து போகிறது.

“அக்கா.. அக்கா…”

“ஹ்ம்.. இது சுலபமான பதில். அவள் கலைத்திருக்கலாம்”

“வேற என்ன?”

“பயம்?”

“வாய்ப்பில்லை”

“சமூக அழுத்தம்?!”

“அவள் கொடுத்த பேட்டிகளைப் பார்த்தியா? பத்திரிகைக்காரங்க கேக்கற கேள்விக்கெல்ல்லம் கோவப்படாம அமைதியா பதில் சொல்லுது.. சட்டுனு உடைஞ்சு போற ஜாதியா தெரியல”

மீண்டும் அந்த நிழற்படத்தைப் பார்த்தார்கள்.

ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அந்தப் பெண்ணின் பார்வையும் சிரிப்பும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுத்தன.

“ஒருவேள அவள் அவனை மன்னிக்கவே இல்லை”

“அப்படின்னா?”

மாதவி விரல்களுக்கிடையில் இருந்த பென்சிலைச் சுண்டிவிட்டுக்கொண்டிருந்தாள். 

“ஒருவேளை அது காதலே இல்லாம இருக்கலாம்”

“என்ன?”

“ஒரு வியூகம்”

அவள் சிரித்தாள்.

“வியூகமா?”

“இளமையில் சந்தித்த வறுமை, தன் உடலழகு மீதான நம்பிக்கை, மனிதர்களின் ஆசைகளையும் பலவீனங்களையும் உணரும் திறன். இதன் மூலம் வசதியான வாழ்வை வென்றெடுக்க இப்படி ஒரு திட்டத்தைத் தீட்டியிருக்கலாம்”

“ஐயோ” 

“அவனோட பலவீனமே சமூக அந்தஸ்து மீதான பயம்தான். அதையே அவனுக்கு எதிரான ஆயுதமா மாற்றியிருக்கலாம்”

 “எப்படி?”

“பொதுவெளியில பகிர்ந்த படங்கள், வாட்ஸ்அப் செய்திகள், மருத்துவச் சான்றிதழ், பேட்டிகள்னு ஒவ்வொன்னா ஆதாரங்களை உருவாக்குறா. அவன் தப்பிக்க முடியாத அளவுக்கு அவன் உலகத்தையே அவனைச் சுத்தி ஒரு வலை மாதிரி பின்னறா”

“பின்னி?”

“அவன் சரணடைகிறான். அவளே அவனை மீட்கும் இரட்சகரா மாறி அடைக்கலம் குடுக்கறா”

“செம”

“ஒரு செஸ் ஆட்டக்காரன் காய்களை நகர்த்துற மாதிரி – திறமையாய் எழுதப்பட்ட ஒரு திரைக்கதை”

“அவள் வெற்றி பெற்றாள்.. சுபம்!”

“இது ஒரு ஊகம்தான்”

“என்னக்கா யூ டர்ன் அடிக்கறீங்க”

மறுபடி அந்தப் படத்தைப் பார்த்தாள் மாதவி. அந்தப் பெண்ணின் கை அவனின் கையை மிக இறுக்கமாகப் பற்றியிருந்தது.

“இந்த மாதிரி வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் சில பெண்களுக்கு ஒரு பிம்பம் மேல அதிக மோகம் இருக்கும்.. ‘எனக்கும் குடும்பம் இருக்கு. உங்களைப் போல எனக்கும் ஒரு இயல்பான வாழ்க்கை.. நான் உங்களைவிட மகிழ்ச்சியா இருக்கேன்’னு உலகத்துக்கு காட்டணும். அந்தப் பொய்யை நம்ப வைக்க எந்த எல்லைக்கும் போவாங்க”

“சாத்தியம்தான்”

“அல்லது நம்மால் ஊகிக்க முடியாத ஏதோ ஒன்றா இருக்கலாம்”

“அதுதான் என்ன?”

“அதுல ஒரு சுவாரசியமான கதை இருக்கலாம். கண்டுபிடி”

“எப்படி எழுதறது?”

“ஏற்கனவே கதை எழுதியாச்சே”

“ஐயோ.. யாரு”

“மீடியா, சமூக ஊடகங்கள்”

“அப்போ நான் என்ன செய்யறது?”

“நீயும் எழுது”

 “அக்கா.. க்ளைமாக்ஸ்?”

“எழுத்தாளரே.. நீங்கதான் யோசிக்கணும்.. நீங்க எந்தக் காரணத்த சொல்லப்போறீங்க.. அதைப் பொறுத்துத்தான் முடிவும். பரிசுப் பணத்துல பாதி எனக்கு வருமா?”

“முழுசாவே தரேன்.. கிடைச்சா!” தொலைவில், பால்கனியில் அவன் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான். தெருவில் பனியும் விளக்கொளியும் சிந்திக்கொண்டிருந்தன. காற்றில் மிதந்து வந்த வாசத்தில் அவள் நெருங்குவதை உணர்ந்தான். இருவரின் நிழல்களும் தெருவில் விழுந்தன. நடுவில் வெளிச்சமும் தெரிந்தது. 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button