
“ஏன் தற்கொலைப் பண்ணிக்கனும்னு நினைக்கிறீங்க” குவியம் மனநல ஆலோசக மையத்தின் டாக்டர் சிவசண்முகத்தின் அந்தக் குளிரூட்டப்பட்ட அறை மிகத் தூய்மையாக இருந்தது. பொருட்கள் சீராக வைக்கப்பட்டு இருந்தது. எனக்குக் கொஞ்சம் கூட தூசியோ, கலையாத பொருட்களோ இருக்கும் அறைகளும் வீடுகளும் ஒரு அசெளகரியத்தைக் கொடுக்கின்றன. ஆங்காங்கே கலைந்த, சுவரில் பிள்ளைகள் கிறுக்கிய கோடுகளும் வளைந்த எழுத்துகளும் லேசான தூசியும் ஒட்டடையும் உள்ள வீடுகள் ஒரு ஆசுவாசத்தை கொடுக்கின்றன. அதன் காரணத்தை என்னால் அறிய முடியவில்லை. என் கவனத்தை மருத்துவரின் குரல் வந்த திசை திருப்பியது.
“சொல்லுங்க சிந்துஜா. உங்களுக்கு ஏன் திரும்பத் திரும்ப தற்கொலை பண்ணிக்கனும் என்ற எண்ணம் வருது?”. நான் அவரையே உற்றுப் பார்த்தேன். அம்பத்தஞ்சு வயதை நெருங்குபவர். முன் வழுக்கை. இரண்டு டிராகுல்லா பற்கள் அவருக்கு. முதன்முறை ஆலோசனைக்கு வந்த அன்றைய இரவு, பாய்ந்து என் கழுத்தைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சுவதுப் போல அவரைக் கனவில் கண்டு அலறியது நினைவில் வந்து சிரிப்பை ஏற்படுத்தியது.
அவர் “சரி எப்போ முதல் தடவை வந்தது சொல்லுங்க” என்றார்.
“பத்தாம் வகுப்பு தேர்வின்போது” என்றேன். “ஏன் வந்தது” என்றார். “பெயில் ஆகிடுவேன்னு” என்றேன்.
“அதாவது ரிசல்ட் வரதுக்கு முன்னாடியே. சொல்லப்போனா பரீட்சையே எழுதல. அதுக்குள்ள பெயில் ஆகிடுவோம்னு நினைச்சு தற்கொலைக்குப் போயாச்சு அப்படித்தானே” என்றார். நான் “ஆமாம்” என்றேன். “ம், சரி இரண்டாவது தடவை எப்போ வந்தது அந்த எண்ணம்” என்றார். இதற்கு சிந்துவிடம் இருந்து பதில் வராது என்று டாக்டர் நன்கு அறிந்திருந்தார். அவரே “நீங்க நேசிச்சவங்க உங்க உறவு வேண்டாம்னு சொன்னதும் இல்லையா” என்றார். அவள் வேறு எங்கோ பார்த்தப்படி “ம்” என்றாள். “அன்னைக்கு என்ன நடந்ததுனு ஞாபகம் இருக்கா உங்களுக்கு”? என்றதும் டாக்டரை விழித்துப் பார்த்துவிட்டு அவள் “போனில் சண்டை போட்டோம். வாக்குவாதம் முற்றி இனிமே இந்த உறவே வேணாம். பேசவே கூடாதுனு சொல்லி அந்தப் பக்கம் போனை வச்சாச்சு” என்றாள். “நீங்க உடனே போனை வச்சுட்டு நேரா கிச்சனுக்கு போய் கத்தியை எடுத்து மணிக்கட்டை வெட்டியாச்சு” என்றார். சிந்து தலையை அசைத்தாள். அவளின் முகம் மெழுகு போல ஆகிவிடுவதை மருத்துவர் பலமுறை பார்த்து இருக்கிறார். தொடர்ந்து, “உறவுகளில் இந்த மாதிரி சண்டைகளும் கோபங்களும் ரொம்ப சாதாரணம். இனிமே நீ வேணாம், பேசமாட்டேன்னு சொல்றது எல்லாம் சகஜம் தானே. சிறிது நேரங்கழித்து பேசிப் பார்க்கலாம், தவறு உங்க மேல இருந்தா மன்னிப்பு கேட்டுச் சரி பண்ணலாம். கொஞ்சம் நிதானமா இருக்கலாம்னு ஏன் நினைக்கல. உடனே சாகனும்னு எதுக்கு நினைக்கிறீங்க சிந்து? யோசிச்சுப் பார்த்து இருக்கீங்களா”? என்றார்.
“ இல்லை. போன் கட் ஆனதும் உடம்புல ஒரு நரம்பு பதற ஆரம்பிச்சது. கொஞ்ச நேரத்துல மொத்தமும். அது எல்லாமே எனக்கு ஒன்னைத்தான் கட்டளை இட்டது. இனி இங்க இருக்கக்கூடாது. போய்டனும். அவ்வளவுதான்” என்றாள். “ம், எப்போ எல்லாம் இப்படித் தோணுது” என்றார். “என்னோட வழக்கமான பாதையிலே ஏதாவது சின்னதா மாறினாலோ, இடறினாலோ அப்படி ஆயிடுது. இப்போ வெயிலில் சுத்தமா காஞ்சுப் போனா, தடம் இல்லாம இருக்குற ஓடைகள் மழையில் வழிஞ்சு ஓடுதுல அது மாதிரி” என்றாள். சிவசண்முகம் “ஆனா அதை ஒரு செயலா மாத்தறது எப்பாவது. இதுவரை மூணுமுறை தற்கொலை முயற்சி பண்ணிருக்கீங்க சரியா” என்றார்.
அந்த அறையில் சிறிது நேரம் மெளனம் நிலவியது. டாக்டர் சிவசண்முகம் சிந்துஜாவை அவளுடைய இருபத்திரண்டு வயதில் இருந்து அறிவார். இந்த எட்டு வருடங்களாக அவளுக்கு மனநல ஆலோசகராக இருக்கிறார். முதன்முறை அவளைப் பார்க்குபோது மணிக்கட்டில் பெரிய கட்டுடன் வந்தாள். எப்போதும் கலங்கிக் கொண்டே இருக்கும் கண்கள். சிந்துவைப் பேச வைக்கவே சில வாரங்கள் ஆயிற்று. இரண்டு வருடங்களில் நல்ல முன்னேற்றம் இருந்தது. பொதுவாகத் தற்கொலை முயற்சிகளுக்கான காரணங்கள் என சிலது உண்டு. வாழ்வில் ஏற்படும் திடீர் இழப்பு, தாள முடியாத துயரம், கடக்க இயலாத அவமானம் போன்றவை. அவளுக்கும் உறவில் ஏற்பட்ட பிரிவும் துயரமும்தான் காரணம் என முதலில் எண்ணினார். ஆனால் சில கவுன்சிலிங்களுக்கு பிறகு அவர் ஒன்றை அறிந்தார். தற்கொலை எண்ணம் எப்போதும் அவளுள் இருந்தது. அதாவது அதைச் செய்வதற்கு அவளுக்குக் காரணம் தேவையில்லை. அன்றாடத்தை விட கூடுதலாக ஏதாவது நடப்பதே போதுமானதாக இருந்தது. அதை அறிந்தப் பிறகு அவர் அந்த எண்ணத்தை வேரில் இருந்து அகற்ற முயன்றார். எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. மூன்றாவது முறையாகப் பத்து தூக்க மாத்திரைகளைச் சிந்து விழுங்கும் வரை.
டாக்டர் மேஜை மேல் இருந்த ஜெம்ஸ் மிட்டாய் பாக்கெட்களில் ஒன்றைச் சிந்துவிடம் நீட்டினார். அவள் அதை அத்தனை ஆர்வத்தோடு வாங்கி பிரித்து மொத்தமாகக் கைகளில் கொட்டி அதன் வண்ணங்களைப் பார்த்து மகிழ்ந்தாள். பிறகு இரண்டை வாயில் போட்டுக்கொண்டாள். சிவசண்முகம் “உங்களுக்கு நல்ல அன்பான குடும்பம். சுற்றிலும் பிரியமான மனிதர்கள். கொண்டாட்டமான பள்ளிக்காலங்கள். இது எல்லாமே நீங்களே சொன்னதுதான். அப்படி இருக்கும்போது சாகணும்கிற எண்ணம் ஏன் வருது? அந்தச் சிடுக்கு எங்க தொடங்குதுனு தெரியுமா? என்றார். சிந்து அவரை முறைத்தாள். டாக்டர் சிரித்துக்கொண்டே “ என்ன, நான் டாக்டரா இல்ல நீங்க டாக்டரானு நினைக்கறீங்களா? நான் கண்டுபிடிச்சுச் சொல்லாம உங்களேயே கேக்குறேன்னு தோணுதா” என்றார். அவள் சிரித்தாள். அவரே தொடர்ந்து “மனுஷ மனசைப் பொறுத்தவரை அவனவன் மனுசுக்கு அவனேதான் முதல் மருத்துவர், முதல் மருந்து. அப்புறமாதான் மத்தவங்க எல்லாம். உங்க மனசும் அதன் சிடுக்களும் உங்களை விட யாருக்கு நல்லா தெரியும்னு நினைக்கிறீங்க. இப்போ உதாரணத்துக்கு ஒரு புகைப்படம் இருக்கு. அதில் தூசியும் அழுக்கும் படிஞ்சுப் போய் மங்கலா தெரியுது. அதைச் சுத்தமான துணியை வச்சு அழுத்தித் துடைச்சா க்ளியரா தெரிய ஆரம்பிச்சுடும். அதைத் துடைக்கிற கையும் துணியும் மாதிரிதான் டாக்டரும் மருந்தும். இப்போ சொல்லுங்க. எங்கே ஆரம்பம் இதெல்லாம்” என்றார். சிந்துவின் முகம் மிக தீவிரமாக மாறியது. அதைக் கண்டு அவரே “நான் சொல்லட்டுமா. வடிவு அம்மாச்சியிடம் இருந்துதானே” என்றார்.
எனக்கு ஒரு புகைப்படம். இல்ல, ஒரு உயிருள்ள முகம் தெளிந்து வந்தது. எழுபத்தஞ்சு வருட வாழ்வும் சுருக்கங்களாக முகத்திலும் உடம்பிலும் இருக்கும். வாயில் இரண்டே முன் பற்கள்தான். அந்த முகத்தில் பார்த்தச் சிரிப்பைப் போல அழகான ஒரு சிரிப்பை இதுவரை எங்கும் கண்டதில்லை. வடிவு அம்மாச்சி, சொந்த அம்மாச்சி இல்லை என்றாலும் உறவு முறையில் அவள் எனக்கு அம்மாச்சி. எனக்கு மட்டுமல்ல ஊர் முழுக்கவே அவள் எல்லோருக்கும் ஏதோ ஒரு உறவாக இருந்தாள். ஜாக்கெட் அணியாத வெள்ளை நிறச் சேலைதான் எப்போதும். லேசாகக் கூன் போட்ட உடம்பு. ஆனால், அவளுடன் சரிசமமாக யாரும் நடந்துவிட முடியாது. நடையில் அத்தனை வேகம் இருக்கும். கடும் உழைப்பாளி. தோட்டத்தில் ஏதோ ஒரு வேலையை எந்நேரமும் செய்து கொண்டிருப்பாள். மூன்று மகன்கள், ஒரு மகள். பேரன் பேத்திகள் பத்தோ பன்னிரண்டோ. அவர்தம் பிள்ளைகளும் வந்தாகிவிட்டது. தாத்தாவை நான் பார்த்ததே இல்லை. பெரும்பாலும் தோட்டத்து வீட்டில் தனியேதான் இருப்பாள் அம்மாச்சி. பள்ளி விடுமுறை நாட்களில் ஊரில் இருக்கும் பிள்ளைகள் மொத்தமும் அங்கேதான் கொட்டகை. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் என்னை ஏதாவது பழைய புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச் சொல்லிக் கேட்பாள். ஊருக்குள் இருக்கும் மகன்கள் வீட்டில் வருடத்தில் ஒன்றிரண்டு முறை தங்குவாள். மகள்தான் அவ்வபோது வந்து அழுவாள். அவளுக்கே பாதி பற்கள் இருக்காது. அரையாண்டு விடுப்பு முடிந்து நாங்கள் பள்ளிக்குத் திரும்பும் நாளில் வடிவு அம்மாச்சி பூச்சி மருந்தைக் குடித்துச் செத்துப்போனாள்.
டாக்டரின் மூக்கு கண்ணாடியின் விளம்பில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் “அப்புறம் என்னாச்சு” என்றார். “ஊரில் பெரிய சாவு என்பதால் ஒரே பரபரப்பு. பஞ்சாயத்துக் கூடி போலீஸ்க்கு வெறுமே ஒரு தகவலை மட்டும் சொல்லி அனுப்பினார்கள். அம்மாச்சியின் வயசை நினைத்து கேஸ் விசாரணை என எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதனால ஈமச்சடங்குக்கான வேலைகள் விறுவிறுன்னு தொடங்கியது. அங்கிருந்த சின்ன பிள்ளைகளை முதலில் வீட்டிற்குத் துரத்திவிட்டார்கள். அம்மா என்னை அண்ணனுடன் வீட்டிற்கு அனுப்பிவிட்டாள். சாயந்தரம் எடுக்கும்போது வந்தால் போதும்னு சொன்னதால் நான் வீட்டிற்குப் போனதும் கொஞ்ச நேரத்திலேயே தூங்கிவிட்டேன். எழுந்தபோது இருட்டிவிட்டது. விழித்ததும் வந்த முதல் ஞாபகமே அம்மாச்சியின் முகம்தான். அழ ஆரம்பித்த என்னை அம்மா சமாதானம் செய்தாள். மறுநாள் காலையில இருந்து மூணு நாலு நாட்களுக்கு எனக்குக் காய்ச்சல் அடித்தது. எல்லாம் சரியாகி மறுபடியும் நான் ஸ்கூல் போக ஆரம்பித்தபோது ஊரில் எல்லாம் பழையபடி ஆகிவிட்டது. நான் அதுக்கு அப்புறம் தோட்டத்துப் பக்கமே போகல. பிறகு என் படிப்பு விளையாட்டுனு நானும் சகஜமாகிட்டேன்” என்றாள் சிந்து. டாக்டர் சிவசண்முகம் அவளையே கவனித்துக் கொண்டிருந்தார். மேலும் அவள் “ஆனால், உள்ளே ஒரு கேள்வி என்னை அறியாமலே வளர்ந்துட்டே இருந்தது. அம்மாச்சி ஏன் தற்கொலை பண்ணிக்கனும் அதுவும் இந்த வயசுல? எனக்குத் தெரிஞ்சு அவங்களுக்கு யார் மேலேயும் கோபமோ வருத்தமோ கிடையாது. சோகமா அழுதோகூட நான் பார்த்ததில்லை. நல்லா ஆரோக்கியமா இருந்தவங்க. முதல்நாள் சாயந்தரம் வரை தென்ன ஓலையக் கீறிக்கிட்டு அவங்களுக்குப் பிடிச்ச, தெரிஞ்ச ஒரே படமான மண்வாசனையில் வர்ற பழமொழிகளை எங்களோட பேசிச் சிரிச்சுட்டு இருந்தாங்க. அன்னைக்கு இராத்திரி என்னன்னு தோணி இப்படிப் பண்ணாங்க. எது அவங்களை அந்த முனைக்கு இட்டு போனது? இந்தக் கேள்வி எல்லாம் என்னை அரிக்கத் தொடங்கியது” என்றாள்.
டாக்டர் “ வடிவு அம்மாச்சி மேல அப்படி என்ன பிரியம்? ரொம்பப் பிடிக்குமா?” என்றார். சிந்து தலையை ஒரு பக்கமாகச் சாய்த்தவாறு “பிடிக்கும்தான். ஆனா இந்த அலைக்கழிப்பு அன்பு சார்ந்தது மட்டுமில்லேனு நினைக்கிறேன். ஏன்னா அம்மாச்சிக்கு முன்னாடியும் பின்னாடியும் நான் நேசிச்சவங்களோட சாவைச் சந்திச்சு இருக்கேன். அம்மாச்சி சாவை விட அது நிகழ்ந்த விதம், அந்த வயசுல அவங்க தேடிக்கிட்ட வழி அதுதான் என்னோட சிடுக்களுக்குக் காரணம். பதினாலு வயசுல இத்தனைத் தீவிரமா யோசிக்காவோ அதை வெளியே பகிர்ந்துக்கவோ எனக்குத் தெரில. ஆனா ஒரு சின்ன சிலந்தி தன்னோட முதல் ஒட்டடை மாதிரியான வலையைப் பின்ன ஆரம்பிச்சது அங்கதான்னு தோணுது.
பின்னிப் பின்னிக் கடைசில அதிலேயே மாட்டிகிட்ட ஒண்ணு” என்றாள்.
“ரொம்ப சரியா சொல்லிட்டீங்க சிந்து. அம்மாச்சி இயற்கையா செத்துப் போய் இருந்தா உங்களுக்குப் பிரச்சனையில்லே. தற்கொலைதான் பிரச்சனை. ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க மரணம் மாறாதது. ஆனா அது நிகழும் விதம் நாம கணிக்க முடியாதது. ஆதிஷேசனுக்கு ஆயிரம் நாக்கு மாதிரி அதுக்குப் பல்லாயிரம் வழிகள். எந்த நாவு வந்து எப்போ தீண்டி அது நிகழும்னு யாரும் சொல்ல முடியாது. அம்மாச்சி மனசுக்குள்ள என்ன இருந்தது எது காரணம்னு நமக்குத் தெரியாது. இப்போ அதைத் தெரிஞ்சுக்க வேண்டிய காலமும் தாண்டிப் போய்டுச்சு. இங்க தெரிஞ்சுக்க வேண்டியது ஒரு பக்க அளவு இருந்தா, தெரிஞ்சுக்க தேவையில்லாதது பல பக்கங்கள் இருக்கும். அதனால நாம ஒட்டுமொத்தமா ஒண்ணைத் தெரிஞ்சுப்போம். சிலநேரங்களில் பெரியதை ரொம்ப சுலபமா புரிஞ்சுக்கலாம். இப்போ நெருப்புனா எல்லா உயிருமே அஞ்சும். ஆனா விட்டில் பூச்சிகள் தானாகவே அதுல போய் விழும். ஏன்னா அதோட டிசைன் அப்படி. அம்மாச்சி போல சிலர் அப்படி ஒரு விருப்பத்தோட இறப்புல போய் விழுறாங்க. அது ஏன்னு கேட்டா அறிவியல் ரீதியா ஒரு பதிலை நான் உங்களுக்கு நிச்சயமா சொல்ல முடியும். ஆனா அது மட்டும் உங்களுக்குப் போதாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா கொஞ்ச நாளிலேயே நீங்க திரும்ப சிடுக்களுக்குச் செல்ல வாய்ப்பு உண்டு. அதனால கொஞ்சம் தத்துவமாகவும் ஆன்மீகமாகவும் சொல்கிறேன். இறப்பு நம்ம கூடவே பிறந்து வளர்கிற ஒன்று. அது தன்னோட வேலையை இடப்பட்ட ஆணையை ரொம்ப சரியா நிறைவேத்திடும். அது ஒருபோதும் பிறழாது. இது நம்ம எல்லோருக்கும் நல்லா தெரியும். பிரச்சனை என்னன்னா தற்கொலை சாவுகளில், சுற்றி உயிருடன் இருக்கும் அனைவரையுமே குற்றவாளியா ஆக்கிட்டுப் போய்டுறதுதான். உங்க விஷயத்துல நடந்தது அதுதான். அது தேவையில்லாதது சிந்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதை. மரணத்தின் நாவு தீண்டும்போது தீண்டட்டும். அதுவரைக்கும் இங்க இருக்கிற சின்ன சின்ன காரியங்களில் ரொம்ப சின்ன சின்ன சந்தோஷங்களைப் பாருங்க. வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா பெரிய காரியங்களையும் அதுவே பார்த்துக்கும். நாம சின்ன சின்னதைக் கவனிச்சுகிட்டா போதும். குட்டி வெற்றிகள், கொஞ்சமா அழுகை. ஒருநாளை அழகாக மாற்ற சாலையோரத்தில் இருக்கும் பெயர் தெரியாத ஒரு சின்ன பூ போதும் சிந்து. ஒரு தடவை நீங்க மண்புழு பாருங்க. அது தன் வாழ்நாளை நீட்டிக்க என்னவெல்லாம் செய்யுதுனு. அப்போ தெரியும் வாழ்வுனா என்னன்னு. உடனே அதைச் செய்யனும் இதைச் செய்யனும் உலகைப் புரட்டி போடுங்கனு சொல்லமாட்டேன். தும்பைப்பூவின் ஒரு துளித் தேன் அளவுக்கே இனிமை இருந்தாகூட போதும் இந்த இருத்தலுக்கு. இருங்க. இங்க இருங்க சிந்து” என்றார்.
ரொம்ப நேரமாக ஏசியில் இருந்ததால் வெளியே வந்ததும் வெயில் எரித்தது. பிறகு மெல்ல சூடு பழகியது. காத்திருந்த அப்பாவைத் தேடினாள். அவர் சாலையின் மறுபுறத்தில் உடல் முழுக்கச் சொறி பிடித்து அழுகத் தொடங்கி நகர முடியாமல் படுத்திருந்த நாய்க்கு பன்னை பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தார். அது தன் மொத்த உயிர் விசையையும் அந்த பன்னை சாப்பிடுவதற்கு உபயோகித்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தவள் தானும் சாலையைக் கடந்து மறுபுறம் சென்றாள்.



