இணைய இதழ் 128சிறுகதைகள்

சென்னையில் ஒரு கிராமத்துக்காரி – இயற்கையின் ரசிகை

சிறுகதைகள் | வாசகசாலை

விடாத மழை நின்றபாடில்லை. இரண்டு நாட்களாகக் கிளம்பிக் கிளம்பி சென்னை போக முடியாமல் வாடிப்போனாள் வசந்தி.

“சார் சென்னைப் போக பஸ் இருக்கிறதா?” அந்தப் பக்கம் அலைபேசியில் யாரோ பேசினார்கள்.

“பாலம் உடைந்து ரோடெல்லாம் தண்ணீர். பஸ்ஸெல்லாம் வேறு பக்கத்தில் மாற்றியிருக்கிறார்கள். இப்போதைக்குச் சரியாகாது மேடம். நாளைக்குத்தான் நீங்க போகலாம்”

“நன்றி சார்”

கைப்பேசியை அணைத்துவிட்டு தன் பயணக்கோலத்தைக் கலைத்து பட்டிக்காட்டுக்குத் திரும்பி உடை மாற்றி வெளியில் வந்து வானத்தைப் பார்த்தாள். அது அடுத்த மழைக்குத் தன்னைத் தீவிரமாய் தயார்ப்படுத்தியது.

‘கிளம்புவதற்குள் இவ்வளவு சோதனையா? மல்லுக்கட்டி வாங்கிய வேலையும் நான் அங்குப் போய்ச் சேர்வதற்குள் உன்னால் போயிரும்போல. கொஞ்சம் எனக்காகக் கருணைக் காட்டு ப்ளீஸ். பஸ்ல போய் உட்காரும் வரைக்குமாவது கொஞ்சம் வராமல் இரு. அப்பறம்கூட அடிச்சி ஊத்து, பரவாயில்லை’ என்று தூங்கச் சென்றாள்.

எப்போது விடியும் என்ற பயணப் பதற்றத்தில் பாதி இரவு தூங்காமலேயே விடிந்துவிட்டது அவளுக்கு. கண்கள் சொக்கி, தூங்கிய கொஞ்ச நேரத்தில் ‘கொக்கரக்கோ’ அலாரம் அடித்தது.
‘இப்படியொரு நிம்மதியான தூக்கத்தை எழுப்பி எறிந்துவிட்டு, எதற்கு இப்படியொரு சென்னை? வேண்டாம், வேற வேலைய பார்த்துக்கலாம். பரவாயில்ல, தூங்கு’ என்றது ஒரு மனது.

‘அடியே தூக்கக்காரி, நீ வந்து சேர்றதா சொன்ன திங்களும் போய், டைம் கேட்ட புதனும் போயிரும் போலடி.  இப்ப தூங்க நல்லா இருக்கும். கொஞ்சம் விடிஞ்சதும் இந்நேரம் போயிக்கலாம்னு பீலிங்ஸ் வரும். தொலைஞ்சி போனவளே எழுந்து தொலடி’ என்று அவசரப்படுத்தியது இன்னொரு மனது.


எப்படியோ தூக்கத்தைத் தியாகம் செய்து, அடித்துப் பிடித்து ஒரு டிராலி பெட்டியையும் இரண்டு கருப்பு கைப் பைகளையும் சாக்கடையெல்லாம் கலந்து நிரம்பிக் கிடந்த மழை நீருக்குள் தட்டுத் தடுமாறி எடுத்து வந்து சென்னை பஸ்ஸில் ஏறிவிட்டாள் வசந்தி. மழையால் பேருந்து நிரம்பவில்லை; மனித வெள்ளத்தில். பெட்டி பைகளையெல்லாம் மேலே வைத்துவிட்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள்.

அப்பாடா! ஃபைனலி கால்வாசி கடலைத் தாண்டிவிட்டேன். பஸ் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினால் நலம். மழை, சாக்கடை, மூத்திர நாற்றங்கள் எல்லாம் சேர்ந்து குடலை வெளியே இழுத்துத் தள்ளிவிடும் போல. புதன் கிழமை வேறு அலுவலகம் கட்டாயம் வந்துவிடுவதாகச் சொன்னேன். பின்பு வார்த்தை தவறிய பாண்டிய மன்னனைப்போல விழுந்து இறக்காமல் இருக்க பஸ் போனால்தானே. இது அசையாமல் நிற்கிறது. வாந்தி எடுத்து எடுத்து வசந்தினு வச்ச பேரு வாந்தியா மாறிரும் போலயே. எப்ப எடுப்பார்களோ இந்த பஸ்ஸை தெரியவில்லை.

சிறிது நேரத்தில் கிளம்பியது பஸ். சிறு சிறு தூறலாய் மழை. ஊரை விட்டுப் போகிற கனம் அவளது  மனதில் செடியில் பூத்த சிறிது நேரத்திலேயே பூக்களைப் பறித்த நிராகரிப்பைப் போல. மீண்டும் வானத்தைப் பார்த்தாள் வசந்தி.

‘ம்ம்ம்.. சொன்னது போலவே இவ்வளவு நேரம் வராமல் இருந்தாய். அதனால் நன்றி உனக்கு. இனி பிரச்சனையில்லை. நான் பஸ்சுக்குள் வந்துவிட்டேன். உன் இஷ்டம்போல அடித்து ஊத்து. நான் போயிட்டு வருகிறேன்’

கொஞ்சம் கொஞ்சமாக கிளாம்பாக்கத்தை  நெருங்கியது அவளது பேருந்து. சென்னை புதிது அவளுக்கு. சிக்னலெல்லாம் கடக்கத் தெரியாது. அவளோடு சேர்த்து அதீதப் பெட்டி பாரங்கள் வேறு. இதோடு சாலையைக் கடப்பது பெரிய சவாலாக இருந்தது. பக்கத்தில் நின்ற இளைஞனிடம் கேட்டு கோயம்பேடு பஸ்ஸில் அமர்ந்தாள்.

வடபழனியில் தங்கும் அறை. அண்ணா நகர் கிழக்கில் அலுவலகம். தினமும் மெட்ரோ. எல்லாமும் புதிது அவளுக்கு.

புதன் கிழமை வந்துவிட்டது. அடித்துப் பிடித்து அரும்பாக்கம் மெட்ரோவிற்கு நடந்தாள் அவள். வாகனங்கள் ஈக்கள் மாதிரி பறந்தன.

‘அடியேய்! இந்த அவசர உலகத்தில் எப்படி உன்னால் சமாளிக்க முடியுமா?’

‘பார்க்கலாம் இப்பதானே அரும்பாக்கம் மெட்ரோவையே கண்டு பிடித்திருக்கிறேன். உள் உள்ளுக்குள் போனால்தானே அடுத்த கூத்து என்னவென்று தெரியும். வருவேன் என்று சொல்லிவிட்டேன். போகத்தானே வேண்டும்’

சென்னையில் மனிதர்களோடு பேசுவதைவிட மனசாட்சியோடு அதிகம் பேசினாள் வசந்தி.

அரும்பாக்கம் மெட்ரோவிற்குள் நுழைந்தாள்.

‘அடடடடா! என்ன அழகு மெட்ரோ ஸ்ட்டேஷன். இதுல எங்கப் போயிட்டு என்ன செய்றதுனே தெரியலியே? வழிய கண்டுபிடிக்கிறதுக்குள் ஆபிஸ் முடிஞ்சிருமோ?’

‘இல்ல சமாளிக்கலாம்.’

வேற வழியில்லையென்று ஓரமாய் நின்று பார்த்தாள். வேகமாய் ஓடியது நேரமுள். அலுவலக நேரம் ஒன்பதைத் தாண்டி. எல்லாம் தெரிந்தவளைப் போல டிக்கெட் வாங்கி முன்னால் இருப்பவர் செய்வதைப் பார்த்து ஸ்கேனில் வைத்து எப்படியோ அந்தப் பக்கம் போனாள். எல்லாம் அவசர அவசரமாக ஓடினார்கள். கொஞ்சம் பேர் எஸ்குலேட்டரில். யாரோ ஒரு சிலர் படிக்கட்டுகளில்.

‘ பத்து மணி ஆகப்போகுது. ட்ரெயின் வர்ற பக்கம்கூட எனக்கு தெரியல. இன்று ஆபிஸ் வாசல்லயே பாண்டிய மன்னன் போலதான். சத்தம் கேட்குது ட்ரெயின்தான்’

கதவுக்கு மேல் எழுதி இருக்கிறது. ஸ்பீக்கரில் நிறுத்தத்தைச் சொல்கிறார்கள். ஆனாலும்  பதற்றத்தில் அண்ணாநகர் கிழக்கு இறங்குவதற்கு, அண்ணாநகரில் இறங்கி ஆட்டோ பிடித்து அலுவலகம் நுழைகையில் பதினொரு மணி.

சென்னை புதிதென்ற மன்னிப்பு.
இப்படி வழிதெரியாமல் நடந்த தெருவிற்குள்ளே திரும்பத் திரும்ப நடந்து,  நிறுத்தம் மாறி மாறி இறங்கி, எஸ்குலேட்டரில் முதல் காலை எப்படி எடுத்து வைப்பதென்று தெரியாத வெட்கத்தில் கால் வலிக்க வலிக்கப் படிக்கட்டில் ஓடி, ரேபிடோ ஆட்டோக்காரனிடம் பணத்திற்காக சண்டையிட்டு, தேன் காரனிடம் சர்க்கரைப் பாகை வாங்கி ஏமாந்து… இப்படி அவள் கொஞ்சம் கொஞ்சமாக சென்னையைக் கற்றாள். ஆனாலும் இன்னும் அவளை அந்த மெட்ரோ புறாக்கள் மட்டும் பயமுறுத்திக்கொண்டேயிருக்கின்றன, ட்ரெயின் கிட்டத்தில் வரும் வரைக்கும் பறக்காமல் தண்டவாளத்தில் அமர்ந்து.

_____________________

@இயற்கையின் ரசிகை (9791365811)
இலங்கைத் தமிழர் முகாம்,
கொண்டம், மருத்துவாம்பாடி அஞ்சல்,
திருவண்ணாமலை.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button