இணைய இதழ் 128சிறுகதைகள்

ஒரு ராணிக் கதை – ந.சிவநேசன்

சிறுகதைகள் | வாசகசாலை

இப்படி ஒரு சூழ்நிலை ராசாவுக்கு வரும்னு யாரும் கனவுலகூட நினைச்சிப் பாக்கல. இந்தப் பரம்பரை, இந்தத் தேசத்தைக் கட்டியாள ஆரம்பிச்சு எத்தனை வருசம்.. வருசம்னு சொல்றதே முதல்ல சரியான வார்த்தை இல்ல. எத்தனை யுகம் ஆச்சுன்னு யாருக்கும் தெரியாது. சின்னப் புள்ளைங்கள கேட்டா ராசாவோட பாட்டனுக்கு பாட்டனுக்கு பாட்டனுக்கு பாட்டனுக்கு…னு சிரிச்சிக்கிட்டே ஒப்பிக்கும்ங்க. அப்படியொரு வேரு ஊன்றிப்போன வம்சம் ராசாவோடது. அப்படிப்பட்ட ஒரு ராசாவுக்கு இப்படியொரு பரிதாபமான நிலைமையானு எல்லோருக்கும் பாவமா போச்சு.

ஆனா இதுல என்ன ஒரு வேடிக்கைனா இந்தத் தேசத்துல மட்டும்தானா, இல்ல ஈரேழு உலகத்துத் தேசத்துக் கதைலயும் இதே நிலைமைதானானு தெரியல. காலங்காலமா ஒரு கொடும்பாவிக்கிட்ட சிக்கி கோளாறான வாழ்க்கை வாழ்ந்தாலும் அவன் செத்ததுக்கப்புறம் எப்படித்தான் அவன் மேல ஒரு இரக்கம் வருதோ இந்த சனங்களுக்கு. ‘அட‌.. போனது போகட்டும்பா.. என்னதான் இருந்தாலும் அவரு நம்ம நாட்டு ராசால்ல..’னு சொல்லி கதைய முடிச்சுப்புடுறாங்க. ஆனா இந்த ராசாக் கதைலாம் அப்படி உடனே மறந்துட்டு மண்ண போட்டு மூடுற அளவுக்குச் சாதாரணமான கதையா?

ராசாமாருங்க பண்ற வேலைலாம் சாதாரணமான விஷயம் இல்ல. சொல்லச் சொல்ல மலை மாதிரி குமிஞ்சிக்கிட்டே போகும். சரி. நாம இப்ப நடக்குற விவகாரத்துக்கு வருவோம். ராசாக்கூட சேர்ந்து சாவ ஒரு துணைப் பொணம் வேணும். இணைப் பொணம்னும் சொல்லலாம். அதுதான் இப்ப சங்கதி. அதுக்கு வழித் தெரியாமத்தான் மந்திரிமாருங்க, சின்ன ஜமீன்காரங்க, அரண்மனை மூத்த சோசியரு, இளைய சோசியரு, புரோகிதம் படிச்சவுங்க, அங்காளி பங்காளி, மாமன், மச்சான் உறவுக்காரவுங்கனு எல்லாருமே தடுமாறிக்கிட்டு கிடக்குறாங்க. போன தை மாசம் கடைசி வரைக்குமே ராசா நல்லாத்தான் இருந்தாரு. வடக்கு மலைக்கு வேட்டைக்கு கிளம்பினப்பவே சகுனம் சரியில்லனு மூத்த சோசியரு தடுத்துப் பாத்துருக்காரு. நம்ம ராசாவுக்குள்ள பிரச்சினை என்னனா எத வேணாம்னு சொல்றமோ அதையே செஞ்சிப் பாக்கணும்னு ஒரு பிடிவாதம்.

“போனா என்னா நடக்கும்?”னு கேட்டாரு.

“சாமி.. உசுருக்கே கண்டம்னு கட்டம் சொல்லுது. அமாவாசை பாட்டியமா வேற இருக்குது. ரெண்டு நாள் கழிச்சு புறப்படலாம்ல”

“நான் வேட்டைக்குப் போறது பகல்ல. அமாவாசை இருட்டு கிளம்புறது ராத்திரில.. எனக்கு என்ன பங்கம் வரப் போவுது?”னு சிரிச்சாரு ராசா.

மூத்த சோசியர் அதுக்கு மேல எதுவும் பேசல. பேசுனா என்ன நடக்கும்னு அவருக்குத் தெரியும். எகனை மொகனையா கேள்வி கேட்டு குறுக்குசால் ஓட்டுறதுல ராசா வில்லங்கமான ஆளு. கடைசில வேற வழி இல்லாம ஆமான்னு ஒத்துக்கிட்டு சோசியரே ராசாக்கூட கிளம்பி வேட்டைக்கு போற மாதிரி நிலைமை ஆகிப்போய்டும்னு எல்லாருக்குமே தெரியும்.

ராசா இப்படிலாம் சோசியத்த நம்பாம பேசுறதால அவர முற்போக்கான ஆளுனு நினைச்சிட வேணாம். ராசா அந்தப் பக்கம் வேட்டைக்கு கிளம்புனதும் சோசியக்காரரு இந்தப் பக்கம் கிளம்பி காளியாத்தா முன்னாடி உட்கார்ந்து அழாத குறையா வேண்டிக்கிறாரு.

“ஏ.. பெரியாத்தா.. கட்டத்துல உள்ளததான் சொல்லியாச்சு. அந்தாளு கேட்காம வேட்டைக்கு ஓடுறாரு. அவரு உசுருக்கு எந்தப் பாதகமும் ஏற்படாம திரும்பி வந்துட்டாருன்னா நீ கேட்குற பலிய குடுக்கச் சொல்றேன்டி ஆத்தா”னு கேவுறாரு.

விஷயம் தெரிஞ்ச சிஷ்யப் புள்ளைங்க வாயப் பொத்திக்கிட்டு சிரிக்கிறாங்க. ஏன்னா அப்படிப் போன இடத்துல ராசாவுக்கு ஏதாவது குறை ஏற்பட்டுப்போச்சுனா… அதாவது அங்கேயே மூச்சு பேச்சில்லாம செத்துத் தொலைஞ்சிட்டா பரவால்ல. ஒருவேள குத்துயிரு கொலையுயிரா திரும்பி வந்தா, ‘இந்தச் சோசியக்காரன் வாய் வச்சதாலதான் எனக்கு இப்படி ஆயிடுச்சு’னு மொத வேலையா சோசியர தூக்கி சிறைல போடச் சொல்லி கட்டளை பறக்கும். அதுவும்  சோசியரோட குடும்பம், குட்டி, தொடுப்பு வரைக்கும் தேடிப்புடிச்சி அடைக்கிற வேலை வேகமா நடக்கும். அப்புறம் ராசா உடம்பு தேறி வந்து நல்ல எண்ணத்துல இருக்கும்போது யாராவது சோசியரோட நிலைமையப் பாத்து பரிதாபப்பட்டு ராசாகிட்ட விளக்குனாதான் வெளிய வர வாய்ப்புண்டு.

ஏற்கனவே தந்தோசி மகாராசா சண்டைக்கு வந்தப்ப இதே கொடுமைதான் நடந்துச்சு. சோசியரு ‘சமாதானமா போலாம்’னு சொல்ல, ‘நான் போயே தீருவேன்’னு ராசா கிளம்பிப் போக, அங்க நடந்த சண்டைல தந்தோசி மகாராசா நம்ம ராசாவ குறுக்குலயே உதைச்சி வீட்டுக்குத் துரத்த, இங்க வந்த ராசா அந்தக் கோவத்த சோசியர் மேலக் காட்ட, போன மாசம்தான் சோசியர் சிறைல இருந்து வெளியவே வந்தாரு. அதுக்குள்ள திரும்ப உள்ள போவணுமானு பீதியில இப்ப காளி முன்னாடி உக்காந்துருக்காரு.

ஆனா நல்லவேளையா வேட்டைக்குப் போன ராசாவுக்கு வாய் பேச முடியாத அளவுக்கு ஜுரம் வந்து பாதி வழியிலயே செத்துட்டதால சோசியரு தப்பிச்சாரு. இப்ப ஒரு துணைப்பொணம் வேணும். கட்டைல வச்சி எரிக்கையில எம் புருசனே என் உசுருனு கையெடுத்து தொழுதுக்கிட்டே வந்து நெருப்புல எறங்கணும். அதுக்கு ஒரு ராணி இல்லாம தனியா கிடக்குற ராசாவப் பாத்து ஆம்பளைங்களுக்குலாம் துக்கம்; பொம்பளைங்களுக்குலாம் வெளிய சொல்ல முடியாத அளவுக்குச் சந்தோசம்.

வெள்ளைக்காரனுங்க வந்து எவ்வளவு தீட்டிக்கிட்டுப் போனாலும்கூட ‘பாரு எனக்கும் மனசு இருக்குது’ன்னு திறந்து காட்டுன நல்ல விஷயத்துல இதுவும் ஒன்னு. இப்படி ஒரு தகவல முரசறைஞ்சி ஊருக்கே சொன்ன நாளு நல்லா ஞாபகத்துல இருக்கு. ஐப்பசி பதிமூனாம் தேதியோட ஒரு வருசம் ஆச்சு.

“இதனால சொல்லிக்கிறது என்னான்னா இனிமே ராசாமாருங்க, மந்திரிமாருங்க, ஜமீன்தாருங்க, பெரிய பண்ணையக்காரங்க, சின்ன பண்ணையக்காரங்க, ஊராளு, நாட்டாளுனு எந்த ஆம்பளைங்க செத்தாலும்கூட பொம்பளைங்கள போட்டு எரிக்கக்கூடாதாம். சாமி தரிசனமோ, சொர்க்க தரிசனமோ எத பண்ற மாதிரி இருந்தாலும் மேல போய் தனியாவே பண்ணிக்கிறதாம். தொழுது முடிச்சி சொர்க்க வாசல்லயே உக்காந்து காத்துட்டு இருக்குறதாம். அவங்கவுங்க பொம்பளையாளுங்க அவங்களுக்கு தோனுறப்ப ஆற அமரத்தான் சாமி பாக்க வருவாங்களாம். யாரையும் கட்டாயப்படுத்தி மேல கூப்பிடக்கூடாதாம். அப்பிடிக் கூப்பிட்டா சட்டப்படி கடுமையான தண்டனை தருவாங்களாம். ராசாவோட எடுப்பு, தொடுப்பு, ஏப்ப சாப்ப, வலது கையி, நொட்டாங் கையி, மந்திரிமாரு, அப்புறம் இந்த அநியாயத்த வேடிக்கப் பாத்தவன்னு பூராப்பயலுவளும் சிறைக்கு போயி களி திங்கணும்னு துரைமாருங்க கட்டாயமா சொல்லிப்புட்டாங்க……”

தண்டோரா போடுறவன் சொன்னத இப்படி கொஞ்சம் மாத்திப் பேசி பொம்பளைங்க பூராம் கொளத்துக்கரையில, ஆத்தங்கரையில சிரிச்சிக் கிடக்குறத பாத்து பூரா பயலுவளுக்கும் வயிறு எரிஞ்சுது. ஆனா என்ன பண்ணித் தொலைய.. ஆயிரம் பொணச் சுருட்டு, பித்தலாட்டம் பண்ணாலும் இப்படி ஏதாச்சும் நடுவுல நல்லது பண்ணிடுறானுங்க. அதுவும் பொம்பளைங்க உசுரு சம்பந்தப்பட்ட விஷயம்னா சும்மாவா? ஒட்டுமொத்த தாய்க்குலங்களோட ஆதரவும் துரைமாருங்களுக்குதான் இந்த விஷயத்த பொறுத்த வரைக்கும். துரைமாருங்களோட ஆளுங்கள ஒவ்வொரு சமஸ்தானத்துக்கும் ரெஜிமெண்ட்ங்குற பேருல உக்காத்தி வச்சிருக்காங்க. அதாவது நீ என்ன சுருட்டுனாலும் அதுல எங்களுக்கும் பங்கு வந்துடணும்னு சொல்றதுக்கோசரமே உக்காத்தி வச்சிருக்காங்க. அந்த ஆளுங்ககூட ராசா செத்ததுல இருந்து அடிக்கடி வேவு பாக்க வராங்க.

அவங்கள மீறி பொம்பளைய பிடிச்சி நெருப்புல தள்ளிடவும் முடியாது. சில தேசத்துல இன்னும் சில ராணிங்க உண்டு. ‘ஐயோ நான் ராசாவ உட்டுட்டு இருக்கமாட்டேன். அவருகூட கைலாசம் போயிடுறேன்’னு வம்படியா போய் நெருப்புல விழுவுற ராணிங்கள ஒன்னும் பண்ண முடியாம தலையில அடிச்சிக்கிட்டே போற துரைமாருங்க இந்த மாதிரி தானா முன்வந்து விழுந்தா வேணா போனா போவுதுனு சடங்கு செய்யுறவங்கள விட்டுட வாய்ப்பு இருக்கு.

இப்ப அரண்மனை மந்திரிமாருங்க, சோசியரு, மூத்த காரியதரிசிங்கலாம் அந்த கருத்ததான் கெட்டியா பிடிச்சிட்டு நிக்கிறாங்க. அதாவது நாங்களா வற்புறுத்தி விழச் சொல்லல. அவங்களாவே விருப்பப்பட்டு போய் ராசாவோட சிதைல விழுந்தா நாங்க என்ன பண்ண முடியும்னு துரைமாருங்க விசாரிக்க வந்தா கைய விரிச்சிடலாம்னு ஒரு நப்பாசை. ஆனா அதுக்கு ராசகமலம் ஒத்துக்கணுமே? அவங்கதான் ராணி. ‘என் புருசன் ஞாபகத்துலயே நான் இன்னும் கொஞ்சக் காலம் வாழ்ந்துக்குறேன்’னு முகத்த கோணி நாக்கத் துருத்தி கதவ பட்டுனு சாத்திக்கிட்டாங்களே? என்ன பண்ண முடியும்னு யோசிச்சப்பதான் யாரோ ஒரு வேலையத்த மந்திரி அந்த யோசனைய சொன்னாரு.

“ராணி போனா என்ன? அந்தபுரத்துல பொம்பளைங்களா இல்ல? ராணி அந்தஸ்துல சாகுறதுனா சும்மாவா? அவங்க போனாலும் அவுங்க குடும்பத்துக்கு ராஜ கவுரத குடுத்து நல்லா பாத்துக்குவோம்னு எடுத்துச் சொல்லுவோம். இத வச்சி அடுத்தடுத்த நிலைல இருக்குற பொண்ணுங்களுக்கு வலை வீசிப்பார்ப்போம்”

எல்லாருமே கோதாவுல குதிச்சித் தேட ஆரம்பிச்சாங்க. அந்தப்புரத்துல இருந்த அத்தனை பொம்பளைங்ககிட்டயும் இந்த அறிவிப்பச் சொன்னாங்க. ஆனா ராணி மட்டும் மூடுன கதவத் திறந்து என்னா ஏதுனு கேட்கல. ராணி ராசக்கமலத்த ஒன்னும் பண்ண முடியாதுனு எல்லா ஆம்பளை ஆளுங்களுக்கும் தெரியும். ஏன்னா அவுங்க செல்வாக்கு அப்படி. நாட்டு சனங்களுக்கே அவுங்க மேல பாசம் அதிகம். ராணியோட உளவுப் படைல இருக்குறவன் எப்ப எங்க வெடிப்பான்னு யாருக்கும் தெரியாது. அதனாலேயே விருப்பம் இல்லனு ஒதுங்கிக்கிட்டவங்கள சீண்ட யாரும் விரும்பல. ஆனா இங்க தொணப்பொணம் தேடுனா எல்லாருமே ராணி பக்கம் நிக்கிறாங்க.  நான் நெருப்புல குதிக்கமாட்டேன்னு சொல்லி ஒதுங்குறாங்க. என்னென்னவோ ஆசை வார்த்தை சொல்லிப் பார்த்தும் வேலைக்கி ஆகல. ராசாவோட உடம்பு வேற தைலம் போட்டு திரவியம் பூசி ஒரு பகல் ஒரு ராத்திரி பூரா காய்ஞ்சிக் கிடக்கு. நாளைக்கி இந்நேரம்லாம் நாத்தம் எடுக்க ஆரம்பிச்சிடும். என்னடா பண்றதுனு அந்தபுரத்த விட்டு வெளிய வர்ற நினைச்சப்பதான் மூத்த மந்திரியோட பார்வை அங்க இருந்த அடிமைங்க மேல திரும்புச்சு.

அடிமைங்கள்ல திருநங்கைகளும் ரொம்ப ஏழ்மையான குடும்பத்துப் பெண்களும் உண்டு. அந்தப்புரத்து மகாராணி, இரண்டாவது, மூனாவது நிலைல இருக்குற ராணிங்க அப்புறம் ஆசைநாயகிங்கனு உள்ளவங்களுக்குப் பணிவிடை செய்யுறதுக்காகவே அழைச்சிட்டு வர்ற பாவப்பட்ட ஜீவனுங்க. அந்தப்புரத்து ராணிங்க தின்னுட்டு மிச்சம் வைக்கிற சோத்த தின்னு (அதுலயும் பாகுபாடு உண்டு. எல்லாருக்கும் விருந்து தட்டுல இருக்குற சாப்பாடு கிடைச்சிடாது. அடிமைகள்லயும் முதல்நிலை, ரெண்டாவது நிலைனு கொடுமை நடக்கும்) அப்புறம் கிழிஞ்சி கந்தலாகி தூக்கியெறியுற உடைகள போட்டுக்கிட்டு காலைல எழுந்ததும் ராணிங்க காலை கடன் போவ சுடுதண்ணி போடுறதுல இருந்து நடுராத்திரி கொசுக்கடி போவ மட்டும் விசிறிவிட்டு நின்னுக்கிட்டே தூங்குற வாழ்க்கைதான் அவங்களுக்கு.

அதுல சாந்தானு ஒருத்தி. பதினாலு வயசுல வயித்துப்பாடு தாங்கமுடியாம அப்பங்காரன் வித்துட்டதால வேற திக்கு தெரியாம இங்க வந்து சிக்கிக்கிட்ட பொண்ணு. ரெண்டு வருசமா இந்த அரண்மனைல ஓடியாடி வேலை பாக்குறவ. அவதான் இப்ப மூத்த மந்திரி முன்னாடி வந்து கையத் தூக்கி நிக்கிறா.

‘ஐயோ என்ன இந்த பொண்ணு‌.. விவரம் தெரியாம கையத் தூக்குது. அடப்பாவமே’னு கூட நிக்கிற பொம்பளைங்க பூராவும் பதறுறாங்க. கேள்விப்பட்ட ராசக்கமலமும் யாரு அந்த கிறுக்கினு வந்து எட்டிப்பாக்குறாங்க. நெருங்குன சிநேகிதிங்க ‘கைய இறக்கித் தொலைடி சனியனே’னு காதோரமா பதட்டத்தோட முணுமுணுக்குறாங்க. ஆனா அவ முகத்துல அப்படியொரு தெளிவு.

“ராசாகூட ராணியா கட்டைல போக நான் தயார்”

இதக் கேட்டதுமே மந்திரிக்கு பின்னாடி ஏற்கனவே துடிச்சிப் போய் நிக்கிற அனிச்சனுக்கு மயக்கமே வர்ற மாதிரி இருக்குது. அனிச்சன் அந்தபுரத்துக்கு வெளிய நிக்கிற காவக்காரங்கள்ல ஒருத்தன். அவனுக்கும் சாந்தாவுக்கும் நடுவுல ஆறு மாசமா ஒரு இது ஓடுது. அவ விடிகாலைல அடிமை மண்டபத்துல இருந்து கிளம்பி அந்தபுரத்துக்குள்ள போவும்போது அவனத் தாண்டித்தான் போகணும். அப்ப ஒரு கண் சிமிட்டல். சிரிப்பு. அதே மாதிரி நடுசாமத்த தாண்டித் திரும்பத் தூங்கப் போவும்போதும் அந்த அசதியிலயும் அவனுக்கு ஒரு மல்லிப்பூவ எடுத்துட்டு வந்து தந்துட்டுதான் போவா. அந்த ஒத்த மல்லிப்பூ ராணி தலைல இருந்து விழுந்ததா இருக்கும். இல்லனா சோலைல இருக்குற கொடியில இருந்து உதிர்ந்ததா இருக்கும். கொடியில இருந்து அடிமைங்க நேரடியா பூப்பறிக்கக் கூடாது. அதுலகூட நாஸ்தியாவுற பூதான் கிடைக்கும். ஆனா அது பிரியப்பட்டவுங்க தந்த பூவாச்சே. அவன் அத ராத்திரி பூரா வாசமே வரலனாலும் எடுத்து எடுத்து மோந்து பார்ப்பான்.

ஒரு நாள் பூ வாங்குன கையோட “எப்ப கல்யாணம் கட்டிக்கலாம்”னு அரவம் இல்லாதப்ப நிறுத்திக் கேட்டேபுட்டான். அதக் கேட்டதுமே அவளுக்குக் கண்ணு கலங்கிடுச்சு.

“ஆவுறக் கதைய பேச மாட்டியா? நமக்குலாம் கல்யாணம் கனவுலதான்”னு சொல்லிட்டு நிக்காம விடுவிடுனு போய்ட்டா. அன்னைக்கு பூரா சோர்ந்து போய் கிடந்தான். ஆனா அடுத்த நாள் காலைல சிரிச்சிட்டே வந்து அவனுக்கும் பத்த வச்சிட்டுப் போனா. அந்தச் சிரிப்பே கல்யாணம் பண்ணிட்ட சந்தோசத்தத் தந்துச்சு. ஆனா இப்ப அவ இப்படியொரு முடிவ எடுப்பானு தெரியல‌. அவனுக்கு அழுகை வர மாதிரி இருந்துச்சு. அவ முகத்தையே பாத்துட்டு நின்னான். ஆனா அவ அவன் பக்கம் திரும்பவே இல்ல.

அடிமைங்ககூட ஒத்துக்கமாட்டேங்குறாங்களே.. இவங்ககிட்டலாம் வந்து கெஞ்சுற பொழப்பா போச்சேனு யோசிச்சிட்டு இருந்த மந்திரிங்களுக்கு ஒரு கை உசந்ததும் அவ்வளவு சந்தோசமா போச்சு. அந்த பொண்ணு யாரு என்னனு விசாரிச்சி சரிதான்னு முடிவு பண்ணிட்டாங்க‌. செத்தாலும்கூட துரைமாருங்ககிட்ட பிராது குடுக்க நாதியில்லாத பொண்ணுனு ஊர்ஜிதம் பண்ணிக்கிட்டாங்க. அவங்க அழைச்சிட்டு போகும்போது அவ ஒரே ஒரு தடவ அனிச்சன திரும்பிப் பார்த்தா. அவ கண்ணுல ஒத்த நொடி வந்து மறைஞ்ச சோகத்த அவன் கண்டுக்கிட்டான். ‘எதுக்காக இப்படி பண்ற’னு கண்ணுலயே பதிலுக்கு கேட்குறதுக்குள்ள அவ திரும்பிக்கிட்டா.

அவ்வளவுதான். அந்தப்புரம் என்ன.. ஊரே, நாடே பரபரப்பாகிடுச்சு. ‘ஒரு அடிமைப்பொண்ணு ராணியா தீயில இறங்க ஒத்துக்கிச்சாம்பா..’ அந்த ராணியாங்குற வார்த்தைய அழுத்தி உச்சரிச்சாங்க. அந்த வார்த்தை காதுல விழுந்ததும் சாந்தா முகத்துல அப்படியொரு புன்னகை. சின்ன வயசுல இருந்து மனசும் வயிறும் வெறுத்துப்போன ஒரு வாழ்க்கை. இதுக்கு சாவே தேவலாம்னு பல தடவ நினைச்ச நாள்லாம் உண்டு. இப்படி ராணியாகுற வாய்ப்பு கிடைக்கும்போது விடமுடியுமா?

ஏற்கனவே நொந்துப்போன உடம்பு. ராசாவ எரிக்க நேரம் குறிச்சாங்க. அடுத்த நாள் சாயுங்காலம். அப்ப முழுசா ஒரு இராத்திரியும் பகலும் இருக்குது. கதவத் தொறந்தாங்க. இலவம்பஞ்சு மெத்தை. இது வரைக்கும் பயந்து பயந்து உள்ள வந்த அறைல முதல் தடவையா ஓடிவந்து படுக்கைல குதிக்கிறா. அப்படியொரு சொகுசான உணர்வ இதுக்கு முன்னாடி அவ அனுபவிச்சதே இல்ல. எழுந்துப் போய் அலமாரியத் திறக்குறா. அத்தனை வகையான நகைகள் ஜொலிக்குது. இன்னொரு அலமாரில விதவிதமான பட்டு உடைகள். எல்லாத்தையும் காலைல போட்டுக்கலாம். இப்ப படுக்கத்தானே போறோம்னு நகர்ந்தவ ஒரு நிமிஷம் நின்னா. இப்பவே போட்டுக்கிட்டாதான் என்னனு தோணுச்சு. பரபரன்னு கந்தல் உடைகள கழட்டி எறிஞ்சு அந்த உடைகளையும் நகைகளையும் எடுத்து மாட்டிக்கிட்டு கண்ணாடி முன்னாடி வந்து நின்னா. அவளாலயே அவள நம்ப முடியல. நாமளா இவ்வளவு அழகா இருக்கோம்னு இப்படியும் அப்படியும் அசைஞ்சி நெளிஞ்சி பாக்குறா. ஐயோ எவ்வளவு அழகுனு மனசு துள்ளுது. அடுத்த நொடியே சட்டுனு அனிச்சனோட ஞாபகம் வருது. கழுத்துல இருக்குற முத்துகள்ல ஒன்னு கன்னத்து வழியா இறங்கி வந்து சேருது. அடுத்த நிமிசமே கண்ணத் துடைச்சிக்கிட்டு சிரிச்ச மாதிரி படுக்கைல விழுந்தவ அவ்வளவு சந்தோசமா உறங்கிப் போனா.

இங்க நடந்த கூத்துலாம் ராசக்கமலத்தோட காதுக்குப் போயிருக்குமோ.. போகாமலா இருக்கும்? அவங்களோட அறைகள்லதானே ஒன்னு அந்த பொண்ணுக்கு ஒதுக்கி இருக்கோம்? இப்ப அவங்க சண்டைக்கு வந்தா என்ன பண்றது? ராணி வரமாட்டாங்கப்பா.. நீ என்னத்தையோ பண்ணிக்கோ… என்னை இழுக்காம இருந்தா சரின்னு அவங்கதான் ஒதுங்கிக்கிட்டாங்கல்ல…

இப்படிலாம் பேசிக்கிட்டு மறுநாள் காலைல மந்திரிங்க சாந்தா அறைக்கு வெளியில காத்துக்கிட்டு நிக்கிறாங்க. பின்னே? புது ராணியாச்சே… அவங்க இஷ்டத்துக்கு எழுந்து கதவத் திறந்துட்டு வந்தாதான் உண்டு. யோசிச்சிட்டு நின்ன நேரத்துல அங்க எதிர்பார்க்காத ஒருத்தரு உள்ள வர்றதா தகவல்் வரவும் அந்த இடமே பரபரப்பாகிடுச்சு. என்ன ஏதுனு தயாராவுறதுக்குள்ள ரெஜிமெண்ட் சட்டுனு உள்ள வரவும் சுத்தி நின்னவுங்க வெலவெலத்துப் போய்ட்டாங்க. ஆனா எதப் பத்தியும் கவலப்படாம நம்ம புது ராணி கதவத் தொறந்துக்கிட்டு வெளிய வந்தாங்க.

ரெஜிமெண்ட் ரொம்ப கோவத்தோட, “இங்கிலாந்து ராணியோட அரச சட்டத்துக்கு எதிரா இங்க என்ன அட்டூழியம் பண்றீங்க”னு கத்த ஆரம்பிச்சாரு. மந்திரிங்க வாய் தொறக்குறதுக்கு முன்னாடியே சாந்தா வாய் தொறந்தா.

“என்னை யாரும் வற்புறுத்துல. நான் இந்த நாட்டோட ராணி. ராசாக்கூட சேர்ந்து சாவுறதும் இல்ல வேணாம்னு வாழுறதும் என்னோட தனிப்பட்ட உரிமை. தடுக்க பாத்தீங்கனா இப்பவே இங்க இருந்து குதிச்சு செத்துப் போய்டுவேன்”னு பால்கனிய பாத்து போக ஆரம்பிச்சா.

ரெஜிமெண்டால ஒன்னும் பேச முடியல‌. கொலையத் தடுக்கலாம். தற்கொலைய எப்படி தடுக்குறது? ரொம்ப சின்ன பொண்ணா இருக்குதேனு பரிதாபமாவும் கோவத்தோடயும் அவளப் பார்த்தாரு. ‘இந்தாம்மா.. போதும் நிறுத்து’னு கை காட்டிட்டு வெறுப்போட அவர் வெளிய போனதுக்கு அப்புறம்தான் மந்திரிகளுக்கு அப்பாடானு ஆச்சு.

ஆனா இங்க நம்ம புது ராணிக்கு முழுசா ஒரு பொழுது இருக்கு. ராணியா ஆனதக் கொண்டாட வேணாமா?

“யாரங்க.. ஏழு புரவி கொண்ட ரதத்தை ஏற்பாடு செய்யுங்க. நான் நகர்வலம் போகணும். அப்படியே ஏழைங்களுக்குத் தானம் பண்ண கஜானாவுல இருக்குற பொற்காசுகள அள்ளிட்டு வாங்க. நான் போய் பன்னீர்ல குளிச்சிட்டு தயாராகி வர்றதுக்குள்ள அத்தனையும் தயாரா இருக்கணும்”னு உத்தரவு போட்டா.

“என்னம்மா இது? தானம் தர்மம்னு? உனக்கும் உன் குடும்பத்துக்கும் வேணும்ங்கிறத மட்டும் கேட்டா பரவால்லையே”னு ஒரு வயசான ராசாவோட பங்காளி தயக்கத்தோட சொன்னாரு.

நம்ம புது ராணி நின்னு திரும்பிப் பார்த்தாங்க. “அப்படியா? அப்ப ஒன்னு பண்ணலாமா? என்னைய பேருக்குத்தானே ராணினு சொல்றீங்க? உண்மையான ராணிய பதவியில இருந்து இறக்கிட்டு என்னைய இன்னிக்கு சாயுங்காலம் சடங்கு நடக்குற வரைக்கும் அந்த அரியணைல உக்கார வைக்க முடியுமா? அது மட்டும் செய்யுங்க. நான் வேற எதுவும் கேட்கல”

கூட இருந்த மந்திரிங்கலாம் ‘ஐயயோ முதலுக்கே மோசமாகிடும் போலருக்கே’னு பதறி ஓடிப்போய் அந்த தாத்தா வாய இறுக்கி மூடுனாங்க. ராணிய போய் சமாதானம் பண்ணி அறைக்குள்ள அனுப்பி வச்சிட்டு கஜானாவ நோக்கி ஓடுனாங்க.

தங்க முலாம் பூசுன மாதிரி மின்னுற ரதம். உண்மைலயே பூசியிருக்காங்களானு சாந்தா சுரண்டிப் பார்த்தா. உள் கூரைல ஜொலிக்கிற கற்கள தொட்டுப் பார்த்தா. அப்படியே கீழக் குனிஞ்சு அந்த கற்களுக்கு இணையா மின்னுற அனிச்சனோட கண்களயும் உத்துப் பார்த்தா. ரொம்பப் பாவமா இருந்துச்சு. ‘இதப்பாரு.. நான் கிழடாகிச் செத்தபிறகுதான் அந்தபுரத்த விட்டே வெளியே வர முடியும். இதுல நாம எங்க ஒன்னு சேர்றது? நீ வேற பொண்ணப் பாத்து கல்யாணம் பண்ணிக்க’னு சொல்லுற மாதிரி இருந்துச்சு அவளோட பார்வை.

எல்லாருக்கும் எடுத்துக் குடுத்தவ அவன மட்டும் பக்கத்துல அழைச்சு அள்ளிக் குடுத்தா. அவன் அந்தக் காசுகள வாங்கி கீழே எறிஞ்சிட்டு அங்க இருந்து நகர்ந்து போனான். அவன் அப்படித்தான் பண்ணுவான்னு அவளுக்குத் தெரியும். ஆனா இப்ப நேரம் ரொம்ப குறைவா இருக்கு. எத நினைச்சும் கவலைப்பட இஷ்டமில்ல. காசுகள அள்ளி அள்ளி நாலாப்புறமும் வீசுனா. சனங்க ஓடிவந்து அரக்கப் பரக்க அந்தக் காசையெல்லாம் அள்ளுறத பாவமா பார்த்தா. அப்புறம் அங்கிருந்து கிளம்பி ராசா செத்ததால வெறிச்சோடிக் கிடந்த தர்பார் மண்டபத்த துள்ளிக் குதிச்சிட்டே ஓடிப்போய் சுத்திப் பார்த்தா. ராசா உக்காருற அரியணைல ஏறி சம்மணங்கால் போட்டு உக்காந்தா. கடுகடுனு பல்லக் கடிச்சிட்டு நின்னுட்டு இருந்த மூத்த மந்திரிய அழைச்சி பழரசம் ஏற்பாடு பண்ணச் சொன்னா.

அந்தப் பானங்கள குடிச்சிக்கிட்டே பல வருசங்களா அடிமையா இருந்த அவளோட சிநேகிதிங்கள விடுதலை செய்யச் சொன்னா. அதெல்லாம் அவ அதிகாரத்துல இல்லனு எல்லாருக்கும் தெரியும். ஆனா வேற வழி? எனக்கு ராணி அந்தஸ்து வேணாம்னு ஒரு நிமிசத்துல அவளால எல்லா ஏற்பாட்டையும் அடிச்சி நொறுக்க முடியும்‌. இந்த ரெஜிமெண்ட் ஆளுங்க வேற சுத்தி சுத்தி நோட்டம் போடுறாங்க. ஒன்னும் பண்ண வழி இல்ல.

வெளிய வந்த சிநேகிதிங்களாம் அவளக் கட்டியணைச்சு கண்ணீர் விட்டாங்க. அவங்களுக்குத் தேவையான பொன்னையும் பொருளையும் அள்ளியள்ளிக் கொடுத்து அனுப்பி வச்சா. மதிய விருந்து அவ சொன்ன வரிசைல சொன்ன மாதிரி தடபுடலா தயாராகி இருந்துச்சு. ஒரு பக்கம் சைவம், ஒரு பக்கம் அசைவம். நெய் வாசம் கமகமக்கிற உணவுகள தங்கத் தட்டுல வச்சி ஆசை தீர சாப்பிடுறா. ஜீரணம் ஆகக் கொஞ்சம் நேரம் நடக்கிறேன்னு சொல்லி அரண்மனையோட எந்த இடத்துலயெல்லாம் அடிமைங்க போகத் தடையோ அங்கெல்லாம் காலடி பதிச்சு உலா வர ஆரம்பிச்சா. மேல ஏறி உப்பரிகைல நின்னு வாசல் தெரியுதானு பார்த்தா. தான் அணிந்திருக்கிற உடைகளையும் பளபளக்குற நகைகளையும் தொட்டுத் தொட்டுப் பாத்தா. முதல்முதல்ல அடிமையா கழுதை மேல ஏத்தி தன்னை அழைச்சிட்டு வந்த நாள் ஞாபகம் வருது. அவ கண்ணுல இருந்து அவ்வளவு நேரத்துக்குப் பிறகு ரெண்டு சொட்டுத் தண்ணீ விழுந்துச்சு. அப்படியே படுக்கைல விழுந்து உறங்கிப் போனா.

“ராணி சடங்குக்கு நேரமாச்சு”னு  புரோகிதருங்களும்  சோசியக்காரங்களும் கதவத் தட்டி அழைச்சாங்க. தகனத்துக்குத் தேவையான சந்தன விறகு ஆத்தங்கரையோரத்த நோக்கிக் கட்டுக்கட்டா போறதப் பார்த்தா. அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சிப் போச்சு. அவளோட அறைக்கு வந்தவள திரும்பப் பணிப்பெண்கள் குளிப்பாட்டுனாங்க. நெருப்புல இறங்குறதுக்கு எதுக்குய்யா பட்டாடையும் இத்தனை நகைகளும்னு அவ கேட்க நினைச்சா. ஆனா கேட்கல. ஒரு கொலு பொம்மை கணக்கா தயாராகி அவ நின்னா. அரண்மனைல இருக்குற அத்தனை பெரியாளுங்களும் பக்கத்து ஊரு, அடுத்த ஊரு சமீன்களும் ராசாவோட தகனத்துக்கு தயாராகி நின்னாங்க, ராசக்கமலத்த  தவிர. எல்லாருக்கும் முன்னாடி அவ  விரும்பித் தன்னை ஒப்படைக்கிற ஓர் இரை மாதிரி நடந்து வந்தா.

அவளுக்கு ஒரு வண்டி. ராசாவுக்கு ஒரு வண்டி. அவ வண்டில ஏறுறதுக்கு முன்னாடி அரண்மனைய ஒரு தடவத் திரும்பிப் பார்த்தா. ஓர் ஓரத்துல கண்ணீரோட நிக்கிற அனிச்சன பாக்குறா. எதுவும் சொல்லாம ஏறி வண்டியில உக்காருற நேரம் ‘குய்யோ முய்யோ’னு ஒரே அலறல் சத்தம். எல்லாரும் பதறியடிச்சிட்டு ஓட இவளும் என்னனு புரியாம வண்டியில இருந்து இறங்கி நின்னா. அந்தச் சத்தம் ராசாவோட உடம்பு வைக்கப்பட்ட அறைல இருந்துதான் வருது. கிட்ட ஓடிப்போய் என்னாச்சுனு பார்த்தா வெளிய மூனு அடுக்கு காவல் இருக்க,  ராசாவோட உடம்பச் சுத்திக் காவல் நின்ன வீரர்கள்லாம் பேச்சு மூச்சில்லாம சரிஞ்சிக் கிடக்க, ராசாவோட உடம்பு இருந்த சந்தனப்பேழை உடைஞ்சிக் கிடக்க, உள்ளே இருந்த ராசாவோட உடம்ப மட்டும் காணோம்.

ஒன்னும் புரியாம அரண்மனையே அல்லோலப்படுது. விஷயம் தெரிஞ்ச சாந்தாவுக்கு எந்த மாதிரி முகத்தை வச்சிக்கிறதுனு ஒரு கணம் புரியல. சந்தோசப்படவும் முடியல. அழவும் தெரியல. சட்டியில இருந்தாதானே அகப்பைல வரும்? என்னென்னவோ பண்ணி ராசாவுக்காக வராத அழுகைய வர வச்சி “ஐயோ ராசா… உன்கூட சேர்ந்து சாவக் கொடுப்பினை இல்லாதவளா போய்ட்டேனே”னு அவ வச்ச ஒப்பாரில ராசா உடம்பத் தேடி ஓடுனவங்ககூட ஒரு நொடி நின்னு வேடிக்கை பார்த்தாங்க. விஷயம் கேள்விப்பட்டு அறையத் திறந்துக்கிட்டு மகாராணி ராசக்கமலமும் வந்து திகைச்சிப் போய் நின்னாங்க. யார் பண்ண வேலை இது? எப்ப நடந்தது? எப்படி நடந்ததுனு விசாரிச்சாங்க. யாருக்கும் ஒன்னும் புரியல. ராசாவோட உடம்பக் காணோம்னா மேலிடத்துக்கு வேற தகவல் தரணும். நேரம் ஆக ஆக  விஷயம் பெருசாகிட்டே போனுச்சு. தகனம் பண்ற நேரம் தாண்டிப் போயும் ராசா உடம்பு கிடைக்கவே இல்ல. பெரிய மர்மமா இருக்குனு எந்நேரமும் யார் யாரோ வந்து கூடிப் பேசுறாங்க. காவக்காரங்க அங்கயும் இங்கயும் ஓடுறாங்க. அந்தப் பரபரப்புல சாந்தாவ யாரும் கண்டுக்கல. அவளுக்கு அனிச்சன் மேலதான் சந்தேகம். கிடைச்ச இடைவெளியில அவனத் தனியா தள்ளிக்கிட்டுப் போய் விசாரிச்சா. “என் மேல இருக்குற ஆசைல நீதானே இந்த வேலையப் பண்ண?” அவன் தலைல அடிச்சி சத்தியமா நான் இல்லனு சொல்லிட்டு பயந்துப்போய் அங்கயிருந்து ஓடுறான். ஏன்னா நடந்துருக்குற சம்பவம் அந்த மாதிரி. சின்ன சந்தேகம் வந்தாகூட தலைய எடுத்துடுவாங்கனு எல்லாருக்கும் தெரியும்.

ராத்திரி ஆகிடுச்சு. நடுசாமம் தொடங்கிடுச்சு. எல்லாரும் தேடிக் களைச்சுப் போய் உறங்கப் போய்டாங்க. இவளும் இந்த உடைலயே இருக்கலாமா? இல்ல அடிமை உடைக்கு மாறலாமா? பண்ணுன அலும்புக்கு நாளைக்கு காலைல நம்மள உசுரோட வச்சிருப்பாங்களானு ஆயிரம் கேள்வியோட அறைக்குள்ள நடுங்கிக்கிட்டே ஒடுங்கியிருந்தா. அப்ப அந்த இருட்டுல கதவத் திறந்துக்கிட்டு யாரோ உள்ள நுழைஞ்சாங்க. விலுக்குனு உதற எழுந்திரிச்சு உத்துப் பார்த்தா. மகாராணி.

அவளப் பார்த்து கோவப்படாம அவங்க சிரிச்சது ஆச்சரியமா இருந்துச்சு. “சின்ன பொண்ணா இருந்தாலும் பெரிய வேலைதான் பண்ணியிருக்க”னு சொன்னவங்கள அவ புரியாமப் பார்த்தா. “அதான் ராசாவோட உடம்ப என்ன பண்ண? எரிச்சிட்டியா? இல்ல புதைச்சிட்டியா..?”னு கேட்கவும் அவளுக்குக் குழப்பம் இன்னும் அதிகம் ஆச்சு. மகாராணிதான் நெருப்புல இறங்குறதுக்கு எதிரா போராடுறாங்க. அதனால அவங்கதான் ராசா உடம்ப ஏதோ பண்ணியிருப்பாங்கனு நினைச்சா.

“நான் எதுவும் பண்ணலீங்க அம்மா”னு அவங்க கால்ல விழப் போனவள தாங்கிப் பிடிச்சாங்க, சிரிச்சாங்க.

“சரி நீ ஒன்னும் சொல்ல வேணாம். இவ்வளவு சின்னப் பொண்ணா இருந்துக்கிட்டு இத்தனை துணிச்சலா இருக்குறது பெரிய விஷயம். நான் இவனுங்கள எதிர்த்துப் போராட முடியும். ஆனா உன்ன சும்மாவிட மாட்டானுங்க. எப்படிப் பார்த்தாலும் உன் தலைக்கு மேல கத்தி தொங்குற கதைதான்”னு ராணி சொல்லவும் அவளுக்குப் பயம் ஏறுது. துணிஞ்சி ஏத்துக்கத் தயாரா இருந்த அதே சாவு இப்ப பயத்தக் காட்டுறது ஆச்சரியமா இருந்துச்சு.

“எல்லாமுமே ஒரு நாள் மாறும். அப்ப உன்ன நான் திருப்பிக் கூப்டுக்குறேன். அதுவரைக்கும் நீ கண் காணாத இடத்துக்குப் போய்டு”

ஒரு மூட்டை நிறைய உடைமைகளும் நகைகளும் எடுத்து நீட்டுனாங்க. அவளுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. ராணி சொல்றது பாதி புரியுது பாதி புரியல. இப்போதைக்கு உயிர் பொழைக்கணும்குறது மட்டும் நல்லா தெரியுது. அவங்கள கையெடுத்துக் கும்பிட்டா.

“எனக்கு எல்லாம் தெரியும். கொல்லைப்புரம் வழியா வெளிய போக என் ஆட்கள் உதவி செய்வாங்க‌. அங்க அனிச்சன் தயாரா வண்டி கட்டிக்கிட்டு நிக்கிறான். தப்பிச்சுப் போய்டு”னு சொல்லவும் அவளுக்கு முகம் பூவா மலர்ந்துச்சு. அந்த மூட்டைய எடுத்துட்டு போறதுக்கு முன்னாடி ஞாபகமா மல்லிக்கொடிக்கு பக்கத்துல போனா. இந்தத் தடவை கொடியில மலர்ந்துருக்குற பூக்கள்ல ஒன்னு பறிச்சி உள்ளங்கைல பத்திரமா வச்சிக்கிட்டு மகாராணி காண்பிச்ச வழியில ஓடுனா.

ரெஜிமெண்ட் தன்னோட அறைல இருந்து தூரத்துல தெரியுற அரண்மனையை பார்த்தாரு. அங்கிருந்து அப்படியே அந்தபுரத்த பார்த்தாரு. அந்தப்புரத்துக்குப் பின்புறமா தீப்பந்த வெளிச்சத்த கவனிச்சாரு. அங்க நின்ன வண்டியில சாந்தா ஏறுறதும்  மேலறை சன்னல்கிட்ட நின்னு ராசக்கமலம்  கையசைக்கிறதையும் பார்த்தாரு. அவர் முகத்துல அந்தச் சின்ன பொண்ண நினைச்சி ஒரு குறுஞ்சிரிப்பு உதிர்ந்துச்சு. விளக்கு வெளிச்சத்துல தன்னோட கைகள பார்த்தாரு. புறங்கைல இன்னமும் கொஞ்சம் கரி ஒட்டியிருந்துச்சு. போய் கழுவிட்டு வந்து நல்லா துடைச்சிட்டு வெள்ளைத் தாள்கள எடுத்து வச்சிட்டு  உக்கார்ந்தாரு. பேனாவை எடுத்து ‘ஒரு ராணிக் கதை’னு தலைப்பு வச்சி எழுத ஆரம்பிச்சாரு. அறைல இருந்த விளக்கொளில நல்ல வெளிச்சம்.

தொடர்பு எண். 9788912642

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button