
மாரியம்மனுக்கு சித்திரைத் திருவிழா தொடங்கியிருந்தது. ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள், “முளைப்பாரிக்கு பெயர் கொடுத்த பெண்கள் தினமும் காலையில் நல்லதண்ணி கிணற்றில் இருந்து நீர் எடுத்து வந்து அடுத்த பத்து நாட்களுக்கு தினமும் தரவேண்டும்” அந்த நீர் வைத்து முளைப்பாரியை வளர்ப்பார்கள். அறிவுப்புக் கேட்டு வேகவேகமாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள் சுபத்ரா. மஞ்சள் நூல்புடவையும் சிகப்பு ரவிக்கையுமாக அறைக்குள் அலங்கரித்துக் கொண்டிருந்தவளை நோக்கி வந்த கணேசனைக் கைகளால் நிறுத்தி, ”இப்ப நான் ஆத்தா. நினைவில் இருக்கட்டும்” என்றாள்.
“என்னடி, ஆத்தாவுக்கு மஞ்ச சேலையும் மஞ்ச இடுப்பும் ஒரே மாதிரி இருக்கு?” என அவன் கிண்டலாகக் கேட்க,
”ச்சீ ஆளும் மூஞ்சையும் பாரு” என்று செல்லமாய் சீறி சிறிய மகனை அறைக்குள் அழைத்தாள். கணவனின் ஆசைக் கண்களில் இருந்து தப்பிக்க அவன்தான் அவளுக்கு பாதுகாப்புக் கவசம். சில்வர் குடத்தை எடுத்துக் கொண்டு வீட்டு வாசலுக்கு வரும்போது எதிரில் மரகதம் வந்தாள்.
”தண்ணி எடுக்க போறியாமா?”
“ஆமாத்தே! எல்லாம் நம்ம வேணிக்காகதான. நல்லது நடந்தா சந்தோசம்”
ஆனால் அவளது வேண்டுதல் அவள் கூறும் நல்லது நடக்க அல்ல!
மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் கூட அவள் மனதில் கங்கு போலக் கனன்று கொண்டிருந்தது அது. அவள் இடுகாடு செல்லும் மட்டும் இந்தக் கங்கு அணையாது என்பது அவளுக்குத் தெரியும். “என் கர்ப்பகாலத்துல என்னை நீங்க படுத்துன பாட்டுக்குதான் உன் மக வயித்துல இன்னும் கரு தங்கல” என்று நினைத்துக்கொள்வாள். அவர்களின் கர்மா அவர்கட்கு அளித்த தண்டனையாகக் கொள்வாள். ஆனாலும் வெளிப்பார்வைக்கு அக்கறையாக இருப்பது போலக் காட்டிக்கொள்வாள். “இந்த டாக்டரப் பார்க்கச் சொல்லுங்க அத்தே, வேணிய அந்தக் கோவிலுக்கு விளக்குப் போடச் சொல்லுங்க” என்று ஏதேனும் சொல்லியபடியே இருப்பாள். அப்படிச் சொல்வதின் வழி சூசகமாக இன்னும் உன் மகளுக்கு குழந்தை இல்லை என்பதைச் சுட்டிக் காட்டுதலாகச் செய்வாள்.
மரகதம் தனது மகனுக்கு வரன் பார்க்கத் தொடங்கியபோதே எப்படியும் வரும் வரன்களை எல்லாம் தட்டிக்கழிப்பது என்கிற முடிவில்தான் இருந்தாள். மகளுக்குத் திருமணமாகி நான்காண்டுகள் ஆகிவிட்ட பிறகும் அவள் தாயாகவில்லை. அது ஒரு குறையாக இருந்தது. மகனுக்குத் திருமணம் ஆகி, வருகின்ற மருமகள் மகளுக்கு முன்னமே குழந்தை பெற்றுவிட்டாள் எனில் அது இப்போது கவுரவப் பிரச்சனையாக மாறிவிடும். அதனாலேயே மகள் கருவுறும் வரைக்கும் வரன் பார்ப்பது போல பாவனை செய்துகொள்ளலாம் என்றிருந்தாள். சுபத்ரா அப்படி தட்டிக் கழிக்கப்பட்ட ஒருத்தி. ஜாதகப் பொருத்தம் பார்த்து, பெண்பார்க்கும் படலம் முடிந்து எல்லாம் சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கும் போது வரதட்சனை அதிகம் கேட்ட மரகதத்தின் நோக்கம் வரதட்சனை அல்ல, எப்படியாவது இந்த சம்பந்தம் தடைபடுவது. சுபத்ராவுக்கு கோபம் வந்து நேராக கணேசனின் அலுவலகம் விரைந்து, “இந்தக் காலத்துலயும் வரதட்சனை கேட்கறிங்களே? வெக்கமா இல்ல, படிச்சவர்தான நீங்க?” என்று பொரிந்து தள்ளினாள். ”நகை பணமெல்லாம் வேண்டாம் எனக்கு நீ மட்டும் போதும்னுதானே சொல்லச் சொன்னேன், எங்க அம்மா என்ன சொன்னுச்சு?” என்றான். விவரம் அறிந்து அம்மாவிடம் கோபித்து சில பல மன்னிப்புகளுக்குப் பிறகு சுபத்ரா அவ்வீட்டிற்கு மருமகள் ஆனாள்.
மரகதத்திற்கு வேணி தினமும் அலைபேசுவாள். ’தாயும் மகளும் மணிக்கணக்காக அப்படி என்னதான் பேசிக்கொள்வார்களோ ச்சை’ என்று பொருமியபடி தனது அம்மாவிடம் இதையே மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்பாள் சுபத்ரா! இரண்டு அலைபேசி அழைப்புகளிலும் தவறாமல் இடம்பெறும் கேள்வி, “சுபத்ராவிற்கு நாள் தள்ளிப் போய்விட்டதா?” என்பதுதான். சொன்னாற்போல் இரண்டாவது மாதம் அவளுக்கு விடாய் நின்றது, மருத்துவப் பரிசோதனையில் கருவுற்றிருப்பது ஊர்ஜிதமாகி கரு ஆரோக்கியமான வளர்ச்சியில் இருப்பதை மருத்துவர் சொன்னார். சுபத்ராதான் பலவீனமாக இருப்பதாகவும் கனமான வேலைகளைச் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
வீடு துடைப்பது, துணி துவைப்பது பாத்திரம் கழுவுவது, போன்ற பொறுப்புகளில் இருந்து அன்றே விலகிக் கொண்டாள் மரகதம். அனைத்தையும் சுபத்ராவே செய்ய நேர்ந்தது. வேண்டுமென்றே குண்டும்குழியுமாக பாதை இருக்கும் குலதெய்வம் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்றாள் மரகதம். சென்று வந்தார்கள். மசக்கையில் வாந்தி எடுத்துச் சுருண்டு படுத்திருக்கும்போது கூட மரகதம் அவளைக் கண்கொண்டு பார்த்தாளில்லை. இவள் மீது கொஞ்சம் அக்கறைகொண்டால் கூட அது தன் மகளுக்குச் செய்யும் துரோகமாக அவளுக்குத் தோன்றியது. ஒரு நிலையில் இந்தக் கரு கலைந்தே போய்விட்டால் நன்றுதான் என்று சுபத்ராவே எண்ணினாள். அவளால் இந்த அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை, ’உன் குடும்பத்திற்கு ஒரு வாரிசைத் தரப் போகிறேன் அதற்கு நீ என்னைக் கொண்டாடக் கூட வேண்டாம், ஆனால் ஏன் இவ்வளவு புறக்கணிப்பு, ஏன் இவ்வளவு வெறுப்பு! அதுவும் உன் மகளை முன்வைத்து. எங்கோ இருக்கும் உன் மகள் இந்த வீட்டை ஆள்கிறாள் என்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நீ நினைத்தது போல எனக்கும் இந்தக் கரு கலைந்து விட்டால் நீயும் வேண்டாம் உன் மகனும் வேண்டாம் என்று நான் என் அப்பா வீட்டிற்கே சென்றுவிடுவேன்.’ அவ்வாறெல்லாம் மனதில் நினைத்ததைக் கேட்கமுடியாமல். ”நான் கர்ப்பமா இருப்பது உங்களுக்குப் பிடிக்கலியா அத்தே?” என்றாள்.
“நான் அப்படியெல்லாம் ஒன்னும் நினைக்கல. நீயா கற்பனை செஞ்சு எதையாவது உளறாத” என்று அவள் கண்களை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் எங்கோ பார்த்தபடி கூறினாள் மரகதம். அவளது இந்த நடிப்பு சுபத்ராவுக்கு அருவருப்பாக இருந்தது.
மூன்று பெண்களுக்குள் நிகழும் பனிப்போரில் கணேசன் பகடைக்காயாக உருண்டு கொண்டிருந்தான்.
வளைகாப்பு அன்று கூட சமையலறையில் காலையில் இருந்து பாத்திரங்கள் கழுவாமல் கிடந்தன. ஆத்திரம் பொங்க அலங்காரக் கோலத்திலேயே பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள் சுபத்ரா. அவள் அம்மா வந்து தடுத்தும், “இங்க நடக்குற கூத்துலாம் உனக்குப் புரியாது, போம்மா அங்கிட்டு” என்று சொல்லிக்கொண்டே அதற்கு மேல் பொறுக்கமாட்டாமல் மொத்தப் பாத்திரங்களையும் தரையில் வீசி எறிந்தாள். என்ன ஏதேனப் பார்க்க வந்த மரகதம், ”என்னம்மா ஆச்சு?” என்று அக்கறையாக வினவ சுபத்ராவின் கோபம் அவள் கட்டுப்பாட்டை மீறியது. வெடித்துவிட்டாள். “நிறுத்துடி திருட்டுமுண்ட, யார்ட்டடி உன் வேலையக் காட்டுற? என்னமோ பெரிய நல்லவ மாதிரி பசப்புற. நீ பண்றதுலாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா?உனக்கென்ன? இந்தப் புள்ள சாவனும் அவ்வளோதான? என்று ஆத்திரமாகத் தன் வயிற்றில் அடித்தாள். சுபத்ராவின் அம்மா வந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள், “என் புள்ளைய என்ன மாப்ள செஞ்சு வச்சிருக்கீங்க?” கணேசன் கேள்வியாக அம்மாவைப் பார்த்தான். “நான் ஒன்னும் செய்யலடா, உன் பொண்டாட்டிதான் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சிக்கறா” என்ற மரகதத்தைப் பார்த்து, ”மயிரப் புரிஞ்சிக்கிறா. செருப்பு பிஞ்சிடும்டி உனக்கு. நான்தான்டி கெட்டவ, நான்தான்டி கேடுகெட்டவ. அப்படித்தான எல்லாரும் நம்பனும், நம்பட்டும். நீதான் ரொம்ப நல்லவ, உத்தமி. இந்த குண மயித்துத்தான்டி உன் பொண்ணு மலடியாக் கிடக்கறா” எனக் கத்தினாள்.
‘மலடி’ என்ற சொல் கேட்டதுமே வேணி அழத் தொடங்கி இருந்தாள். தன்னை முன்வைத்தான பிரச்சனைதான் இது என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். பலவீனமாகக் காட்டிக்கொள்ள அவள் அழுதாக வேண்டும். இத்தனை களோபரத்தில், ‘மலடி’ என்கிற சொல் அவள் அழுகைக்கு நியாயமான காரணம் சேர்ப்பதாக இருந்தது. “இந்தா இன்னொரு உத்தமி நடிக்க ஆரம்பிச்சிட்டா, கண்ணுல ஒன்னுக்கு போறவளுகளத்தான் உலகம் நம்பும், நடி ஆத்தா நல்லா நடி. குடும்பமா இது த்தூ”
அன்று பிரசவத்திற்கு தாய்வீட்டிற்கு கிளம்பியவள் பிள்ளை பிறந்ததற்கு மாமியாரை வரக்கூடாதெனக் கட்டளையிட்டாள். பேரன் பிறந்திருக்கிறான் என்ற செய்தி மட்டும் மரகதத்தை அடைந்தது.
ஆறு மாதம் கழிந்து புகுந்தவீட்டிற்கு சுபத்ரா வந்தாள். ஒரு சிறு உயிரின் வருகை சூழலை இலகுவாக்கி இருந்தது. பேரனின் மீதான பாசம் கடந்த கால கசப்புகளை ஒரு திரை போல மறைத்தது. தவிர முற்றுமாக நீக்கவில்லை. பேரனிடம் மரகதம் உள்ளார்ந்த அன்பைக் காட்டினாலும், உங்களால் இவனுக்கு எப்போதும் ஆபத்துதான் என்பதைச் சுட்டிக்காட்டியபடியே இருந்தாள் சுபத்ரா. சொற்களில் விஷம் தடவுவாள். நான் இல்லாதபோது பிள்ளையைத் தூக்கக் கூடாதெனச் சொல்லி அவளை ஒரு குற்றவாளியாகவே பார்ப்பாள்.
”பச்சக் குழந்தைக்கு யாராவது கெடுதல் நினைப்பாங்களா?”
”நீங்க நினைப்பீங்க அத்தே! என்னமோ நினைக்காத மாதிரி பேசறிங்க?”
அன்பைக் காயப்படுத்துவதின் வழிதான் மனிதர்களை பலவீனமாக்க முடிகிறது.
வீட்டிற்கு வேணி வந்திருந்தால் மட்டும் பேரனை பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டாள் மரகதம். மற்ற நேரங்களில் ஒரு நல்ல பாட்டியாகவே நடந்துகொள்வாள். வேணி இருக்கும்போது வேண்டுமென்றே மகனை மரகதத்தின் கைகளில் தந்து செல்வாள் சுபத்ரா. மாமியாரிடம் மிக இணக்கமாக இருப்பது போலக் காட்டிக்கொள்வாள். அதைக் கண்டு வேணியின் முகம் சுருங்கும்போதெல்லாம் மருமகளைப் பற்றிக் குறைபாடி, “என்னடி பண்றது? இங்கதான வாழ்ந்தாகணும் என் விதி. அதுக்குதான் நான் அமைதியாப் போறேன்” என்று நொந்துகொள்வாள் மரகதம். வேணியின் கண்களுக்குள் ஒரு திருப்தி தென்படும். இருவரையுமே வீழ்த்திவிட்ட திருப்தி சுபத்ராவுக்கு.
மகனுக்குப் பால் கொடுக்கும்போதெல்லாம் ஏதேனும் கடந்தகால கற்பனையை ஓடவிட்டபடி இருப்பாள். ஒருவேளை நிஜமாகவே இந்தக் கரு கலைந்து இருந்தால் இன்று என்ன ஆகி இருக்கும் என்று பதறுவாள். ’என் மார்பில், மம்மம்மம் என்று முனகிக்கொண்டே ஆவேசமாக பாலருந்தும் சிசு இருந்திருக்காது’. மகனை அணைத்துக் கொள்வாள். அழுவாள். மரகதம் மீதும் வேணி மீதும் வன்மம் பெருகும். பெருகிய வன்மத்தில் வேணிக்கு கருவே உண்டாகவில்லை என்றால் நான் உனக்கு முளைப்பாரி எடுக்கறேன் என்று ஊர்க்கோவில் மாரியம்மனுக்கு சத்தியம் செய்து வேண்டிக் கொண்டாள். அவள் கண்முன் இவர்கள் கரைந்து கரைந்து அழிவதைப் பார்ப்பதில் உள்ள நிம்மதி வேறெதிலும் சுபத்ராவுக்கு கிடைக்கவில்லை. ஆத்திரம் அப்போதுதான் அவளுக்கு அடங்குகிறது. சாதாரண சுபத்ராவுக்கும் தாய் சுபத்ராவுக்கும் உள்ள வேறுபாடு அது.
முளைப்பாரி எடுக்கப் பெயர் தந்ததும், முதல்முறையாக முளைப்பாரி எடுக்கிறாள் என்பதால் விரதம் இருப்பது பற்றிய அறிவுரைகளை அக்கம்பக்கத்து தோழியர் சொல்லித் தந்தனர். ’கணவனை கிட்டயே விடக்கூடாது’ என்பதைக் குறும்பாகச் சொல்லிச் சிரித்தனர். ”அவரு இருக்கட்டும். நீ மொதல்ல ராத்திரி தள்ளிப் படுத்துருவியா?” எனக் கேலி பேசினர். முதலாவதாக மாதவிடாய் தேதியை சரிபார்த்தாள். திருவிழா காலத்தில் அவளுக்கு விடாய் தேதி இல்லை. பிறகு தோழியரோடு சென்று மஞ்சள் புடவை சிவப்பு ரவிக்கை எல்லாம் வாங்கி வந்து விரதப் பெண்மணியாக மாறினாள். கையில் மஞ்சள்காப்பு, ஒருவேளை மட்டுமே உணவு, ஒவ்வொரு நாள் மாலையிலும் கோவிலில் கூடி முளைப்பாரியை சுற்றி நின்று கும்மியடிப்பது. அலங்கார அம்மனை மனமுருக வேண்டுவது எல்லாம் எல்லாம் ஒரு வம்சம் தழைத்துவிடக் கூடாது என்பதற்காக.
திருவிழா நாள் அன்று முளைப்பாரியைச் சுமந்து ஊர்வலம் செல்லும் சாலைகளில் நீர்தெளித்து நீர்தெளித்து சாலையின் வெப்பத்தை தணித்துக் கொண்டிருந்தார்கள், திருவிழாவுக்கென்றே பிரதேயமாக வரிசைகட்டிய துரித உணவகங்கள், அச்சுமருதாணிக் கடைகள், பலூன்காரர்கள், தெருவெங்கும் கொடித் தோரணங்கள், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வண்ணக் கோலங்கள், புத்தாடை அணிந்த பெண்கள், அவர்களை ரசிக்கவென அணிவகுக்கும் ஆண்கள் என ஊரே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
சந்தன மஞ்சளில் அம்மனை அலங்கரித்து, சிவப்புப் புடவை கட்டி வெள்ளிக் கண்கள் பதித்து, தீப ஒளியில் அருளே வடிவாக சின்னஞ்சிறுமியாக, உக்கிரம் கொண்ட மாரியாக மாறி மாறி தோற்றமளித்தாள் கொடை வாங்கும் அம்மன்.
மாலை ஐந்து மணியளவில் முளைப்பாரியைத் தூக்கி சுபத்ராவின் தலையில் வைக்கும்போதே அவளது கழுத்து ஓய்ந்துவிட்டது. ஊர் சுற்றளவு இரண்டு கிலோமீட்டர். ’இதற்கே தாங்க முடியவில்லையே இன்னும் இரண்டு கிலோமீட்டர் எப்படி சுற்றிவரப்போகிறேனோ?’ என்று மலைத்தாள். பிற பெண்கள் தலையில் முளைப்பாரியை சுமந்தபடி “ஓம் சக்தி பராசக்தி” என்று துதித்துக்கொண்டே ஓட்டமும் நடையுமாகச் சென்றார்கள். அவர்களை அடியொற்றினாள்.
மஞ்சள் நதி ஆர்ப்பரித்து ஓடுவது போல இருந்தது.
பாதி வழியிலேயே சுபத்ராவுக்கு மயக்கம் வருவது போலிருந்தது, அவள் மட்டும் மஞ்சள் நதியில் இருந்து ஒரு துளியாகத் தனியாகப் பிரிந்துவிட்டாள். கண்களெல்லாம் இருட்டிக் கொண்டு, மேளதாள சப்தங்கள் காதுகளில் மங்கி ஒலித்து அரைமயக்க நிலையில் தலைக்கு மேல் பெரும் பாரம் இருப்பதே மறந்துவிட்டது அவளுக்கு. அவ்வளவு ஏன்! தலையென்ற ஒன்று இருப்பதையே அவள் உணரவில்லை. கணேசன் அவளைத் தாங்கிப் பிடித்தபடி கூட நடந்து வந்துகொண்டிருந்தான். அவள் கைகள் முளைப்பாரித் தொட்டியை விடாமல் இறுகப் பற்றி இருந்தன. முளைப்பாரியை கைகளில் இருந்து தவறவிட்டுவிட்டால் வேண்டுதல் பலிக்காது. அரைமயக்க நிலையிலும் ஆழ்மனம் விழிப்பாயிருந்தது. காலையில் இருந்தே சாப்பிடவில்லை. அது உடலை சோர்வாக்கி விட்டது, தலைமேல் இருக்கும் இந்தக் கனம், நடந்து செல்லும் இந்தத் தொலைவு, கூடவே வருகின்ற மேளதாளங்கள். எல்லாம் சேர்ந்துதான் ஒருவித தன்னிலையற்ற போதை நிலைக்குள் தள்ளுகிறது. இதைத்தான் இவர்கள் அருள் வந்துவிட்டதாகக் கருதி அழுகிறார்கள் என்று பகுத்தறிவைத் துணைக்கழைத்து அந்த மயக்க நிலையிலும் யோசித்தாள். ஆனாலும் நான் விடேன், நான் திடமானவள். தங்கு தங்கென்று கால்களை தரையில் ஓங்கி மிதித்து நடந்தாள். அத்தனை திரளிலும் அவளது சலங்கைக் கொலுசோசை மட்டும் துல்லியமாகக் கேட்டது.
ஊர்சுற்றி கோவில் வந்தடைந்து தலைச்சுமை இறக்கி அம்மனை வழிபட வேண்டும். சுமையிறக்கி வைத்தபிறகு சுபத்ராவால் கண்களைத் திறக்க முடியவில்லை. உடலின்றிப் போய்விட்டது போல உணர்ந்தாள். உடலும் அவளும் தனித்தனியாகப் பிரிந்து கிடந்தார்கள். செத்துப் போய்விட்டோமோ என்று கூட நினைத்தாள். ஊரின் திருவிழாக் காட்சியை பறவைக் கோணத்தில் அவள் மனம் கண்டது, அலறிவிட்டாள். மொத்த ஊரும் மின் விளக்கொளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது, கோபுரம் தங்கமாக மின்னியது. ஓர் ஓரத்தில் ஒருத்தி தூக்கி எறியப்பட்ட துணி போல கசங்கிக் கிடந்தாள், அது அவள்தான். சுபத்ராதான். தலைக்குள் ஓடிக்கொண்டிருந்தன காட்சிகள். ’நிஜமாகவே செத்துப் போய்விட்டேனா, என்னைக் காப்பாற்ற யாரும் இல்லையா! நான் சாகவில்லை, உயிருடன் இருக்கிறேன், என்னைக் காப்பாற்றுங்கள். என் மகன்! என் கணவன்! ஐயோ அவர்களை விட்டுப் போகப் போகிறேனா!’ என்று அவளுக்குள் தீப்பொறிகள் பறந்தன. ’இல்லை. நான் சாகமாட்டேன் நான் இன்னும் இந்த உடலுக்குள்தான் இருக்கிறேன்’ என்று அவளுக்கு அவளே நிரூபிக்க உயிரின் ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்றுதிரட்டி உச்சக்குரலில், ”ய்ய்ய்யேயேய்ய்…” என்று குரல்வளை கிழிய ஓலமிட்டாள். அத்தனை ஒலிப்பெருக்கிகளின் சப்தமும் அவளின் குரலுக்குப் பணிந்தது போல சட்டென அணைந்தது, அவள் குரல் மட்டும் தனியாக ஓங்காரமாக ஒலித்தது. அவளைச் சுற்றிநின்ற அனைவரும் அஞ்சி விலகினர். கால்கள் விடைத்து கைகளை இறுக்கிமூடி உடலை முறுக்கினாள். பற்களை நறுநறுவென்று கடித்தாள். “ஆத்தா மகமாயி வந்து இறங்கிட்டா” என்று பூசாரி ஓடிவந்தார். அழைத்துப் போய் அம்மன் சந்நிதி முன் நிறுத்தினார்கள். மேளச் சத்தத்திற்கு ஆடிப்பார்க்கலாம் என்று நினைத்தாள். ஆடினாளா என்பதில் அவளுக்குத் தெளிவில்லை. ஆனால், ’திம்மு திம்மு’ என்று குதித்து ஆடினாள். நான் சாகவில்லை என்ற சந்தோஷ ஆட்டம். ஆடி ஆடி அதிகம் சோர்ந்து விட்டாள். முகத்தில் மஞ்சள் தண்ணீரை தெளித்த கணமே சுபத்ரா தெளிவுக்கு வந்துவிட்டாள். கண்களைத் திறந்து பார்த்தபோது மணியோசை முழங்க குழவை ஒலிக்க எதிரில் அம்மனுக்குத் தீபாராதனை காட்டிக் கொண்டிருந்தார்கள். தீப ஒளியில் அம்மன் பிரகாசித்தாள். அவள் கொண்ட அழகில் என்ன வேண்டுவதெனத் தெரியாமல் யாவரும் கைகளைக் கூப்பி வெறுமனே பிரார்த்தித்தனர். ஒரு மூதாட்டி இன்னொரு வருடம் உன்னை இந்த அழகில் காணும் வாய்ப்பை கொடு என்று வேண்டினாள். சூடம், பத்தி, சாம்பிராணி, தீய்ந்த, எண்ணெய் வாசங்களோடு புழுக்கமான மனிதர்களின் வாசனையும் சேர்ந்தது. அது கடவுளின் வாசனையானது.
பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த சுபத்ராவுக்கு வலப்புறம் மரகதம் நின்றாள். வேணியின் முந்தானையை எடுத்து விரித்துக் கைகளில் ஏந்தி தாயும் மகளும் ஒன்றாக அம்மனை வழிபட்டுக் கொண்டிருந்தனர். தள்ளாடி எழுந்து நின்ற சுபத்ராவை நோக்கித் திரும்பி கை கால் விதிர்க்க கண்களில் நீர் மணிமணியாகப் பெருக்கெடுக்க, “என் மவளக் கைவிட்டுடாத தாயி” என்றாள் மரகதம்.
சுபத்ராவுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று சுக்குச் சுக்காக உடைந்து உதிர்ந்து சிதறியது. மார்பில் பால் ஊறிப் பெருகியது. கரைந்து நிற்கின்ற வேணியின் மீது பொங்குகின்ற அன்பை அவளால் தடை செய்ய முடியவில்லை. அருகில் வந்து வேணியின் வயிற்றில் கை வைத்தாள். அந்த ஒரு நொடியில் அவளே உலகுக்கு அன்னை.
மின்னல் இடியோடு வானம் மழைக்கு அறிவித்தது. கொடை வாங்கிய அம்மன் குளிர்ந்தாள்.
*



