
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழித்து அந்தச் சாலையினுள் நுழையவிருந்தேன் நான்.
பள்ளி நாட்களில் நான் அறவே வெறுத்த, இரண்டொரு முறை அடிதடிச் சண்டைகூட போட்டிருந்த, இரண்டு குடும்பமும் தலையிட்டு சமாதானம் செய்யும் அளவிற்குப் பல நாசக்காரச் செயல்கள் புரிந்திருந்த, இன்று எஞ்சியிருக்கும் ஒரே நண்பனாக மாறிவிட்டிருந்த கிருஷ்ணகுமார் மட்டும் இங்கு இருந்திருக்காவிட்டால் இன்றும் இதனுள் வந்திருக்கமாட்டேன்.
கல்யாணம், குழந்தை என முழுமையான குடும்பஸ்தனாக மாறிவிட்டிருந்த அவனிடம் தனியனான எனக்குப் பேசுவதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் அவனை முற்றாக இழக்க மனம் வரவில்லை.
பால்யம் தொடங்கி இருபதுகளின் தொடக்கம் வரை இந்தச் சாலையும், இதனிடமிருந்து கிளைத்த தெருக்களும், குறுக்குச் சந்துகளும், அவற்றினுள் அமைந்திருந்த சில வீடுகளும் எனது வாழ்வில் மிகமுக்கியப் பங்கு வகித்தன என்றே சொல்லவேண்டும்.
வடக்கு பைபாஸ் பாலத்திலிருந்து இறங்கியவுடன் வண்டியை வலப்பக்கமாக ஒடித்து, புதிதாய் வந்திருந்த பிட்சா கடை மற்றும் ஜவுளிக்கடையைக் கடந்து, சற்றே ஒடுங்கியதைப்போல் இருந்த அந்தச் சாலையினுள் வண்டியைச் செலுத்தினேன்.
பாதையெங்கும் பரவிக்கிடந்த மேடுபள்ளங்களைக் காணும்போது எரிச்சலாக இருந்தது.
பிரபலமான மருத்துவமனையும், மாநிலத்தின் பிரசித்தமான பள்ளிகளில் ஒன்றும் அமைந்திருக்கும் இந்தச் சாலை, தொடக்கம் முதல் இறுதிவரை சமமாகவும் சீராகவும் இருந்து நான் கண்டதேயில்லை.
அதுவும் அரைமணி நேரத்திற்கு அடித்து மழைபெய்தால் இடமே நாசக்காடாகிவிடும்.
பதினொன்றாம் வகுப்பில் என்னுடன் படித்த பீர்முகம்மது, சாலையில் லாரி மோதி நசுங்கிச் செத்த செய்தி அறிந்து, கொட்டும் மழையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு விரைந்து வந்ததும், இங்கே சகதியில் சிக்கி விழுந்து சேற்றில் புரண்டெழுந்ததும் ஞாபகம் வந்தது.
படியாத செம்பட்டைத் தலைமுடியும், சிகரெட்டினால் கருத்திருந்த உதடுகளும், பழுப்புநிற விழிகளும், பளிச்சென்ற சருமமும் கொண்ட பீர்முகம்மதின் முகத்தில் அன்று சிறு கீறல்கூட இருக்கவில்லை. ஆசிரியர் சந்திப்புகளின்போது தலையைக்கூடக் காட்டியிராத அவனுடைய பெற்றோர்கள் அந்த முகத்தைக் கண்டு நெஞ்சில் அறைந்தபடி அழுதுகொண்டிருந்தனர்.
அன்று ஐஸ் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த அவன் உடலின் அருகே நெடுநேரமாக நின்று அந்த முகத்தையே வெறித்துக்கொண்டிருந்த, எதற்கென்றே தெரியாமல் அவ்வப்போது இலேசாய் முறுவலித்த, பின்னர் திடீரென அலறி அப்படியே மயங்கிவிழுந்த கார்த்திகைச் செல்வி இப்போது எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. ஆனால் அவளும் பீர்முகம்மதும் நெருங்கிப் பழகிய காலங்களில், ஒருமுறை அவன் அவளது அழைப்பை ஏற்கவில்லை என்பதற்காகப் பழுக்கக் காய்ச்சிய கரண்டியைத் தனது வலது தொடையில் வைத்துக்கொண்டதன் விளைவாக உருவான தழும்பு நிச்சயம் அவள் உடம்பைவிட்டு நீங்கியிருக்காது.
***
மகப்பேறு மருத்துவமனைக்கும் மேல்நிலைப் பள்ளிக்கும் இடையே இருந்த சிறிய தூரத்திற்குப் புதிதாய் அமைத்திருந்த சிமெண்ட் சாலை ஒப்பீட்டளவில் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் மருத்துவமனை இயங்கும் நாட்களில் இங்கே வாகனங்கள் செறிந்து, போக்குவரத்து அத்தனை நெரிசலாகிவிடுவதாக கிருஷ்ணகுமார் பலமுறை புலம்பியிருக்கிறான்.
முன்பு சின்னதாய் ஒரு மீன்கடை நின்ற இடத்தில் இப்போது வெட்டவெளியாக இருந்தது. அதனைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலியில் அங்கே வரவிருந்த பாத்திரக்கடை ஒன்றின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. முள்வேலியையும் மீறி எப்படியோ அதனுள் புகுந்துவிட்டிருந்த ஆட்டுக்கூட்டம் மன ஓர்மையுடன் மேய்ந்துகொண்டிருந்தது.
சாலையின் இடதுபுறத்தில் கீழ்த்தளத்தில் தையல் கடையும் மேல்தளத்தில் தண்ணீர் கேன் குடோனும் இருந்த அந்த இருபத்துநான்காம் எண் வீட்டில்தான் முன்பு மலர்விழி தங்கியிருந்தாள்.
அவள் பொருட்டு நடந்த போர்களும் உடைந்த தலைகளும்தான் எத்தனை?
ஜங்க்ஷனில் இருக்கும் புகழ்பெற்ற சைவ உணவகத்தில் கேஷியராக வேலைப் பார்த்த முருகானந்தத்தின் ஒரே மகளான மலர்விழியை அன்று விரட்டியிராத பையன்களே இல்லை. மேல்தளத்தின் உப்பரிகையில், கழுத்தில் கிடக்கும் மெல்லிய சங்கிலியின் டாலரைக் கடித்தபடி அவள் நிற்கும் ஞாயிற்றுக்கிழமை மாலைகளிலெல்லாம் அத்தெரு நெடுக பைக்குகளும் சைக்கிள்களும் சர்சர்ரென்று பறந்தவண்ணம் இருக்கும்.
அவள் வீட்டிற்கு எதிர்த்தாற்போல் இருந்த மளிகைக்கடையில் கூட்டம் அலைமோதும். கையிருப்பில் உள்ள ரஸ்னா பாக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ப்பதற்கு, அந்தக் கிழமையில் மட்டும் கடையில் வந்தமரும் தனது மாமியாரின் முகராசியே காரணம் என்று நெடுநாட்களாக நம்பிக்கொண்டிருந்தார் கடையின் முதலாளியான சிவசாமி.
அவளைப் பின்தொடரும் பிற வகுப்பு மாணவனைக் கபடிப் போட்டியைச் சாக்காக வைத்து எட்டி உதைத்து ரத்தம் வரச் செய்த அந்தோணி இன்று சித்த மருத்துவராக மதுரையில் பணியாற்றுகிறான். சாப்பிடுவதற்கு ஏதுவாக அவள் கொண்டுவரும் உணவுக் கரண்டியை அவள் அறியாதபோது எச்சில் படுத்திவிட்டு வைத்த ரகுபதி இன்று போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருக்கிறான்.
மலர்விழியை ரகசியமாக திருச்செந்தூர் வரை அழைத்துச் சென்ற கணக்கு வாத்தியார் தனபாலனும், விஷயம் வெளிக்கசிந்த மறுவாரமே வீட்டை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு ஊரைவிட்டுச் சென்ற முருகானந்தமும் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவள்மேல் பைத்தியமாகத் திரிந்த, மாவட்ட அளவில் தடகளப்போட்டிகளில் நிகரற்ற வீரனாய் இருந்த வேலுச்சாமி, தற்போது போதைக்கு அடிமையாகி, குலவணிகர்புரத்தில் சின்னதாக மெக்கானிக் கடை வைத்திருப்பதாக எவரோ சொன்னது நினைவில் இருக்கிறது.
ஓரப்பார்வையால் அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டே கடந்து சென்ற என்னால் மலர்விழியின் அன்றைய தோற்றத்தை முழுமையாக நினைவில் மீட்டெடுக்க முடியவில்லை. எவ்வளவு முயன்றாலும், நான்கு வருடங்களுக்கு முன்னால், தூத்துக்குடியில் ஒரு ஜவுளிக்கடையில், வாசற்பக்கம் போடப்பட்டிருந்த நாற்காலி வரிசையில் கையில் குழந்தையுடனும், கிழடு தட்டிவிட்ட கணவனுடனும் அமர்ந்திருந்த, என்னைக் கண்டதும் சட்டென மறுபக்கம் திரும்பிக்கொண்ட அந்தப் பெண் முகமே கண்முன் வந்தது.
***
பள்ளிக்கூடத்தின் மதில்சுவர் முடியும் இடத்தில் சாலையின் மேடுபள்ளமும் தொடங்கிவிடுவது வேடிக்கையாக இருந்தது. சுவருக்கு எதிர்த்தாற்போல் இருந்த தாசில்தார் வீட்டில் ஆள் இருந்தவரை அப்பகுதியில் சாலை நன்றாகவே இருந்தது. பொதுவாகவே கார் பார்க்கிங் சங்கடமாக இருக்கும் அந்த முனையில் அவருக்கென மட்டும் கச்சிதமாக இடம் ஒதுக்கித் தந்திருந்தனர் தெருவாசிகள்.
ஒரு வருடத்திற்கு முன்னால் இந்த வீட்டைக் காட்டியிருந்தால் இதனுள் நாங்கள் அடித்த லூட்டிகளைப் பற்றி மட்டுமே பேசியிருப்பான் கிருஷ்ணகுமார். பரீட்சைக்கு முந்தைய இரவுகளில் கூட்டமாய் இங்கே வந்து, படிக்கிறோம் பெயர்வழி என்று கதவைச் சாத்திக்கொண்டு, பொக்கிஷம்போல் அவன் சேகரித்துவைத்திருக்கும் நீலப்படங்களை விடிய விடியப் பார்த்துக் களித்ததையெல்லாம் நினைவுபடுத்திச் சொல்லியிருப்பான். தாசில்தாரின் மகனான ராஜதுரையை வைத்துக்கொண்டே, அதீதச் செல்வாக்கும் அதிகாரமும் படைத்த அவனது அப்பாவை எள்ளிநகையாடியதையும், அவனும் அதை ரசித்துச் சிரித்ததையும் விவரித்து மகிழ்ந்திருப்பான்.
ஆனால் முதிர்ச்சியும் பொறுப்புகளும் கூடிவிட்ட தற்போதைய கிருஷ்ணகுமார் இன்று முதன்மையாக இக்குடும்பத்தின் சிதைவைப் பற்றியே பேசுவான்.
எங்கள் கூட்டத்தில் முதன்முதலாய் தொடுதிரை போன் வாங்கி அசத்திய ராஜதுரை, இயற்கை விவசாயம் என்று இறங்கி, அதில் தோற்று, செய்வதறியாமல் கோவில் குளம் என்று சுற்றித் திரிவான் என்று எவரேனும் சொல்லியிருந்தால்கூட ஒருவேளை நம்பியிருப்பேன். ஆனால் ஏறக்குறைய ஒரு கோமாளியைப்போல் நடந்துகொள்ளும் அந்தத் தாசில்தார் இவர்கள் யாருக்கும் தெரியாமல் வேறொரு குடும்பம் வைத்திருந்தார் என்றும், மகாலட்சுமியைப்போல் இருக்கும் ராஜதுரையின் அம்மா புற்றுநோய் கண்டு ஆறே மாதங்களில் வற்றி இறந்துபோவார் என்றும், அவர்கள் இறந்த அடுத்த வாரமே தனது இரண்டாம் தாரத்தை இந்த வீட்டினுள் குடியேற்றுவார் என்றும், இல்லம் நீங்குவதாகச் சொல்லும் ராஜதுரையைத் தடுத்து நிறுத்த அவர் எந்த முனைப்பும் காட்டாமல் இருப்பார் என்றும் சொல்லியிருந்தால் நிச்சயமாக நம்பியிருக்கமாட்டேன்.
அடுத்த ஐந்து வருடத்திற்குள், ரசித்துக் கட்டிய இந்த வீட்டையும், செல்வாக்கு மிகுந்த சுற்றத்தையும் துறந்துவிட்டு தாசில்தார் ஊரைவிட்டே சென்றதற்குக் கடன் தொல்லையே காரணம் என்று சிலரும், இரண்டாம் தாரத்தின் மூலமாகப் பிறந்திருந்த மகள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது திடீரெனக் கர்ப்பமானதே காரணம் எனப் பலரும் சொல்லிக்கொள்கிறார்கள்.
***
பெரும் தொழிலதிபரின் ஒரே வாரிசாகப் பிறந்து, குடிபோதையில் ஒரு பெண்ணைத் தனது வாகனத்தைக்கொண்டு இடித்துக் கொன்ற ராஜேஷ், திடீரென முகநூலில் இரண்டு நாட்கள் மட்டும் பேசிவிட்டு, இரண்டாம் நாள் இரவில் தனது காதலைச் சொல்லிவிட்டு, மறுநாளே தனது கணக்கை அழித்துவிட்டு, அடுத்த இரண்டாம் மாதத்தில் எவனோ ஒருவனை மணம் செய்துகொண்ட கலைவாணி, பள்ளியின் விடுதியில் பிற மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால் தூக்கில் தொங்கிய அகிலன் எனப் பலதரப்பட்ட நினைவுகள் தெருநாய்களைப்போல் துரத்த, வண்டியை வேகமாகச் செலுத்தி கிருஷ்ணகுமாரின் வீட்டின் வாசலில் நிறுத்தினேன்.
இங்கே வந்ததே பெரும்பிழையெனத் தோன்றத் தொடங்கியிருந்தது.
ரயில் பிடிக்கவேண்டும் என்றும், சுமந்துசெல்ல நான்கைந்து பைகள் இருப்பதாகவும் அவன் கேட்டுக்கொண்டிருந்தபோது சட்டென மறுக்கத் தோன்றவில்லை.
கிருஷ்ணகுமாரை அத்தனை எளிதாக என்னால் புறக்கணித்துவிட முடியுமா என்ன?
வீட்டினில் இருக்கும் மருந்து மாத்திரைகள் அனைத்தையும் ஒருசேர உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றபோது தன்னுடைய வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு என்னுடன் மருத்துவமனையில் ஒருவாரம் உடனிருந்தவன் அவன்.
எங்கெங்கோ கடன் வாங்கி, ஏதேதோ தொழில்களில் முதலீடு செய்து பணத்தை எல்லாம் இழந்து, கஞ்சிக்கு வழியில்லாமல் நடுத்தெருவில் நின்றபோது என்னை சென்னை அழைத்துச் சென்று ஏறக்குறைய எட்டுமாத காலம் சோறுபோட்டுப் பார்த்துக்கொண்டதும் அவன்தான்.
கிருஷ்ணகுமார் என்னிடம் கேள்விகளே கேட்பதில்லை.
மிகை போதையில் இருந்த பீர்முகம்மதிடம் பைக்கைக் கொடுத்தனுப்பியது ஏன் என்றோ, ராஜேஷிடம் பொய்கள் பல சொல்லி பணம் பறித்ததைப் பற்றியோ, இறுதிவரை உடன் நின்று பொறுப்புகளை இழப்புகளைப் பகிர்ந்துகொள்ள முடியாத பட்சத்தில் ராஜதுரையை, அவனுக்குச் சற்றும் பொருந்தாத இயற்கை விவசாயத்தினுள் இழுத்துவிட்டது எதற்காக என்றோ அவன் கேட்டுக்கொண்டதே இல்லை.
“நடந்தது நடந்துபோச்சு… செஞ்சது எல்லாத்துக்கும் வட்டியும் முதலுமா வெலய கொடுத்தாச்சு… பிறவென்ன? சின்னதா எங்கனயாச்சு வேலைய பாத்துட்டு, நல்லவனா இரு” என்று ஒரே ஒருமுறை அவன் சொன்னதன் பெயரில்தான் ஸ்விக்கியில் டெலிவரி பாயாக பணிக்குச் சேர்ந்தேன்.
பெண்கள் சமாச்சாரங்களில் நான் கொண்டிருக்கும் பித்து மட்டுமே அவனைக் கொஞ்சம் சஞ்சலப்படுத்தும். தகாத நேரங்களில் என் கைப்பேசிக்கு வரும் அழைப்புகளைப் பார்க்கும்போதெல்லாம் குற்றவுணர்ச்சியில் அவன் முகம் வாடுவதைப் பலமுறை கண்டிருக்கிறேன்.
அதுபோன்ற சமயங்களில் சிறிது நேரம் என்னுடன் எதுவும் பேசமாட்டான் கிருஷ்ணகுமார்.
பிறகு ஏதேனும் ஒன்றைச் சொல்லி அவனே என்னைச் சிரிக்கவைத்துவிடுவான்.
குலுங்கிக் குலுங்கி அவன் சிரிக்கும்போதெல்லாம் என் கண்கள் அவனது புருவத்தின் அருகே இருக்கும் தழும்பையே சுற்றிவரும்.
பள்ளி நாட்களில், மலர்விழியின் பொருட்டு அடித்துக்கொண்டபோது, கையில் வைத்திருந்த டீ கிளாஸைக் கோபத்தில் நான் வீசியடித்ததால் உண்டான அந்தக் காயத்தைப் பற்றியும், அதன் பின்னிருக்கும் அபத்தத்தைப் பற்றியும் பேசிச் சிரிக்கும் அளவிற்கு அதை நாங்கள் கடந்துவிட்டிருந்தோம்.
***
வழக்கம்போல் நெற்றி நிறையத் திருநீற்றுடன் வெளியே வந்தான் கிருஷ்ணகுமார்.
பைகளில் இரண்டை வாங்கி வண்டியின் முன்பக்கம் வைத்துக்கொண்டு மெதுவாக வண்டியைத் திருப்பியதும் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்துகொண்டான். கரடுமுரடான அந்தச் சாலையைக் கடப்பதுவரை நாங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
புறவழிச் சாலையை அடைந்ததும் மெல்ல பேச்செடுத்த கிருஷ்ணகுமார் எனது உடல்நிலை குறித்து விசாரித்தான். தொப்பைப் போட்டிருப்பதாகக் கேலி செய்தான். பின்னர் பிறந்து ஒருமாதமே ஆகியிருந்த தனது மகளைப் பற்றிப் பேசத் துவங்கினான்.
மார்க்கெட்டிங் துறையில் கிட்டியிருந்த புதிய வேலையைப் பற்றிக் கேட்டதற்கு அவனிடம் ஆரோக்கியமான, நேர்மறையான பதில்களே இருந்தன. எப்போதும் இலேசான அலுப்புடன் பேசுபவன் அப்போது மிகுந்த ஊக்கத்துடனும் லட்சிய நோக்குடனும் பேசியது உள்ளபடியே மகிழ்ச்சியளித்தது. சென்னை அண்ணாநகர் பிரதான சாலையில், உச்சபட்சக் கஞ்சா போதையில், வாயில் கோழை வடிய அவன் படுத்திருந்த காட்சி மனதினுள் வந்துபோனது.
ஆனால் எந்தப் படுகுழியிலும் நெடுங்காலம் முடங்கிக் கிடப்பவனல்ல அவன். கொட்டும் மழையில் சேற்றில் சிக்கி கீழே விழுந்த அன்றும், முதலில் எழுந்துகொண்டு சைக்கிளை நிமிர்த்தி, அசையமுடியாமல் படுத்துக்கிடந்த என்னைப் பார்த்து, “வா, போகலாம்!” என்று சொன்னது அவன்தான்.
ரயில் நிலையத்தின் அருகே நாங்கள் வழக்கமாகச் செல்லும் டீக்கடைய வந்தடைந்தோம்.
கடைசியாய் பார்த்த திரைப்படத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்த கிருஷ்ணகுமார் திடீரெனத் தனது கைப்பேசியை எடுத்து ஆர்வத்துடன் என் பக்கம் சாய்ந்தபோது ஒருகணம் நாங்கள் பால்யத்திற்கே திரும்பிவிட்டதைப்போல் என் மனம் மயங்கியது.
அவன் சுட்டிக்காட்டிய கைப்பேசி திரையில் ஒரு குழந்தை, சிகப்புநிற ஆடை அணிந்து பல பொம்மைகள் சூழ அமர்ந்திருந்தது. மிகவும் கலைநயத்துடன் எடுக்கப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தை எவ்வித உணர்ச்சியுமின்றி வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அப்போது குழந்தை யார் ஜாடையில் இருக்கிறது என்று உற்சாகத்துடன் கேட்டான் அவன்.
மூக்கின்மேல் உன்னைப்போலவும், மூக்கின் கீழ் உன் மனைவியை ஒத்த இருப்பதாகவும் சொன்னதற்கு விடுவிடுவென ஐந்தாறு படங்களைக் காட்டி, குழந்தை தன்னைப்போல் இல்லை என்றும், முழுக்க முழுக்க அம்மாவைப்போலவே இருக்கிறதெனவும் நிறுவ முயன்றான்.
நான் ஒப்புக்கொண்டேன். பிறகு குழந்தை வளர வளர அது உன்னைப்போலவும் இருக்கும் என்று சொன்னேன்.
கிருஷ்ணகுமார் ஒருகணம் என் முகத்தைப் பார்த்தான். பிறகு இலேசாகச் சிரித்துவிட்டு, இருக்கட்டும் என்று சொன்னான்.
நான் மெல்லிய முறுவலுடன் அவன் தோளைத் தட்டினேன்.
அதைப் பொருட்படுத்தாதவனைப்போல் கைப்பேசியில் மூழ்கியிருந்த கிருஷ்ணகுமார் சட்டென ஒரு காணொளித் துணுக்கை என் பார்வை முன் வைத்தான்.
திரையில் தெரிந்த காட்சியில் அவன் மனைவி, குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு அதனுடன் கொஞ்சிப் பேசிக்கொண்டிருந்தாள். பாலூட்டுவதற்குத் தோதாக அவள் அணிந்திருந்த தொளதொளத்த இரவு ஆடையைக் கருத்தில்கொள்ளாமல் உயரத்திலிருந்து அந்தக் காட்சியைப் படம் பிடித்திருந்தான் கிருஷ்ணகுமார். தருணத்தின் நெகிழ்ச்சியினால் அவளும் ஏற இறங்க இருந்த ஆடையை நேராக்கிக்கொள்ள முனைந்திருக்கவில்லை.
அக்காட்சியைத் தொடர்ச்சியாக நோக்க சங்கோசமாக இருந்ததால் முகத்தை மறுபுறம் திருப்பிக்கொண்டேன்.
திடீரெனக் காணொளியை நிறுத்திய கிருஷ்ணகுமார் என் பக்கம் பார்த்து, “பாத்தியா? கேட்டுச்சா உனக்கு?” என்றான்.
நான் முழித்தேன்.
“என்னல நீ!” என்றவன் மீண்டும் அந்தக் காணொளியை முதலிலிருந்து ஓடச்செய்து என் முகத்தின் அருகே வைத்தான்.
மழலை மொழியில் ஏதேதோ பிதற்றிக்கொண்டிருந்த குழந்தை, மாயக்கணம் ஒன்றில், “ம்மா!” என்றது.
இலேசாய் விதிர்த்த கிருஷ்ணகுமார் மீண்டும் என்னைப் பார்த்து, “கேட்டுச்சா?” என்றான்.
இரண்டொரு நொடிகளுக்கு அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ஏனோ குபீரென அழுகை வந்துவிட்டது.
******



