
வானத்தில் சூரியன் உக்கிரமாய் இருப்பதுபோல் தெரியவில்லை, கொக்கரிப்பது போல இருந்தது. இன்னும் சற்றைக்கெல்லாம் வானம் தீப்பிடித்து எறிந்துவிடும் என்கிற அளவுக்கு வெப்பம் வியாபித்திருந்தது. ஆனால் அந்த வெப்பம் துளியும் தெரியாத அளவிற்குச் சாலையோரத்துப் புங்கை மரம் ஒன்றில் கீழ் இருபது நபர்களுக்கு மேல் நின்றுகொண்டிருந்தார்கள். அத்தனை பேரும் பயணிகள். அவர்கள் அருகே ஓர் அரசுப் பேருந்து, தேமே என நின்றுகொண்டிருந்தது. புங்கை மரத்தின் இரண்டு கிளைகளை ஒடித்து பேருந்துக்கு முன்னேயும் பின்னேயும் போட்டிருந்தார்கள்.
“ஏழு மணிக்கே யான் இந்தச் சூரிப்பயா சவட்டி சவட்டி அடிக்கான்.. என்ன டென்சன்னு தெர்லயே..” என்று கவலைப்பட்டுக்கொண்டார் ஒரு பெரியவர். அவர் சுட்டு விரலைப் பிடித்து நின்றுகொண்டிருந்த அவரது பேரன் அவரைப் பார்த்துக் கேட்டான், “இந்த மரம் எப்படித் தாத்தா இவ்வளவு பெரிய வெயிலை வடிகட்டி நெழல மட்டும் தருது..” அந்த வாண்டுப் பயலின் கேள்வியைச் சுற்றி நின்றவர்கள் ரசித்தார்கள்.
ஆனால் புங்கை மரத்தின் நிழலையோ அந்த வாண்டுப் பயலின் ரசமான கேள்வியையோ ரசிக்கும் மனநிலையில் நாதன் இல்லை. நாதனுக்கு அவ்வளவு எரிச்சலாக இருக்கிறது. தூத்துக்குடியிலிருந்து கிளம்பிய பேருந்து பாதியிலேயே பழுதாகி நின்றுகொண்டிருக்கிறது. முகூர்த்தம் முடிவதற்குள் எப்படியாவது திருநெல்வேலியில் நடக்கும் மணியனின் திருமணத்திற்குச் சென்றுவிட வேண்டும்.
நாதனின் இந்தப் பதற்றம், மணியனது திருமணத்தைப் பார்த்து மகிழ்ந்திருக்க முடியாமல் போய்விடுமோ அல்லது அதில் கலந்துகொண்டு சிறப்பிக்க முடியாமல் போய்விடுமோ என்பதோ அல்ல. மணியனின் திருமணத்திற்குச் சென்று தண்ணீரைப் போட்டு தகராறு செய்ய வேண்டும் அல்லது சரியாக மணியன் தாலி கட்டும் வேளையில் நட்ட நடு மண்டபத்தில் வாந்தி எடுக்க வேண்டும். நாம் நினைத்த நேரத்திற்கெல்லாம் வாந்தி வருமா என்பது பற்றியெல்லாம் நாதனுக்கு மதியில்லை. ஆனால் இதுதான் நாதனின் சமீப கால இலக்கு. இத்தனைக்கும் மணியன் என்பவன், நாதனின் பிடிக்காத உறவினனோ, உயர் அதிகாரியோ, சமீபத்திய எதிரியோ அல்லது நெடுநாள் பகையாளியோ அல்ல. யாவரும் அருவருக்கத்தக்கதொரு இத்தனை குரூரமான வன்மம் நாதனின் நெஞ்சில் எப்படித் தோன்றியது என்றால் நாதனுடைய திருமணத்தில் மணியன் இப்படித்தான் செய்தான்.
அன்றைக்கு விடிய விடியக் குடித்துவிட்டு அதிகாலையிலேயே நாதனுடைய நண்பர்கள் அத்தனை பேரும் மட்டையாகிவிட்டனர். மணியனோ குடியர்களுக்கெல்லாம் குடியன். தனிப்பெருங்குடியன். அரைப் போதைக் குடியர்களெல்லாம் சாரைப் பாம்பென வளைந்து வளைந்து நடக்க, முழுப் போதையிலும் நெல்லையப்பர் ஆனித் தேரென அவ்வளவு அழகாக, சர்வ சாதாரணமாக நடப்பான். மதுவின் நெடியைத் தவிரப் போதையின் அடையாளம் எதுவும் அவனிடத்தில் தெரியாது. சொல்லப்போனால் போதையில் கொஞ்சம் தெளிவாகவே இருப்பான். மதுக்கடைகளில்கூட இவன் வாந்தியெடுத்து யாரும் பார்த்ததில்லை. அன்றைக்கு ஏன் அப்படி ஆனது என்று தெரியவில்லை. அத்தனை பேரும் மட்டையாகி விடுதி அறையில் கிடக்கும்போதுகூட தெளிவாகவே தன் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் எல்லாம் அணிந்து வரும் அளவிற்குத் தெளிவாகவே திருமண மண்டபத்திற்கு வந்தான். மண்டபத்தின் வாசலில் சந்தனக் குங்குமப் பன்னீர் வஸ்துக்களோடு மல்லிகைப்பூ மணக்க மணக்க நின்றிருந்த குமரிகள் கைகளில் இருந்த தட்டிலிருந்து எடுத்து, நெற்றியில் சந்தனக் கீற்றும் அதன் மத்தியில் குங்குமமும் வைப்பதற்குப் பதிலாகக் குங்குமத்தில் கீற்றும் அதன் மத்தியில் சந்தனப் பொட்டும் வைத்தபோதே மணியனை ஒரு மாதிரி பார்த்தார் அருகில் நின்றிருந்த மணப்பெண்ணின் தந்தை. அவன் எங்கு போகிறான் என்ன செய்கிறான் என்பதையும் கண்காணித்துக்கொண்டே இருந்தார். தாலி கட்டும் வைபவத்தைக் கண்ணாறக் காண்பதற்காக மேடையில் ஏறியவனை எல்லோரும் திரும்பிப் பார்க்க வைத்தது மதுவின் நெடி. எல்லோர் மூக்கினுள்ளும் முந்நூறு ஈக்கள் நுழைந்தது போலப் படபடவென்று தலை அசைத்தபடி, “யாத்தே.. என்னது இது..?” என்றனர்.
காலண்டரில் மகாலட்சுமி படத்தைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா.. அப்படியே ஒரு மூதாட்டி அங்கு இருந்தாள். வயதான மகாலட்சுமி அவள். மஞ்சளும் குங்குமமும் தாமரைப் பூவின் சிரிப்பையும் கொண்டிருந்த அந்த மூதாட்டி, அந்த வாடையால் அரண்டு போய், “என்னட்டீ.. ஏதோ கெட்ட வாட பொயல் மாரி அடிக்கி..” என்றாள். மீண்டும் அவளே, “யாத்தே.. மூக்க அறுத்துப் போடறலாம்லா தோணுது சூர்பப்பனகையாட்டம்..” என்றாள்.
சரியாக அந்நேரத்தில் “ஏஏஏ…வ்வே..” என்று ஆரோகணத்தில் பெரிதாக ஒரு ஏப்பம் விட்டான் மணியன். அது ஒரு பெரிய அமங்கலத்தின் அசரீரி போல இருந்தது. மூச்சைத் திணறச் செய்யும் ஒரு கெட்ட புளித்த வாடை, அந்த மணமேடையின் குதூகல மனநிலையைக் கூரறுத்தது. பல பேர் துப்பறியும் சாம்பு போல மூக்கைச் சொரிந்தபடியே இருந்தனர். மணமேடையில் இருந்த ஐயர் எப்படியோ மிகச்சரியாக மணியனைப் பார்த்து முகஞ்சுளித்தார்.
மணமேடையை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த அந்த மூதாட்டியை அழைத்து, “அந்தப் புள்ளையாண்டான தயவு பண்ணி கீழ இறங்கச் சொல்லுங்கோ..” என்று அவர் காதில் மெதுவாக கிசுகிசுத்தார்.
நண்பனை விரல் காட்டி ஐயர் ஏதோ குறிப்பிடுவதைக் கவனித்த நாதன் மேலே தலையைத் தூக்கி மணியனைப் பார்த்து, “வா மச்சி… பயலுவலக் காணும்.. இன்னும் தெளியலயா..” என்று சொல்லிச் சிரித்தான்.
மணமகள், மணியனைப் பார்த்து இலேசாய் சிரித்து, வாங்கண்ணே என்பது போலத் தலையாட்டினாள். மணியன் எதையும் மண்டையில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. மணியனிடமிருந்து பதில் சிரிப்போ வணக்கமோ வராதது கண்டு மணமகளுக்கு ஒரு மாதிரி ஆகிப்போனது. அந்த வினாடி மணியன் இந்தப் பூவுலகில் இல்லை. அந்த நேரம் மணியனின் வயிறு அவனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தது. அதன் பாஷை புரியாமல் அவன் அதை வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தான்.
‘மேடையில் நிற்பவனிடம் மணமகன் பேசுவதைப் பார்த்தால் மணமகனுக்கு உற்ற தோழனாய் இருப்பவன் போல் தெரிகிறது. இப்பொழுது இவனை என்ன சொல்லிக் கீழிறக்க முடியும்..’ என்று ஐயரும் மூதாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டனர். ஐயரிடமிருந்து சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்க ஒலிக்க மணியனின் வயிற்றுக்குள்ளிருந்தும் ஏதோ மந்திரங்கள் ஒலிக்க ஆரம்பித்தன. ஹோமத்திலிருந்து நெருப்பும் மெலிதான புகையும் வந்துகொண்டிருந்தது. இப்போது மணியனின் வயிற்றுக்குள் உலை கொதிப்பது போன்ற ‘ப்ளக் ப்ளக்’ சப்தங்களும், இரண்டு மூன்று குழந்தைகள் ‘தங்கு தங்கென’ தன் வயிற்றுக்குள் குதித்து விளையாடுவது போன்ற உணர்வும் ஏற்பட்டன. சொற்ப வினாடிகளிலேயே அவன் வயிற்றினுள் இருக்கும் உள் உறுப்புகள் எல்லாம் இரண்டு அணியாகப் பிரிந்து ஏதோ போர் நடத்திக்கொண்டிருப்பதுபோல அவன் உணர்ந்தான். சில வினாடிகளுக்குப் பிறகு இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்து மிகக் கனமான ஏதோ ஒன்றைக் கீழ் இருந்து மேலே கழுத்துக்குத் தள்ளுவதுபோல மணியனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. மணியனுக்கு குழப்பமாக இருந்தது, ஒருவேளை இதற்குப் பெயர்தான் வாந்தியா?
இதோ இன்னும் சில வினாடிகள்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் நாதன் தாலி கட்டிவிடுவான். பிறகு மேடையை விட்டு இறங்கிவிடலாம் என்று நினைத்தான். அப்போது நாதன் சொன்னது அவனுக்கு நினைவு வந்தது,
“மெட்ராஸ் பொண்ணு மாப்ள.. நம்ம நட்ப அவளுக்குக் காட்டணும்லா.. நீதான்டா எனக்குத் தாலியே எடுத்து குடுக்கணும்.. இல்லன்னா தாலிய அவ இடுப்புல கட்டீருவன்..” என்று வேறு சொல்லி இருக்கிறான். அது அவனுக்கு நினைவுக்கு வந்த கணம் மணமகளின் இடுப்பைப் பார்த்தான். தாலிக் கயிறு சிறியதாக இருந்தது. அவள் இடுப்பு பெரியதாக இருந்தது. ஆகவே இறங்கிவிடுவோம் என்றே நினைத்தான். திடீரென்று அவர்களது பதினைந்து ஆண்டு கால நட்பு ஒரு மாயக் கையாய் உருவெடுத்து வந்து அவன் பொடனியில் அறைந்து சொல்லியது.
“அடேய் மணியா.. மணமேடையில் அமர்ந்திருக்கும் இந்த கிளியோபாட்ரா எப்படியும் இன்றிரவோடு உங்கள் பதினைந்து ஆண்டுக்கால நட்பைச் செங்குத்தாகத் தூக்கிச் சிலுவையில் வைத்து ஆணி அறைந்துவிடுவாள். வாழ்வில் இதுவரை நீ எந்த நற்காரியமும் செய்ததில்லை. இனிமேல் செய்யப் போவதுமில்லை. இது ஒன்றைச் செய்துவிடு. இதுவே இறுதி காரியமாகவும் இருக்கலாம். அதையும் நீதான் செய்தாக வேண்டும். இந்தத் திருமணத்திற்குப் பிறகு, அவன் வாழ்வு ஒரு பூஞ்சோலை போலப் பூத்துக் குலுங்கினால், நீதான்டா நண்பா எனக்குத் தாலி எடுத்துக் கொடுத்தே என்று அவன் உன்னை ஒவ்வொரு இடத்திலும் எடுத்துச் சொல்லி பெருமை பொங்குவான். ஒருவேளை அவன் வாழ்வு, ஒரு குப்பைத்தொட்டி போலத் துர்நாற்றம் வீசினாலும், இந்த நாய்தாங்க எனக்குத் தாலி எடுத்துக் கொடுத்தது என்று சொல்லி அப்போதும் உன்னைத் தூற்றிச் சொல்லியாவது நினைவில் கொண்டிருப்பான். எப்படியாயினும் நீ அவன் வாழ்வின் மறக்க முடியாத நினைவுகளில் ஓர் அங்கமாகிவிடுவாய்..”
மணியனும் யோசித்துப் பார்த்தான். மணமக்களுக்குத் தாலி எடுத்துக் கொடுப்பது என்பது எத்தனை மங்கலகரமானது. எத்தனை புனிதமானது. வாந்தி வர்ற மாதிரி இருக்கு என்பது போன்ற அற்பக் காரணத்தினால் வாழ்வின் புனிதக் கணங்களை இழப்பதா. ச்சே..
இதோ அருகில் கீழே ஐயர் அமர்ந்திருக்கிறார். பொதுவாக எல்லாக் கல்யாண வைபவங்களிலும் அவர்தான் தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுப்பார். ஆனால் நண்பனுக்கு நாம்தான் கொடுக்க வேண்டும். ஆகவே முன்னரே இந்தத் தகவலை ஐயரிடம் தெரிவிக்க வேண்டும். அதைச் சொல்வதற்காக மெதுவாக நகர்ந்து ஐயரின் அருகில் போனபோது, மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருந்த ஐயர், இந்தப் பிரம்மஹத்தி ஏன் தன்னைப் பார்த்து வருகிறானென்று பீதி அடைந்தார். அவரிடம் தாலி நான்தான் எடுத்துக் கொடுப்பேன் என்று சொல்ல வந்தவனுக்கு சடக்கென ஒரு நொடியில் எல்லாம் மறந்து போனது. சிவந்து போன கண்களுடன் மலங்க மலங்க அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். ஐயரோ பெரும் பீதி அடைந்தார். மாப்பிள்ளையாய் உட்கார்ந்து இருந்த நாதன் சிரித்தபடியே ஐயரைப் பார்த்துச் சொன்னான்,
“பயப்படாதீங்க.. ஒன்னும் பண்ணாதுங்க.. ரொம்ப நல்ல பிராணி..”
மணியன் மிகவும் சிரமப்பட்டு ஒரு வார்த்தை ஒன்றை உதிர்த்தான்.
“ஹையர்..”
“இல்லப்பா.. நீதான் ஹையர்.. நா லோயர்..” – ஐயர் உண்மையிலேயே மிரண்டார்.
“நீ எதுவும் தாய்லி எடுத்துக் கொடுக்காண்டா.. எல்லா நான் பாத்துக்குருதென்.. ன்னா..” என்றான்.
அருகில் நின்றிருந்த அத்தனை பேரும் திடுக்கிட்டுவிட்டார்கள். ஐயர் விசுக்கென்று எழுந்து தாட் பூட்டென்று கத்தினார். அத்தனை பேரும் பதறிவிட்டார்கள். சுப மங்கலமாகச் சென்றுகொண்டிருந்த அனைத்து நிகழ்வுகளும் சட்டென்று நின்றுவிட்டன. எல்லோரும் ஐயரைச் சமரசம் செய்ய மன்றாடினார்கள். சடக்கென்று சமரசமாக அவர் உள்ளூர் ஐயரும் இல்லை; பெண் வீட்டார் அழைத்து வந்த மெட்ராஸ் ஐயர். நாதனைப் பார்த்து ஆவேசமாகக் கத்தினார்.
“தம்பீ.. இந்த விளையாட்டல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க.. மந்திரத்தை மாத்தி சொன்னேன்னா வாழ்க்கையே பேஜார் ஆயிடும்..”
“சாமி கோவிக்காதீய்ய.. அவன் தாலிதாஞ்சாமி எடுத்து குடுக்கிறேன்னு சொல்ல நெனச்சிருப்பான்.. எனக்காக மன்னிச்சுருங்க சாமி ஒக்காருங்க ஒக்காருங்க..” என்று ஐந்துக்கு மேற்பட்ட முறை நாதன் அவர் காலில் விழுந்து விழுந்து எழுந்தான்.
ஒருவழியாகச் சமரசமான ஐயர், இந்த கெட்ட வாடையை அகற்றுவதற்காகவாவது ஏதாவது ஸ்பிரே அடியுங்கள் என்றார். நாதனை அருகில் அழைத்து அவன் காதில் சொன்னார்.
“தம்பி, உன் நல்லதுக்குதான் சொல்றேன். தாலிய இவன்ட்ட குடுக்காத..”
“ஏஞ்சாமி..?”
“புதுப்பேட்டை படம் பார்த்திருக்கியா..?”
“இல்ல சாமி..”
“அப்ப ஓந்தலையெழுத்துபடியே நடக்கட்டும்..”
ஐயர் மீண்டும் மந்திரங்களை ஓத ஆரம்பித்தார். மணப்பெண் மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டாள். நாதன் காலில் விழாத குறையாத கெஞ்சி அவளைச் சமாதானப்படுத்தினான். இத்தனைக்குப் பிறகும் மணியன் மேடையை விட்டு இறங்கவில்லை.
“இன்னும் அந்த பன்னி யாம் அங்கனயே நிக்கான்.. எறக்கி உடுததுக்கு ஒருத்தருக்கும் தெம்பில்லையோ..” என்று ஆளாளுக்கு வசவு மழை பொழிந்தனர். ஆனால் ஒருவரும் மணியனை இறக்கிவிடவில்லை. திருமணத்திற்காக வந்திருந்த பெரிய மனிதர்களுக்கும் அவையோருக்கும் கல்யாணம் பாதி நின்று தொடர்ந்துகொண்டிருப்பது பெரிய மானக்கேடாகவும் பெரும் சங்கடமாகவும் போய்விட்டது. இதனிடையே வந்திருந்த உறவினர்கள் ஒவ்வொருத்தரும் ஆளாளுக்கு ஒவ்வொரு அனர்த்தங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தனர்.
“இந்த வீடியோக்காரன் அம்புட்டையும் எடுத்திருப்பாம்லா..?” என்றார் ஒருவர்.
“பொறவு… ச்சம்மூவ வலைத்தளத்தில ஏத்திட்டாம்னா நல்ல சில்றல்லாவே..!” என்றார் இன்னொருவர்.
“அவம் மேடையில ஏறுனதுலேந்து அந்த பிள்ளயதான்யா பாத்துட்டு இருக்கான்..” என்றார் இன்னும் ஒருவர்.
“இப்ப கேசுல சிக்குனாம்லா கஞ்சா கணேசன்.. அவினுக்குக் கஞ்சா காண்ட்ரேட்டு புடிச்சு குடுத்ததே இவந்தானாம்..” என்று மேலும் ஒருவர்.
ஒரு குமரி, இன்னொரு குமரியிடம் இப்படிச் சொல்லிக்கொண்டு சென்றாள்,
“அந்தக் குடிகாரன் தண்ணித் தொட்டின்னு நெனச்சு சாம்பார் அண்டால மூஞ்ச முக்கிட்டானாம்ட்டீ.. “
ஐயர் ட்ரிபிள் சம்பளம் கேட்பதாக வேறு ஒரு புரளி சுற்றிக்கொண்டிருந்தது. திருமாங்கல்யமானது இன்ன பிற வஸ்துக்களோடு ஒரு தட்டில் சென்று எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு திரும்பி வந்தது. ஐயர் மந்திரங்களை ஓதியபடியே மாங்கல்யத்தை எடுத்து நாதனிடம் நீட்டினார். நாதன் மணியனைக் கைகாட்டினான். மணியனின் வயிற்றுக்குள் கிளைமாக்ஸ் ஃபைட் நடந்துகொண்டிருந்தது.
“குனிஞ்சு வாங்குடா அபிஷ்டு..” என்று ஐயர் கத்தவும், மணியன் குனிந்து மாங்கல்யத்தைத் தன் இரண்டு கைகளால் பிடிக்கவும் மணியனின் வயிற்றுக்குள், வில்லனை அலேக்காக தூக்கி, ஹீரோ இறுதிக் குத்து ஒன்று விடவும் வில்லன் ஆகாயத்தை நோக்கிப் பறந்தான். வயிற்றுக்குள்ளிருந்து மேலெழும்பி வந்த வில்லன் அப்படியே மொத்தத் திரவமாக மணியனின் வாய் வழியாக வெளியே வந்து பொலபொலவென விழுந்தான்.
“…வேவ்வ்வாவா..” என்று வாந்தியால் ஒரு பேரலறல் அலறினான் மணியன். அது ஒரு காட்டு யானையின் பிளிறல் போல் இருந்தது. அவன் எடுத்த வாந்தியின் கால் பங்கு, ஹோமக் குண்டத்தில் விழுந்து, அணைந்து போன நெருப்பைப் பார்த்து, ‘ஓம் சாந்தி சாந்தி’ என்றது. மீதமெல்லாம் மணமக்கள் உடைகளில்.
சுற்றி இருந்தவர்கள் அவசர அவசரமாக மணமக்களைக் கிளப்பி அருகில் இருந்த அறைக்குக் கூட்டிச் செல்ல, இன்னொரு முரட்டுக் கும்பல் மணியனைத் தரதரவென்று இழுத்துச் சென்றது.
அதன் பிறகு நாதன், மணியனைப் பார்க்கவே இல்லை. ஆனால் அன்றைய சம்பவத்தால் நாதனும் அவன் குடும்பமும் அவன் மனைவியும் அடைந்த அவமானங்கள் நிறைய. அவர்கள் எந்தத் திருமணத்திற்குச் சென்றாலும் எல்லோரும் இதையே நினைவூட்டுவார்கள். தெருவில் நடந்து சென்றால் திண்ணையில் உட்கார்ந்திருப்பவர்கள் வெடித்து வெடித்துச் சிரிப்பார்கள். ஊர்க்கோவிலுக்குச் சென்றால்கூட, “தம்பி.. உடுத்திருக்கது அந்த வேட்டி சட்ட இல்லல்லா..” என்று சொல்லிச் சிரிப்பார்கள். ஒரு நாள் குடும்பத்தோடு பொருட்காட்சிக்குச் சென்றிருந்தார்கள். “அந்த ராட்டுனத்துக்கிட்டல்லா போவதடே.. எவனாவது மேலருந்து வாந்தியெடுத்து ஒங்கமேல தெளிச்சிறப் போறானுவ..” என்றனர். வீட்டைவிட்டு வெளியே வந்தாலே நாதனுக்கு ரத்த அழுத்தம் எகிறும்.
இன்னொரு நாள் இப்படித்தான்.. நாதனின் மனைவிக்குத்தான் கருவுற்றிருக்கிறோமோ எனச் சந்தேகம் வலுக்க, அவனிடம் தனக்கு வாந்தி வாந்தியா வருது எனச் சொல்ல இவளும் கேலி செய்கிறாள் என்றெண்ணி அவளை ஓங்கி அறைந்தது பெரும் பிரச்சனையாக வெடித்தது. இனி இங்கிருப்பது சரியாகாது என்றெண்ணிய நாதன் குடும்பத்தினர் திருநெல்வேலியிருந்து தூத்துக்குடிக்கு இடம்பெயர்ந்தனர்.
ஏழு வருடங்களுக்குப் பிறகு மணியனுக்கு எப்படியோ நாதனின் முகவரி கிடைத்தது. அப்போதுதான் மணியன் திருமணம் செய்து கொள்ளும் நிலையில் இருந்தான். திருமண அழைப்பிதழை அந்த முகவரிக்கு அனுப்பி இருந்தான். அதனோடு ஒரு மன்னிப்புக் கடிதத்தையும் இணைத்து அனுப்பியிருந்தான். அதில் மன்னிப்பை மட்டுமே கோரியிருந்தான். அந்தக் கடிதத்தைப் பிரிக்காமலேயே நாதன் சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்தான். ஆனால் என்னவோ ஒன்று அவனை அந்தத் திருமண அழைப்பிதழைக் கிழிக்கவிடாமல் செய்தது. நாதனைப் பொறுத்த மட்டிலும் அது நட்பாக இருக்க வாய்ப்பு இல்லை. அந்தத் திருமண அழைப்பிதழ் அவனைத் தூங்கவிடாமல் செய்தது.
“இத்தனை வருடங்களுக்குப் பிறகு மணியன் ஏன் எனக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டும். எனக்குப் பிடித்த எவளையாவது திருமணம் செய்ய இருக்கிறானா.. அதை நான் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறானா.. ஒருவேளை ஆஸ்தி அந்தஸ்தில் என்னைவிட உயர்ந்துவிட்டானா.. அந்தப் பகட்டையெல்லாம் என்னிடம் காட்ட விரும்புகிறானா.. ஏன் இத்தனை வருடங்கள் திருமணம் செய்யாமல் இருந்திருக்கிறான்.. எப்படி இருந்தால் எனக்கென்ன.. அவனால் என் குடும்பமே இடம் பெயர்ந்தது.. என் மானமும் மரியாதையும் போனது.. ஊரே சொல்லிச் சொல்லிச் சிரித்ததே.. எல்லாம் அந்தப் பாவியால்தான்.. அவனைச் சும்மா விடக்கூடாது.. பழிக்குப் பழி..” என்று எண்ணி திருமணத்திற்குக் கிளம்பிய நாதன்தான் இப்போது பேருந்து பழுதாகி நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருக்கிறான்.
அடுத்தடுத்து வந்த அத்தனை பேருந்துகளிலும் படிகளில் தொங்கத் தொங்க அதிகக் கூட்டமாய் இருந்தன. “சவத்து மூதீய்யோ.. எங்கதான் போவானுவளோ.. இப்பிடி தொங்கிகிட்டு..” என்று இறைந்தார் அந்தப் பெரியவர். தன் தாத்தாவைப் பார்த்து அந்த வாண்டுப் பயல் சொன்னான், “எல்லாரும் நம்மள மாரிதான தாத்தா..”
நாதனுக்கு அந்தப் பையன் சொன்ன வாக்கியம் என்னவோ போல இருந்தது. பிறகு வந்த தனியார் பேருந்தில் அவ்வளவு கூட்டமில்லை. சில இருக்கைகள்கூட காலியாகக் கிடந்தன. யாரோ ஒருவரின் பக்கத்தில் அமர்ந்தான். பக்கத்தில் அமர்ந்திருந்தவரை எங்கோ பார்த்தது போல் இருந்தது. வெள்ளைச் சட்டையும் வெள்ளை வேட்டியும் அணிந்திருந்தார். அவரிடம் பவ்யமாய் கேட்டான்,
“சார்.. நீங்க பேட்ட ஸ்டேசன் இன்ஸ்பெக்டர்தான..?”
அவருக்கு இவனை அடையாளம் தெரியவில்லை.
“சார்.. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால கல்யாணத்துல ஒருத்தன் வாந்தி எடுத்து கலாட்டா ஆன கேசு. நீங்ககூட என்னயலா விசாரிச்சீங்க சார்”
“ஆமா..!” என நினைவு கூர்ந்தார்.
“அந்தக் கல்யாண மாப்பிள்ளை நாந்தான் சார்..” என்றான் நாதன்.
கொஞ்சம் சிரித்து ஏதோ நினைவு வந்தவராய், “நாதன்ல ஒங்க பேரு..” என்றார்.
அவன் ‘ஆமாம் சார்’ என்று தலையசைத்தான்.
“இப்பயும் நீங்க ரெண்டு வேரும் ப்ரண்ட்ஸாதான் இருக்கீயளா?”
“சம்பவத்துக்கு அப்புறம் நான் இன்னும் அவனப் பாக்கவே இல்ல.. பாக்கவும் விரும்பல சார்.. இன்னிக்கு அவனுக்குக் கல்யாணம்.. தபால் அழைப்பு வந்துருந்திச்சி.. என்னமோ திடீர்னு கிளம்பிட்டன்.. அதுக்குதான் போயிட்ருக்கேன்..”
“ஸச் எ பெக்யூலியர் கேஸ் இல்ல.. (கொஞ்ச நேரம் இருவரும் அமைதியாக இருந்தார்கள்) தம்பி.. நா போலீஸாவுததுக்கு முன்னாடி எப்பயும் என் தாத்தா கூடதான் சுத்திட்டு கெடப்பன். அவ்வோ எப்பயும் சொல்ட்டே இருப்பாவ.. மனுஷங்க ஒரே மாரியானவங்க.. அன்பானவங்க.. ரொம்ப கருண உள்ளவங்கன்னு.. செல நேரத்துல நம்பத் தோணும்.. பல நேரத்துல தாத்தா ஒரு லூசுன்னு தோணும்.. ஆனா என் தாத்தா சொன்னதுதான் ரொம்ப சரி.. இந்த முற்றிலும் உண்மைன்னு சொல்லுவாவல்லா அது மாரி.. தாத்தா சொல்லுவாவ.. ஒரு பிள்ள சாக்கடைல உழுந்துட்டான்னா.. அந்த வினாடிய கவனி.. சுத்திருக்க எல்லாரும் போய் காப்பாத்துவாங்க.. அந்த கூட்டத்தில ஏழ இருப்பான் பணக்காரன் இருப்பான் நல்லவன் இருப்பான் கெட்டவன் இருப்பான். இன்னும் பலவிதமான மனிதர்கள் இருப்பாங்க. அந்த வினாடியில் அவங்க யாரும் எதுவும் கிடையாது… மனுஷங்க.. ஒரே மாதிரியான மனுஷங்க..”
அதைக் கேட்ட நாதனுக்கு எதனாலோ கண்ணீர் வந்தது. இன்ஸ்பெக்டர் தொடர்ந்து பேசினார்.
“ஒவ்வொரு வினாடியிலும் அந்தந்த நேர உணர்ச்சிகள்தான் மனிதர்களை இயக்குது. காமெடி சீன் வந்தா எல்லாருமே சிரிக்கிற மாரி.. சாவு வீட்டுக்கு போனா எல்லாருமே அழுவுற மாரி.. வீ ஆல் ஆர் ஜஸ்ட் ஏன் எமோஷனல் பபுள்ஸ்.. இல்லியா தம்பி..”
“ஆனா சார்.. நீங்க இதெல்லாம் ஏன் என்கிட்ட..? எனக்குப் புரியல..” என்றான் நாதன்.
“மனுஷங்க எல்லாம் ஒரே மாதிரியானவங்கன்னு என் தாத்தா சொன்னது என்னப் பொருத்தமட்டிலும் சாதாரணமான வார்த்தை கெடயாது தம்பி.. அது ஓர் அற்புதமான ஒளி.. என் தாத்தாவுக்கு அப்புறம் நா பார்த்த அற்புதமான ஒளி – மணியன்..”
நாதன் திடுக்கிட்டான்.
அன்றைக்குத் திருமண மண்டபத்திலிருந்து நாதனின் உறவினர்கள் மணியனை தரதரவென்று இழுத்துச் சென்றது மட்டும்தான் நாதனுக்குத் தெரியும். போலீஸ்காரர்கள் விசாரணையென்று வந்த பிறகுதான் மணியனை அடித்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டான். அதுவும்கூட அவனுக்குத் தேவைதான் என்றே நாதன் நம்பினான். அதற்குப் பிறகு மணியனைப் பற்றிய எதையும் நாதன் கேட்கத் தயார் இல்லை. ஏழு வருடங்களாகக் கேட்கவும் இல்லை.
சம்பவத்திற்குப் பிறகு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தான் மணியன். திருமணத்துக்கு வந்திருந்த உற்றாரும் உறவினரும் மணியனுக்கு சீரும் சிறப்புமாகச் சடங்கு செய்திருந்தனர். அடித்துத் துவைத்து வாயைக் கிழித்திருந்தார்கள். எப்படியோ யாராலோ இடது கை சுட்டு விரல் துண்டாகியிருந்தது. துண்டான விரலும் எங்கேயென்று தெரியவில்லை. பிளாஸ்டிக் நாற்காலி, இரும்பு மடக்கு நாற்காலி, துடைப்பம், ஒட்டடை கம்பு, வாளி, செம்பு எனத் திருமண மண்டபத்தில் கிடைக்கக் கூடிய அத்தனை பொருட்களாலும் அவனை அடித்து நொறுக்கியிருந்தனர். மொத்த உடம்பிலும் ஏழு தையல்கள். போலீஸாரின் தனித்த விசாரணையில் மணியன் கண்ணீருடனே அத்தனை தெளிவாகக் கூறியிருந்தான். “யார்மீதும் எந்தத் தவறும் இல்லை. தவறு முழுமையும் என்னுடையது” என மணியன் சொன்னான். யார்மீதாவது புகார் அளிக்க நினைக்கிறாயா என்று இன்ஸ்பெக்டர் கேட்டபோதுகூட, “என் மீதுதான் நான் புகார் அளிக்க வேண்டும். பாவம் அவர்கள். சந்தனமும் பன்னீரும் தெளித்து வாழ்த்துச் சொல்ல வேண்டிய என் தங்கங்களின் மீது என் வாந்தியை அல்லவா தெளித்தேன். என்ன அசிங்கம். எத்தகையதொரு அவலம். இது ஒரு வாழ்நாள் கறையல்லவா.. இதை எப்படி அவர்களால் அகற்ற இயலும்? என் தலையை அவர்கள் துண்டித்திருந்தால்கூட அந்நேரத்தில் அது சரியென்றே சொல்லுவேன்.. இந்தத் தவற்றுக்கு இன்னும் எனக்குத் தண்டனை உண்டு.. இனி வாழ்நாளில் ஒருபோதும் நாதன் என்னோடு பேசப் போவதில்லை” என்ற மணியனைப் பற்றி இன்ஸ்பெக்டர், நாதனிடம் சொன்னதும் நாதன் உறைந்தே போனான்.
திடீரென்று நாதனின் மூளை வேறு மாதிரி இயங்கியது. ஒரு வாந்திக்காக எங்கேயும் இப்படி ஓர் அநீதி நிகழ்த்தப்படுமா? நிகழ்த்தப்பட்ட அநீதியில் விரல் துண்டாகுமா? உடம்பில் ஏழு தழும்புகள் உண்டாகுமா? என்ன ஓர் அநீதி?
இன்ஸ்பெக்டர் சொன்னார், “நான் அனுபவிச்சு பாத்துருக்கன் தம்பி.. என் தாத்தா சொன்னத உடுங்க.. இப்ப நா சொல்லுதன்.. மனுசனுவோல்லாம் ஒரே மாரியானவனுவோ… ஒளி பொருந்தியவனுவோ..”
திருநெல்வேலி பேட்டையில் வாழை மரங்கள் பேனர் சகிதம் எனக் களைகட்டிய துர்கா மஹாலின் முன்பு நின்றுகொண்டிருக்கிறான் நாதன். மணியனின் முகத்தைப் பேனரில் காண்கிறான். முகத்திலேயே மூன்று தழும்புகள். இடது கண்ணின் இமை கொஞ்சம் மேலே தழும்பாய் தள்ளியிருந்தது. வாய் கொஞ்சம் கோணலாய் இருக்கிறது. படத்தில் ஒரு கம்பு ஊன்றி நின்றுகொண்டிருக்கிறான். மணியனுக்கு இழைக்கப்பட்டது வெறும் அநீதியில்லை. அது அநீதிக்கும் மேலான ஒன்று. நாதனின் நெஞ்சில் இருந்த வன்மமெல்லாம் மெழுகென உருகிக்கொண்டிருந்தது. பழைய மணியனின் முகமே இல்லை அது. அவனுக்குக் கண்களில் நீர் எழும்புகிறது. உள்ளே சென்ற பிறகு மணியன், தன்னைப் பார்த்துச் சிரித்த முகத்தோடு எப்படி மாப்ள இருக்கே என்று கேட்டால் தான் என்னாவேன் என நினைத்துப் பார்த்தான். நாதனின் இதயம் ஹெவி பேஸில் ஒலிப்பது அவனுக்கே கேட்டது. மஹாலின் உள்ளே ஒரு பாட்டுக் கச்சேரி நடந்துகொண்டிருக்கிறது. அதில் யாரோ ஒரு பாடகன் ஏனோ தழுதழுத்த குரலில் பாடுகிறான். அதைக் கேட்ட நாதன் நெஞ்சம் வெடித்து ஓவென்று அழுது அலறி மண்ணில் சாய்ந்தான்.
“ஒன்றாய் காணும் வானம் என்றும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை..”
********



