இணைய இதழ் 125

தலைமுறை மாற்றங்கள் – உஷாதீபன்

சிறுகதை | வாசகசாலை

எந்தக் காரியத்தையும் சுறுசுறுப்பாகவும் திருத்தமாகவும் செய்யத் தெரியாத ஒரு ஜீவன் வாய் கிழியப் பேசுவதுதான் எரிச்சலை ஏற்படுத்தியது லோகநாதனுக்கு. எதையும் எடுத்துச் செய்யும் திறனில்லாத பெண்ணுக்கு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது என்று நினைக்கத் தலைப்பட்டார்.

எந்த வீட்டு வேலைக்கும் பழக்காம, காரியார்த்தமாக சுறுசுறுப்பா இல்லாம, உட்கார்ந்த இடத்துல திங்கறதுக்கும் தூங்கிறதுக்கும் மட்டும் பழக்கப்படுத்தியா ஒரு பெண்ணை வளர்க்கிறது? சோம்பேறியா இது? – ஐயப்பட்டார்.

“அம்மா… தண்ணி வேணும்… ” – அவர் வீட்டுக்கு முதன் முதல் பெண் பார்க்கப் போயிருந்தபோது வித்யா குடிக்கத் தண்ணீர் கேட்ட அந்த நிகழ்வு இவருக்குள் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. ஒருவேளை கால் கீல் முடமோ என்று எடுத்த எடுப்பில் சந்தேகப்பட்டார்.

“நீ கொஞ்சம் எடுத்துக் குடியேன்டி… தண்ணியெல்லாமா உனக்குக் கொண்டு வந்து தரணும்…”  – இப்படிப் பதில் சொல்லியிருக்கலாம்தான். எப்போதோ ஒரு வேளை உட்கார்ந்த இடத்திலிருந்து தண்ணீர் கேட்கும் பிறவிக்கு இப்படிப் பதில் கொடுப்பதில் தவறில்லைதான். ஆனால் எப்போதுமே சோம்பேறிக் கழுதையாய் இடத்தைத் தேய்த்துக்கொண்டு, இருக்கும் இடத்தில் பிசினாய் ஒட்டிக்கொண்டு, கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் இப்படி இருந்த இடத்திலிருந்து தண்ணி கொடு என்று கேட்கும் இருபத்தைந்து வயசுப் பெண்ணை என்னவென்றுதான் நினைப்பது? செல்லம் கொடுத்து வைத்திருப்பதற்கும் ஓர் அளவில்லையா?

இதென்ன இப்படி வளர்த்து வச்சிருக்காங்க…? என்றுதான் தோன்றியது லோகநாதனுக்கு. பெருத்த சந்தேகத்தோடு மனைவி காஞ்சனாவைப் பார்த்தார். அவள் கையமர்த்தியதும், ‘அவசரப்படாதீங்க…’ என்று முனகியதும்  தயங்க வைத்தது.

இவரைப் பொறுத்தவரை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

திரும்பவும் ஒரு நாள் இவரே திடீர் விசிட் அடித்தபோது மணி பதினொன்றான அந்த வேளையும் அவள் உறங்கிக்கொண்டிருந்தது இவரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுதான்.

“ராத்திரி பன்னெண்டு வரை டியூட்டி… அதான்” என்று அவள் தந்தை ராமபத்ரன் சொல்லியது சமாளிப்பதற்காகத்தான் என்பது நன்றாகவே புரிந்தது. காரணம் மூன்றாவது முறையும் அது நிகழ்ந்ததே?

காஞ்சனா வாயைத் திறந்தாள். “ஐ.டி. ல வேலை பார்க்கிறவங்க பூராவும் இன்னிக்கு அப்படித்தான்… ராத்திரி ரெண்டு மணிக்கு ஒட்டல்ல போய்த் திங்குறாங்க… அது தெரியுமா உங்களுக்கு…? திங்குற வேளையா தூங்குற வேளையா அது? அந்த நேரம் தின்னா உடம்பு என்னத்துக்காகும்னு யாராவது யோசிக்கிறாங்களா? கிடையாதுல்ல… அத விடுங்க… இப்ப எந்தப் பொம்பளைதான் வீட்டுல சமைக்கிறா? ஆர்டர் பண்ணி ஆர்டர் பண்ணில்ல வாங்கிச் சாப்பிடுறாங்க? எல்லாமும் தலை கீழா மாறிப் போய்த்தான் கிடக்கு…” – இவள் எதற்கு இந்தளவுக்கு சப்பைக்கட்டுக் கட்டுகிறாள் என்றிருந்தது.

அதனால? அதனால என்னன்னு சொல்லு… நாமும் தலைகீழா மாறிக்கணும்ங்கிறியா? என்றார் பதிலுக்கு.

“அப்டிக் கட்டாயமா நினைச்சு இதையே முடிக்கணும்னு நான் சொல்லலை. இந்தக் காலம் அப்டித்தான் இருக்கு… என்று சொல்ல வந்தேன்” என்றாள்.

“பிடிச்சிருக்குப்பா… முடிச்சிரு…”  என்றான் கண்ணன். டிஸ்கஷன் ஓடிக்கொண்டிருக்கும்போது முடிவே செய்துவிட்டானே? வயசுப் பசங்களுக்கு கண்ணை மறைக்கும்னு சொல்வாங்களே… அதானோ இது? அந்தப் பொண்ணும் சரின்னிடுச்சி…? – அதுக்கும் மறைச்சிடுச்சோ? ஆச்சரியம் விலகவேயில்லை.

அரை மணிகூட இருக்காது… அதற்குள் பார்த்தாயிற்று… பேசியாயிற்று… முடிவும் செய்தாயிற்று. கோயிலில் அந்த சாமியே இந்த ஜோடியைப் பார்த்து அசந்து போய் அருள் செய்துவிட்டதோ? அதனால்தான் ரெண்டுபேருமே ஒரே ஊதுகுழல் போல் ஒத்து ஊதினார்களா?

எதிலும் நிதானம் வேண்டும். அந்த நிதானம் இளசுகளுக்கு வராது. அதனால்தான் பெரியவர்கள் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்பது.

பெரியவர்கள் பார்த்தா மட்டும் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுதா என்ன? அதுல சிடுக்கு விழுறதேயில்லையா? எத்தனை டைவர்ஸ் கேஸ் கேள்விப்படுறோம்? பார்த்தும் விசாரிச்சும்தான் தங்களோட அனுபவத்துல முடிவு செய்றாங்க பெரியவங்க… அதுவே எத்தனையோ இடங்கள்ல தப்பாப் போயிடுதே?

சார்… என்ன உங்ககிட்டேயிருந்து பதிலையே காணலை…? – கேட்டுக்கொண்டே வந்துவிட்டாரே மனுஷன். புளியங்கொம்புன்னு முடிவு பண்ணிட்டாரோ? விடாமப் பிடிச்சு உலுக்குறாரே?

“அவசரப்படாதீங்க சார்… கொஞ்சம் எனக்கு டைம் கொடுங்க… நான் நிறைய யோசிக்க வேண்டியிருக்கு…!” ஒப்புத் தாம்பூலம் மாற்றிய ரெண்டாவது நாளில்கூடத் தடுமாறாமல் படு நிதானமாய்ச் சொன்னார் லோகநாதன்.

“என்ன சார் இப்படிப் பேசுறீங்க?… எல்லாரையும் கூட்டி முடிவு பண்ணியிருக்கோமே சார்…? விருந்து வச்சிட்டமே…?”

“அதனாலென்ன சார்? ஊரையா கூட்டிட்டோம்? வீட்டுக்குள்ளதானே? வெறும் ஒப்புத் தாம்பூலம்தானே? நிச்சயதார்த்தமா நடந்து போச்சு…? பதர்றீங்க…? நான் மூனு தங்கைகளுக்குக் கல்யாணம் பண்ணினவன். எல்லாம் பார்த்திட்டுத்தான்வந்திருக்கேன்… எதுலயும் அவசரப்படுறதுக்கில்ல… எல்லாத்தையும் நிதானமாத்தான் அணுகுவேன்… நீங்க கிளம்புங்க… சொல்லியனுப்பறேன்… இல்லன்னா ஃபோன் பேசறேன்…!” தீர்மானமாகத்தான் சொன்னார் லோகநாதன்.

எப்படி இத்தனை கன கச்சிதமாய்ப் பேசினோம் என்று அவராலேயே நம்ப முடியவில்லைதான். ஆனால் நடந்து போனதே? – நினைத்தபோது இப்போதும்கூடப் பெருமூச்சு எழத்தான் செய்கிறது அவருக்கு.

“ரெண்டு பேரும் விரும்புறாங்க… பிடிச்சிருக்குன்னுட்டாங்க.. இத வேண்டாம்னு கண்ணன்டச் சொல்லி… அப்புறம் வேறே ஏதேனும் பார்த்து, தேடிக் கண்டுபிடிச்சப் பண்ணி வச்சு… அது சரியில்லாமப் போச்சுன்னா பிறகு நமக்குத்தான் சங்கடம். ஆயுசுக்கும் மனசு நிம்மதியில்லாமப் போகும்… முதல்ல பார்த்ததையே முடின்னு ஆயிரம் தடவை சொன்னனேப்பா… இப்போ எதையோ ஒண்ணைக் கொண்டு வந்து என் தலைல கட்டி என் வாழ்க்கையையே கெடுத்திட்டியேப்பா… ன்னு நாளைக்கு உங்களைத்தான் குற்றம் சாட்டுவான். கூண்டுல ஏத்துவான்… வேண்டாம்… அவன் சம்மதம்ன்னு சொன்னதையே அவனுக்குப் பண்ணி வச்சிடுங்க… அதான் நமக்கு நல்லது, நிம்மதி…”, காஞ்சனாவின் வார்த்தைகள் இவரைக் கட்டிப் போட்டுவிட்டன.

ஆனாலும் மனதுக்குள் ஆயிரம் சந்தேகங்கள் இருக்கத்தான் செய்தன. அந்தப் பெண் மருமகளாய் வந்து கொஞ்சமேனும் காஞ்சனாவுக்கு உதவியாய் இருக்குமா? வீட்டுக் காரியங்களில் பங்கெடுத்துக்கொண்டு அவளின் பாரத்தைக் குறைக்குமா? அவனுக்கு உறுதுணையாய் நிற்குமா? அல்லது கிடப்பது கிடக்கட்டும் என்று ஊர் சுற்றக் கிளம்பிவிடுமா? என்று நினைத்துப் பார்த்தார் லோகநாதன்.

எண்ணியதுபோலவே அது அடுப்படிப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அம்மா… நான் ஏதாவது செய்யட்டுமா? என்று பேருக்குக்கூட ஒரு வார்த்தை கேட்கவில்லை. நீ போய் உட்கார்ந்துக்கோ… நான் பார்த்துக்கிறேன்… என்று பெருமையாகத்தான் பீத்துவாள் இவள். ஆனாலும் கேட்கவில்லையே? அதுதானே பிரதானம்.! அவள் சொல்வதையும் மீறி எந்தப் பெண் செய்யும் இந்தக் காலத்தில்?

இப்போல்லாம் யாருமே வீட்டுல சமைக்கிறதில்ல… அது தெரியுமோ உனக்கு? எல்லாம் ஃபோன்ல ஆர்டர் பண்ணி வாங்கி சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்க… இந்தத் தெருவுலயே அங்கங்க முதுகுல பேக்கிங்கைத் தொங்க விட்டுண்டு, சிவப்பு யூனிபார்ம்ல எத்தனை பேர் சர்ரு… புர்ருன்னு அலையறான் பார்த்திருப்பியே? அதெல்லாம் என்னன்னு நினைச்சே? காலை டிபன்ல ஆரம்பிச்சு ராத்திரி முழுங்கிற வரைக்கும் எல்லாம் ஓட்டல்தான். அதெல்லாம் எப்பப் பண்ணினதோ? எதுல பண்ணினதோ? போனது போக மிச்சம்தான். எவனுக்கும் சேமிப்பைப் பத்திக் கவலை இல்லைன்னுதான் தெரியுது. நாம மாசத்தோட முதல் செலவு சேமிப்புன்னு வச்சிருந்தோம். அதெல்லாம் பழங்கதை. காலைல எழுந்திரிச்சவுடனே திங்கணும். பல்லு விளக்குவாங்களான்னுகூடச் சந்தேகமாத்தான் இருக்கு… பல பேரு குளிக்கிறதுகூட இல்ல…  சென்ட் அடிச்சிட்டு வேறே டிரஸ் எடுத்துப் போட்டுக்கிட்டு ஆபீசுக்குக் கிளம்பிடுறான். நாறப்பயலுங்க…!!

எதையும் நினைச்சுப் பார்க்க நேரமில்ல இவுங்களுக்கு. சனி, ஞாயிறுன்னா வெளிலதான் சகலமும். ஓட்டல்ல மூக்கப்பிடிக்கத் தின்னுட்டு வந்து படுக்கைல விழுறாங்க… அது வயித்துக்கு ஒத்துக்குமா, ஒத்துக்காதான்னு நீயும் நானும்தான் யோசிச்சிட்டு, பயந்திட்டு உட்கார்ந்திருக்கணும்… அவுங்க அதப்பத்தியெல்லாம் நினைக்கிறதேயில்ல. அப்படியான யோசனையே அவுங்ககிட்டே கிடையாது. அதுதான் உண்மை. நல்லா ஊர் சுத்தணும்… கண்ணுல கண்ட பொருட்களை வாங்கணும்… விதவிதமாத் திங்கணும்… ஜாலியாத் திரியணும்… சந்தோஷமா இருக்கணும்… அது ஒன்னுதான் குறிக்கோள்…!

பதில் பேச முடியாமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் காஞ்சனா. அவளுக்கும் மனசுக்குள் பயம் தோன்றியிருக்குமோ என்னவோ? என்னென்னவோ சொல்றாரே? காலம் அப்படியா மாறிப் போச்சு? அநேகக் கேள்விகள் அவளிடம்!

“உனக்கும் எனக்கும் இந்த ‘ஜாலி’ங்கிற வார்த்தையே தப்பாத் தெரியும். காலிப் பயக பண்ற வேலைன்னு நினைப்போம்… ஆனா இன்னிக்கு இளைய சமுதாயமே அப்படித்தான் இருக்கு… அவுங்க லைஃப் ஸ்டைலே மாறிக் கிடக்கு… அதென்ன லைப் ஃஸ்டைல்… நாகரீகமா இருக்குன்னு நீ நினைப்பே… அன்றாட வாழ்க்கை முறையைத்தான் அப்படிச் சொல்றாங்க இவுங்க… ஒரு பயலுக்கும் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமேங்கிற எண்ணம் துளியும் கிடையாதாக்கும். இவிங்க பார்க்குறதே கான்ட்ராக்ட் வேலை. அத்தக் கூலி மாதிரித்தான். இன்னிக்கு வேலை பார்த்துட்டோம்னா சம்பளம் பழுத்தது. நாளைக்கு என்ன நிலைமைன்னு எவனாலயும் சொல்ல முடியாது. கம்பெனி வளாகத்துக்குள்ள நுழைஞ்சு கார்டை ஸ்வைப் பண்றதுக்குள்ள வாசல் போர்டிகோவுலயே நிறுத்திடுவான் செக்யூரிட்டி. உங்கள இங்க வெயிட் பண்ணச் சொன்னாங்க… ன்னுவான். வேலை போகப் போகுதுன்னு அர்த்தம்… நித்ய கண்டம் பூர்ண ஆயுசு…! பழமொழிதான் அது. ஆயுசு இல்லாமயே எத்தனையோ பேர் வாயப் பொளந்திருக்கான். அதுவும் நடந்திருக்கு…!!”

சட்டென்று அனைத்தையும் ஒதுக்கியதுபோல் சொன்னாள் காஞ்சனா.

“இப்ப எதுக்கு இத்தனை விளக்கம் கொடுத்திட்டிருக்கீங்க…? அவுங்க வாழ்க்கை… அவுங்களுக்குப் பார்த்துக்கத் தெரியாதா? பேசாம முடிச்சி வைங்க… அப்புறம் எதுவும் அமையாம இழுத்திட்டே போயிடப் போவுது…! பெரிய தலைவலியாப் போச்சு…! நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க மேடம்… சார் ரொம்ப யோசிக்கிறார்… எதுக்கும் பயப்பட வேண்டாம்… நான் இருக்கேன்… எவ்வளவு வேணாலும் உதவறதுக்குத் தயாராயிருக்கேன்… ஃபிசிக்கல்லா என் உதவி எப்பவும் உங்களுக்கு உண்டு… அதுல நீங்க தயங்கவே வேண்டாம். எதுவானாலும் என்கிட்டத் தாராளமாச் சொல்லலாம்… உடனே வந்து நிப்பேன்…”

சம்பந்தி ஜாக்கிரதையாகத்தான் பேசுகிறார் என்று தெரிந்தது லோகநாதனுக்கு. காசுக்குத்தான் முழம் போட முடியாது என்று சொல்லாமல் சொல்கிறார்… புரிந்துகொண்டார் இவர்.

இன்னும் என்னத்த யோசிக்கிறது? அவன் வாழ்க்கை… அவனுக்குத் தெரியாதா? அப்படியா தன் பிள்ளையை அலட்சியமாய் வளர்த்திருக்கிறோம்? பொறுப்பாகத்தானே உருவாக்கியிருக்கிறோம்? எதுவானாலும் சமாளித்துக்கொள்வான்… – ஒரு வழியாகச் சமாதானத்துக்கு வந்தார் லோகநாதன்.

ஒன்று பார்த்தார். ஒன்றே முடிந்தது. நன்றேதான் முடிந்தது. ஆனால் இப்போது என்னென்னவோ இடிக்கிறதே? வாழ்ந்து பார்த்தால்தானே, வாழ வாழத்தானே வம்புகள் வரும்?

என்னா வாய் அந்தப் பொண்ணுக்கு? அதிர்ந்துதான் போனார் லோகநாதன்.

பிடிக்கலேன்னா கிளம்பிப் போக வேண்டிதானே? – இது அந்தப் பெண் பேசும் பேச்சா? பளீரென்னு கேட்டுவிட்டதே? அதுவும் காஞ்சனாவைப் பார்த்து… தன்னைப் பார்த்தல்ல… இவர்தான் முகம் கொடுத்தே பேசுவதில்லையே? எப்போது அதற்கு வாய் ஜாஸ்தி என்று உணர்ந்தாரோ அப்போதே ஒதுங்கிக்கொண்டுவிட்டார். பயந்தல்ல… தன் கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டி. அதற்காக ஒரேயடியாக ஒதுங்கியும் இல்லை. மருமகளாயிற்றே…! அசட்டுப் பிசட்டு என்று பேசினாலும் அமைதி காத்துத் தொலைய வேண்டியிருக்கிறதே! முகத்தைக் கடுகடுக்காமல் சமனமாக வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே! நடிகர் திலகம்தான் அடிக்கடி நினைவில் வந்து போனார். அவரின் பரமார்த்த ரசிகருக்கு இந்தப் பாவம்கூட சட்டுச் சட்டென்று வராதா என்ன?

அதற்காக காஞ்சனாவிடம் இப்படிப் பட்டுத் தெறிக்கையில் வாய் மூடி கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா? அதென்ன அப்படியொரு மரியாதையற்ற, மதிக்காத பேச்சு? கிளம்பிப் போ… என்ற வார்த்தையைப் பெற்ற மகனே சொல்லவில்லை. நேற்று வந்த இந்தப் பெண் சொல்லலாமா?

“என்ன பேசற நீ?” கேட்டுக்கொண்டே அறையிலிருந்து வெளியே வந்தார் லோகநாதன். இதை அந்தப் பெண் எதிர்பார்க்கவில்லை.

“வித்யா… நீ பேசுறது சரியில்லை” என்றார் அழுத்தமாக.

“பிறகென்ன மாமா? எப்பப் பார்த்தாலும் ஏதாச்சும் சொல்லிட்டேயிருந்தா? எனக்கும் கோவம் வராதா?”

அறிவுரையாய்ச் சொல்வது தப்பாய்ப் படுகிறது… என்ன செய்ய? இளைய தலைமுறைக்கு மூத்த பெரியோர்களின் வழிகாட்டுதல் பிடிப்பதேயில்லை.

“அதுக்கு இதுதான் வார்த்தையா? எப்பயாச்சும்னு சொல்லு… ஒத்துக்கிறேன். உன்னை அவள் எதுவுமே சொல்றதில்லைங்கிறதுதான் என்னோட ஆதங்கம். பொம்பளைக்குப் பொம்பளை அட்ஜஸ்ட் ஆவீங்கன்னு எதிர்பார்த்தா… இப்டி அடிச்சிக்கிறீங்களே? அதுக்காக இப்டியா பேசறது நீ? தப்பும்மா…”, தீர்மானமாய்ச் சொன்னார் லோகநாதன்.

“பிடிக்கலைன்னா கிளம்பிப் போக வேண்டிதானேன்னு கேட்கிறியே? யாரைப் போகச் சொல்றே?” – வித்யாவின் முகத்தை நேரடியாகத் தீர்க்கமாய்ப் பார்த்து அழுத்தமாய்க் கேட்டார் லோகநாதன்.

அந்தப் பெண் வாய்மூடி நின்றது இவர் வேகத்தை அதிகப்படுத்தத்தான் செய்தது. என்ன நெஞ்சழுத்தம்?

“இது எங்க வீடு… நாங்க பணம் போட்டு அவன் பேருக்கு வாங்கினது. அவன் பெயருக்கு இருக்குன்னு தெரிஞ்சு அப்படிக் கேட்குறியா? எங்க… வெளில போகச் சொல்லு பார்ப்போம்…? போட்டிருக்கிற அறுபது லட்சமும் எங்க ரெண்டு பேர் உழைப்புல வந்ததாக்கும்… ஒத்தப் பைசா உன் புருஷன் போடலை…  எங்க… சொல்லிப் பாரு… கேட்கிறானா பார்ப்போம்… அதையும்தான் பார்த்திடுவமே… எப்போ உன் மனசுல இப்டி ஒரு எண்ணம் வந்ததோ அப்போ வெடிப்பா வெளிப்படையாப் பேசிடுறது நல்லது…

உனக்குத்தான் எங்களைப் பிடிக்கலை…  அதனால வந்த வார்த்தை அது. இப்டி நான் சொன்னா நீ ஒத்துக்குவியா? ஆனா அதுதான் உண்மை. எனக்கு அது தெரியும். உன்கிட்டேதான் இந்த வீட்டுக்கு வந்ததுலேர்ந்து சுமுகமே போச்சே… எந்நேரமும் கடு கடுன்னு இருக்கியே… அதுவே எங்களுக்குப் புரிஞ்சிக்கத் தெரியாதுன்னு நினைச்சியா? ஒரு நாளைக்காச்சும் சிரிச்சிப் பேசியிருக்கியா நீ? சந்தோஷமா எங்ககிட்டே இருந்திருக்கியா? அப்டி என்ன உனக்கு ராங்கித்தனம்? இனிமே இந்த வீடுதானே உனக்கு? நாங்கதானே உனக்கு அரண்? இந்த வீட்டுல இருக்கிற எல்லா ஏற்ற இறக்கமும் உன்னையும் சார்ந்ததுதானே? நாங்க உதறிடுவோமா உன்னை. அரவணைச்சித்தானே போவோம்? இதை நீ புரிஞ்சிக்க வேண்டாமா? என்னமோ நீயும் உன் புருஷனும் சொந்தப் பணத்துல கட்டி எழுப்பின வீடு மாதிரி வார்த்தையை விடுறே?”

வித்யா அதிர்ந்துதான் போனாள். கண்கள் சுருங்கி தரையை நோக்கியதிலேயே தெரிந்தது அது.

“எதைப் பேசணும், எந்த அளவுக்குப் பேசணும்னு ஒரு கணக்கு இருக்கும்மா… அது உனக்குப் படியலைன்னா அமைதியா இருக்கப் பழகிக்கோ… தத்துப் பித்துன்னு உளறாதே…! நீ சின்னப் பொண்ணு… ஏதோ தெரியாம உளர்றேன்னு எங்களால புரிஞ்சிக்க முடியும்… உனக்குச் சமமா நாங்களும் கீழ இறங்கிப் பேசினோம்னா அப்புறம் இந்த வீடு தாங்காதாக்கும்! அல்லசல்ல நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்க…! அதனால வாயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தப் பழகிக்கோ…! எதுவானாலும் இந்த நாலு சுவத்துக்குள்ளதான் இருக்கணும். அதத்தாண்டிப் போகக்கூடாதாக்கும். அப்புறம் நமக்குத்தான் கேவலம்…! மட்டு மரியாதையா, குடும்பப் பொண்ணா, பாங்கா… படிமமா இருந்தியானா எல்லாம் உங்களுக்கு… இல்லன்னா அத்தனையும் அநாதை ஆஸ்ரமத்துக்கு… ஞாபகமிருக்கட்டும்…!!”

சொல்லி முடித்தார் லோகநாதன். இந்த லோகத்தையே அளந்தவர்போல் பேசியது அவருக்கே வியப்பாகத்தான் இருந்தது. தனக்கும் கொஞ்சம் பேச வருகிறதுதான் என்று மனதுக்குள் பெருமைப்பட்டுக்கொண்டார். அதே சமயம் இப்படியெல்லாம் சொல்ல வேண்டி வந்துவிட்டதே என்றும் மனதை உறுத்தியது.

இதென்ன வாதப் பிரதிவாதமா… நான் ஜெயிச்சேன்… நீ தோத்தேன்னு சொல்றதுக்கு…? அது நம்ம பொண்ணு… நம்ப வீட்டுக்கு வந்த பொண்ணு… மறு வீட்டுக்கு வந்த மருமகள்…! அதோட ஏத்தமும் இறக்கமும் எல்லாமும் இனி நம்முடையதே… வேறெப்படி நினைக்க முடியும்? – கண்களில் நீர்த்துளி பளிச்சிட உணர்வுப்பூர்வமாய்க் கலங்கி நின்றார் லோகநாதன்.

—————————–

உஷாதீபன்,
“ஸம்ருதி” இல்லம்,
எண்.36-பி, கோவிந்தசாமி நகர் 8-வது தெரு
மடிப்பாக்கம், சென்னை-600 091.
(94426 84188)

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button