
“ரவி மாஸ்டருக்குப் பத்திரிக்கை வச்சுட்டு போயிடலாமா?”
கார் வெண்ணமலை அருகே வந்தபோது அப்பா கேட்டார். கார் ஓட்டிக்கொண்டிருந்த தயா, “இப்போ எங்க யூனிட் வச்சிருக்காருன்னு தெரியுமா?”
“VVG நகர் பின்னாடிதான் வச்சிருக்காரு. போன தடவ வந்தப்போ பாத்தேன். பத்திரிக்கையோட வரேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்”
தயாவுக்கு அடுத்த மாதம் திருமணம். அவன் வேலை நிமித்தமாகக் குடும்பத்தோடு கோவைக்குச் சென்று 5 வருடங்கள் ஆகிவிட்டது. என்றாலும் தாங்கள் அத்தனை வருடம் வாழ்ந்த ஊரான கரூரில்தான் வரவேற்பு வைக்கவேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. தயாவின் அத்தையும் சித்தப்பாவும் கரூரில் இருந்ததால் அது பெரிய சிரமமாகவும் இல்லை; தயாவுக்கும் அது மகிழ்ச்சியே.
MGR சிலை தாண்டியதும், “ஏதாச்சும் ஒரு சந்துக்குள்ள விடு. எப்படியும் VVG நகர் முட்டிதான் ரோடு முடியும். அங்க இருந்து பாத்துக்கலாம்”
தயா இண்டிகேட்டர் போட்டு வலதுபக்கம் காரைத் திருப்பினான். சில நிமிடங்களில் VVG நகர் வந்தது. “ஒரு நிமிசம் நிறுத்து” என்றார் அப்பா. கார் ஜன்னலை இறக்கிவிட்டு இரண்டு பக்கமும் பார்த்தார். “அன்னிக்கு இந்தப் பக்கம்தான் வந்தேன்” என தயாவிடம் சொல்வதுபோல் முணுமுணுத்தார். நல்லவேளையாக Google map போட்டு வரவில்லை. அப்படி வந்திருந்தால், “ஏன் வழி மாறிடுச்சா?” என்பார். அதில் நக்கல், கோவம், வெறுப்பு எல்லாமே கலந்து இருக்கும். அவரைப் பொறுத்தவரை சக மனிதனிடம் வழி கேட்கவேண்டும்.
ஜன்னலை ஏற்றிக்கொண்டே, “இந்தச் சந்துக்குள்ள விடு” என்றார். “அங்க ஒரு மளிகைக் கடை இருந்துச்சே” மீண்டும் ஜன்னலை இறக்கி அந்தப் பாக்கம் XL சூப்பரில் போன ஒருவரிடம் “ரவி மாஸ்டர் யூனிட் எங்க இருக்கு?” என்றார்.
“டான்ஸ் சொல்லித் தருவாரா?” என்றார் வண்டியை நிறுத்தி.
“இல்லைங்க, power machine போட்டு எக்ஸ்ப்போர்ட் துணி தைக்கிறவங்க”
“நானே வெங்கமேட்டுக்கு புதுசுங்க. தந்தோனிமலைல இருந்து போன வாரம்தான் வந்தோம். அந்த left ல ஒரு மளிகைக் கடை இருக்கு. வேணும்னா கேட்டுப்பாருங்க”
“சரிங்க” என்று ஜன்னலை ஏற்றினார். நான் XL super காரரிடம், “தேங்க்ஸ் ண்ணா” என்று காரை நகர்த்தினான் தயா.
“டான்ஸ் மாஸ்டரான்னு கேக்கறேன், லூசுக்…” என்றார் அப்பா.
கோவத்தை அவன் மேல் இறக்கிவிட்டார். அந்த மளிகைக் கடையைப் பார்த்ததும், “இந்தா வந்துடுச்சு. கடை தாண்டி ரெண்டு வீடு தள்ளி நிறுத்து, கார் நிறுத்த முடியுமா பாரு” என்றார்.
காரை ஓரம் கட்டி நிறுத்தினான். “கார்ல இரு, மாஸ்டர் இருக்காரா பாத்துட்டு வரேன்” என இறங்கி நடந்து அந்தத் தையல் யூனிட்டுக்குள் போனார். சில நிமிடங்கள் கழித்து மாஸ்டரோடு வெளியே வந்தார்.
ரவி மாஸ்டர் கார் கண்ணாடிக்குள் கண்களைச் சுருக்கிக்கொண்டு பார்த்தார். தயாவுக்குச் சங்கடமாய் போனது. சட்டென்று காரில் இருந்து இறங்கி. “மாஸ்டர் நல்லா இருக்கீங்களா?” என்றான்.
“ஹே தயா, எப்படி இருக்க, வாயா” என கை நீட்டினார். சிதிலமடைந்துகொண்டிருக்கும் கோவில் போல் பொலிவிழந்து இருந்த மாஸ்டரைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
“உள்ள வந்து உக்காரு வா” என இழுத்து அழைத்துச் சென்றார்.
யூனிட்டில் 5 மெஷின்கள் போடப்பட்டு இருந்தன. அப்பாவும் மாஸ்டரும் பேசிக்கொண்டிருந்தார்கள். மனம் தானாகப் பின் சென்றது.
தயாவுக்கு 11 வயது இருக்கும். அப்போது அப்பா, மாஸ்டர் யூனிட்டில் டெய்லராக இருந்தார். பெரும்பாலும் யூனிட்டுக்கு அழைத்துச் செல்ல மாட்டார்.
அம்மாவின் அப்பா இறந்தபோது ஒரு வாரம் அம்மா ஊரில் இல்லை. தயாவுக்கும் பரீட்சை நேரம் என்பதால் அப்பாவும் அவனும் மட்டும் வீட்டில் இருக்க நேர்ந்தது. எனவே அந்த நாட்களில் யூனிட்டுக்கு வரும்படி ஆனது.
மாலை பள்ளியில் இருந்து அழைத்து யூனிட்டில் விட்டுவிட்டு அப்பா வேலை பார்ப்பார். தயா யூனிட்டில் ஓரமாக உட்கார்ந்து வீட்டுப்பாடம் செய்வான். கொஞ்ச நேரத்தில் முடித்துவிட்டு உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பான் அல்லது அவன் போல யாரேனும் சிறுவர்கள் இருந்தால் விளையாடுவான்.
அப்போது மாஸ்டர் M80 வைத்து இருந்தார். சரக்கு எடுத்துப்போக வேண்டி பின் சீட் இல்லாத வண்டி. அதில் ஏறி ஆக்சிலேட்டரை முறுக்கி வாயில் வண்டி ஓட்டுவது போலச் சத்தம் கொடுப்பான். எதற்கேனும் வெளியே வரும் மாஸ்டர், “என்னா தயா என்னா ஸ்பீட்டுல போற?”
“500 மாஸ்டர்”
“போடு ..க்காலி, நீதான் ஜெயிக்கிணும் சரியா” என்று சிரித்துவிட்டுப் போவார்”
தலை ஆட்டிக்கொண்டே “ர்ர்ர்ர்ர்” என மேலும் முறுக்குவான்.
மாஸ்டர் எப்போதும் பாண்ட் மற்றும் சட்டைதான் அணிந்து இருப்பார். யூனிட்டுக்குள் வந்த உடன் சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டிவிட்டு, வெள்ளை பனியனோடு, கட்டிங் டேபிளில் நின்று வேலையைத் தொடங்குவார். காதின் மேல் அளவு குறிக்கும் சாக்பீசைச் சொருகி இருப்பார்.
ஆர்டர்கள் ஒரு நோட்டில் இருக்கும். எத்தனை என்று மட்டும் பார்த்துக்கொள்வார். மற்றபடி அளவெல்லாம் அவர் மனதில்தான் இருக்கும். அதேபோல் யாருக்கு எத்தனை கொடுக்க வேண்டும், இன்று தொடங்கினால் எப்போது முடிக்கலாம், எல்லாமே மனக் கணக்குதான்.
சம்பள நாளில் வேலை செய்பவர்கள் அவர்கள் தைப்பதைக் குறித்து வைத்துக் கொடுப்பார்கள். அதைப் பார்த்துச் சம்பளம் கொடுப்பார். “யே அனு ரெண்டு Apron விட்டுட்ட பாரு, ஏன் காசு ரொம்ப இருக்கோ” எனக் கேட்பார்.
“மாஸ்டர் மண்டைக்குள்ள மூளை இருக்கா, கால்க்குலேட்டர் இருக்கா” என்று கேட்டால், “நீதான் டார்லிங் இருக்க” என்று சொல்லிச் சிரிப்பார்.
“விஜியக்காகிட்ட சொல்லி வைக்கிறேன் இருங்க” என்பார்கள். எல்லாமே விளையாட்டுதான். உண்மையில் மாஸ்டர் அப்படிப் பேசுவது எல்லோருக்கும் பிடிக்கும்; அவரும் எல்லை தண்ட மாட்டார். சிலர் ஒன்று இரண்டு அதிகம் கணக்கு கொடுத்தால் கண்டுகொள்ளமாட்டார்.
மாஸ்டர் ஒரு ரோல் பிரித்தால், அதில் வீணாகும் துணியே இருக்காது. அளவு மாற்றியோ, தவறாக வெட்டியோ வீணாக்கமாட்டார். கச்சிதமாக இருக்கும். யாரேனும் தவறாக தைத்தாலும் திட்டமாட்டார். பொறுமையாகச் சொல்லுவார். மெதுவாக தைப்பவர்களையும் குறை சொல்லமாட்டார். அவர்களிடம் எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அதை வாங்கிக்கொண்டு விட்டுவிடுவார். யார் பற்றியும் குறை சொல்லமாட்டார். இவையெல்லாம் மாஸ்டர் பற்றி அப்பா சொல்லிக்கேட்டது. “அந்தாளுக்கு இருக்கிற திறமைக்கு நிறைய வேலை பாத்தா வெங்கமேட்டுல டெக்ஸ் வச்சிருக்கவனவிட அதிகம் சம்பாதிக்கலாம், ஆனா இருக்கறதே போதும்ன்னு சொல்லிடுறாரு”
தயா ஏதேனும் பொருள் கேட்டால், “மாஸ்டர்கிட்ட காசு கேக்கறேன் டா, கொடுத்தா வாங்கி தரேன்” என்பார் அப்பா. அடுத்த நாளே அவன் கேட்டது கிடைக்கும். தன்னிடம் இல்லையென்றால் கடன் வாங்கியேனும் கொடுத்து விடுவார் மாஸ்டர்.
அப்படியான நாட்கள் ஒன்றில், “ராஜா இன்னிக்கு நைட்டு வேலை வைக்கலாமா?” என்றார் மாஸ்டர்.
“தயா இருக்கானே மாஸ்டர், தனியா தூங்கி பழக்கம் இல்ல”
“நம்ம வீட்ல கொண்டு போய் விட்டு வரேன். விஜியும் திவ்யாவும் இருக்குல்ல”
“ஏன் மாஸ்டர் சிரமம்?”
“எனக்கு ஒரு சிரமமும் இல்ல ராஜா. உனக்கு எதும் பிரச்சினையா?
“அட ஏன் மாஸ்டர், கூட்டிட்டு போங்க” என்றார் அப்பா. தயாவுக்குச் சங்கடமாய் இருந்தாலும் வேறு வழி இல்லை. அப்பாவிடம் சொன்னது போல் மற்றவர்களிடமும் இரவு வேலை பற்றிச் சொன்னார். சிலர் சம்மதித்தார்கள். 7 மணி வாக்கில், “எல்லாருக்கும் பரோட்டாவே வாங்கிடவா?” என்றார் மாஸ்டர்.
“மாஸ்டர் எனக்குக் கொத்து பரோட்டா, எனக்கு ஒரு ஆம்லெட் சேர்த்து வாங்கிக்கோங்க” எனக் குரல்கள் வர, வழக்கம்போல் தன் மூளைக்குள் ஏற்றிக்கொண்டு வண்டியை எடுத்தார். பின்னால் உட்காரச் சென்ற தயாவை, “டேய் கம்பி ..ண்டில குத்தும் முன்னாடி உக்காரு” எனத் தன் சீட்டில் பின் தள்ளி அமர்ந்தார்.
ஹோட்டலில், “உனக்கு என்னா தயா, பரோட்டாவா, இல்ல தோசையா?”
தயா அமைதியாய் இருந்தான். “சொல்லுப்பா, கூச்சப்படாத”
“பரோட்டா மாஸ்டர்”
“திவ்யா அக்காவுக்குப் பிச்சு போட்டுக் குழம்பு ஊத்தி வாங்குவேன். உனக்கும் அது மாதிரி வாங்கலாமா?”
தயா தலை அசைத்தான். பார்சல் வாங்கிக்கொண்டு மாஸ்டர் வீட்டுக்கு வந்தார்கள்.
“விஜி டார்லிங்” எனக் குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் மாஸ்டர். மாஸ்டரின் மனைவியும் மகளும் வீட்டுக்குள் இருந்தார்கள்.
“வாங்க” என்றவர்கள் தயாவைப் பார்த்து, “வாப்பா” என்றார்கள்.
“இது யாரு தெரியுதா? நம்ம ராஜா பையன். இன்னிக்கு நைட் வேலை. இவங்க அம்மா ஊர்ல இல்ல அதான் இங்க தங்க வைக்கலாம்ன்னு கூட்டி வந்தேன்”
“சரி சரி, வாப்பா உக்காரு” என்று சோபாவைக் காட்டினார்கள். “இதுல பரோட்டா இருக்கு டார்லிங், சாப்பிடுங்க நான் யூனிட்டுக்கு போறேன். முடிஞ்சா நைட் வருவேன் இல்ல காலைல வரேன்” என்றுவிட்டுதான் மகளின் கன்னம் தொட்டு முத்தம் கொடுத்தார். அதேபோல் அவர் மனைவிக்கும் கொடுத்தார். தயாவுக்கு எல்லாம் புதிதாக இருந்தது. தன் அப்பா அம்மாவிடம் இப்படிப் பேசியோ செய்தோ பார்த்தது இல்லை.
“தயா டீ எடுத்துக்கோ?” குரல் கேட்டுக் கலைந்தான் தயா. அனு அக்கா. “அக்கா நல்லா இருக்கீங்களா?” தேநீர் ததும்பிய காகிதக் கோப்பையை வாங்கிக்கொண்டே கேட்டான்.
“நல்லா இருக்கேன் தயா. கல்யாணமாமே? ரொம்ப சந்தோசம். அம்மாவைக் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?”
“அம்மா தஞ்சாவூர் மாமா வீட்டுல இருக்காங்கக்கா. அவங்க சொந்தத்துக்கு மாமாகூட போய் பத்திரிக்கை வைக்கறாங்க. நானும் அப்பாவும் கரூர் வந்துட்டோம்”
“எப்படியோ அம்மா அப்பா பட்ட கஷ்டத்துக்கு இப்போ நல்லா இருக்காங்க. இனியும் நல்லா பாத்துக்கோ. நீ பாத்துக்குவ, இருந்தாலும் சொல்றேன்” என்றுவிட்டு, “இவ்ளவுண்டு பையனா இங்க வரும் தம்பி, அதுபாட்டுக்கு பொட்டாட்டம் படிச்சுட்டு அமைதியா இருக்கும். இப்போ கல்யாணமாம்” தயாவைத் தெரியாத யாரிடமோ சொன்னாள்.
“மாஸ்டர் எனக்கு ஒரு உதவி, செஞ்சுத் தர முடியுமா?” எனக் கேட்டார் அப்பா.
“சொல்லு ராஜா செஞ்சுக்கலாம்”
“பையன் கல்யாணத்துக்குத் தேங்கா பை போடணும். அதுக்கு ஒரு 500 பை வேணும். தச்சு தர முடியுமா?”
“தச்சுக்கலாம் ராஜா. உனக்கு இல்லாமலா” என என்னையும் பார்த்துச் சிரித்தார். “என்ன அனு தச்சுக்கலாம்ல?” என்றார்.
“மாஸ்டர் நெறய ஆர்டர் இருக்கு, செய்றது கஷ்டம்” என்றாள் அனு அக்கா.
“பாத்து சொல்லு அனு, நம்ம ராஜாவுக்கு….”
“இல்ல மாஸ்டர் ஆகாது”, என்றவள் அப்பாவிடம் ரகசியமாய் சைகை செய்து, “ராஜாண்ணே நம்பலைன்னா நீங்களே ஆர்டர் நோட்ட வந்து பாருங்க” என அருகில் வரச் சொன்னாள்; என்னையும் அழைத்தாள்.
அப்பா எழுந்து மாஸ்டரிடம் இருந்து தள்ளி, அனு அக்கா அருகில் சென்றார். நானும் சென்றேன். குரலைக் குறைத்து, “ராஜாண்ணே கோச்சுக்காதிங்க, மாஸ்டர் இப்போ முன்ன மாதிரி இல்ல. விஜியக்கா செத்து போனதுல இருந்தே ஆள் உடைஞ்சு போயிட்டாரு. எதுவும் நியாபகத்துல இல்ல, காதும் மந்தம் ஆகிடுச்சு. உங்களுக்குன்னா அவரே செய்யணும்னு ஆசபடுவாரு. ஆனா அவரால முடியாது. நாங்களே வெளி கம்பெனி ஆர்டர்தான் ஓட்டுறோம். அவங்கதான் கட்டிங் பண்ணி தருவாங்க. நம்மகிட்ட கட்டிங் மாஸ்டர் இல்ல. ஏதோ மாஸ்டருக்காக நாங்களும் பொழப்ப ஓட்டுறோம். அதனாலதான் அப்படிச் சொன்னேன். தப்பா நெனச்சுக்காதீங்க” குரலை இன்னும் ரகசியமாக்கி, “கொஞ்ச நாளைக்கு முன்ன, மாஸ்டர் கட்டிங் பன்றேன்னு சொல்லி ஒரு ரோலே வீணா போச்சுண்ணே. எப்படி இருந்த மனுசன்” என இலேசாய் விசும்பினாள்.
கொரொணா காலத்தில் மாஸ்டரின் மனைவி இறந்தது எனக்கும் ஒரு தகவலாய் தெரியும். ஒரு தகவலுக்குள் ஒரு மனிதனின் வாழ்க்கையே மாறிப் போய் இருக்குமென நினைத்திருக்கவில்லை. மனம் பாரம் ஆனது.
மாஸ்டர் சாலையைப் பார்த்து அமர்ந்து இருந்தார். “மாஸ்டர் ஆர்டர் நிறைய இருக்கு, நான் வெளில பாத்துக்கறேன், நீங்க சங்கடப்பட வேண்டாம்” – அப்பா.
மாஸ்டர் தலை ஆட்டினார். “சரி மாஸ்டர் நாங்க கிளம்பறோம்” என்றார் அப்பா. மற்றவர்களிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தோம். மாஸ்டரும் எழுந்தார். “இருங்க மாஸ்டர் நாங்க போயிக்கறோம்” என்றதைக் காதில் வாங்காமல் உடன் வந்தார். அப்பா காரில் ஏறி ஜன்னலை இறக்கினார். “தயா அடுத்த சந்துல திரும்பி நேர போனா குளத்துப்பாளையம் சந்தைகிட்ட போகும், அதுல இருந்து மெயின் ரோடு புடிச்சு போயிடு” என்றார் மாஸ்டர்.
“சரிங்க மாஸ்டர்”
“ராஜா கோவிச்சுக்காத, அனு சும்மா சொல்லுது, முன்ன மாதிரி இங்க எதும் இல்ல ராஜா” எனத் தன் நெற்றிப் பொட்டில் ஆட்காட்டி விரல் வைத்துச் சொன்னார். கொஞ்ச நாள் முன்ன Apron ஆர்டர் ஒன்னு அளவு மாத்தி வெட்டி மொத்தமும் வீணா போச்சு ராஜா. என் நிலமைய பாத்தியா?” என்று ரொம்ப சிரமப்பட்டு அழுகையை அடக்கிக்கொண்டார்.
“மாஸ்டர் கவலைப்படாதிங்க மாஸ்டர்” என அப்பா காரில் இருந்து இறங்க முயல, மாஸ்டர் தடுத்தார். “சரி கிளம்புங்க, அவசியம் கல்யாணத்துக்கு வரேன்” என நகர்ந்தார்.
காரைக் கிளப்பிவிட்டு அப்பாவைப் பார்த்தேன். அவரும் என் போலவே அழுகையை அடக்கியதன் விளைவாய் ஒரு பெருமூச்சைவிட்டார்.



