
இந்த உடல் அருவருக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. உயிர் தன்னை நிலைநாட்டிக் கொள்ள இந்த உடலின் இருப்பு அவசியமாகிறது. என்ன வடிவமான உடலிது? தசைகள் என்ன கலவையில் ஆனதோ? உடலை உருவாக்கியவன் ஏன் அதில் உணர்வை வைத்தான்? உடலுக்கான தேவை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்தத் தேவையைத் தீர்க்கப் பல கட்டுப்பாடுகள், பல கட்டமைப்புகள் உடனிருந்து ஆட்டிப் படைக்கின்றன.
இருநாள்கள் ஓய்வின்றி உழைத்தாகிவிட்டது. இந்த உடலுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. சதைகள் இறுக்கிக்கொண்டிருக்கின்றன. அவை தளர்ந்திட வேண்டும். எலும்புகள் உடைபடுவதைப் போல ஒலியை எழுப்பிக்கொண்டிருக்கின்றன. அவை எதிர்பார்க்கும் தனிமையை உண்டாக்கவில்லையெனில் என்னை நிரந்தரமாகப் பணி செய்திட விடாது. வயிற்றில் புகுந்துகொண்டு அங்குமிங்குமாக நடமாடி என் சிந்தனையைச் சீரழிக்கிறது காற்று. ஒரு ரொட்டித் துண்டையாவது வயிற்றில் இறக்கிக்கொண்டால் குறைந்தபட்சம் ஒன்று இரண்டு மணி நேரத்திற்காவது தாக்குப்பிடித்துக்கொள்வேன். உணவு வாங்கச் சென்றவனை ஆளையே காணவில்லை.
இப்படியாக அந்த அறையைவிட்டு வெளியேற முடியாமல் மூன்று மணி நேரமாக மனதளவில் புலம்பிக்கொண்டிருந்த மைதிலி அறைக் கதவு தட்டும் ஓசைக் கேட்டு வயிற்றுக்கு ஓர் அன்பான அரவணைப்பைக் கொடுத்துவிட்டு ஓடோடிச் சென்று கதவைத் திறந்தாள்.
கையில் இரு பீர் போட்டல்களுடன் அருகில் நின்றவனைக் கண் ஜாடைக் காட்டி புன்னகைத்து நின்றான் தரகர்.



