இணைய இதழ் 126தொடர்கள்

நான்-ஒரு போஹேமியன் பயணி; 13 – காயத்ரி சுவாமிநாதன்

தொடர் | வாசகசாலை

“வேர்கள் இல்லாத மரமாவீதிகள் முழுவதும் நடந்தேன்…
என் முகவரி,
நான் கடந்த பாதைகளே.
என் வீடு,
என்னை அணைத்த அமைதியே.
மலைகளிடம் மௌனத்தைக் கற்றேன்,
நதிகளிடம் ஓடக் கற்றேன்,
காடுகளிடம் தனிமையை நேசிக்கக் கற்றேன்,
போதி மரத்திடம்…
என்னையே அறியக் கற்றேன்.

நான் தேடியது உலகத்தை அல்ல,
என் உள்ளத்தின் ஒளியை.
நான் கடந்த ஒவ்வொரு எல்லையும்
ஒரு நாட்டின் எல்லை அல்ல,
ஒரு அகந்தையின் எல்லை.
ஒருநாள்,
ஒரு போதிமரத்தின் நிழலில் அமர்ந்தபோது,
என் வாழ்க்கை முழுவதும்
திசை மாறியது.
அந்த நாளுக்குப் பிறகு
நான் ஒரு சராசரி மனிதன் இல்லை.
விழிப்புணர்வைச் சுமந்து நடக்கும்
ஒரு பக்குவப்பட்ட தேசாந்திரி”

        அந்த ஒளி என்னுள் பிறந்ததிலிருந்து என் வாழ்க்கை வெளியில் நடந்து கொண்டிருந்தாலும், என் பயணம் முழுவதும் உள்ளுக்குள் நகர்ந்துகொண்டே இருந்தது. முன்பு நான் தேடிய பதில்கள் எல்லாம் வெளியுலகத்தில் இருந்தன என நினைத்தேன். ஆனால், இப்போது புரிந்தது, பதில்கள் எல்லாம் என் உள்ளத்தின் அமைதியில் மறைந்து இருக்கின்றன. தியானம் எனக்கு ஒரு பழக்கமாக மட்டுமல்ல, அது என் மூச்சாக மாறிவிட்டது. காலையில் உதயமான சூரியனைப் போல, “அமைதி” என்ற ஒன்று ஒவ்வொரு நாளும் என்னுள் உதிக்கத் தொடங்கியது. நான் கண்களை மூடினால் அந்த போதி மரத்தின் நிழல் என்னை மீண்டும் சுற்றி வளைப்பதைப் போல உணர்ந்தேன். அந்த நிழல் வெறும் இருளல்ல, அது பாதுகாப்பு. அது கருணை. அது ஒரு தாயின் அரவணைப்பு. 

அந்த நாட்களில் நான்  பேசவில்லை. வார்த்தைகள் தேவையற்றதாகத் தோன்றின. ஏனெனில், நான் உணர்ந்ததை வார்த்தைகளில் சொல்ல முடியாது. அது உணரப்பட வேண்டிய ஒன்றாகும். ஒரு நாள் நான் தியானத்தில் இருந்தபோது, என் உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது. “இந்த அனுபவம் ஏன் எனக்குக் கிடைத்தது?” அந்தக் கேள்வி என்னை சற்றுக் குழப்பியது. ஆனால், அதற்கான பதிலைத் தேட நான் முயற்சிக்கவில்லை. ஏனெனில், அந்த அமைதி என்னிடம் சொல்லியது: “எதையும் புரிந்துகொள்ள வேண்டாம், அதை அப்படியே உணர்ந்தால் போதும்.” அந்த உணர்வோடு நான் வேறு ஒரு பரிமாணத்தில் வாழத் தொடங்கினேன். ஒவ்வொரு மனிதரையும் வேறொரு பார்வையில் பார்க்கத் தொடங்கினேன். அது எளிதானதல்ல. ஆனால், அதுவே உண்மையான மாற்றம். அவர் கற்றுக் கொடுத்த மந்திரங்களை நான் தினமும் உச்சரித்தேன். அந்த ஒலிகள் என் மனதில் அலைபாயும் எண்ணங்களை மெதுவாக அடக்கின. அந்த மந்திரங்கள் என்னை என்னுடன் இணைத்தன. சில நேரங்களில் நான் தனிமையை உணர்ந்தேன். ஆனால், அந்தத் தனிமை வேதனை இல்லை; அது ஒரு இனிமையான அமைதி. அந்த அமைதியில் நான் என்னையே கண்டேன். என் பயங்களையும், சந்தேகங்களையும் மெதுவாக விட்டுவிட்டேன். பிறகு, அந்த புத்த பிக்குவின் வழிகாட்டுதல் எப்போதும் என் வாழ்க்கையில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு மாலை சூரியன் மறையும் நேரத்தில், நான் மீண்டும் அந்த போதி மரத்திற்கு அருகே அமர்ந்திருந்தேன். காற்று மெதுவாக வீசியது. அந்த காற்று ஒரு பழக்கமான உணர்வாக இருந்தது. நான் கண்களை மூடியிருந்தேன். அந்த நொடியில் நான் தனியாக இல்லை என்று உணர்ந்தேன். என் அருகில் யாரோ இருப்பது போல இருந்தது. அது ஒரு உருவம் அல்ல. அது ஒரு இருப்பு. அந்த இருப்பு என்னை அச்சப்படுத்தவில்லை. அது என்னை ஆறுதல் செய்தது. அந்த நொடியில் நான் புரிந்துகொண்டேன். அந்த அனுபவம் எனக்கு ஒரு புதிய  நம்பிக்கையை அளித்தது. நான் என்னை நம்பத் தொடங்கினேன். என் உள்ளத்தின் குரலைக் கேட்கத் தொடங்கினேன். அது மெதுவாக இருந்தாலும் தெளிவாக இருந்தது. நாட்கள், மாதங்கள் மாறின. ஆனால்,  அந்த அனுபவங்கள் காலத்தால் மங்கவில்லை. அவை மேலும் தெளிவானதாக மாறின. என் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் விழிப்புடன் அனுபவிக்கத் தொடங்கினேன்.

ஒருநாள், அந்த புத்த பிக்கு மீண்டும் என்னைச் சந்தித்தார். அவர் என்னைப் பார்த்ததும் சிரித்தார். அந்தச் சிரிப்பில் ஒரு பெருமை இருந்தது. “நீ இப்போது உன் பாதையைக் கண்டுபிடித்துவிட்டாய்”. அவர் மேலும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், எனக்குப் புரிந்தது. அந்த நாள் நான் அவரிடம் இருந்து பிரிந்தேன். அவர் கற்றுக் கொடுத்தவை என்னுள் என்றும் தங்கிவிட்டன. அந்த அனுபவங்களின் மூலம் நான் ஒரு முக்கியமான உண்மையைக் கற்றுக்கொண்டேன். வாழ்க்கை என்பது வெளியில் நடக்கும் நிகழ்வுகள் அல்ல. அது உள்ளத்தில் உருவாகும் உணர்வுகள். இன்று நான் எங்கே இருந்தாலும் அந்த போதி மரத்தின் நிழல் என்னுடன் இருக்கிறது. அந்த நிழல் என்னை வழிநடத்துகிறது. அது என்னை அமைதிக்குள் அழைக்கிறது.

அந்த ஒரு பயணம்…

அந்த ஒரு மரம்…

அந்த சில மாதங்கள்…

இவை அனைத்தும் சேர்ந்து என்னை மாற்றிவிட்டன. அந்த ஏற்றுக்கொள்ளுதலே என்னுள் ஒரு புதிய கதவைத் திறந்தது.

நம்மைப் போன்ற ஒவ்வொரு மனிதர்களின் கோபத்திற்குப் பின்னாலும் ஆறாத ஒரு காயம் இருப்பதை உணர்ந்தேன். ஒவ்வொரு மௌனத்திற்குப் பின்னாலும் சொல்லப்படாத ஒரு கதை இருக்கிறது. ஒவ்வொரு புன்னகைக்கும் பின்னாலும் யாருக்கும் தெரியாத ஒரு போராட்டம் இருக்கலாம் என்பதை வாழ்க்கை மெதுவாக எனக்குக் கற்றுக்கொடுத்தது. அதன் பிறகு நான் பேசும் வார்த்தைகள் முற்றிலும்  குறைந்தன. மனிதர்கள் என்னிடம் தங்கள் கதைகளைப் பகிர்ந்துகொள்ள வந்தார்கள். நான் அறிவுரை கூறவில்லை. அவர்களை மாற்ற முயற்சிக்கவில்லை. வெறுமனே முழு கவனத்துடன் கேட்டேன். சில நேரங்களில் ஒருவருக்குத் தேவைப்படும் மிகப்பெரிய ஆறுதல், எந்தத் தீர்ப்பும் இல்லாமல் அவர்களைக் கேட்கும் ஒரு மனம் மட்டுமே என்பதை அப்போது உணர்ந்தேன். ஒருநாள் அந்த புத்த பிக்குவை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவர் தங்கியிருந்த மடாலயத்திற்குச் சென்றேன். ஆனால், அவர் பல மாதங்களுக்கு முன்பே வேறு நாட்டிற்குப் பயணம் செய்துவிட்டதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். ஒரு கணம் மனம் வெறுமையடைந்தது. பிறகு நான் சிரித்தேன். அவர் என்னுடன் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர் கூறிய ஒரு வாக்கியம் என் உள்ளத்தில் உயிரோடு இருந்தது. “உணர்ந்து வாழ்.” அந்த சொற்கள் இனி ஒரு அறிவுரை அல்ல. அவை என் வாழ்க்கையின் மூச்சாக மாறிவிட்டிருந்தன. 

அன்றைய மாலை மடாலயத்தின் பழமையான ஆலமரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்திருந்தேன். காற்று,  இலைகளை மெதுவாக வருடியது. தொலைவில் கோவில் மணி ஒலித்தது. பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. அந்த இயற்கையின் ஒவ்வொரு ஒலிக்கும் நடுவில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பேரமைதி இருந்தது. அப்போது நான் புரிந்துக் கொண்டேன். அமைதி என்பது சத்தமில்லாத இடமல்ல. சத்தங்களின் நடுவிலும் அசையாமல் நிற்கும் மனம்தான் உண்மையான அமைதி. அந்த உணர்வு என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியது. வாழ்க்கை தொடர்ந்து என்னை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றது. புதிய மனிதர்கள், புதிய நகரங்கள், புதிய அனுபவங்கள். ஆனால், என் உண்மையான பயணம் வெளியில் இல்லை. அது ஒவ்வொரு நாளும் என் உள்ளத்தின் ஆழத்தில் நடந்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு விடியலும் ஒரு புதிய பிறவியாகத் தோன்றியது. ஒவ்வொரு இரவும் ஒரு சிறிய மரணமாக உணரப்பட்டது. அந்த இரண்டிற்கும் நடுவில் கிடைத்த ஒவ்வொரு மூச்சும் இயற்கை கொடுத்த ஒரு பரிசு என்பதை நான் உணர்ந்தேன். இன்று யாராவது என்னிடம்,

“வாழ்க்கையின் அர்த்தம் என்ன?”

என்று கேட்டால்… நான் உடனே பதில் சொல்ல மாட்டேன். ஏனெனில், வாழ்க்கையின் அர்த்தம் வார்த்தைகளில் இல்லை. அதை முழுமையாக உணர்ந்து வாழும் ஒவ்வொரு நொடியும் இருக்கிறது. அந்த நிழல் எனக்கு ஒளியைத் கொடுத்தது. அந்த ஒளி என்னை என்னிடம் அழைத்துச் சென்றது. அந்தப் பயணம் இன்னும் முடிவடையவில்லை.

அது ஒவ்வொரு நாளும்…

ஒவ்வொரு மூச்சிலும்…

ஒவ்வொரு அமைதியான தருணத்திலும்…

புதிதாகத் தொடங்கிக்கொண்டே இருக்கிறது.

நான் இப்போது எதையும் தேடிக்கொண்டிருப்பவள் அல்ல. எல்லாவற்றையும் கண்டடைந்தவள் என்றும் இல்லை. நான்  விழிப்புணர்வுடன் வாழக் கற்றுக்கொண்ட ஒரு  தேசாந்திரி. என் பாதை எங்கு முடியும் என்று எனக்குத் தெரியாது.

ஆனால், அதைப் பற்றிய பயமும் இல்லை. ஏனெனில், நான் சென்றடைய வேண்டிய இடம் எதுவுமில்லை என்பதை இப்போது உணர்ந்துவிட்டேன்.

அதுவே என் விடுதலை.

அதுவே என் அமைதி.

அதுவே என் வாழ்க்கை.

“ நிழல் என்னைத் தொடர்ந்து வந்தது,

ஒளி என்னுள் பிறக்கும் வரை.

பாதை என்னை அழைத்துச் சென்றது,

பயணம் என்னையே கண்டடையும் வரை.

கேள்விகள் எல்லாம் கரைந்தன,

மௌனம் பதிலாக மலர்ந்தபோது.

தேடிய கடவுள் தொலைவில் இல்லை,

ஒவ்வொரு மூச்சிலும் இருப்பதை உணர்ந்தபோது.

இன்று நான் ஓடவில்லை,

எதையும் பிடிக்கவும் இல்லை.

ஏனெனில்…

அமைதி என்பது

அடைந்துவிடும் இடமல்ல,

விழித்த மனம்

ஒவ்வொரு அடியிலும்

உருவாக்கும் ஒளி.

அந்த ஒளிக்குப் பெயர்,

’வாழ்க்கை’.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button