இணைய இதழ் 126கவிதைகள்

விஜி ராஜ்குமார் கவிதை

கவிதைகள் | விஜி ராஜ்குமார்

மெய்வம்


நிகரில்லா மெய் ஒன்று
நிகழும் பொழுதுகளில்
அறிதலில் உள்ளது அனைத்தும்.
நிகழும் அனைத்திலும்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
தெய்வம் வேறு.
இரண்டிற்கும்
உள்ள தொலைவில்
நடுவே அலையாடும்
பாழ்மனத்தின் கூவல்கள்
கேட்கும் நதி தீரங்கள்
வழிந்தோடும் தெய்வங்களா?
இல்லை…
சுழித்தோடும் பாம்புகளா?
வார்த்தைக்கூட்டின்
விநோதக் கூச்சல்களில்
நிர்பந்திக்கப்படுகின்றன
அனைத்தும்.

நதிதீரங்களே!
மனிதர்களில்
விநோதர்கள்
கலந்திருக்கிறார்கள்
அல்லது
விநோதரில் சிற்சில
நேரங்களில்
மனிதர்கள்.
நீரும் நெருப்பும் கொண்ட
மேகங்களின் முகமாறுதல்களை
இங்கெவர் நடிக்க இயலும்?
விநோதகர்களின் உலகம் மாயங்களில் நிகழ்கிறது
உடலெங்கும் முகமூடிகளால்
ஆனவர்கள்.
அவ்வப்போது அவை
ஏதும் கூறாமலேயே
அவர்களின்
முகத்தில்
வந்தமைகின்றன.
கண்ணிமைக்கா பொழுதுகளில்
மாயக்கரங்களால்
அவர்கள்
வரையறுக்கப்படுகிறார்கள்.

வரையறுக்க மிஞ்சிய
அனைத்தும் மீண்டும்
வரையறுக்கப்படுகிறது.
தங்கத் துகள்
சேர்த்தி போல
இயல்வதான இயற்கை.
தன்மை, முன்னிலை, படர்க்கையின்
வேற்றினப் புலம்பல்களுக்கிடையே
நடனமாடுகிறது
மாயாசக்கரக் கடி.
கடிகாரத்தின் முள்முனையில்
சிக்கித் தவிக்கிறது
மனவாசி.
வாசியின் வாசலில் சுழிக்கும்
நீலநிறக்கடலின்
கூர்முனையை உடைக்க
கோடரியின் மழுங்கப்பட்ட
முனைகளால் துழாவுகிறது
காற்று.

சுழலும் கடிகாரத்தின்
தலையைச் சுண்டிவிடுகிறது
நிழற்கை ஒன்று.
மற்றொரு பகுதியாகும்
கடிகாரம்
மீட்பில்
புன்னகைக்கிறது.
யாருமற்ற அவ்வெளியில்
புன்னகைக்கு மதிப்பிடுபவர்கள்
மறித்து போனார்கள்.
மற்றொரு புவியின்
பல்லக்கில் பயணம்
செய்யும்
நாய்க்குருவி
குரைத்தல் என்பதை
கூவுதல்
என்பதாய்
சிலாகிக்கிறது.
குருவியின் குரைத்தலில்
எழுந்து நிற்கும் காலம்
எல்லாமே இயல்பு என
நடிக்கிறது.

விட்டத்தின் மாயையில்
பல்லி பெருசுகள்
ஆடிப் பாடுகின்றன
‘நான்’ இல்லாமல்
போகுதலில்
சிற்சில
நடனங்கள் பூரணம்.
‘நான்’ இல்லாமல்
இருக்கிறது அல்லது
இருக்கிறது
அல்லது
பின்னோடுகிறது.
இயலா அகம்.
நிகழா காலம்
கரையா காலம்
நிகழா காலத்தின் முன்
இயலா காலம் சூல்
கொள்ளும் தருணம் – காலக்கை
எட்டி ஒரு தட்டு
இருபெரும் நிகழாமைகளை
நிர்மூலமாக்கும்
அதுவல்லவோ
கருணை.
கருணையின் கைகளுடன்
பிணைக்கப்பட்டிருக்கிறான்
கரி உரித்தவன்.
தோலின் கீழ் மத்தகத்தை
மிதித்தேறி
மிதந்ததலையும்
அவனல்லவோ
தெய்வம்.

*

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button