குறுங்கதை – காந்தி முருகன்

நொறுங்குண்ட சதை
அகலம் குறைவில் நீளமான கண்ணாடியது. இந்த உயர் ரகக் குடியிருப்பில் மிகச் சிறிய அறையில் கண்ணாடியும் ஒரு மேஜையும் மட்டுமே உள்ளன. மேஜையில் கூர்மையான ஒரு பொருள், முனை மட்டும் துணியால் சுற்றப்பட்டுக் கிடந்தது.
கண்ணாடி முன் நிற்கிறாள் அர்ஷா, நிர்வாணமாக. சில நிமிடங்கள் அல்ல. சில மணி நேரங்கள். அவளது முகத்தில் சோர்வுக்கான தடயங்கள் இல்லை. தன் வெற்றுடலை வெறிச்சோடிப் பார்க்கிறாள். இந்த உடல் அருவருக்கத்தக்க ஒன்றாக இருப்பதாக உணர்கிறாள். நாற்பத்து ஐந்திலும் கட்டுக்கோப்பான உடலது. கூடுதலற்ற சதைகள் இல்லை. வயிறு தட்டையாகக் கொழுப்பின்றி உள்ளது. தோள் பட்டை கம்பீரமாக உள்ளது.
தன்னை முழுவதுமாகப் பார்க்கிறாள், பல கோணங்களில். அவளுக்குச் சலிப்பு ஏற்படவே இல்லை. கண்களில் ஓரம் வழிந்த நீர்த்துளிகளைத் துடைத்திட முனையவில்லை. அவை சிறு கோடுகளாய் மார்பைக் கடந்து போய்க்கொண்டிருந்தன.
அழகான இந்த உடலை எதனோடு ஒப்பிட்டு வர்ணித்தாலும் அனைத்துக் காட்சிப் பிழைகளாகவே கடந்து விடுகின்றன. கூர்மையான அந்தப் பொருளைக் கையில் எடுக்கிறாள்.
இந்த உடலுக்கான தேவை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அத்தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் திருமணப் பந்தத்தில் இணைய வாய்ப்பில்லாமல் போகும் வேளையில் உடலுக்கான பந்தத்தை மட்டும் நிகழ்த்திக்கொள்ள உறவுகளின் பெயரில் உரிமைகள் நிகழ்கின்றன. சில உரிமைகள் தடுக்கப்பட முடிகின்றன. சில உரிமைகள் தவிர்த்தல் என்பதனை சாகடித்துவிடுகின்றன. உடலுக்கான தேவை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்தத் தேவையைத் தீர்க்கப் பல கட்டுப்பாடுகள், பல கட்டமைப்புகள் உடனிருந்து வளர்ந்துவிட்டன. எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என்கிறபோது உடலுக்கான தேவையை மட்டும் எளிதில் பூர்த்தி செய்ய முடிவதில்லை, தனிமையில்.



