இணைய இதழ் 126சிறுகதைகள்

அதிதி – மா. அண்ணாமலை

சிறுகதைகள் | வாசகசாலை

அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். முகச் சவரம் செய்து ஒரு வாரமாகிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி வழக்கமாக முகச்சவரம் செய்யும் குமார் சலூன் கடைக்குச் சென்றேன். கடையின் பெயர் பலகையின் மேலே, ஸ்ரீ மூகாம்பிகை துணை என்று எழுதியிருந்தது. அது இன்றுதான் என் கண்ணில் படுகிறதா இல்லை இத்தனை நாளாக நான் அதை கவனிக்கவில்லையா என்று யோசித்தவரே வெளியில் இருந்த மரபெஞ்ச்சில் அமர்ந்தேன். உள்ளே குமார் அண்ணனும் அவருடைய மகனும் மும்முரமாக தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். நான் வருவதை கண்ணாடியிலேயே கண்டு கொண்ட அவர் மகன் ‘சரக் சரக்’ என்ற கத்தரிக்கோலின் சத்தத்தோடு

‘ வாங்கண்ணா… உட்காருங்க ஒரு பத்து நிமிஷம்ணா ‘ என்றான். 

நானும் ‘ ம்… சரி தம்பி’ என்று மேலும் கீழுமாக தலையை அசைத்து விட்டு அமர்ந்தேன். 

அப்போதும் அவன் கையிலிருந்த கத்தரிக்கோல் தனக்கிட்ட பணியை தொடர்ந்து கொண்டிருந்தது. 

அதுவரை வாடிக்கையாளரின் தலையை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்த குமாரண்ணனின் கைகள், மகன் பேசினதையும், என்னையும் கண்டுகொண்டு கண்ணாடியைப் பார்த்தவாறு ‘வா தமிழு… உட்காரு’ என்றார். 

அவருடைய முதுகு வாசல் பக்கம் காட்டிக் கொண்டிருந்தது.

அவரிடமும் ‘ ஆங்….. உட்கார்ரண்ணே’ என்று சொல்லிவிட்டு அம்மரபெஞ்ச்சின் மீதிருந்த அன்றைய செய்தித்தாளின் மீது என் கவனத்தைத் திருப்பினேன். மூன்றாம் பக்கத்தில், சாக்கடைக் குழியில் தவறி விழுந்து இளம் பெண் மரணம் என்ற செய்தி கண்ணில்பட்டது. பெண்ணின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக இருந்த அந்த நிகழ்வினை சற்று பதற்றத்தோடு வாசித்தேன். கடைக்கு பொருள் வாங்க சாலையில் சென்ற இளம் பெண்ணை, ஆட்டோவில் சென்று கொண்டிருந்த  இளைஞர்கள் கேலி செய்யும் தொனியில் திடீரென சத்தமிட்டதால் பயந்து போன அப்பெண் அருகில் இருந்த சாக்கடைக்குழியில் விழுந்திருக்கிறார். விழும்போது பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இரண்டு நாட்கள் கழித்து இறந்துள்ளார். இச்செய்தியின் நடுவில் அச்சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களின் புகைப்படம் வெளியாகி இருந்தது. எல்லோருக்குமே வயது இருபத்தைந்திற்கு உள்ளாகத்தான் இருக்கிறது. அதில் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருப்பதாகவும் இருந்தது. பதின்மங்களைத் தாண்டிய ஆணுக்கு தன் கொண்டாட்டத்திற்கு ஏன் எப்போதும் ஒரு பெண் பலியாகிறாள்? அவளும் ஏன் இது போன்ற மதிப்பற்ற விஷயங்களுக்கு தன்னை எளிய இரையாகக் காட்டிக் கொள்கிறாள்? என்ற கேள்விகள் முளைத்துக் கொண்டிருந்த மனதை அலைபேசியின் அழைப்புப் பாடல் சிதைத்தது.

“வா… வா… என் தேவதையே 

பொன்வாய் பேசும் தாரகையே 

பொய் வாழ்வின்’ என்ற வரியோடு அழைப்பை ஏற்கும் பொத்தானை இழுத்து காதில் வைத்தேன்.

‘ எங்க இருக்கீங்க?’ 

‘குமாரண்ணன் கடையில் இருக்கேன் மலர். ஷேவ் பண்ணிட்டு வந்துடறேன்’

‘ எட்டேகால் ஆயிடுச்சேன்னு கூப்பிட்டேங்க. சரிங்க’ என்று வைக்கப் போனவள்

‘ ஏங்க வரும்போது கடையில விஸ்பர் முப்பத்தொன்பதுரூபாது ரெண்டு வாங்கிட்டு வாங்க’ என்றாள்.

‘ ம்… சரி. காய் ஏதாவது வாங்கிட்டு வரணுமா?’ என்றேன்.

‘ முருங்கைக்காய் மட்டும் ஒரு கட்டு வாங்கிட்டு வாங்க. சரி சீக்கிரம் வந்துருங்க’ என்று சொல்லிவிட்டு வைத்தாள். வைக்கும் போது என் மகள் பிரதீபாவின் குரல் லேசாகக் கேட்டது.

‘வாங்கண்ணா உட்காருங்க’ என்று அழைத்தான். எனக்கு முன்னதாக ஷேவ் செய்தவர் தன் முகத்தை மேலும் கீழுமாகவும் பிறகு இடவலமாகவும் கண்ணாடியில் திருப்பி பார்த்துவிட்டு மீசை மட்டும் ஒரு பக்கம் சற்று நீண்டிருப்பதாகக் கூறினார். அதை சரி செய்து கொண்ட பின் அகன்றார். நான் ஏறி உட்கார்ந்த பின் குமாரண்ணனின் மகன் பத்து நிமிடத்தில் முகத்தை மழித்து விட்டு படிகாரம் தடவிய போது, முகத்தில் பச்சை மிளகாயை தடவியது போன்று எரிந்தது. அப்போது மருத்துவமனையில் அதிதி அலறித் துடித்தது நினைவில் எழுந்தது.

காலேஜ் கல்ச்சுரல்ஸுக்கு சென்னைக்கு சென்று இருந்தவளின் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக சொன்ன செய்தியை கேட்டு பதறிச் சென்றோம்.

‘டாக்டர்… ஒன்னும் பிரச்சனை இல்லையே?’ தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மகளை பார்த்தபின் கிட்டத்தட்ட ஒடிந்து விழும் நிலையிலிருந்து கேட்டேன்.

‘ ட்ரிப்ஸ் போட்டிருக்கோம். வஜீனாவுல லைட்டா ப்ளீடிங் இருக்கு. உயிருக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. ஒரு மூணு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். இனி நீங்க தான் கொஞ்சம் ஜாக்கிரதையா அவங்கள பாத்துக்கணும்‌.’ அந்த நேரத்தில் அவரது வார்த்தைகள் இந்த உலகை தன் நியதியில் இயக்கும் ஏதோ ஒன்றின் வார்த்தைகளாக இருந்தன. மருத்துவர்களின் நம்பிக்கையான வார்த்தைகளே அதனை எதிர்நோக்குவோருக்கு அந்நேரத்து உயிர்வளி.

‘இந்த மாதிரியான நிலைமைகளில் பாதிக்கப்பட்டவங்க உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகுந்த வலியை உணர்வாங்க. அதிலும் உங்க பொண்ணு டீன் ஏஜ் என்பதால் அவளோட மனநிலைகள் அடிக்கடி மாறும். நாங்க வீட்டுக்கு அனுப்பினாலும் நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாகவே பார்த்துக்கணும்.’ என்று அறிவுரைத்தார். மகள் உயிருக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை என்று ஆறுதலடைவதா? அல்லது அவள் எப்போது வேண்டுமானாலும் ஏதாவது செய்து கொள்வாள் என்பதை நினைத்து பீதி அடைவதா? என்ற மனநிலையில் ஐந்து நாட்கள் மருத்துவமனையில் கிடந்தோம்.

தைரியசாலியான அதிதி தன்னை அழித்துக் கொள்ளும் எவ்வித செயலிலும் இறங்கவில்லை. ஆனால் பாறையின் மீது தெறித்து விழும் அருவியின் ஓசையான அவளின் பேச்சுகள் குறைந்து போயின. வீட்டிற்கு அழைத்துச் சென்ற போதும் யாரிடமும் அவள் அதிகம் பேசவில்லை. மகள் உடலளவில் தேறி இருப்பதால் மகிழ்ச்சி கொண்டாலும் அவளின் செயலின் சுணக்கங்களால்,  வீடு களை இழந்திருந்தது.

‘ அண்ணா முடிஞ்ச்சினா’ என்று அந்தத் தம்பி எழுப்பியதும் அவனிடம் ஐம்பது ரூபாயை கொடுத்து விட்டு வெளியில் வந்தேன். எதிரே அம்மன் மெடிக்கல்ஸ் இருந்தது. அதனுடைய பெயர் பலகையின் மேற்பகுதியிலும் அருள்மிகு ஸ்ரீ ஆதிபராசக்தி துணை என்று இருந்தது. இவை எல்லாம் இப்போது ஏன் என் கண்ணில் படுகின்றன? என்ற குழப்பத்தோடு இரண்டு விஸ்பர் வாங்கிக் கொண்டேன். அதை அவர் ஒரு செய்தித்தாளில் சுருட்டி அதன் முனைகளை மடக்கி என்னிடம் தந்தார். இது அவ்வளவு ரகசியமாக்கப்பட வேண்டியதா என்று எண்ணியவாறு சிவா அண்ணன் கடைக்குச் சென்றேன். அங்கு முருங்கைக்காயும், தக்காளி ஒரு கிலோவும் வாங்கிக் கொண்டேன். சிவா அண்ணன் வழக்கம்போல் கொஞ்சம் கொத்தமல்லியும் கறிவேப்பிலையையும் நான் வாங்கிய காய்கறிகளோடு கேரி பேக்கில் திணித்துக் கொடுத்தார்.

அங்கிருந்து வலப்பக்கம் திரும்பும் தெருவில் நுழைந்து நடந்து வந்தேன். வீடடையும் முன், இரவு உணவை முடித்த அக்கம்பக்கத்துப் பெண்கள் நான்கு பேர் தங்களுக்குள் அளாவளாவிக் கொண்டிருந்தனர். அதில் லதா அக்கா தெருவிளக்கின் அடியில் போடப்பட்டிருந்த கடப்பாக்கல்லின் மீது இளையரசியோடு அமர்ந்திருந்தார். அன்றைய தெருவின் நிகழ்வுகள் அங்குதான் அலசப்படும். எங்கள் வீட்டின் நிகழ்வுதான் அன்றைய தலைப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் அவர்களை நெருங்கியதும் அவர்களின் பேச்சொலி நின்று விட்டதைக் கொண்டு அனுமானித்தேன். புறணி பேச, ஆண்களுக்கு டீக்கடை பெஞ்ச் என்றால் பெண்களுக்கு அக்கம் பக்கத்து வீட்டு பென்ச் அவ்வளவுதான் வித்தியாசம்.

வீட்டை நெருங்கி காலிங் பெல்லை அடித்தேன். இது கடந்த இரு வாரத்திற்கு பிறகான புதிய நடைமுறை. வெளி கேட் மட்டுமே தாழிடப்பட்டிருக்கும். கதவு வெறுமனே மூடியிருக்கும். அந்த நிகழ்விற்கு பின் மனைவி அதிகம் உள்ளொடுங்கிப் போயிருக்கிறாள். அவளின் ஏற்பாடுதான் இது. கேட்டை திறந்தபோது அது சற்று இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. சற்று விசையாக வெளியே இழுத்தபோது ‘க்கிரீ…ச்’ என்று சத்தமிட்டுக் கொண்டே திறந்தது. ஆயில் விட வேண்டும் என்றெண்ணியபடியே கதவு திறக்கக் காத்திருந்தேன். நேரமாகவே ‘டொக் டொக்’ என கதவின் மேல் என் புறங்கையால் தட்டினேன். சற்று நேரத்திற்குப் பிறகு, கதவிற்கு அருகில் இருக்கும் ஜன்னலை திறந்து பார்த்த என் பெரிய மகள்,

‘ இருங்கப்பா திறக்கிறேன்’ என்று கூறிவிட்டு கதவைத் திறந்தாள். ஜன்னல் வழியே ஆளைப் பார்த்துவிட்டு கதவை திறக்கும் சடங்கும் அந்த நிகழ்விற்குப் பிறகுதான் வந்தது. உள்ளே நுழைந்து பின்,

‘ தம்பி என்ன பண்றாம்மா?’ என்று பேரனை விசாரித்தேன்.

‘ பால் குடிச்சிட்டு அவங்க அப்பா கூட விளையாடறாம்பா’ என்று பதிலுரைத்தவள்,

‘ மதியத்திலிருந்து அதிதி சாப்பிடவே இல்லப்பா’  என்றாள்.

அப்படியா என்பது போல் லேசாகத் தலையாட்டி விட்டு

‘ மாப்பிள்ளை சாப்பிட்டாராம்மா?’ என்று கேட்டேன்.

‘ கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன்னுட்டாருப்பா’ என்று பதிலுரைத்தாள்.

‘அதிதி எங்கிருக்கா?’ என்றேன்.

மற்றொரு படுக்கை அறையை கை காட்டினாள். என் பேக்கையும், காய்கறி பையையும் டைனிங் டேபிளின் மீது வைத்துவிட்டு

‘ மலர், பேட்… பேக்குக்குள்ள இருக்கு ‘ என்று சொல்லிவிட்டு அதிதி இருக்கும் அறைக்குள் நுழைந்தேன். சுவற்றைப் பார்த்தபடி கால்களை குறுக்கிக் கொண்டு வலக்கையால் சுவற்றை லேசாகக் கீறிக் கொண்டிருந்தாள். அவள் படுத்திருந்த கட்டிலின் விளிம்பில் மெதுவாக சென்று அமர்ந்தேன்

‘ எழுந்து உட்காருமா. ஏன் மதியத்தில் இருந்து சாப்பிடல? சாப்பிட்டாதானே சோர்வில்லாமல் இருக்கும் ‘ என்றேன். என் பேச்சைக் கேட்டதும் எதுவும் பேசாமல் சுவற்றில் கிறுக்குவதை நிறுத்திவிட்டு கையை தன் கால்களுக்கு மேல் வைத்துக் கொண்டாள். அவள் கையை இறுக்கிப் பிடித்து என் பக்கம் திருப்பி முகத்தை கவனித்தேன். கண்கள் கலங்கியிருந்தன. அதைக் கண்டதும் சரிந்த அரிசி மூட்டைகளுக்கு இடையே சிக்கியவனாய் மனது பாரம் உணர்ந்தது.

அவளை எழுப்பி என் அருகில் உட்கார வைத்தேன். எதுவும் பேசாது தலைகுனிந்திருந்தாள்.

படுக்கையறையின் வாசலில் வந்து நின்ற மலர், ‘ இப்படியேதான் நாள் முழுக்க இருக்கா. ஏதாவது பேசினாலும் பேச மாட்டேங்குறா. நான் என்ன பண்ணட்டும். கடைக்கு போகலாம் வா அதிதின்னு கூப்பிட்டாலும் வரமாட்டேங்கிறா.’ என்று சற்று எரிச்சலும் கரிசனமும் கொண்ட குரலில் பேசினாள் பள்ளி ஆசிரியையான மலர்.

பெரியவள் பிரசவத்திற்கு வந்திருந்ததால், பள்ளிக்கு பதினான்கு நாட்கள் மருத்துவ விடுப்பு கொடுத்துவிட்டு வீட்டில் இருக்கிறாள். இன்னும் நான்கு நாட்களில் விடுப்பு முடிகிறது. பொதுத் தேர்வுக்கு முந்தைய காலம் என்பதால் மாணவர்களை படிக்க வைப்பதில் அவள் கவனம் செலுத்த வேண்டும். எனக்கும் அரசு திட்டத்தின் முகாம்கள் ஒரு மாதமாக நடப்பதால் விடுமுறை எடுக்கவியலா நிலை. மகளிடம் பொறுமையாகப் பேசினேன். அவளும் கல்லூரிக்கு சென்றாக வேண்டுமே. அதன் மூலமே அவள் அவளை மீட்டெடுக்க முடியும். நண்பிகள் வாய்க்கப் பெற்றவள் தன் இடுக்கண்களை புறங்கையால் புறந்தள்ளுகிறாள்.

‘அதிதி நாம கொஞ்சம் பேசலாமா?’

‘………’

‘ நடந்ததுல உன் தவறு எதுவுமில்ல. கீழ்மைகளும், மேன்மைகளும் சேர்ந்ததுதான் உலகம். அதில் நல்லது மட்டும்தான் நமக்கு நடக்கணும்னு நாம நினைச்சுக்கிறது நம்மள நாமே ஏமாத்திக்கிறது.’

‘……..’

‘ தேடல் இல்லாத வரைக்கும் நாம நம்மள சிறை பிடிச்சிக்கிறோம். கவலைப்படுறதால நமக்கு ஒன்னும் நடக்க போறதில்ல. அக்கா பிறக்கிறதுக்கு முன்னாடி அம்மா அனுபவித்த சித்திரவதைகள் சொல்லுல அடங்காது.’

‘………..’

‘ சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் நடக்கிறது நம்ம கையில இல்ல. அது நல்லதா இருந்தா பயன்படுத்திக்கணும். கஷ்டமானதா இருந்தா அதைக் கடந்து போக பழகிக்கணும்.’

‘………..’

‘ உன் மனக் கஷ்டம் எங்களுக்குப் புரியுது. அதுல உன் தப்பு எதுவும் இல்லயின்னும்போது உன்னை வருத்திக்கிறது எந்த விதத்தில் நியாயம்?

எழு அதிதி சாப்பிடலாம்.’ இன்னும் அமைதியாகவே இருந்தாள்.

‘ உங்கூட நாங்க எப்பவும் இருப்போம். எங்க  வாழ்நாள் முழுவதும் உங்கூடவும் அக்காக்கூடவும் இருப்போம்.’ அதிதி அப்போதும் அமைதியாகவே இருந்தாள்.

‘ ஏதாவது பேசு அதிதி. அப்பதானே  மனஅழுத்தம் குறையும்’ என்று சற்று மெதுவாக குரலுடையும் தொனியில் சொன்னதைக் கேட்டவள்,

‘ நான் காலேஜெல்லாம் போலப்பா’ என்றாள். படிப்பில் கெட்டிக்காரியான அவள் அப்படி சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.

‘ ஏன் அந்த பசங்களை நினைச்சு பயப்படுறியா?. அதான் அவங்கள அரெஸ்ட் பண்ணிட்டாங்களே’

‘ அது இல்லப்பா…’ என்று சோர்ந்து போன குரலில் சொன்னாள்.

‘ வேற என்ன அதிதி?

‘ வெளில போகவே ஒரு மாதிரியா இருக்குப்பா.’

‘ அப்படி நினைச்சா பொண்ணுங்க யாருமே வெளியில நடமாட முடியாதும்மா’. சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்.

‘ சரிப்பா… எனக்கு கொஞ்சம் டைம் வேணும்’ என்றாள்.

‘உன்ன யாரும் நாளைக்கே காலேஜ் போகச் சொல்லல. இன்னும் ரெண்டு மூணு நாள் ரெஸ்ட் எடுத்துக்கோ. உன் மனசும் உடம்பும் ஓரளவுக்கு ரெடியாயிடும். அதுக்கப்புறம் போகலாம். சரியா?’ என்ற என் சமாதானம் ஓரளவிற்கு அவளை தெம்பூட்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.

‘ சரி எழுமா… சாப்பிடலாம். நானும் துணி மாத்திட்டு வந்துடறேன்’ என்று சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் உடைமாற்றிக் கொண்டு வந்து அவளோடு சேர்ந்து உண்டேன்.

இரண்டு நாள் கழித்து நான் அலுவலகத்திலிருக்கும் போது பேரனுக்கு ஏதோ வாங்கி வரச் சொன்னாள் என்று மனைவிக்கு போன் செய்தேன். சந்தையில் இருப்பதாகச் சொன்னாள்.

‘ அதிதி என்ன பண்றா?’ என்றேன். 

‘ அவதான் காய்களை தரம் பிரித்து வாங்குறா’ என்றாள்.

மா. அண்ணாமலை,
பொம்மிடி,
தருமபுரி-635301.
அலைபேசி: 9543520031.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button