
அவர் என் அப்பா
அந்திக் குன்றாய் அவள் உடலிலும் உடையிலும் செம்மை அப்பியிருந்தது. இந்த வீட்டிற்கு மாறிய பின்னும் புதிதாக எதுவும் உண்டா என்ன? மாடி விளக்கைப் போட வந்தவள் அங்கேயே காற்றுக்கு விடை கொடுத்த மரமாய் நின்றுவிட்டாள்.
“என்ன ரேகா உங்க வீட்டுக்கு இன்னைக்கு விருந்தாடி யாரோ வந்திருந்தாங்க போல?” காணும் நேரங்களில் எதிர் மாடியிலிருந்து சிநேகமாய் பேச்சுக் கொடுக்கும் பானுவின் குரல் வரவும் அதிர்ந்து திரும்பினாள்.
‘அது எங்க அப்பாடீ..!’ எனக் கதறி அழ வேண்டும் போலிருந்தது அச்சமயம் அவளுக்கு.
***
ரேகாவின் அப்பா, அவளுக்கு ஐந்து வயதிருக்கும்போது வரும் விருந்தாளிகளை எப்படி உபசரிப்பதென கற்றுத் தந்திருந்தார். ஒவ்வொரு முறையும் வெளியிலிருந்து யாரும் வந்தால் என் பிள்ளை சொன்னபடி சரியாக அவர்களை உபசரிக்கிறாளா என ஆதுரமாய் அவளின் நடவடிக்கைகளை அவதானிப்பார். கார்த்தி குடும்பத்தினர் அவளைப் பெண் பார்க்க வந்ததிலிருந்து, கல்யாணமாகி முதல் அழைப்பு முடியும் வரையும் கூட வரும் விருந்தினருக்குத் தன் பிள்ளை குறையேதும் வைத்துவிடவில்லையே என அவளிடம் கேட்டு உறுதி செய்துகொள்வார். விருந்தோம்பல் செய்வதில் அத்தனை பொறுப்பானவர். கண்ணியமும் பண்பும் மிகுந்தவர்.
ஆனால் தனது மகளைக் கட்டிக் கொடுத்த பின்னர் அவளுக்கோ, அவள் வாழ்க்கைப்பட்ட வீட்டிற்கோ காண வருகிறோம் என்ற பேரில் சிறு தொந்தரவும் கொடுத்து விடக் கூடாதென மிக உறுதியாக இருந்தார். அவளது அம்மா இருந்தவரையாவது ஓரளவு பரவாயில்லாமல் நடந்து கொண்டார். அது தனது மனைவிக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை யை உறுதிப்படுத்திக்கக்கூட இருந்திருக்கலாம். இப்போது வருவதே குறைந்து விட்டது. வந்தாலும் மருகி மருகி அமர்வார். சந்தோஷத்தோடு கூச்சப்பட்டுக்கொண்டே முதலில் கொடுக்கும் தண்ணீரைத் தவிர மற்றதற்கெல்லாம் வேண்டாம் வேண்டாம் என்றே சொல்வார். ஒரு கட்டத்தில் அவருடைய அந்த ‘எதுவுமே வேண்டாம்மா!’ என்ற வார்த்தையைக் கேட்காமலிருக்கவே ஆளைத் தள்ளும் அலையாய் அவளாக வலிந்தேதும் கேட்பதை நிறுத்தி விட்டாள். கார்த்தி மற்றும் கார்த்தியின் அம்மாவின் குரலுக்கு ஹாலில் சென்று ஏவுவதை மட்டும் செய்வாள்; கொடுப்பாள். பிறகு ஓர் ஓரமாக வந்து நின்றுகொள்வாள். ‘வந்தவங்களை அதிகம் தொந்தரவு செய்யக்கூடாதும்மா!’ எனத் தனது அஞ்சு வயதில் கேட்ட அப்பாவின் கனிவான குரல் அவளுக்குள் வந்து வந்து கண்ணீர் முட்டும்.
***
மற்றவர்களை மன்னிக்கலாம் – இத்ரீஸ் யாக்கூப்
ரிஸ்வான் எப்போதும் செல்லும் ஜிம்தான் அது. ஆனால் இம்முறை வரவேற்பில் அதுவரை பரிச்சயப்பட்டிராத இரு வேறு பெண்கள் அமர்ந்திருந்தனர். ஒருவருக்கு இந்தியச் சாயல், மற்றொன்று எந்த நாட்டிற்கு உரியது எனத் தெரியவில்லை ஆனால் அரேபிய முகம். எகிப்து, மொரோக்கோ இவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கக் கூடுமென ஊகித்தவனாய் இருவரையும் இன்முகத்தோடு ஏறிட்டான். இந்தியப்பெண் புன்னகையில் பதில் தந்தாள். மற்றவள், இவனைப் பார்த்து அரபியில் ‘புதியவனா?’ என்று எந்தவிதப் பற்றுமின்றி, ஒரு மின்னணு கதவுபோல அனுமதிக்க விசாரித்தாள். அவளின் அந்தச் சிநேகமற்றப் பேச்சு இவனுக்கு மனதளவில் சற்று தொய்வைத் தந்தாலும், பதிலளிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. ‘இல்லை, இரண்டு வாரங்கள் freeze செய்திருந்தேன்’ என்றான்.
இவனுடைய பெயர், அலைப்பேசி எண்களைக் கேட்டறிந்து, கணினியில் subscriptionஐ சரிபார்த்துவிட்டு, அந்த அரேபியப்பெண் உள்ளே செல்ல அனுமதி வழங்கினாள். ரிஸ்வான் நம் நாட்டு அழகியிடம் பேச்சுக் கொடுத்தபோதுதான் நிர்வாகம் மாறியிருப்பது தெரிய வந்தது.
முன்பிருந்த ஆப்பிரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்களின் கனிவான வரவேற்பும், உபசரிப்பும் ஞாபகம் வந்து, அவர்களைப் பெரிதும் மிஸ் பண்ணுவது போல் உணர்ந்தான். Face print மெஷின் இவனது முகத்தைக் கண்டறியவில்லை; கைரேகை முயற்சிகளும் தோற்றுப் போயின. ஏற்கனவே தனது ஐந்து நிமிடங்கள் சோதனை எனும் பேரில் விரயமானதிருந்து அவன் மீளாமலிருக்க, இந்த பயோமெட்ரிக் மெஷினும் மேலும் சோதித்துக்கொண்டிருக்க, இந்தியப்பெண் வந்து மறுபடியும் அவனது, விரல் ரேகை மற்றும் face print போன்றவற்றை மீண்டும் பதிவு செய்து, சரியும் பார்த்துவிட்டு, ‘காக்க வைத்தமைக்கு மன்னிக்கவும், தங்களின் ஒத்துழைப்பிற்கும் பொறுமைக்கும் நன்றி!’ எனத் தனது பணிக்கும், சக மனிதனின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நியாயம் செய்தாள்.
உள்ளே நுழைந்தபோது அனைத்து மெஷின்களும் இடம் மாற்றி வைக்கப்பட்டு ஜிம் புதியதொரு வடிவத்தைப் பெற்றிருந்தது என்றாலும் எடைத்தட்டுகள், அவர்களுக்குரிய ஸ்டாண்டில் இருத்தப்படாமல் ஆங்காங்கே இரும்பு ரோதை போல உருண்டும் சார்ந்தும் சிதறிக் கிடந்தன. முன்பிருந்த ட்ரைனர் கம் மேனேஜர் எல்லாவற்றையும் ஓர் ஒழுங்கோடு வைத்திருந்தார். உடற்பயிற்சி செய்ய வரும் ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் கண்காணித்த வண்ணமிருப்பார். ஒவ்வொரு பயிற்சியும் முடிந்த பின்னர், இடைத்தட்டுகள் அதனதன் இடத்திற்குத் திரும்ப வேண்டும். மெஷினிலேயே விட்டுச் செல்பவர்களை அழைத்து, அந்த நிமிடத்திலேயே உரிய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துவார். இப்படி வலியுறுத்துவது அவர்களைப் பொறுத்தவரை மற்ற நாட்டுக்காரர்கள் என்றால் மிகச் சுலபம். ஆனால் உள்ளூர்வாசிகளில் பலர் அப்படி இருப்பதில்லை. ஆனால் அந்தப் பயிற்சியாளரைப் பொறுத்தவரை அதுவும் கைவரவே செய்தது. இத்தனைக்கும் யாரையும் கடிந்தோ, சப்தமிட்டோ பேசி ரிஸ்வான் பார்த்ததே கிடையாது. குணத்தில் மிகவும் கனிவானவர் என்றாலும், அனைவரையும் கட்டுப்படுத்தி ஒழுங்கைக் கடைப்பிடிக்க வலியுறுத்தும் ஆளுமைத் திறனை அவர் இயற்கையாகவே கொண்டிருந்ததே அந்த வெற்றிக்குக் காரணம். இத்தனைக்கும் அவரும் வெளிநாட்டைச் சார்ந்தவர்தான். ஆனால் அரபே அவரது தாய்மொழி.
இம்முறை அவருக்குப் பதிலாகப் புதியவர்கள் தென்பட்டார்கள். இரண்டு பேர். அவர்களும் அரபு பேசும் நாட்டினரே என்றாலும், அவரளவு கண்டிப்பானவர்கள் போலவும் தெரியவில்லை; அணுக்கமாகவும் இவனைப் பார்த்துப் பேசவில்லை.
உள்ளூர் சிறுவர்கள் கிட்டத்தட்ட அனைத்து மெஷினையும் உடற்பயிற்சிகள் ஏதும் செய்யாமல் வெறுமனே ஆக்கிரமித்திருந்தனர். இவனுக்குச் சலிப்பாகவும், கோபமாகவும் வந்தது. அவர்களிடம் அதிர்ந்து பேச முடியாது. ஒரு வேலையாள் தன் எஜமானுடைய குடும்பத்தினரிடம் பேசுவது போல்தான் பணிந்து நடக்க வேண்டும். நேரம் செல்கிறதெண்ணி பொறுமை இழந்து இவன் அவர்களிடம் பேச்சுக் கொடுத்து வேண்டிய மெஷிகளிலிருந்து அவர்களை அப்புறப்படுத்த முனைந்தான். ஆனால் அவர்கள் வெறுமனே நகர்ந்தார்களே தவிர, எடைத் தட்டுகளை அதற்குரிய இடங்களுக்கு மாற்றவில்லை. இது அந்தச் சிறுவர்களுக்கு மட்டுமல்லாது உள்ளூர்வாசிகள் பெரும்பான்மையானவர்களுக்குப் பொருந்தவே செய்தது.
அவைகளை எளிதாக எடுத்துச் செல்ல ரிஸ்வானால் முடியவில்லை. அவர்களுடைய வளர்ப்பைக் குறை சொல்லி மனதிற்குள் குமைந்தான்.
இவ்வளவு திடகாத்திரமாக இருக்கிறார்களே தவிர, சரியான சோம்பேறிகள் என அனைவரையும் சாடினான். மேலும் மெஷின்களின் இடமாற்றமும் அவனைச் சோதித்தது. சில மெஷின்களுக்கு இடையே போதுமான இடைவெளி அமைக்கப்படவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்க அந்த மாற்றங்கள் ஒரு புத்துணர்வைத் தராமல் இல்லை. மாற்றங்கள் எல்லாம் அப்படித்தானே. பழகும் வரை சின்னச் சின்ன போராட்டங்கள் இருக்கவே செய்யும்.
உடற்பயிற்சி முடிந்து, அருகிலிருந்த சூப்பர் மார்க்கெட்டில் மனைவி குறுஞ்செய்தி அனுப்பியிருந்த சமையல் மற்றும் இதர பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டை அடைந்தபோது, வரவேற்பறை, பிரதான ஹால் என எல்லாம் ஒழுங்கின்றிக் கிடந்தன. இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் அதது வைத்த இடத்தில் பராமரிப்பது சவாலான காரியம்தான். இதைத் தவிர்த்து சமையல், துப்புரவு என்று மற்ற மற்ற வேலைகளும் தஸ்னீனைக் காலையிலிருந்து இரவு வரை பம்பரமாகத்தான் சுழல வைத்துக்கொண்டிருந்தது. இதில் வார இறுதிகள் என்றால் உறவுகளின் வருகைகள் வேறு! அவர்கள் செல்லும் வரை மணிக்கொரு முறை தேநீர், மணிக்கு வகைவகையாய் ஊர் உணவுகள் என அவளும் பம்பரமாகத்தான் சுழல்வாள்!
ரிஸ்வானுக்கும் அவள் கஷ்டப்படுவதைக் கண்டு பாவமாகத்தான் இருந்தது. உதவி செய்யும் மனம் வந்தாலும், ஏதோ ஒரு சோம்பேறித்தனம் அவனைத் தடுத்துக் கொண்டேயிருந்தது. இந்த நிலை கல்யாணமாகும் பல ஆண்களுக்கும் தொற்றிக் கொள்வது சோகம்தான்.
ரிஸ்வான் வந்ததைக் கண்டதும் குழந்தைகள் ஆலியாவும் அயானும் ‘ஹூய்..! வாப்பா! வாப்பா!’ என ஆர்ப்பரித்தனர். தஸ்னீன் வேலைகளோடு வேலையாக அவனுக்காகத் தேநீர் தயாரிக்கும் பணியில் இறங்கினாள். வீடெல்லாம் குப்பை. அவளுக்கு இன்றாவது உதவி செய்ய அவனுக்குத் தோன்றியது. மேலும் ஜிம்மில் உள்ளூர்வாசிகளின் சோம்பேறித்தனத்தையும், மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காத பச்சாதாபமின்மையையும் குறை சொன்ன அவன் மனம் இப்போது தன்னைத்தானே கூண்டில் நிறுத்தி, குற்றவுணர்வை அதிகப்படுத்தியது. குழந்தைகளை ஓரிரு நிமிடங்கள் ஏந்திக் கொஞ்சியவன். முதல் வேலையாக வீட்டைச் சுத்தப்படுத்த அங்கிருந்த துடைப்பத்தை எடுத்தான்… தூக்கப் பெரும் பாரமாக இருந்தது.
***



