ராகதேவன் – சேவியர் ராஜதுரை

மாலையில் நடைபெறவிருக்கும் இளையராஜாவின் 50 வது வருட கான்சர்ட்டிற்கு செல்வதற்காக ப்ளா ப்ளா காரில் சிவகாசியிலிருந்து சென்னைக்கு புக் செய்திருந்தான் ராஜா. நேற்று நடந்திருந்த வேலியண்ட்டிற்கே சென்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது அவன் துவங்கியிருக்கும் சோசியல் மீடியா நெட்வோர்க்கிங் கம்பெனி வேலை நெருக்கடியால் அவனால் நேற்று செல்ல முடியவில்லை. இன்றுமே ஒரு மீட்டிங் இருக்கிறது. அதை அவனது நண்பனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு எப்படியாவது கான்சர்ட்டிற்கு போய்விட வேண்டுமென புக் செய்திருந்த காருக்காக மெயின் ரோட்டில் நின்றிருந்தான்.
’ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’
அவனது போன் ஒலிக்க போனை எடுத்துப் பார்த்தான். ப்ளா ப்ளாவில் புக் செய்திருந்த கார் ஓனர் கார்த்திக் தான் கால் செய்திருந்தான். போனை எடுத்தவனிடம், ‘ப்ரோ லோகேசன் வந்துட்டிங்களா! நான் பக்கத்துல வந்துட்டேன்’ என்றான். ‘ப்ரோ லொகேசன்லதான் நிக்குறேன்’ என சொல்ல சூப்பர் ப்ரோ என சொல்லி அடுத்த ஐந்து நிமிடத்தில் வந்து நின்றான்.
வண்டி எண்ணை உறுதிசெய்துவிட்டு அந்த ஓனரைப் பார்த்து புன்னகைத்து, பின் சீட்டில் கார்த்திக்கின் பேக் இருப்பதைப் பார்த்துவிட்டு, முன் சீட்டிலேயே அமர்ந்து, ’போலாம் ப்ரோ’ என ராஜா சொல்ல கார் புறப்பட்டது. காரில் இளையராஜாவின் உன் மனசுல பாட்டுதான் இருக்குது பாடல் ஓடிக் கொண்டிருந்தது. தாளம் தட்டியபடியே கார் ஓட்டிய கார்த்திக், சரணம் வர சத்தமாக ஸ்டிரியங்கில் தாளம் போட்டபடியே பாடினான்.
’நீ பாடும் ராகம் வந்து நிம்மதிய தந்ததயா!
நேத்து வர நெஞ்சில் ஆசை தோணல!’
வரியைப் பாடியவனைப் பார்த்து ராஜா சிரிக்க கார்த்தியும் பதிலுக்கு சிரித்து, செம்ம பாட்டுல்ல ப்ரோ! என பெருமையாகச் சொன்னான்.ஆமா ப்ரோ என தலையாட்டினான் ராஜா.
அப்படியே அடுத்த பாடல் ஓடியது.
தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்
ராஜாவும் கார்த்திக்கோடு சேர்ந்து பாடத் துவங்கினான்.
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே!
என இருவருமே பாடியபடி ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டே பாடி முடித்தனர்.
நான் வெறித்தனமான ராஜா ஃபேன் ப்ரோ.இப்ப சென்னைக்கு போறதே கான்சர்ட்க்காகதான் என சொல்ல, ராஜாவும் சந்தோசமாகி ப்ரோ நானும் தான் அதுக்கு தான் நானும் போறேன் ப்ரோ’ என சொன்னான்.
ராஜாவும் கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டனர்.
அடுத்த பாடல் ஒலிக்கத் துவங்கியது.
**
அந்தப் பாடல் வரவும் ராஜாவின் முகம் மாறியது.
”செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் எம் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே”
என ஒலிக்க ராஜா கார்த்தியைப் பார்த்து, ’ப்ரோ, வேற பாட்டு மாத்துறிங்களா!” என கேட்டான்.
ஏன் ப்ரோ நல்ல பாட்டுத்தான! என சொல்லிவிட்டு வால்யூமை சற்று அதிகம் வைத்து அவனும் சேர்ந்து பாடினான். ராஜா சிறிது நேரம் அமைதியாக வந்தான்.
“உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே!
உம் மேல ஆசப்பட்டு பாத்து காத்து நின்னேனே!
உன் பாதம்….
ராஜா தன் கைவிரல்களை பதட்டத்தில் சொடக்கு எடுத்தபடியே வெளிப்பக்கம் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த வரி வரவும் அவனால் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பாடலை மாற்றிவிட்டான்.
கார்த்தி கோபமாகி, ‘ஏன் ப்ரோ மாத்துன! நல்ல பாட்டுதான!’ என கேட்டார்.
‘தப்பா எடுத்துக்காதிங்க ப்ரோ! எனக்கு இந்த பாட்டு பிடிக்காது!’ என சொல்ல கார்த்தி அதிர்ச்சியாகி, ‘செண்பகமே பாட்டு பிடிக்காதுனு சொல்ற ராஜா ஃபேன இப்பதான் பாக்குறேன் ப்ரோ!’ என்றான்.
‘ஒரு பாட்டு பிடிக்காம போறதுக்கு உண்மையாலுமே அந்த பாட்டு நமக்கு பிடிக்காம இருக்கணும்னு அவசியம் இல்ல! நமக்கு ஒரு காலத்துல பிடிச்சவங்களுக்கு பிடிச்ச பாட்டா கூட இருக்கலாம்’ என்றான் ராஜா.
’என்ன ப்ரோ எக்ஸ் நியாபகம் வந்துருச்சா! என அவன் கையைப் பற்றியபடி கேட்டான்.
ராஜா சாலையை வெறித்துப் பார்த்தபடியே, ‘ரெண்டு பக்கம் லவ் பண்ணி பிரிஞ்சா தான் ப்ரோ எக்ஸ்! ஒரே பக்கம் லவ் பண்ணி பிரிஞ்சா கிடையாது’ என்றான்.
எல்லாத்துக்கும் காரணம் இவருதான் என மியூசிக் ப்ளேயரைக் காட்டி சொன்னான். அதில் இளையராஜா ஹிட்ஸ் என திரையில் ஓடிக்கொண்டிருந்தது. இவரால தான் அவள மீட் பண்ணேன்.
‘நிஜமாவா! எங்க!’
**
தீபாவளிக்கு அடுத்த நாள் ராஜா சார் பண்ணைபுரத்துல அவங்க அம்மாவுக்காக கட்டுன மணிமண்டபத்துல தான் இருப்பாரு. அங்கே அவர் போயி வேண்டிகிட்டு, அங்க வந்துருக்க ரசிகர்களோட போட்டோ எடுத்துக்குவாரு! போட்டோவ நம்ம மெயில் ஐடிக்கு அனுப்பிடுவாங்க!
அவர்கூட போட்டோ எடுத்துக்கறதுக்காக நானும் என் ஃப்ரண்டும் பண்ணைபுரத்துக்கு அந்த மணிமண்டபத்துக்கு போய்ட்டோம். எங்களை மாதிரியே நினறய பேர் வந்துருந்தாங்க! அவர் மணிமண்டபத்துக்குள்ள இருக்காருனு சொன்னாங்க! போட்டோ எடுக்குற இடத்துகிட்ட வரிசையில் நிக்க சொன்னாங்க! அங்கருந்து நேரா இங்க வருவாரு! வந்ததும் போட்டோ எடுத்துக்கலாம்னு சொன்னாங்க!
நானும் என் ஃப்ரண்டும் வரிசையில நின்னோம். திடீர்னு கூட்டத்துல பயங்கர சலசலப்பு. ”ராஜா சார் வர்றாரு! வர்றாரு”னு ஒட்டுமொத்தக் கூட்டமும் வரிசை கலைஞ்சு ஒரே நேரத்துல எட்டீப்பாத்தாங்க!
தூரத்துல மணிமண்டபத்துலருந்து வெளிய வந்தாரு! அடிச்ச உச்சி வெயில்ல, அவரோட வெள்ளைக் கலர் ஜிப்பா பளீர்னு ஒரு சின்னப் புள்ளியா ஒரு ஜோதி மாதிரி மிளிர்ந்துச்சு.
”அருட்பெருஞ்சோதி” ன்னு என் பக்கத்துல நின்னவரு சொல்லி மெய்மறந்துபோய் கையெடுத்துக் கும்பிட்டாரு.
அந்த சின்ன ஒளி, எங்களை நோக்கி வர வர, சுத்தி இருந்த காத்தே மாறுச்சு! அவ்வளவு சத்தத்துலயும் எதோ ஒரு அமைதி மனசுல வந்துச்சு! முதல் தடவ நேர்ல அதுவும் அவ்வளவு பக்கத்துல பாக்குறப்போ என் உடம்பே சிலிர்த்துருச்சு! என்னையே அறியாம என் உதடு பிரான்சிஸ் கிருபா எழுதுன ஒரு கவிதையை முணுமுணுத்துச்சு ப்ரோ…..
”யாரவன் ?
நாவில் இசை
கண்ணில் ஒளி
சின்னஞ்சிறு கிளையில்
மின்னல் ஒளியில்
பறவைபோல் ஒருவன்
ஏறக்குறைய இறைவன்!”
காரை ஓட்டிக்கொண்டிருந்த் கார்த்தி, ’ப்ரோ, ஏறக்குறையலாம் கிடையாது. அவர் முழுசாவே இறைவன் தான்” னு சொல்லும் போதே மியூசிக் ப்ளேயரில் சரியா அந்த வரி வந்துச்சு!
“புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே!”

ராஜாவும் கார்த்தியும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.
இசைக்கென இசைகின்ற
ரசிகர்கள் ராஜ்ஜியம்..
அமைத்தேன் நான்…
மடை திறந்து
பாயும் நதி அலை நான்….
என இருவருமே சேர்ந்து பாடினார்கள்.
’அவங்கள அங்க தான் பாத்திங்களா!’ என கார்த்தி கேட்க, ‘இல்ல ப்ரோ! ஆனா அங்க அவளும் வந்துருந்தா!.’
அவர் கூட போட்டோ எடுக்கும்போது யாரும் அவரைத் தொடக் கூடாது. செல்போன்ல போட்டோ எடுக்கக்கூடாது. அவங்க போட்டோகிராபரே போட்டோ எடுப்பாரு. போட்டோ எடுத்ததும் உங்க மெயில் ஐடி கொடுத்தா, அந்த மெயில் ஐடி பக்கதுல அந்த போட்டோ நம்பர நோட் பண்ணி, அப்பறமா மெயிலுக்கு அனுப்பிருவோம்னு ஒருத்தர் சத்தமா சொன்னாரு!’
அவர் வந்து நின்னாரு. பொறுமையா எல்லார் கூடவும் போட்டோ எடுத்தாரு. போட்டோ எடுத்துட்டு நானும் என் ஃப்ரண்டும் மெயில் ஐடி கொடுத்துட்டு வந்துட்டோம்!
ஒரு வாரம் கழிச்சு மெயிலுக்கு அனுப்பிட்டாங்கனு என் ஃப்ரண்டு சொன்னான். அவனுக்கு சூப்பரா போட்டோ வந்துருச்சு! அடுத்து என்னோட போட்டோ வந்துருக்கானு என் மெயில் செக் பண்ணி பாத்தேன். வந்துருந்தது. சந்தோசத்துல ஓப்பன் பண்ணுனா செம கடுப்பா இருந்தது. அவளோட போட்டோவ எனக்கு மாத்தி அனுப்பிருந்தாங்க!
’அவங்க போட்டோவா!’ கார் ஓட்டியபடியே கார்த்தி இவனைப் பார்த்து கேட்டான்.
ஆமா ப்ரோ! அதுல அவ இளையராஜாவ திரும்பி பாத்துட்டு இருந்தா போட்டோக்கு ஒழுங்காவே போஸ் கொடுக்கல! நல்ல மொமண்ட்ட மிஸ் பண்ணிட்டா பாரேன்! இந்த போட்டோ அவளுக்கு கிடைச்சிருந்தாலும் அவளுக்கு நிம்மதியா இருந்துருக்காதுனு என் ஃப்ரண்ட் சொன்னான்.
அவ முகத்தை பாத்தேன். அதுல அவ்வளவு மனநிறைவு, நிம்மதி இருந்துச்சு! இல்லடா அவ முகத்த பாரு! அதுல எவ்ளோ நிறைவா இருக்கா! இந்த போட்டோ இல்லாட்டியும் இவ்வளவு சந்தோசத்தோட பாத்ததே திருப்தியாயிருக்கும்டானு நான் சொன்னேன்.
போட்டோ அனுப்பியிருந்த மெயில் ஐடிக்கு, ’நீங்கள் புகைப்படத்தை மாற்றி அனுப்பிவிட்டீர்கள். தயவுசெய்து என்னுடைய புகைப்படத்தை அனுப்பமுடியுமான்னு, அடையாளத்துக்காக என்னுடைய ஒரு புகைப்படத்தை சேர்த்து அந்த மெயிலுக்கு அனுப்பியிருந்தேன். எந்த ரிப்ளேயும் வரல.
நமக்கு கிடைச்சது அவ்ளோதான்னு நினைச்சு விட்டுட்டேன்! ஆனா அப்ப அப்ப அவளோட போட்டோ பாத்து அவ முகம் எவ்வளவு நிம்மதியா இருந்துருக்குலன்னு நினைச்சிருக்கேன்!
அது நடந்து ஒரு மூனு மாசம் கழிச்சு என் ஃப்ரண்ட் ரம்யா கல்யாணத்துக்கு போயிருந்தேன். அங்க புடவையில ஒரு அழகான பொண்ண பாத்தேன். கூலி படத்துல நாகார்ஜூனா சொல்ற மாதிரி, ‘எங்கேயோ பாத்துருக்கேன்! எங்கேயோ பாத்துருக்கேன்னு’ யோசிச்சேன். ஆனா நியாபகம் வரல. அவள சைட் அடிச்சுட்டு இருந்தேன். கல்யாண ஜோடியோட போட்டோ எடுக்க ஸ்டேஜ் ஏறுனா! போட்டோ எடுக்கும் போது கரெக்டா மாப்பிள்ளை கூட திரும்பி பேசிகிட்டு இருந்தா! கல்யாணத்துல ஆர்கெஸ்ட்ரா வச்சிருந்தாங்க! அப்ப செண்பகமே பாட்டு பாடிட்டு இருந்தாங்க! அவ மாப்பிள்ளைகிட்ட திரும்பி சிரிச்சு பேசிட்டு இருந்தப்ப, ஆர்கெஸ்ட்ரால சரியா ‘உம் முகம் பாத்து நிம்மதியாச்சு’ வரிய பாடுனாங்க! அவதான்னு கண்டுபிடிச்சிட்டேன். உடனே என்னோட மெயில ஓப்பன் பண்ணி செக் பண்ணி பாத்தேன். அந்த போட்டோல இருந்தது அவ தான்.
வேக வேகமா ஸ்டேஜ நோக்கி போனேன். அவ மாப்பிள்ளையோட ஃப்ரண்ட். அவ போட்டோ எடுத்துட்டு பேசிட்டு இருக்கப்பவே பக்கத்துல போக, என் ஃப்ரண்ட் கல்யாணப் பொண்ணு ரம்யா என்னையப் பாத்து, ’வெய்ட் பண்றா, இவங்க கூட ஒரு போட்டோ எடுத்துட்டு அப்பறம் நம்ம எடுத்துக்கலாம்னு சொன்னா. நான் ரம்யா பக்கத்துல இருந்த அவள பாத்து சிரிச்சேன். அவளும் கடமைக்காக ஒரு அடையாளச் சிரிப்பு சிரிச்சா! உங்ககிட்ட ஒன்னு காட்டணும்னு சொல்லி என் போன எடுத்து அந்த இளையராஜா சாரோட அவ எடுத்த போட்டோவ காமிச்சேன். கல்யாண ஜோடியும் நான் காட்டுறப்ப அத பாத்தாங்க! அந்த போட்டோ பாத்துட்டு ராஜா சார பாத்து எப்பிடி ஆச்சரியமா நின்னாலோ அதே மாதிரி என்னைப் பாத்து நின்னா! என் ஃப்ரண்ட் ரம்யாவோட கல்யாண ஆல்பத்துல அந்த போட்டோ இருக்கு! என்கிட்டயும் இருந்தது. அவ நியாபகமா எதுவும் இருக்கக்கூடாதுனு அவ சம்மந்தமான எல்லாத்தையும் அழிச்சுட்டேன்.
ஒரு பெருமூச்சுவிட்டு, ‘இந்த பாட்டு மட்டும் நியாபகப்படுத்திட்டே இருக்கு’ என்றான்.
**
எதுவும் பேசாமல் சிறிது நேரம் இருவரும் காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர். ராஜா மட்டும் பாடிக்கொண்டிருந்தார்.
”நான் பெற்ற செல்வமே
சொந்தம் என்று உன்னை விட்டால் யாருமில்லை
நாள்தோறும் அம்மாடி கண்ணீர் சிந்த
கண்ணில் இன்னும் ஈரமில்லை
காயங்கள் ……
காலம் முழுக்க ஆறாதோ!
நான் செய்த பாவக்கணக்கும் தீராதோ!
மகிழம் பூவே
எந்தன் மணிமுத்தே!
குழலைப் போலே தினம்
மழலை பேசும் பூங்கொத்தே!
ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே!….”
பெட்ரோல் போடுவதற்காக கார்த்திக் நிறுத்தினான். ராஜா எதுவும் பேசாமல் இருந்தான்.
பெட்ரோல் போட்டுவிட்டு மீண்டும் வண்டி கிளம்ப இந்த முறை எஸ்.பி.பி பாட ஆரம்பித்தார்.
”பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ”
கார்த்தி மெதுவாக ராஜாவின் பக்கம் திரும்பி , ‘உனக்கு பிடிக்கலனா பாட்ட மாத்திக்க ப்ரோ! என்றான்.
’இல்ல. நல்ல பாட்டுதான் ஓடட்டும் ப்ரோ’
’இல்ல ப்ரோ, சோகப் பாட்டா இருக்குல அதான் சொன்னேன். உன் போன் ப்ளூடுத் ல கூட கனெக்ட் பண்ணிக்க! உன் ஃபேவரட் சாங்ஸே போடு! என் லிஸ்ட்ல இருக்க பாட்டு திரும்ப உன்னை டிஸ்டர்ப் பண்ணிடுச்சுனா! என சொல்ல, ‘ஐய்யய்யோ ப்ரோ! அந்த ஒரு பாட்டு மட்டுந்தான் என்னை டிஸ்டர்ப் பண்ணும். அதுவும் பர்ட்டிகுலரா அந்த ஒரு வரி மட்டும் தான்.
“உம் முகம் பாத்து நிம்மதி ஆச்சு!”
அது மட்டுந்தான் என சொல்ல, அந்த வரி உன் நிம்மதிய கெடுத்துருச்சுல! என கார்த்தி சொன்னான்.
ராஜா சிரித்தபடி ஆமா ப்ரோ! என்றான். சாலையை வெறுமையாகப் பார்த்தபடியே கவிஞர் நேசமித்ரனோட ஒரு கவிதை இருக்கு ப்ரோ என ஒரு கவிதையைச் சொன்னான்.
“மிகவும் துயரமான பாடல் என்று இசைக்கப்பட்டவை
எந்த துக்கமும் அளித்ததில்லை.
சுகமானவைதான் பின் துக்கமாய் மாறின”
அதைக் கேட்டதும் கார்த்தி” ரொம்ப சூப்பரா இருக்கு ப்ரோ! என்றான். ராஜா எதுவும் பேசாமல் சாலையைப் பார்த்தபடி தலையை மட்டும் ஆட்ட, “ப்ரோ நீ நிறைய புக் படிப்ப போல!” என கேட்டான்.
”கொஞ்சூண்டு படிப்பேன் ப்ரோ ” என்றான் ராஜா.
‘நீ சொல்றதலாம் பாத்தா கொஞ்சூண்டு படிக்கிற மாதிரி தெரியல ப்ரோ! பேசுறப்ப சரியா அந்த இடத்துக்கு ஏத்த மாதிரி சொல்ற!’
’ம்ம் தாங்க்ஸ் கார்த்தி ப்ரோ! இந்த பாட்டு மட்டுமில்ல இன்னோரு பாட்டு கேட்டாலும் கொஞ்சம் சோகமாகும் என்றான்.
அதுவும் இளையராஜா பாட்டுதானா ப்ரோ!
இல்ல ஜஸ்டின் பிரபாகரன் பாட்டு! ஒரு நாள் கூத்து படத்துல அடியே அழகே பாட்டுல இடையில வர வரி! “உன் சொகப் பார்வை உரசுது மேல! சிரிக்கிற ஓச சரிக்குது ஆள!” இந்த ரெண்டும் ஒரே மாதிரி இருக்கனால எனக்கு சோகமாயிடும்! மத்தபடி Chill தான் என சிரித்தபடி சொன்னான்.
“Chill-னா அதுக்கப்பறம் என்னாச்சுனு சொல்றியா ப்ரோ!’ என கேட்டான்.
அவ்ளோ Chill இல்ல ப்ரோ என ராஜா சொல்ல, ஸாரி ப்ரோ உனக்கு சொல்ல விருப்பமில்லன்னா சொல்ல வேணாம்! என சொன்னான்.
அப்படியெல்லாம் ஒன்னுமில்ல! டீ குடிச்சுட்டே பேசலாமா! என ராஜா கேட்க கண்டிப்பா என சொல்லி அடுத்து வந்த ஒரு டீக்கடையில் காரை நிறுத்தினான்.
**
டீக்கடையில் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல் ஓடிக்கொண்டிருந்தது. ரெண்டு டீ என சொல்லிவிட்டு ராஜா கதையைத் தொடர்ந்தான்.
”நான் உன்னை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!”
டீக்கடையில் ஓடிக்கொண்டிருந்த இதே பாட்டு திருமணத்திலும் ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பாடிக்கொண்டிருந்தனர்.
அவகிட்ட அந்த போட்டோ காட்டுனதும் அவள் செம சந்தோசமா ஆயிட்டா ப்ரோ. ‘வாவ்! இந்த போட்டோ எனக்கு கிடைக்கும்னு நான் நினைச்சுகூடப் பாக்கல! நான் அந்த பக்கம் திரும்ப பாத்துருக்கேன். என் முகமே சரியா தெரியலனு என்கிட்ட பேசிகிட்டே அவளோட மெயிலை செக் பண்ணா ப்ரோ. அதுல என் போட்டோ தான் ப்ரோ இருந்துச்சு. அவ அதைக் காட்டுனா. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுல நான் நல்லாவே தெரிஞ்சேன். இன்னும் சொல்லப் போனா அன்னைக்கு போட்டிருந்த அதே சட்டை பேண்ட்டை தான் கல்யாணத்திலும் போட்டுருந்தேன் ப்ரோ.
அதை அவளே சொன்னாள். இங்க பாருங்க! போட்டோல இருக்க அதே சட்டை பேண்ட் தான் போட்டிருக்கிங்க! தெளிவா நேரா பாத்து நிக்குறிங்க! இருந்தும் உங்கள என்னால அடையாளம் கண்டுபிடிக்க முடியல! ஆனா போட்டோல என் முகமே தெளிவா தெரியல! என் க்ளோஸ் ஃப்ரண்டாலே இது நான்னு கண்டுபிடிக்க முடியுமான்னு தெரியல! எப்பிடிங்க என்னைய கண்டுபிடிச்சிங்கனு என்கிட்ட ஆச்சரியமா கேட்டா ப்ரோ.
நான் அந்த பாட்ட வச்சு கண்டுபிடிச்சேன்னு சொல்லவும் என்னை ஆச்சரியமாக பாத்து, ’நிஜமாவா!’ னு கேட்டாள்.
’ஆமாங்க உங்க முகத்துல எவ்வளவு நிம்மதி இருக்கு பாருங்க! னு நான் அந்த போட்டோ காட்ட, அவ அந்த போட்டோவ பாக்காம என்னையப் பார்த்து சிரிச்சா ப்ரோ.
என்னங்கனு கேட்க ஒன்னுமில்ல! அந்த போட்டோவ எனக்கு அனுப்புங்க! உங்க போட்டோவ நான் அனுப்புறேன்னு சொன்னாள்.
சரிங்கன்னு சொல்லி என் மெயில் ஐடியைச் சொன்னேன். அவ என்னை ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்து, ‘சிங்கிளா!னு’ கேட்டா.
ஆமா எப்பிடி கண்டுபிடிச்சிங்கனு ஆச்சரியமாக கேட்டேன், ஒரு பொண்ணுகிட்ட வாட்ஸ்-அப் நம்பர் கொடுக்க வாய்ப்பிருந்தும் கொடுக்காம மெயில் ஐடி கொடுக்குறியே! கண்டிப்பா நீ சிங்கிளாதான் இருப்பனு சொல்லி, என் வாட்ஸ்-அப் நம்பரை சொல்லச் சொன்னாள்.
நான் என் நம்பர் சொன்னேன். அதை டைப் பண்ணி பெயர் சேவ் பண்ண போகும் போது என் பெயர் என்னன்னு கேட்குற மாதிரி கேள்வியா என்னைப் பார்த்தாள்.
”இளையராஜா” என்றேன்.
சரினு தலையாட்டிட்டு டைப் செய்ய போனவ ஆச்சரியத்துல என்னை நிமிர்ந்து பார்த்து சிரித்தாள்.
இளையராஜாவா உங்க பேரு! என கார்த்தியும் அவளைப் போலே ஆச்சரியத்துடன் கேட்டான்.
ஆமா! என் அம்மா ராஜா ஃபேன். அவங்கதான் இந்த பேர வச்சாங்க! என ராஜா சொல்லிவிட்டு கதையைத் தொடர்ந்தான்.
அவ இளையராஜானு சேவ் பண்ணல ப்ரோ. ராகதேவன்னு டைப் பண்ணி அதை எனக்கு காட்டுனா! நான் இப்பிடிதான் சேவ் பண்ணி வைக்கப்போறேன். இப்பிடிதான் கூப்புடப்போறேன். உன் பேர் எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா என கேட்க நான் தெரியும்னு சொன்னேன்.
உனக்கு எப்பிடி தெரியும்னு கேட்க, ‘ஏங்க பண்ணைபுரத்துக்கு போட்டோ எடுக்க வந்துருக்கிங்க! அவர் கூட போட்டோ எடுக்குறப்ப அவர எவ்ளோ லவ்வோட பாத்துருக்கிங்க! னு நிம்மதின்ற வார்த்தைக்கு பதிலா லவ்னு சொல்லவும், ‘ல்ல!’ என லேசா வெட்கத்தோடே சொன்னாள்.
அப்பறம் என் நம்பரை சேவ் பண்ணி எனக்கு என் போட்டோ அனுப்புனா. அவ அனுப்புன போட்டோவ சேவ் பண்ணிட்டு அவள் போட்டோவ நான் அனுப்பினேன். அப்பறம் அவ நம்பரை நான் சேவ் செய்ய போனேன். அவ பெயர் தெரிஞ்சிக்க அவ முகத்தைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்த்து சிரித்தபடி, ராகவி என்றாள்.
ராஜாவிற்கு வந்த அதே மென்புன்னகை கார்த்திக்கும் வந்தது. கார் ஓட்டியபடி அவன் சொல்வதை கேட்டுக்கொண்டே வந்தான்.
அன்னைக்கு அந்த கல்யாண மண்டபத்துல ஒரு ஓரமா உக்காந்து அவகூட மணிக்கணக்கா பேசினேன் ப்ரோ… முதல் தடவை பார்த்த பொண்ணுகிட்ட பேசுற மாதிரியே இல்லை. போன ஜென்மத்துல பாதியில விட்ட காதலை, விட்ட இடத்துல இருந்து திரும்ப ஃபர்ஸ்ட்ல இருந்து பேச ஆரம்பிச்ச மாதிரி அவ்ளோ இயல்பா இருந்துச்சு!
ஓகே ராகதேவன் பாக்கலாம் என சொல்லி கைகுடுத்துட்டு போனாள்.
**
Hi Raghavi. This is Raja alias Ragadevan.
Thanks for sending my photo. It really means a lot
Ungala meet pannathu romba happya irunthathu. Thanks to raja.
அன்னைக்கு நைட் அவளுக்கு என்ன அனுப்பறதுனு தெரியாம டைப் பண்ணி பண்ணி டெலிட் பண்ணிட்டு இருந்தேன் ப்ரோ. அப்ப அவகிட்டருந்தே டைப்பிங்னு காட்டுச்சு! ஆர்வமா என்ன அனுப்புறான்னு பாத்தேன்.
‘Hey Ragadevan! It was a really nice meeting with you! Avlo happya iruken! Thanks for you! Wait oru story vaika poren. Paaru!’ என அனுப்பினாள். நம்ம சொல்ல தத்தளிப்பதை எவ்வளவு ஈசியா பொண்ணுங்களால சொல்ல முடியுதுனு ஆச்சரியமா இருந்தது. அவளோட ஸ்டோரியைப் பார்த்தேன் ப்ரோ.
ராஜா சாரோட எடுத்த அந்த போட்டோ போட்டு, ”உம் முகம் பாத்து நிம்மதியாச்சு”ன்ற வரியிலிருந்து ஸ்டேடஸ்ல பாட்ட வச்சிருந்தா. ரிப்ளேயில், இந்த பாட்டுதான் உன்னை அடையாளம் கண்டுபிடிக்க வைச்சது. எவ்வளவு நிம்மதியா உன் முகம் இருக்கு!னு அனுப்பினேன். வெக்கப்பட்டு கண்ணை மூடும் ஸ்மைலியை அனுப்புனா .
நீங்க சொன்னது எவ்வளவு பொருத்தமா இருந்தது தெரியுமா! இந்த பாட்டு கேக்கும்போதெல்லாம் இனி உங்க நியாபகம் மட்டுந்தான் எனக்கு வரும்! நிஜமா! னு மெசேஜ் பண்ணுனா.
எனக்கும்தான்னு நான் அனுப்பினேன். இதயம் அனுப்பினாள்.
வீட்டுல சன்மியூசிக்ல நிலவு தூங்கும் நேரம் பாட்டு ஓடிட்டு இருந்துச்சு. நைட்டு பத்து மணி இருக்கும்.
என்ன பண்றிங்க! சாப்டாச்சா! னு கேட்டேன்.
ம்ம் இப்போதான் சாப்டேன். சும்மா அப்பிடியே சன்மியூசிக் ஓடிட்டு இருக்கு பாத்துட்டே உங்களுக்கு மெசேஜ் பண்ணிட்டு இருக்கேன்னு அனுப்புனா.
நிஜமாவா னு நான் கேட்க ஆமா ஏன் னு அனுப்பினாள்.
இல்ல நானும் அதான் பாத்துட்டு இருக்கேன். ”நிலவு தூங்கும் நேரம்” சாங்.
வாவ்! உண்மையாவா! எனக்கு அப்பிடியே டீவியில ஓடுறத வீடியோ எடுத்து அனுப்புறிங்களா! நானும் எங்க வீட்ல ஓடறத வீடியோ அனுப்பறேன்னு சொன்னாள்.
சரினு சொல்லி ரெண்டு பேரும் டீவியில் ஓடுன பாட்டை வீடியோவாக எடுத்தோம்.
“ நான்கு கண்ணில் இன்று
ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி
இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது
பூர்வ ஜென்மப் பந்தம்
நீண்ட நாள் நினைவிலே
வாழுமிந்த சொந்தம்”
ரெண்டு பேரும் வீடியோ எடுத்து மாத்தி அனுப்பிக்கிட்டோம். நான் எடுத்து அனுப்புன வீடியோவை, கோ இன்ஸிடன்ஸ்!னு எழுதி ஸ்டேஸாக வைச்சா. அவள் எடுத்ததை என்னை வைக்கச் சொன்னாள். நான் அவள் எடுத்ததைப் வச்சேன்.
எவ்வளவு கோ-இன்சிடன்ஸா இருக்குல! இந்த வரி! இந்த மொமண்ட்காகவே எழுதுன மாதிரி என்றாள். ‘ஆமால்ல!’ன்னு நானும் அனுப்பினேன். நீங்க எங்க இருக்கிங்க! சென்னை தானா!னு கேட்டாள். ஆமா என அனுப்பினேன். ஒரு நாள் டின்னருக்கு மீட் பண்ணலாம் என்றாள். கண்டிப்பா என்றேன்.
**
எங்களுடைய ஸ்டோரியைப் பார்த்துவிட்டு, அடுத்த நாள் என்னுடைய தோழி ரம்யா போன் பண்ணுனா ப்ரோ.
”என்னடா நடக்குது! அவ உன் வீட்டுல எடுத்த வீடியோ வைக்குறா! நீ அவ வீட்டுல எடுத்த வீடியோ வைக்குற! எப்பிடிடா! என கேட்டாள்.
உனக்கு எப்பிடி தெரியும்! என்றேன். டேய் நானும் என் புருசனும் ஒன்னா உக்காந்து ஸ்டோரி பாத்துட்டு இருந்தோம். ஒரே பாட்டு ஒரே நேரத்துல இரண்டு பேர் போன்லயும் ஓடுச்சு! பாத்தா அவ ஸ்டோரியில இருக்கது உன் வீடுனு நான் சொன்னேன். உன் ஸ்டோரில இருக்கறது அவ வீடுனு அவர் சொன்னாரு என்றாள்.
இல்ல நேத்து தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு! எவ்வளவு வேலை இருக்கும்! அதெல்லாம் வுட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் இத ஒரு விஷயம்னு பண்ணிருக்கிங்களே என சொல்ல ஏய் ச்சீ மூடுறா’ன்னு சொன்னாள்.
அவள உனக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டாள்.
ஏய் நேத்து தான் பாத்துருக்கேன்! அதுக்குள்ள…
அதெல்லாம் கேக்கல.. பிடிச்சிருக்கான்னு தான் கேட்டேன்னு சொன்னா.
பிடிச்சிருக்கு னு சொன்னேன்.
அவ சரியான ராஜா ரசிகையாம் டா! ரெண்டு பேர் போட்டோவும் மாறி வந்துருக்கு! அன்னைக்கு நீ அவள பாக்காம இருந்ததும் நல்லது தாண்டா! அவ போட்டோ எடுக்க அவளோட ஆளு கூட போயிருக்கா! இப்ப ப்ரேக்-அப் ஆயிருச்சு! கரெக்டான டைம்ல தான்டா இண்ட்ரோ ஆகியிருக்க! பேசிப்பாரு! எனக்கு என்னமோ உங்க ரெண்டு பேருக்கும் வொர்க்-அவுட் ஆகும்ணு தோணுதுடா! னு சொன்னாள்.
எனக்கு ஓகே! ஆனா அவளுக்கு என்னைய பிடிக்குமா!ன்னு தயக்கத்தொடே ரம்யாவிடம் கேட்டேன்.
“டேய் இளையராஜாவ பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா?”னு சொன்னாள்.
**
சிரித்தேன். ராகவி பேசுறத கேட்கறதே சந்சோசமாக இருந்தது. தொடர்ந்து சந்தித்துக்கொண்டோம்! எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டோம். சில சமயம் அவளே அவனது முன்னாள் காதலன் பற்றி புலம்புவாள். அவன் போனது மனநிம்மதி என சொல்வாள்.
அவளோட ஸ்பாட்டிஃபை லிஸ்டை எனக்கு அனுப்பினாள். நான் என்னோட லிஸ்ட்டை அனுப்பினேன். இருவரும் சேர்ந்து ’ராகதேவன்’ ன்னு ராஜா ப்ளேலிஸ்டை உருவாக்கினோம். அதுல செண்பகமே பாடல் தான் முதல் பாடல். காலையில அலாரம் அடிக்குதோ இல்லையோ, ஸ்பாட்டிஃபையில இருந்து அவ லிஸ்ட்ல ஆட் பண்ற பாட்டு நோட்டிபிகேஷன் வரும்.
எங்க ரெண்டு பேருக்கு நடுவுல இருந்த தூரம் குறைஞ்சிடுச்சு ப்ரோ. எல்லாருக்கும் ஒரே வானம், ஒரே நிலா, ஒரே மழை தான… அப்படித்தான் எங்களுக்கு ராஜாவோட பாட்டும்.
ஒரு மழை ராத்திரியில, அவ ஆபீஸ் முடிஞ்சு கேப்ல போயிட்டு இருந்தா; நான் குடை பிடிச்சுட்டு நடந்து போயிட்டு இருந்தேன். தூரம் வேறயா இருந்தாலும், அன்னைக்கு ரெண்டு பேரோட ஹெட்போன்லயும் ஸ்பாட்டிஃபையில ஓடுனது ஒரே ராஜா பாட்டுதான். வேலையும், இடமும் எங்களை பிரிச்சு வச்சிருந்தாலும், ராஜாவோட பாட்டு எங்களை ஒரே புள்ளியில சேர்த்து வச்சிருந்துச்சு.
அதுக்கப்புறம் அவளுக்கு கஷ்டம்னா ஃபர்ஸ்ட் ஞாபகம் வர்றது நானாதான் இருந்தேன். அவ வீட்ல என்ன பிரச்சனைன்னாலும் எனக்கு கால் பண்ணி அழுவா. நான் பொறுமையா கேப்பேன். எனக்கு எதாவது பிரச்சனைனா நான் போன் பண்ணி அழுவேன். அவ அமைதியா கேப்பா.
அப்பறம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ராஜா பாட்ட கேப்போம்! ரெண்டு பேருமே அமைதியாயிடுவோம்.
கொஞ்ச நேரத்துல ரெண்டு பேரு மூச்சும் சீராகும். ‘தேங்க்ஸ் ராகதேவன்… நீ கூட இருந்தாலே எனக்கு ஒரு தைரியம் வந்துருது’ன்னு சொல்லுவா.
எங்களை ஒருத்தரை ஒருத்தர் விழாம தாங்கிப்பிடிச்சிக்கிற அன்பு இருந்துச்சு! வார்த்தையால ‘லவ் பண்றேன்’னு ரெண்டு பேருமே சொல்லிக்கல. ஆனா அந்த சொல்லாத அந்த வார்த்தைக்கு பின்னாடி இருந்த மெளனத்துல, ராஜா தன்னோட இசையால காதலை சொல்லிகிட்டு இருந்தாரு!
அவ எக்ஸ் பத்தி பேசும்போதெல்லாம் ‘அவன் போனதுதான் என் வாழ்க்கையில நடந்த நல்ல விஷயம், இப்பதான் நான் உண்மையாவே நிம்மதியா வாழறேன்’னு அவளே சொல்லுவா..”
அப்பறம் எப்பிடி பிரிஞ்சிங்க ப்ரோ! என்னாச்சு! என கார்த்தி கேட்டான்.
அப்படியே எல்லாம் நல்லா போய்க்கொண்டிருந்தது ப்ரோ. ஒரு நாள் அவகிட்ட காதலைச் சொல்லிவிடலாம் ன்னு போனபொழுதுதான் அவள் அந்த வார்த்தையைச் சொன்னாள்.
எனக்கு திடீர்னு என்னோட எக்ஸ் நியாபகமா இருக்கு! அவன் இப்ப வந்துட்டான்னா நல்லாருக்கும்னு தோணுது. அவன் கூட சேரணும்னு தோணுது.
எனக்கு அதிர்ச்சி தாங்கல. நீதான அவன் இனிமே என் வாழ்க்கையிலே இல்லனு சொன்னனு அவகிட்ட கேட்டேன்.
சொன்னேன். ஆனா மனசு இப்ப அவன் வேணும்னு கேக்குதுனு சொன்னாள்.
அதோட நான் அவளோட பேசுறதை படிப்படியா குறைச்சுக்க ஆரம்பிச்சேன். அவ போன் பண்ணுனா வேலை இருக்குனு அவாய்ட் பண்ண ஆரம்பிச்சேன். மீட் பண்றது ஸ்பாட்டிஃபைல பாட்ட ஆட் பண்றது எல்லாத்தையும் நிப்பாட்டிட்டேன்.
ரம்யா போன் பண்ணி விசாரித்தாள். அதைப் பற்றி பேசாதனு சொல்லி வச்சுட்டேன். நான் உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் மீட் பண்ணலாமானு கேட்டாள். முடியாதுனு சொல்லிட்டேன். ஒரு கட்டத்துல அவளே புரிஞ்சுகிட்டா!
சிறிது நேரம் ராஜா அமைதியாகவே வந்தான். அப்பறம் இருவரும் வேறு சில விஷயங்களைப் பேசினர்.
சென்னையை நெருங்கியிருந்தனர்.
நேரு ஸ்டியத்திற்கு மேப் போட்டு ராஜா சொல்ல, கார்த்தி காரை ஓட்டினான். நேரு ஸ்டேடியத்தில் காரை பார்க் செய்துவிட்டு இருவரும் ஒன்றாகவே உள்ளே சென்றனர்.
**
கான்சர்ட் ஆரம்பிக்கும் முன்னரே வந்ததால் அவசரமில்லாமல் சென்று பொறுமையாக அமர்ந்தனர். நிகழ்ச்சி துவங்கும் வரை ஜாலியாக பேசி சிரித்துக்கொண்டனர்.
நிகழ்ச்சி துவங்கியது. இளையராஜா அரங்கத்திற்குள் நுழைய பெரிய திரையில் நன்றாகத் தெரிந்தார்.
அவரைப் பார்த்ததும் ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியில் கத்தினர்.
இளையராஜா அவர்களுக்கு ஒரு புன்னகையைப் பரிசளித்தார்.
இளையராஜாவைப் பார்த்ததும் கார்த்தி ராஜாவிடம், கார்ல ஒரு கவிதை சொன்னில ப்ரோ அதை சொல்லேன் என கேட்டான். அவனுக்காக ராஜா சத்தமாகச் சொன்னான். அவன் சொல்ல சொல்ல கார்த்தி நெகிழ்ந்து போனான்.
”யாரவன் ?
நாவில் இசை
கண்ணில் ஒளி
சின்னஞ்சிறு கிளையில்
மின்னல் ஒளியில்
பறவைபோல் ஒருவன்
ஏறக்குறைய இறைவன்!”
அப்படியே அவருக்காகவே எழுதப்பட்டதாக உணர்ந்தான். மகிழ்ச்சியில் கார்த்தியின் கண்கள் கலங்கின.
இளையராஜா பாடலைப் பாட ஆரம்பித்தார். ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தனர். சிலர் பின்னால் பேசிக்கொண்டே இருந்தனர். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கேட்டுக்கொண்டிருந்தனர். அடுத்த பாடல், எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் செண்பகமே என சொல்ல ராஜாவைப் பார்த்தான் கார்த்தி. ராஜா முகம் இறுக்கமாக இருந்ததை உணர்ந்து அவன் தோளைப் பற்றினான்.
உன் பாதம் போகும் பாதம் நானும் போக வந்தேனே!
உம் மேல ஆசப்பட்டு பாத்து காத்து நின்னேனே!
உம் முகம் பாத்து நிம்மதியாச்சு!
பின்பக்கம் அந்த கூட்டம் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்க ஏற்கனவே இந்த பாடல் மேல் இருந்த கோவத்தை எப்படி காட்டுவது என தெரியாமல் இருந்தவனுக்கு பேசிக்கொண்டிருந்தவர்கள் வாய்ப்பாக மாற, அவர்களைத் திட்டுவதற்காகச் சென்றான். கார்த்தியும் உடன் சென்றான்.
அவர்களைப் பார்த்து, ‘அறிவிருக்கா இல்லையா! பேசணும்னா வெளிய போய் பேசுங்க! இத்தன பேரு பாட்டு கேக்கறத டிஸ்டர்ப் பண்றீங்க என பயங்கரமாக கத்தினான். அதுவரை அவர்கள் சத்தம் பிடிக்காமல் இருந்த அனைவரும் அவன் குரல் கொடுக்கவும், தைரியமாக திட்ட ஆரம்பிக்க அவர்கள் அமைதியாயினர். அதற்குள் அந்தப் பாடலும் நிறைவுற்றிருந்தது. ராஜாவுக்கு கோபம் தணிந்தது. அடுத்த பாடலைப் பாட மேடையில் தயாராகிக்கொண்டிருக்க,ராஜா கோபம் தணிந்து இயல்புக்கு வந்து மெல்ல திரும்பி தன் இடத்துக்கு கார்த்தியோடு நடக்க ஆரம்பித்தான்.
அப்போது அந்தக் கூட்டத்திற்குள் ஒரு குரல்
‘ராகதேவன்’ என அழைக்க குரல் வந்த அந்த திசை நோக்கி ராஜா திரும்புவதற்கும் இளையராஜா அந்த வரியைப் பாடுவதற்கும் சரியாக இருந்தது.
”ஒரு ஜீவன் அழைத்தது….
அவள் முகத்தைப் பார்த்ததும் ராஜாவின் உடலெல்லாம் நடுங்கத் துவங்கியது.
இளையராஜா அடுத்த வரியைப் பாடினார்.
ஒரு ஜீவன் துடித்தது….
இருவரின் கண்களும் சந்தித்துக்கொண்டன. இருவருக்கும் கண்ணீர் வரத் தயாராக இருந்தது. ராஜா பாடினார்.
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…”
வெளிய போய் பேசலாமா! என அவள் கேட்க, முதலில் தயங்கினாலும் வா என அவள் சொல்ல, அவள் ராகதேவன் என சொல்லி அழைத்ததை வைத்தே புரிந்து கொண்ட கார்த்தி போங்க ப்ரோ என சொல்லி அவனை அனுப்பினான். அவன் சரி என தலையாட்டி ராகவி பின்னால் சென்றான். கார்த்திக் அவர்கள் செல்வதை பார்த்தபடி நின்றான்.
**
இளையராஜாவும் சித்ராவும் பாடிக்கொண்டிருக்க, இருவரும் அமைதியாக எதுவும் பேசாமல் நின்றிருந்தனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவோ நலம் விசாரிக்கவோ கூட இல்லை.
“ஏன் அவாய்ட் பண்ற ராகதேவன்! அப்பிடி நான் என்ன தப்பு பண்ணேன். கோவம்னா சொல்லுடா! உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா” என அவள் சொன்னாள்.
“என்ன சொல்ல சொல்ற! நான் அவாய்ட் பண்ணா உனக்கு என்ன! நான் யாரு உனக்கு!” என கேட்டான்.
நீ என் ஃப்ரண்ட் ராகவி அந்த வார்த்தையைக் கூறவும், ராகதேவன் அவளைப் பார்த்து,
’நான் உன் ஃப்ரண்ட் இல்ல ராகவி! உனக்கும் அது தெரியும்! என கூறியவன் ஒரு வினாடி இடைவெளிவிட்டு, ’ஃப்ரண்டாவும் இருக்க முடியல!’ என்றான்.
சரிடா! இவ்வளவு நாள் நம்ம ஒரு ரிலேசன்ஷிப்ல இருந்தோம்ல! அதுக்கு ரெஸ்பெக்ட் பண்லாம்ல! இப்பிடி திடீர்னு அவாய்ட் பண்ணிட்டு போனா என்னன்னு நினைக்கிறது’ என கேட்டாள்.
என்ன வேணா நினைச்சுக்க ராகவி! ராகதேவன் வீம்பாக பதில் சொன்னான்.
என்ன உன் பிரச்சனை!ஏன் இவ்வளவு கோவம்! என அவள் கேட்க
உனக்கே தெரியும்! தெரியாத மாதிரி நடிக்காத! என அவன் மீண்டும் வெடுக்கென பேசினான்.
என் எக்ஸ் நியாபகம் வந்ததுனு சொன்னது உன்னை இவ்ளோ காயப்படுத்தும்னு சத்தியமா நான் நினைக்கல! உனக்கு இவ்வளவு கோபம் இருக்குனா அங்கேயே என்னைய திட்டிருக்கலாம்லடா! ஏண்டா இப்பிடி பண்ற! ராகவி முதல் முறையாக பரிதாபமாக பேசினாள்.
நீ எப்பிடி அப்பிடி சொல்லலாம் ராகவி. எவ்வளவு பேசிருக்கோம்! நமக்குள்ள இருந்தது ஃப்ரண்ட்ஷிப்க்கும் மேலதான். லவ் தான் அது. உனக்கு, தெரியும். நீயும் ஸ்பேஸ் கொடுத்த! உனக்கும் பிடிச்சிருந்தது. திடீர்னு அது இல்லன்ற மாதிரி பேசுனப்ப எனக்கு எப்பிடி ரியாக்ட் பண்றது இந்த ரிலேசன்ஷிப்ப எப்பிடிகொண்டு போறதுனு தெரியல! எனக்கு பயமா இருந்தது. அதான் அப்பிடியே வுட்டுட்டேன் என ராகதேவன் சொன்னான்.
ஆனா என்னால விட முடியலடா! உன்னை எனக்கு பிடிச்சது நான் ஒத்துக்கறேன். ஆனா திடீர்னு என் எக்ஸ் நியாபகம் வந்தது. அத மறைக்காம தான சொன்னேன். எனக்கே குழப்பமா இருந்தது. அன்னைக்கு நீ ப்ரோபோஸ் பண்ண வந்தனு தெரியும். நீ ப்ரோபோஸ் பண்ணிருந்தா நான் அக்சப்ட் பண்ணனும். அவன் நியாபகம் வரும்போது உன் கூட நான் எப்பிடி உனக்கு முழுசா உண்மையா இருக்க முடியும்! உன்னை ஏமாத்துற மாதிரி ஆகாது. அதான் அன்னைக்கு அப்பிடி சொன்னேன் என ராகவி சொல்ல
அதான் உன் எக்ஸ் நியாபகம் வந்துருச்சுல! தாராளமா அவன் கூட போ! நான் உன்னை தடுக்கல! திட்டல! எதுவுமே பண்ணலயே! நீ உன் விருப்பப்படி அவன் கூடவே போ! நீ சொன்ன மாதிரி அவனே வந்தாலும் அக்சப்ட் பண்ணி சந்தோசமா இரு! யாரு உன்னை கேப்பா!” என கேட்டான்.
”அவன் வந்தாண்டா!” – ராகவி சட்டெனச் சொன்னாள்.
ராஜா அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.
”ஆமா, அவன் வந்தான். நீ என்னை விட்டுட்டு போன அடுத்த வாரமே தேடி வந்தான். ‘நாம திரும்பச் சேர்ந்துடலாம் ராகவி’னு அழுதான். ஆனா… நான் அவனை வேணாம்னு சொல்லிட்டேன்”.
”ஏன்? நீதான அவன் வேணும்னு புலம்புன?” ராஜா குரல் தழுதழுக்கக் கேட்டான்.
”ஆமாடா, அன்னைக்கு எனக்குக் குழப்பமா இருந்தது உண்மைதான். இத்தனை வருஷ பழக்கம் திடீர்னு தலைதூக்கும் போது, அது கில்ட்டா மாறுச்சு. உன்னை நான் உண்மையா விரும்பும் போது, மனசுல ஒரு ஓரத்துல அவனோட நிழல் இருந்தா, அது உனக்கு பண்ற துரோகம்னு தோணுச்சு. அதான் உன்கிட்ட ஓப்பனா சொன்னேன். நீ ப்ரோபோஸ் பண்ண வந்தப்போ, நான் முழு மனசா உன்கிட்ட வரணும்னு நினைச்சேன் தவிர உன்னை ஏமாத்த விரும்பல.” ராகவி அவன் கையைப் பிடிக்கப் வந்தாள், ராஜா பின்வாங்கி, “அப்போ இப்ப மட்டும் என்ன மாறுச்சு?” என்றான்.
”நீ என்னை பிளாக் பண்ணிட்டு போன அன்னைக்கு தான்டா எனக்குப் புரிஞ்சது! அவன் வந்தப்போ என் மனசுல எந்த உணர்ச்சியும் இல்லை. ஆனா, நீ இல்லாம இருந்த ஒவ்வொரு நொடியும் என் உடம்பும் மனசும் துடிச்சுது! அவன் பிரிஞ்சு போனப்ப மனசு வலிச்சுது. ஆனா நீ பிரிஞ்சது என் உயிர் போன மாதிரி இருந்துச்சுடா! உன்னை எனக்கு எவ்வளவு பிடிச்சிருக்குன்னு புரிய வைக்க எனக்கு இந்த வலி தேவைப்பட்டிருக்கு!
ராஜா தன் உணர்வெழுச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
ராகவி நீ உன் மெண்டல் பீஸ மட்டும் கெடுக்கறது இல்லாம உன் எக்ஸ் நியாபகம் வந்ததுனு சொல்லி என் மெண்டல் பீஸ் கெடுத்த! நான் போனதுக்கு அப்பறம் உன் எக்ஸ் திரும்ப வந்தா அவன வேணாம்னு சொல்லி அவன் மெண்டல் பீஸ கெடுக்குற! உனக்கு என்ன வேணும்னு முடிவெடுக்க தெரியல ராகவி! என சொன்னான்.
’நீ சொல்றது உண்மைதான். முடிவெடுக்க தெரியாம இருந்தேன். ஆனா அவன் வந்தப்ப உன்னை தொலைச்சிடுவேனோங்கிற பயத்துல தான் அவன வேணாம்னு சொன்னேன். நீ தான் ராகதேவன் எனக்கு வேணும்.’ என அவள் அவனது அருகில் வர, அவளை விலக்கியவன், ‘எனக்கு பயமா இருக்கு ராகவி’ என்றான்.
அப்போது ‘நிலவு தூங்கும் நேரம்’ பாடலிற்கான மவுத் ஆர்கன் மெல்ல ஒலிக்க ஆரம்பித்தது. அவளை விலக்கியவன் அந்த இசையில் அப்படியே உடைந்து போனான்.
இத்தனை நாள் இருந்த அந்த வருத்தம்,பயம்,கோபம்,ஆற்றாமை எல்லாமே அந்த மவுத் ஆர்கன் இசை கேட்ட அடுத்த நொடியே கரைந்து போனது!
‘நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
…. வந்த அழுகையை அவள் முன் அழக்கூடாது என வைராக்கியமாக பிடித்து நிறுத்தியிருந்தான். அவனது மெயிலுக்கு புகைப்படம் வந்தது தொடங்கி கல்யாணத்தில் பார்த்தது, ராகதேவன் என அவனை அழைத்தது, பாட்காஸ்ட் க்ரியேட் செய்தது, ஒரே பாடலை இருவரும் கேட்டது, தினமும் மணிக்கணக்காக பேசியது, அவனோடு பேசும் போது மட்டுமே கொஞ்சம் கூடுதலாக சிரித்த அவளது முகம் என அனைத்தும் அவன் கண்முன் வந்து போனது.
அழுகையை அடக்கி பெருமூச்சுவிட்டான். அடுத்த வரியைப் பாடினார்.
இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
பாடியதும் அரங்கம் முழுவதும் கைத்தட்டும் விசில் சத்தமும் பறந்தது. அந்த சத்தம் அடங்க அவர் காத்திருந்தார்.
“ நான்கு கண்ணில் இன்று
ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி
இவை சாட்சியானதே!
இங்கே அவன் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டான்.
நானுனைப் பார்த்தது
பூர்வ ஜென்மப் பந்தம்
நீண்ட நாள் நினைவிலே
வாழுமிந்த சொந்தம்”
அந்த வரியைப் பாடியதும் கதறி அழுதவன் – ‘என்னால நீ இல்லாம இருக்க முடியல! உன்ன அவாய்ட் பண்ணதே உன்ன பாத்தாலே நான் உடஞ்சிருவேன்னு தான்! லவ் யூ ராகவி! இன்னமும் உன்னை மறக்கல! மறக்க முடியல!’ என கதறி அழுதபடி சொன்னான். ஓடிவந்து அவனை தன் தோளொடு அணைத்துக்கொண்டாள்.
சத்தம் அடங்கியது. இளையராஜா மீண்டும் பாட ஆரம்பித்தார்
”நான் இனி நீ
நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே!”
என பாட, அவன் தோளில் சாய்ந்தபடி கதறி அழுதான். லவ் யூ! என்னை விட்டுட்டு போயிடாத ப்ளீஸ்! அன்னைக்கு இத சொல்ல தான் துடிச்சேன்! என்னால முடியல! இன்னைக்கு கூட நீ இங்க வந்துரமாட்டியா உன்னைய பாத்துர மாட்டேனானு தான் வந்தேன்! அப்ப பேசுனது என் மூளை. இந்த பாட்டு கேட்டதும் பேசறது என் இதயம்! என்னை விட்டு போயிராத ப்ளீஸ்!” அவள் அவனை தட்டிக்கொடுத்து தேற்றினாள். அந்த குரல் மீண்டும் பாடத் துவங்கியது.
கீதை போல காதல்
மிகப் புனிதமானது
அவள் தோளில் சாய்ந்தபடியே அந்த நொடியில் வாழ்ந்து கொண்டிருந்தான்…
அரங்கம் மொத்தமும் கைகளைத் தட்டிக்கொண்டிருந்தது. மெல்ல ஆறுதலடைந்தவன் கண்ணீரைத் துடைத்தபடி அவள் தோளிலிருந்து எழுந்தான். மீண்டும் அவனைத் தோளில் சாய்த்துக்கொண்டாள். கொஞ்ச நேரம் அப்பிடியே இரு! என சொன்னாள். அப்படியே அந்தப் பாடல் முடியும் வரை இருந்தான்.
அடுத்தப் பாடலுக்கான இசை இசைக்கத் துவங்கியதும் ஒட்டுமொத்த கூட்டமுமே கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தது.
இருவரும் தோளோடு தோள் சேர்ந்து அரங்கத்திற்குள் அந்தப் பாடலை கேட்க நுழைந்தனர். கார்த்தி இருவரும் தோளோடு தோள் சேர்ந்து வருவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தான். அவர்களைத் தொந்தரவு செய்யாமல் பாடலைக் கேட்டான்.
அந்த பாடலுக்கான இசை இசைக்கத் துவங்கியதும் அரங்கமே பரவசத்தில் கத்தியது. மெதுவாக அந்த இசை மனதை வருட ஆரம்பித்தது. பாடகி அந்தப் பாடலை பாட இருவரும் அவரவர் தோளில் சாய்ந்து அந்தப் பாடலைக் கேட்டனர்.
“நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
ராகதேவன் ஒரு வரியை மற்றும் மாற்றி திரையில் தெரியும் இளையராஜாவை நோக்கி பாடினான்.
நம்மைச் சேர்த்த ”இவருக்கொரு” நன்றி
இப்போது அவள் இரண்டு இளையராஜாவையும் நோக்கிப் பாடினாள்.
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி”
தங்கள் கைககளை இறுகப்பற்றிக் கொண்டு ஒருவரையொருவர் பார்த்தபடி இருவரும் சேர்ந்து பாடினர்.
“நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நாந்தான்
இனிமேலும் வரம் கேட்கத் தேவையில்லை
இதுபோல வேறெங்கும் சொர்க்கமில்லை…
உயிரே வா!
என பாடிவிட்டு ஒருவரையொருவர் கண்களைப் பார்த்து சிரித்தபடி முத்தமிட்டுக் கொண்டனர்.
**முற்றும்**



