
பள்ளிப் பிள்ளைகள் குழு பயிற்சியின்போது கைதட்டுவதைப்போல, எப்போதும் ஒரே சீராக அலையடித்துக்கொண்டு கிடக்கும் அவர்களின் கடல், அன்று வழக்கத்துக்கு மாறாக ஒரு பசிகொண்ட வேட்டை விலங்கினைப்போல உறுமிக் கொண்டுகிடந்தது. வெலங்க வெடித்துக் கிளம்பின செந்நிற அலைகளின் ஆங்காரத்தில் நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்தன அவ்வூரின் விசைப்படகுகள். விவிலியத்தில் வாசித்து மட்டுமே அறிந்திருந்த ஊழிக்காலம்தான் வந்துவிட்டதோ என எண்ணும்படி, பட்டப்பகலிலே இருள் சூழ்ந்து தோற்றமளித்தது அவ்வூர். அதிகாலைத் திருப்பலிக்கு மட்டுமே ஒலிக்கக் கூடிய தேவாலய மணி, அபாயத்தை அறிவிக்கும்படியாக என்றுமில்லாத வழக்கப்படி, அகாலத்தில் இடைவிடாது ஒலித்தபடி இருந்தது.
“புயலு கடலுலருந்து கரையக் கடக்க நேரம் நெருங்கி போச்சுல்லா, தூத்துக்குடியில புயல்கூண்டு வேற ஏத்தியிருக்காவளாம். ஃபாதர் பங்களாவுக்கு ஊர்ஜனங்களை எச்சரிக்கையா இருக்கச்சொல்லி அரசாங்கத்துல இருந்து ட்ரங்க்காலு வந்திருக்கு. அதுக்குச்சூட்டிதான் நம்ம மக்கள பத்திரமா இருக்கச்சொல்லி கோயில் மணியடிச்சு அறிவிப்பு சொல்லுதாங்க”
ஊரெங்கும் இவ்விதம் புயலைக்குறித்து எழுந்த ரசமான பேச்சு, சனங்களைக் கடற்கரைக்கு இழுத்து வந்திருந்தது.
கடலிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் அங்கங்கு சிறுசிறு குழுக்களாகத் திரண்டு நின்றிருந்த ஊரார், கர்ப்பவாய் திறந்து கடைசி மணித்துளியின் பிரசவ வேதனையில் துடிக்கும் தங்கள் தலைச்சன் மகளைப்போல, தம் கண்ணெதிரே அலைக்கழிந்தபடியிருக்கும் கடலையும், அதில் தத்தளிக்கும் தமது ஒரே சொத்தான படகுகளையும் குறித்து அங்கலாய்த்தபடி இருந்தனர். அவற்றில் பல படகுகள் மனைவியின் தாலிக்கொடி முதற்கொண்டு வீட்டிலிருந்த அத்தனை செல்வங்களையும் விற்றோ அடமானம் வைத்தோ வாங்கியதாக இருந்தது. கடல்மீது பொருள் வைத்து அவர்கள் ஆடும் இந்தச் சூது தவிர, அவர்களின் வயிற்றுப்பாட்டிற்கு வேறொரு வழியையும் பயிற்றுவித்திருக்கவில்லை அந்த பொல்லாத காலமும் அவர்களின் கடவுளும்!
“இயேசுசாமி புண்ணியத்துல ஒருத்தரும் மூனு நாளா கடலுக்குள்ள போவல்ல… அதுனால புயல் கடந்து போகும்வர, கோயில் வளாகத்துலயோ பெரிய பள்ளிக்கூடத்திலயோ பொட்டு பொடுசுகளாட போயி தங்கிக்கிற வேண்டியதுதான்!”
“அப்பம் கெட்டுல கிடக்க நம்ம படகுகள்…”
“கடல்ல இருக்கது தானண்ணே படகுக்குப் பாதுகாப்பு… கரையில உண்டாவுற படகு, ஒருதடவை கடலுக்கு போயாச்சின்னா போனதுதான்வே. கெட்டிக்குடுத்த பிள்ள தாய்வீட்டுக்குத் திரும்பிவந்தா அதுக்கு வேற அர்த்தம்லா!”
“இந்த பேய்க்காத்து படகுங்கள ஒச்சமாக்கிறாதா..”
“காத்து ஒரக்க வீச ஆரம்பிக்கும் முன்னுக்கே, கடலுக்குள்ள நீஞ்சிப் போயி, கெட்டுல கெடக்க போட்டுவளுக்க நங்கூரத்த மேலதூக்கி விட்டுருவானுக நம்ம பொடியனுக. நம்மகடல் நீவாட்டுக்கு இந்த காத்து, படகுகளை வடக்க மார்சாவுல கொண்டுபோயித்தான் ஒதுக்கும் பாத்துக்க. இங்கனபோல, அந்த பக்கம் பாறைகள் இல்லாதனால ஒண்ணும் பழுதில்ல! கடல் தள்ளாட்டம் நின்ன பின்னாட்டி வள்ளத்துலயோ, மரத்துலயோ போயி தொலைவுக்க போன போட்டை கண்டுபிடிச்சு கொண்டாந்துருவாங்க. இந்த காத்துக்கு போட்டுக கெட்டுல கெடந்தாதாண்ணே ஆபத்து! ஒன்னுக்கொன்னு இடிச்சு ஒச்சமா போயிரும்”
புயலில் சேதாரம் ஆகி விடாதபடி கட்டிப்போடப்பட்டிருந்த படகுகளின் நங்கூரத்தை உயர்த்தி அவற்றை விடுவிப்பதற்காக, வள்ளத்தில் கடலுக்குள் சென்றிருந்த இளவட்டங்கள் சிலர் தட்டுத்தடுமாறிக் கரைசேர்ந்து, தமது வள்ளத்தைக் கடும் பாடுபட்டு கடலினின்று இழுத்துக்கொண்டிருந்தனர்.
“எல்லா போட்டுவளுக்கும் நங்கூரத்த நம்ம பயலுவ தூக்கிட் விட்டுட்டானுவபோல. எல்லாம் வடக்க பத்திரமா ஒதுங்கிருச்சுவ. ஆனா, இந்த ‘தூய ஆவி’ மட்டும் காத்த எதுத்து நட்டமா இன்னும் நிக்கப்பா…”
“தூய ஆவிக்க ஓனரு சிமியோன் பூபாலராயர் எங்குட்டோ தூரமா போயிருக்கார் போல. எப்பா… எல்லாம் நம்மட தாய் புள்ளைல் தானய்யா! போனதுதான் போனீய தூயாவிக்க ஆங்கரையும் தூக்கி விடுகதுதான மக்களே…”
“சும்மா இரிங்க ஜான் மாமா! தூய ஆவி போட்டுக்குள்ள ஏறுறதுக்கு, அந்தக் கோட்டி மனுஷன் உடமாட்டிக்காரு”
“யாருல தூய ஆவிக்க வாச்சுமேனா… அது நம்ம தோமாஸ் சியான்ல! அவரு என்னத்துக்குல அப்படி பண்ணுதாரு”
“நம்ம போட்டுக்க ஆங்க்கர தூக்கிட்டு, அப்படியே தூய ஆவிக்கதயும் பண்டுவம் பாத்துருவம்னு போனா, அந்த கொள்ளைலபோவான் அடிக்கப்பாயுதான்!”
“எல… மரியாதையா பேசுடே! வயசுல, உனக்க அப்பன பெத்தவன் போலல்லா அந்த சீவன்… ஓர்மை தவறின உசுருடே அது”
“சும்மா அங்குட்டு போங்க ஜான் மாமா! அப்பன பெத்தான், அம்மைய பெத்தான்ட்டு… அவருக்கு ஓர்மையில்லன்னு நீமர்தான் சொல்றீய. நடுக்கடல்ல ஒத்த தனிச்சி சாவப் போறானே கெழவன்னு காப்பாத்தப்போனா, என்னன்ன அவசங்கையான வார்த்தைல என்னைய ஏசுதான் அந்தாளு. வந்த வெப்புறாளத்துக்கு, தங்கூசியால நாலு ஏத்து ஏத்தியிருப்பேன்… அங்கனயே கெடந்து சாவட்டும் கெழட்டுமூதின்னு த்ராட்டுல விட்டுட்டு வந்துட்டன்”
“எல, அவராகவே ஒன்னய அசிங்கமா ஏசினாரா…”
“ஆமாம் மாமா…”
“எல, நீ அவர என்னன்னு சொல்லி கூப்பிட்ட!”
“இல்லையப்பான்னு கூப்ட்டேன்… அதான அவரு பேரு!”
“அட கூவ! அந்தப் பேர் சொல்லி கூப்பிட்டா மனுசன் வேற ஆளாயிருவாரேடா!”
“ஊருபூரா எல்லா பயலுவளும் அவர அப்படித்தானவே கூப்பிடுறானுவ!”
“நல்லா கூப்புட்ட போ… அப்டி கூப்பிட்டா அந்த மனுஷனுக்கு வெறி வந்துரும். இனி அந்த சிலுவையாவே எறங்கி வந்து கூப்டாலும் அவரு கரைய வந்துகிட மாட்டாரு போ…”
புலம்பியபடியே கடலில் அலக்கழியும் முதியவருக்காய் தன் மனதுக்குள் நேர்மானம் வைத்தபடி நகர்ந்தார் அந்த நல்ல மனிதர். இவர்கள் குறிப்பிடும் தோமாஸ் சீயான், எண்பது பிராயங்களைக் கடந்தவரானபோதிலும், ஒரு முழுத்த மனுஷனில்லை. பிறவியிலே சற்று மந்தபுத்தி கொண்டவராக இருந்தபடியால், உறவுகளில் எவரும் அவரை தமது வீட்டிற்குள் சேர்த்துக்கொள்ளவுமில்லை. மற்றபடி, கடற்கரையில் தொழிலுக்குச் செல்லாத காலங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருக்கும் மீன்பிடிப் படகுகளில் இரவும் பகலும் காவலுக்கு இருக்க ஒரு வளர்ப்பு மிருகத்தைப் போல அவர் பழக்கப்பட்டுவிட்டார். கடலில் இருக்கும் படகுகளுக்குக் காவல் எதற்கென்றால், இரவுகளில் கடலில் கட்டிப்போட்டிருக்கும் விசைப்படகுகளில் தமது கைவரிசையைக் காண்பித்து விடுகிற எத்தர்களும் அங்கு உண்டு. கொள்ளையடித்து மட்டும் செல்லாமல் படகுகளுக்குத் தீவைத்தும்கூட செல்கின்ற விஷமிகளும் அந்நாள்களில் இருந்தனர். மனிதர்களின் தேவைகளே அவர்களுக்குக் கீழ்மைகளைக் கற்றுக்கொடுக்கப் போதுமானதாயிருக்கிறது. இவ்வாறாக, தாம் அரும்பாடுபட்டுப் பெற்ற ஒரே சொத்தினைக் கொடியவர்களிடமிருந்து காப்பதற்காக, படகின் சொந்தக்காரரே இரவுகளில் படகில் காவலுக்கு இருப்பது உண்டு. அவ்வாறு இருக்க இயலாதவர், கூலிக்கு ஆள் வைத்து படகினைக்காப்பர். தோமாஸ் சியான், தூய ஆவி படகின் உரிமையாளருக்குக் கிடைத்த ஒரு வரம். வீடென்று ஒன்று, அவருக்கு இல்லாதது அவர்களின் பாக்கியமல்லவா… ஆனாலும், கிடைத்ததைப் பெற்றுக்கொண்டு, சாதுவாக ஏவல் செய்கிற ஓர் அடிமை என்று அவரை நாம் மட்டுப்படுத்திவிட முடியாது. எல்லைக்காவல் தெய்வத்துக்கு உரிய மரியாதைகளில் ஒன்று குறைபட்டாலும், அவருக்குக் கட்டுப்படுத்த இயலாத அளவுக்குக் கோபம் வந்துவிடும். ஆங்காரமென்றால் அப்படியொரு ஆங்காரம்! அற்ப விஷயங்களுக்கெல்லாம் அவருக்குச் சினம் மூண்டு விடும். மிதமிஞ்சிய ஆத்திரத்தில், சமயங்களில் பற்கள் கிட்டித்து வாயில் நுரை தள்ள, கண்கள் சொருகிக் காக்கை வலிப்பு கண்டு விடுவதும் உண்டு. சினத்தை மட்டும் கழித்து விட்டால் அவர் ஒரு தகவல் திரட்டு. ஊரின் பாரம்பரிய விஷயங்களாகட்டும், கடல் சார்ந்து பெற்றறிந்த அனுபவங்களாயிருக்கட்டும் அவரின் முதிர்ச்சி அங்கு யாருக்கும் இல்லையென்று அவரைப் புரிந்து கொண்டவர்கள் அவரிடத்தில் மிகுந்த தன்மையுடன் நடந்து கொள்வர். ஆனால், அடுத்த தலைமுறைக்கு இந்தப் பக்குவம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. கிடைத்த வாய்ப்பிலெல்லாம், ஓர் ஓணானைக் கல்லெறிவது போல, சியானைத் துன்புறுத்தி விளையாடுவதில் அவர்களுக்கு அலாதி ருசி. அதற்கேற்றார்போலவே, ஒரு சம்பவமும் நிகழ்ந்தது.
குரும்பூரில் வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் விசேந்தியப்பர் கோவில் திருவிழா அந்தப் பிராந்தியத்தில் மிகவும் பிரசித்தமானது. அவ்வூரில், எப்போதும் அந்நேரத்திற்கு நிற்காத ரயிலை, திருவிழாவுக்கு முந்தினநாள் நிற்கும்படி, ஒரு மாதத்துக்கு முன்பே சர்காருக்கு கடிதம் எழுதி நிறுத்தி ஒழுங்கு செய்திருந்தது ஊர்கமிட்டி. நாள் கிழமை பார்க்காது, கடலடியிலே காவல் கிடக்கும் சியான், என்றேனும் அரிதினும் அரிதாக மக்களின் நெருக்கத்தை நாடுவதும் உண்டு. படகுகளும், கடல் மணலும் என்று தனித்தே கிடக்கும் மனிதர் அன்று என்ன நினைத்தாரோ, திருவிழாவுக்குச் செல்லும் கும்பலில் தானும் ஐக்கியமாகிவிட்டார். நல்லூர் ஸ்டேஷனில் இறங்கிய சனம் விசேந்தியப்பர் கோவிலில் திருப்பலிபூசை பார்த்து முடித்தபின், பயணக்களைப்பு தீர அங்கிருந்த அம்மன் கோவில் வளாகம் ஒன்றில் கொட்டாரம் இட்டிருந்தார்கள்.
தாங்கள் கொண்டு வந்திருந்த கட்டுச் சோற்றை எல்லாரும் பிரிக்க ஆரம்பித்த நேரத்தில், தோமாஸ் சியான் தன் சீஷப்பிள்ளைகளோடு அந்தக் கோவிலை வலம் வந்திருக்கிறார். அப்போதெல்லாம் சியானுக்குக் குழந்தைகள் என்றால் மிகப்பிடித்தம். சுறாமீனை அணைந்துகொண்டே நீந்திவரும் ஒட்டு மீன் கூட்டங்களைப்போலப் பிள்ளைகள், சியான் எங்குச் சென்றாலும் சியானை மொய்த்துக்கொண்டே வருவர். பெரியவர்களின் உலகில் நுழைவதற்கு அவர்களுக்கு இருக்கும் ஒரு சிறிய சாளரத்தைப் போல அவர் இருந்தார். எப்போதும் ஒரு கொத்து பிள்ளைகளோடுதான் அவரைப் பார்க்கமுடியும். தனது கைலி மடிப்பில், பிராயத்திலிருந்தே பத்திரப்படுத்தி வைத்திருக்கும் கவண் வில்லின்மீது சியானுக்கு அளவுகடந்த பெருமிதமும் பிரியமும் உண்டு. கவண் விடுவதில் சியான் அசகாயசூரர். சியானின் தலையைக் கண்டால் கடற்காகங்கள் ‘யாத்தே! எம்பொறவே! எழவெடுப்பான் வாறானே’, என்று கலங்கிப் பதறி ஓடும். கடல் நண்டுகளோ இவரது நடையின் அதிர்வுக்குப் பயந்து வளைக்குள் பதுங்கிக் கொள்ளும். இத்தனைக்கும் தோமாஸ் சியானுக்குக் கொஞ்சம் கிட்டப்பார்வை வேறு… தொலைவில் தெரிகிற பொருள்களின் அசைவையும் நிழலையும் வைத்தே அவர் தனது கவணைப் பிரயோகிப்பார்.
அன்றையதினத்தில், சியான் கோவில் கோபுரத்தின்மீது நின்றிருந்த அணில் ஒன்றைக் கண்டுவிட்டார். சிறிதும் அனக்கமில்லாமல் தனது வேட்டைப் பொருளைக் கவணில் குறிபார்க்கும் தோமாஸ் சியானைக் கண்ணுற்ற சிறுவர்கள் குழாம், அவரது சாகசத்தை கண்ணாறக் காணும்படி, அவரது பின்னோடு அசையாமல் நின்றுகொண்டது. தோமாஸ் சியான் கவணின் விசையை விடுவித்தார். கல் ‘டனார்’ என்ற சப்தத்துடன் எதன் மீதோ பட்டுத் தெறித்தது. சிறுவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது அது ஓர் அணில் சிற்பமென்று கண்டனர். இதுவரையில், தங்கள் ஆதர்சமென்று கண்டிருந்த சியான் ஒரு சிலையை இலக்காக வைத்து கவணை எய்திருந்தது அவர்களுக்கு மிகுந்த பரிகாசத்தை உண்டு பண்ணியது. அவர்கள் நிறுத்தாமல் நகைக்க ஆரம்பித்தனர்.
“அணில் விழுந்துட்டா பிள்ளைலா”, என்றவரிடம் “இல்லையப்பா…இல்லை!”, என்றான் ஒருவன். பின்பு மற்றொருவன் அதே தொனியில் “இல்லையப்பா…இல்லை!” என்று கைகளை விரித்து அபிநயம் பிடித்தான். கடைசியில், தான் கவண் எறிந்தது ஒரு கல் அணிலின்மீது என்பதை, தனது பூவிழுந்த கண்களைச் சுருக்கி விரித்துப்பார்த்து அவர் கண்டுகொண்டார். பரிகாசம் செய்த பிள்ளைகளை அவ்விடத்திலிருந்து துரத்திவிட வழி தேடினார். பிள்ளைகளோ அவரது ஆவேசம் கண்டு மேலும் குதூகலம் கொண்டு, “இல்லையப்பா…இல்லை! இல்லையப்பா…இல்லை!” என்று அவர் பின் இராகம் பாடியபடியே தொடர்ந்தனர். அவர் எங்குச் சென்றாலும் எங்காவது ஒருவன் அவரை இவ்வாறு விளித்துவிட்டுப் பதுங்கிக்கொள்வான். தோமாஸ் சியான் தூஷன வார்த்தைகளைச் சொல்லி அவர்களைத்துரத்துவார். இந்த விளையாட்டு முடிவில்லாத ஒன்றாகிவிட்டது. இப்படித்தான் தோமாஸ் சியான் ‘இல்லையப்பா’ என்ற நாமகரணம் பெற்றார்.
‘இல்லையப்பா கடலுக்குள்ள மாட்டிக்கிட்டாராம்’
‘சியான் எவ்ளோ சொல்லியும் போட்டவிட்டு இறங்க மாட்டேங்கிறாராம்’
‘தூயஆவிக்க தள்ளாட்டத்த பாத்தா, எப்டியும் முங்கிரும் போல… அப்ப தோமாஸ் சியான் கத அவ்ளோதானா’
கடற்கரையில் வெள்ளம் பார்க்கக் குழுமியிருந்த கூட்டத்தின் மத்தியில் நின்றிருந்தான் அமலன். அமலனுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னால்தான் திருமணம் ஆகியிருந்தது. ஊர் நாவிதன், மணமகனுக்கென்று பிரத்தியேகமாகக் கூர்தீட்டிய சவரக்கத்தியில் பார்த்துப்பார்த்து மழித்தமையால் அமலனின் கன்னங்களும் தாடையும் கோவிலின் மொசைக் தரை போல வழுவழுவென்று ஜொலித்தன.
தோமாஸ் சியானைக் குறித்த சனங்களின் அனுமானங்கள் மனதுக்குள் ஏற்படுத்திய காட்சிகளின் கனத்தை அதற்குமேலும் தாள மாட்டாமல், இரைந்து கொண்டிருந்த கடலை நோக்கிப்பாய்ந்தான் அமலன்.
“எல…எப்பா! யார்டே அது…”
“சந்தியாகுக்க மவம் அமலன்… எல அவம் புது மாப்பிள்ளையில்லா! அந்த இது போன கெழடனுக்குச் சூட்டி இவன் எதுக்காண்டி கடலுக்க பாயிதான். எல யய்யா… அவன புடிங்கடே!”
இளவட்டங்கள் அவனைப் பற்றிநிறுத்தும் முன்பாகவே, அமலன் வாளைமீனைப்போல, கொந்தளிக்கும் கடலினுள் பாய்ந்து மறைந்துவிட்டிருந்தான். அப்போது ஆழ்கடலை நோக்கி அரநீவாடு ஓடியதால், அவனை எந்த எதிர்ப்புமின்றி சமுத்திரம் உள்வாங்கிக் கொண்டது. நீவாட்டினோடே நீந்திச் சென்றதால் அவனால் வெகுவிரைவில் தூய ஆவியை அடையமுடிந்தது. திரும்பவரும் பயணத்தை, இந்த அரநீவாடு அவ்வளவு சுலபமாக இருக்க விடப்போவதில்லை என்பது அமலனுக்கு அப்போதே தெரிந்தும் விட்டது. ஆனாலும், அவனால் தனது பிரியத்துக்குரிய சியானை அப்படியே விட்டுச்செல்ல எப்படி முடியும்! அவனுக்கும் தோமாஸ் சியானுக்கும் இருக்கும் பிணைப்பு அணியத்துக்கும் குருசுக்கும் இருக்கிற சம்பந்தம் அல்லவா…
அமலன் முதன்முதலாக தோமாஸ் சியானைச் சந்தித்த தருணத்தை அவனால் அத்தனை எளிதாய் மறந்து விட முடியுமா? தூய ஆவி விசைப்படகின் உரிமையாளராகிய சிமியோன் பூபாலராயர், அந்த ஊரின் பெருதனக்காரரர்களில் ஒருவராக இருந்தார். அது ஒரு பெரிய வெள்ளிக்கிழமை. அன்றைக்குச் செய்வதற்கென்று, சிமியோன் பூபாலராயருக்கு வழிவழியாக வந்த நேர்மானம் ஒன்று இருந்தது. ஏசுநாதர் பாடுபட்டு மரித்துப்போன அந்த இரவில் ஊருக்கெல்லாம் கஞ்சி ஊற்றுவது அவர்களது குடும்ப வழக்கம். கஞ்சி என்றால் பழைய கஞ்சி அல்ல… பூண்டு, வெந்தயம் எல்லாம் சேர்த்து பச்சரிசியைக் குழைய வைத்து பெரிய பெரிய தேக்சாக்களில் கிளறிய கஞ்சி குழைவாய் தயாரானதும், பிள்ளையின் உறக்கம் கலைந்துவிடாமல் புனித நீரைத் தலையில் ஊற்றி ஞானஸ்நானம் தருகிற பாதிரியாரின் நேர்த்தியுடன், கொதிக்கும் கஞ்சியில் தாராளமாகத் தேங்காய்ப்பால் விட்டு, பால் திரிந்துவிடும் முன் பக்குவமாக இறக்கியது. அதற்கென்று தொட்டுக்கொள்ள ஏதுவாக, அம்மியில் சுருக்கென்று வடிய அரைத்து எடுத்த கானத்துவையலும் பக்கத்தில் கும்பாரமாக இருக்கும். வெள்ளிக்கிழமை சுத்த போசனம் என்பதால், இருபொழுது பட்டினி கிடந்து கோயிலில் சாயங்காலப் பூசை பார்த்துவிட்டு நேரங்கழித்து வீடு வரும் சம்சாரிகளுக்கு அது ஒரு பெருவிருந்து. பூபாலராயரின் வீட்டின் முன் சாளைமீன் கூட்டமென, குஞ்சு குளுவான்களோடு திரண்டு நிற்கும் அவ்வூர்சனம். முண்டியடித்து முதல் ஆளாய் நின்று கஞ்சியும் துவையலும் வாங்கி முட்டத்தின்றுவிட்டு, வரிசையின் கடைசியில் மறுபடியும் கஞ்சிக்காக இணைந்து கொள்கிறவர்களும் உண்டு. எத்தனைப்பேர் எத்தனைமுறை உண்டாலும், இயேசுவின் மலைப்பிரசங்கத்தில் ஆசிர்வதித்த ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் கூடையில் குறைபடாதது போலவே காய்ச்சி வைத்த தேக்சாக்களில் பால்கஞ்சி தீரவே தீராது. தட்டு கொண்டுவராதவர்களுக்குக் கஞ்சி ஊற்றித் தருவதற்கென்று, பனை ஓலைகளை மடக்கி தயார் செய்து வைத்த பட்டைகளையும் உபகாரமாக வழங்குவார் சிமியோன் பூபாலராயர். எல்லோருக்கும் தட்டாமல் உணவு இருக்கிறது என்ற நிறைவில் அங்கு எக்களிப்புக்கும், கிண்டலுக்கும் பஞ்சமே இருக்காது.
அன்று தெருவழியெங்கும், “பூபாலராயருக்கு ஜே!” என்று ஒருமித்த குரலில் துதி பாடிக் கொண்டு தூக்குச் சட்டிகளையும், கஞ்சிப்பானைகளையும் தட்டித்தட்டி ஆர்ப்பரித்துக்கொண்டே வந்த குழந்தைகள், தூய ஆவியின் நிரந்தர ஊழியரான தோமாஸ் சியான் அவ்விடத்தில் ஏவலில் இருப்பதைப் பார்த்ததும், “இல்லையப்பா… இல்லை!” என்று அவரது பட்டப்பெயரைச் சொல்லி பகடி ராகம் பாட ஆரம்பித்தனர்.
சனங்களுக்குக் கஞ்சி பரிமாறிக்கொண்டிருந்த சியான் சினமுற்றவராய், தனது கையிலிருந்த அகப்பைக் கரண்டியுடன் குழந்தைகளை விரட்ட ஆரம்பித்தார். குழந்தைகள் ‘இல்லையப்பா’ ராகம் பாடிக்கொண்டே அவர் கையில் சிக்காமல் தெருவெங்கும் ஓடினர். எல்லாக் குழந்தைகளும் சென்றபிறகும், ஒரு பிள்ளை மட்டும் அங்கு அமர்ந்திருக்கக்கண்ட சியான், ஓங்கிய கையுடன் பிள்ளையை நெருங்கினார். பிள்ளை பதறி அழுததேயன்றி எழுந்து ஓடத் துணியவில்லை. பிறகுதான், சியான் அதன் கால்களின் பழுதைக் கவனித்தார்.
“எல! யார் மொவம்ல நீ… எதுக்குல இப்படி சல்லியம் பண்ணிறீய!”
“சியான்… நான் உங்கள ஒன்னும் சொல்லல்லியே!”
“ஆங்…துக்கிரிப்பயலுவ பூராம் ஓடிப்போயிட்டானுவ. நீ மட்டும் என்ட்ட மாட்டிக்கிட்ட. ஒனக்க கால்ல என்ன ஆச்சுல!”
“எனக்கு வேகமா நடக்க வராது சியான். எம்பேரு அமலன். எம்பட அண்ணன்தான் என்னிய ஒக்கல்ல தூக்கிக்கிட்டு வந்தான். இப்பம் உங்களுக்குப் பயந்து உட்டுட்டு ஓடிட்டான்”
வெளிப்பக்கமாய் வளைந்திருந்த அமலனின் இரு கால்களையும் சியான் ஆராய்ந்தார்.
“பயலுக்கு கவட்டக்காலு போலயே… யாருக்க மொவம்ல நீ!”
“எங்கப்பா பேரு சந்தியாகு!”
“சந்தியாகுன்னா, அன்னை வேளாங்கண்ணி போட்டுல போற சந்தியாகுவா…”
“ஆமாம் சியான்!”
“அடி சக்கன்னானா… அப்பம் மத்தியாஸ் பேரனாம்லே நீ!”
“இல்ல சியான்… எங்கட சியான் பேரு அந்தோணி. சியான்…நான்தான் உங்களைக் கிண்டல் பண்ணல்லையே… என்னைய அடிச்சுராதீய!”
தோமாஸ் சியான் அப்போதுதான் தன் கையில் இறுக்கிப் பிடித்திருந்த அகப்பைக்கம்பை இன்னமும், தான் ஓங்கியபடி இருப்பதை உணர்ந்தார்.
“ச்ச! உன்னைய நா அடிக்க மாட்டம்ல மக்கா… ஆனா, உம்பட தாத்தா பேரு மத்தியாசுன்னு உன்ட்ட இன்னமும் ஒருத்தரும் சொல்லல்லையாடே! அந்தோணியும் உனக்குத் தாத்தாதான். ஆனா உங்கப்பன் சந்தியாகு, என் சேக்காளி மத்தியாசுக்கு பிறந்த பையனாக்கும்! ஒரு காலத்துல மத்தியாஸ் எனக்க தோஸ்த்து பாத்துக்க… ஆளு நல்ல வண்ணமா, இடியந்தடியன் கணக்கா இருப்பான். ஒரு மீன்பிடி தடையில, இருந்த பஞ்சத்துக்கு பெழைக்கவேண்டி, இங்க போட்டுவ எல்லாம் கெட்டுல கிடந்த சமயத்துல ராமேஸ்வரத்துக்கு தொழில் பாக்கப் போனாம் பாத்துக்க. கொள்ளைல போறவனுவ, சிலோன் பார்டர தாண்டுனாம்னு நடுக்கடல்லே சுட்டுப்போட்டானுவ. ஊரே அழுத சாவுப்பா அது… உங்க ஆச்சிக்கி அப்பம் வயித்துல நெறமாசம். கடக்கரையில கிடந்து உருண்டு அழுதாளப்பா! உங்கப்பன் பிறந்த அடிமேலே, உங்கட ஆச்சிக்கி அவட கொழுந்தன, அதாம்ல உங்க சியான் அந்தோணிய, மறுகல்யாணம் கெட்டி வெச்சாவ. அதுக்கங்குட்டுதான் அவளுக்கு அஞ்சாறு பிள்ளைவள் மடமடன்னு பிறந்தாவ. அவளுக்கும் ஜீவிக்கணும்லடே!”
அமலன் விரிந்த விழிகளுடன் எவரும் தன்னிடம் இதுவரை சொல்லியிராத தனது பூர்வாங்க கதையைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் நினைவில் பதிந்திருந்த ஆச்சி தாத்தாவின் நிழலுருவங்களை மனதிற்குள்ளில் இருந்து மீட்டுருவாக்கம் செய்துபார்த்தான்.
அனைத்து ஆத்துமாக்கள் தினத்தில் ஊரே கல்லறைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும்போது, தனது தகப்பன் சந்தியாகு, அந்தோணி தாத்தாவின் கல்லறையை அலங்கரித்து முடித்ததும் பெயர் தெரியாதபடி இற்றுப்போயிருந்த இன்னொரு கல்லறையைப் பதுங்கிப்பதுங்கிச் சென்று மண் கூட்டி அழகுபடுத்திக்கொண்டிருக்கும்போது, “யப்பா…இது யார்ட்ட கல்லறைப்பா!” என்று தான் கேட்டுக்கேட்டு நச்சரித்தபோதிலும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்த சந்தியாகுவின் இறுகிய முகம் நினைவுக்கு வந்தது. தன்னுடைய சித்தப்பாக்களும், அத்தைகளும் பாதிரிமார் நடத்திய ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் கால்மேசும், சப்பாத்துமாக பள்ளிப்படிப்பை முடித்து கப்பல்வேலையிலும், மேசைக்கார குடும்பங்களில் மணமுடித்தும் அமோகமாக இருக்க, கஞ்சிச்சட்டியும் மாலுமாக, கடலுக்குச்செல்லத் தனது தந்தைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது அவருக்குப் படிப்பு வராத காரணத்தால் மட்டுமல்ல என்று அவனுக்கு அப்போது சியான் சொல்லாமலே விளங்கிப் போயிற்று. அவனது கண்களில் இரண்டொரு துளி நீர்கூட சேர்ந்து விட்டிருந்தது. அமலனின் மனவோட்டங்களைக் கண்களிலே படித்து விட்ட சியான், அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். குழந்தைகள் என்றாலே கசந்திருந்த தோமாஸ் சியான், அமலனை தனது சேக்காளியாகச் சுவீகரித்துக் கொண்ட அற்புதம் இப்படித்தான் நிகழ்ந்தது.
அப்போதிருந்து, விடிந்தும் விடியாமலும் அமலனின் வீட்டுக்குச் சென்று, கொடுவாய் வழிய உறங்கிக் கொண்டிருக்கிறவனை, தோளில் போட்டுக்கொண்டு கடற்கரைக்குச் சென்றுவிடுவார் தோமாஸ் சியான். துவக்கத்தில், பிள்ளையைக் காணோம் என்று அலமலந்து தேடிவந்த அமலனின் தாய்க்காரி, கடற்கரையில் ஈர மணலில் பள்ளம் பறித்து, ஒச்சமாகியிருந்த கால்கள் பலப்படும்படி, இடுப்புயரம் வரைக்கும் புதைந்தவண்ணம் காலைச்சூரியனில் நனைந்தபடி அமலன் நிற்க வைக்கப்பட்டிருப்பதையும், அருகில் குத்துரலில் உயிர் நண்டுகளையும் இன்னும் பெயர் தெரியாத பச்சிலைகளையும் இடித்து மருந்துச்சாறு பிழிந்து கொண்டிருக்கும் சியானையும் பார்த்து கண்கள் நிறைந்துவிட அனக்கமின்றி திரும்பிச் சென்றுவிட்டிருந்தாள்.
அமலனின் கால்கள் நேராகும்வரை, அவர் அவனைத் தனது தோள்களிலிருந்து இறக்கிவிடவே இல்லை. இயேசுவின் தோளில் தொற்றிக்கொண்ட ஒரு சிறு செம்மறி போன்று, அமலனும் சியானின் பற்றுதலைச் சுகமாக ஏற்றுக்கொண்டான். இருவரும் விடிகாலையின் ஆரஞ்சு வண்ணக் கடலைப்பார்த்தபடி, ஒரு கோட்டோவியம்போல நிற்பதைப் பார்த்துப்பார்த்துப் பழகிய கடற்பறவைகளெல்லாம், அவர்களது இருப்புக்குப் பழகிப் போயிருந்தன. அமலனுக்குக் கால்களில் வலு வந்ததும், அவனைக் கடலுக்குப் பழக்கியதும் சியான்தான்… நடக்க ஆரம்பித்த பிள்ளை, தாயின் முலை மறந்து விடுவதுபோல அமலன் படித்து முதல் தலைமுறைப் பட்டதாரியாக, வெளிநாட்டு வணிகக் கப்பலுக்கு வேலையில் சேர்ந்தபிறகு, சியானை மறந்தேவிட்டிருந்தான்.
காத்துக் கடலில் வம்பாடுபட்டு நீந்திய அமலன் தூய ஆவிக்குள் ஏறியபோது, படகில் கரண்டை அளவு தண்ணீர் நிறைந்துவிட்டது. தோமாஸ் சியான் செய்வதறியாது இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தார்.
“சியான்… என்ன பண்ணுறீய?”
சியான் தன் கண்களைச் சுருக்கி விரித்துப் பார்த்து அவனை அடையாளம் கண்டுகொண்டார். “யாரு அமலனா? நீ எதுக்குடே இப்பம் இங்க வந்த?”
“சியான் என்ஜின் ரூம்புக்குள்ள தண்ணி போயிட்டு பாருங்க. இனிமேல் ஒன்னும் செய்ய ஏலாது!”
சியான் கையிலிருந்த வாளியைக் கொண்டு, தண்ணீரை அள்ளி அள்ளி கடலில் ஊற்றிக்கொண்டே தூய ஆவியை வாஞ்சையுடன் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்.
“என்னால இங்கருந்து வர ஏலாது மக்கா… நீமர் போயிட்டு வாரும்!”
“நீங்க இல்லாம நான் இங்கிருந்து போவமாட்டேன் சீயான். வாங்க ரண்டுவேரும் சேர்ந்தே போவோம்”
“இந்த கொந்தளிப்புல என்னையால நீஞ்ச முடியாது அமலா… எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு. என்னைய இங்கனயே விட்டுரு”
“சியான்… என்ட்ட பெஞ்சாதி அங்கன கரையில நிக்கது தெரியுதா. நல்லா பாரும்… செவப்பு சேலைக்காரி! தெக்கயும் வடக்கையும் நெலகொள்ளாம ஓடிக்கிட்டு கெடக்கா பாருங்க. அவளுக்காண்டியாது வாருங்க சியான். உங்கள எப்பாடுபட்டாகிலும் நான் கரைய கூட்டிட்டு போயிருதேன். என்னைய நம்பி வாருங்க!”
“என்ட்ட மத்தியாசுக்க பிதிரே! ஒன்னிய நம்பாம வேற யார நம்பப் போறன் மக்கா… யய்யா எம்பொறவே…உன்கிட்ட சொல்ல எனக்கு ஒரு உண்மை இருக்கப்பா! அன்னிக்கி ராமேஸ்வரத்தில நடுக்கடலுக்கு போவம்னு உன் தாத்தன அழச்சுப் போனது இந்தப் பாவிதான் மக்களே! பெஞ்சாதி மாசமா இருக்கா… நா வரலைன்னு சொன்னவன, கலியாணம் ஆச்சுதுன்னா பெட்டைக்க முந்திக்குள்ள பதுங்கிட்டு கெடக்காதீயலன்னு சொல்லி உசுப்பி உட்டது இந்தப் பாவிதான்! ஆபத்த உணராம வள்ளத்துல, நின்டு வலைய வாங்கிக்கிட்டிருந்த என்னிய கடலுக்கத் தள்ளி, எனக்குச்சூட்டிதான் உனக்க தாத்தன் சிங்களவன் துப்பாக்கிச் சத்தத்த தன் நெஞ்சுல வாங்கினான் மக்களே! பாவி நான் இன்னிக்கி சாகாம பொழச்சு கெடக்கது அவன் வம்சக்கொழுந்த அதே கடலுக்கு, திரும்பயும் தார வாக்கதுகுத்தானா… எனக்குச்சூட்டி நீ ஏம்யா வந்தே! நீ போயிரு மக்களே… என்னைய காப்பாத்தக்கு வேண்டி நீமரும் இந்தக் கடலுக்குள்ளேயே எனக்க மத்தியாசப்போல பொறப்பழிய வேண்டாம்!”
அமலன் இதனைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. சிறு வயதில் தோமாஸ் சியான் சொல்லியிருக்காவிட்டால், அவன் தனது குடும்பத்துக்கும், தன் சித்தப்பாக்கள் குடும்பத்துக்கும் இருந்த வேறுபாட்டை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. அதுவரையில், சித்தப்பாக்கள் படித்ததால் அவர்களது குடும்பம் ஏற்றம் கண்டு விட்டதாக மட்டுமே எண்ணியிருந்தான். கடலாடியாகக் கல்வியறிவும் இல்லாது தனது தகப்பன் முடக்கப்பட்டது அவன் மற்றொரு வித்தில் ஜனித்ததால் தான் என்பதை அவன் அறிந்து கொள்ளாமலே இருந்திருந்தால், அவனது பால்யம் குரோதங்களால் நிரம்பியிராது. அறியாமைதான் எத்தனை ஆசீர்வாதமானது!
“சியான்…அந்த பழைய கதைலாம் இப்பம் என்னத்துக்கு! கூட இருந்தும் தாத்தாவ காப்பாத்த முடியாம போனதுக்கு இந்த ஜீவியம் முச்சூடும் எவ்ளோ நொம்பலப்பட்டு இருப்பீங்க… பொறவு, உங்களை அனாதரவா உட்டுட்டுப்போனா தாத்தாவுக்க ஆன்மா என்னிய மன்னிக்குமா சொல்லுங்க… உங்களுக்குச்சூட்டி, தானேமுன்வந்து உசுரக்குடுத்த தாத்தாவோட உருத்து எனக்கு மட்டும் இல்லாமப்போவனும்னு எப்புடிநெனைக்கீங்க… நீங்க இல்லாம நானும் கரைய போவமாட்டேன் பாத்துக்குங்க!”
கடைசியாக அமலனின் பிடிவாதத்துக்கு இசைந்தார் தோமாஸ் சியான். படகினுள் மிதந்து கொண்டிருந்த எரிபொருள் நிரப்பும் வெற்று பிளாஸ்டிக் கேன் ஒன்றை இறுக மூடி, கயிற்றில் சுற்றிப்பிணைத்து
தோமாஸ் சியானின் கையில் மிதப்புக்காகக் கொடுத்தவன், மறுமுனையைத் தன் இடுப்போடு இறுக்கிக் கட்டிக்கொண்டான்.
“என்ன ஆனாலும் கயித்த மட்டும் உட்டுறாதீங்க சியான்”
சியானைச் சேர்த்துப்பிடித்தபடி கொந்தளித்துக் கொண்டிருந்த கடலில் பாய்ந்தான் அமலன்.
அலைகள் அவர்களை ஒருநேரத்தில் பாதாளத்தில் அமிழ்த்தப்பார்த்தன. மற்றொரு நேரத்தில் ஒரு பனையளவு உயர்த்தி அந்தரத்தில் எறிந்து விளையாடின. கரைக்கு வெகு அருகிலிருந்தும், கடலின் நீவாடு அவர்களை உள்ளிழுப்பாக வெளியேற முடியாதபடி தடுப்பதை உணர்ந்தான் அமலன். நெடுநேரம் அலைகளுடன் போராடியதில் அவனது தோள்பட்டைகளில் கனம் கூடிப்போயிற்று. திரும்பி தோமாஸ் சியானைப்பார்த்தான் அமலன். அம்முதியவர் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ‘தூய ஆவி ’கடலுக்குள் அமிழ்வதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார். மிதப்புக்கென்று அவர் பற்றியிருந்த பிளாஸ்டிக் கேனின் மூடி கழன்று உள்ளில் நீர் நிறைந்தபடியால், சியான் அதனைக் கைவிட்டுவிட்டு தாமே நீந்த ஆரம்பித்திருந்தார். அந்நிலையிலும் அவர் அமலனோடு தன்னை இணைத்திருந்த கயிற்றை வாயால் கவ்விப் பிடித்தவண்ணத்திருந்தார்.
தொப்புள்கொடிபோல அவரையும் தன்னையும் பிணைத்திருந்த கயிற்றைக் கடல்நீரில் தன்னால் தெளிவாகப் பார்க்க முடிவதைக்கண்ட அமலன், கடலின் வெப்புறாளம் திட்டுமெனத் தணிந்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தான். சமுத்திரத்தின் சித்து விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று அல்லது இது கடல் தாயின் கருணையாகக்கூட இருக்கலாம். பசி இல்லாத சிங்கம் தன் இரையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. கடலின் திடீர் அமைதி அமலனுக்குள் திகிலை மூட்டியது. தன் முழுப்பழத்தையும் பிரயோகித்து நீந்தவேண்டிய கடைசி வாய்ப்பு இது என்று உணர்ந்தான்.
இதோ அவர்களது ஊரின் தேவாலயத்தின் உச்சி தெரிகிறது… கரையில் அங்கலாய்த்து நிற்கும் மக்களின் குழு நடுவில் தனது சிகப்புச் சேலைக்காரி ஆவேசத்துடன் கைகளை அசைப்பது தெரிகிறது! அதிகாலையில் அவளை அண்டிக்கிடந்த நெருக்கம், அவனது சோர்ந்துகிடந்த மூளைக்குள் சிக்கிமுக்கிக் கற்களை உரசியது. அமலன் உத்வேகத்துடன் கரையை நோக்கி நீந்தத்தயாரானான்.
அவனது இடுப்புக் கயிற்றைப் பற்றியபடி தளர் நீச்சலடித்துக்கொண்டிருந்த தோமாஸ் சீயானிடம் அவன் கடைசியாகக் கூறிய வார்த்தைகள் கடலின் பேரமைதியை ஒரு நீர்ப்பறவையின் கூர் அலகினைப்போலக் கொத்தித் திறந்தன.
“கயித்த இறுக்கமா புடிச்சுக்கிடுங்க இல்லையப்பா….”
அந்தச் சொற்கள் ஒலிக்கத்தான் இதுவரை அமைதியாகக் காத்திருந்ததுபோல அதுவரையில் வாய் பொத்திக் கிடந்த சமுத்திரம், மறுபடியும் ஓங்காரமிட ஆரம்பித்தது.



