
மனிதர்கள் தங்கள் வாழ்நாளை நொடிகளாலும் மணிகளாலும் அளந்து கொள்ளும்போது, மலைகள் தங்களை யுகங்களால் அளந்துகொள்கின்றன. அந்த யுகங்களின் கணக்கை மனிதர்களுக்கு நினைவுபடுத்தும் கடிகாரமாகவே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலர்கள் இருந்தன.
அதிகாலைப் பனிமூட்டம் தேயிலைச் செடிகளின் தலைகளுக்கு மேல் மெல்லிய வெள்ளைத் துணியைப்போலப் படர்ந்திருந்தது. அந்தப் பனித்திரையைக் கிழித்துக்கொண்டு ஏதோவொரு பறவையின் கூவல் மட்டும் ஏகாந்தமாக ஒலித்தது. தூரத்து மலைச்சரிவுகளில், பசுமைக்கு நடுவே ஆங்காங்கே நீல நிறப் புள்ளிகள் தெரியத் தொடங்கியிருந்தன. நிலம் தன் ஆழத்தில் சேமித்து வைத்திருந்த ஆதி ரகசியத்தை மெல்ல வெளியே கசியவிடுவதுபோல, அந்த ஊதா கலந்த நீல நிறம் மலரத் தொடங்கியிருந்தது.
குறிஞ்சி ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள்.
அவளுடைய கைகள் காபிக் கோப்பையின் சூட்டைத் தாங்கிக்கொண்டிருந்தன. கோப்பையிலிருந்து மெல்ல எழும்பிய புகையும் மிதமான சூடும் அவளது விரல்களுக்கு ஒரு மென்மையான கதகதப்பைத் தந்துகொண்டிருந்தன.
காபியின் கசப்பும் ஜன்னலுக்கு வெளியே கசிந்த ஈரமண்ணின் வாசனையும் இணைந்து, அவளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த ஏதோவொரு பழைய நினைவின் கதவை மெல்லத் தட்டின. முப்பதுகளின் இறுதி நாட்கள் அவளைக் கடந்து மெல்ல அசைந்து நகர்ந்துகொண்டிருந்தன. முகத்தில் காலத்தின் சுருக்கங்கள் இன்னும் விழவில்லை, ஆனால் அவளது கண்களின் ஆழத்தில் ஓர் அடர்ந்த காட்டின் பேரமைதி குடியேறியிருந்தது.
உள்ளூர் அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாகப் பணியாற்றும் அவளுக்கு, இந்த மலையும் அதன் சரிவுகளும் பனிமூட்டமும் தவிர வேறு உலகம் இருந்ததில்லை. டவுனுக்கு சென்று செட்டிலாகச் சொன்ன உறவினர்களின் குரல்கள் எப்போதோ காற்றில் கரைந்துவிட்டன. அவளது பெயரே அந்த நிலத்தின் அடையாளம்தான். ஆனால், அந்தப் பெயருக்கும் அவளது வாழ்விற்கும் இடையே இருந்த பிணைப்பு அவளுக்கே சில நேரங்களில் பெரும் சுமையாகத் தோன்றும்.
“யம்மா குறிஞ்சி…”
வீட்டின் மூலையில் இருந்த மரக்கட்டிலிலிருந்து பலவீனமான, ஆனால் காட்டின் கம்பீரத்தைக் கைவிடாத குரல் கேட்டது. அது அவளுடைய தாத்தா முத்தையா.
அவள் காபியுடன் அவரிடம் சென்றாள். முத்தையாவின் கண்கள் பழுப்பேறி, பார்வையின் ஒளி மங்கியிருந்தது. ஆனால், அந்த மலையின் ஒவ்வொரு பாறையும் மரமும் அவருக்கு அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும். பிரிட்டிஷ் காலத்தில் இந்த எஸ்டேட்டுகளை உருவாக்குவதற்காகக் காடுகளை அழித்தபோது, அதன் முதல் கோடரி விழுந்ததிலிருந்து இன்று வரை எல்லாவற்றையும் பார்த்தவர் அவர். காட்டின் ஆன்மா அவரோடு பேசுவது போல அவர் எப்போதும் தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருப்பார்.
காபியை அவளிடமிருந்து வாங்கிக்கொண்டு ‘பூக்கத் தொடங்கிருச்சா பாப்பா?” என்று கேட்டார்,
“ம்… அங்கங்க நீலம் தட்டத் தொடங்கியிருக்கு தாத்தா. இன்னும் ரெண்டு வாரத்துல மலை முழுக்க நீலக் கடலா மாறிடும்,” என்றாள் குறிஞ்சி, அவரது சுருங்கிய கைகளைத் வருடியபடி.
முத்தையா இலேசாகச் சிரித்தார். “மனுஷங்க அதைப் பார்க்க ஓடி வராங்க. ஆனா பூவுக்கு அது ஒரு வேள்வி தெரியுமா? பன்னிரண்டு வருஷம் பூமிக்குள்ளே வேர் வழியா மௌனத்தைச் சேமிச்சு, ஒரே ஒரு தடவை அதை அழகா வெடிச்சுத் தீர்த்துட்டுச் சாகுற வேள்வி. அது பூக்குறதுக்காக வாழலை குறிஞ்சி, அழகா உதிர்றதுக்காக வாழுது. இந்த மனுஷப் பயல்களுக்கு அது புரியாது. அவங்க வந்து நாலு போட்டோ எடுத்துட்டுப் போயிருவாங்க. ஆனா நிலம் தன் ஆயுசைக் கொடுத்து அந்தப் பூவை உருவாக்குது,” என்றார்.
அவர் சொன்ன அந்த வார்த்தை குறிஞ்சியின் நெஞ்சில் கூழாங்கல்லைப்போல விழுந்து ஆழத்தில் தங்கியது. அவள் அந்தப் பழைய மர வீட்டின் சுவர்களில் படர்ந்திருந்த பாசியைப் பார்த்தாள். தாத்தாவின் வார்த்தைகள் எப்போதுமே அவளுக்கு விசித்திரமான பயத்தைக் கொடுக்கும். இந்த மலையின் சரிவுகளிலிருந்து உருண்டு விழும் பாறைகளைப்போல பலமானவை தாத்தாவின் சொற்கள்.
பிரிட்டிஷ்காரர்கள் இந்த நிலத்திற்கு வருவதற்கு முன்பு, இந்நிலம் வெறும் காடாக இருக்கவில்லை. அது ஓர் ஆதி உயிர் வடிவம். முத்தையா தாத்தா அடிக்கடி சொல்லும் கதை ஒன்றுண்டு. நூறு வருடங்களுக்கு முன்பு, இந்த மலைகளில் சோலைக்காடுகள் மட்டுமே இருந்தன. ஓக் மரங்களும் ராட்சதப் பெரணிகளும் காட்டுச் சுனைகளும் நிறைந்த நிலம்.
“அப்பல்லாம் குறிஞ்சி பூக்கும்போது மனுஷங்க யாரும் பார்க்க வர மாட்டாங்க பாப்பா” என்பார் தாத்தா, மலையை வெறித்துப் பார்த்தபடி.
“காட்டு எருமைகளும் வரையாடுகளும் பழங்குடிகளும் மட்டும்தான் இருப்பாங்க. அவங்களுக்குக் குறிஞ்சிங்கிறது பூ மட்டும் இல்லை, அது காலம். குறிஞ்சி பூக்குறதை வச்சுத்தான் அவங்க தங்களோட வயசைக் கணக்கிடுவாங்க. மூனு குறிஞ்சி பார்த்தவன் இளைஞன், ஆறு குறிஞ்சி பார்த்தவன் கிழவன். ஆனா இந்த வெள்ளைக்காரன் வந்தான் பாரு… காடெல்லாம் வெட்டிச் சாய்ச்சான். இங்கிருந்த ஆதி மரங்களையெல்லாம் பிடுங்கிட்டு, சீனாவுல இருந்தும் அஸாம்ல இருந்தும் தேயிலையைக் கொண்டு வந்து நட்டான். காட்டை எஸ்டேட்டா மாத்துனான்.”
குறிஞ்சி அந்த வரலாற்றை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பாள். எஸ்டேட் என்பது இந்த நிலத்திற்குப் போடப்பட்ட இரும்புச் சங்கிலி. வரிசை வரிசையாக, ஒழுங்காக வெட்டப்பட்ட தேயிலைச் செடிகள் பார்ப்பதற்குப் பச்சைக் கடல் விரிந்ததுபோல அழகாக இருக்கலாம். ஆனால், அது அடிமைப்படுத்தப்பட்ட நிலத்தின் அழகு; காட்டின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, மனிதனின் லாபத்திற்காக அது தொழிற்சாலையாக மாற்றப்பட்டதன் சாட்சி.
“இந்தத் தேயிலைச் செடிகள் எல்லாம் நிலத்தோட ஞாபக மறதி நோயைப்போலக் குறிஞ்சி,” என்று முத்தையா தொடர்வார். “அதுங்க நிலத்தை அதோட ஆதி நினைவுகளை மறக்கடிச்சுக்கிட்டே இருக்கு. ஆனா, இந்த நிலம் தன் பழைய நினைவுகளை அவ்வளவு சீக்கிரம் விட்டுடாது. பூமிக்கு அடியில ஏதோ ஒரு மூலையில, ஆதிக்காட்டோட வேர்கள் இன்னும் உசுரோடத்தான் இருக்கு. அது பன்னிரண்டு வருஷத்துக்கு ஒருமுறை தேயிலைச் செடிகளுக்கு நடுவுல இருந்து, பாறைகளின் இடுக்குல இருந்து நீல நிறத்துல வெடிச்சு வெளிய வருது. அதுதான் குறிஞ்சிப் பூ. நான் இன்னும் சாகாம இருக்கேன்னா, இந்த நிலத்தோட ஆதி ஞாபகம் எனக்குள்ள இன்னும் அழியாம இருக்குன்னு அர்த்தம்.”
—————————————-
மதிய நேரத்து வெயில் பனிமூட்டத்தை ஊடுருவி, தேயிலை இலைகளின் மேல் பட்டு மின்னுவதைப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பள்ளி முடிந்து வீடு திரும்பும் பாதையில் குறிஞ்சி நடந்து வந்துகொண்டிருந்தாள். எஸ்டேட் தொழிலாளர்களின் குழந்தைகள் அவளைக் கடந்து ஓடினர். அவர்களின் சத்தங்கள் அந்தப் பள்ளத்தாக்கில் எதிரொலித்துத் தேய்ந்தன.
அந்தக் குழந்தைகளின் முகங்களில் வறுமையும், தேயிலைத் தோட்டத்து ஈரமும் அப்பியிருந்தன. அவர்களின் தாய்மார்கள் காலை ஆறு மணிக்கே கூடையைச் சுமந்துகொண்டு மலைச்சரிவுகளில் இறங்கிவிடுவார்கள். அட்டைப்பூச்சிகளின் கடிகளுக்கும் கொட்டும் பனிக்கும் நடுவே அவர்களின் விரல்கள் தேயிலைக் கொழுந்துகளைக் கிள்ளிக்கொண்டே இருக்கும். அவர்களின் வாழ்வும் தேயிலைச் செடியைப் போன்றதுதான். எப்போதுமே கொழுந்துகள் கிள்ளப்பட்டு, வளர அனுமதிக்கப்படாமல், குறிப்பிட்ட உயரத்திலேயே வெட்டி நிறுத்தப்பட்ட குள்ளமான மனிதர்கள்.
காலம் எப்படி ஓடுகிறது? மனிதன் ஓடுவதாக நினைக்கிறான், ஆனால் காலம் ஓர் இடத்திலேயே நின்றுகொண்டு மனிதர்களைத்தான் ஓடவிடுகிறது. இந்த மலை அப்படியேதான் இருக்கிறது. பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த அதே பனி, அதே காற்று, அதே அமைதி. ஆனால் அவளது இளமை மெல்லக் கரைந்து, இப்போது முதிர்ந்த மரத்தைப்போல அவளை மாற்றிவிட்டது.
அவளுக்குள் கலை மனம் இருந்தது. இரவு நேரங்களில் அவள் கவிதைகளோ கதைகளோ எழுத முயல்வாள். ஆனால் அவளால் எழுத முடியாது. இந்த மலையின் பிரம்மாண்டத்திற்கு முன்னால் மனிதனின் சொற்கள் எவ்வளவு அற்பமானவை என்பது அவளுக்குத் தெரிந்துவிடும். காட்டின் அமைதியை விவரிக்க ஒரு சொல்லும் மொழியில் இல்லை. அது உணரப்படவேண்டிய தியானம்.
வீட்டுக்கு வந்ததும், தாத்தா கட்டிலில் அமர்ந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். அவரது கைகளில் பழைய புத்தகம் இருந்தது. அது பிரிட்டிஷ் காலத்தில் சர்வேயர் ஒருவர் அவருக்குக் கொடுத்தது. அதில் மலையின் வரைபடங்களும் தாவரங்களின் பெயர்களும் லத்தீன் மொழியில் எழுதப்பட்டிருந்தன.
“தாத்தா, மாத்திரை சாப்பிட்டீங்களா?” என்று கேட்டபடி உள்ளே நுழைந்தாள்.
“இந்த மாத்திரையெல்லாம் சும்மா ஏமாத்து வேலை குறிஞ்சி. உடம்பு அழியப் போகுதுன்னு தெரிஞ்சா, அதை இயற்கையே மெல்ல மெல்லத் தன் வசம் இழுத்துக்கும். நாமதான் அதைத் தடுத்து நிறுத்தப் பார்க்கிறோம். காட்டுல ஒரு மிருகம் சாகும்போது மாத்திரையா சாப்பிடுது? அது ஒரு மரத்தடிக்குப் போய் மௌனமா படுத்துக்குது. நிலம் அதைத் தின்னு செரிச்சுகிடுது. அதுதான் முறை,” என்றார் முத்தையா.
“உங்களுக்கு எப்போதும் இந்தத் தத்துவப் பேச்சுதான். ஒழுங்கா சாப்பிட்டு மாத்திரை போட்டா இன்னும் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம்,” என்றாள் கோபமும் ஆதங்கமும் கலந்த குரலில்.
“இருந்து என்ன செய்யப் போறேன்? இந்த மலையோட எல்லா ரகசியத்தையும் நான் பாத்துட்டேன். இந்த முறை குறிஞ்சிப் பூ பூக்கும்போது, என் கண்கள் அதை முழுசாப் பார்க்குமான்னு தெரியல. ஆனா என் உள்ளங்காலுக்குத் தெரியுது, பூமிக்கு அடியில வேர்கள் எல்லாம் எப்படித் துடிக்குதுன்னு,” என்றார் அவர்.
அவரது பேச்சில் இருந்த தீவிரத்தன்மை குறிஞ்சியை அச்சுறுத்தியது. அவர் இயற்கையோடு கரைந்து போவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.
——————————
நாட்கள் நகர நகர, மலையின் நிறம் மாறிக்கொண்டே வந்தது. பச்சை நிறம் முற்றிலும் மறைந்து, ஊதா கலந்த நீல நிறப் போர்வை மலையை மூடியது. வெளியூர்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினர். கார்களின் ஹாரன் சத்தங்களும் மனிதர்களின் ஆரவாரமும் அந்தப் பழங்குடி மலையின் அமைதியைக் குலைத்தன. கேமராக்களின் பிளாஷ் ஒளிகள் குறிஞ்சி மலர்களின் மேல் விழுந்து மறைந்தன. மனிதர்கள் அந்த அழகை நுகர வரவில்லை, அதைத் தங்கள் கேமராக்களுக்குள் சிறைபிடிக்கவே வந்தனர்.
ஆனால், குறிஞ்சிக்கும் முத்தையாவிற்கும் அந்தப் பூக்கள் வேறு ஒரு செய்தியைக் கொண்டு வந்தன. முத்தையாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. மூச்சு விடுவதில் பெரும் சிரமம் இருந்தது. அவரது நெஞ்சுக்குள் சக்கரம் சுழல்வது போன்ற சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
உள்ளூர் எஸ்டேட் மருத்துவர் வந்து பார்த்துவிட்டு, ஸ்டெதஸ்கோப்பைக் கழற்றினார். அவரது முகத்தில் கவலை இருந்தது. “வயசாயிடுச்சு குறிஞ்சி. நுரையீரல்ல சளி ரொம்பக் கட்டியிருக்கு. இந்த மலையோட குளிரும் ஈரமும் இனிமே இவருக்கு ஒத்து வராது. டவுனுக்கு கூட்டிட்டுப் போனா இன்னும் கொஞ்ச நாள் இருப்பாரு. கோயம்புத்தூர்ல இருக்கிற உங்க சொந்தக்காரங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடு,” என்றார்.
டவுனுக்கா?
குறிஞ்சிக்கு அந்த எண்ணமே நெஞ்சை அடைப்பதுபோல இருந்தது. இந்த மலையையும் இதன் காற்றையும் பிரிந்து தாத்தாவால் ஒரு நாளும் வாழ முடியாது என்பது அவளுக்குத் தெரியும். காட்டில் வாழும் மரத்தை வேரோடு பிடுங்கி சிமெண்ட் தொட்டியில் வைப்பது போன்றது அது. டவுனில் அடிக்கும் வெயிலும் தூசியும் மனிதர்களின் இரைச்சலும் அவரை இன்னும் சீக்கிரமாகக் கொன்றுவிடும்.
அன்று இரவு, பலத்த காற்று வீசியது. வீட்டின் தகரக் கூரையில் மழைத்துளிகள் விசித்திரமான ஒலியுடன் விழுந்துகொண்டிருந்தன. ஜன்னல் கதவுகள் காற்றின் வேகத்திற்குத் தாளம் போட்டன. முத்தையா படுக்கையில் கிடந்து முனகிக்கொண்டிருந்தார். குறிஞ்சி விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, அவரது அருகில் அமர்ந்து அவரது நெஞ்சைத் தடவிக் கொடுத்தாள்.
“குறிஞ்சி…” என்றார் முத்தையா, மிக மெல்லிய குரலில்.
“சொல்லுங்க தாத்தா, நெஞ்சு ரொம்ப வலிக்குதா? ஹாஸ்பிடல் போலாமா? விடிஞ்சதும் டவுனுக்கு கிளம்பிடலாம் தாத்தா,” என்றாள், அவளது கண்களில் நீர் முட்டியது.
“வேண்டாம்… இந்த மலைக்கு ஒரு குணம் உண்டு பாப்பா. அது எதையும் தன் வசம் வச்சுக்காது. நதியைக் கடத்தி விட்ரும், மேகத்தைக் கலைச்சு விட்ரும், மனுஷங்களையும் அனுப்பி விட்ரும். ஆனா, இந்த நிலத்துலேயே தங்கிடுற சில உயிர்கள் உண்டு. நீ அப்படி ஓர் உயிர். உன்னை நினைச்சாத்தான் எனக்குக் கவலையா இருக்கு,” அவர் பேச்சை நிறுத்திக்கொண்டு இருமினார்.
“எனக்கென்ன தாத்தா? நான் நல்லாத்தான் இருக்கேன். இந்த மலையை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன். எனக்கு உங்களைத் தவிர யார் இருக்கா?”
முத்தையா அவளது கையைப் பற்றினார். அவரது கைகளில் இருந்த வெப்பம் மெல்லக் குறைந்து, பாறையின் குளிர்ச்சி குடியேறிக்கொண்டிருப்பதை அவளால் உணர முடிந்தது. “வாழ்க்கைங்கிறது நீரோடை மாதிரி ஓடிக்கிட்டே இருக்கணும் குறிஞ்சி. ஒரு இடத்துல தேங்கி நின்னா அது பாசி பிடிச்சுக் குட்டையாயிடும். நீ எனக்காக இந்த மலையிலேயே தேங்கிட்டியோன்னு தோணுது. ஒரு பொண்ணா தனியா இந்த மலையில… எனக்குப் பிறகு உனக்கு யாரு இருக்கா?”
“இல்லை தாத்தா. எனக்கு இந்த மௌனம் பிடிச்சிருக்கு. உங்களோடு இருக்கிற இந்த வாழ்க்கை போதும். மனுஷங்களோட உலகம் எனக்கு வேண்டாம்,” என்றாள். அப்போது மெல்லியதாய் அவள் குரல் நடுங்கியதைப்போல அவளுக்குத் தோன்றியது.
முத்தையா ஜன்னலுக்கு வெளியே தெரிந்த இருண்ட மலையைப் பார்த்தார். இருட்டிலும் அந்த நீலப் பூக்களின் கூட்டங்கள் மங்கலான வெளிச்சத்தைப் பரப்புவதுபோலத் தோன்றியது. “நீலப் பூக்களைப் பாரு… அதுங்க கூட்டம் கூட்டமா இருக்குறப்போதான் அழகு. தனியா ஒரு பூ இருந்தா அதுக்கு மதிப்பே இல்லை. மனுஷனும் அப்படித்தான். சமூகத்தோட வாழணும். நீ உன்னைத் தனிமைப்படுத்திக்காதே,” என்றார்.
அவர் மீண்டும் இருமினார். அந்த இருமல் காட்டின் மௌனத்தைக் கிழிப்பதுபோல இருந்தது. அன்றிரவு முழுவதும் குறிஞ்சி தூங்கவில்லை. தாத்தாவின் மூச்சுக் காற்றை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தாள். அந்தச் சிறிய அறையில், ஒரு விளக்கின் வெளிச்சத்தில், காலமும் மரணமும் நேருக்கு நேர் நின்று பேசிக்கொள்வதைக் கவனிப்பதுபோல அவளுக்கு இருந்தது.
விடியற்காலை நெருங்கும்போது, அந்த மூச்சுக் காற்றின் வேகம் மெல்லக் குறைந்தது. காட்டில் இருந்த ஈரப்பதம் அதிகரித்தது. முத்தையா நீண்ட, ஆழமான பெருமூச்சை விட்டார். அந்தப் பெருமூச்சு காட்டின் காற்றில் போய் அப்படியே கலந்தது. அதன் பிறகு எந்தச் சத்தமும் இல்லை.
காடு முற்றிலும் அமைதியானது. பறவைகளின் சத்தம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. முத்தையாவின் கை குறிஞ்சியின் கையிலிருந்து நழுவி மெல்லக் கீழே விழுந்தது.
அவள் அழவில்லை. அவளுடைய கண்கள் வறண்டு போயிருந்தன. மரணம் என்பது இந்த மலையில் மிகச்சாதாரண நிகழ்வு என்பதை அவளது ஆழ்மனம் அறிந்திருந்தது. இலை உதிர்வதைப்போல, மேகம் கலைவதைப்போல, தாத்தாவும் உதிர்ந்துவிட்டார். அந்த இழப்பின் நிஜமான வலி அப்போது அவளுக்குத் தெரியவில்லை. உடலின் வெம்மை முழுமையாக அகலாதவரை மரணம் ஒருபோதும் நிஜமாவதில்லை. அது வெறும் உறக்கத்தின் நீட்சியாக, கனவைப்போலவே அலைபாயும்.
மறுநாள், உள்ளூர் எஸ்டேட் தொழிலாளர்களின் உதவியோடு முத்தையாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவளுடைய சொந்தக்காரர்கள் எவரும் வெளியூரிலிருந்து வரவில்லை; போனில் மட்டுமே கடமைக்கு ஆறுதல் சொல்லி முடித்துக்கொண்டார்கள். இறுதிச் சடங்குகள் மிக எளிமையாக, எந்த ஆடம்பரமும் இல்லாமல் முடிந்தன. மலைச்சரிவில், பெரியதொரு ஓக் மரத்திற்கு அடியில் முத்தையா புதைக்கப்பட்டார்.
காரியங்கள் முடிந்து பனி இறங்குவதற்குள் வந்தவர்கள் அனைவரும் மலையை விட்டுக் கீழே இறங்கத் தொடங்கினர். மூத்த எஸ்டேட் தொழிலாளி முனியம்மா மட்டும் குறிஞ்சியின் கைகளைப் பற்றிக்கொண்டு கலங்கிய கண்ணீரோடு கேட்டாள்,
“இனிமே இந்த வீட்ல தனியா எப்படிப் பாப்பா இருப்ப? தனிக்காட்டுல ஒரு பொட்டப் புள்ள இருக்கக் கூடாது. பேசாம எங்களோட லயத்துக்கே வந்திரு… இல்லனா, டவுன்ல இருக்கிற எம்புள்ள வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்… அங்க ஏதாவது வேலை பாத்துக்கலாம்,” என்றாள் பாசத்துடன்.
குறிஞ்சி அதற்குப் பதில் சொல்லவில்லை. வெறும் தலையசைப்போடு அவர்களை வழி அனுப்பி வைத்தாள்.
மாலை நேரத்துப் பனி மீண்டும் மலையை மூடத் தொடங்கியது. வீடு முற்றிலும் வெறிச்சோடியது. முத்தையா அமர்ந்திருந்த அந்த மர நாற்காலி, அவர் படுத்திருந்த கட்டில், அவர் குடித்த காபி டம்ளர்… எல்லாமே அப்படியே இருந்தன. ஆனால், அவற்றில் இருந்த உயிர் மட்டும் இல்லை. பெரிய பாறை நெஞ்சின் மேல் ஏறி அமர்ந்துகொண்டது போன்ற உணர்வு குறிஞ்சியை அழுத்தியது.
வீட்டிற்குள் இருக்க முடியாமல் வெளியே வந்தாள். வீட்டின் கதவைப் பூட்டக்கூட அவளுக்குத் தோன்றவில்லை.
மலை முழுவதும் இப்போது நீலப் போர்வை போர்த்தப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கின. அந்த நீல நிறம் மலையைத் தேவலோகத்தைப் போல மாற்றியிருந்தது. ஆனால், அந்த அழகு அவளுக்குப் பெரும் சுமையாகவும் தோன்றியது.
அவள் மெல்ல மலையின் உச்சிப் பாதையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அந்த நீலப் பரப்பை ஆக்கிரமித்திருந்தது. அவர்கள் தங்களின் மகிழ்ச்சிக்காகப் பூக்களைக் கொத்தாகப் பிடுங்கிக்கொண்டிருந்தனர். சிலர் அந்த மென்மையான செடிகளைத் தங்கள் கால்களால் மிதித்து, செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர். பிளாஸ்டிக் பாட்டில்களும் தின்பண்டங்களின் உறைகளும் அந்த நீலக் கடலுக்கு நடுவே குப்பைகளாகக் கிடந்தன.
நிலம் தன் பன்னிரண்டு வருடத் தவத்தைக் கொடுத்து, தன் ஆதி நினைவுகளைத் திரட்டி உருவாக்கிய அந்தப் பேரழகு, மனிதர்களின் அற்பத்தனமான பொழுதுபோக்கிற்காகச் சில நிமிடங்களில் சிதைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. மனிதர்களின் பேராசைக்கு முன்னால் இயற்கையின் மௌனமான தவம் எவ்வளவு பலவீனமாகத் தோற்றுப் போகிறது என்பதை அவளால் பார்க்க முடிந்தது.
அவளுக்குள் இருந்த துக்கம் இப்போது அவளது தனிப்பட்ட துக்கமாக மட்டும் இருக்கவில்லை. அது அந்த நிலத்தின் துக்கமாக, அந்தப் பூக்களின் துக்கமாக, சிதைக்கப்படும் காட்டின் துக்கமாக மாறியது.
அவள் மனிதர்களின் சத்தங்கள் கேட்காத, மலையின் மிக உயரமான உச்சிப் பகுதிக்குச் சென்றாள். அங்கிருந்து பார்த்தபோது, கீழ்நோக்கிப் படர்ந்திருந்த அந்த நீலக் கடல் அவளுக்குத் தெரிந்தது. மேகங்கள் அவளது காலடியில் மிதந்துகொண்டிருந்தன. காற்று பலமாக வீசியது. அந்தப் பெருவெளியில் சிறு புள்ளிபோல நின்றிருந்தாள்.
அவள் அருகில் இருந்த, ஆதி குறிஞ்சிச் செடியின் அருகே அமர்ந்தாள். அதன் ஒரு கிளையில் பூத்திருந்த முதிர்ந்த நீலப் பூ ஒன்றை உற்றுப் பார்த்தாள். பன்னிரண்டு வருடங்களாக மண்ணுக்குள், இருளுக்குள், மழையில், வெயிலில் காத்துக் கிடந்து, இப்போது பூத்திருக்கிறது.
தாத்தா சொன்னது அவளது நினைவுக்கு வந்தது.
“பூ பூக்குறது அழகில்லை குறிஞ்சி, அது உதிர்றதுக்காகத் தன்னைத் தயார் பண்ணிக்கிற ஒரு வேள்வி.”
மெதுவாகத் தன் விரலை நீட்டி அந்தப் பூவைத் தொட்டாள். மிக மென்மையான தொடுதல். ஆனால், அவளது விரல் பட்ட அடுத்த கணம், அந்தப் பூ எந்தவித எதிர்ப்புமின்றி, மிக இலேசாகக் கிளையிலிருந்து விடுபட்டு அவளது உள்ளங்கையில் விழுந்தது.
அந்தப் பூவைத் தன் உள்ளங்கையில் வைத்தபடி வெகுநேரம் அமர்ந்திருந்தாள். காற்று அவளது கூந்தலைக் கலைத்துப் பறந்தது. அந்தப் பூவில் எந்த அசைவும் இல்லை. அது தன் வாழ்நாளின் கடமையை முடித்துக்கொண்ட நிம்மதியோடு இருந்தது. அவளுக்குள் அக்கணத்தில் எல்லாம் சுருங்கித் தீர்ந்தது போலிருந்தது. தாத்தாவின் மரணம், அவளது முப்பது வருடத் தனிமை, எஸ்டேட் பெண்களின் கசந்த வாழ்க்கை, மனிதர்களால் சிதைக்கப்படும் இந்த நிலத்தின் பேரழகு என எல்லாமே அந்த ஒரு சிறு நீலப் பூவின் எடையில் வந்து நின்றன.
இத்தனை காலம் அவளைத் தாங்கியிருந்த மலையின் பிரம்மாண்டம் சட்டென்று மறைந்து, அவளுக்கு முன்னால் வெறுமை மட்டுமே எஞ்சியிருந்தது. இனி அவளுக்குச் சொல்வதற்கும் கேட்பதற்கும் இந்த நிலத்தில் ஓர் உயிரும் இல்லை. இந்த மலையும் அதன் பூக்களும் மனிதர்களால் இன்னும் சில நாட்களில் முழுமையாகச் சிதைக்கப்பட்டுவிடும். அதன் பிறகு எஞ்சியிருப்பது வெற்றுத் தேயிலைத் தோட்டம் மட்டுமே.
சத்தமின்றி மெதுவாக அழுதாள். அவளது அழுகை மலையின் ஆழத்தில் கசியும் நீரூற்றைப்போல இருந்தது. நெஞ்சின் ஆழத்திலிருந்து பாரமான மௌனம் திரண்டு கண்களின் வழியே வழியத் தொடங்கியது. கண்ணீர் அவளுடைய கன்னங்களை நனைத்து, கையில் இருந்த அந்த நீலப் பூவின்மீது விழுந்தது.
அந்தக் கண்ணீர்த்துளியின் எடையும் காற்றில் வீசிய சுழலும் சேர்ந்து, அந்தப் பூவை அவளது கைகளிலிருந்து நழுவச் செய்து கீழே இருந்த ஆழமான பள்ளத்தாக்கிற்குள் கொண்டு சேர்த்தன. பூ காற்றில் மிதந்து, பிற பூக்களின் நீலக் கடலோடு கலந்து மறைந்தது.
குறிஞ்சி தன் வெற்று உள்ளங்கையைப் பார்த்தபடி அந்தப் பாறையின் மேல் அமர்ந்திருந்தாள். அவளது கண்ணீர் நிற்கவில்லை. பனிமூட்டம் மேலும் அடர்ந்து, அந்த நீலப் பரப்பையும் அதன் நடுவே அழுதுகொண்டே உறைந்து நின்ற குறிஞ்சியையும் தன் மௌனப் பெருவெளியால் முற்றிலுமாக மூடி மறைத்துக்கொண்டது. உலகத்தின் எல்லாச் சத்தங்களுக்கும் அப்பால், அந்தப் பனிமூட்டத்திற்குள் அவளது கண்ணீர் மட்டும் அந்த நிலத்தின் ஆதி மௌனத்தோடு கலந்து உறைந்து போயிருந்தது.



