
தூரம்
பரந்த கூரைக்கடியில்
நட்சத்திரங்கள் மின்னும்
இருளில் இருந்து
விளக்கெரியும் அவள் வீட்டை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இதே வீட்டை இதே மாதிரி
ஒரு இரவில் பார்த்தபோது
அவ்வீட்டில் என் காதலி
இருந்தாள்
அவள் கனவில் நானும்
என் கனவில் அவளுமாக
இருந்த காலம்
இப்பொழுது அதே
வீட்டில் விட்டுப் போன
கணவனின்
நினைவில்
காதலியும்
தன் அப்பனின்
முகமறியாத குழந்தையும்
கனவின்றிப் படுத்துக் கிடக்கிறார்கள்
அவள் வீட்டுக்கும்
எனக்குமான தூரம் மட்டும்
அப்படியே இருக்கிறது
ஆனால் இருளுக்கும்,
வெளிச்சத்துக்குமான
தூரம் மட்டும்
மாறியிருக்கிறது.
*
எனக்கும் வேலையிருக்கிறது
”எனக்கு வேலையிருக்கிறது
அப்புறம் வருகிறேன்”
என்று சொல்லும்போதெல்லாம்
மகனுக்காக
ஓடிய நேரங்கள்தான்
கண்ணீராய் வெளிவருகின்றன
ஒரு டப்பி சூரணம்
கால் வலி தைலம்
மூன்று மாதத்துக்கான
சுகர் மாத்திரை
கண் திறந்தவுடன்
பார்க்கிற மாதிரி இருக்கும்
முருகன் படம்
வீடு நிறைய பொருட்கள்
என இருந்தாலும்
அவளுக்கு என்னவோ,
”ஞாயிற்றுகிழமை
வந்துவிடுகிறேன்
பாட்டி” என சொன்ன
பேரனின்
ஒற்றைச் சொல்தான்
இப்போதைக்கான
மருந்தும்,வேலையும்.
*



