
வார்த்தையைப் பிடித்து
உயிராடும் கவிதையைப் போல
நானும் உயிராடுகிறேன்
உனது நினைவுகளால்
மறத்தல் நியதி
தன்னையே மறந்து
மாமருந்தானது
அதுதான் காதலானது!
*
தனிமையின் கோல் எடுத்து
உலகத்தை வரைய
சுயம் இனிக்கிறது.
எனினும்
உடன் உன்னைக் கேட்கிறது இதயம்
விரல்கள் நடுங்குகையில்
உன் விரல்களால் உயிரை அணைத்துக் கொள்
வேறென்ன கேட்டிடும் காதல்!
*
அத்தனை காலைகளும்
சூரியனைக் காட்டி முளைக்கையில்
நீ மட்டும் வருகிறாய்
ஒரு பாடல் கொண்டு.
நீ வந்து மீட்டவே
காத்திருந்தது போல் இனிக்கிறது
வானம்
அதுபோல்தான் நானும்!
*
வண்ணங்களும் மலர்களும்
என் முகவரி மறந்து விட்டனவா?
ஏதும் வர மறுக்கிறது
என் வாசலுக்கு
உன்னைத் தவிர
விடைபெறத் தெரிந்திருக்கிறது உனக்கு
வழியனுப்பவே தெரியவில்லை எனக்கு.
*
எனைத் தொட்டு
சாம்பலாக்கி
உதிரம் தெளித்து
அழகிய ரோஜா செய்து
உன் சட்டைப்பையுள் வைத்துக்கொண்டாய்
என்னவானால் என்ன?
எப்படியும் இறத்தல்தானே
நியதி!
*



