
மனம்
அடர்பனி இரவில்
இளவெயிலை
கனவு காண்கிற மனது
சுட்டெரிக்கும் கோடையில்
மழை வேண்டுமென
யாசிக்கிறது
“இருப்பதில் திருப்தி கொள்” என்று
தனக்குத்தானே
அறிவுரை கூறிக்கொள்ளும் மனது
அடுத்த நொடியே
“அடுத்து என்ன வாங்கலாம்?” என
திட்டமிடத் தொடங்குகிறது
எதையும்
சிந்திக்காமல் இருக்க வேண்டும்
என்று நினைத்தபடியே
தீவிர சிந்தனையின்
ஆழங்களில்
மூழ்கிப் போகிறது
மனதை வளைத்துப்போடும்
கலையை – மனமே
தேடித் தேடிக் கற்றுக்கொள்ளும்
அதிசயம்
மனித வாழ்க்கையின்
முரட்டுப் பிடிவாதங்களில்
முதன்மையானது.
*
வானம் வாக்களித்ததில்லை!
நிமிர்ந்து நோக்கும்
ஒவ்வொரு முறையும்
தென்பட்ட வான்வெளி,
“வானம் என்றாலே நீலம்” என்று
பதிய வைத்தது.
அன்றொரு நாள்,
செவ்வானமாய்
மிளிர்ந்து நின்று,
நீல வண்ணத்தின்
நினைவையே
மறக்கடித்தது
இருள் சூழ்ந்த இரவொன்றில்
வானமே
காணாமற் போய்,
முதல் ஏமாற்றத்தை
அறிமுகம் செய்தது
ஏதோ ஒருநாள்,
பல நிறங்கள் பூசி
வானவில்லாய் விரிந்து
தன் மற்றொரு முகத்தையும்
காட்டியது
ஒன்று மட்டுமே நிச்சயம்
எப்போதும் எதையும்
வாக்களித்ததில்லை வானம்
நிகழ்ந்தது, நிகழ்வது,
நிகழக் காத்திருப்பது
எல்லாமே நிகழ்தகவுகள்!
வானத்தின் நிறமாற்றங்கள்
வெறும் தோற்ற மயக்கங்கள்…
நீலமும் இல்லை,
செம்மையும் இல்லை,
வானம் என்பது
வெறும் வானம்தான்!
*
மகிழ்சந்தை!
பொம்மைகளுக்கும்
பலூன்களுக்கும்
துள்ளித் துள்ளித்
தூளியாடிய மனது…
எக்கச்சக்க
எதிர்பார்ப்புகளோடும்
ஏகப்பட்ட
விதிமுறைகளோடும்
மகிழ்ச்சியின் விலையை
ஏற்றி வைத்திருக்கிறது
இன்று.
பொருட்களை
வாங்கிக் குவிக்கிறது
எங்கெங்கோ
ஊர் சுற்றுகிறது
விருப்பக்குறிகளை
வியந்தோதுகிறது
விதவிதமாய்
கொறித்துப் பார்க்கிறது
வட்டி கட்டி
வீடு வாங்குகிறது
பகட்டைக் காட்டி
பந்தா செய்கிறது
மகிழ்ச்சியின் சந்தைக்கு
தினம் தினம்
படை எடுக்கிறது
பை நிறைய
செல்லாக்காசுகளோடு.
*
யாரோடு கதையாட?
பலவண்ண ஓவியமாய்
மிளிர்ந்து நிற்கும்
கலையின் உச்சத்தில்
கவனம் பதியாது
விரைந்து கடப்பவர்கள்
இளநீலம்
வெளிர்நீலம்
நீலம்
அடர்நீலம்
கருநீலம்
கடைசியில்
கருமை – என்ற பாதையில்
சென்றுகொண்டே இருக்கிறார்கள்
சாட்சியாய் நிற்கும்
காலச்சக்கரத்திற்கோ
காதுகளில்லை
வெளிச்சம் குன்றிய வீதிகளில்
வானவில்லை தரிசிக்கும் வரத்தை
தவறவிட்ட கதைகளை
யாரிடம் போய் சொல்வார்கள்?
*
சுயம்பு!
அடைகாக்கும் கோழி
வெறும் அரிசிப் பருக்கைகளைத்
தேடி நகர்வதில்லை
குட்டிகளை ஈன்ற ஞமலி
நெருங்கும் நிழல்களைக் கண்டு
பேடிப்பதில்லை
உளி எனும் வலிகளால்
சிற்பமானவர்களுக்கு
அற்பங்களை உதறித் தள்ளும்
உத்வேகம்
தன்னாலேயே வந்துவிடுகிறது
சுயம்புவாய் எழும்பிய பின்,
வல்லமை தந்து
உடனுறைய ஆயத்தமாகவே
இருக்கிறது
எல்லாவற்றையும்
உற்று நோக்கி
கணக்கில் வைத்திருக்கும்
இப்பிரபஞ்சம்.
*



