இணைய இதழ்கவிதைகள்

மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

கிருஷ்ண பட்சம்

இட்லியுடன் பாலை
விரும்பி உண்ணும்
அப்பத்தா
‘ஜெலுசில்லைத்’ தவிர
வேறு மருந்து மாத்திரையை
கடைசி காலம் வரை
உண்டதில்லை

அப்பத்தா ஒரு
‘டொரினோ’ பிரியை
அவள் தினந்தோறும்
ஒரு கிங் சைஸ் (300 ml)
டொரினோ குடிப்பது வழக்கம்

அவளுக்குப் பிடிக்கும் என்பதற்காக
அப்பா வாங்கி வைக்கும்
2 டஜன் டொரினோ பாட்டில்கள்
கொண்ட பெட்டி
பாட்டில் திறப்பானோடு
வீட்டில் இருக்கும் எப்போதும்

அவள் பெயர்
கிருஷ்ணம்மாள் என்பதால்
மயிலை விட
கிருஷ்ணப் பருந்து
அப்பாவிற்கு இஷ்டம்
சுக்ல பட்சத்தை விட
கிருஷ்ண பட்சம் யோகம்.

*

மணம்

    ஐம்புலன்களால்
    உன்னை நான் துய்த்தாலும்

    சொல்வதென்னவோ
    நான் உன்னை
    மணந்தேன்
    என்று மட்டும்தான்

    பந்தம் என்பது
    சுகந்தம்

    திருமணம் என்பது
    நறுமணம்

    சுவை, ஒளி,
    ஊறு, ஓசை
    மாற்று பாஷை

    மணத்தை மட்டும்
    வாசம், வாசனை,
    நாற்றம், நறவு என்று
    சொற்களுக்கு கொஞ்ச ஆசை.

    *

    ஆழி சூழ் உலகு

      கடலை முகர்ந்து
      விளையாடும் வானம்

      மேகம் என்பது
      முகவை அல்ல
      முகர்ந்த பின்பு
      பொங்கும் உவகை

      மழையைப் பிடித்து
      விளையாடும் கடல்

      அலை என்பது
      ஆரவாரம் அல்ல
      காலகாலமாய்ப் பிடித்தும்
      நிறையாத ஏக்கம்.

      *

      தாமிர நதி

        நரைக்குப் பயந்து
        செம்பருத்தி, மருதாணி,
        கறிவேப்பிலை சேர்த்து
        காய்ச்சிய எண்ணெய்யை
        அத்தை தேய்ப்பது வழக்கம்

        அந்த வழக்கம்தான்
        அத்தையின்
        செம்பட்டைக் கூந்தல் ரகசியம்

        அத்தையின் உயரம்
        குறைவு என்பதால்
        கூந்தல்
        இடைக்கு கீழ் இறங்கும் நீளமாக

        ஆண்டுதோறும்
        கோட்டூர் குருசாமி கோயிலில்
        தவறாமல் பூ முடி
        கொடுக்கும் அத்தை
        கோயிலுக்குச் சென்று வந்த பின்
        அம்மாவிடம் தன் சடையைக் காட்டி
        ‘இம்புட்டா வெட்டுவான்?’
        என்று நாசுவனைத் திட்டுவாள்

        இளமையின் கருமையை விட
        இந்த செம்பட்டை நிறம்
        எடுப்பாகத்தான் இருக்கிறது அத்தைக்கு
        தாமிர நதி போல.

        *

        வெகுமதி

          தீர்த்தக்கரை மாரியம்மா பாடல் ஒலிக்காமல்
          தூக்கப்படுவதில்லை
          திருவிழாக்களில் முளைப்பாரிகள்

          ஞாயிறோடு ஞாயிறு எட்டு
          திங்கள் ஒன்பது
          செவ்வாய் பத்து என்று
          நாட்களை எண்ணி வளர்த்த முளைப்பாரியை
          பத்தாம் நாளும்
          பதினொன்றாம் நாளும்
          பந்தலிலும் ஊர்வலத்திலும்
          காணலாம்

          மணப்பெண்களாக
          பெரிய பெரிய முளைப்பாரிகள் இருந்தாலும்
          சின்னக் குழந்தைகள்
          பெரியவர்களின்
          இடுப்பில் இருந்துகொண்டு
          தங்கள் தலைகளில் சுமக்கும்
          வெங்காயக் கூடை முளைப்பாரிகள்
          வெகு அழகு.

          *

          மேலும் வாசிக்க

          தொடர்புடைய பதிவுகள்

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *

          Back to top button