
ஜன்னலுக்கு வெளியே ஆம்புலன்ஸ் மெதுவாய் நுழைந்து ‘டி’ ப்ளாக் வாசலில் நிற்பது தெரிந்தது.
இந்த வண்டி ஒவ்வொருமுறை வரும்போதும் சகுந்தலாவிற்கு யட்சனின் கேள்விதான் ஞாபகம் வரும் “மிகப்பெரிய ஆச்சர்யம் எது?”
தினம்தினம் உயிர்கள் யமப் பட்டிணம் போவதைப் பார்த்தாலும் தனக்கு அழிவில்லை எனும் மனம்தான் அதிசயம் என்றார் தர்மபுத்திரர். லிஃப்டிலிருந்து ஸ்ட்ரெச்சர் வண்டியில் ஏற, வேடிக்கை பார்க்க வந்த அதிசயர்கள் கலைந்து போனார்கள்.
இந்த ஆறு மாதங்களில் இது ஏழாவது சவாரி.
ரெயில்வே ராஜன்தான் வண்டியில் போனார். பையனும் பெண்ணும் வர இரண்டு மூன்று நாட்களாகும். அதுவரை சென்னையில் ஒரு தனியார் மார்ச்சுவரியில் ராஜன் இருக்க வேண்டும்.
சகுந்தலா இந்த இடத்திற்கு வந்தபோது சந்தித்த முதல் மனிதர் அவர்தான். யாருமே உபயோகப்படுத்தாமல் இருந்த லைப்ரரியில் அவரைப் பார்த்தாள். அவள் கையிலிருந்த ஹெமிங்வே புத்தகத்தைப் பார்த்துப் புருவங்களை உயர்த்தினார்.
“நீங்க இதெல்லாம் படிப்பீங்களா?”
தன்னை அறிமுகம் செய்துகொண்டார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவர் இனி இல்லை.
ஜன்னலை விட்டு ஹாலுக்கு வந்தாள்.
அநுத்தமா மொபைல் பார்த்துக்கொண்டிருந்தாள். பார்வதி பெட்டியைக் கவிழ்த்து மறுபடி அடுக்கிக்கொண்டிருந்தாள். அவர்கள் இன்றைக்குக் கிளம்பிவிடுவார்கள். நான்கு நாள் பொழுது கொஞ்சம் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது.
“சக்கு, ஒரு காஃபி சொல்லேன்”
இண்டர்காமில், “முத்து.. ரெண்டு காஃபி, ஒரு டீ, சர்க்கரை இல்லாம”
“ஒன்னாட் ஃபோர் தானே, அனுப்பிடறேம்மா..”
“முத்து.. என் பேர் சகுந்தலா சிவராமன். கைதி மாதிரி நம்பரா மாத்திடாதே.. சீக்கிரம் கொண்டுவரச் சொல்லுங்க..”
அநுத்தமாவும் பார்வதியும் சிரித்தனர்.
“பின்ன என்ன? இது வீடு இல்லைதான்.. ஆனாலும் நம்மள நம்பரா மாத்திடறதா?”
அநுத்தமாவும் பார்வதியும் சிரித்தனர். கட்டிலில் குதிகாலிட்டு ஒருத்தரும் ஜன்னலுக்குப் பக்கத்தில் சேரில் இன்னொருவரும் உட்கார்ந்திருந்தார்கள்.
விசாலமான பெட்ரூம். ஜன்னல் வழி இயற்கையான வெளிச்சம், காற்று. தூரே சிவன் கோயில் கோபுரம் தெரிந்தது. அந்தக் குடியிருப்பின் பின் பக்கம் காவிரியின் கிளையாறு ஒன்று ஓடுகிறது. இதையெல்லாம் காட்டித்தான் அந்த சீனியர் சிட்டிசன் குடியிருப்பைச் சுலபமாக விற்றார்கள்.
“சக்கு.. எனக்கு இன்னும் அண்ணாவோட கலெக்டர் பங்களா ஞாபகம் இருக்கு.. எவ்வளவு பெரிய இடம்.. கோட்டை மாதிரி இருக்கும்.. பழைய பிரிட்டிஷ் கட்டிடம்.. இப்போ அது இருக்கான்னுகூட தெரியல”
அநுத்தமா சொன்னதும் சகுந்தலாவிற்குத் தான் தங்கியிருந்த அந்த இடங்களெல்லாம் கண்முன் ஓடின. சிவராமன் ஐஏஎஸ். மாநிலம் முழுவதும் வெவ்வேறான பொறுப்புகள். குழந்தைகள் இல்லாததால் ஊர் மாற்றங்கள் பெரிதும் பாதிக்கவில்லை. ஒரு விதத்தில் அது வம்பிற்கு அலையும் சொந்தங்களிடமிருந்து தப்பிக்கவும் வசதியாக இருந்தது. சிவராமன் கடைசியாக கலெக்டராக ரிடையர் ஆனார்.
ஊர் ஊராகத் திரிந்ததில் எந்த இடத்திலும் வேர் ஊன்றவில்லை. கடைசியில் எங்கே புலம்பெயர்வதெனக் குழப்பமாய் இருந்தது. தட்பவெப்ப நிலைக்காக கோயம்புத்தூர், குன்னூர் போகலாமா? கோவில் குளத்துக்காக கும்பகோணம் போகலாமா? டாக்டர் வசதிக்காக மெட்ராசா? இல்லை ஹரித்துவார் பக்கம் போய்விடலாமா?
எங்கே போய்க் கடைசி நாட்களைக் கழிக்கலாம் என முடிவு செய்ய, தற்காலிகமாகச் சென்னையில் தங்கினர். சிவராமனுக்குப் பக்தியில் நாட்டமில்லை. அதற்காக நாத்திகமும் பேசமாட்டார். சங்கீதம் கேட்கும் பொறுமையும் கிடையாது. அவர் உலகம், பொருளாதாரம், நிர்வாகத் திறன் இத்யாதி. அவருடன் இருந்து கல்லூரி ஆரம்பித்த நண்பரின் வேண்டுகோளின்படி கௌரவப் பேராசிரியராக இருந்தார்.
பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போதே உயிர் பிரிந்தது.
அவரை வீட்டிற்குக் கொண்டு வந்து நடையில் கிடத்திய சித்திரம் இன்னும் சகுந்தலாவின் கண்முன் இருக்கிறது.
“ரொம்ப யோசிச்சுப் பார்த்தா நாம இனிமே இருக்கப் போறது ஒரு 2000 அல்லது அதிகபட்சம் 3000 நாட்கள்தான்.. அதுக்குள்ளே ஏன் இவ்வளவு அலட்டிக்கறோம்னு தெரியல.” பார்வதிக்கு திடீர் வைராக்கியம் ஆம்புலன்ஸ் பார்த்ததும்.
கதவு திறந்தது. பையன் காஃபியும் டீயும் வைத்தான். பையிலிருந்து ஓர் ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தாள். பையன் வளைந்து வணங்கி வெளியேறினான்.
பார்வதிக்கு அந்த டிப்ஸ் கொஞ்சம் அதிகம் என்று பட்டது. சகுந்தலா இன்னும் மானசீகமாகக் கலெக்டர் மனைவியாகவே இருக்கிறாள். போலியாக இருந்தாலும் இந்தக் கும்பிடு, நாலு பேருக்கு நடுவில் முக்கியத்துவம் என்பது பழகிப் போய்விட்டது. ஜனங்களோடு ஜனங்களாய் இருந்தால் அசௌகரியமாய் இருக்கிறது. அதிகாரத்தின் அருகில் இருப்பவர்கள்—மனைவியோ, மகனோ, ட்ரைவரோ, பீ.ஏ.வோ—அவர்களும் தாங்களும் அந்த அதிகாரத்தின் ஒரு பகுதியென மயங்குவது சுவாரசியமான விஷயம்.
காஃபியும் டீயும் ஹோட்டல் ருசிக்கும் வீட்டுத் தயாரிப்புக்கும் இடைப்பட்ட தரத்தில் இருந்தன.
“மாசம் எவ்வளவு செலவாறது உனக்கு இங்கே?”
“முப்பதாயிரம் பார்வதி.. மத்த செலவுகள் ஒரு பத்தாயிரம்..”
“அநு.. நீ எவ்ளோ குடுக்கற?”
“கிட்டத்தட்ட இதேதான்..”
“நாம ஏன் மூனு பேரும் ஒன்னா இருக்கக்கூடாது?
“ஒவ்வொரு நாளும் ராத்திரி திடீர்னு முழிப்பு வரும்போது கொஞ்சம் திகிலாத்தான் இருக்கும்.. ஏதாவது ஆச்சுன்னா ஒரு நாதி கிடையாது கார்த்தால வரைக்கும்.. பெல் எல்லாம் இருக்கு.. கிட்ட போய் அடிக்கறதுக்குள்ள..?”
“நல்ல ஐடியாதான்.. எங்கே இருக்கலாம்?”
“என் வீட்லதான்.. “
கஸ்டம்ஸ் வேலை பார்வதிக்குக் கிடைத்தபோது அதை வழக்கமான ஒரு ராஜ உத்யோகமாகத்தான் நினைத்தாள். படிப்படியாக மேலேறி, துறைமுகங்களில் நள்ளிரவு ரோந்துகள், விமான நிலையத்தில் சோதனைகள், எல்லைகளில் வண்டிகளை நிறுத்திப் பெட்டிகளைத் திறப்பதெல்லாம் சுவாரசியமாய் இருந்தது.
பெண்கள் அதிகமில்லாத இடத்தில் தன்னை நிறுவிக்கொண்டதில் ஒரு போதை கிடைத்தது. இதற்கு நடுவில் கல்யாணம் பற்றி மறந்தே போனாள். ஒன்றிரண்டு வாய்ப்புகள் கண்சிமிட்டிப் பின் காணாமல் போயின. திரும்பிப் பார்ப்பதற்குள் ரிடையர்மென்டும் வந்துவிட்டது. வேலைக்கான ஓட்டம் இல்லாமல் சும்மா இருக்கும்போதுதான் தனிமை தெரிய ஆரம்பிக்கிறது.
“சரி.. நம்ம ஐடியாவுக்கு வா.. என்ன சொல்ற”
“எனக்கு ஓகேதான்..
“ஆளுக்குத் தனித்தனி பெட்ரூம். வேண்டுமானால் புதுசாய்ப் பெயின்ட் அடித்து கொஞ்சம் மரவேலை செய்துவிடலாம்.”
“சமையலுக்கு, வீட்டு வேலைக்கு, ஒத்தாசைக்குன்னு தனித்தனியாகூட வச்சுக்கலாம்.”
“தோட்டத்தில் ரோஜா பயிரிடலாம்.”
“தனித்தனி டீவி! ஒரு கார்.”
“கூடத்துல பெரிய டீவி.. ஒன்னா உக்காந்து பழைய படம், பஜன் ஸ்லோகம், சங்கீதம் பாக்கலாம்; கேக்கலாம்.”
“மார்க்கழியில் கச்சேரிகளுக்குப் போகலாம்.”
“நம்ம செட் கூப்ட்டு பாட்லக் பண்ணலாம். பரமபதம் விளையாடலாம். கதையளக்கலாம்.”
“தேவையில்லாத பொருட்களைத் தூக்கிப்போட்டுவிட்டு, மினிமலிஸ்டிக்கா வாழலாம்.”
“அவரவர்க்கு அழைப்பு வரும்போது கிளம்பிவிடலாம்.”
ஆளுக்கொன்றாய்ச் சொல்லிச் சொல்லி மானசீகக் குடித்தனம் ஆரம்பித்தபோது பசித்தது.
அநுத்தமா மொபைல் ஒளிர்ந்தது. ரகுவின் செய்தி. வழக்கமான கேள்விதான். அப்பா இறந்தபோது அவனால் வர முடியவில்லை. விசா சிக்கல். குழந்தைகளின் படிப்பு, மனைவிக்கு குடியுரிமை கிடைக்க இருந்த நேரம் என பல காரணங்கள். அதற்குப் பரிகாரமாய் அம்மாவை அழைத்துப் போய் வைத்துக்கொள்ள விரும்புகிறான்.
‘எப்போ வரப்போற? ஏன் தனியா அங்கே இருக்க..?’
அவளுக்கு அமெரிக்கா ஒத்து வரவில்லை. ஃபைவ் ஸ்டார் ஜெயில் போல் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் யாரையாவது சார்ந்து இருக்க வேண்டும். சென்னை வெயிலில் வறுபட்டு, மைனஸ் டிகிரி குளிர் நரகமாய் இருக்கிறது. குற்ற உணர்விலிருந்து ரகுவைக் காப்பாற்ற ஆசைதான். ஆனால் குளிர் அதைவிடக் கடுமையாய் இருந்தது.
மொபைலை இருவருக்கும் காட்டினாள் அநு.
“அங்கே போகப்போறயா?”
இல்லையெனத் தலையாட்டினாள்.
“நீ ஏன் பெங்களூர் போகக்கூடாது?” அங்கே அநுவின் பெண் இருக்கிறாள். என்னதான் நூற்றாண்டுகள் மாறினாலும் சில வழக்கங்கள் சில மனநிலைகள் மாறவில்லை.
“அவ மாமியார், மாமனார் இருக்கறப்போ நானும் போய் எப்படி?”
கீழே டைனிங் ஹாலுக்குப் போனார்கள்.
அங்கே ஹாலில் சகுந்தலாவிற்கு உபசாரம் பலமாக இருந்தது.
பார்வதி அப்பளத்தைக் கடித்தாள். இப்போது சாப்பிட வேண்டியிருக்கவில்லை. ஆனால் இங்கே நேரத்துக்கு வந்து சாப்பிட வேண்டும். நியதி. ஒருவேளை மூவரும் ஒன்றாக இருந்தால் இப்படி பல சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கும். நினைத்தபோது சாப்பாடு, குளியல் தூக்கம், டிவி.. தன் அந்தரங்க உலகத்தைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். தேவையில்லாமல் பொங்கிவிட்டோமோ?
இங்கு வந்து மூன்று நாட்கள் ஆகின்றன. அநுத்தமாவிற்குப் பொழுது போனதே தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து சேர்ந்து இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. இலையைத் துடைப்பதற்குள் அந்தப் பெண் சாதம் பரிமாறிவிட்டாள்.
“நல்லா கழுவின இலதாம்மா”
தொகையல் போடும்போது கரண்டி இலையில் பட்டது. எல்லார் இலையிலும் பட்டிருக்கும். சாப்பிடவே ஒப்பவில்லை அநுத்தமாவிற்கு. இந்தப் பழக்கங்கள் அவளுடைய குழந்தைகள் வீட்டிலும் இருக்க முடியாமல் செய்கிறது. பையன் அந்தக் காலத்தில் எதற்காக அப்படி இருந்தார்கள் என்பதற்கான அறிவியல் காரணங்களும் இப்போது அதற்கெல்லாம் அவசியமில்லை என்பதாக உபன்யாசம் செய்வான்.
பார்வதி சொன்னாற்போல் ஒன்றாய் இருந்தால் தன்னுடைய இந்தப் பழக்கங்கள் விவாதத்திற்கு உள்ளாகும். முடிந்தவரை தனியாக இருப்பதுதான் நல்லது.
பார்வதி இடது கையில் அப்பளம் கடித்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
அநுத்தமா சாப்பிடாமல் சாதத்தைக் கிளறுவதை சகுந்தலா பார்த்துக்கொண்டிருந்தாள். அவளால் இப்படி பொது இடத்தில் சாப்பிட முடியாது. அவள் அம்மாவிடம் இருந்து வந்த வழக்கங்கள்.. எச்சில் பத்து.. இரவில் சமையல் மேடைக்குக் கும்பாபிஷேகமே நடக்கும். நல்ல வேளை சகுந்தலா நிறைய நாட்கள் அவர்களுடன் இருக்க நேர்ந்ததில்லை.. பார்வதியின் யோசனைப் பிரகாரம் இவளுடன் ஒன்றாய் இருந்தால் தன்னுடைய ஒவ்வொரு நகர்வும் குற்ற உணர்ச்சியைக் கொடுக்கலாம்.
அவியல் வந்தது. சகுந்தலாவிற்குத் தனியாக ஒரு கிண்ணத்தில் தயிர் கொண்டு வைத்தாள் ஒரு பெண்.
அறைக்குப் போகும் வழியில் தெரிந்தவர், தெரியாதவர் எல்லாரும் முறுவலித்தார்கள். பேசினார்கள்.
“இது அநுத்தமா – என் நாத்தனார், அது பார்வதி.. சித்திப் பொண்”
ஒவ்வொருவரும் ஒவ்வொரு நூலிழையிலிருந்து ஞாபக ஏணியில் ஏற ஆரம்பிக்க (நீங்க சேலையூர்லயா இருக்கீங்க.. என்னோட சித்தப்பா பையன்..) சிரித்துக்கொண்டே நகர்ந்தார்கள்.
பார்வதி கேட்டாள், “இங்கே முன்பின் தெரியாதவங்க ஒருத்தருடன் ஒருத்தர் சௌஜன்யமா இருக்காங்க இல்ல.. நிஜமோ பாவனையோ.. ஆனால் ஒரு நெருக்கம் இருக்கு. இது ஏன் சொந்தங்கள்கிட்ட அப்படி இல்ல?”
அநுத்தமாவும், “ஏன்” என்றாள்.
சகுந்தலா குனிந்து “ஏன்னா, இவர்களுக்கு ஒருத்தரின் பழைய சரித்திரம் தெரியாது. அதனால ஒரு பரஸ்பர மரியாதை.. இந்த நேரத்து நம் நிலைக்கான கண்ணியம்.. பழையதை ஞாபகத்துக்குக் கொண்டு வந்து ‘உன்ன பத்தி எனக்குத் தெரியாதா?’ங்கற அலட்சியம் இல்லை.. கடந்த காலத்தின் சுமை இல்லை.. கசப்பு இல்லை.. ஜென் உபநிஷத் எல்லாம் சொல்றா மாதிரி இன்றைக்கான உறவு.. இன்றைக்கான உரையாடல்.. அதனாலத்தான் உறவுகளைவிட புதியவர்கள் இனிமையானவங்களாத் தெரியறங்க..”
கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆட்டோ காத்திருந்தது. சக்கரம் வைத்த பெட்டிகளை நகர்த்திக்கொண்டு வந்தார்கள் அநுவும் பார்வதியும். நடந்து வரும் பெரியவர்கள் கைப்பிடித்தபடி வரும் குழந்தைகளைப்போல் அந்தப் பெட்டிகள் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் வருவதாகப் பட்டது சகுந்தலாவிற்கு. தரைகளின் மேடு பள்ளத்திற்கேற்ப சக்கரங்கள் வெவ்வேறு திசைமாறி சத்தமிட்டு, உருண்டு வந்து ஆட்டோ அருகில் நின்றன.



