தேயும் திங்கள் – ஹேமா ஜெய்

இதுவரை ஆச்சி வீடு என்று விடுமுறைக்கு வந்து போன ஊர்தான் இனி தங்கள் இருப்பிடம்; பேருந்தில் கடக்கும்போது பார்க்கும் சிறு கட்டடத்தொகுப்புதான் பள்ளி; தானும் தம்பியும் இங்குதான் படிக்கப் போகிறோம் என்று தன்னைச் சுற்றி நிகழ்பவற்றைப் புரிந்தும் புரியாத மனநிலையுடன் உள்வாங்கிக்கொண்டிருந்த அச்சிறுமி, சிறு தயக்கத்துடன் ஆறாம் வகுப்பு – ‘சி’ பிரிவுக்குள் நுழைந்தாள்.
“அங்க படிச்ச மாதிரி இங்கயும் நல்லா படிக்கணும். அப்பப்ப தம்பியைப் போய் பார்த்துக்கணும். புரியுதா? பிள்ளைங்க வகையிலாவது உங்கம்மாளுக்கு நிம்மதி கிடைக்கட்டும்”
கிளம்பும்போது நாடி நிமிர்த்திச் சொன்ன ஆச்சியின் குரல் காதுகளில் ஒலிக்க, மருண்ட பார்வையுடன் உள்ளே வந்தவளை முதன்முதலில் ஆதுரப்படுத்தியது தள்ளி இடம்விட்டு அமர்ந்த மதுப்ரியாவின் புன்னகைதான்.
“நியூ அட்மிஷனா? பேரென்ன?”
“மதியரசி”
“நான் மது. மதுப்ரியா. உங்கப்பாவுக்கு ட்ரான்ஸ்பர்-ஆ? இல்ல, பாதில வந்திருக்கியேன்னு கேட்டேன்”
அந்தக் கேள்விக்கு ‘இல்லை’யென்று சொல்லாமல், ‘ஆமாம்’ என்றுமில்லாமல் மையமாகத் தலையசைத்தாள் மதியரசி.
‘அப்பா’ என்ற பாத்திரத்துக்கு இனி தங்கள் வாழ்வில் இடமுண்டா என்ற கேள்வி எழுந்தது அச்சிறு உள்ளத்தில். இரு வாரங்களாக வீட்டில் நிகழும் களேபரம். “மொத்தமா வந்துட்டோம்” என்று ஆச்சியைக் கட்டிக்கொண்டு அம்மா விசும்ப, “என்னத்துக்கு அழுவுற? நான் பார்த்துக்கமாட்டனா?” என்று மாமா தங்கள் இருவரையும் அணைத்தபடி தேற்றியபோது தோன்றிய கண்ணீர் இப்போதும் முட்டி வந்தது மதியரசிக்கு.
“பழைய ஃப்ரெண்ட்சை விட்டுட்டு வந்தது கஷ்டமாருக்கா? கவலைப்படாதே. நாங்க எல்லோரும் உனக்கு ஃப்ரெண்ட்ஸ்தான்” மதுவின் குளிர்ந்த உள்ளங்கை தன்னைப் பற்றிக்கொண்டதில் மதி தானும் சிரிக்க முயன்றபடி தலையாட்டினாள்.
“முதல் பீரியட் சயின்ஸ். அந்த புக் எடுத்துக்கோ. நான் உனக்கு என்னோட ஃபேர் நோட் கொடுக்கிறேன், காபி பண்ண” அவள் பயம் புரிந்தமாதிரி மதுப்ரியாவே ஏதேதோ பேசி இலகுவாக்கிக்கொண்டிருந்தாள்.
அடுத்த வாரம் வந்த திருத்தப்பட்ட வருகைப் பதிவேட்டில் இருவர் பெயரும் அடுத்தடுத்து வர, அதிகம் பேசாத மதியரசி வாஞ்சையாக மதுவின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். விட்டுப்போன பாடங்களையும் காலாண்டுத் தேர்வு வரை பழைய பள்ளியில் படித்த பாடங்களுமாக மதி தன்னை இங்கு நிலையூன்றிக்கொள்வதற்குள் இருவரும் உயிர்த் தோழிகளாக மாறிப் போனார்கள்.
“வாய் அடிச்சுக்கிட்டே இருக்குற மதுவுக்கு இருக்குற இடம் தெரியாம இருக்குற மதி ஃப்ரண்ட்டா!? கொடுமைடா சாமி”
“மதுவைக் கூப்பிடாத. வர மாட்டா. ஜிகிரி தோஸ்த்தோடதான் வருவா”
“மதி எங்க?”
“மதுப்ரியா எங்கன்னு பாரு. அங்கதான் அவளும் இருப்பா”
இப்படிப் பள்ளியில் மற்ற பிள்ளைகள் மட்டுமல்ல, ஆசிரியர்களுமே சொல்லும் வகையில் இறுகிக் கிடந்தவர்கள் ஒருகட்டத்தில் மதியரசி, மதுப்ரியா என்ற தனித்தனி விளிப்புகளின்றி “மதுமதி எங்க?” என்று கேட்குமளவு இணைந்தே திரிந்தார்கள்.
இருவருடைய வீடுகளும்கூட அருகில்தான் என்பதால் வாரயிறுதிகளில் மதியரசி மதுவின் வீட்டில் அமர்ந்து பள்ளி வேலைகள் செய்வாள். இவள் அங்குச் செல்லவில்லை என்றால் அடுத்த பத்தாம் நிமிடம் மதுவின் சைக்கிள் சத்தம் இங்குக் கேட்கும்.
“கண்ணு நில்லு. பின்னாடி கறையா இருக்கு”
மது சமைந்ததை மதியரசியின் அம்மாதான் பார்த்து அவள் வீட்டுக்குச் சொல்லியனுப்பியது. ஊரழைத்துப் பிரமாண்டமாக நடந்த மதுவின் சடங்குக்கு இவர்கள் குடும்பமாகச் சென்றுவர, அடுத்த மூன்றாம் மாதம் அமர்ந்த மதியின் குடிசை புகுதலுக்கு மது மேக்கப் செய்துவிட்டுக் கூடவே இருந்தாள்.
நகமும் சதையுமாய்ப் பிணைந்த பிறை போல நட்பு வளர, எட்டாம் வகுப்பில் இருக்கும்போது ஒருநாள் மதி சொன்னாள், “அடுத்த வருஷம் கவர்மெண்ட் ஸ்கூலுக்குப் போயிடுவேன் மது. ரெண்டு பேரையும் மெட்ரிகுலேஷன்ல போட முடியாதாம். தம்பியை மட்டும் இங்க படிக்க வைக்கலாம்னு அம்மா சொல்லிட்டாங்க”
அவள் சொன்னதை மதுவால் ஜீரணிக்கவே முடியவில்லை. “அதெப்படி? நான் பேசுறேன் உன் வீட்டுல” என்று வெகுண்டவள், “எங்கப்பாட்ட சொல்லி பீஸ் கட்டுறதை நாங்க பாத்துக்கிறோம்” என்றெல்லாம்கூட வந்து சொல்லிப் பார்த்தாள்.
”சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேருமா கண்ணு? ஏன் அங்க படிச்சா படிப்பு வராதா என்ன? படிக்கிற பிள்ளை எங்கயிருந்தாலும் படிக்கும்” என்று மதியரசியின் அம்மா சொல்ல, மூக்கு விடைக்க நின்றாள் மது. “இப்பென்ன? ஸ்கூல் மட்டும்தானே வேற வேற? சாயங்காலம் நாலு மணிக்கு மேல நாம பார்த்துக்கறதுக்கு யாரு தடை சொல்லப்போறா?” என்று மதி சமாதானப்படுத்தினாள்.
“ம்ஹும் கொஞ்சம் கொஞ்சமா நீ என்னை மறந்துடுவ” மது அழுவதுபோல பார்த்தாள். “யாரு நானா? அடி வாங்காத” மதி அவள் உள்ளங்கையை விரித்து அதில் கிள்ளி வைக்க, “ஷ்” என்ற மது, “ப்ராமிஸ்?” என்றாள். “ப்ராமிஸ்டி” என்றாள் மதியும்.
சொன்னது போலவே மாலை வேளைகளில் இருவரும் சந்திப்பதும், வாரயிறுதிகளில் பொழுதை ஒன்றாகக் கழிப்பதுமாக நாட்கள் செம்மையாகக் கரைந்தன.
பள்ளியிறுதியில் அடுத்து என்ன என்ற ஆலோசனைகள் நடக்க, படிப்பறிவில்லாத மதியரசியின் அம்மா தன் பிள்ளை தொழிற்கல்வி பயிலவேண்டுமென்று உறுதியாக இருந்தது யாரும் எதிர்பாராவொன்று. அதுவே காரும் பங்களாவுமாகச் செல்வச்செழிப்போடிருக்கும் மதுவின் குடும்பம் தங்களுக்கேற்ற தொழில் குடும்பத்தில் வாழ்க்கைப்படக் கலை படிப்பே போதும் என்று மகளை ஆர்ட்ஸ் காலேஜில் சேர்த்துவிட்டது.
மதியரசி இன்ஜினியரிங் சேர, மது பிஎஸ்ஸி கணிதம் சேர்ந்தாள்.
“இல்லாதவன் வீட்டு பிள்ளைன்னாலும் பொம்பளை பிள்ளையை எந்த தைரியத்துல படிக்க வைக்குறாங்க? ஆச்சரியம்தான்” என்று மது வீட்டிலும் “சீரா கொடுக்குற நகையைப் பவுன் கணக்குல சொல்லாம கிலோ கணக்குல எடை போட்டு, கொள்ளையா பெட்டிப்பணம் கொடுக்குற குடும்பம். இதுல பிள்ளை படிச்சுதான் ஆச்சா? அவங்களே நூறு பேரை வேலைக்கு வச்சிருக்காங்க” என்று மதி வீட்டிலும் தத்தம் தோழிகள் குறித்துப் பேசிக்கொள்வதை மௌனமாகச் செவிமடுத்தாலும் அடுத்த வார்த்தை வந்து விடாது இருவர் வாயிலிருந்தும்.
“நாம ரெண்டு பேரும் ஒன்னா படிச்சதுல எனக்கு இங்கிலீஷ் டெர்ம்ஸ் எல்லாம் கம்ஃபர்டபிளா இருக்கு மது. உனக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்டி” என்று மதியும், “‘வெளியூருக்குப் படிக்கத்தான் அனுப்பல. வண்டியாவது வாங்கிக்கொடுங்க’னு உன்னைக் காட்டித்தான் ஸ்கூட்டி வாங்கியிருக்கேன்” என்று மதுவும் மனதார சொல்லிக்கொண்டார்கள்.
படிப்பின் சுமை பெருகியதில் மதி அதில் மூழ்கிப் போக, மதுவுக்கான வரன் தேடுகை ஆரம்பித்திருந்தது. கடைசி வருடக் கேம்பஸ் தேர்வில் மதிக்கு வேலை கிடைத்துவிட, பயிற்சிக்கென அவள் பூனா செல்லும் நாளில்தான் மதுவுக்குத் திருமணத் தேதி குறித்திருந்தார்கள்.
“என்னது, நீ இருக்க மாட்டியா? போடி பேசாத” விஷயமறிந்து மது முறுக்கிக்கொண்டாள். “எனக்கு மட்டும் ஆசையா என்ன? ட்ரைனிங் பீரியட்ல லீவ் போட முடியாதுடி” என்று மதி அவள் நாடி பிடித்துக் கெஞ்சிவிட்டு வீடு வந்தாள்.
“எவ்வளவு கிலோ நகையாம்? பெட்டில எவ்வளவு?” என்ற அம்மாவிடம், “அதெல்லாம் எனக்குத் தெரியாதுமா. இதெல்லாமா கேட்பாங்க?” என்று எரிந்து விழுந்தாள் மதி.
“என்னங்கடி ஒன்னா ஒட்டிட்டு திரிவீங்க. உன்கிட்ட சொல்லலையா அவ? சரி, சரி, மூஞ்சைத் தூக்கி வச்சிட்டுருக்காத. உனக்கு உன் வேலைதான் முக்கியம். ஊருக்கு வந்ததும் பொண்ணு மாப்பிள்ளையைப் பார்த்தா போச்சு”
அம்மா சொல்வதும் சரி என்றுதான் தோன்றியது மதிக்கு. இந்நாளில் வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பு. அதுவும் தன் வீட்டுச் சூழ்நிலையில்… நிதர்சனம் சுட பெருமூச்சிட்டவள், ஊருக்குச் செல்லத் தேவையானவற்றைச் சேகரிக்க ஆரம்பித்தாள்.
திருமணத்தன்று அழைத்துப் பார்த்து, பேச முடியாமல் போக, ஆறு மாதங்கள் கழித்துப் பரிசுப்பொருளுடன் வந்த மதியைக் கண்டு மது முறைத்தாள். “டாகி. வராம போயிட்டீல்ல?” என்று அவள் திட்ட, மதி சிரிப்புடன் வாங்கிக்கொண்டாள்.
“அவர் எங்க? கம்பெனிலயா?”
“ம்ஹும். மேல தூங்குறாரு” சந்தோசமான திருமண வாழ்க்கையின் பூரிப்பு தெரியச் சிரித்த மதுவை, மதி புன்னகையுடன் பார்த்தாள்.
“என்னடி கலர் ஆகிட்ட? பூனா குளிரா?” வேலை தந்த தெம்பும் சுதந்திரமும், வெளியுலகக் காற்று தரும் ஆசுவாசமுமாக மதியின் முகத்திலும் தேஜஸ் கூடியிருந்தது.
“வேலை கன்ஃபார்ம் ஆயிடுச்சுடி”
“செம செம! என்ன சம்பளம்?”
சட்டென்று வந்து விழுந்த கேள்வியை ஏனோ மதியால் ரசிக்க இயலவில்லை. மதுவின் சீர் குறித்துத் தனக்கொன்றும் தெரியாமல் போனது மேலெழுந்து உறுத்த, அகத்தில் தோன்றுவதை முகத்தில் காட்டாமல் பதில் சொன்னாள்.
“பரவால்லடி. உங்கம்மா பட்ட கஷ்டத்துக்கு நீ இந்தளவு வந்தது பெரிய விஷயம்”
“ம்ம்” மீன்முள் விழுங்கிய சிரிப்புடன் தலையசைத்தாள் மதி.
“சீக்கிரம் வீடு கட்டிடு. போன தடவ மழை வந்தப்ப அந்தப் பக்கமெல்லாம் ஸ்கூல்லதான் ஒதுங்குனாங்கனு கேள்விப்பட்டேன்”
“சரி நேரமாச்சு. கிளம்பட்டுமா?” தன் பரிசைக் கையோடு பிரிக்கச் சொல்லி மது ரசிப்பதைப் பார்க்கவேண்டும் என்று நினைத்து வந்த மதி, அந்தச் சிந்தனையே இன்றி வேகமாகப் பரிசுப் பொதியைக் கொடுத்துவிட்டுக் கிளம்பியிருந்தாள்.
அடுத்தமுறை அவள் ஊருக்கு வந்தபோது கை நிறைய வளையல்களுடன் மந்தகாசமாய் இருந்தாள் மது.
“ஜொலிக்குறடி. கிள்ளி சாப்பிடலாம்போல இருக்க” என்ற மதியிடம், “போடி நீதான் ஜொலிக்குற” என்று சிணுங்கிய மது, “மாலு, இந்த ஜடையெல்லாம் கழட்டுடா” என்று அங்கிருந்த இன்னொரு பெண்ணை அழைத்தாள். மதி நகர்ந்து வழிவிட்டு நின்றாள்.
“புடைவை மாத்திக்கலாமாம். அத்தை சொன்னாங்க” அப்பெண் ஊக்குப் பின்னைக் கழற்றியபடி மதியைப் பார்க்க, கண்ணாடி பார்த்து அணிகலன்களை அகற்றிக்கொண்டிருந்த மதுவை ஒரு பார்வை பார்த்த மதி கதவு சார்த்தி வெளியே வந்தாள்.
“இருடி. கையோட சுத்திப் போட்டுடுறேன். மதி வந்தா போல. அவங்க வீட்ல இன்னும் மாப்பிள்ளை பார்க்குற மாதிரியே தெரியலயே. எப்ப பார்த்து எப்ப பண்ணுவாங்களோ? நீ உக்காருடி. எல்லார் கண்ணும் ஒன்னு மாதிரி இருக்காது” மது அம்மாவின் கிசுகிசுத்த குரல் “கிளம்புகிறேன்” என்று சொல்ல மீண்டும் உள்ளே வந்த மதியின் காதுகளிலும் விழுந்தது.
அடுத்த ஐந்தாம் வருடம், கோயில் திருவிழாவிற்கென மதி வந்தபோது கணவனும் இரு குழந்தைகளுமாகக் கடைவீதியில் எதிர்ப்பட்டாள் மது.
“ஏய்! பார்த்து எவ்வளவு நாளாச்சு? நீ இப்பல்லாம் ஊருக்கு வர்றதே இல்லயா?”
“எங்க மது, டைமே கிடைக்குறதில்ல. இதுதான் சின்னக்குட்டியா? அப்படியே உன் ஜாடை”
“அம்மாவுக்கு வீடு கட்டிக் கொடுத்துட்ட போல”
“ஆமா, பத்திரிகை வச்சோமே”
“அந்த நேரம் நாங்க ஊர்ல இல்ல மதி. எல்லாருமா சேர்ந்து ஈரோப் டூர் போயிருந்தோம். நீ கூட வெளிநாடு போயிருக்கிறதா உன் மாமா சொன்னாரு?”
“ஆமா. ஜெர்மனிக்கு. வேலை விஷயமா போயிருந்தேன்”
“அடி சக்க! பாருடா! எப்படி இருந்துச்சு ஊரெல்லாம்?” பதவி தரும் கம்பீரத்துடன் பொலியும் மதியின் முகத்தை மதுவின் கண்கள் ஊடுருவின.
“இப்படியே ஜாலியா சிங்கிளா ஊர் சுத்திட்டு இருக்கலாம்னு நெனப்பா? எப்ப கல்யாணம்?”
“பார்க்கணும் மது. இப்பதான தம்பியும் படிச்சு முடிச்சுருக்கான்”
“சரி, சரி வா. இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்கு வராம போவியா?”
அவள் இழுப்புக்குக் கட்டுப்பட்ட மதியை, ஹாலில் மாட்டியிருந்த மது, அவள் கணவன், இரு குழந்தைகள் என்றிருந்த பெரிய ப்ளோ-அப் புகைப்படம் வரவேற்றது.
கன்னங்கள் உப்பிச் சிரிக்கும் இவள் முகத்தில்தான் எத்தனை முழுமையும் செழுமையும்! பூரணத்துவம் என்பது இதுதானா!?
“என்ன சாப்பிடுற?”
மதுவின் கேள்வியில் வேகமாகத் தன் பார்வையை அகற்றிக்கொண்ட மதி, “ஒன்னும் வேணாம் மது. ஆமா, நீ என்ன நம்பர் மாத்திட்டியா? நடுவுல ஒருதரம் கூப்பிட்டேன்” என்றாள்.
“ஆமா. நான்கூட ஒருமுறை தீபாவளி விஷஸ் அனுப்பினேன். பதிலே இல்ல. இந்தா ஜூஸ் குடி”
“வேண்டாமே. சுகர் சேர்த்துக்கிறது இல்ல. தண்ணி மட்டும் போதும்”
“டயட் கான்ஷியஸா? பியூட்டி கான்ஷியஸா?”
“இரண்டும்தான்” சிரித்த மதி, “கிளம்பட்டுமா?” எழுந்து விடைபெற்றுக்கொள்ள, “பசிக்குதும்மா” என்றபடி வந்தது மதுவின் பெரிய பிள்ளை.
“இருடா வரேன். உங்களுக்குச் சமைச்சுப் போட்டே என் ஆயுசு முடிஞ்சுரும் போல. நானும் படிச்சிருந்தா இந்த மாதிரி வேலைக்குப் போய் ஜாலியா இருந்திருப்பேன்” என்று கடிந்துகொண்ட மதுவும் சரி, “நாம டச்ல இருக்கணும் மது” என்ற மதியும் சரி, மாறியிருந்த தங்கள் அலைபேசி எண்களைக் கடைசிவரை பரிமாறிக்கொள்ளவே இல்லை.
அடுத்த இரண்டாம் வருடம் மார்க்கெட்டில் பழம் வாங்கிக்கொண்டிருந்த மதி, சாலையின் எதிர்முனையில் கடந்து செல்லும் மதுவைக் கண்டுவிட்டு, ஆச்சரியமாய்க் கை அசைக்கச் சென்று, பிறகு, ‘வேண்டாம். என்னத்துக்கு?’ என்று நினைப்புடன் திரும்பிக்கொள்ள, ஒரே நேர்கோட்டில் பார்வையை வைத்து நடந்துகொண்டிருந்த மதுவும், ‘அவ பார்க்கல போல. நல்லவேளை! திரும்பாம இப்படியே போகலாம்’ என்றெண்ணியபடி அவ்விடத்தை வேகமாகக் கடந்துகொண்டிருந்தாள்.



