இணைய இதழ் 127தொடர்கள்

நான் ஒரு போஹேமியன் பயணி; 14 – காயத்ரி சுவாமிநாதன்

தொடர் | வாசகசாலை

“நாக வித்தகரின் மகுடியும்,  நாகத்தின் நடனமும்”

” வழிகாட்டியவை எல்லாம் மனிதர்கள் அல்ல, சில நேரங்களில் ஓர் ஊரின் மௌனம்,

 ஒரு பிச்சைக்காரனின் புன்னகை,

 ஒரு பாம்பின் நெளிவு,

 ஒரு நாக வித்தகரின்  ஊதல்,

இவைகூட வாழ்க்கையின் வேதத்தை நம் உள்ளங்கையில் எழுதிவிட்டுச் செல்கின்றன”.

ஒரு தேசாந்திரியின் வாழ்க்கையில் சில காலைகள் வெறும் காலைகளாக இருப்பதில்லை. அவை அவளுக்குள் ஏதோ ஒன்றைத் திறக்கும் காலைகள். அன்றைய காலையும் அப்படித்தான் இருந்தது. எந்த பெரிய எதிர்பார்ப்புமின்றி அதிகாலையில் எழுந்தேன். பயணத்தின் வழக்கமான சலசலப்புடன் என்னைச் சுற்றி இருந்த உலகம் மெதுவாக விழித்துக்கொண்டிருந்தது. முகம் கழுவி, என்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு ஊருக்குள் நடக்கத் தொடங்கினேன். எங்குச் சென்றாலும் என்னை முதலில் அழைப்பது அந்த ஊரின் சாலைகள் அல்ல, அந்தச் சாலைகளின் ஓரங்களில் வாழும் மனிதர்கள்தான். அன்றும் அப்படித்தான் அமைந்தது. 

மகாபோதி  ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஆலயத்திற்கு வெளியே ஏராளமான மனிதர்களைப் பார்த்தேன். அவர்கள் முகங்களில் வாழ்க்கையின் சுவடுகள் ஆழமாகப் பதிந்திருந்தன. சிலருடைய உடல்கள் வாழ்க்கையோடு நடத்திய போரின் சாட்சிகளாக இருந்தன. ஒருவருக்கு கை இல்லை, இன்னொருவருக்குக் கால் இல்லை, சிலர் உடல் முழுவதும் பலவீனத்தால் சுருங்கிப் போயிருந்தனர். ஆனால், அவர்கள் வாழ்க்கையை விட்டுவிடவில்லை. அதுதான் என்னை நிறுத்தியது. உடல் அவர்களைத் துரோகம் செய்திருந்தாலும் அவர்கள் மனம் இன்னும் அவர்களோடு இருந்தது. யாரோ சிலர் தமக்குத் தெரிந்த சிறு தொழிலைச் செய்துகொண்டிருந்தனர். சிலர் புத்தர் சிலைகளை வைத்து விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களுடைய வாழ்வாதாரம் பெரியதாக இல்லை. ஆனால், வாழ வேண்டும் என்ற விருப்பம் மிகப்பெரியதாக இருந்தது. அந்தக் காட்சி என்னை உள்ளுக்குள் உலுக்கியது. நம் வாழ்க்கையில் இல்லாதவற்றைப் பற்றித்தான் நாம் அதிகமாகப் பேசுகிறோம். “என்னிடம் இது இல்லை, அது இல்லை, அவரிடம் இருப்பது எனக்கு இல்லை, எனக்குக் கிடைக்காதது இன்னொருவருக்குக் கிடைத்துவிட்டது”. இப்படி இல்லாதவற்றின் பட்டியலை வைத்துக்கொண்டு நம்முடைய நாட்களை தின்றுகொண்டிருக்கிறோம். ஆனால், அந்த மனிதர்களைப் பார்த்தபோது வாழ்க்கை என்னிடம் வேறு ஒரு கேள்வியைக் கேட்டது, ” உனக்கு என்ன இல்லை?”, அல்ல “உனக்கு இருப்பதைக் கொண்டு, நீ என்ன செய்கிறாய்?” என்பதுதான். நான் அவர்களுடைய வறுமையைப் பார்க்கவில்லை, அவர்களுடைய வாழ்வாற்றலைப் பார்த்தேன். அவர்களுடைய குறையைப் பார்க்கவில்லை, அவர்களுடைய துணிவைப் பார்த்தேன். பிறகு, அங்கிருந்த ஒரு சிறிய புத்தர் சிலையை வாங்கினேன். அந்தச் சிலையை வாங்கியதற்குக் காரணம், அது அழகாக இருந்தது என்பதல்ல. அந்தச் சிலையின் பின்னால் இருந்த மனிதனின் வாழ்க்கையை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். “உன்னிடம் இருப்பதைக் கொண்டு வாழக் கற்றுக்கொள்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு சிறிய மெளன குரு ‘புத்தர்’. அந்த இடத்தைவிட்டு நான் நகர்ந்தபோது, எனக்குத் தெரியாது, இன்னும் சில அடிகள் சென்றதும் என் வாழ்க்கையில் அந்த நாளை மறக்க முடியாததாக அமையும் என்று. நான் இயல்பாக நடந்து சென்றுகொண்டிருந்தேன். திடீரென்று, என் காலுக்கு முன்னால் நீளமாக ஏதோ ஒன்று நெளிந்து சென்றது. முதலில் என்னவென்று புரியவில்லை. அடுத்த நொடியில்தான் தெரிந்தது, அது பாம்பு என்று. அதை உணர்ந்த வினாடியில் என் கால்கள் சிலிர்த்துப் போயின. அந்தப் பாம்பிடம் எந்தவித ஆக்ரோஷமும் இல்லை. அது தன் பாட்டிற்கு அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது.

அதற்குள் இடதுபுறத்திலிருந்து இன்னொரு பாம்பு வந்துகொண்டிருந்தது. வலதுபுறத்திலிருந்தும் இன்னொரு பாம்பு நகர்ந்து வந்தது. எதிரே ஒன்று. சுற்றிலும் பாம்புகள்.

“இவை எல்லாம் எங்கிருந்து வருகின்றன?” என்ற கேள்வியோடு என் கண்கள் அந்தச் சாலையைத் தேடின.

அப்போதுதான் தெரிந்தது, சற்றுத் தள்ளி ஒருவன் மகுடி ஊதிக்கொண்டிருந்தான். அவன் உதடுகளிலிருந்து எழுந்த இசைக்கு ஏற்ப, அந்த நாகப்பாம்பு தன் படத்தை விரித்து, தலையை மெதுவாக அசைத்துக்கொண்டிருந்தது. இசையின் ஒவ்வொரு ஏற்ற இறக்கத்திற்கும் அதன் உடல் ஒரு மொழியைப் போல அசைந்தது.

நான் மெதுவாக அவனை நெருங்கினேன்.

அந்த நாக வித்தகர் என்னைப் பார்த்து, “தொட்டுப் பாருங்க…” என்றான்.

“அய்யய்யோ… என்னாலலாம் தொட்டுப் பார்க்க முடியாது. எனக்குப் பயமாக இருக்கிறது. நான் புகைப்படம் மட்டும் எடுத்துக்கொள்கிறேன்…”

என்று சொல்லிக்கொண்டே கேமிராவை எடுத்தேன்.

ஆனால் அந்த நொடியில், என்னுடைய கேமிராவின் கண்களைவிட, அந்த நாகத்தின் கண்கள்தான் என்னை அதிகமாகப் பார்த்துக்கொண்டிருந்தன.

அது என்னை நோக்கித் தலையைத் தூக்கியது.

அதன் கண்களில் ஏதோ ஓர் அமைதி இருந்தது.

அது என்னிடம் ஏதோ பேசிக்கொண்டிருப்பதுபோல எனக்குத் தோன்றியது.

“நீ எங்கிருந்து வந்தாய்?” என்று அது கேட்டதுபோல இருந்தது.

“நான்… வெகு தொலைவிலிருந்து வருகிறேன்.”

“எதற்காக இவ்வளவு தொலைவு?”

“என்னைத் தேடி.”

அந்த நாகம் மீண்டும் தலையை அசைத்தது.

“உன்னைத் தேடி வருகிறாயா? அப்படியென்றால் என்னை ஏன் பயந்து பார்க்கிறாய்?”

நான் பதில் சொல்லவில்லை. எனக்கு உண்மையிலேயே பயமாகத்தான் இருந்தது. ஆனால் அந்தப் பயத்தின் உள்ளேயே ஒரு விசித்திரமான ஈர்ப்பும் இருந்தது.

மனிதர்களிடம் பேசும்போது வார்த்தைகள் தேவைப்படும். சில உயிர்களிடம் பேசும்போது வார்த்தைகளே தேவையில்லை. பார்வை போதும்; அசைவு போதும். அந்த நாகத்துக்கும் எனக்கும் அப்படித்தான் ஒரு மௌன உரையாடல் நடந்துகொண்டிருந்தது.

அது மகுடியின் இசைக்குத் தலையசைத்துக்கொண்டிருந்தது. நானோ அதன் அசைவுக்குள் ஏதோ ஒரு வாழ்க்கையின் இசையைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அந்த நாள் முதல், அந்தச் சாலையை நான் கடந்து செல்லும்போதெல்லாம் என் கண்கள் தானாகவே அந்த நாக வித்தகரைத் தேடும்.

நான் தினமும் போய் அவனைப் பார்ப்பேன். அவன் மகுடியை ஊதுவான்; பாம்புகள் எழும்; மக்கள் கூடுவார்கள். சிலர் ஆச்சரியத்தோடு பார்ப்பார்கள்;  சிலர் பயந்து விலகுவார்கள்; சிலர் பணத்தை அவன் முன் வைப்பார்கள். அந்தப் பணம்தான் அவனுடைய அன்றாட வாழ்வின் அரிசியாகவும், அவன் குடும்பத்தின் பசியாற்றும் உணவாகவும் மாறிக்கொண்டிருந்து.

அப்போது எனக்குப் புரிந்தது, நாம் ஒரு காட்சியாகப் பார்க்கும் ஒன்று, இன்னொருவருக்கு வாழ்க்கை. நமக்கு அது சாலையோர நிகழ்ச்சி; அவனுக்கு அது வாழ்வாதாரம். நமக்கு அது சில நிமிடங்களின் ஆச்சரியம்; அவனுக்கு அது ஒரு நாள் முழுவதற்குமான நம்பிக்கை. 

ஒருநாள் அவன் தன் மகுடியை என் கையில் கொடுத்தான்.

“நீங்க ஊதிப் பாருங்க… நீங்க ஊதுற மாதிரி இந்தப் பாம்பு செய்யுமா பார்ப்போம்…”

என்று சிரித்தபடி சொன்னான்.

என் கையில் அந்த மகுடி இருந்தது. எதிரே நாகப்பாம்பு. அதன் படர்ந்த படம் என்னை நோக்கி இருந்தது. என் உள்ளங்கைகளில் மட்டும் பயம் வியர்வையாக இருந்தது.

நான் ஊதவில்லை.

“என்னால் முடியாது… எனக்குப் பயமாக இருக்கிறது” என்று சிரித்தேன். ஆனால் அந்த மகுடியை என் கையில் கொடுத்ததற்காக அவனிடம், “ரொம்ப தேங்க்ஸ்…” என்று சொல்லிவிட்டு, அதை மீண்டும் அவனிடமே கொடுத்தேன். அந்தச் சிறிய நிமிடம்கூட எனக்குள் ஒரு பெரிய நினைவாகப் பதிந்துவிட்டது.

அந்த நாளிலிருந்து அந்த நாக வித்தகரும், அந்த நாகமும், அந்த மகுடியின் இசையும் அந்த நகரத்தின் ஒரு பகுதியாக இல்லாமல், என் பயணத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டன.

ஆனால் அந்தச் சாலையில் நான் கண்டது பாம்புகள் மட்டுமல்ல. அதே சாலையோரத்தில், கைகளும் கால்களும் இல்லாத ஒருவர் அமர்ந்திருந்தார். அவரால் எழுந்து நடக்க முடியாது. ஆனால் அவர் முன்பாக புத்தரின் சிறு சிலைகள் வரிசையாக இருந்தன. அவர் அவற்றை விற்றுக்கொண்டிருந்தார்.

ஒரு கணம் அவரைப் பார்த்தபோது என் பார்வை அவருடைய உடலில் நின்றுவிடவில்லை. அவருடைய வாழ்க்கையை நோக்கிச் சென்றது. “இவரால் முடியாது…” என்று நாம் சொல்லிவிடக்கூடிய வாழ்க்கை. ஆனால் அவர் அங்கே அமர்ந்திருந்தார். வாழ்க்கையை விற்றுக்கொண்டிருக்கவில்லை; வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார். 

அங்கேதான் அந்தப் பயணம் என்னை உள்ளுக்குள் கொஞ்சம் உலுக்கியது. நாம் வசதிகளுக்குள் வாழ்ந்துகொண்டு, இல்லாதவற்றை எண்ணிக்கொண்டே துயரப்படுகிறோம். சிறிய தடைகள் வந்தாலே, “என்னால் முடியாது…” என்று நம்மையே நாமே நம்ப வைக்கிறோம். ஆனால் அந்தச் சாலையோர மனிதர்கள் கைகள் இல்லாமலும், கால்கள் இல்லாமலும், வசதிகள் இல்லாமலும், பாதுகாப்பான நாளையென்ற உறுதியே இல்லாமலும், “இன்றைய நாளை நான் எப்படியாவது கடந்து விடுவேன்” என்ற நம்பிக்கையோடு வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்தபோது என் கண்கள் கலங்கின. அந்தக் கண்ணீர் அவர்களுக்காக மட்டுமல்ல. என்னைப் பற்றியும். நான் வாழ்க்கையில் எத்தனை விஷயங்களைப் பற்றிக் குறை கூறியிருக்கிறேன் என்று நினைத்துப் பார்த்தேன். என்னிடம் இருந்தவற்றை மறந்து, இல்லாதவற்றை மட்டும் எண்ணிக்கொண்டிருந்த தருணங்கள் எத்தனை.

ஆனால் அந்தச் சாலையோர மனிதர்கள் என்னை எதுவும் போதிக்கவில்லை. எந்தப் பெரிய வார்த்தைகளும் பேசவில்லை. அவர்கள் வெறுமனே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அதுவே எனக்கான மிகப்பெரிய பாடமாகிவிட்டது.

ஒரு நாக வித்தகர் தனது மகுடியின் இசையால் ஒரு நாளின் பசியை எதிர்கொள்கிறான். ஒரு நாகம் மனிதர்களின் அச்சத்திற்கிடையே தன் இயல்பான உடல்மொழியில் வாழ்கிறது. கைகளும் கால்களும் இல்லாத ஒருவர் புத்தரின் சிலைகளை விற்றுக்கொண்டு தன் வாழ்க்கையை நகர்த்துகிறார். அவர்களை எல்லாம் ஒரே சாலையில் சந்தித்த அந்த நாள், எனக்குள் ஒரு விஷயம் மட்டும் ஆழமாகப் பதிந்தது, “வாழ்க்கை என்பது நமக்குக் கிடைத்திருப்பவற்றால் மட்டும் அளக்கப்படுவதில்லை, கிடைக்காதவற்றுக்கிடையிலும் நாம் எவ்வளவு நம்பிக்கையுடன் வாழ்கிறோம்”  என்பதில்தான் அதன் அளவு இருக்கிறது.

அன்று அந்த நாகப்பாம்பின் கண்களைப் பார்த்தபோது நான் நினைத்த அந்த மௌன உரையாடல் இன்னும் என்னுள் இருக்கிறது. ஒருவேளை அந்த நாகம் என்னிடம் உண்மையிலேயே ஏதாவது சொல்லியிருக்கலாம். 

“பயப்படாதே தேசாந்திரி… நீ தேடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை, நீ நினைப்பதைவிட உன் முன்னாலேயே விரிந்து கிடக்கிறது.”

அந்தச் சாலையைவிட்டு நான் நகர்ந்தபோது, என் பின்னால் மகுடியின் இசை மெதுவாகக் குறைந்துகொண்டிருந்தது.

ஆனால் அந்த இசை மட்டும், என் உள்ளுக்குள் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button