இணைய இதழ் 128சிறுகதைகள்

யாரும் அறிந்திராத ஒரு கொலை – அஜிதன் சிட்டாட்டுக்கரா

சிறுகதைகள் | வாசகசாலை

ஒருவன் இன்னொருவனைக் கொல்வதற்குச் சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது, எதிர்பாராத விதமாக இயற்கையே அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதைப் பற்றி ஒருவேளை நீங்கள் ஒருபோதும் சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டீர்கள். இந்தக் கதையின் வில்லனான நானும், கடைசியில் இப்படி எல்லாம் நடக்கும் என்று கனவில்கூட நினைத்ததில்லை.

ஒரு எறும்பைக்கூட வேண்டுமென்றே துன்புறுத்தாதவன் நான். அப்படியிருக்க, நான் எப்படி ஒரு கொலை செய்தேன் என்று நினைத்து நீங்கள் வியப்படையலாம். என்ன செய்வது, அப்படியெல்லாம் செய்ய வேண்டியதாகிவிட்டது என்பதைத்தவிர வேறு என்ன பதில் சொல்வது?

‘ரேணுகா எனக்குப் பொருத்தமான பெண்ணல்ல’ என்ற எண்ணம்தான் எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருந்தது. ஊர்க்காரர்களில் சிலரும் என் மனதில் இருந்த எண்ணத்தைச் சரியென்று உறுதிப்படுத்துவதுபோலப் பேசினார்கள்.

“சேகரனுக்கும் ரேணுகாவுக்கும் கொஞ்சம்கூடப் பொருத்தமே இல்லை!”

“இவ்வளவு அழகான நம்ம சேகரனுக்குக் கிடைத்திருப்பது இப்படியொரு உருவமா!”

“சேகரனுக்கு வந்த அதிர்ஷ்டக்கேடு, வேறென்ன சொல்வது?”

என்று இப்படியே போய்க்கொண்டிருந்தது அவர்களுடைய பேச்சு.

குஜராத்தின் கட்ச் பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த என்னை, அப்பாவும் அம்மாவும் அவசர அவசரமாக ஊருக்கு வரவழைத்தார்கள். அண்ணன்கள் எல்லோருக்கும் திருமணமாகி, பல ஆண்டுகள் இடைவெளி கடந்துவிட்டிருந்தது அல்லவா?

அம்மைதான் ஒரு சிறிய முன்னுரையுடன் விஷயத்தை எடுத்துச் சொன்னாள்.

மொத்தம் மூன்று பிள்ளைகள். ஒரு ஆண், இரண்டு பெண்கள். மூத்தவள்தான் ரேணுகா. நிறம் கொஞ்சம் கறுப்பாக இருந்தாலும், நல்ல முகவசீகரம் கொண்ட பெண். நூறு பவுன் தங்கமும் அதற்கேற்ற பணமும் வரதட்சணையாகக் கிடைக்கும். ஜாதகங்களுக்கிடையிலும் நல்ல பொருத்தம்!

சுருக்கமாகச் சொன்னால், இரு வீட்டாரும் பேசி எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டார்கள்.

எனக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஏனென்றால், என் கனவுக் கன்னி தும்பைப்பூவைப்போல வெள்ளையாக இருக்க வேண்டும்; அவள் அழகானவளாகவும் நல்ல குணம் கொண்டவளாகவும் இருக்க வேண்டும்.

இருந்தாலும் அப்போது நான் எதையும் மறுத்துச் சொல்லவில்லை. முதலில் அந்தப் பெண்ணைப் பார்த்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.

ஒரே ஒரு பார்வைதான் பார்த்தேன்!

முகப்பருத் தழும்புகள் நிறைந்த கறுத்த முகம், வீங்கிய கன்னங்கள்… சிறுவயதில் பாட்டி எனக்குச் சொல்லிய கதைகளில் வரும் அரக்கியைத்தான் அது எனக்கு நினைவூட்டியது.

வீட்டுக்குத் திரும்பியதும் ரௌத்திரபீமனைப்போலக் கர்ஜித்தேன்.

“எனக்கு அந்தப் பெண் வேண்டவே வேண்டாம்!”

அதைக் கேட்டதும் அம்மா அதிர்ச்சியடைந்தாள்.

அப்பாவும் அதிர்ந்துபோனார்.

‘தக்குடு’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட மகன், இனிமேல் தங்கள் கைக்குள் அடங்காத அளவுக்கு வளர்ந்துவிட்டானே என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

அதன்பிறகு அம்மா மிகுந்த வேதனையுடன் பேசத் தொடங்கினாள். இடையிடையே கண்ணீரைத் துடைத்துக்கொண்டும் மூக்கைச் சிந்திக்கொண்டும் இருந்தாள். அப்படியும் என் எதிர்ப்பின் கூர்மை குறையவில்லை என்பதைக் கண்டபோதுதான் தற்கொலை மிரட்டலை விடுத்தாள்.

அப்பாவின் எதிர்வினையோ நான் கொஞ்சமும் எதிர்பாராத விதத்தில் இருந்தது.

எப்போதும் கோபத்தையும் ஆத்திரத்தையும் முகத்தில் சுமந்துகொண்டிருக்கும் அப்பா என்னைக் கடுமையாகத் திட்டுவார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவரோ நிலைகுலைந்து, என் காலில் விழுந்து அவளுக்காகக் கெஞ்சத் தயாராக இருந்தார்.

அதை மட்டும் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை…

அப்படித்தான், மனமில்லாத மனதுடன் அந்தத் திருமணத்துக்குச் சம்மதித்தேன்.

ரேணுகாவைப் போல அவளுடைய தங்கை இருக்கவில்லை. ரேகா மிகவும், மிகவும் அழகானவள் — பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியைப் போல!

மனைவியின் வீட்டில் இருந்தபோது, என் கண்கள் பெரும்பாலும் அவளையே சுற்றிச் சுற்றி வந்தன. எப்படியாவது அவளை எனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அப்படித்தான் உருவானது.

ஆனால், அதற்குத் தடையாக நிற்கும் ரேணுகாவை ஒழித்துக்கட்டுவதற்கு என்ன வழி?

என் முழுச் சிந்தனையும் அதைப் பற்றியே இருந்தது.

கடைசியில், சற்றுக் கொடூரமான ஒரு முடிவுக்கு வந்தேன்.

ரேணுகாவைக் கொல்வது.

அப்படியே திடீரென்று கொன்றுவிடுவதல்ல; மிகவும் மெதுவாக, திட்டமிட்டு…

முதலில் அன்பும் பாசமும் நிறைந்த கணவனாக நடிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அது ஒரு நாடகமாக இருந்தாலும், அவளைப் பொறுத்தவரையில் அது உண்மையான வாழ்க்கையாகத் தோன்ற வேண்டும்.

தான் அதிர்ஷ்டசாலி என்று அவளும், அவள் மூலமாக அவளுடைய வீட்டாரும் நம்பத் தொடங்குவதுதான் என்னுடைய முதல் வெற்றி.

இரண்டாவதாக, விடுமுறை முடிந்ததும் அவளையும் அழைத்துக்கொண்டு வேலை செய்யும் இடத்துக்குச் செல்ல வேண்டும். அங்கேயும் ஒரு மாதம் திருப்திகரமான இல்லற வாழ்க்கை.

அந்தக் காலகட்டத்தில் அவள் வீட்டுக்கு எழுதும் கடிதங்களிலும் தொலைபேசிச் செய்திகளிலும் என்னைப் பற்றிய புகழ்ச்சிகள் மட்டுமே இருக்க வேண்டும்.

அதற்குப் பிறகுதான் திட்டத்தின் இறுதிக்கட்டம்.

ஒரு நாள்…

ஆம், ஒரு நாள், எரிவாயு அடுப்பிலிருந்து தீப்பிடித்து அவள்…

மிகவும் திட்டமிட்ட ஒரு கொலை. ஆனால், பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் அது ஒரு விபத்து மரணமாகவே தோன்ற வேண்டும்.

ரேணுகாவின் மரணத்துக்குப் பிறகு, தாங்க முடியாத துயரத்தில் மூழ்கிப்போன கணவனாக நான் நடிக்க வேண்டும்.

முடிவில்லாத துக்கத்தின் அடையாளமாகத் தாடியையும் தலைமுடியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். யாருடனும் அதிகம் பழகாமல், மௌனத்துக்குள் என்னை மறைத்துக்கொள்ள வேண்டும். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் குடிக்க வேண்டும்.

இவ்வளவும் நடந்துவிட்டால், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் நிலையைப் பற்றிக் கவலை ஏற்படும்.

என் சீரழிந்த வாழ்க்கைக்குக் காரணம் ரேணுகாவின் மரணம்தான் என்பதை அவர்கள் அறிந்துகொண்டதும், பிரச்சினையைத் தீர்ப்பதற்காகக் குடும்பத்தினர் ஒன்று கூடி ஆலோசிப்பார்கள்.

அந்த ஆலோசனையில் பெரும்பாலும் உருவாகக்கூடிய முடிவு, ‘மகனுக்கு மறுமணம் செய்து வைப்பதுதான்’ என்பதாக இருக்கும்.

அப்படியே அவர்களுடைய வற்புறுத்தலுக்கு நான் பணிந்துவிட வேண்டும். ஆனால், சில நிபந்தனைகளுடன்.

ரேணுகா என் இதயமாக இருந்தாள், என் உயிராக இருந்தாள் என்றெல்லாம் கண்ணீரில் தோய்த்த வசனங்களைப் பேசிவிட்டு, ரேணுகாவின் சொந்தத் தங்கையான ரேகாவையே பெண் கேட்கலாம் என்று சொல்ல வேண்டும்.

இதற்கிடையில் ரேகாவுக்கு வேறு யாருடனாவது திருமணம் நிச்சயமாகிவிட்டால் மட்டும்தான் சிக்கல்.

இருந்தாலும், அதற்காக ரேணுகாவைக் கொல்லும் முடிவிலிருந்து நான் பின்வாங்கப்போவதில்லை. எப்படியிருந்தாலும், அவள் இல்லாமல் போனால்தான் இன்னொரு அழகான பெண்ணை என்னால் சொந்தமாக்கிக்கொள்ள முடியும்.

அதன்பிறகு ரேணுகாவிடம் மிகவும் கவனமாக நடந்துகொண்டேன்.

அன்பைப் பொழிந்து அவளைத் திணறடித்தேன். அணைப்புகளால் அவளைச் சூழ்ந்துகொண்டேன். முத்தங்களால் அவளை மூழ்கடித்தேன்.

ரேணுகாவுக்கு எந்தச் சந்தேகமும் ஏற்படவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில், ‘இந்த உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியான மனைவி நான்தான்’ என்று அவளே சொல்லிவிட்டாள்.

என்ன குறைகள் இருந்தாலும், குணத்தைப் பொறுத்தவரை ரேணுகா ஒரு சிறந்த மனைவிதான். புராணங்களில் வரும் சாவித்திரியும் சீலவதியும் அவளுக்கு முன்னால் தோற்றுப்போய்விடுவார்கள். அந்த அளவுக்கு என்னைக் கவனித்துக்கொள்வதில் அவள் அக்கறை காட்டினாள்.

ஒரு மாத விடுமுறை முடிந்ததும், ரேணுகாவையும் அழைத்துக்கொண்டு குஜராத்துக்குப் பயணமானேன்.

அங்கே எனக்குக் கம்பெனி வழங்கிய வீடு இருந்தது.

முன்மாதிரியான இல்லற வாழ்க்கை அங்கேயும் தொடர்ந்தது.

ஒருநாள் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது, அவள் அளவு கடந்த மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றாள்.

காரணத்தைக் கேட்டபோது, அவள் கர்ப்பமாக இருப்பதாகச் சொன்னாள்!

என் விந்து அவளுக்குள் ஒரு களையாக வளர்ந்துகொண்டிருக்கிறது.

அதைக் கேட்டதும் எனக்குக் கோபம் பொங்கியது. ஆனால், அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. மாறாக, ஏதேதோ இனிமையான வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே, ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல அவளைத் தூக்கி உயர்த்தினேன். மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாத கணவனைப்போல நடித்தேன்.

ஆனால், என் மனதுக்குள் அப்போது ஓடிக்கொண்டிருந்த எண்ணம், அவளை எப்போது கொல்வது என்பதுதான்.

ஒவ்வொரு நாளும் அவளைக் கொன்றுவிட வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், என்னால் அதைச் செய்ய முடியவில்லை.

முக்கியமாக, அதற்குக் காரணம் பயம்தான்.

ஒருவேளை, அடுப்பிலிருந்து தீப்பிடித்து அவள் சாகாமல் போய்விட்டால் என்ன செய்வது?

அப்படியானால், மீண்டும் தீவைத்து அவளைக் கொல்ல வேண்டியதுதான்!

கடைசியில் அப்படித்தான் முடிவு செய்தேன்.

காலையில் காபிக்காக அடுப்பைப் பற்றவைக்கும்போதே காரியத்தை முடித்துவிட வேண்டும். அவள் எழுவதற்கு முன்பே நான் எழுந்து, அதற்கான பொறியைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

இப்படித் தீர்மானித்துக்கொண்டுதான் அன்று இரவு படுக்கச் சென்றேன்.

ஆனால், அன்று அதிகாலையில்…

எதிர்பாராத விதமாக…

ஏதோ பலத்த வெடிப்புகளும் இரைச்சல்களும் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தபோது, வீடு முழுவதும் குலுங்கிக்கொண்டிருந்தது.

வானத்திலிருந்து உடைந்து விழப்போகும் விமானத்தைப்போல வீடு ஆடிக்கொண்டிருந்தது!

பாத்திரங்களும் மற்ற பொருட்களும் தரையில் சிதறி விழுந்தன. அலமாரியும் அதிலிருந்த பொருட்களும் குலுங்கி உருண்டன. திறந்திருந்த ஜன்னல்கள் படபடவென்று அடித்துக்கொண்டன — மூடின — மீண்டும் திறந்தன — மறுபடியும் அடித்துக்கொண்டன.

ஏதோ ஒரு பயங்கரமான கனவு காண்கிறேன் என்றுதான் முதலில் நினைத்தேன்.

பிறகுதான் புரிந்தது. அது கனவல்ல, நிஜம் என்று.

நிலநடுக்கம்!

எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகத் தப்பித்தாக வேண்டும். இல்லாவிட்டால் வீடு முழுவதும் இடிந்து…

இருட்டில் தடுமாறித் தடுமாறி எப்படியோ கதவை அடைந்தேன். கதவைத் திறந்ததுதான் தாமதம், யாரோ என்னைத் தள்ளிவிட்டதைப்போல வெளியே தூக்கி வீசப்பட்டேன்.

அங்கே விழுந்து கிடந்த நான் எழுந்திருக்க முயன்றுகொண்டிருந்தபோது, கனமான ஏதோ ஒன்று என் தலையில் விழுந்தது.

பூமி, தன் கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தது…

எங்கும் உடையும் சத்தங்கள்… அலறல்கள்…

என்னால் நிமிர்ந்து நிற்கக்கூட முடியவில்லை.

மின்விளக்குகள் அனைத்தும் அணைந்துவிட்டிருந்தன.

தலையில் வலி அதிகரிக்கவே தொட்டுப் பார்த்தேன். ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. காயம் சாதாரணமானதல்ல.

கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் நிலநடுக்கம் நீடித்திருக்க வேண்டும்.

அந்த நேரத்தில், வீடு பூமிக்கு இணையாகத் தரைமட்டமாகிக்கொண்டிருப்பதை அதிர்ச்சியுடன் பார்த்தேன்.

அவ்வளவுதான்.

அதற்குள் என் கண்களில் இருள் சூழத் தொடங்கிவிட்டது…

நினைவிழந்த அந்த இருளில் எவ்வளவு நேரம் கிடந்தேன் என்று தெரியவில்லை.

விழித்தபோது, என் தலை யாரோ ஒருவருடைய மடியில் இருந்தது. தலையில் ஏற்பட்ட காயத்தை யாரோ துணியால் சுற்றிக் கட்டியிருந்தார்கள்.

யாரோ என் வாயில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார்கள்.

யார் அது?

என் கண்களில் படர்ந்திருந்த மங்கல் மெதுவாக விலகியது.

கடவுளே!

அது ரேணுகாவின் முகமல்லவா?

அப்படியானால்… அவள் சாகவில்லையா?

“சேகரேட்டா…” என்று ரேணுகா மெதுவாக அழைத்தாள்.

அவள் உயிருடன் இருப்பது கனவல்ல, உண்மைதான் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.

அவளுடைய உடல் முழுவதும் மண்ணும் தூசியும் படிந்திருந்தன. நெற்றியில் ஒரு சிறிய காயமும் இருந்தது.

“நீ எப்படி உயிர் தப்பினாய்?” என்று அவசரமாகக் கேட்டேன்.

அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பதற்றம்தான் எனக்கு அப்போது அதிகமாக இருந்தது.

“அந்த இடைவெளி வழியாக…” என்று அவள் சொன்னாள்.

உண்மைதான்.

இடிந்து விழுந்த சுவர்களுக்கு இடையில் ஒரு சிறிய இடைவெளி தெரிந்தது. கஷ்டப்பட்டு ஒரு மனிதன் நுழைந்து செல்லக்கூடிய அளவுக்கு மட்டுமே அது இருந்தது.

வீட்டின் கதவு சாய்ந்து விழுந்ததால் அந்த இடைவெளி ஏற்பட்டிருக்க வேண்டும்.

பூமி இன்னும் ஒருமுறை குலுங்கியிருந்தால், கருங்கற்களும் பிற இடிபாடுகளும் விழுந்து அந்த இடைவெளியை அடைத்திருக்கும்.

அப்படியிருந்தால் ரேணுகா உயிர் தப்பியிருக்க முடியாது…

“எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தேன். கண்களைத் திறந்தபோது வீடு இடிந்து விழுவதைக் கண்டேன். எப்படியோ கட்டிலிலிருந்து தரையில் விழுந்துவிட்டேன். கடவுளே என்னைத் தூக்கிப் போட்டதுபோல…” என்று அவள் சொன்னாள்.

அப்போது எனக்கு அவள்மீது கடுமையான வெறுப்பு ஏற்பட்டது.

என்ன, எமனுக்குக்கூட இந்த அருவருப்பான ஜீவன் வேண்டாமா?

எப்படியிருந்தாலும், என் மனதுக்குள் கொழுந்துவிட்டு எரியும் எண்ணங்களை அவள் அறிந்துகொள்ளக்கூடாது.

அவளுடைய முகத்திலிருந்து என் பார்வையைத் திருப்பிக்கொண்டேன்.

கிழக்கில் விடியல் மெல்லத் தலைகாட்டத் தொடங்கியிருந்தது. அதனால் தொலைவிலிருந்த காட்சிகள் எதுவும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மெதுவாக ஊர்ந்து வந்த காற்றில் மரணத்தின் வாசனையும் ரத்தத்தின் வாசனையும் கலந்திருந்தன.

நேற்றுவரை கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நின்ற கட்டிடங்களும் வீடுகளும் தரைமட்டமாகிக் கிடந்தன… எரிந்து சாம்பலான சிதைகளைப்போல.

“சேகரேட்டா, வாருங்கள். நாம் பலரைக் காப்பாற்ற முடிந்தாலும் முடியும்!” என்று சற்றுத் தொலைவிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அலறல்களை உற்றுக் கவனித்தபடி ரேணுகா சொன்னாள்.

“நான் வரவில்லை” என்று சொல்லத்தான் முதலில் தோன்றியது.

ஆனால், சந்தர்ப்பத்துக்கேற்றபடி செயல்படக்கூடிய என் புத்தியில், ரேணுகாவைக் கொல்வதற்கான ஒரு எளிய வழி மெல்லத் தோன்றியது.

அவள் முன்னால் நடந்துசெல்லும்போது, பின்னாலிருந்து தலையில் அடித்துச் சாய்த்துவிட வேண்டும்.

அவள் இறந்துவிட்டாள் என்பதை உறுதிப்படுத்திய பிறகு, உடலைத் தூக்கிக்கொண்டு அவள் உயிர் தப்பி வந்த அதே இடைவெளி வழியாக வீட்டுக்குள் திணித்துவிட வேண்டும்.

அதன்பிறகு அந்தக் கதவைப் பிடித்து அசைத்தால் போதும்.

இனியொரு முறை இப்படியொரு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

நிலநடுக்கத்தில் சிக்கி இறந்துவிட்டாள் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்.

அவள் நடக்கத் தொடங்கிவிட்டாள்.

நானும் எழுந்து அவளைப் பின்தொடர்ந்தேன்.

நடந்துகொண்டிருந்தபோதும், அவளைக் கொல்லப் பயன்படக்கூடிய ஓர் ஆயுதத்துக்காக என் கண்கள் சுற்றுமுற்றும் தேடிக்கொண்டிருந்தன.

சிறிது தூரம் சென்றதும் அது என் கண்ணில் பட்டது.

சாலையோரத்தில், சற்றுப் பெரிய கருங்கல் துண்டு ஒன்று எனக்காகவே காத்திருப்பதைப்போலக் கிடந்தது!

கல்லைக் கையில் எடுப்பதும் அவளுடைய தலையில் ஓங்கி அடிப்பதும் மின்னல் வேகத்தில் நடந்தாக வேண்டும்…

அவளுடைய கவனம் இன்னும் அலறல்களின் மீதுதான் இருந்தது.

நான் பின்னால் வருகிறேனா என்பதைக்கூட அவள் திரும்பிப் பார்க்கவில்லை.

இதுதான் சரியான தருணம்!

நான் கருங்கல் துண்டைக் கையில் எடுத்ததும், அவளுடைய தலைக்கு மேலாக ஓங்கி அடித்ததும் ஒரே கணத்தில் நடந்தன.

ரத்தத் துளிகள் என் முகத்தில் தெறித்தபோது, சுட்டதுபோல உணர்ந்தேன்.

அந்த அடியின் வலிமையில் அவளுடைய மண்டை ஓடு உண்மையிலேயே சிதறிப்போய்விட்டது!

ஒரு சிறிய முனகலுடன் அவள் பின்னால் சரிந்து விழுந்தாள்.

தரையில் கிடந்து சிறிது நேரம் துடித்தாள்…

உடைந்த மண்டையிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து, மண்ணில் ஒரு வரைபடத்தைப்போலப் பரவிக்கொண்டிருந்தது.

ஆனால், அவள் இறந்தபிறகும் அந்தக் கண்கள் மூடவில்லை.

அச்சமூட்டும் விதமாக வெளியே பிதுங்கித் தெரிந்த அந்தக் கண்கள் என்னைப் பயமுறுத்தின.

‘என்னை ஏன் கொன்றாய்?’ என்று அவள் கேட்பதுபோல இருந்தது!

ஆனால், அங்கே நின்று பயந்துகொண்டிருக்க இது நேரமல்ல.

எல்லாவற்றையும் மிக வேகமாகச் செய்துமுடிக்க வேண்டும்.

அவளுடைய உடலைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு, இடிந்து கிடந்த வீட்டை நோக்கி நடந்தேன்.

அப்போது அவளுடைய உடல், இதற்கு முன்பு எப்போதும் இருந்திராத அளவுக்குக் கனமாகத் தோன்றியது…

கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் போராடிய பிறகு, அந்தப் பிணத்தை அவள் உயிர் தப்பி வந்த அதே இடைவெளி வழியாக வீட்டுக்குள் திணித்தேன்.

அதன்பிறகு சாய்ந்து கிடந்த கதவைப் பிடித்து வலுவாக அசைத்தேன்.

கருங்கற்களும் சிமெண்ட் துண்டுகளும் ஒன்றன்பின் ஒன்றாகப் பெயர்ந்து விழுந்தன. அந்த இடைவெளி இருந்த இடமே தெரியாமல் மறைந்துபோனது.

அப்போது பொழுது புலரத் தொடங்கியிருந்தது.

அதற்குப் பிறகு எங்கிருந்தோ வாகனங்கள் வரும் இரைச்சல் கேட்டது…

யாரோ வருகிறார்கள்.

யாராக இருந்தாலும் வரட்டும். இன்னும் ஒரு நாடகம் பாக்கியிருக்கிறது.

ஆனால், முன்னால் இருந்த சாலை வழியாக வாகனங்கள் எப்படி உள்ளே வரும்?

கட்டிடங்களும் மரங்களும் விழுந்து கிடந்ததால் பாதை மிகவும் மோசமாக இருந்தது.

சிறுவயதில் நாங்கள் விளையாடிய நூறாங்கோல் விளையாட்டைப் போல! மெல்லிய குச்சிகள் எல்லாம் ஒன்றோடொன்று சிக்கிப் பின்னிப் பிணைந்துகிடப்பதைப்போல, பாதை முழுவதும் இடிபாடுகள் சிதறிக் கிடந்தன.

நான் நினைத்தபடியே நடந்தது.

வாகனங்களைத் தொலைவிலேயே நிறுத்திவிட்டு அவர்கள் நடந்துவந்தார்கள்.

அவர்களில் காவல்துறையினரும் ராணுவத்தினரும் தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்களும் மருத்துவர்களும் இருந்தார்கள்.

எப்படியிருந்தாலும், அவர்கள் என்னை நெருங்குவதற்கு முன்பே நாடகத்தின் கடைசிக் காட்சிக்குத் திரை விலக்கிவிட வேண்டும்.

இடிந்து கிடந்த வீட்டின் இடிபாடுகளை அவசர அவசரமாக அகற்றிக்கொண்டு, அவற்றுக்குள் சிக்கியிருந்த யாரோ ஒருவரைக் காப்பாற்ற முயலும் மனிதனாக நான் தோன்ற வேண்டியிருந்தது.

வருபவர்களுக்கு அந்தக் காட்சி நம்பும்படியாக இருக்க வேண்டும்.

அதில் நான் வெற்றியும் பெற்றேன்.

என்னுடன் வந்தவர்களில் சிலரும் என் மனைவியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடுமையாக உழைத்த பிறகு, அவளுடைய சடலத்தை வெளியே எடுத்தார்கள்.

அதைப் பார்த்ததும் துயரத்தைக் கட்டுப்படுத்த முடியாதவனைப்போல நான் கதறி அழுதேன்.

என் துயரத்தைக் கண்ட அவர்களில் ஒருவர் என் முதுகில் தட்டிக்கொடுத்து ஆறுதல் கூற முயன்றார்.

“அழாதீர்கள் நண்பரே. எல்லாம் இறைவனின் சித்தம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.”

ஆனால், நான் அழுகையை நிறுத்தவில்லை.

பிறகு அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டபோது, மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க வேண்டும் என்று தோன்றியது.

ஆனால், ‘அவசரப்பட்டுக் குடத்தை உடைத்துவிடாதே, முட்டாளே!’ என்று என் மனமே எச்சரித்ததால் என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்…

நாட்டையே உலுக்கி, அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய அந்த இயற்கைப் பேரழிவு நிகழ்ந்து இன்றுடன் ஒன்றரை ஆண்டு நிறைவடைகிறது.

இன்று நான் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.

எல்லாமே நான் விரும்பியபடியே நடந்துமுடிந்துவிட்டன.

மற்றவர்களைப்போல ரேணுகாவும் நிலநடுக்கத்தின் பலியாக மட்டுமே கருதப்பட்டாள்.

என்னை ஒரு கடுகளவுகூட யாரும் சந்தேகிக்கவில்லை.

ரேணுகாவின் மரணத்துக்குப் பிறகு துயரத்தில் மூழ்கிய கணவனாக நான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தில் உண்மையிலேயே பிரமாதமாக நடித்தேன்.

சினிமாவில் நடித்திருந்தால் ஆஸ்கார் விருது நிச்சயம் கிடைத்திருக்கும்!

எப்படியிருந்தாலும், இப்போது நான் தாடியை மழித்துவிட்டேன்.

குடிப்பதையும் நிறுத்திவிட்டேன்.

இன்னொரு மகிழ்ச்சியான செய்தி!

வரும் சிங்கம் மாதம் பதின்மூன்றாம் தேதி நானும் ரேகாவும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்.

குருவாயூர் கோவிலில்தான் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முகூர்த்த நேரம் காலை ஒன்பதரை மணிக்கும் பத்து மணிக்கும் இடையில்.

நீங்கள் ஒவ்வொருவரும் குடும்பத்துடன் வந்து, இந்தத் திருமண நிகழ்ச்சியிலும் தொடர்ந்து என் இல்லத்தில் நடைபெறவிருக்கும் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button