
பெருநகர சென்னை மாநகராட்சி, 77 வது வட்டம், கேசவப் பிள்ளை பூங்கா பேருந்து நிலையத்தின் இருக்கையில் பழைய டிஜிட்டல் பேனரை விரிப்பாகப் பயன்படுத்தி உட்கார்ந்து கொண்டும் உறங்கிக் கொண்டும் இருக்கிறார் சுமார் 65 வயதுடைய பாலம்மாள்.
அவருக்கான வீடு எங்கே?
அவர் கண்ணை உயர்த்திப் பார்த்தால் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பின் கட்டிடம் தெரியும். அவருக்கான வீடு உள்ளது. ஆனால் உள்ளே நுழைய முடியாது. அந்தக் கட்டிடத்தின் உள்ளே அவரால் ஏன் நுழைய முடியவில்லை? தனக்கு ஒதுக்கப்பட்ட வீடு தனக்கு மறுக்கப்படுவது ஏன்? கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் மாநகராட்சி வட்டத்தில், அவர்களைப் பாதுகாப்பான ஓரிடத்தில் குடியமர்த்த வேண்டிய பொறுப்பிலிருக்கும் மாநகராட்சி வேடிக்கை பார்ப்பது ஏன்? அதுவும் கைக்கெட்டும் தூரத்தில்தான் சென்னை மாநகரத்தை ஆட்சி செய்யும் ரிப்பன் பில்டிங் வளாகம் அமைந்துள்ளது.
உருவாக்கப்பட்ட குடியிருப்பு மறுக்கப்படும் வாழ்வுரிமை
பரந்து விரிந்த கேசவப் பிள்ளை பூங்கா விளையாட்டு மைதானத்தை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காக 1983 ஆம் ஆண்டு, 35 பிளாக் கொண்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்கு மாடிக் குடியிருப்புகளாக மாற்றியது தமிழக அரசு. கால ஓட்டத்தில் கட்டிடங்கள் பழுதடைய, ஒன்று முதல் பதினான்கு பிளாக்குகள் 2008 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக 15 முதல் 35 பிளாக்குகள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டது. இதற்குத் தகுந்தாற்போல ஏற்கனவே அங்கு குடியிருந்த 864 குடும்பங்களுக்கு, 18 மாதத்தில் புதிய குடியிருப்புகளைக் கட்டித் தருவதாக 2016 ஆம் ஆண்டு உறுதியளித்த குடிசை மாற்று வாரியம், அதுவரை தற்காலிகக் குடியிருப்பில் குடியிருப்பதற்கு ஏதுவாக 8000 ரூபாய் மட்டும் வாடகைப் பணமாக கொடுத்தது.
இப்படி one time payment ஆகக் கொடுத்த எட்டாயிரம் ரூபாயில் 18 மாதங்களுக்கு சென்னை மாநகரத்தில் வாடகை வீடு எப்படி கிடைக்கும். எனவே சொந்தமாகப் பணம் செலவழித்து வாடகை வீடுகளில் இருப்பதற்கு வாய்ப்பற்ற, வழி தெரியாத சுமார் 200 குடும்பங்களுக்குப் புதிய குடியிருப்பு கட்டப்படும் இடத்தின் கட்டிடத்தில் எட்டுக்கு எட்டு சதுர அளவிலான தகரக் கொட்டகையில் தற்காலிகக் குடியிருப்பை குடிசை மாற்று வாரியம் செய்து கொடுத்தது.
அரசு அறிவித்தபடி, பழைய பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதை மக்கள் பார்த்துக் கொண்டேயிருந்தனர். மூன்றடுக்கு கட்டிடங்கள் எட்டடுக்குக் கட்டிடங்களாக மாறின. 864 குடியிருப்புகள் 1056 குடியிருப்புகளாக மாறின. கட்டிடங்கள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை. அதிகாரிகளை நோக்கி மக்கள் கேள்விகளை எழுப்ப, அவர்கள் அரசாங்கத்தை, ஆட்சியாளர்களை நோக்கிக் கை காட்டிப் பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டனர். இறுதியாக 2020 ஜனவரி 26 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் வீடுகளை முழுமையாக ஒப்படைத்து விடுவோமென வாய்மொழி உத்தரவு அளித்தனர். இதுவும் நடந்தபாடில்லை.
கொரோனாவில் வாழ்தல்
கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நேரத்தில் சென்னை மாநகராட்சி களப்பணியில் இப்பகுதியின் இளைஞர்கள் ஈடுபட, கொரோனா தொற்று இவர்களைத் தாக்க, ஒன்று இரண்டு எனத் தொடங்கி தகரக் கொட்டகையில் இருப்பவர்கள், ஒன்று முதல் பதினான்கு பிளாக்குகளில் குடியிருப்பவர்கள் என 15க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த நேரத்தில்தான் இந்த மக்களுக்காகக் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரியத்தின் புதிய குடியிருப்புகளை கொரோனா தொற்று சிகிச்சை மையமாக மாற்றப் போவதாக அரசு அறிவித்தது. துடிதுடித்துப் போயினர் சம்பந்தப்பட்ட மக்கள்.
என்றேனும் புதிய இடத்தில் தாங்கள் குடி வைக்கப்படுவோம் என்ற நம்பிக்கையோடு எல்லாக் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு வாழ்ந்து வந்த மக்களுக்கு இச்செய்தி பேரிடியாக வந்து இறங்கியது. கொரோனா கொடுமை போதாது என்று, அவர்களுக்கான குடியிருப்பும் இப்போது பறிக்கப்படும் ஆபத்து. ஏற்கெனவே அடிப்படை சுகாதார வசதிகள் இன்றி, இப்போது கொரோனா தொற்றுக்கும் சிலர் ஆளாகி அவதியுற்று வரும் நேரத்தில், குடிசை மாற்று வாரியத்தின் இந்தக் குடியிருப்பு இடத்தை, கோவிட் பாதிப்புக்குள்ளானோரைத் தங்க வைத்து கண்காணிப்பு செய்யும் மையமாக மாற்ற அரசு முடிவெடுத்து பணிகளை விரைவுப்படுத்தியது.
கோரிக்கை மனுக்கள் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டன. பயன் ஏதும் கிடைக்கவில்லை. ஊரடங்கு காலம். பாதிக்கப்பட்ட எண்ணிக்கை ரீதியான பலவீனம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலை, என்னதான் செய்ய முடியும்? ஒரே வாய்ப்பு நீதிமன்றம்தான். நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. “கே.பி பார்க் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புப் பகுதியை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்காலிகக் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை ஆய்வு செய்து அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென” நீதிமன்றம் மே 21 ஆம் தேதி உத்தரவிட்டது.
நாட்கள் உருண்டோட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகமாக இருக்கும் பகுதியாக இப்பகுதி மாறிய பின்பும் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல், தகரக் கொட்டகையில் வசிக்கும் சுமார் 200 குடும்பத்தைக்கூட அவர்களுக்காகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் அமர்த்துவதற்கு அரசின் எந்தத் துறையும் அக்கறை காட்டவில்லை.
எல்லா வாய்ப்புகளும் மூடப்பட்ட நிலையில் கேபி பார்க் பகுதியில் உள்ள அனைத்து, ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட, அரசியல் கட்சிகளும் இணைந்து ஜுன் 12 போராட்டம் நடத்த திட்டமிட்டனர். அதற்கு முன் தினம் காவல்துறை அழைத்துப் பேசியது. “உங்களுக்காகத்தானே அரசாங்கம் இவ்வளவும் பண்றாங்க? ஊரடங்கு காலத்தில் போராடலாமா? கொஞ்சம் பொறுங்க. குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரியைச் சந்திக்க அனுமதி வாங்கித் தருகிறோம்.”
கொரானா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை, குடிசை மாற்று வாரியம், சென்னை மாநகராட்சி ஆகிய மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதுபோலத் தெரியவில்லை. உண்மையிலேயே ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால் கொரோனா பரவல் உச்சத்திலிருக்கும் பகுதியில் வீடு இல்லாமல் பேருந்து நிலையத்தில் பாலம்மாள் படுத்துக் கிடக்க மாட்டார். கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து ஒருவர் ஜன்னல் வழியே தும்மினால் அவரின் எச்சில் துளிகள் படும் அளவிற்கு கீழே தகரக் கொட்டகையில் மக்கள் வசிக்கும் அடர்த்தியான இடத்தில் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுமதி அளித்திருக்கமாட்டார்கள்.
அதிகாரிகளைச் சந்திப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும்போது மனு கொடுப்பதற்காக மக்களிடம் கையெழுத்து வாங்கியபோது, தனது முந்தானையை முகக் கவசமாக மாற்றியிருந்த அக்கா சொன்னார், “தோழரே பாத்தீங்களா…கொரோனால வந்த வேலைய. இந்த பிளாக்லதான் இப்ப பெருக்குற வேலை. நான் குடியிருக்க வேண்டிய வீட்டிலேயே இப்போ பெருக்கிற வேலை. இதெல்லாம் எப்போதான் மாறுமோ… மறக்காம போராட்டத் தேதிய மட்டும் முன்னாடியே சொல்லிடுங்க. அதிகாரிங்களை நாலு வார்த்தை கேட்கணும். எல்லாத்துக்கும் நாங்கதான் கஷ்டப்படனுமா..?”
Wonderful blog! Do you have any recommendations for aspiring writers?
I’m hoping to start my own site soon but I’m a little lost on everything.
Would you recommend starting with a free platform like WordPress or go for a paid option? There are
so many options out there that I’m completely confused ..
Any suggestions? Thanks a lot!