இணைய இதழ் 117தொடர்கள்

நான் – ஒரு போஹேமியன் பயணி;5 – காயத்ரி சுவாமிநாதன்

தொடர் | வாசகசாலை

மண் மேல் ஒரு பாதம்

புன்னகைக்கு வண்ணம் கொடு
பூக்கள் பூமியில் மலரட்டும்!
பட்டாம்பூச்சிகளைப் பறக்க விடு
பாசமாய் அன்பு மொழி தவழட்டும்!
இயற்கையை மனிதனும் படைக்கலாம்
அவன் இதயத்தைப் பரந்து விரிந்து வைக்கலாம்!
இன்று விடியல் என்பது
இன்பம் தரவே வந்தது!
இதோ காலை கதிரவன்
இனிய தமிழ் பேசுது

எனது‌ அம்மா அப்பா என ஒருவரும் இல்லாமல் எப்போதும் போல ஒரு தேசாந்திரிப் பயணம். இந்தப் பயணத்தில் விவசாயம் பற்றிய என் அனுபவங்களைப் பகிர்கிறேன். இந்தியா விவசாயிகள் நிறைந்த கிராமங்கள் கொண்ட நாடு.

அது ஒரு அழகிய கிராமம். மாலை நேரத்தில் நான் சாலையோரமாகப் பயணித்தபோது, பெரிய பச்சை நிலங்கள் எனக்கு ஒரு பரிசாகத் தோன்றின. என்றாலும், இந்த நிலம் எனது வாழ்க்கையில் நான் பார்க்கும் முதல் விவசாய நிலம் போலத் தோன்றியது. மாலைச் சூரியன் மெதுவாக மறைந்து கொண்டிருந்த வேளையில், சாலை ஓரமாக பயணித்துக் கொண்டிருந்தேன். என் காலடிகள் மெதுவாக நிலத்தைத் தீண்டிச் சென்றபோது, எதிரே விரிந்தது பசுமைச் சாலையில் ஒரு அதிசயக் காட்சிப் பொழிவாக. அது ஒரு படர்ந்த பச்சை போர்வையைப் போலப் பரவி என் மனதையே விழுங்கிவிட்டது.

இப்படியொரு இயற்கை அமைதியையும், பசுமையின் புனிதத்தையும் பார்த்தபோது மனது மிகவும் லேசானது. அந்த ஒளிமிகு வெளியில், ஒரு மரத்தின் நிழலில் என் பையை வைத்து அமர்ந்தேன். பார்வை நிலத்தையே தொட்டது. மனம் அமைதி கண்டது. சில நிமிடங்களில், அந்த நிலத்திலிருந்து ஒருவர் நடந்து வந்ததைக் கவனித்தேன். அருகில் வந்தபோது, அவர் மட்டும் அல்ல, அவரது மனைவியும் அவருடன் இருந்தார். அவர்கள் இருவர் முகத்திலும் அன்பும், பசுமையான புன்னகையும் நிறைந்திருந்தன. (பார்வையில் மென்மையும், வார்த்தைகளில் அன்பும்) “யார் மா நீங்க? பேரென்ன? எந்த ஊரு? சிரிச்ச முகமா இருக்கிறீங்க, தனியா வந்துருக்கீங்களா?” என்றனர். நான் சிரித்தவாறு பதிலளித்தேன். “நான் ஒரு ஊர்ச்சுற்றி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே என் உணர்வு” என்று கூறி, “எனது பெயரா? நீங்களே எனக்கு ஒரு பெயர் வையுங்கள்” என்றேன். அவர்கள் மௌனமாய்ப் பார்த்து நின்றனர். பின்பு ஒரு மென்மையான சிரிப்போடு, ”உங்களுக்கு  பூ என்றே பெயர் வைக்கலாம், சிரிப்பு உங்கள் முகத்தில் பூ போல மலர்கிறது” என்றார்கள்.‌

பிறகு, ”எங்க தங்கியிருக்கீங்க?  இல்ல, இன்னும் இடம் தேடுறீங்களா?“ என்றனர். ”இன்னும் முடிவு செய்யவில்லை” என்றேன். அப்போது, அவர்கள், எங்க இடத்திலேயே தங்கிக்கோங்க” என்று அழைத்தனர். அந்த அழைப்பில் வலியற்ற உந்துதல் இருந்தது.

அவர்கள் என்னை அழைத்துச் சென்றபோது,

நிலத்தின் உள்ளே நுழைந்து, அதன் ஒவ்வொரு மூலையையும் எனக்கு காண்பித்தனர். அந்தப் பசுமை நிலம் எனக்குள் ஒரு நிம்மதியை விதைத்தது. அது ஒரு நிலம் மட்டும் அல்ல, ஒரு இல்லமாகவும், ஒரு இரக்கம் நிரம்பிய வரவேற்பாகவும் உருவெடுத்தது. எனது தாத்தாக்கள் ஞானசம்பந்தன், மகராஜன் இருவரும் ஆசிரியராக இருந்தாலும் அவர்கள் ஒரு பக்கம் விவசாயம் செய்ததும் எனக்கு நினைவில் வந்தது. நிலத்தைப் பற்றி எப்போதுமே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவள் நான். விவசாயமும், விவசாயிகளும் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை.

பொழுது விடிந்தது. நிலத்தில், “செந்தூரப்பூவே செந்தூரப்பூவே” என சத்தமாக மனதார பாட்டுப் பாடினேன். அந்த நிலத்தில் வேலை பார்க்கும் ஆட்களோடு நானும் சேர்ந்து விட்டேன். பிறகு எனது கருத்தை அவரிடம் முன்வைத்தேன். ”களத்தில் இறங்கி நான் எடுத்த முதல் முடிவு ரசாயன உரத்தை நிறுத்துவது. மாட்டுச் சாணத்தை முதன்மைப்படுத்தி விவசாயம் செய்வது என்பதே” என்று. பிறகு நான் சொன்ன கருத்திற்கு அவர் உடன்படவில்லை. ”இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை பாப்பா“ என்று சொன்னார். ”செடிகள் தாமதமாகப் பலன் தந்தாலும் பரவாயில்லை, ஆனால், நாம் சாணம்தானே போட்டு வளர்க்கப் போகிறோம்” என்றேன். பிறகு, என்னையே கூர்ந்து பார்த்தார். ”சரி பாப்பா, நான் ஒருவரிடம் சொல்கிறேன் எனக் கூறி புதிதாக மாடுகளை அவர் நிலத்தின் அருகே வளர்க்க அனுமதித்தார். பிறகு, தனக்கு இது நிச்சயமாக உபயோகமாக இருக்கும் என்று சொன்னார். முதலில், நிலத்தைப் பக்குவப்படுத்தி என்னை நாற்று நடவும் செய்ய வைத்தார்கள். ஒவ்வொரு நாளும் சரியாக கவனித்து வரச் சொன்னார்கள். களை எடுத்தல், களைக்கொல்லிகளைத் தெளித்தல், செடிகளுக்கு நீர்ப் பாசனம் செய்தல், எலித் தொல்லையில் இருந்து பாதுகாத்தல் எனக் கடைசியாகப் பயிர் உற்பத்தி முடியும் வரை இருந்தேன்.

கதிர்களிலிருந்து, விதைகளைப் பிரித்தெடுத்து அளவீடு செய்து எவ்வளவு வந்துள்ளது என்பது பற்றியும் எனக்குள் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஒரு விவசாயியின் கஷ்டத்தை முழுவதுமாக உணர்ந்தேன். வயலில் உள்ள களைகளை எடுப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிட்டது. எனக்கு இந்த விவசாயம் செய்யும் இந்த மனிதனைப்  பார்க்கும்போது எனது தாத்தாக்களைப் பார்த்த மாதிரியும் உணர்வு ஏற்பட்டது. ஏனென்றால், அவர்கள் இருவருமே எந்த நேரமும் மாடு, பயிர், நிலம் என்று மட்டுமே வாழ்ந்தார்கள். “மண்ணில் என்னென்ன சத்துகள் இருக்கும் என்பதை நாம் முதலில் அறிந்திருக்க வேண்டும்” எனக் கூறினார் இந்த தாத்தா. நைட்ரஜன்,பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீஷீயம் இவை மண்ணில் இருக்கும். இவைதான் தாவரங்களுக்குத் தேவைப்படும். ஒரு தாவரம் வளர்கிற சமயத்தில் தண்டுகளுக்கும், இலைகளுக்கும் நைட்ரஜன் சத்து தேவைப்படும். அதே தாவரம் பூ பூக்கின்ற  சமயத்தில் பாஸ்பேட் சத்து தேவைப்படும். அதே பூ காய்த்ததும் பழமாகத் திரட்சியடைய பொட்டாஷ் சத்து தேவைப்படும். இந்த சத்துகளை இயற்கையாகக் கொடுக்க முடியும் எனில் நாமும் இயற்கை விவசாயிதான். விவசாயிகளின் வாழ்வியலையும், விவசாயம்  எப்படி ஒரு விவசாயி வாழ்வில் கலந்திருக்கும் என்பதையும் மிக அழுத்தமாக மற்றும் ஒரு நிஜ விவசாய ஊரில் வாழும் மனிதர்களோடு வாழ்ந்த இந்த அழகிய நாட்கள் எனது தேசாந்திரிப் பயணத்தில் மறக்க முடியாத ஒன்று. மாலை நேரத்தில் கிராமம் முழுக்க சுற்றித் திரிந்து பாட்டுப் பாடிக் கொண்டாடினேன். (“போவோமா ஊர்கோலம்” “ கடவுள் என்னும் முதலாளி”… )

அங்கே நிலத்தில் ஒரு அழகான மயில் ஒன்று வரும். அதனிடம் எப்போதும் நான் பாடுகின்ற பாட்டு,  “மயில் போல பொண்ணு ஒன்னு”. அன்று நான் பாட, அந்த மயில் தோகை விரித்து ஆட, அந்த கிராமம், அந்த நிலம், அந்தப் பசுமை…. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று. அந்த மயிலின் தோகையசைவில் இருந்த ராகம், அந்த மண்ணின் நறுமணத்தில் இருந்த வாழ்க்கையின் பாடம்.

அந்த விவசாய நிலம் என் காலடிச் சுவடுகளை மட்டுமல்ல, என் மனதையும் சீராகப் புதையச் செய்தது. மண் வாசனையோடு மாறிய என் எண்ணங்கள், விவசாயியின்  கஷ்டத்தில் கண்ட என் தாத்தாக்களின் முகம், அந்த மயிலின் தோகை ஆட்டத்தில் நானே ஒரு கனவாகவே நின்றேன். நான் பார்த்த அந்த நிலம் இன்னும் என் உள்ளத்தில் அப்படியே உறைந்திருக்கிறது. இனி என் பயணங்கள் எல்லாம் ஒரு விதையில் தொடங்கும், ஒரு அறுபடையோடு முடியும். மொத்தத்தில் அந்த மண் என்னை அழைத்தது. அந்தப் பசுமை என்னைத் தழுவியது. விவசாயியின் விடியலோடு, வியர்வையோடு கலந்ததை என் உள்ளத்தில் நானே விதைத்தேன். பசுமைப் போர்வையில் நான் கிடந்த அந்த நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிஜக் கவிதை. எப்போதும் எனக்குள் பயணம் செய்யும் ஒரு சிறிய பசுமை வயல் இருக்கிறது. அதுவே எனது  உணர்வுகளின் உழவுப் புலம்.  மண்ணை நம்பி வாழ்ந்த என் தாத்தாக்களின் நிழலும், உழைப்பும், பசுமையைக் கட்டி வைத்ததும் இன்னும் என் நடை வழியில் ஒலிக்கிறது.

நான் ஒரு தேசாந்திரி. ஆனால் அந்த நாள் முதல், நான் ஒரு மண் வாசனையுடன் சிந்திக்கத் தெரிந்தவள்.

அந்த கிராமத்தில் என் காலடி பதிக்கப்பட்ட அதே தருணத்தில் ஒரு மாறாத அமைதி என் உள்ளத்தில் முளைத்தது. கிராமத்து மழை சிந்தும் மண்வாசனை, நிலத்தில் நழுவும் ஒரு மேகம் போல, என் உள்ளத்தில் விழுந்தது. வானத்தில் ஒளிரும் பூமி மாதிரி தெரிந்தது அந்த விவசாய நிலம். அங்கே நின்றது என் பாதங்கள் மட்டுமல்ல, என் முழு  உலகமும் மண்ணில் கலந்து போன மாதிரி ஒரு நெருக்கம். விவசாயம் ஒரு தொழில் இல்லை.  வாழ்வதற்கான ஒரு வழி.

நான் கற்றுக் கொண்ட முதல் பாடம் பயிர் வளர்ப்பது, பசுமையோடு மட்டுமல்ல, பொறுமையோடும் ஒவ்வொரு விதையையும் கைப்பிடியில் பிடிக்கும்போது அந்த விதையில் ஒரு சின்ன உயிர் இருக்கிறது என உணர்ந்தேன். அது முளைக்கும் வரை காத்திருப்பதும், களைகளை அகற்றும் வேளைகளும் (All Part of Life). நிலம் எனக்கு கற்றுத் தந்தது. சில நாட்களில் கதிர்கள் வெளிக்காடாமல் போனாலும், அடுத்த நாள் சூரியன் வந்து விழுந்தபோது தான் தெரிந்தது நம் உழைப்பை நிலம் மறக்காது. அது நம்மை மீண்டும் ஏற்கும். அந்த கிராமத்து விவசாய மனிதர் சொன்னதெல்லாம் என் மனதுக்குள் ஊறிக் கிடக்குது. ”மண்ணோடு பேச வேண்டும் பாப்பா, இல்லை என்றால் பயிர் வளராது பாப்பா “என்றார். அந்த வார்த்தை எனது வாழ்நாளுக்கே நெஞ்சில் எழுத்தாக  பதிக்கப்பட்டது.தாவரங்கள் வளர்வதை விட, என் மனது தான் முதலில் வளர்ந்தது. தினமும் மாடுகளோடு இருக்கும் அனுபவம், அவர்கள் கண்களில் தெரிந்த அமைதி என ஒவ்வொரு நாளும் நான் என் வலியை மறந்து அந்த நிலத்தில் இருப்பதிலேயே ஒரு வகை ஆனந்தம் இருந்தது.

“மண்ணோடு பழகினால்தான் நமக்குள் இருக்கும் உண்மையான தன்மை வெளிவரும்” என்பதான ஒரு உணர்வு. மாடுகளும் எனக்கு மிகவும் நெருக்கமாகின. அந்த மாடுகளின் கண்களில் ஒரு விதமான அமைதியும், ஏதோ சொல்லிக் கொண்டிருக்கும் பார்வையும் இருந்தது. அவர்கள் மேல் கையெடுத்துத் தேய்த்தப் பிறகுதான் தெரிந்தது, வாழ்க்கையை தாங்கிக் கொள்வதற்கு பொறுமை எவ்வளவு மென்மையானதும் என்று.

ஒரு மாடு எனக்கு சொன்னது போல இருந்தது, “நீ அவசரப்படாதே, எல்லாம் நேரம். ஆனால் நடக்கும்” என நிலத்தின் மீது நம்பிக்கை வைத்தேன்.  முன்பு ஒரு பயிர் வளர்கின்ற இடம் மாதிரி மட்டுமே நினைத்த அந்த நிலம்,  நம் சுவாசங்களோடுப் பழகி ஆரம்பித்த பிறகு, அது ஒரு உறவாகவே மாறியது. ஒருநாளும் அதே மாதிரி இருக்காது அந்த நிலம். எனக்கு கற்றுக் கொடுத்தது தினமும் நாம் புதிதாகப் பிறக்க வேண்டும். என் பாட்டி சரோஜா சொன்ன ஒரு பழமொழி நினைவிற்கு வந்தது. “விவசாயம் சாப்பாடு தரும் சரி, ஆனால், நிச்சயமாக மனதிற்கு சாந்தி தரும்” அந்த கிராம வாழ்வில், சில்லறைப் பேச்சுகளிலேயே பெரிய வாழ்க்கைப் பாடங்கள் இருந்தன.

“மழை வந்தால் விழுந்துவிட்டு சிரிக்கிற குழந்தைகள், பசுமை மேல் குடை பிடிக்கின்ற அம்மாக்கள்… என எல்லாம் எனக்கு ஒரு புது சினிமா போல” தோல் கரைந்தாலும், உள்ளம் ஒளிர்ந்தது. சூரியனின் தீவிரம் நிலத்தின் வெப்பம், களைகளை வெட்டும் காயங்கள் – இவை எல்லாம் எனக்கு வலி இல்லை, வெற்றி போலவே இருந்தது. அப்படி பழக்கப்பட்ட என் மனம், இனிமேல் எதை  சந்தித்தாலும் மண் வாசனையோடே பதிலளிக்கும். அந்த நிலத்தில் காலடி வைத்து உணர்ந்தது. நான் மண்ணைப் பார்த்து பேசின நேரம் அது. ”நாங்கள் மனிதர்கள், பசுமை தேடுகிறோம்”.

ஆனால், அந்த மண்ணே என்னைப் போல ஒரு உள்ளத்தோடு என்னைத் தேடிக் கொண்டிருந்தது போல இருந்தது. கால்கள் சளைக்கும்போது கூட, உள்ளம் கொஞ்சம் கூட சோரவில்லை.

“மழை என் தோலை நனைத்தது மட்டுமல்ல, என் உள்ளத்தையும் தொட்டது”. ஒருமுறை, பசுமையான வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மழை வந்தது. எல்லோரும் ஓடினார்கள். ஆனால், நான் மட்டும் நிலத்தோடு சேர்ந்து நனைந்தேன். “ஒவ்வொரு துளியும் என்னை மெல்ல சுத்தம் செய்தது போல” என் பயணத்திற்கு ஒரு புதிய ஆரம்பம் கொடுத்தது. மனதைத் தொட்ட உரையாடல்…ஒரு வள்ளல் வித்தைகாரம்மா வந்து என்னைப் பார்த்து, ”பசுமை பார்த்தால் போதும்…பசியே போயிடும்” என்றுக் கூறினார். அந்த வார்த்தைகள் எனக்கு ஒரு வித்தியாசமான உணர்வு. “பசுமை என்பது உணவுக்காக மட்டுமல்ல, உயிர் வாழ்வதற்காகவே”.

ஒரு மரத்தைத் தழுவினேன்… அது ஒரு பழைய ஆலமரம், அடியில் அமர்ந்தவுடனே, அந்த மரம் என்னை ஒரு பழைய கதை மாதிரி வாசிக்க ஆரம்பித்ததுப் போல இருந்தது. பல தலைமுறை மனிதர்களையும் பார்த்து தாங்கிய மரமாம் அது. எனது பயணத்தையும், மனச் சுமைகளையும் மெதுவாக வாங்கியது.

“முகங்கள் எல்லாம் ஒரே மாதிரி…

மனச் சிரிப்பு மட்டும் வேறு”

விவசாய கிராமத்தில் காணும் முகங்கள், வெயிலால் கரைந்த தோல், வியர்வை நனைந்த உடைகள்…ஆனால், அந்தச் சிரிப்பு, அது ஒரு தனிச்சிறப்பு.

  “பணமில்லை என்றாலும்,

      பெருமை இருக்கிறது

      அந்தக் கண்களில்”

நாளொன்றுக்குத் தேவைப்படும் உணவின் பின்னால் இருக்கும் உழைப்பு என்னும் உண்மையைப் புரிந்துகொள்ள இந்த தேசாந்திரிப் பயணம் எனக்கு ஒரு, ’Turning Point’. இனி அந்த நிலத்தின் பக்கத்திலோ அல்லது இந்த நினைவுகளின் நடுவிலோ, நான் எப்போதும் இருப்பேன்.

gayathriswaminathan132@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button