
பரிசுத்தம்
நான் கைகளை கழுவிக்கொண்டேயிருக்கிறேன்
அதிகபட்சம் இரண்டுமணி நேரமாக கைகளை கழுவிக்கொண்டிருக்கிறேன்
நாளுக்கு பத்துப்பதினைந்து முறை கழுவுகிறேன்
இதுவொரு நோய்
சுத்தப்படுத்துதலில் இருக்கும் அதீதம்
எனை அந்தரங்கமாய் ஆசுவாசப்படுத்துகிறது
முகத்தில் தொடங்கி என் மர்ம உறுப்புவரை
இப்படி தண்ணீரில் நனைப்பது விசேஷமாய் பிடித்திருக்கிறது
கொஞ்சம் பைத்தியக்காரத்தனத்தை
மிகைப்படுத்தி உங்களுக்கது காட்டக்கூடும்
இதுயென் மனநிலை
ஒரு துயரத்திலிருந்து மீட்டெடுக்கும் மூளை செய்யும் தந்திரம்
இவ்விநோத செயலுக்கு இன்னும் சில இரகசியக் காரணங்கள் இருக்கிறது
அது உங்களுக்கு மகா ஆச்சர்யத்தை ஏற்படுத்தக்கூடும்
மரணத்தின் வாசனை
காமத்தின் வாசனை
தனிமையின் வாசனை
நோய்மையின் வாசனை
பிறழ்வின் வாசனையென
இவை உங்கள் ஆழ்கவனம் உணர்த்துமெனில்
நான் நகம்வெட்டிக்கொண்டிருப்பதையும்
நான் என் ஷூவை அடுக்களைத்துணி கொண்டு
துடைத்துக்கொண்டிருப்பதையும்
என் கழிவறையில் பின்னிக்கிடக்கும் சிலந்தி வலையை அகற்றி
வெளியேயிருக்கும் முருங்கை மரத்தில்
பத்திரமாய் வைப்பதையும் நீங்கள் பரிகசிக்க மாட்டீர்கள்.
எனக்குத் தெரியும் நீங்கள் நிச்சயம் என் தூய்மை பற்றிய
பலவீனமான அறிவை கேலிக்குள்ளாக்குவீர்கள்
சரி போகட்டும்
இப்போழ்தும் உங்கள் மனக்கண்கள்
என்னை அசுத்தப்படுத்திக்கொண்டிருப்பதையும்
நான் கைகளை கழுவிக்கொண்டிருப்பதையும்
இந்த அறை கவனித்துக்கொண்டுதானிருக்கிறது
**********
இருவேறு நான்
வெகுநேரமாக அவனை எழுப்பிக்கொண்டிருக்கிறேன்
எந்த அசைவுமற்று அவனுடல் கிடக்கிறது
இந்த அறைக்குள் மிகநீளமான சன்னல் இருந்தும் இருளை பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை
நான்கு சுவர்களிலிருந்து
அங்கங்கே தொங்கிக் கொண்டிருக்கிற
அத்தனை ஓவியங்களும்
எல்லாம்வல்ல துயரவண்ணங்களை
மெழுகி வழியச் செய்கின்றன
மிருதாய் வழிகிற சிம்பொனி இசைக்கு நடுவேதான் அவன் சலனமற்று கிடக்கிறான்
ஏதோவொர் ஒழுங்கு கலைகிறது
என்னை உலுக்கிக்கொண்டிருப்பவனை பார்க்கிறேன் ஏறக்குறை என் உடலுக்கான ஆன்மா அவனுக்கு
என் கனவுக்குள் எல்லா பாத்திரங்களும்
சுயபிரக்ஞையோடிருக்கிறது
என் உடலிலிருந்து வெளியேறிய கணத்தில் அசலாயிருக்கிறேன்
மிகமெதுவாய் இயங்கும் பிரதியுலகில்
சன்னதிர்வுகள் எல்லாவற்றையும்
அதிதீவிரமாய் உணரக் கூட்டுகின்றன
அவன் என்னை எழுப்பிக்கொண்டிருக்கிறான்
கட்டில்கால்கள் நகர்கின்றன
அல்லது நடுங்குகின்றன
வெளிச்சப்புள்ளி சுழிய டிகிரி கோணத்திலிருந்து
ஊடுறுவி துல்லியவிரும்பி
அடுத்து எத்திவர
என்னுடலை எழுப்பிக்கொண்டிருக்கிறான்
பிரம்மத்தைத் தாண்டி அசைக்கிற காலத்தை நீந்திப்பிடிக்கிற மீனொன்றின் வாய்க்குள்ளேகி
தொண்டைக்குள் நடுக்கத்தின் செஞ்சூடு
கதகதப்பின் விளிம்பில் பூனைநாவை
நீட்டித் தடவி சுவைக்கிறது அங்கோர் அசரீரி
அதற்குள் கனவுக்குள்ளேயே
வந்திறங்கிவிட்டது அவன் உலுக்கிய கை
இப்போது இரண்டுக்கும் மத்திக்கு
ஒற்றை ஆன்மாவை வாலாட்டியபடி நிறுத்த
அவனுடலின் ஒருபாதி கரையத்துவங்கியிருந்தேன்.
**********
மஞ்சள்
என்னை அனுமதித்திருந்த மனநலக் காப்பகத்தில்
கடிகார முட்கள் காலத்தின் சப்தத்தை டிக் டிக் டிக்கென
நகர்த்திக் கொண்டிருக்கின்றன
தனித்த அறைக்குள் எனை அழைத்துக்கொண்டு போனவர்கள்
அப்புறம் எங்கோ போனார்கள்
திறந்த சன்னலிருந்த பக்கத்தில் போய் நிற்கிறேன்
துருவேறிய கம்பிகளுக்கிடையில்
மஞ்சள் துயரொளி நோயெனப் பரவி
அறையெங்கும் கசிந்தபடி இறங்கிக் கொண்டிருந்தன
என் மேலும் மஞ்சள் பொன்நிறத்தில் மினுங்கி சரிகின்றன
மதியத்திற்குப் பிறகான வெளிச்சம்
அவ்வளவாக பிடிக்கவில்லையெனக்கு
மூளைக்குள் முளைத்து நிற்கும்
குரல்களின் ஆக்ராந்த சப்தம்
ஆடைகிழித்து தலைபிய்த்து யாரும் காணதேசத்தில்
நிர்வாணமாய் ஓடும்படி அழுந்தித் தள்ளுகின்றன
மண்டைக்குள் காகம் கரைகிறது
தூரத்தில் எல்லாம் மனக்கசப்பை
உண்டுப் பண்ணுகின்றன
என் அசைவிற்கு தகுந்தாற்போல்
ஏறியிறங்கும் வெளிச்சத்திற்கும்
என்னை நெடுநீளமாய் நிழலாக்கி
அதன் போக்கில் சௌகர்யமாய்
கவிழ்ந்துபோகும் துயரொளிக்கும்
இருளைமூடி மறைக்க விரும்பினேன்
சட்டென சன்னலை தாழிட்டடைக்கிறேன்
பின்பு எங்கும் இருள் எல்லாமும் இருள்
கர்பப்பை இருள் போல் இருண்டிருக்கின்றன
என் மனம் சற்றுநேரம் ஆழப்பிறழுக்கு முன்பான
தனிமைக்கு தயார்படுத்த வேண்டுகிறது
கஞ்சாவைப் புகைக்கிறேன்
புகை மண்டைக்குள் போய் உயிரை
அணைக்கும்படி ஆணையிடுகிறது
சாம்பல் தட்டிவிட்டு விட்டம் நோக்குகிறேன்
மரணபயம் சாவுத்துணிச்சல் ஏதுமற்று
போதை பித்தனை
ஒற்றை கவனத்திற்குள் குவியமைக்கிறது
ஒரு தற்கொலையை தள்ளிப்போடுவதென்பது
எத்தகைய ஆசுவாசம்
முற்றிலும் மடத்தனம் மகாமடத்தனம்
ஆழ்குரலின் பலவீனத் தளுவல் எல்லாம்போலவும் மேய்கின்றன
சுய அழிவை தேர்ந்தெடுக்கும் உரிமையற்ற சுதந்திரத்தை வைத்துகொண்டு பூமியின் நிலத்தில் என்ன செய்வது
இந்த உடல் வாழும் காலத்தில் சுமந்துகொண்டு
பசிக்காக அலைவதைவிட அழிந்து போதல் ஆகச் சிறந்ததுதானே
இழப்பதொன்றும் எனக்கு புதியதில்லை
அதரப்பழசு
தூசுகட்டிய ஆன்மாதானே
உலகில் வெறுத்தொதுக்கப்பட்ட எல்லாவற்றிலும் பிரதானம்
மனநலம் காப்பகச்சுவர்கள் முழுக்க
யார் யாருடையதோ மனக்குமுறல்களின்
நகக்கீறல்களுக்கிடையில்
என் ஐவிரல்களின் நகங்கள் இரத்தம் பீறிட கீறுகின்றன
என்னுள்ளிருந்த குழம்பிய இரத்தச்சொற்களின் மீதெல்லாம்
ஈக்களும் எறும்புகளும் அப்போதைய பசிக்கு
உண்டு களித்து பெருக்கின்றன
நோய்மையின் தரவுகளில் சிச்சிறு உயிரிகளின் நாவுகள்
உயிர்மையை சுகித்துக் கிடந்ததை தாண்டி
உடலை மட்டும் அறைக்குள் தொங்கவிட்டு வெளியேறினேன்
ஏதோவொரு பெண்
உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்
எனச்சொல்லி எனைப் பிடித்து இழுத்துக்கொண்டுப்போகிறாள்
பின் உலக கழிதலில்
எத்தனையோ பேர்களில் நானும் ஒருவனாய்
எப்போதோ மரித்துப்போன அவளுடன்
பயணப்படத் தொடங்கியிருந்தேன்.
**********
நல்லால்ல பைத்தியம் புடிக்கிறமாதிரி இருக்கு
முதல் கவிதை நல்லாருந்துச்சி