நேர்காணல்கள்

சாதி ஒழிப்பை தலித்துகள்தான் முன்னெடுக்கவேண்டுமா?

நேர்காணல்:- ஆனந்த் டெல்டும்டே

2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மைய நீரோட்ட இதழ் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது. ஆனந்த் டெல்டும்டே இந்திய அளவில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தலித்துகளுக்கும் எங்கு தீங்கு இழைக்கப்பட்டாலும் அங்கே இவரின் காலடித் தடம் பதிந்து விடும். உண்மைகளை உலகுக்குச் சொல்லி, மக்களிடையேயும், அறிவுத்தளத்திலும் விழிப்புணர்வு ஏற்படக் காரணமாய் இருப்பவர். இவருடைய ‘ஏகாதிபத்தியமும் சாதி ஒழிப்பும்’, ‘அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்‘. ‘அம்பேகரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்’ போன்ற இவருடைய நூல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புபவை. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஆனந்த் டெல்டும்டே அம்பேத்கரின் பேத்தி இவரது மனைவி. தற்போது காரக்பூர் ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் ஆனந்த் டெல்டும்டே உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார். மஹாராஷ்டிராவில் உள்ள ரஜூர் என்கிற கிராமம்தான் என் சொந்த ஊர். விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதால் ‘தற்கொலைகளின் இந்தியத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் கிராமமாக இருக்கிறது. காலனியாதிக்கக் காலத்தில் இருந்தே எங்கள் கிராமத்தில் நிலக்கரிச் சுரங்கங்களும், லைம் தொழிற்சாலைகளும் இருக்கின்றன.

தாதுப் பொருட்களை அனுப்புவதற்காகவே ஒரு ரயில் நிலையம் இருக்கிறது. இதனாலேயே சட்டிஸ்கர், தெலுங்கானா போன்ற பகுதிகளில் இருந்தும், அருகில் உள்ள ஊர்களில் இருந்தும் தொழில்நிமித்தம் இடம் பெயர்ந்து வந்து வாழ்பவர்கள் அதிகம். எங்கள் மாவட்டமே ஒரு வறண்ட பகுதி. அதனால் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட சாதிகளுக்கு, குறிப்பாக குனாபிக்களுக்கு வாழ்க்கை சிரமமானது. லைம் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் நிலமற்ற தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வாரக்கூலியின் அளவுக்குக் கூட விவசாயிகளுக்கு வருமானம் கிடையாது. நீண்ட வேலைநிறுத்தம் காரணமாக நான் பிறந்த சமயத்தில், நிலக்கரிச் சுரங்கம் மூடப்பட்டது.

எங்கள் குடும்பம் இருந்த இடத்துக்குப் பழைய கிராமம் என்று பெயர். நிலக்கரிச் சுரங்கத்துக்கும், ரயில்நிலையத்துக்கும் அருகில் உள்ள புதிய கிராமத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அங்கே இருந்த தலித்துகள் பெரும்பாலும் சிறிய அளவில் நிலங்களை வைத்திருந்தார்கள் என் பெற்றோர்கள் அறுவடை சமயத்தில் விவசாயக் கூலிகளாகவும், மற்ற நேரங்களில் லைம் தொழிற்சாலையிலும் வேலை செய்துவந்தார்கள். அதனால் எங்களுக்குச் சொந்தமாக நிலம் இல்லை. நாங்கள் எட்டுப் பேர் பிள்ளைகள். ஐந்து பையன்கள், மூன்று பெண்கள். நான் தான் மூத்தவன். எங்கள் பகுதி கூலித் தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதி. நாக்பூருக்கும், சந்திரப்பூருக்கும் அடுத்து, மூன்றாவதாக பெரியளவில் எங்கள் கிராமத்தில் தான், அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு, பெரியளவில் மக்கள் பௌத்த மதத்தைத் தழுவினர்.

அம்பேத்கர் இயக்கம் நன்றாக காலூன்றி வளர்ந்திருந்ததும் இதற்கொரு காரணம். தலித் குழந்தைகளின் கல்வி குறித்தான அக்கறையே அங்கே அம்பேத்கர் இயக்கம் காலூன்றிப் பரவ காரணமாய் இருந்தது. நான் எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். எங்கள் தாலுகாவில் என் படிப்பு காரணமாகவே நான் பேர் வாங்கினேன். அந்தக் காலத்தில் 4ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்புக்கான தேர்வுகள் பகுதி அளவில் நடக்கும். இதில் கிராமங்களுக்கிடையே போட்டி இருக்கும். நான் நூறு சதவீத மதிப்பெண்களோடு எப்போதும் முதலிடத்தில் இருப்பேன். நான் எங்கள் கிராமத்திற்கும், குடும்பத்திற்கும் பெருமையும் மரியாதையும் சேர்ப்பவனாக இருந்தேன். அதனால் எந்தவிதமான வேறுபாட்டையும் நான் உணர்ந்ததாக எனக்கு நினைவில்லை. ஒன்றே ஒன்றைத் தவிர.. நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று உணர்ந்தவர்களாய் எங்கள் கிராமத்திலேயே தலித் மக்கள் வாழும் பகுதியிலேயே தான் வசித்து வந்தோம். வேறு இடங்களுக்குச் செல்ல எங்களுக்கு உரிமை கிடையாது.

வறுமையின் பிடியில் இருந்ததால் எங்களுக்கு சொத்து எதுவும் இல்லை. ஏன் அவர்களுக்கு மட்டும் பெரிய பெரிய வீடுகள் இருக்கின்றன? ஏன் நம் வீட்டில் மட்டும் ஆடுகள் இல்லை என்றெல்லாம் நினைத்து கவலைப்படுவேன். அப்போது இதெல்லாம் எனக்குப் பெரிய விஷயங்களாகத் தெரிந்தன. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, ஏதோ ஒரு போட்டியில் வென்றதற்காக எனக்கு ஒரு நூல் பரிசாகக் கிடைத்தது. என் மூளையைச் சுற்றிக் கொண்டிருந்த அத்தனை கேள்விகளுக்கும் அந்த நூலில் விடை இருப்பதாக உணர்ந்தேன். அந்த நூல் ஜோசப் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு. மராத்தி மொழியில் கிடைத்தவற்றையெல்லாம் படித்து என்னுடைய ஏழாவது வயதிலேயே நான் ஏறத்தாழ ஒரு கம்யூனிஸ்ட் ஆனேன். அம்பேத்கர் அப்போது நான் செவிவழி கேள்விப்பட்டவராகவே இருந்தார். அம்பேத்கரின் குழந்தைப் பருவம் குறித்து பாடப்புத்தகத்தில் ஒரு பாடத்தில் படித்ததோடு சரி! மெட்ரிகுலேஷன் படித்துவிட்டு நான் நாக்பூர் வந்தபின்னர், பல்கலைக்கழக நூலகத்தில் நாட்கணக்கில் உட்கார்ந்திருப்பேன்.

அப்போதுதான் அம்பேத்கர் குறித்து அறிந்து கொண்டேன்.

கேள்வி: தலித் அரசியலுக்குள் எப்படி நுழைந்தீர்கள்?

பதில்: தலித்‘ என்ற உணர்வும் அரசியலும் நான் நாக்பூர் போகும் வரை என்னிடம் இல்லை. நான் எட்டாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு பயின்ற பள்ளி நன்றாகப் படிப்பவர்களுக்கென்றே (இயல்பாகவே பார்ப்பனர்களுக்கும், ஆதிக்கசாயினருக்கும்) உள்ள பள்ளி. அதனால் கொஞ்சம் சிரமப்பட்டேன். பள்ளியில் காந்தி குல்லாய் தான் சீருடை. ஆனால் பார்ப்பன மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருப்புக் குல்லாய் அணிந்து வருவதை யாரும் எதிர்க்கவில்லை. ஒரு நாள் நான் எல்லா தலித் மாணவர்களையும் நீல நிற குல்லாய் அணிந்து வரச்சொன்னேன். காலை அசெம்ப்ளி முடிந்ததும் ஒரு சலசலப்பு எழுந்தது. எங்கள் உடற்கல்வி ஆசிரியர் ஒரு தலித்.

தலைமையாசிரியர் ஒரு இஸ்லாமியர். ஆனாலும் கூட அவர்க்ள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களை தண்டிக்க முனைந்தார்கள். நாங்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினோம். முதலில் அவர்கள் அணிந்திருக்கும் கருப்புக் குல்லாய்களை எடுக்கச் சொல்லுங்கள் என்றோம். ஒரு பேச்சுவார்த்தைக்கும் பின், வரும் நாட்களில் கட்டாயமாக பள்ளிச் சீருடையைத் தவிர வேறு எதையும் அணியக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி. அந்த சம்பவத்துக்குப் பின், எந்த தலித் மாணவரையும் ஆசிரியர் கொடுமைப்படுத்த முடியாது என்கிற நிலையைக் கொண்டு வந்தோம். பள்ளிக்குள் நடந்த தேர்தலில் நாங்களே வெற்றிபெற்று பதவிகளை கைப்பற்றினோம். நாங்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாய் இருந்தாலும், பள்ளி வரலாற்றிலேயே முதன்முறையாக அரசியல்ரீதியாக தலித்துகளின் கை ஓங்கியது.

நான் இதற்கு ஒரு காரணம் என்றாலும், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மாணவர்களில் பலர் என் நண்பர்களாக இருந்ததுதான் எங்களுடைய வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. நான் தலித் மாணவர்களுக்கான ஆயுதமாக விளங்கிய அதே நேரத்தில், அவர்களுடைய படிப்புக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தேன்.

என் கல்லூரிப் படிப்பு வரை இது தொடர்ந்தது. நான் எப்போதுமே தீவிரமான மாணவர் அரசியலில் பங்கேற்பவனாக இருந்தேன். நாக்பூர் பலகலைக்கழக மாணவர்களை வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து, தங்கள் பட்டங்களை எரிக்கும் போராட்டத்தில், நான் பி.யூ.சி. மாணவனாக இருந்தாலும், பெரிய பங்கு வகித்தேன். அதன்பின் வந்த ஐந்து ஆண்டு பொறியியல் படிப்பில், கிராமங்களின் சாதியப் பாகுபாடுகள் பற்றி விடுதி மாணவர்கள் மூலம் நிறைய அறிந்து கொண்டேன். அவர்களின் கிராமங்களுக்கு நான் நேரில் சென்று பார்த்து அவர்கள் கூறியவை அத்தனையும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல என்று அறிந்துகொண்டேன். நாக்பூர் நகரம் அம்பேத்கரோடு நெருங்கிய தொடர்புடையதால், இயல்பாகவே நான் தலித் அரசியலில் ஈடுபடும்படியான சூழல் இருந்தது. ஆனால், தீவிர இடதுசாரி அரசியல் மீதுதான் தான் தீராத தாகம் கொண்டிருந்தேன். எப்படியிருந்தாலும், இவையிரண்டும் ஒரு நூலிழையில் இணைபவையாகவே இருந்தன. மாணவர்களிடையே நான் மிகவும் பிரபலாமாகி இருந்தேன். எந்த பிரசாரமுமேயில்லாமல் மாணவர் தேர்தலில் அது வரையில் இருந்த சாதனைகளை முறியடிக்கும் அளவுக்கான வாக்குகளைப் பெற்றேன். தீவிர மாணவர் அரசியலில் நான் அதிகளவில் ஈடுபட்ட காலமாக அது இருந்தது.

மும்பைக்கு வந்தபின், நான் வாழ்ந்த பகுதி Dalit Panthers of India அதிகம் இருந்த பகுதி. அவர்களோடு பயணிக்கத் தொடங்கினேன். என்னுடைய முழு ஊதியத்தையும் இயக்கத்துக்கு அளித்தேன். அவர்களுடைய அடையாளத்தின் தீவிரத்தன்மை மீது எனக்கு தீராத சந்தேகம் இருந்தாலும் நான் ஒருபோதும் அவர்களிடம் அதைக் காட்டிக் கொண்டதில்லை. இன்னொரு பக்கம், அன்றைக்கு மும்பையில் இருந்த தீவிர அரசியல் தாக்கம் கொண்ட இளைஞர்களில் ஒருவனாக இருந்தேன். பணிநிமித்தம், வெகு சீக்கிரமே நான் மஹாராஷ்டிராவில் இருந்து பீஹார் சென்று, அதன் பின் மேற்கு வங்கம் சென்றேன். அங்கே தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டேன். முக்கியமாக குடிசைப் பகுதிகளில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் மத்தியில் நான் பணியாற்றினேன்.

கேள்வி: உங்களுக்கு அம்பேத்கர் யார்?

பதில்: அம்பேத்கர் நவீன இந்திய வரலாற்றில் மிக முக்கியமானவர். பகத்சிங் என்னுடைய சிறுவயது கதாநாயகன். ஒருமுறை அவருடைய நூற்றாண்டு விழாவில் பேசும்போது, இருவர் மட்டுமே இந்தியாவின் இயல்பை புரிந்து கொண்டவர்கள் என்று கூறினேன். ஒருவர் பகத்சிங் என்று எல்லோரும் கணித்து விட்டார்கள். அடுத்தவர் அம்பேத்கர் என்று நான் அவர் பெயரைச் சொனன்வுடன் அனைவரும் குழம்பினர். ஏனென்றால் அந்தக் கூட்டத்தில் எல்லோருமே இடதுசாரிகள். பெருமபாலும் பார்ப்பனர்கள். ஒரு தலித் கூட அந்தக் கூட்டத்தில் இல்லை. இந்த நாட்டின் அனைத்து நோய்களுக்கும் ஒரு மருத்துவராக அம்பேத்கர் அருமருந்தினை வைத்திருந்தார். உழைக்கும் மக்கள் மத்தியில் வேலை செய்யும் கம்யூனிஸ்ட்கள்தான் தன்னுடைய கூட்டாளிகளாக இருக்க முடியும் என்று உணர்ந்திருந்தார். ஆனால் பம்பாயில் இருந்த அப்போதைய கம்யூனிஸ்ட்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாக இருந்ததால், அவர்களுடைய ஆதிக்க மனப்பான்மை அம்பேத்கரை இடதுசாரி இயக்கத்தோடு நெருங்க முடியாமல் செய்துவிட்டது. தலித்துகளும் இடதுசாரிகளும் இணைந்திருந்தார்களென்றால், இந்தியாவின் வரலாறே வேறு மாதிரி இருந்திருக்கும். உழைக்கும் வர்க்கம் பிரிந்துக் கிடக்கும் வரை இந்தியாவில் தீவிரமாய் எதுவுமே நடக்காது. திடீர் புரட்சி என்பதை விட, சிறிய சிறிய மாற்றங்கள், புரட்சிக்குப் பின்னான தன்மைகளை அம்பேத்கர் விரும்பினார்.

ரத்தம் சிந்தித்தான் புரட்சி கிடைக்கும் எனும்போது.. ரத்தம் சிந்துவதை அம்பேத்கர் எதிர்க்கிறார். ஆனால் புரட்சி வேண்டாம் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. அவர் தன்னுடைய ‘புத்தரா கார்ல் மார்க்ஸா’ என்ற தலைப்பிலான இறுதி உரையில் மார்சீயம் தனக்குப் பிடித்திருந்தாலும், வன்முறையோ, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமோ இல்லாத பௌத்தத்தையே தான் தேர்ந்தெடுப்பதாகக் கூறினார்.

கேள்வி: அம்பேத்கரிஸ்ட்களுக்கு தடையாக இருப்பதாக நீங்கள் நினைப்பது?

பதில்: அம்பேத்கருக்குப் பின்னர், கடந்த அறுபது ஆண்டுகளாக, தலித் இயக்கங்கள் தங்களின் ஒற்றுமையை வளர்த்துக்கொள்ள முடியாமல், ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு இரையாகி விட்டன. தத்துவார்த்த பலவீனம் அதிகமாகிவிட்டது. தலித்துகள் ஆளும் வர்க்கத்தால் தூண்டப்பட்டு பிரிந்து கிடக்கிறார்கள். இதை உணர்வதற்கு பதில், தங்கள் சாதியின் அடையாளத்தை தங்களின் தற்காப்பு ஆயுதாமாகத் தாங்கிப் பிடிக்கிறார்கள்.

தீவிரத்தன்மை வாய்ந்த அம்பேத்கர் மறக்கடிக்கப்பட்டு, அம்பேத்கரின் மாதிரிகள் உருவாக்கப்பட்டு தங்களுக்குப் பிடித்த வண்ணத்தை அந்த மாதிரிகளின் மேல் பூசிவிடுகின்றனர். 1960களுக்குப் பிறகு, சாதாரண மக்களின் பிரதிநிதிகளான மாநிலக் கட்சிகள் அதிகரித்ததன் காரணமாக அரசியல் போட்டியும் அதிகரித்தது. ஆகவே ஆளுங்கட்சிகள் தலித்துகளின் வாக்குகளைப் பெற போட்டி போட்டன. தங்கள் தலைமையால் சோர்ந்து போன தலித்துகள் அம்பேத்கரை பயபக்தியுடன் பார்க்கத் தொடங்கினார்கள். ஆளும் வர்க்கமும் கூட வண்ணமயமாக்கப்பட்ட அம்பேத்கரின் மாதிரிகளாக நிறைய பேரை வளர்த்துவிட்டது. ஒட்டுமொத்த தலித் இயக்கமுமே இந்த அம்பேத்கரின் மாதிரிகளுக்கான பக்திக் கண்காட்சியாக மாறிப்போனது. இடஒதுக்கீட்டினால் பயன்பெற்று முன்னேறியுள்ள தலித் மக்களின் ஒரு பிரிவினருக்கு இந்த முறை மிகவும் ஏதுவானதாக இருந்தது. கிராமங்களில் உள்ள மிகப்பெருமளவிலான தலித்துகள் அவர்களைப் பார்த்து பின்பற்றத் தொடங்கினர். இதனாலேயே, 1960களில் தாதாசாஹேப் கெய்க்வாட் தலைமையில் தேசியளவில் மிகப்பெரிய மண்ணுரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த தலித் இயக்கம், பின்னாளில், மறைமுகமாகவோ, நேரடியாகவோ இடஒதுக்கீடு என்கிற ஒற்றை அஜென்டாவோடு செயல்படத் தொடங்கியது.

அம்பேத்கரிஸ்டுகளுக்கு முன்னே பெரும் சவாலாக நிற்பது, அவர்களுடைய அடையாளம் தந்திருக்கும் இமேஜைத் தாண்டி வந்து, அம்பேத்கர் விரும்பிய உண்மையான சாதி ஒழிப்புக்குப் போராடுவதுதான். அடிப்படையில் சாதி என்பது பிரிக்கும் தன்மையுடையது என்பதையும், தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க சாதி அடையாளம் அடிப்படையாய் இருக்காது என்பதையும் அம்பேத்கரிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டும்.

சிலந்திவலை போன்ற அம்பேத்கர் மாதிரிகளைக் கடந்து அம்பேத்கரிஸ்டுகள் உணமையான அம்பேத்கரை அடைந்தால், அவர்களுடைய ஒட்டுமொத்த அனுபவங்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள முடியும்.

கேள்வி: சில தலித்துகள் தங்களை பார்ப்பனமயமாக்கிக் கொள்வது குறித்து?

பதில்: சாதியை ஒத்துக் கொள்பவர்களுக்கு பார்ப்பனராவது லட்சியமாய் இருப்பதில் வியப்பில்லை. அவர்களுடைய சாதியை விட மனதளவில் மேலேறிச் சென்றுவிட தூண்டுவதே சாதியின் தன்மை. நிஜமாக முடியாது என்று அவர்களுக்குத் தெரிந்தாலும், அது அவர்கள் தேடி ஓடும் லட்சியமாய் இருக்கிறது. பொருளாதாரத்தில் தலித்துகள் உயரும்போது, அவர்கள் வர்க்கத்திலும் முன்னேறுகிறார்கள். மற்ற சாதாரண தலித்துகளிடமிருந்து விலகிப் போகிறார்கள். பார்ப்பனர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் பார்ப்பனர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இது தானாகவே நடக்கிறது. என்னதான் சொல்லிக்கொண்டாலும், நமக்கான ஒரு மாற்று கலாசார முறையை நம்மால் உருவாக்க முடியவில்லை.

மதமாற்றம் ஒரு இயக்கமாக நடந்தாலும், மஹாராஷ்டிராவின் தலித்துகள் கூட அதை முழுமையாகப் பின்பற்ற முடியவில்லை. பார்ப்பனர்கள் என்ன செய்வார்களோ அதைத்தான் செய்கிறார்கள். அடையாளங்கள் தான் மாறி இருக்கின்றன. ஆனால் அடிப்படை பார்ப்பனமயமாக இருக்கிறது. மாற்றுப் பண்பாட்டை முன்னிறுத்தும் தலித்துகளும், உழைக்கும் தலித்துகளும், வர்க்கப்பார்வையால் மட்டுமே இதிலிருந்து வெளியேற முடியும். ஆனால் தலித்துகளின் உலகில் வர்க்கப்பார்வை கிட்டத்தட்ட கிடையாது.

கேள்வி: தமிழ்நாட்டில் உள்ள தலித் கட்சிகள் குறித்து?

பதில்: மற்றவர்கள் போலல்லாமல், மக்கள் இயக்கங்கள் மூலம், நான் இந்தியாவின் பல மாநிலங்களோடும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். நாடு முழுவதுமுள்ள தலித் கட்சிகளிடம் அவர்களுடைய சமூக&அரசியல் சூழல் காரணமாக சில வேறுபாடுகள் இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவை ஒன்றாகவே தெரிகின்றன. அவை சுயநலமாகவே இருக்கின்றன. தேர்தல் சமயத்தில் மட்டும் விழித்தெழுந்து, மைய நீரோட்டக் கட்சிகளுடன் சேர்ந்து அரசியல் லாபம் பெற முயல்கின்றன. மஹாராஷ்டிராவில், எந்த கட்சி ஏலத்துக்கு எடுக்கிறதோ அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ளும் தலித் கட்சிகள் உண்டு. ஷரத் பவாரின் அரசியல் அடிமையாய் இருந்த ஆர்.பி.ஐ(ரிபப்ளிக்கன் பார்ட்டி ஆஃப் இந்தியா), அதன் பின் சிவசேனாவோடு போனது.

தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்குக்கூடத் தெரியும் சிவசேனா அம்பேத்கருக்கு எதிரான ஒரு தலித் விரோத அமைப்பு என்பது. ஆனால் அம்பேத்கரின் பெயரைச் சொல்லிக்கொண்டே இந்த கூட்டணி உருவானது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தலித்துகளின் இரண்டு பெரிய சாதிகளான பறையர்கள், பள்ளர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் உண்டு. கூட்டணி சேர, அவைகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க. என்று இரண்டு பெரிய கட்சிகள் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி போல வெகு மக்களைச் சென்றுச் சேர வேண்டும் என்கிற லட்சியம் உள்ள கட்சிகளாக சில தலித் கட்சிகள் உள்ளன. அவை தமிழ்த் தேசியம் அல்லது தமிழ் இறையாண்மையை உசுப்பிவிடக் கூடிய கட்சிகளாக இருக்கின்றன.

தலித்துகளின் மீதான கொடூர வன்முறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் தீர்வு காண முடியாத கட்சிகளுக்கு இது தேவையில்லாத வேலை. சுரண்டலுக்கும் போலித்தனத்துக்கும் எதிராக வர்க்கமாக மக்களைத் திரட்டும் நோக்கத்தோடு, சாதியை எதிர்ப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்தக் கட்சிகளிடம் மக்கள் எதிர்பார்ப்பது. ஆனால் ஒரு கட்சியும் இதைச் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் தங்கள் சாதி சார்ந்த உணர்வையே ஊட்டுகின்றன. ‘தலித்‘ என்கிற சொல் இன்று பல பிரிவுகளாக எளிதாகப் பிரிக்கப்பட்டு, மக்களும் தங்கள் சாதிக்குத் திரும்புகிறார்கள். இதைத் தடுப்பதுதான் இன்றைக்கு தலித் தலைவர்கள் எதிர்நோக்கியுள்ள முக்கியமான சவால்.

கேள்வி: தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் தலித் அரசியலில் முக்கியப் பங்கு வகிப்பதாக யாரைக் கருதுகிறீர்கள். ஏன்?

பதில்: தற்போதைய நிலவரம் மிகவும் ஏமாற்றமளிக்கக் கூடியது. தொல்.திருமாவளவன் போன்ற தலைவர்கள் நம்பிக்கை ஊட்டுபவர்களாக இருந்தார்கள். மஹாராஷ்டிராவின் ராம்தாஸ் அத்வலேவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கோடு, அவரிடம் காணப்படாத கல்வித்தகுதியும், அறிவுஜீவித்தனமும் திருமாவளவனுக்கு இருக்கின்றன. ஆனால் அவரும் கூட தேர்தல் அரசியலில் சிக்கிக் கொண்டு விட்டார். அவருடைய ‘தாலிஸ்மான்’ நூலை மஹாராஷ்டிராவில் நான் வெளியிட்டபோது, மஹாராஷ்டிராவில் நடந்தது தமிழ்நாட்டில் நடக்கவிட்டு விடாதீர்கள் என்று எச்சரித்தேன். நல்லவேளை, அவர் மஹாராஷ்டிராவில் உள்ள எவரையும் போல நடந்து கொள்ளவில்லை. ஆனாலும், அவர்கள் போலவே நடந்துகொள்வதான ஒரு எண்ணத்தை தோற்றுவித்துவிட்டார். அதிகாரத்தின் மீதான ஆர்வத்தை விடுத்து, தலித்துகளை தீவிரமாக ஒன்றிணைக்கும் வேலையை அவர் செய்திருந்தால், நிச்சயமாக ஒரு தேசியத் தலைவராக உருவாகியிருப்பார். ஆனால் அந்தப் பணி சாதாரணமானது அல்லதான் என்றாலும், இதைச் செய்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

கேள்வி: பௌத்தம்தான் தலித்துகளுக்கு ஒரே தீர்வா?

பதில்: நம் கண்களுக்குப் புலப்படுவதை விட அம்பேத்கரின் மதமாற்றம் அதிக விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. தன் மக்களை பண்பாட்டு ரீதியாக நவீனத்துக்கும், தீவிர அறிவியல் பார்வைக்கும் பழக்கப்படுத்த எண்ணிய அம்பேத்கர் அதற்கு மதம் எனும் வித்தியாசமான திட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அவர் நினைத்ததற்கு நேரெதிராக மஹாராஷ்டிராவில் நடந்தது. நிச்சயமாக தலித்துகளில் ஒரு பகுதியினர் பௌத்தம் தழுவிய பின்னர் அவர்களுக்குக் கிடைத்த புதிய அடையாளம் அவர்களை மகிழ்வித்தது.

ஆனாலும் அந்த அடையாளத்தை வெளிப்படுத்துவதில் கூட சரியான புரிதல் இல்லை. தலித்துகளை ஒரு புதிய கலாசார முறையை நோக்கி வழிநடத்த அவர்களை இயக்கமாக்கினார் அம்பேத்கர். ஆனால், நூற்றுக்கணக்கான புத்த மகாசபைகள் தங்களுக்குள் பகை வளர்த்து நிற்கின்றன. பார்ப்பனச் சடங்குகள் என்று தலித்துகள் கருதுபவற்றைத்தான் அவைகளின் கலாசாரம் தாங்கி நிற்கின்றது. கடந்த 60 ஆண்டு அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, பௌத்தத்துக்கு மதம் மாறுதல் என்பது தலித்துகளின் விடுதலைக்கு வழிகோலாது என்பதையே காட்டுகிறது.

கேள்வி: கயர்லாஞ்சி படுகொலைகள் நாட்டையே உலுக்கின. அதுபோன்றதொரு அதிர்வு பரமக்குடி படுகொலைகளுக்கு ஏன் நாடெங்கிலும் ஏற்படவில்லை?

பதில்: இல்லை. அப்படி எண்ண வேண்டாம். கயர்லாஞ்சி கொடூரமும் வெளியே வராமல் போயிருக்கும். இந்த விஷயத்தில் தொடர்ந்து ஒரு மாத காலம் அரசு ஒடுக்கும் தன்மையுடன் நடந்து கொண்டதைப் பார்த்த பின் மக்களிடையே கோபம் பொறியாய்த் தொடங்கி பரவியது. நிறைய கயர்லாஞ்சிகள் அதற்கு முன்னும் பின்னும் கவனத்துக்கு வராமலேயே போயிருக்கின்றன. ஏனென்றால் தங்கள் தலைவர்கள் இந்த விஷயங்களைக் கையிலெடுப்பார்கள் என்று மக்கள் நம்பி இருந்து விட்டார்கள். பரமக்குடியில் நடந்ததைப் போன்று கயர்லாஞ்சிக்கு முன்பே, 1997ல் மும்பையில் ரமாபாய்நகரில் 10 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தப் பிரச்னையில் தலித்துகள் முதன்முறையாக தங்கள் தலைவர்கள் மீது ஏமாற்றம் கொண்டு தன்னெழுச்சியாய் எதிர்ப்பியக்கத்தை முன்னெடுத்தார்கள். கயர்லாஞ்சியும் அது போலதான் தன்னெழுச்சியாய் மக்களால் முன்னெடுக்கப்பட்டது. பரமக்குடியிலும் அதுபோல நடந்திருக்க வேண்டும். பரமக்குடியில் நடந்தது கடும் கண்டனத்துக்குரியது.

கயர்லாஞ்சியில் 4 தலித்துகள் ஆதிக்க சாதிக்காரர்களால் கொல்லப்பட்டார்கள் என்றால், பரமக்குடியில் அரசின் கையாட்களாக செயல்பட்ட அதிகாரிகள் பட்டப்பகலில் தலித்துகளை அடித்தே கொன்றிருக்கிறார்கள். இதை எப்படிக் கண்டித்தாலும் போதாது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இந்த உண்மையை உணர்ந்து கொண்டு தலித்துகள் எதிர்வினையாற்றுவார்கள் என்று இப்போதும் நம்புகிறேன்.

கேள்வி: நாடெங்கும் பயணிக்கும் உங்களைப் பொறுத்தவரை தலித்துகளின் மீதான ஒடுக்குமுறை எந்த மாநிலத்தில் அதிகமாக இருக்கிறது? ஏன்?

பதில்: எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் உத்தரப் பிரதேசம்தான். தலித் மக்களின் எண்ணிக்கையையும், அவர்களுக்கெதிரான குற்றங்களையும் வைத்துக் கணக்கிடும்போது உத்தரப் பிரதேசம் ஆறாவது இடத்திலும், ராஜஸ்தான் முதலிடத்திலும், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீஹார், ஒடிஷா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இதற்கான காரணத்தை வரையறுப்பது சிரமம். மக்களின் சமூகப் பொருளாதார நிலை, பண்பாட்டு அரசியல் சூழல், அரசு நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கைகள் என்று பல காரணங்களைச் சொல்லலாம்.

கேள்வி: இந்தியாவில் சாதி ஒழிப்பு சாத்தியமா?

பதில்: சாத்தியம்தான். ஏற்கனவே வைதீகத்தில் நம்பிக்கையுள்ள பல சாதிகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. அநத சாதிகளின் எச்சம்தான் தலித்துகள் & தலித்தல்லாதவர்கள் இடையே பிரிவை உருவாக்கியுள்ளது. வேதங்களினால் அல்ல, நவீனமயமாகிவிட்ட நிறுவனங்களால் காப்பாற்றப்பட்டு நிலைத்திருக்கும் சாதிகள் உண்டு. சாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகள் என்பதால், சாதி ஒழிப்பில் தலித்துகளே பெரிய அளவில் பங்காற்ற வேண்டும். வர்க்க ஒற்றுமை மூலம்தான் இது சாத்தியம். இதில் இடதுசாரிகளின் பங்களிப்பு மிகவும் அவசியமாகிறது. என்னுடைய ‘ஏகாதிபத்தியமும் சாதி ஒழிப்பும்’ நூலில், இந்த வர்க்க ஒற்றுமையை அடைவது எப்படி என்பது குறித்து பேசியிருக்கிறேன். சாதி ஒழிப்பு என்பது ஏதோ தலித்துகள் முன்னெடுக்க வேண்டிய பிரச்னை மட்டுமல்ல, நாட்டின் ஒரு புரட்சிகர மாற்றத்தின் தேவையை அங்கீகரிக்கும் முற்போக்கு சக்திகள் அனைத்தும் சேர்ந்து முன்னெடுக்க வேண்டிய பிரச்னை.

கேள்வி: பின் ஏன் அம்பேத்கரிஸ்டுகளில் பெரும்பான்மையானோர் கம்யூனிஸ்ட்டுகளை போட்டியாளர்களாகப் பார்க்க வேண்டும்?

பதில்: போட்டியாளர்கள் அல்ல. எதிரிகளாகப் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். இதற்கு வரலாற்றுரீதியான காரணங்கள் உண்டு. அம்பேத்கரின் இயக்கத்தை மும்பையில் இருந்த கம்யூனிஸ்டுகள் அலட்சியப்படுத்திய விதமும், அவரை அவர்கள் அவமானப்படுத்திய விதமும், ஒரு தேர்தலில் அவருக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் வேலை செய்ததுமாய் சேர்ந்து அம்பேத்கரை கம்யூனிஸ்ட் இயக்கத்திடமிருந்து வெகுதூரத்தில் நிற்கச் செய்தது. அவ்வபோது அம்பேத்கர் இதுகுறித்துப் பேசியிருக்கிறார். அம்பேத்கர் கம்யூனிஸ்ட் அல்ல. கம்யூனிஸ்டுகளின் தத்துவங்களோடு அவருக்கு உடன்பாடில்லாத விஷயங்கள் இருந்தன. ஆனால் அது அறிவுத்தளத்தில் மட்டுமே. நடைமுறையில், உழைக்கும் மக்களிடையே கம்யூனிஸத்துக்கு இருந்த ஆதரவை அவர் அங்கீகரித்தார் என்பதற்குத் தகுந்த சாட்சியங்கள் உள்ளன.

எப்போதுமே அம்பேத்கர் தனது முடிவுகளுக்கும் தீர்மானங்களுக்கு அளவுகோலாக கம்யூனிஸத்தையே வைத்திருந்தார். (குறிப்பாக மார்க்சியம்). அம்பேத்கரின் பெயரால் கம்யூனிஸத்துக்கு எதிராக பிரசாரம் செயதவர்களால் இவை மறைக்கப்பட்டன.

சிவசேனா போன்ற சாதிய, மதவாத சக்திகளுடன் கைகோர்க்கத் தயாராய் இருக்கிறார்களே ஒழிய கம்யூனிஸ்டுகளைத் தீண்டக்கூட மாட்டேன் என்கிறார்கள். அம்பேத்கரிஸ்ட் ஒருவர் முதல் எதிரியாக கம்யூனிஸத்தைப் பார்ப்பதுதான் இங்கே வழக்கமாக இருக்கிறது. ஆர்.பி.ஐ அல்லது டி.பி.ஐ அல்லது வேறெந்த அம்பேத்கர் இயக்கத்திலும் பிளவுகள் இதன் அடிப்படையிலேயே ஏற்பட்டன.

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button