இணைய இதழ் 127கவிதைகள்

ரமணன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

குவாட்டர்ஸ் வீடுகள்


அப்பா பணி ஓய்வு பெற்று
இன்றுடன் இரண்டு மாதங்கள்.
ஒட்டப்படாத நோட்டீசாய்
’இன்றே இவ்வீடு கடைசி!’

என்னுடைய பால்யத்தை,
அக்காவுடனான சண்டைகளை,
முதற்காதல் கனவுலகை,
தின்று, விழுங்கி, செரித்து,
நிஜமாய் சிரித்துக் கொண்டிருக்கின்றன
இந்த 700 சதுர அடிகள்.

சிறுவயதுப் பிரம்படிக்கு
நான் பயந்தொடுங்கிய மூலை,
ராமர்பானம் தாங்கி நிற்கும் பால்கனி,
அதிகாலை சூரியன் ஏந்தி வரும்
முற்கதவின் சிறு ஓட்டை,
மழைநாளில் ஓதமடிக்கும்
வேதியியல் சமன்பாடுகள் கிறுக்கிய
என் அறைச் சுவர்…

இப்படி இருபது வருடங்களின்
ஏதேனும் ஒரு ஞாபகத்தை
சுமந்து கொண்டிருந்தது
எங்கள் யாவரையும்
தாங்கிச் சுமந்த வீடு.

பேக்கர்ஸ் & மூவர்ஸ்
ஹாரன் அடிக்க ஆரம்பித்திருந்தான்.

விடைபெறும் சகாக்கள் முகத்தில்
நட்பின் பிரிவைக் காட்டிலும்
அவர்களின், ‘இந்த’ நாளுக்கான
பயம்தான் தென்பட்டது.

படிக்கட்டுகள் எண்ணியபடி
கீழ் நோக்கிய நடை.

நிரந்தரப் பிரிவிற்கு
முன்னதான ஒரு தலைக்கோதலைப் போல,
அடியிலிருக்கும் தபால் பெட்டியை
ஒரு தடவை திறந்து மூடினேன்.

ஏழாம் வகுப்பில்
விழுந்து கைய்யொடிந்த
அந்த இரும்பு கேட்
கடைசி சாத்தலின்போது
‘கிரீச்’சென்றது.

சோகம் இழையோடும்
புன்னகையை அங்கேயே உதிர்த்துவிட்டு
திரும்பிப் பாராமல் நடந்து
மெயின் ரோட்டிருக்கு வந்திருந்தேன்.
கண்ணீரும் கன்னமேட்டைத் தொட்டிருந்தது.

அடுத்த நாள் அம்மா தினமும்
சோறு வைக்கும் தெருநாய்,
வெறிச்சோடிய வீட்டைக் கண்டு,
நெடுநேரம் குரைத்துக் கொண்டிருந்ததாய்
பக்கத்துக்கு வீட்டு அக்கா
போன் போட்டு சொன்னார்கள்.

*

காதலியைக் களவாடியவன்

‘என் காதலியைக் களவாடியவன்’
என்ற தலைப்பில் நேற்றிரவு
கவிதையொன்றை
தொடங்கியிருந்தேன்.
அறையெல்லாம் தேடியாகிவிட்டது.
போனமாயம் தெரியவில்லை.

*

யாசிக்கும் மரணம்!

காற்றில் தவழ்ந்து வந்த
ஒரு பழுப்படைந்த டைரிக்குறிப்பு,
பழைய பள்ளி நண்பனின்
அலைபேசி உரையாடல்,
விட்டத்தில் சிறு முட்டைகள் கொண்ட
பறவைக் கூடு,
கண் காணா இடத்தே கசிந்து வந்த
ஒரு கண்ணதாசன் பாடல்,
“எல்லாம் சில காலம், இதுவும் கடந்து போகும்”
என்பது போல் ஒரு வரி,
எதிர்பாராது அழுதுகொண்டே
அறையுள் வந்த அடுத்த வீட்டுக் குழந்தை,
வழக்கமாய் வரும் சாயுங்கால பால்காரன்,

இவற்றில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்திருந்தாலும்
அந்த தற்கொலை தடுக்கப்பட்டிருக்கக் கூடும்.

*

கேசம் கலைந்த இளம்பெண்

யாருமற்ற ஓர் ஒற்றையடிப் பாதை
ஆவி பறக்கும் ஒரு கோப்பைத் தேநீர்
இறைந்து கிடக்கும் புத்தகங்கள்
கலைந்து கிடக்கும் படுக்கை
கேசம் கலைந்த இளம்பெண்

புகைப்படமெடுக்க
தோதானதாய்
வேறொன்றுமில்லை.

*

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button