இணைய இதழ்இணைய இதழ் 91சிறுகதைகள்

தோன்றுதலும் மறைதலும் – யுவன் சந்திரசேகர்

சிறுகதை | வாசகசாலை

ற்று முன்தான் நடந்ததுபோலப் பசுமையாய் இருந்தாலும், நிஜமாக நடந்து பத்து வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. தேதிகூடத் துல்லியமாக நினைவிருக்கிறது. ஆனால், அதெல்லாம் இப்போது சொல்லவிருக்கிற சம்பவத்துக்கு நேரடியாய்த் தேவைப்படாத விவரங்கள்… 

என்னடா இது, முடியெல்லாம் இப்பிடிக் கொட்டிப்போச்சு! கிழவனா ஆயிட்டியேடா!

என்று வியந்தபடி வரவேற்றார் வாஞ்சி மாமா. அவர் கேட்கலாம்; என்னைவிட முப்பது வயது பெரியவர். எண்பது வயதுக்கு, முழுசாக நரைத்துவிட்டதே தவிர, அடர்த்தி குறையவில்லை. ஆமாம், சிதையில் கிடக்கும்போதும் அதே அடர்த்தி… 

ரிட்டயராக ஏழு வருஷம்தான் இருக்கு. கிழவனாகாமெ இருக்க முடியுமா மாமா !

என்று பதில் சொன்னபடி, அனிச்சையாக சுண்டுவிரலால் நாசித்துவாரத்தைச் சுத்தம் செய்ய முற்பட்ட என் வலதுகையை, அனிச்சையாய்த் தட்டி இறக்கினாள் மனைவி.

வாஞ்சி மாமாவைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகியிருந்தது. பொதுவாகவே குடும்ப வைபவங்களுக்குப் போவதில்லை. முழுவீச்சுடன் எழுத்தில் ஈடுபட்ட பிறகு, அவகாசம் இல்லை என்பது ஒருபுறம். மறுபுறம், முதல் ஒரு மணி நேரத்தில் வைபவமே முடிந்து விடும் எனக்கு. வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்று எல்லாரையும் பார்த்துக் குசலம் கேட்டதற்கும் முகத்தைத் திருப்பியதற்கும் பிறகு அந்த இடத்தில் என்ன வேலை, சொல்லுங்கள். நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குக் கிளம்பும்வரை பெரும் அவஸ்தைதான்.. சிலசமயம் ஓரிரு நாட்கள் நீடிக்கும் விசேஷங்கள் சித்திரவதை.  

அந்த முறை தவிர்க்க முடியவில்லை. என் உடன்பிறந்த அக்காவின் மூத்த பேத்திக்குக் கல்யாணம். ஆனால், எந்த இரண்டு நாளையும்போல அந்த இரண்டு நாள் இருக்கப் போவதில்லை என்று அப்போது எனக்குத் தெரியாது.

அக்கா பரவசமாய் இருந்தாள். கடந்த இருபது வருடங்களாக, காது சரியாய்க் கேட்பதில்லை – ஹியரிங் எய்ட் அணிந்துகொள்ள உறுதியாக மறுத்துவிட்டாள். இந்தக் குறைபாடு உள்ளவர்கள், மற்றவர்களின் உதடுகளை உன்னிப்பாய்க் கவனித்துப் புரிந்துகொள்ள முயல்வார்கள் அல்லவா. இவள் அதுவும் செய்ய மாட்டாள். தனக்கிருக்கும் பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடுமே என்ற கவலையோ என்னமோ. சம்பந்தாசம்பந்தமின்றி அவள் சொல்லும் பதில்கள் வழியாக யாருக்கும் தெரியத்தானே செய்யும். அக்கா அவ்வளவெல்லாம் யோசிக்கக் கூடியவள் இல்லை… ஒவ்வொருவரிடமாக அழைத்துச் சென்று,

இவன் யார்ன்னு தெரியறதா!

என்று கேட்டாள். அநேகம்பேருக்கு என்னைத் தெரியவில்லை; தெரிந்ததாய்ச் சொல்லிப் புன்னகைத்தவர்களை எனக்குத் தெரியவில்லை. இப்படித்தான், புடவையோடு சேர்த்துத் தொடையைச் சொறிந்துகொண்டிருந்த, நரைமுடியைப் பையன்கள் போலக் கிராப்பாக வெட்டியிருந்த முதியவள் ஒருத்தியிடம் கொண்டு நிறுத்தினாள். இவள் அளவுக்கே கிழவியாகத் தெரிந்தாள் அவள். இந்த முறை, என்னிடம் கேட்டாள்:

இது யார்ன்னு தெரியறதாடா!

என்றாள். அசட்டுத்தனமாகத் தலையாட்டினேன்.

தாராடா. நம்ம தாரா.

பார்க்கிற யாருக்கும், ஏன் இப்போது கேட்கிற உங்களுக்குமே, நெருங்கிய ரத்த உறவு என்றோ, ஒன்றுவிட்ட இரண்டுவிட்ட தொலைவு கொண்டது என்றோ தோன்றியிருக்கும். கிராப்பம்மாளுக்கு என்னைத் தெரியவில்லை – அவளும் லேசாக உதடு பிரித்து அதைத்தான் சொன்னாள். அக்கா வேறு கிரகத்தில் இருந்தாளா, 

அதானே. ஒனக்கு இவனெத் தெரியாமப் போகுமா!

என்று தானே வியந்து தானே அதிர்ந்து சிரிக்கவேறு செய்தாள்.

ஆனால், மேற்படி அந்நியளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை என்பது பெரும் ஆறுதல். அது ஏன் என்பதைத்தான் சொல்ல முற்பட்டேன். அதைவிட, நான் அந்தரங்கமாய் வைத்துச் சீராட்டிக்கொண்டிருந்த ஒரு பிம்பத்தின் இடத்தில் புதிதாக ஒன்றைச் செருகி என் நிம்மதியைக் குலைத்துவிட்டாளே என் உடன்பிறந்த சகோதரி, அந்த வயிற்றெரிச்சலை கொட்டித் தீர்த்துக்கொள்ள…

1980களின் ஆரம்பத்தில், நாங்கள் மாடியில் குடியிருந்தபோது, கீழ்ப் போர்ஷனில் வசித்த பெண்மணி தாரா. என்னைவிட ஏழெட்டு வயது மூத்தவளாய் இருக்கலாம். வயது தெரியாத உடல்வாகு. முன்கோபியும் மூர்க்கனும் சந்தேகப் பிராணியுமான புருஷனுடன் வாழ்க்கை நடத்த நேர்ந்த துர்ப்பாக்கியவதி. ஆனால், எதையுமே பொருட்படுத்தாத நிதானம் அவளை உறைபோல மூடியிருக்கும். 

மூன்றாவது மகனைப் பெற்றெடுப்பதற்காகத் தாய்வீடு வந்திருந்த பெரியக்காவின் நெருங்கிய தோழியானாள். ஆனாலும், புருஷனைப் பற்றி ஒரு சொல்லும் உதிர்க்கமாட்டாள் என்பாள் அக்கா. ஆமாம், அப்படியொரு நபரே தன் வாழ்வில் கிடையாது என்கிற மாதிரித் தனியாக இருக்கிறாள் என்பது வெறும் பார்வைக்கே தெரியும்.

புருஷன் அலுவலகம் சென்ற பின், ஆறு வீடுகளுக்கும் பொதுவான முற்றத்தில் நின்று தலை கோத ஆரம்பிப்பாள். தாயம்மாப் பாட்டி கதையில் ’அளகபாரம்’ என்று ஒரு சொல் வரும். ஆனால், அதை எழுதும்போது என் மனம் முழுக்க தாராதான் நிறைந்திருந்தாள். அபாரமான அடர்த்தியும் நீளமும் கொண்ட கூந்தல். அரைமணி நேரத்துக்குக் குறையாமல் அதைச் சீராட்டுவாள். சுளீரென்ற நிறம். கருகருவென்ற கேசம் முகத்தின் நிறத்தை இன்னும் அதிகரித்துக் காட்டும். அக்கா, அடிக்கடி சொல்வாள்:

முன்னம்பக்கம் பவுர்ணமி. பின்னாடி அம்மாவாசெ.

நான் கல்லூரி கடைசி வருடம் படித்தேன். மாடியிலிருந்து தாராவைப் பார்த்துத் தீராது. தலையை அண்ணாந்து தலை கோதுவாளா, செதுக்கிய உடல் லேசாக முன்னோக்கித் துருத்தி இருக்கும். சிலவேளை அக்கா வந்து தலையில் செல்லமாகக் குட்டுவாள்:

அங்கெ என்ன பார்வெ! 

தாள முடியாமல் போகும்போது, சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே போகும் சாக்கில், தரைத்தளத்துக்குப் போவேன். அவளைக் கடக்கும்போது, மஞ்சளும் தாழம்பூக் குங்குமமும் கலந்த மிருதுவான மணம் வருடும். சன்னமான குரலில் பாடிக்கொண்டே நிற்கும் சித்திரம் எனக்குள் இப்போதும் கிறுகிறுக்கிறது. அய்யோ, வடிவழகி! இவள் சம்பந்தமான பயம்தான் புருஷனைப் படுத்தியெடுக்கிறதோ என்று அப்போதே தோன்றியதுண்டு. 

தாராவின் இன்னொரு சிறப்பம்சம், விநோதமான மழலை. ’மூச்சைப் பிடிச்சுண்டு’, ’பல்லைக் கடிச்சுண்டு’ இரண்டையும் கலந்து ’மூச்சைக் கடிச்சிண்டு’ என்பாள்! 

நான் கல்லூரி முடித்தபிறகு, அந்த வீட்டைக் காலி செய்து வேறு இடம் போனோம். பிறகு அவர்கள் என்னவானார்கள் என்று தகவல் இல்லை. ஆனால், கடைசி ஒருவாரம் வெளியில் தலை காட்டவேயில்லை தாரா. புருஷனின் குரல் ஓங்கியும் உரத்தும் அலறிக்கொண்டிருந்த முந்தைய இரவு இன்னமும் என் காதில் ஒலிக்கிறது. 

விடைபெறுவதற்காக அவர்கள் வீட்டுக்குள் போன மன்னி, பேயறைந்த முகத்துடன் திரும்பினாள். புதுவீட்டுக்குப் போகும்வரை ஒரு சொல்லும் பேசவில்லை. நுழைந்த மாத்திரத்தில், நெஞ்சைப் பிடித்துக்கொண்டு தகவல் சொன்னாள். ஆண்களுடைய கிராப் மாதிரிக் குட்டை முடியுடன் தாரா உட்கார்ந்திருந்தாளாம். சீராக வெட்டப்படாத கிராப்.

என்னெப் பாத்துப் புஞ்சிரிப்பு வேறே…

என்று குமுறும் குரலில் சொன்னாள் மன்னி. 

ஆனால், தலைகோதிக்கொண்டு நிற்கும் பிம்பம்தான் எனக்குள் நிரந்தரமாகப் படிந்துவிட்டிருந்தது. அதன் பிறகு, பார்க்கும் பெண்ணிலெல்லாம் தாராவைத் தேட ஆரம்பித்தேன். சும்மா இல்லை, சினிமாவில் புதுசாக ஒரு நடிகையைப் பார்க்கக் கிடைத்தால்கூட அவளுக்குள் கொஞ்சமாவது தாரா இருக்கிறாளா என்று உறுத்துப் பார்ப்பேன். பெரும்பாலும், தோல்விதான்…

கல்யாண வீட்டில், வெற்று நெற்றியும் உள்ளடங்கிய பல்லும் விட்டேற்றியான பார்வையுமாய் நின்ற பெண்மணி என்னைத் தெரியவில்லை என்று தலையாட்டிய அதே வேளையில் வேறொரு குழப்பம் எழுந்தது. அல்லது, ஆதங்கம். அல்லது ஆற்றாமை – இப்படிக் கசப்பு வழியும் சொல் எதைவெண்டுமானாலும் அந்தத் தருணத்துக்கு முன்னொட்டாக வைத்துக்கொள்ளலாம். பின்னே, தாராவிலேயே தாரா இல்லை என்பதை அல்லவா பார்த்திருக்கிறேன்?

பையன் வீட்டு சார்பாக வந்திருக்கிறாள் என்று அக்கா சொன்னது எங்கோ தொலைவில் ஒலித்தது. 

மறுநாள் முகூர்த்தம் முடிந்தபிறகு காக்காய்க் கூட்டம் கலைகிற மாதிரி அவரவரும் கிளம்பினார்களா, இரண்டு நாளாக தன்னிச்சையாக நான் பார்வையால் பின்தொடர்ந்த தாராவும் புறப்பட்டாள். சுளீரென்ற குதிரைச்சதை தெரியப் புடவையை உயர்த்தி, மகன் ஓட்டிப்போகும் காரின் முன்னிருக்கையில் ஏறி அமர்ந்தாள். அதே வெறுமையான பார்வை. 

மண்டபத்தைவிட்டு அல்ல, எனக்குள்ளிருந்துதான் வெளியேறிப் போகிறாள் என்று தோன்றியது. இல்லை இல்லை, நான்தான் இருந்த இடத்திலிருந்தே படுவேகமாகப் பின்வாங்கிக்கொண்டிருந்தேன்… 

வருஷக்கணக்காக என்னுள் தேங்கியிருந்த பிம்பத்தின் விளிம்புகள் கலைந்து கரைவதை போதபூர்வமாகக் கவனிப்பது விசித்திரமான துக்கமாய் இருந்தது. அது பெரிதில்லை; இதெல்லாம் யாருக்கும் நடப்பதுதான். அது கவிதைக்குரிய கணம் என்று தோன்றியதும், இன்றுவரை அதைக் கவிதையாக எழுத இயலாமல் இருப்பதும்தான் இன்னும் பெரிய துக்கம் என்று தோன்றுகிறது. 

கவிதையல்லாத கணம் என்று ஒன்றுகூடக் கிடையாது என்கிற மாதிரியோ அல்லது இந்த அர்த்தம் தொனிக்கிற மாதிரியோ எங்கோ எதிலோ படித்திருக்கிறேன் ’துக்கத்தைவிட ஆழமான கவிதையை மனிதகுலம் இன்னும் கண்டடையவில்லை’ என்றும் அதே இடத்தில் வாசித்த நினைவு. இன்னார் இன்ன இடத்தில் சொன்னது என்பதெல்லாம் மறக்கும் அளவு வயது முற்றிவிட்டது. அடிப்படைத் தேவைகள் சார்ந்த விஷயங்கள் மட்டும்தான் நினைவிருக்கின்றன. அன்றாடத்தைக் கழிப்பதற்கு இது போதாதா…

பிரச்சினை வேறொரு இடத்தில் இருக்கிறது. மேற்சொன்ன சமன்பாடுகளின் பிரகாரம், கடந்து செல்லும் ஒவ்வொரு கணமுமே துக்கமயமானது; சந்தோஷம் போலவே தென்பட்டாலும், துக்கமேதான் அது என்றல்லவா ஆகிறது?

ஆனால், ஆறுமுகம் வேறுமாதிரிச் சொல்வான்: தேநீரிலிருந்து உயரும் ஆவியை,  தரைசேரும் மழைத்துளியை, சாணிபோடும் எருமை மாட்டை என்று எதை வேண்டுமானாலும் வியந்து தள்ளுகிறவன். ஆமாம், அவனைப் பொறுத்தவரை, கவிதை என்பது  அற்புதங்களை நிகழ்த்தும் தளம்; கவிதைக்குள் நுழையும்போதே துக்கமும் மாய நிகழ்வு ஆகிவிடுகிறது என்பான்…

ற்புதமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை.

என்றாள் ஆண்ரியா. 

அதாவது, கொழகொழவென்ற அமெரிக்க ஆங்கிலத்தில் அவள் சொன்னதை தமிழில் நான் இப்படிப் புரிந்துகொண்டேன். எதை முன்னிட்டு இந்த வாக்கியம் உதிர்ந்தது என்று நினைவில்லை; கிட்டத்தட்ட மூன்று சிகரெட்டுகள் தீரும்வரை அவள் பொழிந்து தள்ளியதில் எனக்குள் எஞ்சியிருக்கும் சொட்டுகளில் ஒன்று இது. அத்தனைநாள் பேசாமடந்தையாய் இருந்தவள், அன்றைக்கு ஏன் அள்ளிக் கொட்டினாள் என்பதும் இப்போதுவரை புரியவில்லை. மூக்குவழியாகப் புகை விட்டபடி, மேலும் தொடர்ந்தாள்:

அற்புதங்களின் வழி தன்னைத் தக்க வைத்துக்கொள்ள மதம் முயல்கிறது; ஒவ்வொரு அற்புதமாகக் கலைத்துப்போட அறிவியல் பாடுபடுகிறது. நம்மைப் போன்ற எழுத்தாளர்களுக்கு இரண்டுங்கெட்டான் நிலைமைதான்… 

சொல்லிவிட்டு இருட்டின் தொலைவுக்குள் வெறித்தாள். ஓரிரு விநாடிகள் கழித்து,

… மற்றபடி, வாழ்க்கை என்கிற சமாசாரமே, தன்னளவில், எதிர்மறையான புலம்தான். எதிர்பாராதவற்றை நம் தலையில் சதா கொட்டிக்கொண்டே இருக்கும் தீக்குண்டம். என்னதான் முயன்று அதை நேர்மறையாக்க முனைந்தாலும், நாய்வால் போல உடனடியாய்ச் சுருண்டுகொள்ளும்.

சொல்லிவிட்டு, பெருமூச்சு விட்டாள். பெரும்பாலும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற வாக்கியங்கள் பேசுகிறவள். கோவையாகப் பேசிய ஒரே தருணம் அது.

தினசரியும் முன்னிரவில் தனியே அமர்ந்து பேசும் தொலைபேசி அழைப்புகளின் இடையிடையே ஆழ்ந்து பெருமூச்சு விடுவாள்… மறுமுனையில் யார்; அரையிருட்டில் இருந்தாலும் அவள் அவ்வப்போது கண்ணைத் துடைத்துக்கொள்வது தெரிகிறதே, நாள்தவறாமல் நீடிக்கும் பிரச்சினைதான் என்ன என்றெல்லாம் பாயக் கிளம்பும் மனத்தின் கடிவாளத்தை இழுத்து அடக்குவேன். அநாவசியமான கேள்விகளோ, அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நீட்டுவதோ கூடாது. வந்திருக்கும் இடம் அப்படி. 

அண்டை மாநிலத்தில் நடந்த எழுத்தாளர் முகாமில் கலந்துகொள்ளப் போயிருந்தேன். போகும்போது மிகவும் குதூகலமாய் இருந்த என் மனம், . முகாம் முடிந்து நடைமுறை வாழ்க்கைக்குள் திரும்பும்போது இன்னும் அதிகமான வெறுமை சுமந்திருந்தது. ஆண்ரியாவும் ஒரு காரணம். 

ஆஸ்திரியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியமர்ந்தவள். சச்சதுரமான உடற்கட்டு. பார்வையை உடனடியாய் ஈர்க்கும், சற்று அபரிமிதமான அரைக்கோளங்கள். மோவாயும் சதுரம்தான். பருத்த, இறுக மூடிய, உதடுகள். பார்த்த முதல் நாளிலேயே, வேற்று நாட்டிலிருந்து அல்ல, வேற்றுக் கிரகத்திலிருந்து வந்திருக்கிறவள் என்கிற மாதிரிப் பட்டது.. தனிமை ஓர் உறைபோல அவளைச் சுற்றி மூடியிருந்தது. முதல் நாள் நடந்த அறிமுக நிகழ்வில் மட்டுமே உபரியாக நாலைந்து வாக்கியங்கள் பேசினாள். 

பயணத் திட்டம் என்று ஏதும் இல்லை. இங்கிருந்து கிளம்பியதும் எங்கே போகலாம் என்று இந்தியா பற்றி அறிந்த யாராவது சொல்லலாம்; அல்லது, இந்தியர்களான நானோ ஜோத்ஸ்னாவோகூடப் பரிந்துரைக்கலாம் என்றாள். அபாரமான புகைஞி. வெளிப்படையாய்த் தெரியும் சுவாசம்போல, மூக்கிலிருந்து புகை வெளியேறும். வந்த அன்று அணிந்த ஜீன்ஸை நான் கிளம்புவரை மாற்றவில்லை என்று பட்டது. அறைக்கு நேரே கட்டிய கொடிக்கயிற்றில் உள்ளாடைகளை உலரப் போட்டிருப்பாள்.

இவ்வளவுதான். அதன் பிறகு அவளை அவதானிக்கக் கிடைக்கவில்லை. நான் கிளம்புவதற்கு முந்தின நாள் இரவு என்னோடு நின்று பேச ஆரம்பித்தாள். எனக்கானால், பேராச்சரியம். 

ஏனெனில், சாதாரணமாக, பொது முற்றத்திலிருந்து மற்றவர்கள் கலையும் தறுவாயில்தான் வந்து சேர்வாள். அல்லது, மற்றவர்கள் வந்து சேரும்போது எழுந்து செல்ல முனைவாள். பத்துப்பேரில் நாங்கள் மூவர் மட்டுமே புகைப்பவர்கள். ஜோத்ஸ்னாவுக்கு ஆண்ரியாவிடம் ஏனோ அத்தனை சுமுகம் இல்லை. பெரும்பாலான இரவுகளில் ஆண்ரியாவும் நானும் இருந்து புகைப்போம். ஓரிரு வார்த்தைகள் பேசுவதற்கு வாய்த்த வேளைகள். 

என்னுடன் நிமிடக்கணக்கில் பேசுவாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லையா, இன்னும் ஊன்றிக் கவனித்தேன். அப்போதுதான் அந்த அம்சம் தட்டுப்பட்டது. ஆண்ரியாவின் முகபாவம் எனக்குப் புதியதல்ல – ஆனால், அந்த மங்கல் ஒளியில் தெரிந்த பாவம் மேலதிகப் பரிச்சயம் கொண்டிருந்தது. 

அந்தக் காலத்தில் தாரா என் அக்காவுடன் பேசும்போது காட்டும் அதே வெறுமை. இருந்தும் குளுமை குன்றாத முகம். தாராவைப் போலவே, வெறுமையைத் தாண்டி மிளிரும் வசீகரம். அவளைவிடப் பலமடங்கு அதிக வெளுப்பு. ஆனால், இவள் முகத்தில் அடிக்கடி ரத்தம் பாய்ந்து சிவக்கும். அபூர்வமாக ஒரு தடவை உடல் குலுங்கச் சிரித்தபோது, தளர்வான பனியனுக்குள் பொதிந்திருக்கும் தாராவேதான் அவள் என்று தோன்றியது. இன்னொரு வித்தியாசமும்தான் – இவள் கச்சு அணிந்ததற்கான தடயம் இல்லை…

ஒரு மறு பரிசீலனையும் துளிர்விட்டது – உண்மையில், தாரா என்பது தாரா கிடையாதோ…

கிட்டத்தட்டப் பிரிவுபசாரம் போலவே கூடிப் பேசிக்கொண்டிருந்தோம்.  ஃபின்லாந்திலிருந்து வந்திருந்த ஐனா ஜாவோ பேசி முடிக்கப் போகும்போது அவசர அவசரமாக வந்து உட்கார்ந்தாள் ஆண்ரியா. 

மேடையில் நான் கவிதை வாசிக்கிறேன் என்றால் எங்கள் நாட்டு அதிபரே நேரில் வந்து கேட்பாராக்கும்! பொது வெளியில் செல்லும்போதெல்லாம் என்னைச் சுற்றிக் கூட்டம் கூடிவிடும். இந்த மூன்று வாரங்கள் இங்கே ஒரு அநாமதேயமாக இருக்க முடிந்தது எனக்கு மிகப் பெரிய ஆசுவாசம்…

என்று புன்னகைத்தார் ஐனா. எவ்வளவுதான் அடக்கிக்கொண்டாலும், பெருமிதம் ஓரிரு சொட்டுகள் சிந்தத்தான் செய்தது. யாரோ கேட்டார்கள்: 

ஃபின்னிஷ் மொழியில் ஐனா என்றால் என்ன பொருள்?!

சந்தோஷம், நிரந்தரம் என்று பொருள்.

என்றார் ஐனா. அவரையே உறுத்துப் பார்த்தபடி, இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தாள் ஆண்ரியா. 

சற்றுக் கழித்து, அவரவரும் அறைக்குத் திரும்பிய பின்னர், முற்றத்துக்கு வெளியே பரந்திருந்த இருட்டுக்குள் நுழைந்தேன். ஒரு சிகரெட் பிடித்துவிட்டு அறைக்குப் போகலாம் என்று திட்டம். இருள் என் முதுகைத் தொட்டது. திரும்பினேன். ஆண்ரியா. 

என் கையிலிருந்த லைட்டரை உரிமையாய் வாங்கிக்கொண்டாள். அடங்கிய குரலில் கேட்டாள்:

கிஷேன், என்னுடைய பெயருக்கு என்ன பொருள் தெரியுமா!

தெரியாதே.

உறுதியானவள், ஆண்மை மிக்கவள்! 

சொல்லிவிட்டு, ஒலியெழாமல் குலுங்கிச் சிரித்தாள். முற்றத்திலிருந்து கசிந்த மெல்லொளி இப்போது இருளின் அடர்த்தியை நன்கு தணித்திருந்தது.  நிதானமாய்க் கேட்டாள்:

ஐனா சொன்னதைக் கவனித்தாயா? எழுத்தாளர் எதற்காகப் பொதுவெளியில் தோன்ற வேண்டும். அதிலும் இந்தப் பெண்மணியின் ஒப்பனை என்னை என்னவோ செய்கிறது. அன்றைக்கு அவள் வாசித்த கவிதைகள் அனைத்திலுமே ஆண்கள்மீது எவ்வளவு புகார் இருந்தது. அப்படியானால் இத்தனை மிகையான ஒப்பனை யாருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக? சக பெண்களின் கவனத்தையா! அப்புறம், பொதுவெளியில் தோன்றும் ஆயத்தம் எப்போதுமே அவளிடம் இருக்கிறது பார்த்தாயா… 

நான் மௌனமாய் இருந்தேன். ஆண்ரியா சொல்வது சரிதான். ஐனாவின் ஒப்பனை சற்று மிகையாகத்தான் எனக்கும் படும். இவளானால், தூக்கத்திலிருந்து நேரே வந்தவள் மாதிரி வெளிறி இருப்பாள், எந்நேரமும்.

இருந்தாலும், இரண்டு பெண்களுக்கிடையில் என்னவெல்லாம் ஓடும் என்று சொல்ல முடியுமா என்ன. நாளை மறுநாளிலிருந்து இருவருமே என் பார்வையிலிருந்தும் கவனத்திலிருந்தும் மறைந்துவிடப் போகிறார்கள்… 

ஆனால், அப்படி அல்ல, ஆண்ரியா இன்றுவரை, இந்தப் பகுதியை எழுதும் இப்போதுவரை எனக்குள் நிரந்தரமாய் மீந்திருக்கப் போகிறாள் என்று தெரியாத மூடனாய் நின்றிருந்தேன். அவள் தொடர்ந்தாள்: 

…எல்லா மொழியிலும் எமிலி டிக்கின்ஸன்கள் இருக்கத்தான் செய்வார்கள்; சிலருக்கு மட்டும் உலகப் புகழ் கிட்டுகிறது. ஆனால், தானே இறந்த பிறகு கிட்டினால் என்ன, கிட்டாவிட்டால் என்ன! என்ன சொல்கிறாய்!

அவள் என்னை ஒருமையில் அழைத்ததாகவேதான் நினைக்கிறேன். மறுநாள் நான் விடைபெற்றபோது அவளது செய்கை அதை உறுதி செய்தது. 

வட இந்தியப் பேரிளம்பெண் ஜோத்ஸ்னாவுக்கு கைகுலுக்கி விடை தந்தவள், கழுத்தை இழுத்து என்னை அணைத்துக்கொண்டாள். கழுத்தை மட்டும். ஒன்றுக்கொன்று நிகராக நிறுத்திய யானைத் தந்தங்கள் போல, இடுப்பில் ஒடித்த அடைப்புக்குறிகள் போல, ஒரு கணம் நின்றோம். பிறகு என் கன்னத்தில் முத்தமிட்டாள். அதாவது, என் முகத்தைத் தன் முகத்தருகில் இழுத்து, கன்னத்தோடு கன்னம் வைத்து காது மடலருகே இச்சென்று ஒலி எழுப்பினாள்.

ஆண்ரியாவின் நினைவு ஒவ்வொரு முறை எழும்போதும், அந்த முகமும், அந்த ஒலியும் ஒரு கொத்துப் புகையோடு எனக்குள் எழுந்து, மெல்லக் கலையும்…. எமிலியின் நினைவு அவளுக்குள் வேறு எதையோ கிளறியிருந்திருக்க வேண்டும்.

ஸில்வியா ப்ளாத் பற்றி அறிவாய்தானே? அகால மரணத்துக்குப் பிறகு கிடைக்கவிருக்கும் புகழ்பற்றி அவளுக்கு ஓர்மையிருந்திருக்காதா என்ன! கணவனும் புகழ்பெற்ற கவிஞன்.

அதற்கப்புறம் சொன்ன வாக்கியம்தான் இன்றுவரை அவளை மறக்கவிடாமல் என்னுள் இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது.

என்னுடைய மனைவியும்கூட கவிதை எழுதுகிறவள்தான். நான் நாட்டில் இல்லாத நேரத்தில், தனது கவிதைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டுவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறாள். என்ன அவசரம்?

தூக்கிவாரிப் போட்டது. உடலுக்குள் விசித்திரமான அதிர்வை உணர்ந்தேன். இத்தனை நாளும் அவள் சம்பந்தமாக எனக்குள் சேகரமாகியிருந்த சகலமும் புதுவிதமாக ஒன்றோடொன்று கோத்துக்கொண்டன… என்ன பதில் சொல்வது, பதில் சொல்வதா வேண்டாமா என்றெல்லாம் குழம்பிக்கொண்டிருந்தபோது விருட்டென்று,

பை.

என்று சொல்லிவிட்டுத் தன் அறையை நோக்கி வேகமாக நடந்தாள். 

கடைசியில் ஒரு முத்தமாக மட்டுமே எனக்குள் மீந்திருக்கிறாள் ஆண்ரியா. அதை முத்தம் என்றுகூடச் சொல்லக் கூடாது – காதோரம் ஒலித்த சிறு ஒலி. அந்தக் கணத்தில் எனக்குள் ஊறிய காரணம் தெரியாத கசப்பின் ஒலியேதான் அது.

முகாமுக்கு எங்களை அழைத்திருந்த அமைப்பிடமிருந்து, சில மாதங்கள் கழித்து எனக்கு ஒரு மின்மடல் வந்தது: ஊர் திரும்பிய ஆண்ரியா தற்கொலை செய்துகொண்டுவிட்டாள் என்று தெரிவித்தது.

ரு மரணம் இன்னொன்றை இழுத்து வருகிறது. குறிப்பிட்ட வயதுவரை நடந்தவற்றில் எத்தனையோ சங்கதிகள் மறந்துவிட்டாலும், ஆறாத புண்கள் போல சிலவற்றை மட்டும் பிடிவாதமாக மனம் நினைவில் வைத்துப் பேணுவது ஏன் என்றே புரியவில்லை. அநாவசியமான தருணங்களில் பொறுப்பாக அவற்றை எடுத்துத் தரும் பொறுப்பை மேற்கொண்டிருப்பது யார்; அந்த மாயப் பிரகிருதியின் உள்நோக்கம் அல்லது துர்நோக்கம்தான் என்ன என்பதெல்லாம் ஒருபோதும் புரியாதோ என்னவோ. 

ஞாபகங்களை எடுத்தெடுத்துத் தந்து மிரட்டுவது மட்டுமல்லாமல், இயல்பாகக் கடந்துசெல்லும் நாட்களை இயல்பாகக் கடந்துவிட முடியாதபடி நிகழ்வுகளைக் கோத்துத் தரும் விமரிசையைப் பார்த்தால், இவ்வளவு நாளும் நான் கடவுள் என்று ஆராதித்து வந்தது, நிஜமாகவே கடவுளைத்தானா அல்லது எதிர்த் துருவத்தில் இருக்கும் வேறொரு வியக்தியையா என்று குழப்பம் வந்துவிடுகிறது. 

துயரமான இன்னொரு உள்மடிப்பும் இருக்கிறது. ஆழ்மனத்தின் புழுக்கம் தாளாமல் மூச்செடுக்க மேலே வரும் ஞாபகங்கள் அத்தனையுமே பெண்கள் சம்பந்தமானவை. மேலேறி வரும்போது தத்ரூபமாய் மீண்டும் நிகழ்பவை…

அப்பா ஓட்டல் நடத்தினார் என்றுதான் எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறேனே. அது உயர்வுநவிற்சி என்றும் சொல்லியிருக்கிறேன். அவரே தயார் செய்து அவரே பரிமாறி அவரே மேசை துடைத்து அவரே காசுவாங்கிப் போடும் ஆகச் சிறிய சாப்பாட்டுக்கடை. 

ஒரு நாள் காலை. அக்னி நட்சத்திர வெயில் கனக்க ஆரம்பித்துவிட்ட வேளை. கடைவாசலில் அந்த இளம்பெண் வந்து நின்றாள். இடது தோளில் தொங்கும் டால்டா டப்பா. வலது தோளில், உலகின் அழுக்கு அனைத்தும் மண்டிய துணிப்பை. இடது முன்னங்கையில் வரிசையாய்த் தொங்கும் மணிமாலைகள். முகத்திலும் கழுத்திலும் முன்னங்கைகளிலும் தாரைதாரையாய் ஊற்றும் வியர்வை. 

தனியாக வந்திருந்தாள் என்பதுதான் ஆச்சரியம். பொதுவாக, கூட்டமாகவோ நாலைந்து பேர் சேர்ந்தோ வருவார்கள். புலி நகம் நரிக்கொம்பு என்ற பெயரில் விற்கிற அத்தனையுமே மாட்டுக்கொம்பை இழைத்த பொருட்கள்; பவளம் என்று காட்டுவது வெறும் ப்ளாஸ்ட்டிக் என்றெல்லாம் கெட்டிக்கார உறவினர் யாரோ எப்போதோ சொல்லியிருந்தது நினைவு வந்தது. பணி ஓய்வின் பலன்களை ஒட்டுமொத்தமாய் ஒரு சீட்டுக் கம்பெனியில் முதலீடு செய்து, கம்பெனி கவிழ்ந்ததும் தெருவுக்கு வந்துவிட்டார் அவர்; ஓரிரு மாதங்களில் மாரடைப்பால் இறந்தார் என்பது இப்போது நினைவு வருகிறது. 

வந்து நின்றவளிடமிருந்து வியர்வை நாற்றமும் இனம்புரியாத ஒருவிதக் கவிச்சியும் பீறிப் பெருகின. கடுமையான விலகல் உணர்வு எழுந்தது எனக்குள். ஆனாலும் அந்த இடத்தைவிட்டு நகரவோ, பார்வையை அகற்றவோ முடியவில்லை.

ஓட்டலையே வெறித்துக்கொண்டு நின்றாள். மேடை அடுப்பருகில் இருந்த அப்பா திரும்பிப் பார்த்த மாத்திரத்தில், மெல்லிய மாராப்பின் கீழ்ப்பகுதியை ஒதுக்கி, குழிந்த தொப்புளின்மேல் பளீர் பளீரென்று அறைந்துகொண்டாள். ஆலிலைபோலப் படிந்த வயிறு அதிர்ந்தது. அப்பா பதறினார்.

ஏய், ஏய்… என்ன செய்யறே?

பஸிக்குது ஸாம்யோவ். நாலு நாளா எதூமே விக்யலே. பஸி உஸிர் போவுது ஸாமீ…

மேலும் இரண்டு அறை. இதற்குள் அப்பா ஒரு இலையை எடுத்து மேசைமேல் போட்டிருந்தார். உட்கார்ந்தாள். உடலில் பூட்டிய எதையும் கழற்றி வைக்காமலே அவதி அவதியாக இட்டிலி தின்ன ஆரம்பித்தாள். மேலாடையின் மேல் பகுதி தாராளமாக விலகியிருந்தது. 

முதன்முதலாகக் கிடைத்த தரிசனம் அது. பின்னாட்களில், எத்தனையோ பார்க்கக் கிடைத்துவிட்டது. ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட என் சொந்த அக்கா, நான் எழுதும் கதைகளில் ஒன்றைக்கூடப் படிக்க மாட்டேன் என்று சபதமெடுத்ததற்கு ஒரே காரணம்தான் – தற்செயலாக அவள் படிக்கக் கிடைத்த முதல் கதையிலேயே நாலு இடத்தில் ஒரு சொல்லும், வர்ணனையும் விவரிப்பும் இருந்தது.

அவள் கிடக்கிறாள். உண்மையில், மாடியிலிருந்து தாராவைப் பார்க்கும்போது, சிலநேரம் கவனக்குறைவாய் இருப்பாளா, பின்னால் வளைந்து முன்னால் துருத்திய உடம்பில் என்னவெல்லாம் தெரியும் என்கிறீர்கள்… இப்போது யோசித்தால் நான் பார்த்தது தாராவை அல்ல, என் பால்யத்தில் பார்வைக்குள் வந்து மறைந்த நரிக்குறவப் பெண்ணைத்தான் என்று தோன்றுகிறது. அப்படிப் பார்த்தால், தாரா என்று தனியாக ஒன்றே கிடையாதோ என்றுகூடப் படுகிறது… 

சாப்பிட்ட இலையைச் சுருட்டி, வெளியே இருந்த தகர டின்னில் வீசிவிட்டு, கழுவிய கையைக் குட்டைப்பாவாடையின் விளிம்பை உயர்த்தி, தானும் சற்றுக் குனிந்து துடைத்தபடி திரும்பினாள். இப்போது இன்னும் துல்லியமான தரிசனம்… அப்பாவைப் பார்த்துக் கைகூப்பினாள். கண் மல்கித் ததும்பியது. 

ஏங்கிட்டெக் காஸு இல்லீங்கோ ஸாமீ…

அப்பா கையை உதறினார். வேறெங்கோ பார்த்தபடி, 

அதெல்லாம் யார் கேட்டா? போ. போ. வயிறு ரொம்பிருச்சில்லே…

அவள் கண்கள் இன்னும் அதிகமாய்ச் சுரப்பதைக் கண்டேன். அப்பாவின் பாதத்தைத் தொடக் குனிந்து இன்னும் நெருங்கி வந்தாள்.

அப்பா இப்போதும் பதறினார். அவள் இருந்த நேரம் முழுவதும் அவளைப் பார்க்கவேயில்லை அவர் என்பதை இப்போது வேறுவிதமாகப் புரிந்துகொள்ள முடிகிறது…

சட்டென்று தன் ரவிக்கையின் முன்புறத்தில் கையை நுழைத்தாள். பளிங்கு கோலிக்காய் போன்ற வஸ்துவை எடுத்து நீட்டினாள். அப்பா முகத்தைச் சுளித்தார். 

அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீ மொதல்லே கிளம்பு…

என்று அதட்டலாகச் சொன்னார். நீட்டிய கையை மடக்கவில்லை அவள்.

வாணா வாணா ஸொல்லாதே ஸாமி. இது ஸும்மா இல்லெ. குளிகெ ஸாமீ, குளிகெ… ஸத்துப் போனவுங்களெக் கூடோ உசிராக்கிரும்…

அப்பா அந்த வஸ்துவை வெறித்தார். ஏதோ முடிவெடுத்தவர் மாதிரித் தலையை ஆட்டிக்கொண்டே எதிர் மேடையை நோக்கி நகர்ந்தார். கழுவிக் கவிழ்த்திருந்த காபி டபரா ஒன்றை எடுத்து அதில் கோலிக்காயை வாங்கினார். இன்னொரு தடவை கைகூப்பி வணங்கிவிட்டு, கொலுசொலியோடு ஊருக்குள் நடந்துபோனாள் அவள்.

பார்வைக்கு மறைந்த பிறகு, கல்லாவில் இருந்த இழுப்பறையில் கோலிக்காயைச் சரித்து உருளவிட்டார். டபராவை மறுபடியும் கழுவிக் கவிழ்த்தினார்.

அப்பாவைப் பார்க்கக் கடைக்குள் போகும்போதெல்லாம், அந்த இழுப்பறையை இழுத்துப் பார்ப்பேன். கோலிக்காய் முன்னோக்கி உருண்டு ஓடிவரும். சட்டென்று வியர்வைக் கவிச்சி உயர்வதாக பிரமை தட்டும். இழுப்பறையை மூடும்போது மறுபடி உருண்டு தன் இடத்துக்கு மீளும் ஒலி கேட்கும். இப்போதுகூடக் காதில் ஒலிக்கிறது.

இன்றுவரை வியப்பு மங்காத விஷயம் ஒன்றும் உண்டு.  

ஒவ்வொரு முறை பார்க்கும்போது ஒவ்வொரு நிறத்தில் தென்படும் அது. குளுமையான வெளிர்நீலம், வசீகரமான ஊதா, பளபளக்கும் இளம் பச்சை, நிறமற்ற படிக நிறம் என்று. பார்வையை அகற்ற முடியாமல் தவிப்பேன். ஒரேயொரு தடவை, அம்மாவிடம் அடிவாங்கி, அப்பாவிடம் புகார் சொல்லப் போன சமயத்தில், எரிக்கும் சிவப்பு நிறமாய் தகித்தது. 

ந்தப் பெண் வந்து போனது, 1972 மே மாதத்தில். ஜூலை மத்தியில் அப்பா இறந்துபோனார். அன்றைக்கு வீட்டில் இருந்த பரபரப்பு பசுமையாக நினைவிருக்கிறது. அவர் நிச்சலனமாகப் படுத்திருந்த காட்சி இப்போதும் கனக்கத்தான் செய்கிறது. கண்ணீராலும், ஆடைகலைந்து தலைவிரிகோலமான பெண்களாலும் நிரம்பியிருக்கும் காட்சி. .

புதிதாகக் கட்டப்பட்ட ஏணியில் அப்பாவைக் கிடத்தி, எல்லாருமாகச் சேர்ந்து தூக்கிப்போனதும், என்னை சுந்தரம் அண்ணா கொடுங்கையில் ஏந்தித் தோளில் சாய்த்துக்கொண்டு நடந்ததும், பெரியண்ணா அப்பாவின் நெஞ்சில் தணலைக் கொட்டிக் கவிழ்த்தியதும் பல தடவை நானே சொல்லியிருக்கிறேன்.

ஆனால், இத்தனை காலமும் சொல்லாது விடுபட்டிருந்த விஷயம் ஒன்று இருக்கிறது. 

மகோதரம் வந்து அப்பா படுத்த படுக்கையானதும் ஓட்டலை இழுத்து மூடியாகிவிட்டது. சாப்பாட்டு மேஜைகளையும், டபரா தம்ளர்களையும், வாணலி, ஜார்ணி, குறுப்பி, மைசூர்ப்பாக்கை கட்டடம் போல அவர் அடுக்கும் வட்டப் பலகை என்று எதையெதையோ யார்யாரோ வாங்கிக்கொண்டு போனார்கள். சதுர வடிவான ராட்சஸ ஆட்டுக்கல்லைக்கூட நகர்த்தி எடுத்துக்கொண்டு போனார் ஒருத்தர். கல்லாவாக இருந்த மரமேஜை மட்டும் எங்களுடனே தங்கிவிட்டது.

நோய் வசப்பட்டு அப்பா படுத்திருந்த அறையில் கட்டிலின் கால்மாட்டில் கிடந்தது. லிவ்52 ப்ரோட்டீனெக்ஸ் இன்னும் எனக்குப் பெயர் நினைவில்லாத ஏகப்பட்ட மருந்து மாத்திரைகள் அதன்மீதுதான் சிதறியிருக்கும். அதன் அருகிலேயே என்னைப் போகவிட மாட்டார்கள்.

பதிமூன்றாவது நாள் கிரியைகள் முடிந்து, வந்தவர்கள் எல்லாரும் போன பிறகு, ஒரு முற்பகல் வேளை. சின்னத் திண்ணையில் சிலை மாதிரி உட்கார்ந்திருந்தாள் அம்மா. அப்பா தனது அந்திம நாட்களில் நிரந்தரமாகப் படுத்திருந்த இடம் அது. இலக்கின்றி வெறித்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து இறங்கியது.

வளாகத்துக்குள் குரங்காட்டி ஒருவன் நுழைந்தான். கவுனும் காதில் தோடும் அணிந்த குரங்கு தோளில் அமர்ந்து அவன் தலையை ஆசையாய்க் கிளறிக்கொண்டிருந்தது. 

மனம் படுவேகமாக இயங்க, வீட்டுக்குள் வேகமாகப் போனேன்.

சிந்திய மருந்துத் தடங்கள் மட்டுமே மீந்திருக்க, அதே இடத்தில் கிடந்தது மேஜை. அவசர அவசரமாக இழுப்பறையைத் திறந்து பார்த்தேன். சில்லறை போட்டு வைக்கும் எவர்சில்வர் கிண்ணம், ரூபாய்த் தாள்களுக்கான மர டப்பா, ஸேஃப்டி பின்கள் நாலைந்து, மைசூர்ப்பாக்கைக் கட்டிகளாக அறுக்க உதவும் மர ஸ்கேல், எவர்சில்வர் விபூதிச் சம்புடம், எண்ணெய்க் கறை படிந்த தீப்பெட்டிகள் இரண்டு, நாலைந்து பத்திகள் மிச்சமிருக்கும் ஊதுபத்திக் குழல், அதிலிருந்து எழும் அழுத்தமான நறுமணம் என்று அப்படியே இருந்தது இழுப்பறை.

குளிகையைக் காணவில்லை. 

ஐயோ. பத்துப் பதினைந்து நாளுக்கு முன்னால் இந்த ஞாபகம் வந்திருக்கக் கூடாதா என்று ஏக்கமாக இருந்தது. 

பரவியிருந்த இருட்டுக்கும், சதா மூடியே கிடக்கும் அறையின் முடைநாற்றத்துக்கும் மத்தியில் தனியாக நின்று அழுதேன். கொஞ்ச நேரம்தான். பதினோரு வயதின் கொள்ளளவுக்கு அவ்வளவு துக்கம்தானே தாங்கும். எப்படியோ, தன்னியல்பாக வெளியே வந்திருப்பேன் என்று தோன்றுகிறது. 

ஆனால், வேறொன்று நடந்தது. வெளியே வரவிடாமல், வெகுகாலத்துக்கு என்னைப் பீடித்திருந்த விஷயம். என் மானசீகத்தில் நிரம்பிய, உயிர் வளர்க்கும் அமுதம் ஊறும் இடம்… 

*******

writeryuvan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button