
நான் பொதுவாக இவ்வாறான நிகழ்வுகளுக்குச் செல்வதில்லை. கூட்டம், சத்தம், கட்டாயப் புன்னகைகள், இவை எல்லாம் என்னுள் ஒரு மெதுவான அந்நியத்தன்மையை உருவாக்கும். மனிதர்கள் ஒரே இடத்தில் கூடி நிற்கும்போது, அவர்கள் ஒருவருக்கொருவர் அருகில் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாழ்க்கைகளின் வெவ்வேறு இடங்களில் இருந்து, சில மணி நேரம் மட்டும் ஒட்டிக்கொள்வது மாதிரி ஓர் உணர்வு எழும். ஆனாலும், மனோஜ் என் நீண்டகால நண்பன். அவன் மகளின் திருமணம். அவன் அழைப்பில் இருந்த அந்த உரிமையை என்னால் மறுக்க முடியவில்லை.
மண்டபத்துக்குள் நுழைந்ததும், அதிகப்படியான ஒளி என்னை ஒரு கணம் நிறுத்தியது. வெள்ளை, மஞ்சள், சிகப்பு என ஒவ்வொரு விளக்கும் ஒரு நினைவின் நிறம் போலிருந்தது. மேலே தொங்கிய மல்லிகை, ரோஜா மலர்கள் கலந்த மாலைகளும், அதன் வாசனைகளும், ஒரு காலத்தை மீண்டும் நினைவுபடுத்தியது. நான் ஒருகணம் அங்கே நின்றுகொண்டேன்; கூட்டத்தைப் பார்த்தேன். சிலர் தங்களுடைய வாழ்க்கையை ஆடைகளில் அணிந்திருந்தனர்; சிலர் பேசிக்கொண்டே தங்களுடைய வெற்றிகளை அளந்துகொண்டிருந்தனர்; சிலர் வெறுமனே பார்த்துக்கொண்டே இருந்தனர். அவர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு வெளிப்புறக் காட்சி மட்டுமே.
நான் அவர்களில் ஒருவன். மண்டபத்தின் சத்தம் மெதுவாக ஓர் அலை போல மாறியது. நாதஸ்வரத்தின் ஒலி மேலே ஏறிக்கொண்டே போகிறது, ஓர் அலை உயர்வதைப் போல. மிருதங்கத்தின் ஒலி கீழே தட்டுகிறது, கரையைத் தாக்கும் ஒலி போல. அந்த இசைக்குள் சிரிப்புகள் உடைகின்றன; வாழ்த்துகள் மிதக்கின்றன; பெயர்கள் அழைக்கப்படுகின்றன.
இந்தப் பரபரப்பின் நடுவே அவள்! முதலில் அது ஒரு தவறான நினைவாகத் தோன்றியது. சில முகங்கள் காலத்தோடு மங்கிவிடும்; சில முகங்கள் மட்டும் நினைவில் உறைந்துவிடும். அவள் எந்த வகை என்று நான் மறந்திருந்தேன். ஆனால் அது நிச்சயம் அவள்தான். அவளும் என்னைப் பார்த்துவிட்டாள். அந்த நொடியில், சத்தம் இருந்தும், சத்தம் இல்லை; ஒளி இருந்தும், ஒளி இல்லை. ஒரு வெற்றிடம். ஆனால் அது காலியாக இல்லை. அது நாங்கள் இருவரும் மட்டும் நிரப்பிய இடமாக இருந்தது.
ஒரு காலத்தில், இதே மாதிரி ஒரு கூட்டத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து நின்றிருந்தோம். அப்போது அவள் என் பக்கத்தில் இருந்தாள்; இப்போது எதிரில்.
நாங்கள் பிரிந்த நாள் நினைவுக்கு வந்தது. அவள் என்னைப் பார்த்தாள். இப்போது நாங்கள் இருவரும் கூட்டத்தைத் தவிர்த்து, ஒருவரை ஒருவரின் பார்வையைத் தவிர்க்கிறோம்.
“இனி சந்திக்கவே கூடாது,” என்று ஒருநாள் நாங்கள் முடிவு செய்தோம். அது கோபத்தின் முடிவன்று; அது ஒரு பயத்தின் முடிவு. மீண்டும் தொடங்க முடியாத ஒன்றை மீண்டும் உடைக்க வேண்டாம் என்ற ஓர் அமைதியான ஒப்புதல். இப்போது, அந்த ஒப்புதல் இந்த மண்டபத்தில் உடைந்துகிடக்கிறது.
அவள் மெதுவாக என்னை நோக்கி நடக்கிறாள். நான் அசையவில்லை. அவளிடம் மீண்டும் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற ஒரு பழைய பழக்கம், இன்னும் என்னுள் உயிரோடு இருந்தது. அந்த நேரத்தில் மனோஜ் என்னைத் தட்டி “வா டா… எப்ப வந்த?”
அவன் கையை என் தோளில் போட்டுக் கொண்டு கூட்டத்துக்குள் இழுத்தான். சில அலைகள் நம்மைக் கரையிலிருந்து விலக்கிவிடும்; சில அலைகள் நம்மைக் கூட்டத்துக்குள் தள்ளிவிடும்.
******
நீலநிறப் புடவை. அவள் எப்போதும் நீலநிறத்தைத் தேர்ந்தெடுப்பாள். “கடல் நினைவூட்டுகிறது,” என்பாள். “எந்தக் கடல்?” என்று நான் கேட்டால், “நீயும் நானும் ‘போகாத கடல்’” என்று சிரிப்பாள்.
அந்தச் சிரிப்பில் ஒரு மெல்லிய கசப்பு இருக்கும். அது அப்போது கவிதைபோலத் தோன்றியது. இப்போது அது ஒரு முன்னறிவிப்புபோலத் தோன்றுகிறது. இப்போது, இந்தக் கல்யாண மண்டபத்தின் மத்தியில், அவள் மீண்டும் நீலமாக நிற்கிறாள். நாதஸ்வரமும் மிருதங்கமும் இணைந்த இசை கரையைத் தட்டுவது போல ஒலிக்கிறது. மனிதர்களின் நடைகள், சிரிப்புகள், ஒளிகள் என எல்லாம் சேர்ந்து ஒரு கடலின் சலனத்தை உருவாக்குகின்றன. நினைவுகள் எல்லாம் சேர்ந்து கடலின் உப்பாய் கரிக்கிறது.
நான் அவளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவள் என்னைப் பார்க்கவில்லை. அல்லது பார்க்காமல் இருப்பதைக் கற்றுக்கொண்டிருக்கிறாள். நாங்கள் ஒருபோதும் போகாத இடங்கள் எத்தனை? சொல்லாமல் விட்ட வாக்கியங்கள், தொடங்காத பயணங்கள், முடிக்காத சண்டைகள் என அனைத்தும் அந்தக் கடலின் அடியில் கிடக்கின்றன. நாங்கள் பிரிந்த நாள் ஒரு கரைதான்; அதன் அப்பால் இருந்ததை இருவரும் பார்க்காமல் திரும்பிவந்தோம். அதனால்தான் அந்தக் கடலுக்கு இன்னும் போகவில்லை.
ஒரு கணம் அவள் திரும்புகிறாள். அந்தச் சுழலின் நேரம் என் சுவாசத்தை மறந்துவிடுகிறது. நீலப் புடவையின் ஒவ்வொரு மடிப்பும் கடலின் அலையைப் போல உடைந்து, மீண்டும் ஒன்றாகிக்கொண்டே இருக்கிறது. ஒளி அதில் மிதந்து, நுரைபோல சிதறுகிறது. அவள் தோளின் வளைவில் ஒரு கரை, அவள் நடையின் மென்மையில் ஓர் இழுத்துச் செல்லும் அலை.
அவள் கண்கள் என்னைத் தொட்ட அந்தச் சிறிய நொடி அது பார்வை அல்ல, ஒரு நீர்மத் தாக்கம். அந்தத் தீண்டலில் ஒரு பழைய மின்னல். முதல் முறையாக அவள் விரல்கள் என் விரல்களைத் தொட்ட அந்த மாலை உஷ்ணம், அந்தச் சிறிய அதிர்வு இப்போது மீண்டும் என் நரம்புகளில் விழித்தெழுகிறது. சொல்லாமல் சொன்ன வாக்குறுதிகள், நிசப்தமாக இணைந்த இரு மூச்சுகள் அவை அனைத்தும் ஒரே நேரத்தில் திரும்பி வந்து என் உள்ளத்தை நிரப்புகின்றன.
என் மார்புக்குள் எங்கோ ஒரு மறைந்த கிணறு திடீரென நிரம்புகிறது. மண்டபம் மெதுவாகக் கரையத் தொடங்குகிறது; சுவர்கள் கண்ணாடி நீராக உருகி, விளக்குகள் தொலைதூர நட்சத்திரங்களாகத் துடிக்கின்றன. சத்தங்கள் எல்லாம் தண்ணீருக்குள் பேசும் குரல்களாக மந்தமாகி, ஒவ்வொரு சொல்லும் அலைகளால் அடித்துச் செல்லப்படுகிறது. கூட்டம் மிதக்கிறார்கள். அவர்கள் முகங்கள் நினைவுகளின் துளிகளாகப் பிளந்து மறைகின்றன.
நான் மட்டும் அங்கே நின்றிருக்கிறேன். ஒரு பழைய நினைவின் அடியில். காலடியில் மணல்; அதன் கீழே புதைந்திருக்கும் காலங்கள். நான் எடுக்கும் ஒவ்வொரு மூச்சும் உப்புச் சுவையுடன் வருகிறது. அது பிரிவின் கசப்பு. ஒருகாலத்தில் நம் இருவரும் சிரித்த அதே இடைவெளிகள் இப்போது வெறுமையாகி, அந்த வெறுமை என் நெஞ்சை மெதுவாக அரிக்கிறது. அருகில் இருந்த நாட்கள் தொட்டுத் தொட்டு நெருங்கிய அந்த நிமிடங்கள் இப்போது தொலைவில் அலைபோல் பின்வாங்கி, என்னைத் தனியாக விட்டுச் செல்கின்றன.
அவள் சிரிக்கவில்லை; அழவும் இல்லை. ஆனால் அவள் முகத்தில் ஒரு மௌனம், புயலின் ஆக்ரோஷமா, அல்லது கடந்த புயலின் சாயலா? எனத் தெரியாத ஒரு நிறுத்தம். அவள் கண்களில் சொல்லப்படாத கதைகள், அடித்தளத்தில் சிக்கிய கப்பல்கள் போல அமைதியாகக் கிடக்கின்றன. அந்தக் கண்களில் ஒருகணம் நான் பார்த்த ஈர்ப்பு, நெருங்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையா, அல்லது மீண்டும் விலகிவிடும் பயமா? அது இரண்டின் கலவையாக என் உள்ளத்தை இழுத்துச் செல்கிறது.
முதல் தீண்டல், பிரிவின் கசப்பு, இப்போது மீண்டும் ஒன்றாகக் கலந்த நீராகி என்னை முழுவதும் சூழ்கின்றன. நான் நகர முயன்றால், அந்த நீர் என்னை மீண்டும் பின்னுக்கு இழுக்கிறது. அவள் அருகே வரவில்லை; ஆனால் அவள் இல்லாத இடம்கூட அவளால் நிரம்பியிருக்கிறது.
அந்த ஒரு கணம் நீள்கிறது. நீரின் அழுத்தம் அதிகரிக்கிறது. நான் மேலே வரவேண்டும் என்று தெரியும். மூச்சு தேவை. ஆனால், எதோ ஒன்று அவள் பார்வையின் எடை, அந்தத் தீண்டலின் நினைவு, பிரிவின் கசப்பு அவை அனைத்தும் சேர்ந்து என்னை அங்கேயே தங்கச் சொல்லுகின்றன.
அந்த ஆழத்தில், நான் மெதுவாகப் புரிந்து கொள்கிறேன்
நான் மூழ்கிக்கொண்டிருப்பது நீரில் அல்ல,
அவளை விட்டுப் பிரியாத என் நினைவில்தான்.
*****
அது மழை நின்ற பிற்பகல். நகரத்தின் ஒரு பழைய புத்தகக் கடை. நான் ஒரு புத்தகத்தைத் திறந்து பாதி வாசித்துக்கொண்டிருந்தேன்; வாங்கப் போவதில்லை, ஆனால் விடவும் முடியாத அந்த இடைநிலை. அவள் அங்கேயே நின்றிருந்தாள். ஒரு நீலநிறச் சால்வை, மழைத் துளிகள் இன்னும் அதன் ஓரங்களில் ஒட்டிக்கொண்டிருந்தன. “அந்தப் புத்தகம் ஒன்னுதான் இருக்கா?” என்று கேட்டாள். நான் தலை தூக்கிப் பார்த்தேன். அது ஒரு சாதாரணக் கேள்வி. ஆனால் அந்த நொடியில், வாழ்க்கை ஒரு புதிய திசை எடுத்தது. ஒரு பார்வையை மட்டும் வீசினேன். அவள் சிரித்தாள்.
அதற்குப் பிறகு, எங்களுடைய வாழ்க்கை ஒரு மெதுவான ஓட்டம். காபி கடைகள், நீண்ட நடைப்பயணங்கள், பேசிக்கொண்டே மறந்து போன நேரங்கள்.
நாங்கள் பிரிந்ததற்கான காரணம்; அது ஒரு பெரிய சம்பவம் இல்லை. அது பல சிறிய மௌனங்களின் சேர்க்கை. சொல்லாமல் விட்ட வார்த்தைகள், கேட்காமல் விட்ட கேள்விகள், புரிந்துகொள்ளாமல் விட்ட உணர்வுகள். அவள் மெதுவாகத் தன்னை மூடிக்கொண்டாள்; நான் மெதுவாக விலகிக்கொண்டேன்; அவள் அதை எப்படி எடுத்துக்கொண்டாள் என்று தெரியவில்லை. எங்களுக்குள் ஓர் இடைவெளி உருவானது, அதை யாரும் நிரப்ப முயலவில்லை. எல்லோரும் அவற்றைப் பெரிதாகப் பின்னினார்கள். கடைசியாக நாங்கள் சந்தித்தது நீதிமன்ற வளாகத்தில். அந்த இடம் விசித்திரமானது. அங்கே மனிதர்கள் உணர்வுகளைக் கொண்டு வருகிறார்கள், ஆனால் வெளியே போகும்போது காகிதங்களாக எடுத்துச் செல்கிறார்கள். நாங்கள் இருவரும் இரண்டு வெவ்வேறு பெஞ்சுகளில் அமர்ந்திருந்தோம். அவள் மீண்டும் நீலத்தில் இருந்தாள், இந்த முறை ஒரு சீருடை போல, உணர்ச்சிகளை மறைக்கும் ஒரு போர்வை போல அணிந்திருந்தாள். நான் அவளருகில் சென்று அமரவில்லை. அவளும் என்னை அழைக்கவில்லை.
“கேஸ் நம்பர்…” என்று யாரோ அழைத்தார்கள். எங்களுடைய பெயர்கள் அந்தச் சத்தத்தில் கலந்து போனது. நாங்கள் உள்ளே சென்றோம். சில நிமிடங்கள். சில கையெழுத்துகள். சில சட்ட வார்த்தைகள். ஓர் உறவு, அது ஒருகாலத்தில் உயிரோடு இருந்தது. இப்போது ஒரு கோப்பின் உள்ளே அடைக்கப்பட்டது.
வெளியே வந்தபோது, அவள் என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் கோபம் இல்லை; வலி இருந்தது. ஆனால் அது பழகிப் போன வலி. அந்தப் பார்வை மட்டும் இன்னும் அப்படியே என்னுள் இருக்கிறது. இப்போது, இந்தக் கல்யாண மண்டபத்தில், அந்த நினைவுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் எழுகின்றன. அவர்களுக்கு இது ஒரு புதிய தொடக்கம். எனக்கு, இது ஒரு பழைய முடிவின் எதிரொலி. அவள் அங்கே நிற்கிறாள் நீலநிறப் புடவையில். மழை நின்ற அந்த முதல் நாள், நீதிமன்றத்தின் அந்தக் கடைசி நாள், இவை இரண்டும் அவள் அருகில் ஒன்றாக நின்றிருக்கின்றன.
நான் அவளைப் பார்க்கிறேன். அவள் என்னைப் பார்க்கிறாள். இந்த முறை, எங்களுக்குள் வார்த்தைகள் தேவையில்லை. நாங்கள் இருவரும் அறிவோம், நாங்கள் ஒருபோதும் போகாத கடல் இன்னும் அங்கேயே இருக்கிறது. அதைத் தாண்டிச் செல்ல நாங்கள் முயலவில்லை.
*****



