
“கேட்ச்……..!”
ஃபுல்டாஸை இறக்கிய பவுலரும், அதைத் தவறான திசையில் திருப்பிவிட்ட பேட்ஸ்மேனும் வானத்தைப் பார்த்தார்கள்.
தனது அரை டிராயரை அவசரமாகத் தூக்கிவிட்டபடி, பந்து பறக்கும் திசையை நோக்கி ஓடிய சிறுவனின் முதுகு ‘விராட்’ என்றது. இந்தக் கேட்சை பிடித்துவிட்டால் முழு டீமும் காலி.
அப்போதுதான் அந்தப் பெரிய விமானத்தைப் பார்த்தான்.
ஏர்போர்ட் அருகிலிருக்கும், இந்தப் புறம்போக்கு மைதானத்தில் விளையாடும்பொழுது, இப்படித் தாழப் பறக்கும் விமானங்களைப் பார்ப்பது, அந்தச் சிறுவர் கூட்டத்திற்கு ஒன்றும் அதிசயமில்லைதான். ஆனால், இந்த விமானம் அதிகச் சப்தமின்றி, நூலருந்த பட்டமாக, வானத்திலிருந்து இறங்கும் அமரர் ரதம்போல, அவர்களை நோக்கி இறங்கிய வண்ணமிருந்தது.
விமான அலுமினிய முகப்பில் பட்டுத்தெறித்த சூரியக்கதிர்கள், முகத்தில் பாதரசக் கண்ணாடியைக் காட்டுவதுபோல இருக்க, ஒரு வினாடி, கூச்சத்தால் கண்களை மூடிக் கொண்டான் அந்தச் சிறுவன்.
விழிகளைத் திறந்து பார்க்கும்பொழுது, பெருத்த சப்தத்துடன், ஒரு மஞ்சள் நிற நெருப்புக் கோளம், அருகில் உள்ள கட்டடத்தின் மேல்தளத்திலிருந்து உயர்ந்தது. தொடர்ந்தது கரும் புகை, ஏவியேஷன் பெட்ரோலிய நாற்றம்……..
**********
“டிங்….டாங்”
பாகீரதி அம்மாள் கதவைத் திறக்க, “வணக்கம் அம்மா” என்றபடி உள்ளே நுழைந்தாள் ஷாஸ்வதி.
“பவித்ரா இல்ல?” என்றபடி, வீட்டுக்குள் எட்டிப் பார்த்தாள்.
“கே.ஜி. கிளாஸ் டான்ஸ் ரிகர்சலுக்காக பிங்கியை ஸ்கூலுக்கு அழைச்சிட்டுப் போயிருக்கா; உட்காருமா”
ஹேண்ட்பேக்கிலிருந்து சாக்லேட் பாக்கெட் ஒன்றை எடுத்தவாறே, “பிங்கி இப்ப எப்படியிருக்கா ஆண்டி?”
“இன்னமும் நினைச்சு நினைச்சு அழுவா. சமாதானப்படுத்தித்தான் தூங்க வைக்க வேண்டியிருக்கு”
ஷோகேஸ் மேடையில், அன்றலர்ந்த மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட பிரவீன், எதுவும் நடக்காததுபோல் கோட்சூட்டில், யாருக்கோ புன்னகை சிந்திக்கொண்டிருந்தான்.
பாகீரதி டீ கப்பை அவளருகில் வைத்து, “பவித்ரா இல்லாத சமயத்தில்தான், உங்கூட பேசணும்னு அழைத்தேன்..”
“அரை மணிநேரம் முன்னாலயே வந்திருப்பேன். அர்ஜெண்ட் பேட்ச்-அப் பண்ண வேண்டியிருந்து. நந்தனை பாத்துக்கச் சொல்லிட்டு கிளம்பினேன், சொல்லுங்க”
“நந்தன், எப்படி இருக்கான்?”
“ஹி இஸ் ஃபைன். ஏதும் உதவி வேணுமா?”
“யெஸ்.. பெரிதாக”
“புரியலைமா..”
புரியும்படி விளக்கமாகச் சொன்னார் பாகீரதி.
சொல்லி முடித்ததும் தாரை தாரையாகக் கண்ணீர். ஷாஷ்வதியின் கண்களும் பனித்தன.
“பவித்ராவுக்காக மாமியார் ஸ்தானத்திலிருக்கும் நீங்கள் இப்படி உருகறது சாதாரணமான விஷயமில்லைமா. ஐ வில் டூ த பெஸ்ட்” என்று காலைத் தொட்டுக் கும்பிட்டாள்.
“உனக்கு நல்லதே நடக்கும்” என்று பாகீரதி அவளைக் கட்டிக் கொண்டார்.
**********
DevOps என்று தொங்கிக்கொண்டிருந்த பதாகைக்கடியில், ஜோடியாக இருந்த மானிடர்களை மாறி மாறி பார்த்தபடி பிஸியாக இருந்த ஷாஸ்வதி, “ஹாய்” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
“ஏய் நந்தன், இந்த லைட்ஷேட் பர்பிள் ஷர்ட்ல ஸ்மார்ட்டா இருக்க!” என்றவள், பக்கத்து இருக்கையை அவன் உட்காருவதற்காக நகர்த்தினாள்.
வழக்கமான, க்ளவுட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், S3, லாம்டா, AWS போன்ற பணி சம்பந்தமான, பரிபாஷைகளின் பரிமாற்றங்கள் முடிந்தபின்,
“எங்க பவித்ராவை டெஸ்க்ல காணும்?”
“கொஞ்சம் லேட் ஆகும்னாள், பிரவீன் சம்பந்தமா, பேங்க் போயிட்டு வரணும்னு சொன்னாள்”
நந்தனின் உதடுகளிலிருந்து வருத்தம் கலந்த, ‘ப்ச்’ வந்தது.
“நேத்து சாயங்காலம், பவித்ரா வீட்டுக்குப் போயிருந்தேன்”
“ஓ அப்படியா? பிங்கியைப் பாத்தியா?”
“இரண்டு பேரும் வெளில போயிருந்தாங்க. அவங்க மாமியார்தான் ரொம்ப நேரம் பேசினாங்க”
“பாஹி மேடம், அற்புதமான மனுஷி”
“கரெக்ட் நந்தா, அவங்க இல்லைன்னா பவி ரொம்பவே ஒடைஞ்சு போயிருப்பா”
நந்தன் மௌனமானான்.
“அந்த நாளை நினைச்சா, இன்னும் பதறுதடா”
ஷாஷ்வதி, அந்த நாளை நினைவுக்குக் கொண்டு வந்தாள்.
“அன்று, மதியம் பவித்ரா அலுவலகத்திற்குள் நுழைந்தாள். ‘என்ன ஷாஷ் மொபைல மூழ்கிட்ட, யாரோட கடலை?’ என்றபடி பக்கத்துச் சீட்டில் அமர்ந்து லேப்டாப்பை திறந்தாள். நான் அவகிட்ட,
‘வெளிநாடு போகிற ஃப்ளைட், கிளம்பின சில நிமிஷங்களிலேயே ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சாம்பா, அனேகமா எல்லாரும் காலி..ங்குறாங்க’
‘ஓ..!, எங்க காட்டு’ என்றவள், பதற்றமாக, ‘ஐயோ!!, இந்த ஃப்ளைட்டிலதான் பிசினஸ் விஷயமா பிரவீன் போறார். ஏர்போர்ட் போய் அனுப்பிட்டு நேரா ஆபீஸ் வரேன்’
அப்புறம் நடந்ததுதான் உனக்கே தெரியுமே நந்தா. கிட்டத்தட்ட மயக்கமா இருந்த அவளை, நாமதான் வீட்ல கொண்டுபோய் விட்டோம்.
நான் பவித்ராவைப் பார்த்துக்க, நீ போய் குழந்தை பிங்கியை ஸ்கூல்லயிருந்து அழைச்சிட்டு வந்த; அடுத்த பத்து நாளும், எல்லா ஃபார்மாலிட்டிகளுக்கும் நீ கூடவே இருந்து பாத்துகிட்ட. நைட்மேர் டேஸ்”
“சரி, மறந்துடு. பவித்ராவுக்கு நாம எவ்வளோ சப்போர்ட் பண்ண முடியுமோ, பண்ணுவோம்” என்றபடி எழுந்தான் நந்தன்.
“இன்னைக்கு, ஆபீஸ் முடிஞ்சப்பறம் காஃபி ஷாப் வர்ரயா?”
“ஷாஷ், என்ன அதிசயமா இருக்கு?! என்னையெல்லாம் கூப்பிடமாட்டியே? ஜி.எல் வேற ஊரில் இல்லை, முக்கியமான டெட்லைன். டீபக்கிங் முடிச்சு, ஒரு ப்ராஜெக்ட் இம்ப்ளிமென்டேஷன், BFS அக்கௌன்ட்ல இருக்கு. நாளைக்கு வேணா போலாம்”
**********
நகரின் ஒதுக்குப்புறமாக இருந்தது அந்த ரெஸ்டாரண்ட். அபிஜித் ஷெனாயின் மெல்லிய ஹிந்துஸ்தானி சங்கீதம், மனதை ரம்மியமாக்கியது.
“சாரி, வர்ரத்துக்கு லேட் ஆயிடிச்சி. இரண்டு விஷயம் என்னை இன்சூரன்ஸ் அக்கௌண்டுக்கு பிரொமோஷன்ல மாத்திட்டங்க. உங்களுக்குப் புது குரூப் லீடர் மும்பையிலிருந்து போட்டிருக்காங்க. முப்பது வயசுயிருக்கும். இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. இப்ப அவருக்குத்தான் துரைப்பாக்கத்தில் வீடு ரெண்ட் அவான்ஸ் கொடுத்துட்டு வர்றேன். நல்ல டைப் ஆ இருக்கிறார்” என்றபடி மெனு கார்டைத் திறந்தான் நந்தன்.
“பவித்ராவையும் கூப்பிட்டுருக்கலாம்..”
“உனக்குத்தான் தெரியுமே, இப்பல்லாம் அவ எங்கயும் வெளிய வர்ரது இல்ல; அது சரி நந்தன், எப்ப நீ பவித்ராவை முதன் முதலா சந்திச்ச?”
“ஒருநாள், நம்ப கேம்பஸ் ரிசப்ஷன்ல, கிளையண்டை ரிசீவ் செய்யறத்துக்கு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். அன்னிக்குத்தான் பவித்ரா ஆபீஸ் ஜாயின் பண்ண வந்திருந்தாள். நான் மொபைல்ல, பேசிட்டு இருக்குறதப் பாத்துட்டு, கூட வந்த அவங்க அப்பா, “தம்பி தமிழுங்களா?, இவளுக்கு முதல் வேலை, நகரமும் புதுசு, கொஞ்சம் பாத்துக்குங்க” என்றார்.
பவி, நம்ம டீம்லயே அலாட் ஆனாள். நீ அவளுக்கப்புறம் ஆறுமாசம் கழிச்சு சேர்ந்த இல்லையா? எதையும் பவி நேர்பட பேசுவா. எல்லா விஷயங்களையும் என்கூடப் பகிர்ந்துப்பா. பிரவீன் கூட நிச்சயம் ஆனதும் என்கிட்டத்தான் முதல்ல சொன்னா.
பிரவீனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருந்தது. பவி கல்யாணம்தான் நம்ப டீம்ல முதல் கல்யாணம். எவ்வளவு சந்தோஷமா கொண்டாடினோம்?!”
“கரெக்ட் நந்தா, அவ கல்யாணத்துல நம்ம டீம் அடிச்ச கொட்டம் கொஞ்சமா? சங்கீத்ல என்னமா ஆடினான் பிரவீன்? செம்..ம சாப்பாடு! அதுவும் ‘மோஹந்தால், கோல்பாப்டி, லாப்ஸி..னு’ ஸ்வீட் மழை! அவங்களோட முதலிரவு அறையைக் கூட, நம்ம ரெண்டு பேரும்தான் ஜோடனைச் செய்தோம்”
“பிரவீனும் சரி, பாகீரதி மேடமும் சரி, நம்மளை குடும்பத்துல ஒருத்தராத்தான் பாத்தாங்க”
“உண்மைதான் நந்தா. பிரவீனுக்கு எவ்வளவு திறந்த மனசு. நீ அவங்க ஏரியால இருக்கங்கறதுனால, டூர் போகும்போது, பிரவீனே உனக்குப் போன் பண்ணி, பவித்ராவை, உன் பைக்கில ஆபீஸ் அழைச்சுட்டு போக முடியுமா..னு கேட்டிருக்கான் இல்லையா?”
“அது மட்டுமில்ல ஷாஷ், முக்கியமான டெட்லைன் நாட்கள்ல, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து முடிச்சிட்டு, வீட்டுக்குக் கிளம்பறதுக்கு ராத்திரி பத்து மணி கூட ஆயிடும். பிரவீன், வழில அவளுக்கு ஏதாவது டிபன் வாங்கி குடுத்துட்டு, எனக்கும் எதாவது வாங்கிட்டு வர்ரயானு? கேட்பான்”
“அதுவும் அவங்க குழந்தை பிங்கி, பிறந்ததுலேயிருந்தே உன்கிட்ட ரொம்ப ஒட்டிக்கிச்சில்ல நந்தா”
“பிரவீன் அம்மா, பாஹி மேடம், இவங்க கூட வந்து சேர்ந்தப்புறம், வார இறுதில எதாவது ஸ்பெஷலா செஞ்சா என்னைக் கூப்பிடுவாங்க. பிங்கி, எப்பவும் என் பைக்..ல ஏறிகிட்டு ‘ஒரு லவுண்டு போலாமா?’ன்னு மழலையாக் கேக்கும்”
“எனக்கு ஒரு கேள்வி இருக்கு நந்தா? நீ பவித்ராக்கு உதவி செய்யற மாதிரி, யாரு உன்கிட்ட கேட்டாலும் செய்வியா?”
“தெரியலை ஷாஷ். இரு, பவித்ராகிட்டயிருந்து ஏதோ மெசேஜ் வந்திருக்கு”
“எனிதிங்க்?”
“நாளை காலையில பிங்கிய, ஸ்கூல்ல ட்ராப் பண்ண முடியுமான்னு? கேட்டிருக்கா”
“பாவம்டா பவித்ரா. அவளுக்கு, மேக்ஸிமம் ஹெல்ப் பண்ணனும். அது உன்னாலத்தான் முடியும்”
“ஐம், ஆல்வேஸ் தேர் ஃபார் ஹர்”
“ஆல்வேஸ்??” – என்றபடி நிமிர்ந்து, அவன் முகத்தை நோக்கினாள் ஷாஷ்வதி.
“உனக்கே தெரியும் இந்தச் சம்பவத்துக்கு அப்புறம், பவியை டிரான்ஸ்பர் வாங்கிட்டு சென்னைக்கு எங்க கூடவே வந்துடுன்னு அவங்க அப்பா அம்மா எவ்வளவோ சொன்னாங்க”
“தெரியும் ஷாஷ், இங்கயே இருக்கேன்னு சொல்லிட்டா. இன்ஃபாக்ட், பாஹி மேடம் ஒரு ஜெம்”
“பவித்ராவுக்காக, பாஹி மேடம் சொன்னா, நீ எது வேணா செய்வியா?”
“ஐ டோன்ட் மைன்ட்”
“பவித்ராவை, நீ கல்யாணம் பண்ணிக்க முடியுமா?”
திடீரென்று ஷெனாய் ஒலி நின்றது. ரெஸ்டாரண்டில் இருந்தவர்கள் அனைவரும் அப்படியே தங்களுடைய சுழற்சியை நிறுத்திவிட்டு அமைதியானார்கள். உலகம் ஒரு முறை நின்றது.
நந்தன் அமைதியாக எழுந்தான்.
டவலில் கையைத் துடைத்துக்கொண்டான்.
“நான் வருகிறேன் ஷாஸ், ஐ வில் பே”
ஷாஷ்வதி பதற்றமானாள்.
“ஏய், ஏய்..கூல்..” என்று அவன் தோள்களை, தன் இரு கைகளாலும் அமர்த்தி உட்காரச் செய்தாள். “இந்தா, தண்ணி குடி”
“உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா வெரி சாரி. பாஹி மேடம் உன்னிடம் கேட்கச் சொன்னதைத்தான், கேட்டேன். தப்புன்னா மன்னிச்சுடு”
நந்தன் சற்று நேரம் அமைதியாக இருந்தான்
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, ஷாஷ் எழுந்து அவனருகில் வந்து அவன் தலையைக் கோதியபடி,
“சாரிடா, பவித்ராவை. உன் சிஸ்டர் போல நினைக்கிறயா?”
“இல்ல”
“பின்ன?”
“நீ என்னிடம் கேட்டது பவித்ராவுக்கு தெரியுமா?”
“சத்தியமாகத் தெரியாது. அதுவுமில்லாம, இட்ஸ் டூ எர்லி ஃபார் ஹர்,
பாஹி மேடம் பவித்ராவை தன் பொண்ணாதான் பாக்குறாங்க. அதுவும், அவங்க கூடத்தான் இருப்பேன்னு பவி சொன்னதும் உருகிட்டாங்க. பவித்ராவை இப்படியே விட்டுவிடாம, காலதாமதம் செய்யாம, அவளுக்கு வேற ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுக்கணும். குறிப்பா, பிங்கிக்கு விவரம் தெரியறத்துக்கு, முன்னாலயே பவித்ராவிற்கு மறுமணம் நடந்துடணும்னு நினைக்கிறாங்க.
சொல்லப்போனா பிரவீன் இறந்து கொஞ்ச நாள்தான் ஆகிறதுன்னாலும், இப்ப இருந்தே பவித்ராவை, அடுத்த வாழ்க்கைக்குத் தயார் பண்ண ஆரம்பிக்கணுங்கிறதுல தெளிவா இருக்காங்க.
அப்படி அவங்க யோசிச்சதுல முதல்ல வந்தது உன் பெயர்தான். உன்கிட்ட நேரடியா கேட்கத் துணிவில்லை..னு அழுதாங்க. எனக்குக்கூட உங்கிட்ட சொல்வதற்கு பயமாத்தான் இருந்தது. இருந்தாலும், நம்ம பவித்ரா நன்மையை யோசிச்சுதான் உங்ககிட்ட கேட்டேன்”
நந்தன் தலையைக் குனிந்தபடி இருந்தான்.
“ஐ நோ, நம் டீம்..ல, எல்லாரையும்விட உனக்கு மெச்சூரிட்டி அதிகம். அதனால சரியாப் புரிஞ்சுக்குவன்னு உங்கிட்ட சொன்னேன். ஐ’ம் ஸாரி, தப்புன்னா மன்னிச்சுடு”
மெதுவாகத் தலையை நிமிர்த்தினான் நந்தன்.
“உன் மேல எந்தத் தப்பும் இல்ல ஷாஷ் ; இன்ஃபாக்ட் எனக்கும் பவித்ராவுக்கும் இடையே உள்ள அலைவரிசையை அவ்வளவு எளிதா யாராலையும் புரிஞ்சிக்க முடியாது. இன்னும் சொல்லப் போனா,
அது கிருஷ்ணனுக்கும் திரௌபதிக்கும் இடையே உள்ள உறவு போல. அதை, சகோதரப் பாசம், நட்பு என்கிற அடைப்புக்குறிக்குள் பொருத்தமுடியாது. எப்பொழுது திரௌபதிக்கு துன்பம் நேர்ந்தாலும், கிருஷ்ணன் அங்கே இருப்பான். பாஞ்சாலிக்கு, பாண்டவர்கள் துணை. கிருஷ்ணன் என்பவன் காவலன்.
திரௌபதி என்ன கேட்கிறாளோ அல்லது நினைக்கிறாளோ அது எவ்வளவு கஷ்டமான டாஸ்க் ஆக இருந்தாலும் கிருஷ்ணன் அது நிறைவேறும்வரை எவ்வளவு இடையூறு வந்தாலும் செய்து முடிப்பான். அதேசமயம் கிருஷ்ணனுக்குத் தெரியும், அவனது எல்லை எதுவரை என்று..”
கர்சீஃப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டான்.
“நான் பவித்ராவிற்கு, கிருஷ்ணனாக இருக்க விரும்புகிறேன் ஷாஷ். அது ஒரு வித்தியாசமான ஸ்தானம். எல்லாப் பெண்களிடமும் இதுபோல உறவு, நட்பு பாராட்டுவாயா..னு நீ கேட்டா இல்லை..னுதான் சொல்வேன். பவித்ரா இஸ் டிஃபரெண்ட்.
பவித்ரா, இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணுங்கிறதுதான் என் விருப்பமும். நாளைக்கே பாஹி மேடம், வேறொரு மாப்பிள்ளை பார்த்தால், நண்பனாக இறங்கி வேலை செய்வேன். வருபவன் இன்னொரு பிரவீனாக இருப்பானா?, தெரியாது. அப்படி இருந்தால் அது கடவுள் செயல்”
ஷாஷ்வதி, அவனையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஷெனாய் ஒலி, மீண்டும் மெதுவாக எழும்பி, காற்றில் கரைய ஆரம்பித்தது.
ஷாஷ்வதி எழுந்தாள்.
“சாரி ஷாஸ், உன் ஏமாற்றம் புரியுது, பட், பவித்ராவோட எதிர்காலத்துக்காக எடுக்கற இந்த நல்ல முயற்சியில, என்னுடைய பங்கும் முழு ஒத்துழைப்பும் நிச்சயம் இருக்கும்”
இருவரும் வெளியே வந்தார்கள்.
“இரு ஷாஷ், என் பைக்கை இருந்து எடுத்துட்டு வந்துடறேன். உன்னை ட்ராப் பண்ணிட்டு போறேன்”. நந்தன் பார்க்கிங் பகுதியை நோக்கிச் சென்றான்.
ஷாஷ்வதி நிர்மலமான வானத்தைப் பார்த்தாள். பூக்கத் துவங்கியிருந்த நட்சத்திரங்களுக்கிடையே ஒரு விமானம், தன் ஒளிவிளக்குகளை மினுக்கிக்கொண்டு பறந்துகொண்டிருந்தது.
ஷாஷ்வதி, நந்தனுக்காகக் காத்திருந்தாள்.
அவளுடன் சேர்ந்து, காலமும் அடுத்த வருட இறுதியில், அவர்கள் டீமில் நடைபெறப் போகின்ற, ஒரு மறுமணத்திற்காகவும், ஒரு திருமணத்திற்காகவும் காத்திருந்தது.
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே”



