
அர்ச்சனா தனது கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாள்.
“சொல்லுப்பா, ஓ! ஜிபே வா? எவ்ளோ வேணும்?”
“…”
“ஓ! அவ்ளோ பேலன்ஸ்… இருக்காதே”
“…”
நான் என் மாமியார்கிட்ட கேட்டுத்தான் அனுப்பணும். சொல்றேன், சரி”
உரையாடல் முடிந்தது.
அர்ச்சனாவின் மாமியார் பத்மா பக்கத்தில்தான் நின்றுகொண்டிருந்தாள். அந்த உரையாடலை அவர் கேட்டிருக்கக்கூடும் என்பதும் அர்ச்சனாவுக்குத் தெரியும்.
ஆனால், அடுத்தடுத்து அலுவலக அழைப்புகள், கூடுகைகள் என அர்ச்சனா தொடர்ச்சியாக வேலையில் மூழ்கி இருந்தாள்.
அர்ச்சனா அன்று பணியிடத்துக்கும் செல்ல வேண்டும். மென்பொருள் துறையில் பணி அவளுக்கு. சில நாட்கள் வீட்டிலிருந்து மட்டும் வேலை செய்வாள். சில நாட்கள் பணியிடத்துக்கும் செல்ல வேண்டும்.
இரவு உணவுக்குப்பின், “என்னம்மா, ஏதோ ‘மாமியார் கிட்ட கேக்கணும்’ அப்படின்னு போன்ல சொல்லிகிட்டு இருந்த?”, பத்மா.
புதிதாகக் கல்யாணமாகி வந்திருக்கும் தன் மருமகள், அதுவும் கணினித் துறையில் நல்ல படிப்பு, கை நிறையச் சம்பளம் வாங்கும் பெண்… மாமியாரிடம் கேட்க வேண்டும் என்று சொன்னது பத்மாவுக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. காலையில் இருந்தே மனம் மகிழ்ச்சியில் ததும்பியது.
“ஆமா அத்தை, காலையிலிருந்து வேலை ! உங்களுக்கு மதுமிதா தெரியுமில்ல. அவதான், கொஞ்சம் பணம் கேட்டா. ஆயிரம் ரூவா”
“ம்ம், சின்ன சின்ன விஷயமெல்லாம் என்கிட்ட சொல்லித்தான் செய்யணும்ன்னு இல்ல. நீயே முடிவு பண்ணிக்கலாம்மா”
“நா பணம் அனுப்பிச்சேன்ம்மா!”
பத்மாவின் பெருமிதத்தின் குறியீட்டு எண் மடமடவெனச் சரிந்தது.
“சரி, மதுமிதா அவசரமா அனுப்பச் சொல்லி இருப்பா” மனதுக்குள் சமாதானம் செய்துகொண்டார் பத்மா.
மதுமிதாவும் அர்ச்சனாவும் பள்ளிப் பருவத்திலிருந்தே நல்ல தோழிகள். அவர்களது நெருக்கமும் நட்புணர்வும் ஆழமானதுதான்.
இருவருமாகச் சேர்ந்து உடைகள் அணிகலன்கள் வாங்குவது, விடுமுறை நாட்களில் உணவகம், திரைப்படம் என ஒன்றாகப் பொழுது போக்குவார்கள். கவலைகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளக்கூடியவர்கள்.
அப்படிப்பட்ட ஒரு தோழமைக்கு ஒரு சிறிய பண உதவியைக்கூடக் கொஞ்சம் மிகைப்படுத்தி, தயங்கி, தேங்கி… தன்னால் செய்ய முடியாது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் செய்ய வேண்டுமா?
”மது உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் இல்லையா?”, பத்மா.
“ஆமா, அதனாலதான் அவ மேல அக்கறை! அத்தை, மதுவுக்கு என்னைவிட மாசம் அஞ்சாயிரம் சம்பளம் ஜாஸ்தி. இன்னும் கல்யாணம் ஆகல. ஆனா பாருங்க, மாசக் கடைசியில என்கிட்ட கடன் கேட்டுகிட்டே இருப்பா”
”அவங்க வீட்டுல … வேற யாரும் சம்பாதிக்கலயா?”
“அப்பா வேற ஒரு குடும்பம் அமைச்சுகிட்டாரு. இங்க எப்பயாவதுதான் வருவாரு. அதாவது பணம் தேவைப்படும்போது. அம்மா ஒரு சின்ன தனியார் நிறுவனத்தில வேலை செஞ்சு எப்படியோ படிக்க வச்சுட்டாங்க.”
“அவளுக்கு ஒரு தம்பி இருக்கான்ல்ல?”
“ஆமா, அவன் சரியா படிக்கமாட்டான். அவனுக்கு அப்பப்ப ஏதாவது பயிற்சி, படிப்பு… அதுக்குச் செலவு, அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. அதுக்கு டெஸ்டிங், சிகிச்சை, வீட்டுச் செலவு எல்லாம் இவ சம்பளத்திலதான் போவுது. அதுக்கப்புறமும் இவகிட்ட கணிசமா இருக்கணும்”
“நீ கொடுக்கிற கடனை அவ திருப்பித் தர மாட்டாளோ?”
“அப்பிடி இல்லை அத்தை. அவளுக்கு அவ வாழ்க்கையில திருப்தி இல்ல. முதல்ல சின்ன சின்னதா செலவு பண்ண ஆரம்பிச்சா. தேவையில்லாத விலையுயர்ந்த காலணிகள், உடைகள், சாப்பாடு… அவளுக்குன்னு எந்த ஜோடியும் அமையல்ல. வீட்டுலயும் பார்க்க ஆள் இல்ல..”
“பாவம். ஆனா, நேரில பாத்தா அவ்வளவு ஆசையா பேசுறா அந்தப் பொண்ணு”
“ஆமா, தனக்கு யாருமில்லன்னு ஒரு எண்ணம். இப்ப நீங்க ஏதனா பொருள் அவளைக் கேளுங்க… உடனே வாங்கிட்டு வந்திடுவா. சில தோழிகள் அவளைப் பயன்படுத்திக்கிறாங்க”
“கூடப் பழகற பொண்ணுங்களேவா?”
“ஆமா, விடுமுறை நாட்களில வீட்டுல இருக்கப் பிடிக்காம, எந்தத் தோழியோடயாவது ஊர் சுத்தக் கிளம்பிடுவா! எல்லாச் செலவும் இவளுதுதான்”
“அவங்க அம்மா அவளைக் கண்ட்ரோல் பண்ண மாட்டாங்களா?”
“அவங்களுக்கே உடம்பு சரியில்ல. பையனும் சரியில்ல. புருஷன பத்திக் கேக்கவே வேண்டாம். மதுதான் வீட்டுக்கும் செலவு பண்றா. அவ நிம்மதிக்காக எதையாவது செஞ்சுக்கட்டும்ன்னு விட்டுடறாங்க”
“அதுசரி, தப்புத்தண்டா வேற எதுவும் இல்ல… துணிமணியும் தீனியும்தான… அதான் விட்டுப் பிடிப்பாங்க”
“எங்கம்மாவும் அப்ப்டித்தான் சொன்னாங்க. ஆனா, அத்தை, மது தன் வரவை மீறி செலவு செய்ய ஆரம்பிச்சிட்டா. எல்லாம் நிதானமில்லாத தண்டச் செலவுதான். நான் சொல்லிச் சொல்லி ஒரு நகைச் சீட்டு சேர்ந்தா. நாலு மாசம்தான் பணம் கட்டினா. வேற எந்தச் சேமிப்பும் இல்ல. ரீடர்ன்ஸ் வர மாதிரி எந்த முதலீடும் இல்ல”
“இவ்வளவு அழகா எனக்கு சொல்றியே அர்ச்சனா. அவகிட்ட இதப் பத்தி பேசக் கூடாதா?”
“பேசினேன் அத்தை, அது ஒன்னும் சரிப்பட்டு வரல்ல”
அர்ச்சனாவுக்கு மதுமிதாவிடம் இருந்து அழைப்பு.
“தேங்ஸ்டி. காலையில இருந்து டைமே கிடைக்கல்ல.”
“ஏதாவது பிரச்சினையா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல… தீப்தி பர்த் டே! ரோஹோ கிச்சன் டெரஸ் இருக்குல்ல. அங்க போயிட்டு வந்தோம். செமையா இருக்கு. என்ன ஆம்பியன்ஸ்”
“அப்பிடியா, சரி, என்ன கிஃப்ட் குடுத்த?”
“அதான் சர்ப்ரைஸே! அவளுக்கு ம்யுசிக் பிடிக்கும். கிடார் கத்துக்கணும்ன்னு சொல்லுவா. நா கிடார் ப்ரசண்ட் பண்ணதும் அப்படியே ரொம்ப ஃபீல் ஆயிட்டா! அழகு மொமெண்ட்ஸ் அர்ச்சு”
“சூப்பர்தான். ஆனா… செலவு ஏகிறியிருக்குமே?”
“இதான் அர்ச்சு உங்கிட்ட. நா எவ்வளவு நெகிழ்ந்து போய் அவ்வளவு ஆசையா உங்கிட்ட சொல்றேன். நீ காசு செலவு பத்திக் கேக்குற”
“இல்ல, மது…மேனேஜ் பண்ணக் கஷ்டமா இருந்திருக்குமோன்னு…” காயப்படுத்தாமல் பேசவேண்டும். அதே சமயம் எப்படி அவளுக்குப் பணம் கிடைத்தது எனவும் தெரிந்துகொள்ள வேண்டும் என அர்ச்சனா பிரயத்தனப்பட்டாள்.
“ஹே! நா போன மாசமே ஆர்டர் பண்ணிட்டேன். கிரெடிட்லதான் ஆனா, இந்த மெமரி… அது வொர்த்.
பத்மாவுக்கு இரவு தூக்கமே வரவில்லை. என்ன பெண் இந்த மதுமிதா! ஒரு தோழியின் பிறந்த நாளுக்கு இருபதாயிரம் செலவழிக்கிறது அதிகம்தானே? அதுவும் நடுத்தர வர்க்கத்துக்கு என அங்கலாய்த்தாள்.
தன் மருமகள் அர்ச்சனாவைப் பற்றியும் நிறைய யோசித்தாள்.
நெருங்கிய தோழி, இன்று வரை நல்ல நட்பு எனவும் சொல்லிக்கொண்டே அவளுக்குக் கடன் கொடுக்க யோசிக்கிறாள். மதுமிதா செய்வது சரியல்ல என்றால், அவளிடம் எடுத்துச் சொல்லி, கொஞ்சமாவது அவளைத் திருத்தப் பார்க்கணும்.
என்னவோ, இந்தக் கால இளம்பெண்கள் போக்கை என் போன்ற சென்ற தலைமுறையால் புரிந்துகொள்ள முடியாதோ?
பத்மாவின் அக்கா பெண் ப்ரதீபா வீட்டுல நடக்கிற சின்ன சின்ன விசேஷங்களுக்குக்கூட ரெண்டாயிரம் மூவாயிரம் குடுத்து ப்ளவுஸ் தைக்கிறாள். பத்மா அவளைக் கண்டித்துக் கேட்டாள். இப்போதெல்லாம் ப்ரதீபா பத்மாவிடம் பேசுவதே இல்லை.
அதோடு விட்டாளா, எல்லாச் சொந்தங்களிடமும் “பத்மா சித்தி ரொம்ப டாக்சிக்” என்று சொல்லி இருக்கிறாள். முதலில் ‘டாக்சிக்’ பற்றி பத்மாவுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஒரு நாள் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்தான் அதைப் பற்றித் தெரிந்துகொண்டாள். நல்லதைச் சொல்லப் போய், பொல்லாப்பை வாங்கிக் கட்டிக்கொண்டோமே என வருத்தப்பட்டாள்.
இப்போதுகூட அர்ச்சனா மாமியார்கிட்ட கேட்கணும்ன்னு சொன்னதாலதான் அவகிட்ட அந்தப் பேச்சையே எடுத்தார். பட்டும் படாம நம்ம காரியத்தைப் பாத்துகிட்டு, ‘டாக்சிக்’ இல்லாதவளா இருக்கணுமே என்பதுதான் பத்மாவின் எண்ண ஓட்டம்.
அடுத்த நாள் கலையிலேயே சம்பந்தி தேவிகா வீட்டுக்கு வந்தார்.
“நல்லா இருக்கீங்களா, சம்பந்தி? அர்ச்சனா… நல்லபடியா நடந்துக்கறாளா?”
“அவளுக்கென்ன? உங்க பொண்ணாச்சே! அருமையா வளத்து இருக்கீங்க. ஒரு குறையும் இல்ல”
பேச்சு இப்படி அப்படி என்று மதுமிதா பக்கம் சென்றது.
“ஆமா, சம்பந்தி! அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான்! அவ சம்பளத்துக்கு மாசம் இருவது முப்பது சேத்து வைக்கலாம். ஆனா, அர்ச்சு சொல்ற கணக்கப் பாத்தா, ஒரு மாசத்துக்கு நாப்பதாயிரம் ஐம்பதாயிரம் கடன் வாங்குறா. கேட்டா, ஆசையா இருக்கு, மெமரி, கோல்டன் மொமெண்ட், மனசு, உறவு… இப்படி ஏதாவது சித்தாந்தம் பேசுவா.”
“அர்ச்சனா சொன்னா, மது கேக்க மாட்டாளா? எடுத்து சொல்லக்கூடாதா?”
“சொல்லிப் பாத்தா. அதுக்கு அவ, எங்க அப்பா என்கூட இருந்ததே இல்ல. அந்த வலி உனக்குப் புரியாது. என்னோட சின்ன சின்ன ஆசை எல்லாம் இப்போ அனுபவிச்சுட்டுப் போறேனே அப்படின்னு சொல்லிட்டா.
கேரளா போறேன், ராஜஸ்தான் போறேன், ஜெர்மனி போறேன்… சுத்திகிட்டேதான் இருப்பா. அர்ச்சுகூட ஒரு தரம் போகட்டுமான்னு கேட்டா. நான் அதெல்லாம் முடியாதுன்னு கண்டிச்சு சொல்லிட்டேன். அதுக்கு ரெண்டு பவுன் நகை வாங்கிப் போடலாமில்லை.”
தேவிகா வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அதனால்தான் அவரும் அர்ச்சனாவும் சேமிப்பு பற்றி அதிகம் சிந்திப்பார்கள்போல… என நினைத்தார் பத்மா.
பத்மாவின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டது போலப் பேசினார் தேவிகா.
“செலவே செய்யக் கூடாதுன்னு நான் சொல்ல வரல்ல. வெளிப்புறப் பூச்சுக்கும் ஆடம்பரத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் அதிகம் செலவழிக்கணுமா? அதுவும் கடன் வாங்கி? மது அதைப் புரிஞ்சுக்கல்ல.”
“உங்ககிட்ட கேக்காம அர்ச்சனா பணம் கொடுக்கமாட்டாளோ?”
“அது ஒரு தடுப்பணை மாதிரிதான். அர்ச்சனாகிட்ட சேவிங்ஸ் இருக்குன்னு மதுவுக்குத் தெரியும். அர்ச்சனாவுக்கு மதுவோட நட்பும் வேணும். அவ அதிகமா செலவழிக்கக் காசும் கொடுக்கக்கூடாது. மதுகிட்ட செலவு பண்ணாதேன்னு அர்ச்சனா சொன்னா, அவ ரெண்டு நாள் பேசமாட்டா. இவளுக்குத் தாங்காது. அதான், இந்த ஏற்பாடு”.
“ஒரு ஆயிரம் ரூவா கடன் குடுக்கிறதில இவ்வளவு நுட்பம் இருக்கா?”
“இது ஆயிரம் ரூவாய் கொடுக்கறத பத்தியில்ல. மது செலவழிக்காம இருக்க ஒரு வேகத் தடை. அர்ச்சனாவுக்கு ஏதாவதுன்னா மது ஓடி வந்துடுவா. அத மாதிரிதான் இவளும். மதுவுக்கு ஒரு பக்கபலமாகத்தான் இருப்பா”
அலுவலகத்துக்குச் சென்றிருந்த அர்ச்சனா, வரும்போதே பரபரப்பாக இருந்தாள்.
“அம்மா, நீ இங்கதான் இருக்கியா? நல்லதாப் போச்சு வா, மது அம்மாவுக்கு உடம்பு சரி இல்லயாம். அவங்களை வித்யா நர்சிஹோம்ல சேத்து இருக்காங்க. நாம உடனே போகணும்.”
அடுத்த இரண்டு நாட்களும் மருத்துவமனையிலேயே இருந்து மது அம்மாவைக் கவனித்துக்கொண்டாள் அர்ச்சனா. மருத்துவச்செலவும் அவளுடையதுதான்.
மருத்துவமனையிலிருந்து திரும்பிய அர்ச்சனா, அன்றைய தினம் விடுப்பு எடுத்துக்கொண்டாள். நிதானமாகக் குளித்து, துணிமணிகள் தோய்த்து, பத்மாவுக்கு சமையலில் உதவி புரிந்து… வளைய வந்துகொண்டு இருந்தாள்.
மதுவிடம் இருந்து அழைப்பு.
“சொல்லு மது. அம்மா எப்படி இருக்காங்க?”
“…”
“சேச்சே… அப்படி சொல்லாத. எல்லாம் சரி ஆயிடும்.”
“…”
“மது… மது… கரெக்ட்டா அந்த நேரத்துக்குப் பணம் கையில கிடைச்சுதே! எங்க மாமியார்கிட்ட கேட்டேன். ஆடம்பரச் செலவுக்குத்தான் யாரும் கொடுக்க மாட்டாங்க. அவசரமான அத்தியாவசியமான செலவுக்கு நிச்சயம் தருவாங்க…”
“அவ்ளோ பேலன்ஸ் இல்லப்பா” என்கிற அர்ச்சனாவின் வார்த்தைகளில் மறைந்திருந்த ஆழமான நட்பும் அவளது அக்கறையும் பக்குவமான பேலன்சிங் ஆன அவளது செயலும் இப்போது தெளிவாகப் புரிந்தது பத்மாவுக்கும். மீண்டும் அவரது பெருமிதக் குறியீட்டு எண் உயர்ந்தது.



