
1
தர்மபுரி நகர வெளியூர் பேருந்து நிலையத்தை அவர்கள் அடையும்போது அஸ்தமனமாகிவிட்டிருந்தது. அப்போது ஆறே கால். அங்கிருந்து நகரப் பேருந்து பிடித்து இவர்களுக்கான நகரப் பேருந்து நிலையத்தை அடையும்போது ஆறே முக்கால். கருக்கிருட்டு ஆகிவிட்டது. நகருக்குள்ளும், நகருக்கு வெளியிலும், தூரத்துக் கிராமங்களுக்குமாக வீடு திரும்புகிற மக்கள் கூட்டம் வந்துகொண்டேயிருந்தது. பேருந்துகள் பயணிகளைத் திணித்தும், படிக்கட்டுகளில் தொங்கவிட்டும் சென்றுகொண்டிருந்தன. இவர்கள் செல்ல வேண்டிய மலையடிவாரக் கிராமத்துக்கு இனி எட்டே காலுக்குத்தான் பேருந்து. அதுவே கடைசிப் பேருந்து என்றும், அங்கே சென்று சேர ஒன்பது மணி ஆகும் என்றும் தெரிய வந்தது.
“அந்தப் பட்டிக்காட்டுல அந்நேரத்துக்கு ஹோட்டல் இருக்குமோ என்னமோ! பஸ் வர்ற வரைக்கும் நமக்கு ஒரு மணி நேரம் டைமும் இருக்குது. பக்கத்துலயே எங்காவது சாப்புட்டுட்டு வந்தர்லாம்” என்றான் தேவி ப்ரஸாத்.
பேருந்து வளாகத்துக்கு வெளியே உள்ள உணவகம் ஒன்றில் சிற்றுண்டி அருந்திவிட்டு, பெட்டிக்கடையில் தண்ணீர் பாட்டில்களை வாங்கிக்கொண்டனர். ஏழு ஐம்பதுக்கே பேருந்து வந்துவிட்டது. உள்ளூர்ப் பயணிகள் முண்டியடித்து ஏறியும், ஜன்னல் வழி உடைமைகளைப் போட்டும் இருக்கைகளைப் பிடித்துக்கொள்ள, இவர்கள் மீதமுள்ள நெரிசலுக்கிடையே பிதுங்கி நிற்க வேண்டியதாயிற்று.
மஜீத் நடத்துநரிடம் ஊர்ப் பெயரையும் கல்லூரிப் பெயரையும் சொல்லி, ஐந்து பயணச் சீட்டுகள் கேட்டான்.
“நீங்க வெளியூர்ப் பசங்களா? காலேஜுக்கெல்லாம் பஸ் போகாதுப்பா! ஊர் வரைக்கும்தான் போகும். அங்கிருந்து ஆட்டோவுலயோ, நடந்தோதான் போகணும்” என்றுவிட்டு சீட்டுகள் கொடுத்தார்.
அருகே நின்றிருந்த கிராமத்துப் பெரியவர், “எந்த ஊருப்பா நீங்க? இந்நேரத்துல அந்தக் காட்டுக் காலேஜுக்குப் போறீங்களே…!?” எனப் பேச்சுக் கொடுக்கலானார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அவர்கள் ஐவரும் ஒரே கல்லூரியில், வெவ்வேறு பிரிவுகளில் பயில்கிற மாணவர்கள். ஒரு குழுவாக உள்ள நெருங்கிய நண்பர்கள். ஜோஸ்வா சேகர் மட்டும் நன்றாகப் படிப்பான். மற்ற நால்வரும் படிப்பைத் தவிர மற்ற அனைத்திலும் முன்னணி. வம்பு தும்புக்கெல்லாம் போகமாட்டார்கள். விளையாட்டு – கலைப் போட்டிகள், கல்லூரிகளுக்கு இடையிலான கலந்தாய்வரங்கம் ஆகியவற்றில் பங்கேற்று, பரிசுகளும் பதக்கங்களும் பெறுவர். சொந்த, அண்டை மாவட்டங்களில் அவர்கள் போட்டிகளுக்காக ஏறி இறங்காத கல்லூரிகள் குறைவு. இப்போது இங்கே வனப் பகுதியில் உள்ள அக்கல்லூரிக்கு முதல் முறையாகக் கலந்தாய்வரங்கத்துக்காக வந்துள்ளனர்.
பெரியவரிடம் இதன் சாராம்சத்தைச் சொல்லவே, “அதுசரி. ஆனா, வந்ததுதான் வந்தீங்க, நேரத்துல காலத்துல வரப்படாதா…? அந்தக் காலேஜுல பேய் நடமாட்டம் இருக்கறதாப் பேசிக்கறாங்களேப்பா…!” என்றார்.
“ஆமாமா! அந்தக் காலேஜ் பையன் ஒருத்தன் அங்கயே சூசைடுலயோ, ஏக்சலண்டுலயோ உலாத்தீட்டிருக்கறதாச் சொல்றாங்க. அன்னியருக ராத்திரில போறது அவ்வளவு செரியில்ல. எதுக்கும் பாத்துப் பதனமாப் போங்க!” நடுத்தர வயதுக்காரர் அக்கறையாகத் திகிலூட்டினார்.
“ஆமாப்போவ்! இன்னைக்கு மேக்க சூலம். நாளானைக்கு வேற அம்மாவாசை!” உயிருள்ள எலும்புக்கூடு மாதிரி இருந்த கிழடு உற்சாகமாக ஸ்பிரிச்சுவல் பீதி கிளப்பியது.
அருகாமையர்களும் ஆவலோடு ஆமோதித்தனர்.
பொன்மணிக்கும் ஜோஸ்வாவுக்கும் அதிர்ச்சி. ப்ரஸாத்தும் மஜீத்தும் நம்புவதா, வேண்டாமா என்பது போலப் பார்த்தனர்.
எழில் சிரித்துவிட்டு, “பேய், பிசாசுக வந்தா ஒண்ணும் கவலை இல்லீங்யா! இவனுக ரெண்டு பேரும் அதுகளை கவனிச்சுக்குவானுக! இவன் பேயோட்டிப் பூசாரி; இவன் பிசாசு புடிக்கற பாஸ்டர்!” என்று பொன்மணியையும் ஜோஸ்வாவையும் காட்டினான்.
அவர்கள் இருவரும் அசடு வழியச் சிரித்தனர்.
பொன்மணி மிகுந்த பக்திமான். குல தெய்வம், கிராமக் காவல் தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள் வழிபாட்டில் பயபக்தியோடு ஈடுபடுகிற குடும்பத்தவன். திருநீறு. சந்தனம், குங்குமத்தோடுதான் கல்லூரிக்கு வருவான். காத்து, கருப்பு அண்டாதிருக்க அவனது அரைஞாணிலும், மணிக்கட்டிலும் தாயத்துகளும் கட்டப்பட்டுள்ளன. வெளியூர் பயணங்களின்போது குலதெய்வக் கோவில் விபூதி, குங்குமத்தைத் துண்டுத் தாள்களில் மடித்துப் பயணப் பையில் வைத்துக்கொள்வான்.
ஜோஸ்வாவும் தீவிர நம்பிக்கையாளன். பயந்த சுபாவி. ‘சேசு’வைவிட சாத்தான் பற்றித்தான் அதிகம் பேசுவான். பேய், பிசாசுகள் யாவும் சாத்தானின் சேவகர்கள் என்பது அவனது அறிவியல் கண்டுபிடிப்பு.
“அந்தக் காட்டுக் காலேஜ்ல பேய், பிசாசு மட்டும்தான் இருக்குதா,… இல்ல மோகினியும் வருமான்னு தெரியலையே…! மோகினியோ, வனமோகினியோ வந்தா நல்லா இருக்கும்…” எழில், ப்ரஸாத்தையும் மஜீத்தையும் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னான்.
அவர்களும், அருகே இருந்த மற்ற ஆண்களும் கிளுகிளுப்பாகச் சிரித்தனர்.
*******
பேருந்து அந்த ஊரை அடைய ஒன்பது மணி ஆகிவிட்டது. கல்லூரி, ஊரிலிருந்து வெகு தூரம் உள்ளே தள்ளி இருக்கிறதாம். பேருந்து நிறுத்த நிழற்குடைக்குப் பக்கவாட்டிலேயே ஆட்டோ நிறுத்தப் பெயர்ப் பலகை காணப்பட்டது. ஆனால், ஆட்டோக்கள் எதுவும் இல்லை.
அருகாமை கடைக்காரர் கடையைச் சாத்துவதற்காகப் பொருள்களை எடுத்து உள்ளே வைத்துக்கொண்டிருந்தார். ப்ரஸாத் அவரிடம் சென்று, “அண்ணா…! நாங்க வெளியூர்லருந்து வர்றோம். காலேஜ் போகணும். ஆட்டோ ஏதாவது கெடைக்குமா…?” என விசாரித்தான்.
“ஆட்டோக்காரனுகல்லாம் எட்டரைக்கே தொழிலை முடிச்சுட்டு டூட்டிக்குப் போயிருவானுகளேப்பா…!” என்றார்.
அவர்கள் புரியாமல் விழித்தனர்.
“அட என்னப்பா இப்புடிப் பேய் முழி முழிக்கறீங்க? டாஸ்மாக்குக்கோ, பொண்டாட்டிக்குச் சேவகம் பண்றக்கோ போயிருவாங்கன்னு சொன்னேன்” என்றுவிட்டுச் சிரித்தார்.
எழில் அதைக் கேட்டு அட்டகாசமாகச் சிரித்தான். மற்றவர்களுக்கும் சிரிப்பு வரத்தான் செய்தது. இருப்பினும் பேய் முழி என்ற அவரது உவமை, அவர்களின் சிரிப்பை 0.243 செ.மீ.க்கு மேல் வளர விடவில்லை.
“குடி, பொகைப் பழக்கம் இல்லாத ஒருத்தன் இருக்கறான். இந்த நேரத்துலன்னா வாடகை தாஸ்தி கேப்பான். வேணும்னா அவனுக்கு போன் பண்ணி வரச் சொல்றன். மத்தவனுக யாரும் இந்நேரத்துக்கு வர மாட்டானுக” எனக் கடைக்காரர் சொன்னது காதில் பீர் பாய்ச்சியது.
“பணம் சேத்திக் குடுத்தர்லாங்ணா. அவரையே வரச் சொல்லுங்க.” ஒத்திசையாத கோரஸில் கூவினார்கள்.
ஆட்டோ ஓட்டுநரை அலைபேசியில் அழைத்துப் பேசியவர், “அவன் சாப்பிட்டுட்டிருக்கறானாமாப்பா. சாப்ட்டு முடிஞ்சதும் வர்றன்னான். வந்துருவான். நீங்க இங்கயே வெய்ட் பண்ணுங்க” என்றுவிட்டு, கடையைச் சாத்திவிட்டுக் கிளம்பினார்.
கால் மணி நேரம் கழித்து ஆட்டோ வந்தது. ஐவரும் தொற்றிக்கொண்டனர்.
ஓட்டுநரிடம் கல்லூரிப் பேய் பற்றிக் கேட்க, “எனக்கும் ஏதாவது ஒரு பேயையாவது நேர்ல பாத்து, லக்க – லக்க – லக்கன்னு கொக்காணி காமிக்கணும்னு ரொம்ப வருசமாவே ஆசை. காலேஜுக்கு நைட் சவாரி எத்தனையோ வாட்டி வந்தும் பேயப் பாக்கவே வாய்க்கல. உங்க கண்ணுல அது தட்டுப்பட்டா, என்னையும் ஒரு லுக்குவிடச் சொல்லுங்க” என்றார், சிரிக்காமல்.
அவர்களுக்குச் சிரிப்பு வந்தது. எழில் இப்போதும் அட்டகாசமாகச் சிரித்தபடி நண்பர்கள் நால்வரையும் தனித்தனியே பார்த்தான். அவர்களும் ஐந்தே முக்கால் ரூபாய்க்குச் சிரித்துக்கொண்டனர். அதைவிட அவர்களுக்குப் பயம் விலகி நம்பிக்கையும் ஆறுதலும் உண்டாகியது.
இருளுக்குள் ஊர் எல்லை கடந்து ஆட்டோ வனத்துக்குள் ஊடுருவியது. குற்று மரங்களும் புதர்களும் அடர்ந்த பகுதியாகத் தொடங்கி, பெரு மரங்கள் தென்படலாயின.
திடீரென ஆட்டோ நின்றுவிட்டது. எவ்வளவு முயன்றும் ஸ்டார்ட் ஆகவில்லை.
அவர்களை இறங்கச் சொல்லிவிட்டு, ஆட்டோவை ஓரமாகத் தள்ளி நிறுத்திய ஓட்டுநர், “தம்பிகளா,… என்ன பிரச்சனைன்னு தெரியல. மெக்கானிக்குக யாரும் இந்நேரத்துக்கு இங்க வர மாட்டாங்க. அதனால, நான் ஆட்டோவை இங்க நிப்பாட்டிட்டு ஊருக்குப் போறேன். காலைல மெக்கானிக்கோட வந்து சரி பண்ணி எடுத்துக்கறன். காலேஜ் இங்கருந்து மூனு கிலோ மீட்டர்தான். மெதுவா நடந்து சீக்கிரமாப் போயிருங்கப்பா! இங்க நிக்க வேண்டாம். சிறுத்தை வந்தாலும் வரும்!” என்றார்.
ஐவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.
“என்னங்ணா சொல்றீங்க…? சிறுத்தை வருமா…???” கோரஸாக அலறினர்.
“சத்தம் போடாதீங்கப்பா! அதைக் கேட்டு ஆனைக வந்தறப் போகுது!”
“ஆனையுமா…???” வாயைப் பொத்திக்கொண்டு பேரச்சத்தில் கண் பிதுங்கினர்.
“பயப்படாதீங்கப்பா! சிறுத்தை, யானை, காட்டுப் பன்னியெல்லாம் இங்க சர்வ சாதாரணமா நடமாடும். ஆனா, அதுக ராவு காலம், எமகண்டம் பாத்து, எப்புடியும் பதனோரு மணிக்கு மேலதான் வேட்டைக்கு எறங்கும். வெக்குடு வெக்குடுன்னு நடந்தீங்கன்னா, அதுக்குள்ள நீங்க காலேஜ் போயிச் சேந்தர்லாம்; நானும் ஊர் போயிச் சேந்துருவேன்…”
ஐவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். எல்லோர் முகங்களிலும் மரணப் பீதி நன்றாகத் தெரிந்தது.
வேறு வழியில்லாமல் பாதி வாடகை கொடுத்துவிட்டுத் திகிலோடு நடக்கலாயினர்.
*******
அந்த அடர் வனப் பகுதியில் பகலிலேயே வெளிச்சம் குறைவாகத்தான் இருக்கும். இப்போது அமாவாசையை நெருங்கும் இரவானதால் கும்மிருட்டு. சில்லென்ற காற்று மயிர்க்கூச்செறியச் செய்தது. வனாந்தர அமைதியை இரவுப் பூச்சிகளின் ரீங்காரம் மிகைப்படுத்தியது. அலைபேசியில் உள்ள டார்ச்சை எரியவிட்டு சாலையில் நடை தொடர்ந்துகொண்டிருந்தனர்.
“மொபைல்ல பேட்டரி சார்ஜ் கம்மியா இருக்கும். எவ்வளவு நேரம் தாக்குப்புடிக்கும்னு தெரியாது. அதனால எல்லாரும் டார்ச் அடிக்க வேண்டாம். இன்னும் மூனு கிலோ மீட்டர் வேற போக வேணும். இப்ப நான் மட்டும் டார்ச் அடிச்சுட்டு முன்னாடி போறன். மத்தவங்க செல் டார்ச்சை ஆஃப் பண்ணிட்டுப் பின்னாடி வாங்க. என்னோடதுல சார்ஜ் தீந்துட்டா, அடுத்து யாராவது முன்னாடி வர்லாம்.” ப்ரஸாத் சொல்லிவிட்டு முன்னால் செல்ல, மற்றவர்கள் தங்களின் அலைபேசி விளக்குகளை அணைத்துவிட்டுத் தொடர்ந்தனர்.
“மூனு கிலோ மீட்டர் நடக்கணுமா…? அதுக்குள்ள ஒரு வழி ஆயிடுவேன்…!” என்றான் மஜீத்.
உயர் நடுத்தர வர்க்கம். நகரத்திலேயே பிறந்து வளர்ந்து, சொகுசாகவே வாழ்பவன். அதிகத் தூரம் நடந்து பழக்கமில்லை. கல்லூரிக்கு பைக்கில்தான் வருவான்.
“இப்பவே மணி ஒம்பதே முக்கால் ஆயிருச்சு. காலேஜ் போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகுமோ…!” என்றும் கவலைப்பட்டான்.
மற்றவர்களில் எழில் நகரவாசி. ஜோஸ்வா சேகரும் தேவி ப்ரஸாத்தும் புறநகர் வாசிகள். அவர்களுக்கும் எவ்வளவு நேரம் ஆகும் என்பது தெரியவில்லை.
“ஸ்பீடா நடந்தா ஒரு கிலோ மீட்டருக்கு இருபது நிமிசம் ஆகும். மெதுவா நடந்தா அரை மணி நேரம்” என்றான், கிராமப்புறத்தானான பொன்மணி. நடந்து பழக்கமுள்ளவன். அவன் தினமும் ஒன்றரை கி.மீ. நடந்து வந்துதான் பேருந்து பிடிக்க வேண்டும்.
“அப்படின்னா நாம மெதுவா நடந்து போய்ச் சேர ஒன்ரை மணி நேரம் ஆகும். இப்பவே ஒம்பதே முக்கால்னா,…காலேஜ் போய்ச் சேர பதினொண்ணே கால் ஆயிருமே…!”
“சேசுவே…!” ஜோஸ்வா அலறினான். “பதினோரு மணிக்கு மேல சிறுத்தை, யானையெல்லாம் வேட்டைக்குக் கிளம்பும்னு ஆட்டோ ட்ரைவர் சொன்னாரே…! நாம காலேஜ் போய்ச் சேர்றதுக்கு முன்னாடி அதுககிட்ட அகப்பட்டா பரமண்டலம்தான்…!”
“வருத்தப்படாதீங்க பாஸ்டர்! அப்படியே ஆனாலும் நீங்க மட்டும்தான் பரமண்டலம் போவீங்க. எங்களுக்கெல்லாம் அங்க விசா குடுக்க மாட்டாங்க. மஜீத் சுவனத்துக்குப் போவான். பொன்ஸும் ப்ரஸாத்தும் சொர்க்கத்துக்குப் போவாங்க. நான் நாத்திகன்கறதால எனக்கு உங்க சொர்க்கம், நரகம் எதுலயும் எடம் கெடையாது. கெடைச்சாலும் வேண்டாம். நான் நெப்டியூனுக்கோ ப்ளூட்டோவுக்கோ போயிக்கறேன்…!” என்றான் எழில்.
ப்ரஸாத்தும் மஜீத்தும் சிரித்தனர். பூசாரியும் பாஸ்டரும் சிரிக்கவில்லை.
ப்ரஸாத்துக்கு எழிலின் நாத்திகவாதங்களைக் கேட்டுக் கேட்டு, கடவுள் நம்பிக்கை, சாத்தான் – பேய் – பிசாசு நம்பிக்கைகள் யாவற்றிலும் தள்ளாட்டம் வந்துவிட்டிருந்தது. இவை இருக்கின்றனவா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க இயலாமல் குழப்பத்தில் இருந்தான். அதனால் கடந்த இரு வருடங்களாக நெற்றியில் விபூதி, சந்தனம் பூசிக்கொண்டு கல்லூரிக்கு வருவதை விட்டுவிட்டான். ஆயினும் வீட்டு வழிபாடுகளிலும் கோவில் பூஜைகளிலும் பழையபடியே பங்கேற்பான்.
மஜீத் நம்பிக்கையாளன் என்றாலும் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. குல்லா அணிவது, தாடியை விட்டுவிட்டு மீசையை மழித்துக்கொள்வது, கணுக்கால் வரை லுங்கி கட்டுவது ஆகிய மத அடையாளங்களையும் பின்பற்றமாட்டான்.
எழிலின் நையாண்டியைப் பொருட்படுத்தாத ஜோஸ்வா, சட்டைக்குள் கழுத்தில் தொங்கும் சங்கிலியில் கோர்க்கப்பட்டுள்ள சிலுவையைப் பற்றிக்கொண்டு, “அல்லேலூயா…! அல்லேலூயா…!” என ஜபிக்கலானான். அதைப் பார்த்த பொன்மணியும் குலதெய்வம், கிராம தேவதை, காவல் முனிகள் ஆகியோரைக் கூவி அழைத்து, மிருகங்களால் தங்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் காக்கும்படி வேண்டிக்கொண்டான்.
ஏற்கனவே இருந்த பயத்தை இவர்களின் வேண்டுதல் அதிகப்படுத்தியது.
“இன்னைக்கு சிறுத்தைக்குச் சிற்றுண்டி ஆகப் போறமா, யானை காலடில மிதிபட்டு சட்னி ஆகப்போறமான்னு தெரியல…” உள்ளூரும் அச்சத்தை மறைத்துக்கொண்டு எழில் வேடிக்கை செய்ய முயன்றான். ஆனால், யாரும் சிரிக்கவில்லை.
“பதினொரு மணிக்கு மேல அதுக கெளம்பும்னா, நாம அதுக்கு முன்னாடி போயாகணும். மெதுவா நடந்தா அது முடியாது. ஸ்பீடா நடங்க. எங்கூடயே வாங்க…!” பொன்மணி சொல்லிக்கொண்டே ப்ரஸாத்துக்கு முன்னால் விடுவிடுவெனச் சென்றான். கிராமத்தான் என்பதால் அவனால் விளக்கு வெளிச்சம் இன்றியும் இருளுக்குள் நடக்க இயலும்.
மற்றவர்களும் நடையில் வேகம் கூட்டி அவனைத் தொடர்ந்தனர். எல்லோரின் மனதிலும் பயம் படர்ந்திருப்பது நன்றாகவே தெரிந்தது. அதை மறைக்க மெல்லிய ஒலியில் ஏதாவது பேசிக்கொண்டே சென்றனர். ஆனால், ஒருவர் பேச்சு மற்றவருக்கு உவப்பளிக்கவோ, எவரின் பேச்சும் பயத்தைப் போக்கவோ இல்லை. வேகமாக நடந்ததால் சுமார் ஒரு கிலோ மீட்டர் நடப்பதற்குள் களைப்பு வேறு. படிப்படியாகப் பேச்சு குறைந்தது. மயான அமைதி.
“ஏன்டா,… பஸ்ல அந்தப் பெரியவரும் மத்தவங்களும் சொன்னது உண்மையா இருக்குமா; ஆட்டோக்காரர் சொன்னது சரியா இருக்குமா?” மஜீத் கேட்டான்.
“டேய் தடியா…! நீ அதை வேற ஏன்டா ஞாபகப்படுத்தற…?” ஜோஸ்வா கடிந்துகொண்டான்.
எழில் சிரித்தான். “மனுசங்க அகால மரணம் அடைஞ்சா ஆவியா ஆவாங்கன்னு சொல்றீங்க. கதைகள்லயும் சினிமாவுலயும் கொலை செய்யப்பட்டவங்களோட ஆவிக வந்து கொலைகாரனுகளைப் பழி வாங்குது. மனுசங்க மட்டும்தான் அகால மரணம் அடையறாங்களா? தாவரங்க, விலங்குக, பிராணிக, பறவைக, புளு – பூச்சிக, கிருமிக அகால மரணம் அடையறதில்லையா? அதுவும், இதெல்லாம் மனுசங்களால ஒவ்வொரு நிமிசமும் கோடிக் கணக்குல கொல்லப்பட்டுட்டிருக்குதே…! அதெல்லாம் ஏன் ஆவியா வர்றதில்ல…? மனுசங்களால அநியாயமாக் கொல்லப்பட்டதுக்குப் பழி வாங்கறதில்ல? அவ்வளவு ஏன்,… நாட்டுல தினம் தினம் எத்தனை கொலைக நடக்குது? அவங்களோட ஆவிக ஏன் வந்து அந்தக் கொலைகாரனுகளை வஞ்சம் தீக்கறதில்ல?”
யாரும் எதுவும் சொல்லவில்லை.
“க்கூம்… க்கூம்…“ கடூரமான அடிக் குரலில் எங்கிருந்தோ சத்தம் கேட்டது. பொன்மணி தவிர மற்ற நால்வரும் துணுக்குற்றனர்.
“அது என்னடா சத்தம்? ஏதாவது மிருகமா?” ஜோஸ்வாவின் குரல் நடுங்கியது.
“இல்லடா! ஊமைக்கோட்டானோட சத்தம்தான். ஆந்தைல ஒரு ரகம். அது இப்புடித்தான் ‘க்கூம்… க்கூம்…’னு கமுக்கமா சௌண்டு விடும். அதனாலதான் ஊமைக்கோட்டான்னு பேரு.”
ஆசுவாசமாகி நடந்தனர்.
பொன்மணியும் எழிலும் களைப்பின்றிப் பழைய வேகத்திலேயே நடந்துகொண்டிருந்தனர். மற்றவர்களின் நடை மட்டுப்பட்டது.
“வேகமா நடங்கடா…! கேட் வாக் போட்டுட்டிருந்தா, சிறுத்தையார் நம்மளுக்குக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டீட்டுப் போயிருவாரு!” எழில் துரிதப்படுத்தினான்.
அவனது நகைச்சுவைக்குச் சிரிப்பு வந்தாலும் சிரிக்க முடியவில்லை. மரண பயம் அவர்களின் கால்களுக்கு வேகம் கொடுத்தது. மூச்சிரைக்க, வேர்த்து விறுவிறுத்து நடையோட்டமிடலாயினர்.
முன்னால் விறுவிறுவெனச் சென்றுகொண்டிருந்த பொன்மணி, சட்டென நின்றான். பிறகு திரும்பிப் பார்த்து இவர்களையும் நிற்குமாறும் பேசாதிருக்குமாறும் சைகை காட்டிவிட்டு, மெதுவான ஒலியில், “லைட் ஆஃப் பண்ணு” என்றான்.
ஏதோ ஆபத்து எனப் புரிந்து பதற்றத்தோடு நின்றனர். ப்ரஸாத் அலைபேசி விளக்கை அணைத்தான். அவர்களுக்கு இருளுக்குள் ஒன்றும் புலப்படவில்லை. சில விநாடிகளில் இருள் கண்களுக்குப் பழகியதும் தூரத்துக் காட்சி புலப்பட்டது. கூப்பிடு தூரத்துக்கு அப்பால், இருளுக்குள் அடர் இருள் உருவங்களாக, ஒன்றன் பின் ஒன்றாக நாலைந்து யானைகள் சாலையைக் குறுக்கே கடந்துகொண்டிருந்தன.
“அய்யோ…! ஒரு நிமிசம் முன்னாடி வந்திருந்தா நம்ம கதி…?” ப்ரஸாத் கம்மியக் குரலில் வெலவெலத்தான்.
எல்லோருக்கும் ஈரல் குலை நடுங்கியது.
*******
2
யானைகள் கடந்து சென்ற பிறகும் ஓரிரு நிமிடங்கள் அங்கேயே அசையாமல் நின்றிருந்தனர். பொன்மணி சைகை செய்ததும் பம்மியபடி நடந்தனர்.
அவன் அவர்களிடம் மெதுவான குரலில், “காட்டுக்குள்ள மனுச வாடை வந்தாலே மிருகங்களுக்குத் தெரிஞ்சிரும். பேச்சு சத்தம் கேட்டா ஈஸியாக் கண்டுபுடிச்சிரும். அதனால இனிமே யாரும் பேசவோ, சத்தப்படுத்தவோ செய்யாம அமைதியா, வேகமா வாங்க. எவ்வளவு சீக்கிரம் இந்தக் காட்டைக் கடந்து காலேஜ் போயிச் சேர்றமோ அவ்வளவு நல்லது…” என்றான்.
மயிரிழையில் யானையிடமிருந்து தப்பித்த பயத்தில் தொண்டை அடைத்திருந்த அவர்களுக்கு, இப்போது உதடுகள் ஒட்டிக்கொண்டுவிட்டன. எந்த விதச் சத்தமும் எழுப்பாமல் அவன் பின்னே விரைந்து நடந்தனர். வனாந்தர நிசப்தத்தில் அவர்களின் காலடி ஓசைகள் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தன. அவரவர் நெஞ்சு படபடத்துத் துடிக்கிற சத்தமும் அவரவர்க்குக் கேட்டது.
சாலையின் இரு மருங்கிலும் இருளுக்குள் அடர் கருமையாக நிற்கிற மரங்கள், புதர்களைக் கூர்ந்து பார்த்தபடியே சென்றனர். அரண்டிருந்த அவர்களின் கண்களுக்கு, கொடிகள் படர்ந்தாடுகிற புதர்களின் தோற்றம், காட்டு யானை துதிக்கையை அசைத்தவாறு நின்றிருப்பதாகத் தோற்றமளித்தது. மரக் கிளைகளின் அசைவுகள், அதனுள் சிறுத்தையின் அனக்கமாக இருக்கலாமோ என்ற கிலியை உண்டாக்கின. அப்போதெல்லாம் நின்று, தங்களுக்குள் அது குறித்து மெதுவாகப் பேசி, உண்மை என்ன என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே அடுத்த அடி வைத்தனர்.
ப்ரஸாத்தின் அலைபேசியில் பேட்டரி குறைந்து அணைந்துவிட்டது. அடுத்ததாக எழில் தனது அலைபேசியின் டார்ச்சை இயக்கி நடந்தான்.
அப்போது எதிர்புறமாக இருந்து பற்சக்கர வாகனம் ஒன்று வருவதின் வெளிச்சம் தெரிந்தது. இடது புறமாக ஒதுங்கி நடந்தனர். வந்தது வனத்துறையினரின் ஜீப். இவர்கள் அருகே வந்ததும் வண்டி நின்றது.
ஜீப்பை ஓட்டிக்கொண்டிருந்தவர், “யார் நீங்கல்லாம்? இந்த நேரத்துல எங்க போயிட்டிருக்கறீங்க?” என விசாரித்தார்.
கல்லூரிக்கு வந்ததும், ஆட்டோ பழுதுபட்டதுமான விபரத்தைக் கூறினர்.
“யாரு அந்த ஆட்டோக்காரன்? சரியான முட்டாப் பயலா இருப்பானாட்டிருக்குதே…! போன வாரம்தான் இங்க கரடி அடிச்சு ஒரு பெருசு போய்ச் சேந்துச்சு. அப்புடி இருந்தும் உங்கள இப்படி விட்டுட்டுப் போயிருக்கறானே…!”
இதயம் எகிறி வாய் வழியே வெளியில் குதித்துவிடும்போல் இருந்தது.
“என்னது,… கரடி வேறயா…??? டே,… வாங்கடா ஊருக்கே திரும்பிப் போயர்லாம்” என்றான் ஜோஸ்வா.
“எப்புடி,… இங்கிருந்து நடந்தே போறதா…? ஏன்டா, மடத்தனமா பேசிட்டிருக்கற? திரும்பிப் போனா, காட்டுக்குள்ளயே நம்ம கதை முடிஞ்சாலும் முடிஞ்சுரும்” என்றான் ப்ரஸாத்.
“முக்காவாசி தூரம் வந்துட்டோம். இன்னும் காவாசிதான். சீக்கரமா நடந்து காலேஜ் போயிச் சேந்தர்லாம்.” பொன்மணி ஊக்கப்படுத்தினான்.
ஜோஸ்வா தன் சட்டையை நெஞ்சருகே சிலுவையோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு பீதியோடு ஜெபிக்கலானான்.
“இருங்கடா! இவர்கிட்டயே லிஃப்ட் கேக்கலாம்!” மஜீத் திடமாகச் சொல்லிவிட்டு, ஜீப் ஓட்டுநரிடம், “ஸார்,… ப்ளீஸ்…! எங்களைக் காலேஜ்ல ட்ராப் பண்ணி, அஞ்சு பேர்த்து உசுரையும் காப்பாத்துங்க ஸார்…!” எனக் கெஞ்சுதலாகக் கேட்டுக்கொண்டான்.
அவர் சற்று யோசித்துவிட்டு, “சரி, சரி…! ஏறுங்க!” என்றார்.
முன்புறத்தில் மட்டுமே இன்னொருவரும் இருந்தார். அதனால் ஐவரும் உட்புறம் ஏறிக்கொள்ள முடிந்தது.
“நன்றி சேசுவே…!” என்றான் ஜோஸ்வா.
எழில் அவனது பிடரியில் மெதுவாக ஓர் அடி கொடுத்துவிட்டு, “கரடி அடிச்சதைச் சொல்லி எச்சரிக்கைப்படுத்துனதுமில்லாம, நம்மளைக் காப்பாத்திவிட்டது ஸாருதான்! அவருக்கு நன்றி சொல்லாம, நம்மளைக் காவு குடுக்கப் பாத்தவருக்கு ஏன்டா நன்றி சொல்ற?” என்றான்.
வனக் காவலர்கள் உட்பட எல்லோரும் சிரித்தனர்.
*******
கல்லூரியில் ஜீப் அவர்களை இறக்கிவிட்டுத் திரும்பியபோது மணி பதினொன்று.
“ஃபாரஸ்ட் ஜீப் வல்லேன்னா நம்ம நெலைமை என்னாகியிருக்குமோ…!” உயிர் தப்பித்த நிம்மதியில் மகிழ்ச்சியும் உண்டாயிற்று.
பாதுகாப்பு அலுவலகத்துக்குச் சென்றனர். அடையாள அட்டைகள், அழைப்பிதழ் ஆகியவற்றைக் காண்பித்து, தாங்கள் தங்க வேண்டிய ப்ளாக் விவரங்களைப் பெற்று உள்ளே நுழைந்தனர்.
முந்நூற்றுச் சொச்சம் ஏக்கருக்கு வளைத்துப் போடப்பட்ட பரந்த வெளியில் கட்டிடங்கள் யாவும் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தன. வெகு தூரத்தில் தள்ளித் தள்ளிப் பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் மின் வெளிச்சப் புள்ளிகளோடு தென்பட்டன. இந்த வளாகத்தில் கலை, அறிவியல், பொறியியல், தொழிற்கல்வி என வகை வகையான கல்லூரிகளும், பால வகுப்பு முதலான பள்ளிகளும் உள்ளன.
பயன்பட்டதும், பயன்படுத்துவதும் போக மிச்ச நிலம் பெருவாரியாகக் கிடக்கிறது. அதில் பெரிதும் சிறிதுமான காட்டு மரங்களும், புதர்களும் அடர்ந்திருந்தன. குறுக்குமறுக்காகத் தார்ச் சாலைகள் போடப்பட்டிருந்தாலும் விளக்குகள் அவ்வளவாக இல்லை. இருந்த விளக்குகளில் பலதும் எரியவில்லை.
“என்னடா இது…! காட்டைவிடக் காலேஜைப் பாக்க ரொம்ப பயமா இருக்குதே…!” என்றான் ஜோஸ்வா.
“மறுபடியும் ஒரு கிலோ மீட்டர் நடக்கணுமா…?” தளர்ந்துபோய் நின்ற மஜீத், குனிந்து தன் முழங்கால்களுக்கு மேல் பற்றிக்கொண்டான்.
என்ன கொடுமை சித்தப்பு என நொந்துகொண்டே நடக்கலாயினர்.
அவர்களுக்கு வழங்கப்பட்ட ப்ளாக் எங்கு உள்ளதென்று தெரியாது. தூரத்தில் இரு நபர்கள் ஒருவர் பின் ஒருவராகச் சென்றுகொண்டிருந்தனர்.
“பரவால்லியே…! இந்தக் காட்டுக் காலேஜ்ல இந்த நேரத்துக்கும் மனுச நடமாட்டம் இருக்குதே…! அவங்ககிட்ட வழி கேட்டுக்கலாம்” என்ற ப்ரஸாத், “ஹலோ பாஆஆ…ஸ்…! பாஆஆஆ…ஸ்ஸ்…!” எனக் குரல் கொடுத்தான்.
முன்னால் சென்றுகொண்டிருந்தவனுக்குக் கேட்கவில்லையா, கூப்பிட்டதைப் பொருட்படுத்தவில்லையா எனத் தெரியவில்லை. சாலையிலிருந்து பிரிகிற சிறு மண் பாதையில் திரும்பி, சிகரெட் புகைத்தபடியே நடக்கலானான். அருகே எரிந்துகொண்டிருந்த தெரு விளக்கு வெளிச்சத்தில் அவனது உருவமும், பக்கவாட்டுத் தோற்ற முகமும் நன்றாகத் தெரிந்தது. மாநிறமாக, உயரமாக, சராசரி உடல் வாகோடு இருந்தான். நீண்ட குதிரை முகம். ஃப்ரெஞ்ச் தாடி, மீசை. மீண்டும் அழைப்பதற்குள் மரங்கள், புதர்களிடையே மறைந்துவிட்டான்.
இரண்டாவதாகச் சென்றுகொண்டிருந்தவன் திரும்பிப் பார்த்துவிட்டு நின்றான். செம்பழுப்பு நிறம், மஜீத் மாதிரி சற்று தடித்த உடல் வாகு, காளான் வெட்டுத் தலைமுடி.
அருகே சென்று வழி விசாரிப்பதற்குள், “பாத்த முகங்களாத் தெரியலையே…! யாரு நீங்க? சிம்போசியத்துக்கு வந்தவங்களா?” எனப் புலன் விசாரணை செய்தான்.
ஆமோதித்ததும், “எந்த ஊரு? எந்தக் காலேஜு? ஏன் இவ்ளோ லேட்டா வர்றீங்க?” என்ற குறுக்கு விசாரணை.
விபரம் தெரிவித்தனர்.
“எங்களுக்குக் குடுத்த ப்ளாக் எங்கன்னு தெரியலீங்க பாஸ்! அதைக் கேக்கறதுக்காகத்தான் சத்தம் போட்டு உங்க ரெண்டு பேரையும் கூப்புட்டேன். உங்க முன்னாடி போனவருக்குக் கேக்கலையாட்ட இருக்குது. எப்படியோ, நீங்களாச்சும் நின்னதுனால ஆச்சு” என்றான் ப்ரஸாத்.
காளான் தலையனுக்குப் புருவம் சுருங்கியது. “ரெண்டு பேரா…? எனக்கு முன்னாடி ஒருத்தன் போயிட்டிருந்தானா…? என்னங்க ப்ரோ சொல்றீங்க…? நான் மட்டும்தான தனியா வந்துட்டிருக்கறேன்…? எனக்கு முன்னாடியோ பின்னாடியோ யாரும் வல்லியே…!??”
ஐவரும் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“என்னங்க பாஸ் இப்படிச் சொல்றீங்க? உங்களுக்கு முன்னாடி, நம்மளை மாதிரி யங்ஸ்டர் ஒருத்தர், ஃப்ரெஞ்ச் பியர்ட் வெச்சவரு, சிகரெட் புடிச்சுட்டுப் போயிட்டிருந்தாரே…! அப்பறம் அந்த மண் பாதைல பிரிஞ்சு போனாரே…!”
“இல்லவே இல்லீங்க ப்ரோ! உங்க கண்ணுக்கு அவ்வளவு தூரத்துல இருந்து தெரிஞ்ச ஆளு, பக்கத்துல இருந்த என் கண்ணுக்குப் படாமப் போயிருவானா…? சிகரெட் புடிச்சுட்டுப் போனான்னு வேற சொல்றீங்க! அந்த வாசமும் என் மூக்குக்குத் தெரியாமயா போயிரும்…?”
அவர்கள் திக்பிரமை பிடித்தாற்போல நின்றனர். ஜோஸ்வாவுக்கும் பொன்மணிக்கும் கை கால்களில் உதறல் எடுத்தது. ஜோஸ்வா வழக்கம்போலச் சிலுவையைப் பற்றிக்கொண்டு சேசுவே, சேசுவே என அரற்றினான். பொன்மணி முணுமுணுப்பாகக் குலதெய்வத்தையும், காவல் தெய்வங்களையும் வேண்டிக்கொண்டான்.
பிறகு அனைவரையும் பேச்சை நிறுத்துமாறு சைகை செய்துவிட்டு, “டேய்ய்ய்…! அது… ‘அது’தான்டா…! பஸ்ல சொன்னாங்கல்ல…?!” என்றான்.
மஜீத்துக்கும் ப்ரஸாத்துக்கும் அப்படித்தான் இருக்கும் என்று பட்டது.
எழிலுக்கு எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. கடவுள், பேய் – பிசாசு எதுவும் இல்லை என்பது உண்மைதான். ஆனால், ஐந்து பேரும் கண்ணால் பார்த்தது பொய்யா? அவனுக்குக் குழப்பம்.
ஜோஸ்வா உறுதியாகச் சொன்னான். “நிச்சயமா அது ‘அதே’தான்! இல்லேன்னா, தூரத்துல இருந்த நம்ம அஞ்சு பேர் கண்ணுக்கும் தெரிஞ்சது, பக்கத்துலயே இருந்த இவரு கண்ணுக்குத் தெரியாமப் போகுமா?”
“ஆமாடா…! இவரு லோக்கல்ங்கறதுனால இவரை விட்டுட்டு, அசலூர்க்காரங்களான நம்மளை அட்டாக் பண்றதுக்கு அது ப்ளான் பண்ணியிருக்கும்னு நெனைக்கறேன்…! அதனாலதான் நம்ம கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சிருக்குது…” பொன்மணி வழிமொழிந்தான்.
ஐந்து பேரும் திகிலில் உறைந்துவிட்டனர்.
*******
இவர்களின் பேச்சையும், கலவரத்தையும் பார்த்த காளான் தலையன், “நீங்க என்ன பேசீட்டிருக்கறீங்க? ஏதாவது பிரச்சனையா?” எனக் கேட்டான்.
ப்ரஸாத் உதறலோடு விஷயத்தைத் தெரிவித்தான்.
“ஃஃபூ…! இதுதானா…! அந்த ரூமர் இருக்கறது வாஸ்தவம்தான். ஆவியாவது, பேயாவது….! இந்தக் காலத்துலயும் இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் இருக்கறதே தப்பு. அதுவும், சைன்ஸும் எஞ்சினீயரிங்கும் படிச்சுப் பட்டம் வாங்கப்போற நீங்களே இப்படி இருந்தா என்னாகறது?”
எழில் தொண்டையைச் செருமிக்கொண்டான். “தோழர்…! நான் பகுத்தறிவுவாதி. ஆனா, இப்ப நானே என் கண்ணால அதைப் பாத்தனே..! நீங்க என்னடான்னா,… அது இல்லீங்கறீங்க. ஒன்னா,… அது பேயாவோ ஆவியாவோ இருக்கணும். இல்லாட்டி, நீங்க பொய் சொல்றீங்கன்னு எடுத்துக்கணும்…”
“நீங்க லாஜிக்காப் பேசறீங்க, ப்ரோ! ஆனா, நான் ஏன் உங்ககிட்டப் பொய் சொல்லப்போறேன்! அதுவும் இந்த மாதிரிப் பொய் சொல்லி, எனக்கு என்ன கெடைக்கப்போகுது?”
“அது சரிதான் தோழர். ஆனா…”
“சரி, அதை விடுங்க ப்ரோ! அதைப் பத்தி இங்க விவாதம் பண்ணிட்டு நிக்க வேண்டாம். நான் என் ரூமுக்குப் போயித் தூங்கணும். நீங்களும் தூங்கணுமில்ல?”
“ஆமாங்க பாஸ். எங்களுக்கு ஜி ப்ளாக்ல ரூம் குடுத்திருக்கறாங்க. அது எங்கன்னு வழி கேக்கத்தான் உங்களைக் கூப்புட்டோம். எப்படிப் போகணும்னு சொன்னீங்கன்ணா உதவியா இருக்கும்.”
“ஜி ப்ளாக்தானே…! இங்கருந்து வழி சொன்னா உங்களுக்குப் புரியறது சிரமம். ராத்திரி வேற! நானும் அந்த வழிலதான் போறேன். வாங்க…!” என்றபடி நடந்தான்.
அவர்களும் அவனோடு நடந்தனர்.
“என் பேரு மகேந்திரன். எம்.சி.ஏ. ஃபர்ஸ்ட் இயர். இங்க ஹாஸ்டல்ல தங்கியிருக்கறன். சொந்த ஊரு திண்டுக்கல்.”
தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்கள் ஒவ்வொருவரின் பெயர், படிப்பு, இங்கே கலந்தாய்வரங்கில் எந்தெந்தப் பிரிவு போட்டிகளில் கலந்துகொள்ளவிருக்கின்றனர் என்றெல்லாம் விசாரித்து அறிந்துகொண்டான்.
“நீங்க புரிஞ்சுக்கறதுக்காக சொல்றேன். ஆவி, பேயின்னு எதுவும் கெடையாது ப்ரோ! சின்ன வயசுலருந்து நாம கதைகள்ல கேட்டது, சினிமால பாத்தது, நம்மளோட பயத்தால ஏற்படற கற்பனை, சந்தர்ப்பம் – இதெல்லாம் சேந்துதான் ஆவி, பேய், பிசாசுக இருக்குதுங்கற மாதிரி தோற்றத்தை உண்டாக்குது” என்றான் அவன், அவர்களைத் தைரியப்படுத்தும் விதமாக.
“குறிப்பா சொல்லணும்னா, நிஜத்துல பேயைப் பாத்ததா சொல்லப்படற எல்லா சம்பவங்களுமே இருட்டுல, ஒதுக்குப்புறமான எடத்துல, தனிமையான சூள்நிலைலதான் நடக்கும். பெரும்பாலும் ராத்திரியா இருக்கும். இல்லேன்னா, பகல்ல, வெளிச்சமில்லாத எடமாவோ, வீடாவோ, பாழடைஞ்ச பங்களாவாவோ இருக்கும். பேயப் பாத்ததா சொல்றவங்க தனியாவோ, அதிகபட்சம் நாலஞ்சு பேர் இருக்கற க்ரூப்பாவோதான் இருப்பாங்க. நல்ல வெளிச்சமான எடத்துல, பட்டப் பகல்ல, நெறையப் பேர் கூடியிருக்கற எடத்துல பேய் வந்ததாக் கேக்க முடியாது. கதைகள்ல, சினிமால வேண்ணா அப்படி இருக்கலாமே தவுத்து, நெஜத்துல எங்கயாவது அப்படி நடந்ததா, உங்கள்ல ஒருத்தராவது, ஒரே ஒரு சம்பவத்தையாவது கேட்டதுண்டா…?”
அவன் அவர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் நோக்கினான். எல்லோரும் யோசித்துப் பார்த்துவிட்டு, இல்லை என்றனர்.
“விஷயமே அதுதான்! இருட்டுலயோ மங்கல் வெளிச்சத்துலயோ, என்ன ஏதுன்னு சரியாப் புலப்படாம, புகைமூட்டமாவோ, மங்கலாவோ இருக்கற சில உருவங்கள் அல்லது அருவங்கள், நாம கற்பனை பண்ணிக்கற உருவமா தோற்றப்படும். இது பார்வைலயும் மனசுலயும் உண்டாகற விஷூவல் மிஸ்டேக்…”
பொன்மணியும், ஜோஸ்வாவும் அதை ஏற்கவில்லை. எனினும், அதை வெளியே சொல்லவும் இல்லை. ப்ரஸாத்தும், மஜீத்தும் அவனது விளக்கம் சரியா, தவறா எனச் சிந்தித்துக்கொண்டிருந்தனர்.
மகேந்திரன் தொடர்ந்தான்:
“ஆன்மாதான் ஆவியா ஆகறதா சொல்றாங்க. இதனால சில பேரு ஆவியையும் ஆன்மான்னே சொல்றாங்க. சில பேர் உயிரைத்தான் ஆன்மான்னும் தவறாக் கருதிக்கறாங்க.
“உயிர் வேற, ஆன்மா வேற. இது ரெண்டும் இருக்கு. ஆனா, ஆவிங்கறது கெடையாது. ஆன்மாங்கறது நம்மளோட மனசு மாதிரி, சூட்சுமமானது. மூளையோட சூட்சுமச் செயல்பாடுதான் மனம். அதே மாதிரி, நம்ம மூளை, உடல், மனம் எல்லாத்தோட செயல்பாடுகளையும் சூட்சுமமாக் கொண்டிருக்கறதுதான் ஆத்மா. நாம இறந்ததுமே நம்மளோட மூளையும் இறந்துருது. அதனால, அதோட சூட்சுமச் செயல்பாடுகளா இருக்கற மனம், ஆன்மா ரெண்டுமே அழிஞ்சுடும்.
“மனசுக்கு எப்படி உருவம் கெடையாதோ, மனசுனால எப்படி உருவம் எடுக்க முடியாதோ, அப்படித்தான் ஆத்மாவாலயும் உருவம் எடுக்க முடியாது. அதே மாதிரி, உடலை விட்டு உயிர் பிரிஞ்சதும், ஆன்மாவும் பிரிஞ்சு ஆவியா உலவும்கறதும் கட்டுக் கதை. அறிவியல் ரீதியா அதுக்கு வாய்ப்பே இல்ல. எந்த ஆய்வுக்கூடத்துலயும் அது நிரூபிக்கப்படவும் முடியாது.”
அவனது தர்க்கங்கள் எழிலுக்கும், ப்ரஸாத்துக்கும் சரியென்றே பட்டன.
“நீங்க சொல்றது சரியா இருக்கலாம், பாஸ்! எங்கள்ல யாராவது ஒருத்தருக்கு அந்த உருவம் தெரிஞ்சிருந்தா அது பிரமைன்னு சொல்லலாம். அஞ்சு பேருக்கும் தெரிஞ்சுதே,… அது எப்படி?” ப்ரஸாத் கேட்டான்.
“அந்த உருவம் எப்படி இருந்துச்சு? ஒவ்வொருத்தரா சொல்லுங்க. எல்லாரும் சொல்றது ஒரே மாதிரி இருக்குதான்னு பாக்கலாம்.”
அனைவரும் சொன்னது ஒரே மாதிரியாக இருந்தது.
“எனக்கு இது எப்படின்னு புரியல. இருந்தாலும், பவர்ஃபுல்லான மெஜீஷியன்ஸ், ஆயிரக் கணக்கான மக்கள் கூட்டத்தையே மாஸ் ஹிப்னாட்டைஸ் பண்ணி, ரயிலையும் கப்பலையும் மறைய வெச்சதா மாயத் தோற்றத்தை உண்டு பண்ணுவாங்க. அது மாதிரி, உங்கள்ல யாரோ ஒருத்தருக்கு மைன்ட் பவர்ஃபுல்லா இருக்கும்னு நெனைக்கறேன். அவரோட மனசுல ஏற்பட்ட மாயத் தோற்றம், மின்கசிவு மாதிரிக் கசிஞ்சு, மத்தவங்களோட மைன்டையும் பாதிச்சு, அவங்களுக்கும் அதே மாயத் தோற்றத்தை உண்டாக்கியிருக்கலாம்.”
“அப்படியெல்லாம் சாத்தியமா என்ன?!” எழில் வியப்போடு கேட்டான்.
“மெஸ்மரிஸம், ஹிப்னாடிஸம், மைன்ட் ரீடிங்கெல்லாம் சாத்தியமாகும்போது, இதுவும் சாத்தியம்தானே…!”
“இது யாரோட சைக்காலஜி தியரி? எந்த புக்ல இருக்கு?”
“எனக்கு ஒரு யூகம். அவ்வளவுதான்!”
ஜி ப்ளாக்கிற்கு சற்று அருகே வந்ததும் அதைக் காட்டிவிட்டு, “நீங்க அஞ்சு பேரும் பரிசும், மெடலும் வாங்கறதுக்கு என்னோட வாழ்த்துக்கள்!” என்றான்.
அனைவரும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
“இவங்க நாலு பேரும் எங்க கலந்துகிட்டாலும் ப்ரைஸ் வாங்குவாங்க ப்ரோ! ஆனா, நான் ஒரு தடவைகூட வின் பண்ணுனதில்ல. இப்பவும் நான் ப்ரைஸ் வாங்கறனோ இல்லியோ, இவுங்க எல்லாரும் கண்டிப்பா வாங்குவாங்க” என்றான் மஜீத், பெருமிதமாக.
“இந்தத் தடவை உங்களுக்கும் நிச்சயமா ப்ரைஸ் கெடைக்கும். வாய்ப்பிருந்தா மறுபடியும் சந்திக்கலாம்! எல்லாருக்கும் பை…!” சொல்லிவிட்டு இருளுக்குள் சென்று மறைந்தான்.
*******
3
அறையை அடையும்போது நள்ளிரவு பதினொன்றே முக்கால் ஆகிவிட்டது. வழக்கமாக இவர்கள் எல்லோரும் ஆழ்ந்து உறங்குகிற நேரம். இப்போது மொத்தம் சுமார் மூன்று கி.மீ. தூரம் நடந்து வந்த களைப்பு வேறு. அப்படியிருந்தும் அவர்கள் யாருக்கும் தூக்கக் கலக்கம்கூட வரவில்லை. உடல் சோர்வையும் மறந்து, ஆவி ஞாபகமாகவே இருந்தனர்.
ஜோஸ்வா அறையில் ஓர் ஓரத்தில் மண்டியிட்டு, சிலுவையை வெளியே எடுத்துப் பிடித்தபடியே கர்த்தர், யேசு, மேரி, பரிசுத்த ஆவி எல்லோரையும் அழைத்து, ஃப்ரெஞ்ச் தாடி ஆவியினால் தனக்கும் நண்பர்களுக்கும் ஆபத்து வராமல் ரட்சிக்கும்படி மன்றாடினான்.
பொன்மணி இன்னொரு மூலையில் சம்மணமிட்டு, கண் மூடிக் கைகூப்பியவாறு தண்டுமாரியாத்தா, செங்ககாளியாத்தா, முப்பிலியான், சூளைக் கருப்பன், அண்ணன்மார் சாமி, வாழைத் தோட்டத்து ஐயன், சுடலை ஈஸ்வரன், சிங்கமுடைய அய்யனார், வடுவச்சி அம்மன், முண்டசாமி, சங்கிலி மாடன் எனத் தமிழகக் காவல் தெய்வங்களின் பெரும் பட்டியலை மனப்பாடம் ஒப்பித்துக்கொண்டிருந்தான்.
அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு மஜீத் இன்னொரு புறம் தரையில் பெட்ஷீட் விரித்து மண்டியிட்டு, விரித்த உள்ளங்கைகளைச் சேர்த்து ஏந்தி, ஏக இறைவனைத் தொழலானான்.
ப்ரஸாத்தும் எழிலும் செய்வதறியாது கட்டிலில் மௌனமாக அமர்ந்திருந்தனர்.
பொன்மணி பிரார்த்தனை முடிந்து எழுந்ததும் குலதெய்வக் கோவில் விபூதியைப் பட்டையாகத் தீட்டிக்கொண்டு, குங்குமத்தை எடுத்து நெற்றியில் பெரிதாக இட்டுக்கொண்டான்.
உடனே ப்ரஸாத்தும் அவனிடம் சென்று கைகூப்பி, நெற்றியை நீட்டி, “மாப்ள,… எனக்கும் வெச்சு விட்றா…!” என்றான்.
அவனும், “இந்தா போ…! இனி மேலாவது நல்ல புத்தி வரட்டும்!” என்றபடி விபூதி பூசி, குங்குமம் வைத்துவிட்டான்.
எழிலுக்கும் அவனிடம் சென்று விபூதி இட்டுக்கொள்ளலாமா என்ற யோசனை. என்றாலும், அவ்வளவு சீக்கிரம் தனது நாத்திகக் கொள்கையை முற்றாகக் கைவிட்டு எதிர்க்கட்சியிடம் சரணடையத் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. மகேந்திரனின் வாதங்கள் அவனுக்கு தெம்பூட்டியும் இருந்தன.
இருப்பினும் அதில் அவனுக்கு முழு ஏற்பும் இல்லை.
கண்ணால் கண்டதை நம்புவதா, மகேந்திரனின் வாதங்களை நம்புவதா…? முடிவெடுக்க இயலாமல் திணறிக்கொண்டிருந்தான்.
“உங்களோட சேந்து நானுமே ஏமாந்துட்டது வாஸ்தவம்தான். ஆனா, இப்ப யோசிச்சுப் பாத்தா, மகேந்திரன் சொல்றதுதான் சரியா இருக்கும்னு படுது…” தனக்கே முழு நம்பிக்கை இல்லாமல் சொன்னான்.
மஜீத் தொழுகை பெட்ஷீட்டை எடுத்து உதறிவிட்டு, “கடவுள் நம்பிக்கை இல்லேன்னாலும் பரவால்ல. ஆண்டவனைப் பளிச்சுப் பேசாம, அவனுக்கு எதிரான காரியங்கள் செய்யாம இருந்தா அவன் நமக்குக் கேடு விளைவிக்க மாட்டான். ஆனா, ஷைத்தானும், ஜின்னும் நம்மளைக் கேடான வழில போக வெப்பாங்க. ஆவிகளும், பேய் பிசாசுகளும் நமக்கு ஆபத்து உண்டாக்கும். அதனால, அதுக இருக்கறதை நம்பறதுதான் புத்திசாலித்தனம்” என்றான்.
எழிலுக்கு அவன் சொல்வதும் சரிதானோ என்று பட்டது.
“சரிடா! தூங்கலாம். லைட்டை ஆஃப் பண்ண வேண்டாம். யாராவது பாத்ரூம் போகணும்னா தனியா வெளிய போயறாதீங்க. ரெண்டு மூனு பேர் சேந்துதான் போகணும்.” பொன்மணி எச்சரித்துவிட்டுப் படுத்துக்கொண்டான்.
ப்ரஸாத் மேலும் பாதுகாப்புக் கருதி அவன் அருகில் படுத்துக்கொள்ள, ஜோஸ்வாவும் மஜீத்தும் அருகருகே படுத்துக்கொண்டனர்.
எழில் என்ன செய்வது எனச் சற்று நேரம் யோசித்துவிட்டு, இந்த இரு ஜோடிகளுக்கும் நடுவே இருந்த இடைவெளியில் படுத்துக்கொண்டான்.
*******
ஒரு வழியாக விடிந்துவிட்டது.
அப்பாடா…! பகல் வெளிச்சம் எவ்வளவு அழகு! எவ்வளவு தைரியம்!
இரவு முழுக்க அரண்டவாறே அரைகுறையாகத் தூங்கியதையும், வெளியே உள்ள கழிப்பிடத்துக்கு இரண்டு, மூன்று பேர் சேர்ந்து, சுற்று முற்றும் பார்த்துப் பயந்தபடியே சென்றதையும் நினைத்தால் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது.
குளித்துப் புறப்பட்டு, சாப்பிடுவதற்காக கேண்ட்டீன் நோக்கிச் செல்கையில் எழில், “இருட்டுதான் பயத்தோட உறைவிடம்; வெளிச்சம், தைரியத்தோட மூலஸ்தானம்” என்றான்.
ப்ரஸாத், “ஆமாடா! அந்த ஆவி நமக்கு ஒரு கெடுதலும் செய்யல. நம்மள பயமுறுத்தக்கூட இல்ல. அவ்வளவு ஏன், அது நம்மளைப் பாக்கக்கூட கெடையாது. நாமதான் அதைப் பாத்து தேவையில்லாம பயப்பட்டுட்டோம்” என்றான்.
எழிலும் மஜீதும் சிரித்துக்கொண்டனர். பொன்மணியும் ஜோஸ்வாவும் தீவிர முகமே காட்டினர்.
“இப்ப அந்த ஒரு ஆவி மட்டுமில்ல; எத்தனை ஆவி வந்தாலும் நான் அதுககிட்டப் போயி ஷேக் ஹேண்ட் குடுத்து, ஆட்டோக்ராஃப் வேண்ணாலும் வாங்குவேன்!” மஜீத் பீற்றிக்கொண்டான்.
“ஆனா, ஆவிக வெட்ட வெளிச்சத்துல வராதே…!”
“மனுசங்களுக்கு இருட்டுன்னா பயம். ஆவிக, பேய் – பிசாசுகளுக்கு வெளிச்சம்னா பயம்” என்றான் ஜோஸ்வா.
*******
வழக்கம்போல எழிலும் பொன்மணியும் தங்களுக்குக் கைவந்த பேப்பர் ப்ரசன்டேஷனில் மட்டும் கவனம் செலுத்த, எதிலும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற கொள்கையோடு ப்ரஸாத்தும் ஜோஸ்வாவும் க்விஸ், ப்ராஜெக்ட் எனப் பலவற்றிலும் பங்கேற்பதில் மும்முரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தனர்.
இந்த நால்வரும் எங்குச் சென்றாலும் ஆளுக்கு ஒரு பரிசாவது பெறாமல் வர மாட்டார்கள். எழிலும் ப்ரஸாத்தும் ஒன்றுக்கு மேல் பரிசுகள் பெறுவதும் உண்டு. மஜீத் ஒருமுறைகூட வென்றதில்லை எனினும், அது பற்றி வருந்தாமல், நண்பர்களின் வெற்றியைத் தன் வெற்றியாகக் கருதிக் களிப்படைவான்; கொண்டாடுவான்.
‘அதில் என்ன செய்யலாம், இதை எப்படி எதிர்கொள்ளலாம்’ எனப் பதற்றமும் பரபரப்புமாக இருந்த ஜோஸ்வாவிடம், “டேய் பாஸ்டர்,… கண்டதுலயும் மூக்கை நொழைக்காம, நமக்குத் தெரிஞ்சதை மட்டும் செலக்ட் பண்ணி, அதுல திறமையை வளத்துக்கணும்டா. அப்பத்தான் ஜெயிக்க முடியும்” என்று எழில் அறிவுரைத்தான்.
“ஜெயிக்கறது ரெண்டாம் பட்சம்டா மச்சி! எல்லாத்துலயும் எறங்கிப் பாத்தாதான்டா பலதையும் கத்துக்க முடியும். போட்டிகள்ல கலந்துக்கற எல்லாரும் ஜெயிக்க முடியாது. ஆனா, அந்த எல்லாருக்கும் எக்ஸ்பீரியன்ஸ் கெடைக்கும்ல?” என்றான் ஜோஸ்வா.
இவர்களின் நடுவே எந்தப் பதற்றமும் இல்லாமல், நண்பர்களோடு டூர் வந்தது போன்ற குஷியில் கேண்டீன் சாப்பாட்டை ருசித்துக்கொண்டிருந்தான் மஜீத். அவனுக்குப் போட்டியில் வெல்வதைவிட நண்பர்களுடன் வெளியூர் வருகிற அனுபவத்தின் மகிழ்ச்சியே முக்கியம்.
அன்றும் இவர்களில் நால்வருக்கும் பரிசுகள் கிடைத்தன. அதிர்ச்சிக்குரிய வகையில் போஸ்டர் ப்ரசன்டேஷனில் மஜீத்துக்கும் ஆறுதல் பரிசு கிடைத்துவிட்டது. தலை கால் புரியாத சந்தோஷத்தில் கூச்சலிட்டான். நண்பர்களுக்கும், தாம் பரிசு பெற்றதைவிட, அவன் முதல் முறையாகப் பரிசு பெற்றதில் ஏகக் குஷியாகி, ஆரவாரம் செய்தனர்.
“டேய் மாப்ள…! நேத்து மகேந்திரன் சொன்ன மாதிரியே இவன் ப்ரைஸ் வாங்கிட்டான் பாத்தையா! அவரோட வாய்க்கு சர்க்கரை போடணும்டா!”
“ஆமாடா! நானும் இவனோட ஆறுதலுக்காக சொல்றாருன்னு நெனைச்சா,… நெஜமாவே ப்ரைஸ் வாங்கிட்டானே…!”
“அவரைப் பாத்து விசயத்தை சொல்லணும்டா!”
“இந்த ராத்திரில எங்க போறது? நாளைக்குப் பகல்ல முடிஞ்சா ட்ரை பண்ணிப் பாக்கலாம்.”
“நல்ல மனுசன்டா! நாம ஆவியப் பாத்து பயந்திருக்கறம்கறதுக்காக, எவ்வளவு தூரம் விளக்கம் சொல்லி, ஆவி – பேயெல்லாம் கெடையாதுன்னு தைரியப்படுத்துனாரு! ப்ளாக் வரைக்கும் கொண்டுவந்து விட்டுட்டும் போனாரே…! ஆனா, நாம அவரோட செல் நம்பர்கூட வாங்காம விட்டுட்டோம்…”
மறு நாளும் நிகழ்ச்சி இருந்ததால் அன்று இரவும் அங்குத் தங்க வேண்டியதாயிற்று. வெற்றிக் களிப்பினாலும், ஒரு நாள் ஆகிவிட்டதாலும் அன்று பேய் பயம் அவ்வளவாக இல்லை. அவரவர் வீட்டுக்கும், மற்ற நண்பர்களுக்கும் அலைபேசி செய்து பரிசுத் தகவல்களைப் பகிர்ந்துவிட்டு மகிழ்ச்சியோடே படுத்து உறங்கினர்.
*******
காலை ஏழரை மணி இருக்கும். ப்ரஸாத் குளிக்கச் சென்றிருந்தான். மஜீத், எழில், பொன்மணி ஆகியோர் குளித்து முடித்து உடை மாற்றிவிட்டு, அன்றைய ஈவென்ட்டுக்கான ஒத்திகைகளில் ஈடுபட்டிருந்தனர்.
டவர் கிடைக்காமல் வெளியே சென்று அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஜோஸ்வா, அலறியடித்தவாறு ஓடி வந்தான்.
“டேய்…! முந்தா நாள் நைட்டு நம்மளக் கண்டுக்காமப் போனானே, ஃப்ரெஞ்ச் பியர்ட்காரன்… அவனைப் பாத்தன்டா…!”
மூவருக்கும் அதிர்ச்சி.
“எங்கடா…?”
“பக்கத்து ஃபுட்பால் க்ரௌண்ட்ல…!”
“அங்க எதுக்குடா போன…?”
“ஃபோன் பேசீட்டே கொஞ்சம் ஒலாத்திட்டு வர்லாம்னு போனன்டா…! பகல்ல வராதுன்னு சொன்னீங்களேடா…! வந்துருச்சுடா…! பகல்லயும் வந்தே வந்துருச்சுடா…!” அழுதுவிடுவான் போலிருந்தது.
“போடாங்க…” எனத் திட்டிய பொன்மணி, “படிச்சுப் படிச்சு சொன்னனல்லடா,… தனியா யாரும் எங்கயும் போகாதீங்கன்னு…?”
“அது அவனா இருக்காதுடா! அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கற மாதிரி, இவனுக்கு அது அவனாட்டத் தோனியிருக்கும்!’ என்றான் எழில்.
“அது அவனில்லடா…! ‘அது’தான்டா…!” ஜோஸ்வா உறுதியாகச் சொன்னான்.
அதற்குள் குளியலறையிலிருந்து ப்ரஸாத்தும் வந்துவிட்டான். லுங்கி பனியனோடு அவனையும் இழுத்துக்கொண்டு ஜோஸ்வா காட்டிய வழியில் நடையோட்டமாக விரைந்தனர்.
கால் பந்து மைதானம் பக்கத்திலேயே இருந்தது. அதில் மற்ற மாணவர்களோடு சேர்ந்து அந்த ஃப்ரெஞ்ச் தாடிக்காரன் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தான்.
“மாப்ள,… அவனுக்குக் கால் இருக்கான்னு பாரு…!” என்றான் ப்ரஸாத்.
எழில் அவனது பிடரியில் ஒரு அறை விட்டான். “நாயே..! அவன் ஃபுட்பால் வெளையாடிட்டிருக்கறான்டா…!”
“ஆவிக்குக் கால் இருக்கும்டா! ஆனா, பூமில முட்டாது. பூமிலருந்து ஒரு இஞ்ச் மேலதான் இருக்கும். அவனோட காலு மண்ணுல முட்டுதான்னு நல்லா வாட்ச் பண்ணுங்க…!” பொன்மணி வியாக்கியானம் செய்தான்.
“அட அறிவுக் கொழுந்தே…! அவன் அப்படி ஆவியா இருந்தா, கூட வெளையாடிட்டிருக்கற இத்தனை பேருக்குத் தெரியாமயா போகும்…!”
*******
அவர்கள் சும்மா பயிற்சி செய்துகொண்டுதான் இருந்தனர் என்பதால் அனைவரும் அருகே சென்றனர். அவனைத் தனியே அழைத்து, முந்தா நாள் இரவுச் சம்பவத்தைக் கூறினர்.
“ஆமா,… அன்னைக்கு நான் வெளிய போயிட்டு வந்தது உண்மைதான். ஆனா, உங்களை நான் பாக்கல. பின்னாடி வந்துட்டிருந்ததுனால தெரியல. ஹெட்போன்ல பாட்டுக் கேட்டுட்டே வந்துட்டிருந்ததுனால, நீங்க கூப்புட்டதும் கேட்டிருக்காது.”
“அது பரவால்ல. ஆனா, உங்க பின்னாடி வந்துட்டிருந்தவரு, நீங்க அங்க இல்லவே இல்லன்னு சொன்னாரே…! அதனால நாங்க உங்களைப் பேய்ன்னு நெனைச்சுட்டோம்…”
அவன் சிரித்தான். “யாரோ உங்களைக் கலாட்டா பண்ணியிருக்கறாங்கன்னு நெனைக்கறன். யாரு அது? ஸ்டூடன்ட்டா, இல்ல பெரியவங்க யாராவதா?”
“ஸ்டூடன்ட்டுதான்! எம்.சி.ஏ. ஃபர்ஸ்ட் இயர்னு சொன்னாரு…”
அவனது முகத்தின் புன்னகை மறைந்தது.
“பேரு சொன்னானா…?”
“ஊரு, பேரு எல்லாமே சொன்னாரே…! திண்டுக்கல்காரர். பேரு மகேந்திரன்…!”
அவனது முகம் இருண்டது.
“என் ரூம் பக்கம்தான். கொஞ்சம் இருங்க. இப்ப வந்தர்றேன்.”
ஓட்டமாகச் சென்றவன் சில நிமிடங்களில் கையில் ஒரு புத்தகத்தோடு திரும்பினான். அது அந்தக் கல்லூரியின் ஆண்டு மலர். அதில் மூலை மடிக்கப்பட்டிருந்த பக்கத்தை விரித்துக் காட்டினான்.
வருந்துகிறோம் என்ற கொட்டை எழுத்துக்குக் கீழே மகேந்திரனின் ஒளிப்படமும் படிப்பு விபரமும் தோற்றம் – மறைவு தேதிகளும் இருந்தன.
அதே காளான் வெட்டுத் தலைமுடி… அதே தடித்த உடல்வாகு… சிரித்த முகம்! முந்தைய நாள் இரவு தங்களுக்குப் பகுத்தறிவு பேசி, கூடவே நடந்து வந்து வழிகாட்டிய மகேந்திரன், கடந்த ஆண்டே ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக அச்சிடப்பட்டிருந்தது.
ஐந்து பேரின் உடம்பிலும் மின்னல் பாய்ந்தது போலிருந்தது. மஜீத்தின் கைகள் நடுங்கின. பொன்மணியின் கால்கள் பின்னிக் கொள்ள, ஜோஸ்வா சத்தமே வராமல் வாயைப் பிளந்து உறைந்து நின்றான். எழிலின் பகுத்தறிவுவாதங்கள் தொண்டையை அடைத்துக்கொண்டன. அந்தப் பட்டப்பகல் வெளிச்சம் அவர்களுக்கு மட்டும் அமாவாசை இருட்டாக இருந்தது.
*******



