இணைய இதழ் 126கட்டுரைகள்நூல் விமர்சனம்

லோக் நாயக்’ ஜெயபிரகாஷ் நாராயண் – ஆர் பட்டாபிராமன்; நூலறிமுகம்: அக்களூர் இரவி

கட்டுரை | வாசகசாலை

ஜெயபிரகாஷ் நாராயண் குறித்த  முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் தமிழில் ஒன்றிரண்டுதான். இல்லை எனவும் கூறலாம். தமிழறிஞர், காந்தியவாதி தமிழருவி மணியன் ‘மனிதப் புனிதர் ஜெயபிரகாஷ் நாராயண்’ என்றொரு குறுநூலை ஆக்கியுள்ளார்.  பெரும் வாசிப்பாளரும், இந்தியச் சிந்தனை மரபு குறித்தும், மார்க்ஸ், காந்தி, நேரு, பெரியார், அம்பேத்கர் குறித்தும் நூல்கள் எழுதியுள்ள, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான தொழிற்சங்க அனுபவமுள்ளவருமான தோழர் ஆர்.பட்டாபிராமன் அந்த வெற்றிடத்தை நிரப்பியுள்ளார்.

இந்திய அரசியலின் தனித்த ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் நிறைவான வாழ்க்கை வரலாற்றை அவர் எழுதியுள்ளார். அவரது மகத்தான கனவுகளையும் அவற்றை நனவாக்க  அவர் மேற்கொண்ட முயற்சிகளையும், இறுதியில் அவை எப்படி நிறைவேறாமல் போயின என்பதையும் மிக அழகாக, ஏராளமான தரவுகளுடன் ஆசிரியர் விவரிக்கிறார்.  

உலக அளவிலும் இந்திய அளவிலும் இடது சிந்தனையைப் பேசிய முற்போக்கான அறிவாளிகளுடன் ஜெயபிரகாஷுக்கு  இருந்த நட்பு,  இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்கு,  அவரது சோசலிச பார்வை, சர்வதேசக் கண்ணோட்டம், அவரது ‘சர்வோதய’ சிந்தனைகள் பற்றிய சுருக்கமான விவரிப்பு இந்த நூல். ‘பட்டுப்போன கனவு’ என்று ஆசிரியர் குறிப்பிடுவதை அவரது சோசலிசக் கனவுகள் எவ்வாறு திசைமாறிப் போயின என்பதைச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.   

இந்திய விடுதலைப் போரின் 1905 முதல் 1920 வரையிலான தீவிரவாத காலகட்டத்தின் பிற்பகுதியில் ஜெயபிரகாஷ் எனும் தலைவர் உருவாகிறார்.  அவருடைய தாத்தா ஒரு  சப் இன்ஸ்பெக்டர்; மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஒரு பிரிட்டிஷ் அதிகாரியைக் கன்னத்தில் அறைந்தவர். அவருடைய தந்தையும் ஓர் அதிகாரியாக இருந்தவர்  எனினும், தேசிய இயக்கத்தில் ஆர்வமுடன் இருந்தார்.  

உயர்ப்பள்ளி நாட்களிலேயே புத்தகங்கள் வாசிப்பில் ஈடுபாடு கொண்டிருந்தவர்,  சரஸ்வதி, பிரதாப் போன்ற இதழ்களிலும் மதன் மோகன் மாளவியாவின் பத்திரிகையிலும் எழுதத் தொடங்கினார் . இளம் பருவத்து ஆர்வம், பின்னாட்களில் அவரது எழுத்துலகப் பங்களிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தது. ஆசிரியர் அம்ஜத் சொல்லித்தந்த பாடங்களும் அவ்வாறே.

காந்தியின் சம்பாரன்  இயக்கத்தின் போது அவருடன் இணைந்து செயல்பட்ட அப்பகுதியின் பிரபலமான சமூக சீர்திருத்தவாதியும் வழக்கறிஞருமான பிரஜ் கிஷோரின் அறிமுகம் ஜெபிக்கு கிடைக்கிறது. இவருடைய பின்புலத்தையும் குணநலன்களையும் கண்டு தன்னுடைய மகளை அவருக்கு மணம் செய்துவைக்க முன்வருகிறார் அவர். அந்தப் பெண்ணும் அப்பாவைப்போல் காந்திய இயக்கங்களில் ஆர்வமுள்ளவர்.

மாற்று அரசியலையும் முற்போக்குச் சிந்தனைகளையும் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த ஜெயபிரகாஷ் 1920இல் பதினெட்டு வயதில் பிரபாவதியைத் திருமணம் செய்துகொள்கிறார். படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்ட ஜெயபிரகாஷை இண்டர் மீடியட் முடிக்க வைத்து வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியவர்கள் கிஷோரும்  பிரபாவதியும் தான்.

சுதந்திரச் சிந்தனை கொண்ட பெண்ணாக வளர்க்கப்பட்டிருந்தவர் பிரபாவதி. திருமணமானவுடன் கணவனைப் பிரியச் சம்மதிக்காத  இளம் பெண்கள் நிரம்பியிருந்த சமூகத்தில், கணவன் அமெரிக்காவிற்கு (1922) மேற்படிப்புக்குச் செல்லச் சம்மதிக்கிறார். ஜெபியின் அறிவு விரிந்து வளர்வதற்கான வாய்ப்பு. ஆனால்,  பிரபாவதி, கணவருடன் வெளிநாடு செல்ல மறுக்கிறார்.  வாழ்நாளின் இறுதிவரையிலும் காந்தியச் சிந்தனை வழியில் பயணிக்கிறார். அவரது ஆஸ்ரமத்திற்கு அடிக்கடிச் சென்றவர், கஸ்தூரிபாயின் மகள் போலவே வாழ்ந்தார்

ஜெபி அமெரிக்காவில் பகுதிநேர வேலைகள் செய்து பணம் ஈட்டுகிறார். அறிவியல் படிக்கச் சென்றவர் சில மாதங்களில் அவருக்குப் பிடித்த  சமூகவியல் படிக்க விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில்  சேர்ந்தார். அச்சமயத்தில் மார்க்ஸ், ஏங்கல்ஸ்லெனின்டிராட்ஸ்கிரோசா லக்சம்பர்க்  போன்றோரின் எழுத்துகளின் அறிமுகம் அவருக்குக் கிடைக்கிறது.  குடும்பச் சூழல் காரணமாக 1929 இல் இந்தியா திரும்புகிறார்.

கல்வி கற்கச் சென்று மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டு இந்தியா திரும்பியவர் நேரு, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருடன் இணைந்து காங்கிரஸ் சோசலிசக் கட்சியை உருவாக்குகிறார்; சோசலிசம் நோக்கிய அவரது இந்த நகர்வை நூல் தெளிவாகப் பதிவு செய்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கேற்கிறார். விறுவிறுப்பான நடவடிக்கைகளின் தொகுப்பாக அவரது  வாழ்க்கை இருக்கிறது. அதன் தொடக்கமாக இக்காலகட்டம் அமைந்திருந்தது. அக்காலத்துத் தலைவர்களுடன் நெருக்கமான நட்பும், உரையாடலும் அவர் வைத்திருந்தார். ஜவஹர்லாலின் குடும்பத்துடன் நல்ல உறவும் நட்பும் கொண்டவர்களாக ஜெபியும் பிரபாவதியும் இருந்தனர். கமலா நேருவுடன் அலகாபாத் தெருக்களில் இறங்கிப் போராடிய பிரபா, இந்திராவின் மீது பேரன்பைப் பொழிந்தார் என்கிறார் ஆசிரியர்.

இந்த நூலில் சிறப்பான விஷயமாகத் தரவுகளையும் தகவல்களையும் கூறலாம். ஒரு செய்திக்கு நம்பகத்தன்மை அளிப்பவை இவைதாம். எடுத்துக்காட்டாக, 1934இல் சோசலிஸ்ட் கட்சி உருவானது என்று சொல்லிவிட்டுப் போகாமல், அதைத் தோற்றுவித்த ஜெயபிரகாஷ், லோகியா உள்ளிட்ட பதினொரு பேரின் பட்டியலைத் தந்திருப்பது.

ஒரு விமர்சனமாக எழுதாமல், புத்தகம் பதிவு செய்திருக்கும் விஷயங்களை, நூலை வாங்கிப் படிப்பதற்கு ஆர்வமூட்டும் வகையில் தரலாம் என்று நினைக்கிறேன்.

 சிறையில் இருந்தாலும் புத்தகங்கள் மூலமும் நண்பர்களிடம் உரையாடுவதன் வாயிலாகவும்  சோசலிச சிந்தனைகளை வலுப்படுத்திக்கொண்டார்.  போராட்டங்கள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்று வலுவாக  நம்பினார்.  

விடுதலைப் போரின் போது, தீவிரச் சீர்திருத்தவாதி என்று அறியப்பட்ட ஜெபி, ’அடிமை நாட்டில் வாழ்பவனுக்கு, அதிலிருந்து தன்னை மீட்டுக்கொள்வதைத் தவிர்த்து வேறு விருப்பம் இருக்க முடியாது; அதற்கான திறனை நாங்கள் அடைவோம்’ என்று முழங்கியதை நூல் பதிவு செய்கிறது. 

பிரிட்டிஷார் இரண்டாம் உலகப்போரில் இந்தியாவைப் பங்கேற்க வைப்பதையும் இந்திய வீரர்களை வலுக்கட்டாயமாக அதற்குப் பயன்படுத்துவதையும் இடதுசாரிகளும் ஜெபியின் காங்கிரஸ் சோசலிஸ்ட்களும் எதிர்த்தனர். இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரிட்டிஷாரை ஆட்சியிலிருந்து தூக்கி எறிய முயலுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் ஜெபி.  எஸ் ஏ டாங்கே, ஏ எஸ் கே அய்யங்கார், பி.டி. ரணதிவே, போன்ற இடது தொழிற்சங்கத் தலைவர்களின் வரிசையில் 1940 மார்ச் 7ஆம் தேதி  ஜாம்ஷெட்பூரில் அவரும் கைது செய்யப்பட்டார். 

‘ஜெபி, சோசலிசத்தின் பிரதிநிதி, அரிய போராளி, கடும் உழைப்பாளி நாட்டிற்காக அனைத்தையும் இழந்து நிற்பவர் என்று புகழாரம் சூட்டினார் காந்தி என்கிறார் ஆசிரியர்.  1941இல் மீண்டும் கைது செய்யப்பட்ட ஜெபி, ஆயுதம் தாங்கிய புரட்சி எனும் கனவால் தூங்காமலிருந்தார். புரட்சிகர வழியில் இயங்கிய பல தோழர்கள், எம் என் ராய், கான் அப்துல் காஃபர் கான் ஆகியோர் அவருடன் சிறையிருந்தவர்கள்.  சிறையில் மார்க்சிய வகுப்புகள் எடுத்தார் என்கிறார் ஆசிரியர்.  சிறையிலிருந்த அஜாய் கோஷ் டாங்கே போன்ற இளம் தலைமுறை தோழர்களுடன் தொடர் உரையாடல்களில் அவர் ஈடுபட்டார்.

ஒரு சமயம் சிறையிலிருந்து தப்பிய ஜெபி, நேபாளத்தின் காடுகளில் வாழ்ந்த   தலைமறைவு கொரில்லா வாழ்க்கையை  நூல் விவரிக்கிறது. அப்போது  விஜயாவுக்கும் ஜெபிக்கும் இடையில் நிலவிய நட்பும் நெருக்கமும்  கோபமும் நிறைந்த உறவை நூல் அழகாக  விவரிக்கிறார்.  விஜயாவின் துயரமான முடிவு பெயர் தெரியாமல் மறைந்துபோன விடுதலைப் போராளிகளின் பட்டியலில் அவரைச் சேர்த்துவிட்டது என்ற ஆசிரியரின் பதிவு, அவரைப்போன்ற எண்ணற்றவர்களை நமக்கு நினைவூட்டுகிறது.

பத்து மாதங்களுக்குப்பின்னர் ஜெபி கைது செய்யப்படுகிறார். சிறையில் கடுமையான சித்திரவதை; இரவு பகல் பாராமல் 50 நாட்கள் தொடர்ச்சியான விசாரணை.   15 மாதங்கள் தனிமைச் சிறையில் ஒரு விலங்குபோல் அடைபட்டுக் கிடந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்ததாக அவர் சொல்கிறார்: “மனிதத் தன்மையைத் தக்க வைத்துக்கொள்ள முயன்றேன். சூரியனை நான் பார்க்கவில்லை, அது என்னைப் பார்க்கவில்லை.”  1944 அக்டோபரில் லோகியா இவரோடு சேர்ந்துகொண்டார்.

சந்திர போஸின் நிலைப்பாட்டையும் இவர் வெளிப்படையாக விமர்சித்தார்: இந்தியச் சுதந்திரம் ஜப்பானின் பரிசாக அளிக்கப்படாது என்பதை போஸ் புரிந்து கொள்ளவேண்டும் என்ற அவரது கருத்தை நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். ஏகாதிபத்திய எதிர்ப்பும் பாசிச எதிர்ப்பும்  ஒன்றிணைய வேண்டும்; ஏகாதிபத்தியத்தின் குழந்தைதான் பாசிஸம் என்ற அவருடைய புரிதல் அக்காலகட்டத்தில் மிகவும் தெளிவானது.

இந்தியப் பிரிவினை குறித்து எழுந்த விவாதங்களில் அவரது கருத்தாகப் பதிவாகியிருக்கும் சொற்கள் முக்கியமானவை: இனம் வரலாறு கலாச்சாரம், புவியியல், மரபு போன்ற அனைத்தும் இணைந்த பல வகுப்பினரைக் கொண்ட ஒரே தேசம் இந்தியா;  தனி இனம் என்பதால் தனி நாடு கேட்பதை அவர் ஏற்கவில்லை. தனிநாடு கோரிக்கையை முன்வைத்து ஏற்பட்ட கலவரங்களில் பொதுமக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்; வகுப்புவாத கலவரங்களுக்குப் பிரிட்டிஷாரையும் முஸ்லிம் லீகையும் மட்டும் குறை சொல்ல முடியாது. பிரிவினைப் பொறியில் காங்கிரஸ் சிக்கிக்கொண்டதும் ஒரு காரணம் என்று வெளிப்படையாகக் கூறினார் ஜெபி.

அதிகாரத்தின் மீது அவருக்குப் பற்றில்லை  அரசியல் வாதிகள் பலரையும் அவருக்கு நல்ல அறிமுகம் உண்டு. அவருக்கு நல்ல பெயரும் உண்டு. விரும்பியிருந்தால் நாட்டின் மிக உயரிய பதவிகள் அவருக்குக் கிடைத்திருக்கும். நேரு குடும்பத்தினரிடம் செல்வாக்கும் உண்டு. ஒரு முறை குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டார் என்கிறார்கள்.  அவர் நேருவின் அமைச்சரவையில் சேர மறுத்தார்; கொண்ட கொள்கைக்காகக் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.

விவசாயிக்கும் தொழிலாளிக்கும் உரியது செங்கொடி என்றால், விடுதலையெனும்போது நாங்கள் மூவர்ணக்கொடியை உயர்த்திப்பிடிப்போம் என்று கூறியவர்.  எளிய மக்களின் வாழ்க்கைக்கு உதவக் கூடியதாகத் தனது வாழ்க்கை அமைய வேண்டும் என்பதில் மட்டும் ஜெயபிரகாஷ் பிடிவாதமாக இருந்தார்.

மாற்றுக்கருத்துகளை அடக்கவோ நசுக்கவோ கூடாது;  ’Without dissent the society would become stagnant and moribund’ என்றார். எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையை வலியுறுத்தும்போது, ஹிந்துத் தேசியம் என்பதற்குப் பதிலாக இந்தியத் தேசியம் என்று பேசுங்கள்;  அதுதான் ஒற்றுமைக்கு உதவும் என்று ஆர் எஸ் எஸ் தலைவர்களுக்கு  அவர் அறிவுரை கூறினார்.  

பொதுவுடைமை பேசிய கம்யூனிஸ்ட்களையும் தேசிய இயக்கமான காங்கிரசையும் இணைக்கும் முயற்சியில் அவர் தோல்வியுற்றார் என்றாலும், இரு இயக்கங்களின் அடிப்படைக் கூறுகளான சமதர்மச் சமுதாயம், விடுதலை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு  கட்சியை உருவாக்க அவரால் இயன்றது. அக்கட்சியின் அரசியல் தாக்கம் இன்றளவும்  இருப்பதை மறுக்க முடியாது.

காந்தி அறிவித்த ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் காங்கிரஸ் சோஷலிசக் கட்சி பெரும்பங்கு வகித்தது. விடுதலைப் போரின் இறுதிக் கட்டத்தில் நாடே கொந்தளித்திருந்த காலத்தில் சிறையிலிருந்த ராம் மனோகர் லோகியாவையும் ஜெயபிரகாஷையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற  காந்தியின்  நிபந்தனை ஜெபியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிடுகிறது.  அவர்களது விடுதலையை நாடே கொண்டாடியது.

1954இல் ஆச்சார்யா வினோபா பாவே  துவங்கிய சர்வோதய இயக்கத்துக்கும்  பூமிதான் இயக்கத்துக்கும் ஜெபி  ஆதரவளித்தார்.  1957இல்  பிரஜா சோசலிஸ்ட் கட்சியிலிருந்து விலகி,  நேரடி அரசியலில் அதிகம் ஈடுபடாமல் சர்வோதயப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டார்.

1970களில் பீகாரில் நிலவிய ஊழலுக்கு எதிராகவும், மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கவும்  போராட்டத்தில் இறங்கினார். 1974ஆம் ஆண்டில்  அவர் வழிநடத்திய அந்த  இயக்கம்  இந்திய அளவில் குறிப்பாக வட இந்தியாவில் மாணவர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை உண்டாக்கியது; பரவலான மக்கள் இயக்கமாக மாறியது. 1975 ஜூன்  5இல் பாட்னா காந்தி மைதானத்தில் நடந்த மாணவர் பேரணியில்  ‘முழுமையான புரட்சி’  என்ற அவரது  அறைகூவல் நாடெங்கும் எதிரொலித்தது.  ‘மக்கள் வருகிறார்கள் நாற்காலியைக் காலி செய். 

1974இல்  Citizens for Democracy என்ற அமைப்பையும் 1976ஆம் ஆண்டு  People’s Union for Civil Liberties  அமைப்பையும் தோற்றுவித்தார்.  இவருடைய போராட்டங்கள்  1977ஆம் ஆண்டில் ஜனதா அரசு ஆட்சி அமைக்க வித்திட்டன. இந்தியாவில் சோசலிச இயக்கங்கள் பலவீனமடைந்த சூழலை நூல் விவரிப்பது நமக்கு ஓர் எளிய புரிதலைத் தருகிறது.

நூலின் இரண்டாவது பகுதியாக, ‘ஜெபியின் எழுத்துலகம்’ அமைந்துள்ளது.  அவரது  எழுத்துலகப்  பங்களிப்பையும் அவருடைய சிந்தனைகளையும் ஆசிரியர் சுருக்கமாகத் தொகுத்து அளித்துள்ளார்.  இந்தியச் சூழலுக்கு சோசலிசம் ஏன் அவசியம் என்பதை விளக்கி ஜெபி எழுதிய நூலும் அதன் பின்னணியும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டக் காலத்தில் தலைமறைவு  இயக்கத்தின்போது, ‘ஜனதா’ பத்திரிகை மூலம் சோசலிச கருத்துக்களை அவர் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்; பிற்காலத்தில் அவர் சர்வோதயப் பாதைக்கு மாறுகிறார்.  அப்போதும் அதிகாரப் பரவலாக்கல் குறித்து அவர் எழுதியவையும்,  சிறைக் குறிப்புகளும், 1975ஆம் ஆண்டு நெருக்கடி நிலையின் போது எழுதிய நாட்குறிப்புகளும் நூலின் நமக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன.

 ஏறத்தாழ ஆட்சிக்கு வெளியில் பெரும் புரட்சியாளராக வாழ்ந்த ஜெபியின் பங்களிப்பு. இந்திய வரலாற்றின் பக்கங்களில் சரியாகப் பதியப்படவில்லை. நெருக்கடிக் காலத்தில் ஆட்சியாளருக்கும் இவருக்கும் இடையில் நடந்த பெரும் பனிப்போர் தவிர்த்து, ஓரளவு அரசியல் அறிந்தவர்களின் மத்தியிலும் இவருடைய வேறு பரிமாணங்கள் அறியப்படவில்லை. அதை இந்த நூல் போக்குகிறது.

நூலைப் படித்து முடித்ததும், முதல் பாகத்தின் இறுதியில் ஆசிரியர் எழுதியுள்ள வரிகள் நம் மனதிலும் தோன்றலாம்:  இந்த மனிதாபிமானியின் நினைவுகள் சோசலிஸ்ட்களாலும் காங்கிரஸாலும் கொண்டாட முடியாமல் போனதற்கு அவரது இறுதி நாட்களின் அரசியல் நிகழ்வுகள் காரணமாக இருந்தன.  குறிப்பாக, காந்தியர்கள் ஜெபி குறித்து பெரிதாக எதுவும் சொல்வதில்லை. சர்வோதயம் என்றால் வினோபா பாவே என்ற அடையாளமே இன்றும் இருக்கிறது. நேருவுக்கு அடுத்து எனப் பேசப்பட்டவரின் புரட்சிகரக் கனவுகள்  மீட்டுருவாக்கம் செய்யப்படாமல் போனது துரதிருஷ்டமானது. 

160 பக்கமுள்ள  நூல்தான் என்றாலும் ஒரு பெரும் நூலை வாசித்த நிறைவு கிடைக்கிறது.  பட்டாபிராமன் எளிமையான நடையில், இளைஞர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மார்க்சியம், சர்வோதயம், ஜனநாயகம் போன்ற அரசியல் தத்துவங்களை  எளிய தமிழில் கொடுத்திருக்கிறார். எளிமை நூலுக்கு வலுசேர்க்கிறது.  நடுநிலைப் பார்வையுடன் எழுதப்பட்டுள்ள இந்த வரலாற்று நூல் நிச்சயம்  ஒரு முக்கியமான பதிவு. தோழரின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

ஜெயபிரகாஷ் நாராயண்
ஆர்.பட்டாபிராமன்
கிழக்கு பதிப்பகம்
160 பக்கங்கள் / ரூ.200

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button