இணைய இதழ் 126சிறுகதைகள்

கே.பி தோழர்! – ராம் சங்கர்

சிறுகதைகள் | வாசகசாலை

“ஹலோ… பஷீர் எங்க இருக்க?”

“ரூம்லதான் இருக்கேன்…”

“இன்னைக்கு சாயங்காலம் ஃப்ரீயா?”

“ஆமா… எங்க வரணும்!”

“கொஞ்சம் தூரமா போகணும்போல இருக்கு!”

“எங்க போகணும்?”

“அட்டப்பாடி சத்-தர்ஷன் போலாமா? திங்கள்கிழமை திரும்பி வந்துடலாம்!”

“சரி…”

பஷீரும் சம்யுக்தாவும் சென்னையிலேயே இருந்தாலும், சந்திப்பு எப்பையாவதுதான் நிகழும். அதுவும் சம்யுக்தா ஏதோ ஒரு மனக்கொந்தளிப்பில் மட்டுமே பஷீருக்கு ஃபோன் செய்வது வழக்கம். சம்யுக்தா இடதுசாரிக் கொள்கையின்மீது தீவிரமான பற்றுகொண்டவள். ஆனால், எங்கேயும் தன்னுடைய கருத்தை ஒருபோதும் திணிக்கமாட்டாள். அதேநேரம் தர்க்கத்தின் பக்கம் எப்போதும் நின்று பேசக்கூடியவள். சம்யுக்தாவின் அகக்கொந்தளிப்பு முதல் அவள் அரசியல் பேச்சு வரை பஷீர் உள்வாங்கிக்கொள்வான் என்பதால் பஷீர் எப்போதும் சம்யுக்தாவின் ஆகப்பெரும் நிம்மதியாகவே இருந்தான். இந்த முறை பஷீருக்கு சம்யூக்தா ஃபோன் செய்து பேசும்போது வார்த்தைகள் தடுமாறி விழுந்தன. ஏதோ பதற்றத்தில், எதையோ தொலைத்த உணர்வுடன் சம்யுக்தா பேசியதை பஷீர் கவனித்திருந்தான். 

சம்யுக்தாவுக்கு பஷீர் அகராதியில் எப்போதும் ‘நோ’ கிடையாது. ஆனால், பஷீருக்கு ‘சம்யுக்தா’ அகராதியில் நிறைய ‘நோ’-க்கள் இருந்தன. இருவருக்கும் சத் தர்ஷன் ரொம்பவே ஸ்பெஷலான இடம். கேரளால அட்டப்பாடி சத் தர்ஷன்… கணக்கில்லாமல் பேசக் கடைந்தெடுத்த இடம். காட்டுக்குள் சின்ன சின்ன அறைகளாக இருக்கும் சத் தர்ஷனுக்கு ஒருதடவை போய்விட்டு வந்தாலே மனம் டீடாக்ஸ் ஆகும்படி இருக்கும். 6 மணிக்கு மேல் லைட்ஸ் சத் தர்ஷனில் ஒளிரவிடமாட்டார்கள், மின்மினிப்பூச்சிகள் குவியும் என்பதால். நடப்பதற்கு ஏற்ப பாதைகளில் ரேடியம் ஸ்டிக்கர்ஸ் மட்டும் ஒட்டப்பட்டிருக்கும். ஒரு ரேடியம் ஸ்டிக்கரில் கால் வைத்ததும்தான் அடுத்த ரேடியம் ஸ்டிக்கர் தெரியும். சத் தர்ஷனில் இரண்டு பக்கம் கண்ணாடி, இரண்டு பக்கம் சுவர் என ஓர் ஓரத்தில் அறை ஒன்று இருக்கும். இருவருக்குமே பிடித்த அறை அதுதான். ஆறு மணிக்கு மேல், மின்மினிப் பூச்சிகள் அந்தக் கண்ணாடி முழுவதும் நிறைந்திருக்கும். இருவரும் பெட்-ல் படுத்துக்கொண்டு மின்மினிகளைப் பார்த்தபடி கதைகளைப் பேச ஆரம்பித்தனர்.  

“உனக்கு கே.பி தோழர் தெரியுமா?”

“இல்லையே… இதுவரைக்கும் நீ சொன்னதில்லை!”

“கடைசியா நான் ஊருக்குப் போகும்போது கே.பி தோழருக்கு செவ்வணக்கம்னு போஸ்டர் பார்த்தேன்!”

“யார் கே.பி தோழர்? என்னாச்சு?”

“நான் எட்டாவது படிக்கும்போது வீட்டுக்குப்போக பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்தேன். அப்போ, ஜங்க்‌ஷன் பக்கத்துல எங்க ஊர்ல மலைவாழ் மக்களை அப்புறப்படுத்துவதற்கு எதிராகப் போராட்டம் பண்ணிட்டு இருந்தாங்க, ஒரு கூட்டம். அதுல ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல நின்ன பெரியவங்க எல்லாருக்கும் நோட்டீஸ் கொடுத்துட்டு இருந்தாரு. நான் பார்த்துட்டே இருந்தேன். எனக்கும் நோட்டீஸ் ஒன்னு கொடுத்தாங்க. நான் வாங்கி படிச்சேன். படிச்சிட்டு எங்கிட்ட இருந்த பேக்ல அதை வைச்சேன். அந்தக் கூட்டத்துல இருந்து ஒருத்தர் எங்கிட்ட வந்து, உன் பெயர் என்ன? எங்க படிக்கிற? என்ன படிக்கிறனு கேட்டாரு. 

நானும் சொன்னேன். நாளைக்கு அப்பாவைக் கூட்டிட்டு இந்த அட்ரஸ்க்கு வான்னு எங்கிட்ட சொன்னாரு. நான் அப்பாகிட்ட சொன்னேன். சரினு கூட்டிட்டுப் போனாரு. அப்பாக்கு வணக்கம் வைச்சு, எங்களுக்கு டீ வாங்கிக் கொடுத்து உட்காரச் சொன்னாரு. நாங்க உட்கார்ந்தோம். கம்பீரமான மீசை, வாட்ட சாட்டமான உடலமைப்பு, கிளீன் ஷேவ், சிவப்பு சட்டை, வெள்ளை பேண்ட், எதற்கும் அடிபணியாத அன்பான குரல்னு எல்லாரையுமே ரொம்ப எளிமையா ஈர்க்கக்கூடியவர்தான் தோழர் கே.பி. 

“என்ன விஷயமா வர சொல்லியிருக்கீங்க சார்?”

“உங்க பொண்ணு பெரிய ஆளா வருவாளான்னு தெரியாது. ஆனால், அவள் மக்கள் பிரச்சினைக்காக எப்பவுமே கண்டிப்பா நிப்பா…”

எனக்கு ஒன்னுமே புரியலை. சிரிச்சிட்டே இருந்தேன். 

“என் பொண்ணு எந்தப் பிரச்சினைக்காகவும் நிக்கத் தேவையில்லை. அவள் படிச்சு நல்ல வேலைக்குப் போணும். அதுதான் எங்களுக்கும் அவளுக்கும் நல்லது”.

“நீங்க அவளை எப்படி வேணாலும் வளர்க்க ஆசைப்படலாம். ஆனால், அவள் மக்களுக்காக நிப்பா தோழர்!”

அப்பாவுக்கு ஒன்னுமே புரியலை. பஸ் ஸ்டாப்ல நம்மளைச் சும்மா பார்த்தாரு. கூப்பிட்டு இப்படிலாம் பேசுறாரு. அப்பா என்னைப் பார்த்து என்ன பண்ண அப்படின்னு கேட்டாரு. 

நான் எதுவுமே பண்ணலையே பஸ் ஸ்டாப்ல நின்னேன். இவர் பக்கத்துல வந்து அப்பாவைக் கூட்டிட்டு வர சொன்னாரு. அவ்வளவுதான்னு சொன்னேன். 

என்னைப் பார்த்து “நல்லா படிக்கணும். படிக்க எந்த உதவி வேணும்னாலும் எங்கிட்ட கேளு. நான் உனக்கு உதவி பண்றேன். சார், நீங்களும் தயக்கமில்லாமல் கேளுங்க”ன்னு சொல்லி நம்பர் கொடுத்தாரு.

தோழர் கே.பி இப்படித்தான் எனக்கு அறிமுகம். எல்லாரும் சும்மா சொல்லுவாங்க. ஆனால், படிக்க வைப்பாங்களான்னு கேட்டா தெரியாது. லீவ் முடிஞ்சு ஜுன் மாசம் நான் ஸ்கூலுக்கு போறப்போ, ஹெச்.எம் சார் என்னை கூப்பிட்டாரு. 

“நீ தான் சம்யுக்தாவா? கிளாஸ்ல எத்தனாவது ராங்க் வாங்குவ?”

“ஒன்னு, இல்லைனா ரெண்டு வாங்குவேன்.”

“குட். இனிமேல் நீ நோட், புக், பேனா, பென்சில், யூனிஃபார்ம், ஸ்கூல் ஃபீஸ் எதுவும் கட்டத் தேவையில்லைன்”னு சொன்னாரு. எனக்கு ஒன்னும் புரியலை. ஏன்னு கேட்டேன். 

“உனக்குத் தோழர் கே.பி தெரியுமா? அவர் உனக்கான ஃபீஸ் எல்லாமே கட்டிட்டாரு. உன்னோட வேலை நல்லா படிக்கிறது மட்டும்தான். சரியா?”

சரின்னு சொல்லிட்டு சாயங்காலம் அப்பாம்மாகிட்ட வந்து சொன்னேன். அப்பா உடனே தோழர் கே.பி-க்கு ஃபோன் பண்ணாரு. கே.பி குரல் கேட்டதும், அப்பா கலங்கிட்டாரு. 

“சார், அன்னைக்கு நான் எக்குத்தப்பா பேசுனேன். ஆனால், எம்புள்ளை படிக்க பெரிய உதவி பண்ணியிருக்கீங்க. ரொம்ப நன்றி. நீங்க சொன்ன மாதிரி அவ நல்லா படிப்பா”ன்னு அப்பா சொன்னாரு. 

நான் எல்லாத்தையும் கேட்டுட்டு வழக்கம்போல நின்னேன். இவர் எதுக்கு நமக்கு இவ்வளவு உதவி பண்றாருனு ஒவ்வொரு நாளும் யோசிச்சிட்டு இருந்தேன். மாசத்துக்கு ஒருதடவை நோட் புக் எல்லாமே எனக்கு வந்துடும். ஒரு நாள் அப்பாகிட்ட தோழர் கே.பி-யை பார்க்கப் போகணும்னு சொன்னேன். கூட்டிட்டுப் போனாரு. எப்பவும் போல டீ வாங்கி கொடுத்தாரு. அப்போ, “நான்… எதுவுமே நான் பண்ணலையே, எனக்கு எதுக்கு இவ்வளவு உதவி பண்றீங்க?”ன்னு கேட்டேன். தோழர் சிரிச்சாரு.

“நீ நல்லா படிக்கிறேல்ல… அதான்”னு சொன்னாரு. சரின்னு நானும் விட்டுட்டேன். அப்பா படிக்கலைன்னாலும், எழுத்துக்கூட்டி தினமும் தினத்தந்தி படிக்கிற பழக்கம் இருக்கு. அப்படி ஒரு நாள் படிக்கிறப்போ, தோழர் கேபி ஃபோட்டோ பார்த்தாரு. மலைவாழ் மக்கள் மீதான தாக்குதலையும், அப்புறப்படுத்துவதையும் எதிர்த்து கடும் போராட்டத்தைப் பண்ணி, நிறையப் பேருக்கு மின்னஞ்சல் அனுப்புறது, கடிதம் எழுதுறது, போராட்டம் பண்றதுனு களத்துல அவர் குரல் ஒலிச்சிட்டே இருந்துது. இதைப் புடிக்காத சில அதிகார வர்க்கம் அவரை நக்ஸலைட்னு கைது பண்ணி சிறையில் அடைச்சு கொடுமை படுத்தியிருக்காங்க. அவர்கூட சேர்த்து நிறையப் பேரை கைது பண்ணி ஜெயில்ல வைச்சு அடிச்சு உதைச்சுருக்காங்க. அதுல மூனு பேரை ரிலீஸ் பண்ணிட்டாங்க. வெளிய வந்ததும் அதுல இரண்டு பேர் உடல்நிலை மோசமாகி இறந்துட்டாங்க. கே.பி தோழர் எங்க போனாருன்னே தெரியலைன்னு கேள்விபட்டேன். 

கே.பி தோழர் பத்தி தகவல் தெரிஞ்சா சொல்றோம்னு ஆஃபீஸ்ல சொன்னாங்க. அப்பா ரொம்ப நாள் தினமும் தகவல் தெரிஞ்சுக்க ஆஃபீஸ் போவாரு. ஒருநாள் கே.பி தோழர் விட்டுட்டுப் போன வேலையை நான் செய்யணும்னு அப்பாகிட்ட சொன்னேன். அப்பாவும் நானும் தோழர்கள்கிட்ட சொல்லி, மலைவாழ் மக்களைத் திரட்டி போராட்டத்துல பங்கெடுத்தோம். அன்னைக்கு நடந்த தடியடிலதான் நெத்தில இந்தத் தையல் போட்டாங்க. மலைவாழ் மக்களோட வாழ்க்கையைப் பதிவு பண்ணனும், அவங்களுக்காக உழைக்கணும்னு தொடர்ந்து நானும் மெயில் போட ஆரம்பிச்சேன், கட்டுரைகள் எழுத ஆரம்பிச்சேன், அவங்களுக்கு வாரத்துல ஒருநாள் போய் பாடம் எடுத்துட்டு வருவேன். அவர்களுக்குச் சின்ன சின்ன உதவிகள் செய்ய ஆரம்பிச்சேன். அப்போ ஜெபாஸ்டின் தோழர் ஒரு விஷயம் சொன்னாரு. 

“கே.பி தோழர் படிக்கலை. ஏன் தெரியுமா? அவர் பன்னிரண்டாவது படிக்கும்போது அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் நடந்த போராட்டத்துல கலந்துகிட்டாங்க. அந்தப் போராட்டத்துல கலந்துகிட்ட எல்லாரையும் கண்காணிக்க ஆரம்பிச்சாங்க. அப்போ, அவரோட ஸ்கூலுக்கு லெட்டர் ஒன்னு போச்சு. அதைப் படிச்சுட்டு ஹெச்.எம் அவரைக் கூப்பிட்டு, நீ நல்லா படிக்கிற பையன். இனிமேல் போராட்டம், கீராட்டம்னு போன, டி.சியைக் கொடுத்துப் படிக்க விடாமல் பண்ணிடுவேன். இதுதான் லாஸ்ட் வார்னிங்க்னு மெரட்டுனாங்க. நான் படிக்கிறதே அவங்களுக்காகதான், இங்க படிக்கிறதால அவங்க குரலா என்னால நிக்க முடியலைனா, இந்தப் படிப்பே தேவையில்லைனு ஐ.டி கார்டைக் கழட்டித் தூக்கி எறிஞ்சுட்டு வந்தவருதான் கே.பி தோழர்”

ஜெபாஸ்டின் தோழர் சொல்லச் சொல்ல எனக்கு கூஸ்பம்ப்ஸ், கண்ணீர் வந்துடுச்சு. உடனே, அவரைப் பார்த்து கட்டிப்பிடிக்கணும்னு தோனிச்சு. முடியலை. இனிமேல் அவரைக் கண்டுபுடிக்க கஷ்டம்னு பார்ட்டிக்காரங்க முயற்சியை கைவிட, நானும் 12-வது முடிச்சதும் சென்னை வந்துட்டேன். இருந்தாலும் நான் அப்பாகிட்ட கே.பி தோழர் பத்தி தகவல் தெரிஞ்சுதான்னு கேட்டுட்டே இருப்பேன். ஒரு நாள்… அப்பா, கொஞ்சம் அவசரம், உடனே கிளம்பி ஊருக்கு வான்னு சொன்னாரு. நானும் கிளம்பிப் போனேன். 

பார்ட்டிகாரங்க, அப்பா, நான் எல்லாரும் ஒரு கார் பிடிச்சு கிளம்பிப் போனோம். ஒரு காடு மாதிரியான பல வழிகள்ல கடந்து உள்ள போனோம். போனால், மண்ணால செய்யப்பட்டு சின்ன குடிசை. அந்தக் குடிசைக்கு வெளிய கொஞ்சம் இடம். அந்த இடத்துல இரும்புப் பட்டறை ஒன்னு இருந்துச்சு. அந்தப் பட்டறைல அழுக்கான சட்டை, இரும்பு அடிச்சு காப்புக்காச்ச கை, ஷேவ் பண்ணாத நரைச்ச தாடி, கரி துகள்கள் படிஞ்சு கட்டியா இருக்குற தலைமுடியோட ஒருத்தர் உட்கார்ந்துருந்தாரு. அவர்கிட்ட போய் கே.பி தோழர் இங்க இருக்குறதா சொன்னாங்க எங்க இருக்காருனு பார்ட்டி காரங்க கேட்டாங்க. அவர் அப்படி யாரும் இங்க இல்லையேன்னு சொல்ல…

நான் கத்திட்டேன்… “இதுதான் கே.பி தோழர், கே.பி தோழர்”னு… எல்லாருக்கும் ஷாக். கொஞ்சம்கூட அடையாளம் தெரியாம, மெலிஞ்சு போய், பீடி மட்டும் பத்த வைச்சு, தலைல தையலோட இருந்த அவரு பயந்து குடிசைக்குள்ள ஓடிட்டாரு. தோழர் வெளிய வாங்க, வெளிய வாங்கன்னு சொன்னோம். பக்கத்து டீக்கடைல இருந்த ஒருத்தர் ஓடி வந்து, அவருக்கு எதுவும் ஞாபகம் இல்லை. இரும்பு வேலைக்கு வர்றவங்ககிட்ட மட்டும்தான் பேசுவாரு. கூட்டமா ஆள் வந்தா பயந்துடுவாரு. ஜெயில்ல அடிச்சதுல தலை கலங்கிடுச்சு அவருக்குனு சொன்னாங்க. பேச்சு மூச்சு இல்லாமல் அழுகையை அடக்கிட்டு ஒருத்தருக்கொருத்தர் பார்த்து தலைகுனிஞ்சு நின்னிட்டு இருந்தோம். 

டீக்கடைக்காரர் உள்ள போய், இரும்பு கத்தி அடிக்கணுமாம் அதுக்குதான் வந்துருக்காங்கன்னு சொன்னாரு. சில பார்ட்டி ஆட்களை வெளிய அனுப்பச் சொல்லி, நான், அப்பா, ஜெபாஸ்டின் தோழர் மட்டும் இருந்தோம். அவர் வெளிய வந்தாரு. எதுக்கு கத்தி? என்ன சைஸ்னு கேட்டதும். சும்மா சொல்லிட்டு, அட்வான்ஸ் கொடுத்துட்டுப் போங்க, அடுத்தவாரம் செஞ்சு வைக்கிறேன்னு சொன்னாரு. எங்கிட்ட ஒரேயொரு கேள்விதான் கேட்கணும்னு இருந்துச்சு, என்னை ஏன் அன்னைக்குக் கூப்பிட்டு பேசுனீங்க. எனக்கு எதுக்கு உதவி பண்ணீங்க. மக்கள் பிரச்சினையை நான் பேசுவேன்னு எப்படி யூகிச்சீங்கன்னு மட்டும் கேட்கணும்னு அப்பாட்ட சொன்னேன். வெளிய போய் பேசிக்கலாம்னு ஜெபாஸ்டின் தோழர் சொன்னாரு. அட்வான்ஸுக்கு 1000 ரூபாய் எடுத்துக் கொடுத்தாரு. சிவப்பு நோட்டைக் பார்த்ததும், எனக்கு இந்த ரத்தம் வேணாம்னு பதட்டமாகி வெளிய போக சொன்னாரு. 

1000 ரூபாய் நோட்டு, 20 ரூபாய் நோட்டுலாம் அவர் வாங்கமாட்டாரு. சிவப்பு கலர்னு என்ன கொடுத்தாலும், என்ன பார்த்தாலும் பதட்டமாகிடுவாரு, ரத்தம் பார்த்த அதிர்ச்சினு டாக்டர் சொன்னாங்கன்னு சொன்னதும்… அஞ்சு 100 ரூபாய் நோட்டும் ஒரு 500 ரூபாய் நோட்டும் ஜெபாஸ்டின் தோழர் கொடுத்தாரு. வாங்கி வைச்சிட்டு வெளிய போக சொல்லிட்டாரு. அடுத்தவராம் வரச் சொன்னாரு. அப்புறம் ஜெபாஸ்டின் தோழர் அடிக்கடி அவர போய் பார்ப்பாரு. நானும் ஊருக்குப் போனால் பார்ப்பேன். அப்படிக் கடைசியா ஊருக்குப் போகும்போதுதான் அவரோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பார்த்தேன். என்னால ஊர்ல இருக்க முடியலை. உடனே, அங்க இருந்து கிளம்பி வந்துட்டேன். கிளம்பி வந்து ஜெபாஸ்டின் தோழர்கிட்ட ஃபோன் பண்ணி பேசுனேன். 

ஜெபாஸ்டின் தோழர் அப்போதான் அந்தக் கேள்விக்கான விடையை சொன்னாரு. நாங்க எப்பவுமே நோட்டீஸ் கொடுப்போம். அதுல என்ன இருக்குனே யாரும் பார்க்கமாட்டாங்க. எட்டாவது படிச்சிட்டு இருந்த நீ, அதை படிச்சுப் பார்த்துட்டு, பத்திரமா மடக்கி பேக்-குள்ள வைச்ச. அதை கே.பி தோழர் பார்த்துட்டாரு. அதுனாலதான் உன்னைக் கூப்பிட்டு அன்னைக்கு பேசுனாருனு சொன்னாரு. ஆனால், இதை  எங்ககிட்டையே சொல்லியிருக்கலாமேன்னு கேட்டேன். உனக்குள்ள அது இயல்பா இருக்கு… சொன்னா, உன்னோட அடுத்த நடவடிக்கையை நோட் பண்ணி அட்டேன்ஷனுக்கு பண்ண ஆரம்பிச்சுடுவன்னு கே.பி தோழர் சொன்னதாக ஜெபாஸ்டின் தோழர் சொன்னாரு. இப்போ, உனக்கு புரியுற வயசு வந்துடுச்சு. அதுனாலதான் சொன்னேன்னும் மக்களுக்காக எப்பவும் நிக்கணும்னும் சொன்னாரு. இன்னைக்கு நான் சம்பளம் வாங்குறதுல பாதி, மக்கள்கிட்ட கொடுக்குறேன். அவங்களுக்கு மாசம் ஒரு நாள் போய் படிப்பு சொல்லிக் கொடுக்குறேன்னா… அதுக்கு கே.பி தோழர்தான் காரணம்”

பஷீருக்கு ஒரு நிமிஷம் உடம்பே இறுகிப்போன மாதிரி ஃபீல் ஆச்சு. எதுவுமே பேசலை. சம்யுக்தாவைப் பார்த்தான். மின்மினியோட ஒளி அவள் கண்ணீரில் பட்டு கே.பி தோழர் பட்டறையில் அடிச்ச கங்கு மாதிரி எரிஞ்சுது. மொத்தத்தையும் கொட்டுன சம்யுக்தாவை அப்படியே அணைச்சு தூங்க வைச்சான், பஷீர். 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button