
அந்தப் பூங்கா முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீர்த்துப் போயிருந்தது. அவள் உண்மையாகவே என் வாழ்வில் அத்தனைச் சுகத்தையும் கொடுத்தாள் என்றால், உங்களால் நம்ப முடியுமா என்று தெரியவில்லை. அவள் வந்த பிறகுதான் என் வாழ்வின் எல்லாக் கதவுகளும் திறக்க ஆரம்பித்தன.
இதுவரை நான் ரசிக்கத் தவறிய பூக்களும் நட்சத்திரங்களும் குழந்தைகளும் முதியோர்களின் பளிங்குக் கண்களும் எனக்கு இன்னும் அழகாகத் தெரிந்தன. அதற்குக் காரணம் அவள்தான்.
அகல்யா.
பெயரிலேயே ஒளியை வைத்திருக்கும் அவள்தான் என் வாழ்வுக்கு மிகப்பெரிய பிரகாசத்தைத் தந்தவள். இந்தப் பிரபஞ்சம் எப்போதும் நமக்கானதை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்பார்கள். அப்படித்தான் அவளும் என்னிடம் வந்து சேர்ந்தாள். பார்ப்பதற்கு ஒரு ஆணைப் போலவே உடற்கட்டு. ஆனால் முகம் மட்டும் ஒரு பெண்ணின் நளினமும் லட்சணத்துடனும் கூடியிருக்கும்.
அகல்யாவை நான் முதன்முதலில் பார்த்தது ஒரு கிரிக்கெட் மைதானத்தில்தான். நாங்கள் இருவரும் ஒரே கிரிக்கெட் மைதானத்தில்தான் பயிற்சி மேற்கொண்டு வந்தோம். அவள் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். ஒவ்வொரு ஸ்ட்ரோக்கையும் ஆடும்போதும் அவளது அங்க அசைவுகளையும், கண்களின் கூர்மையையும் நான் ரசித்துக்கொண்டிருப்பேன். எனக்குப் பந்து வீசுவதுதான் மிகவும் பிடிக்கும். அதனால், ஒருநாள் அவளுக்குப் பந்து வீச வேண்டும் என்ற ஆசை இருந்தது.
நாங்கள் இத்தனை நாட்கள் ஒரே மைதானத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தாலும், பெண்களோடு எங்களைச் சேர்ந்து விளையாட விடுவதில்லை. ஆனாலும், நான் அகல்யாவின் விளையாட்டை மிகவும் ரசித்துக்கொண்டிருந்தேன்.
கழுத்து வரை வெட்டப்பட்ட தலைமுடி. பூனைக்கண்கள். காதில் கம்மல், மூக்குத்தி, வளையல், கழுத்தில் செயின் இப்படிப் பெண்களுக்கே உரிய எந்த அலங்காரமும் இல்லை. ஆனாலும், ஒரு நிலவின் பிரகாசத்தை அவள் முகத்தில் நீங்கள் காணலாம்.
இத்தனை அழகான ஒரு தேவதையை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. எப்படியாவது அவளிடம் போய்ப் பேசிவிட வேண்டும் என்று ஒருநாள் காத்திருந்தேன்.
அன்று எங்கள் கிளப் மீட்டிங்கில் அவளுக்கு எதிராக அமர வேண்டிய ஒரு சூழல் உண்டானது. அப்போது நான் அவளையே பார்த்துக்கொண்டே இருந்தேன். அவளை விடாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன். அது ஏதோ அவளைத் தொந்தரவு செய்திருக்க வேண்டும். அவளும் என்னைக் கண் இமைக்காமல் பார்த்தாள். இருந்தாலும் என்னுடைய பார்வை அவளுக்குள் ஏதோ ஒரு சங்கடத்தை உருவாக்கியிருக்கும்.
அந்த நிகழ்வு முடிந்ததும், நாங்கள் எல்லோரும் வெளியே நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது அகல்யா என்னை நோக்கி வந்தாள். அவள் ஒன்றும் பேசவில்லை. என் அருகில் வந்து சற்று தள்ளி நின்றாள்.
“ஏன் என்னை அப்படிப் பார்த்தீங்க?” என்று கேட்டாள்.
நான் ஏற்கனவே கூச்ச சுபாவம் உள்ளவன். ஒரு பெண் வந்து என்னிடம் பேசியதும், என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கை, காலெல்லாம் உதற ஆரம்பித்துவிட்டது.
“நான்… சும்மாதான் பார்த்தேன்…” என்று தடுமாறினேன்.
அவள் லேசாகப் புன்னகைத்தாள்.
“நீங்க லெஃப்ட் ஆம் ஃபாஸ்ட் பவுலர்தானே?” என்று கேட்டாள்.
“ஆமாம்.”
“பார்த்திருக்கேன். உங்க ஸ்டைல் ஆஃப் பவுலிங் ரொம்ப நல்லா இருக்கு. உங்களுக்கு நல்ல ஃபியூச்சர் இருக்கு.”
“ஓ…” என்று சிரித்துக்கொண்டேன். என் முகத்தில் வியர்வை வழிந்து கொண்டிருந்தது.
எந்தவித ஆபரணமும் இல்லாமல், சாதாரண ஒரு டி-ஷர்ட் மட்டும் அணிந்த அந்தப் பெண், எனக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகாகத் தெரிகிறார் என்ற கேள்வி இன்று வரை எனக்குப் புரியவே இல்லை.
இப்படியாக நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிப் பழகி, மைதானத்திற்குள் எங்கள் காதலை வளர்த்துக்கொண்டோம். கிரிக்கெட் மீதான எங்கள் காதலும் எங்கள் மீதான எங்கள் காதலும்தான் எங்களை இணைத்தது.
முதலில் நம்மை நாமே காதலிக்க ஆரம்பித்த பிறகுதான் நமக்கு உண்மையான காதல் கிடைக்கும் என்று யாரோ சொல்லி எங்கோ கேட்டிருக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை, நான் அவளைக் காதலித்த பிறகுதான் என்னை நானே நேசிக்க ஆரம்பித்தேன்.
முன்பு எப்போதும் இல்லாதபடி என் முகத்தை நன்றாகக் கழுவி, தலைமுடியை ஒழுங்காகச் சீவி, நல்ல ஆடைகளை அணிந்து அவளைப் பார்க்க மைதானத்திற்குப் போவேன். நானும் அவளும் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிக்கொண்டு, எங்கள் நட்பைக் காதலாக மாற்றினோம்.
அவள் வீசும் ஒவ்வொரு பந்தையும் என்னால் அடிக்க முடியாது என்பது அவளுக்குத் தெரிந்தும், அவள் வேகமாகப் பந்துவீசிக்கொண்டே இருப்பாள். சில நேரங்களில், அவள் என் இதயத்தை நோக்கி வீசும் பந்துகளை, என் பேட்டால் தடுத்து நிறுத்தியிருக்கிறேன்.
அவள் பேட்டிங் ஆடும்போது, ஒரு நாளாவது அவளுக்குப் பந்து வீச வேண்டும் என்று அவளிடம் கேட்டுக்கொண்டே இருப்பேன். அதன்படி, ஒருநாள் எங்கள் பயிற்சியாளர் வராதபோது, அவளுக்காக நான் பந்துவீசினேன்.
என்னால் வேகமாக ஓடிவந்து, அவள் முகத்தை நேராகப் பார்த்தபடி மனதை ஒருநிலைப்படுத்திப் பந்துவீச முடியவில்லை.
ஒவ்வொரு முறையும் ஓடிவந்து பந்தை எறியும்போதும், அது அகலப் பந்தாகவோ அல்லது அவளை நோக்கிச் சரியாகச் செல்லாமலோ போய்விடும்.
அவள் சிரித்துக்கொண்டே என்னிடம் வந்து,
“நீ என்ன மறந்துட்டு, எப்போதும் போல கான்சன்ட்ரேட் பண்ணி பவுலிங் போடு,” என்றாள்.
நானும் “சரி” என்று தலையாட்டிவிட்டு மீண்டும் பந்துவீசினேன்.
ஆனால் நான் வீசிய ஒவ்வொரு பந்தையும் அவள் மிக அழகாக அடித்தாள். இப்படியாக நாங்கள் காதலிக்க ஆரம்பித்த பிறகு, நான் சில முறை அவளைத் தொட்டிருக்கிறேன். அப்படி என் ஸ்பரிசம் அவள்மீது படும்போதெல்லாம், அவள் ஒரு மாதிரி கூசிப் போவாள். என் தொடுதலை அவள் சற்றும் விரும்பவில்லை என்பது எனக்கு மெதுவாகத்தான் புரிந்தது. ஆனாலும், அதைப் பற்றி அவள் எதுவும் என்னிடம் கூறவில்லை. இருவருக்கும் இடையேயான காதல் மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டே இருந்தது.
ஒருநாள் நான் அவளிடம், “என்னைக் காதலிப்பதாகக் கூறியிருந்தாய் அல்லவா? பிறகு ஏன் என்னைத் தொட மறுக்கிறாய்?” என்று கேட்டேன்.
அதற்கு அவள், “எனக்குக் கொஞ்சம் பயமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது,” என்று கூறினாள். அவள் சொன்ன அந்தப் பதிலை நான் அப்படியே ஏற்றுக்கொண்டேன். அதன்பிறகு நாங்கள் இருவரும் இரண்டு, மூன்று ஆண்டுகள் காதலித்தோம். ஆனால் அதுவரை அவள் என்னைத் தொட்டதோ, நான் அவளை உரிமையோடு தொடவோ இல்லை.
ஒருநாள் நாங்கள் இருவரும் தனியாக இருக்கும் ஒரு சூழல் வந்தது. அப்போது நான் பேசிக்கொண்டே, தொடர்ந்து அவள் தோளின் மீது கையை வைத்தேன்.
உடனே…பளார்! என்று என்னை அறைந்துவிட்டாள்.
அதன் பிறகு , அவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
“ஏன் இப்படிச் செய்தாள்? இதைப் பற்றி அவளிடம் ஏதாவது கேட்கலாமா?” என்று தோன்றியது.
ஆனால், நான் எதுவும் கேட்கவில்லை. இருவரும் பேசாமல் பிரிந்து சென்றோம். அதன்பிறகு சில நாட்கள் நாங்கள் பேசிக்கொள்ளவே இல்லை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளாகத்தான் வந்து என்னிடம் பேசினாள்.
“உங்கிட்ட சில முக்கியமான விஷயம் பேசணும்,” என்றாள்.
“இன்னைக்கு ஈவ்னிங் நேரு பார்க்குக்கு வந்துரு,” என்று கூறிவிட்டு அமைதியாகச் சென்றாள். நானும் அவளும் அந்தி மாலையில் நேரு பூங்காவில் உட்கார்ந்திருந்தோம். அவள் கண்கள் என்னை நேருக்கு நேர் சந்திக்கத் தயங்கிக்கொண்டிருந்தன. அவள் மிகவும் பதட்டமாகவும் நடுங்கும் கைகளுடனும் உட்கார்ந்திருந்தாள்.
“என்னாச்சு?” என்று நான் கேட்டேன்.
“இல்ல… நான் உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேனா?”
“இல்லையே. எனக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் தோணலையே.”
“நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். ஆனா, எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு.”
“என்ன விஷயம்? சொல்லு.”
“இல்ல… நம்ம பிரேக் அப் பண்ணிக்கலாம்னு தோணுது.”
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
“எனக்கென்னமோ இந்த லவ், மேரேஜ் இதெல்லாம் எனக்கு செட் ஆகும்னு தோணல. என்னால உன் லைஃப் ஸ்பாயில் ஆகிடக்கூடாது.”
அவள் பேசிக்கொண்டே சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.
“சின்ன வயசுல… எனக்குப் பாலியல் ரீதியா சில மோசமான விஷயங்கள் நடந்தது. என்னோட சொந்த மாமாவே என்னைப் பாலியல் ரீதியா துன்புறுத்த முயற்சி பண்ணாரு. அப்போ நடந்த அந்தச் சம்பவம் எனக்குள்ள ஒரு பயத்தை உருவாக்கிடுச்சு.
“எனக்கு ஆம்பளைங்கனாலே பிடிக்கல. ஆம்பளங்க தொட்டாலும், அவங்க பேசினாலும், அவங்க கிட்ட வந்தாலும் எனக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு. அதுவும் அந்தத் தொடுதல என்னால ஏத்துக்கவே முடியல. அப்புறம் எப்படி நமக்குள்ள மத்த விஷயங்களாம் நடக்கும்?”
“எனக்கென்னமோ இது தப்பா தெரியுது. என்னால உன்னோட வாழ்க்கை வீணாக்க வேண்டாம்னு நினைக்கிறேன். அதனாலதான், இன்னைக்கு நீ என்னைத் தொட்டதைக் கூட என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியல. எனக்கு ஒரு மாதிரி கை, காலெல்லாம் உதற ஆரம்பிச்சிருச்சு. ப்ளீஸ்…என்னைப் புரிஞ்சுக்கோ. என்னை விட்டுடு.”
“நான் தனியா இருக்கிறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. நான் தனியா இருக்கிறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன்” என்று கூறிக்கொண்டே, அவள் என் கையைப் பிடித்து அழ ஆரம்பித்தாள். அவள் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அவளுக்கு அந்தப் பழைய நினைவுகள் மீண்டும் வந்திருக்க வேண்டும் போலிருந்தது. அவள் கண்களில் இருந்து நீர் தாரை தாரையாகக் கொட்டியது.
அவள் மிகவும் பதட்டத்தோடும் அச்சத்தோடும் காணப்பட்டாள். நான் அவளைத் தொட்டு ஆறுதல் படுத்த நினைத்தேன். ஆனால், அதையும் அவள் தப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக, அவள் விரல்களை மட்டும் தொட்டு ஆறுதலான சில வார்த்தைகளைக் கூறினேன். நாம் ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரைச் சந்திக்கலாம் என்றும், அவர் மூலமாக இதிலிருந்து உன்னை வெளியே கொண்டு வரலாம் என்றும் ஆலோசனை கூறினேன்.
ஆனால், அவள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
“என்னால் உன்னுடைய வாழ்க்கை வீணாக வேண்டாம் என்று நினைக்கிறேன்,” என்று கூறிவிட்டு, வேறு எதுவும் பேசாமல் எழுந்து சென்று விட்டாள்.
நான் அந்தப் பூங்காவில், அவள் போன பிறகும் அவளது குரலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவளது கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளது புன்னகையை, அவளிடமிருந்து பிரித்து எடுத்து என்னிடம் வைத்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு இலகுவாக, அவ்வளவு சாதாரணமாக இதை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள். இந்தக் கதை இத்துடன் முடிந்து விடுகிறது என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், அது அப்படி முடிவதாக இல்லை. நான் தினமும் மைதானத்திற்குச் சென்று அவளைத் தேடுவேன். அன்றிலிருந்து அவள் அந்த கிளப் அணிக்கு வரவே இல்லை. மேலும், அந்த ஊரை விட்டு தன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதாக அவளது தோழிகள் சொன்னார்கள். நான் அவளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச நினைப்பேன்.
ஆனால், அவள் எல்லா சமூக வலைதளங்களிலும் என்னை முழுவதுமாக ப்ளாக் செய்திருந்தாள். அவள் என்னை எல்லா விஷயங்களிலிருந்தும் தடை செய்யலாம். ஆனால், அவளைப் பற்றிய நினைவுகளிலிருந்து என்னைத் தடை செய்ய முடியாது.



