இணைய இதழ் 128சிறுகதைகள்

முறிவு

சிறுகதைகள் | வாசகசாலை

பள்ளிக்கூட நிர்வாகம் அதற்கு இன்பச் சுற்றுலா என்றே பெயர்சூட்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் எங்களை அவரவர் வீட்டிலிருந்து அள்ளிச் சுருட்டிக்கொண்டு இங்கே வந்து கொட்டும் அந்த மஞ்சள் நிற வேனின் வறண்ட உட்புறம் அன்று பலவண்ண பலூன்கள் மற்றும் ரிப்பன்களால் அலங்கரிக்கப்பட்டு அழகாக இருந்தது.

வண்டியினுள் நுழைவதற்குத் தயாராக நாங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தபோதே யார் யார் எந்தெந்த இருக்கையில் இடம்பெறவேண்டும் என்கிற முன்தீர்மானங்களை வகுத்திருந்தோம். அதன்படி நானும் எனது நண்பனான வேதராஜும் எவ்வித வாதப்பிரதிவாதங்களும் இன்றி வாகனத்தின் கட்டக்கடைசி இருக்கையைத் தேர்ந்தெடுத்திருந்தோம். செல்லவிருப்பது மலைப்பிரதேசம் எனவும் பதினைந்திற்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகளை அது கொண்டிருக்கிறது எனவும் கடைக்கோடி இருக்கையில் அமர்ந்திருப்பவருக்கு அதனால் தலைச்சுற்றலும் வயிற்றுப் பிரட்டலும் உண்டாகக்கூடும் எனவும் கேம்ஸ் வாத்தியார் சிவசுந்தர் எச்சரிக்கை செய்திருந்தாலும் எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. பாதத்தில் இத்தனைப் பெரிய கட்டை அணிந்துகொண்டு அனைவரும் ஆடிப்பாடி நடமாடும் இடத்தில் அமர்வது அத்தனை உத்தமம் எனத் தோன்றவில்லை.

ஒரு வாரத்திற்கு முன்புதான் அப்பாவுடன் வெளியே சென்றுகொண்டிருந்தபோது வலது பாதத்தை, வேகமாகச் சுழன்றுகொண்டிருந்த வண்டியின் பின் சக்கரத்தினுள் தவறுதலாக நுழைத்துவிட்டிருந்தேன். விளைவாக, பாதத்தின் சிறு பகுதியில் தோல் கிழிந்து, கட்டைவிரல் எலும்பு முறிந்து, அதன் நகம் துண்டிக்கப்பட்டு, ஜோடுகள் அணியமுடியாத அளவிற்குத் தடிமனான கட்டைப் போட்டுக்கொள்ள வேண்டிய நிலை உருவானது.

இத்தனை ஆழமான காயத்துடன் பயணம் செல்வது அபத்தம் என்று அம்மா ஒற்றைக்காலில் நின்றாள். ஒவ்வொரு நாளும் இதன் பொருட்டு வீட்டிலே காரசாரமான வாக்குவாதங்கள் நிகழ்ந்தது. பெரும்பாலும் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இடையே இந்தக் குழப்பத்தை மூட்டிவிடுவதோடு என் பங்கு நிறைவுற்றுவிடும். அப்பா இந்த விஷயத்தில் என் கட்சியில் இருந்தார். நாங்கள் பயணம் செய்யவிருக்கும் இடத்தில் அப்பாவிற்கு மிகவும் நெருக்கமான, அவருடன் மருத்துவக் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர் ஒருவர் இருக்கிறார் எனவும், ஏதேனும் அவசரம் என்றால் அவர் உடனடியாக சென்று கவனித்துக்கொள்வார் எனவும் அப்பா சொன்ன பிறகே அம்மா கொஞ்சம் வழிக்கு வந்திருந்தாள்.

ஆனால், பயணம் துவங்கி ஒருசில நிமிடங்கள் சென்றதுமே அம்மாவின் அறிவுறுத்தலுக்கு இணங்கி வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிவிட்டது.

செவிப்பறைகளை அதிரச்செய்யும் இசை, அதன் தாளத்திற்குத் தகுந்தாற்போல் குதியாட்டம் போட்ட சின்னஞ்சிறிய கால்கள், தொண்டையைக் கிழித்துக்கொண்டு வெளியேறிய மிருகக் கூச்சல்கள் என எவற்றிலும் பங்குகொள்ள முடியாமல் அதீத தவிப்பிற்குள்ளானேன்.

எப்போதும் கடுகடுவெனத் தோற்றமளிக்கும் சரோஜினி டீச்சர்கூட அப்போது அவ்வளவு ஆனந்தமாக அவருக்குப் பிடிக்கவே பிடிக்காத குறும்புக்காரனான அரவிந்தனுடன் ஆட்டம்போட்டு கொண்டிருந்தார்.

இனம்புரியாத தத்தளிப்பு எனது நெஞ்சை எடைகொள்ளச் செய்தது. அவர்கள் தூக்கி வீசி பந்தாடிக்கொண்டிருந்த பலூன் ஒன்று தற்செயலாக என் மடிமேல் விழுந்ததும் ஒருகணம் எனது தவிப்பு அனைத்தும் மாயமாகித் தன்னை மறந்து கிளர்ச்சி பெருக்கெடுத்தது. துடிப்பான உடலசைவுடன் அதனைப் பற்றி வீசிவிட முற்பட்டபோது கால்களில் சுருக்கென்ற வலி தோன்றி என்னை அப்படியே முடக்கிப்போட்டது.

குதூகலமான மனநிலையில் இருந்த அரவிந்தன் லேசான உச்சுகொட்டலுடன் என்னிடமிருந்து அதனைப் பிடுங்கிக்கொண்டு விலகிச் சென்றான். நான் அவனைப் பார்த்துப் புன்னகை செய்ய முயற்சித்தேன். ஆனால் அவன் என்னைச் சற்றும் பொருட்படுத்தவில்லை. ஏதோ அங்கே எவருமே இல்லாததைப் போல எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அகன்று சென்றான். நான் முகத்தை வெளிப்புறமாகத் திருப்பிக்கொண்டேன்.

வகுப்பில் நான் நன்றாகப் படிப்பவன். பரீட்சைகளில் நான் வாங்கும் மதிப்பெண்கள் எப்போதும் முதல் மூன்று இடங்களுக்குள்ளாகவே இருக்கும். வகுப்பின்போது கேள்வியெழுப்பும் சரோஜினி டீச்சரின் கண்கள் பதில் வேண்டி இயல்பாக நாடும் நபர்களில் முதன்மையானவன் நானே. சென்ற வாரம் எடுத்த பாடம் என்ன என்பதை நினைவுறுத்திக்கொள்ள அருள்மொழி டீச்சர் குறிப்பிட்டுக் கேட்கும் நோட்டு என்னுடையதாகவே இருக்கும். அச்சில் வார்த்ததுபோல் இருக்கும் எனது கையெழுத்தைப் பார்க்கும்போது அப்படியே கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்போல் இருப்பதாக அவர் பலமுறை சொல்லியிருக்கிறார். இப்படிக் கவனம் சூழ வாழப் பழகிய எனக்கு அக்களியாட்டத் தருணங்கள் மிகப்பெரிய அசௌகரியம் தருவதாக அமைந்தன. பள்ளிக்கூடத்தின் கேம்ஸ் பீரியடின் போதும் இத்தகைய தனிமையை நான் உணர்ந்ததுண்டு. ஆனால், அது ஒன்று அதிகம்போனால் இரண்டு மணிநேரச் சமாச்சாரம்தான். இங்கே இரண்டு நாட்களுக்கு இதுவே நீடிக்கப்போகிறது என்று எண்ணியபோது தொண்டை அடைத்துக்கொண்டு அழுகை முட்டியது.

வேறு வழியில்லாமல் எனது உயிர்த்தோழனான வேதராஜை அருகே அழைத்து சற்றுநேரம் அமர்ந்திருக்கச் சொன்னேன். அவன் முதலில் சரியென்று சொன்னான். பிறகு, “இருடா வந்துடறேன்!” என்று சொல்லிவிட்டு நாராசமாகக் கூச்சல் போட்டுக்கொண்டே அந்தப் பன்றிக்கூட்டத்தினுள் தன்னை மூழ்கடித்துக்கொண்டான்.

அன்று வரையிலான வாழ்க்கையில் நான் அத்தனைத் தீவிரமாக எனது அம்மாவைத் தேடியதே இல்லை. பாடல், ஆட்டம் எல்லாம் ஓய்ந்து அனைவரும் உறங்குவதற்கு ஆயத்தமாவது வரை வீட்டின் நினைவாகவே இருந்தது. குடும்பத்துடன் சென்ற சுற்றுலாக்களை நினைவுபடுத்தி அதனுள் என்னைப் புகுத்திக்கொண்டபடியே நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தேன். குறிப்பாக பசி, காய்ச்சல் அல்லது அண்ணன்மார்களால் ஏதேனும் சீண்டலுக்கு உட்பட்டு நான் தேம்பியழும் வேளைகளில் அம்மா என்னை அரவணைத்துச் சொல்லும் ஆறுதல் மொழிகளை, இடம் பொருள் ஏவல் பார்க்காமல் என் பொருட்டு அவர்களை எதிர்த்து சண்டையிடும் அவளது ரௌத்திரத்தை எல்லாம் நினைத்தபடி இருந்தேன்.

அப்போது அனைத்து மாணவர்களும் சீராக அமர்ந்திருக்கின்றனரா என்று சோதித்தபடி கடைசி இருக்கை நோக்கி வந்த சரோஜினி டீச்சர் நான் வந்திருப்பதை அப்போதே நினைவுகூர்ந்தவராக, “நரேன், எப்படி இருக்க? ஓகேவா?” என்று கேட்டபடி அருகே அமர்ந்துகொண்டார்.

எனது நெஞ்சு தடதடவென அடித்துக்கொண்டது. ஆறுதல் வேண்டி அவரது கைகளைப் பற்றிக்கொண்டேன்.

டீச்சர் என் முகத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் எனக்கு முற்றிலுமாக பரிச்சயமே இல்லாத ஒரு முகபாவம் வெளிப்பட்டது. அது என்னை அவர்களிடம் இருந்து விலகச் செய்வதாக இருந்தது. ஆனால், விலகிய நொடியே தாளவே முடியாத ஒரு அச்சமும் பரிதவிப்பும் என்னை முழுதாக ஆட்கொண்டது.

சரோஜினி டீச்சர் தனது வாயை நன்கு பிளந்து கொட்டாவி விட்டார். பிறகு, “ஜாலியா இருந்துச்சா நரேன்?” என்று சிரித்தமுகமாய் கேட்டார்.

எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. தலையைத் தொங்க போட்டுக்கொண்டு, “கால் ரொம்ப வலிக்குது டீச்சர்!” என்று சொன்னேன்.

நான் நோவுற்றிருப்பதையே அவர் அப்போதுதான் நினைவுகூர்ந்தார். சட்டெனக் குரலில் அக்கறையை வரவழைத்துக்கொண்டு, “அச்சச்சோ, காட்டு… டீச்சர் என்னன்னு பாக்கறேன்!” என்றார்.

என்னுள் ஒருவித பரபரப்பும் கிளர்ச்சியும் குடிபுகுந்தது. ஆனால், அடுத்த நொடியே இதழ்கள் வெளிப்புறமாக மடிந்து கண்கள் இரண்டிலும் நீர் கட்டியது.

பின்புறமாகச் சரிந்து வசதியாக அமர்ந்துகொண்டு வலதுகாலைச் சற்று உயர்த்தியபோது அவர் அதனை அன்போடு பற்றி தனது மடிமீது வைத்துக்கொண்டார். வாகனத்தினுள் இருள் அடர்ந்திருந்தது. வெளிச்சாலையில் இருந்த விளக்குகள் சின்னச் சின்ன ஒளிச்சதுரங்களை உள்ளுக்குள் வீசிவிட்டு மறைந்தபடியே இருந்தது.

அந்தத் தற்காலிக வெளிச்சத்தில் எனது பாதத்தை ஒரு நிமிடம் சோதனை செய்த சரோஜினி டீச்சர், “சரியா போயிடும், என்ன? இப்போ ஒழுங்கா தூங்கு!” என்று பரிவோடு சொன்னார்.

நான் சரியென்று சொன்னேன். பின்னர் அவரது மடிமீது எனது பாதத்தை நன்கு கிடத்திக்கொண்டு, “ரொம்ப வலிக்குது டீச்சர்!” என்று சொல்லி விசும்பினேன்.

டீச்சர் என் முகத்தை ஒரு சில நொடிகளுக்குப் படித்தார். அதற்குள் அவருக்கு இரண்டு முறை கொட்டாவி வந்துவிட்டிருந்தது.

அவர் கொட்டாவி விடுவதை நான் பார்ப்பது அதுவே முதல்முறை. இருளும் வெளிச்சமும் தோன்றியும் மறைந்து விளையாடிக் கொண்டிருந்த அந்த வேளையில் வாய் பிளந்த நிலையில் அவர் அமர்ந்திருப்பதைக் காண வினோதமாக இருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் மீறி அவரது அருகாமை எனக்கொரு கதகதப்பை வழங்கிக்கொண்டிருந்தது.

மீண்டும் ஒருமுறை எனது பாதத்தைப் பார்வையிட்ட டீச்சர் வலியைத் தனிப்பதற்கென்று ஏதேனும் மாத்திரைகள் எடுத்து வந்திருக்கிறேனா என்று வினவினார். நான் கைவசம் அது இருப்பதாகச் சொன்னேன். எங்கே என்று டீச்சர் கேட்டதற்கு நான் அளித்த பதிலின் அடிப்படையில் எனது தோள்பையைத் துழாவி மாத்திரை சிமிழை வெளியே எடுத்துக் கொடுத்தார்.

அந்த மாத்திரையின் விளைவென்ன என்பது எனக்குத் தெரியும். அதனை உட்கொண்ட ஒருசில நிமிடங்களில் நான் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிடுவேன். கால்வலி சிறிது நேரத்திற்கு மரத்துப்போயிருக்கும்.

டீச்சர் மாத்திரையைப் பிரித்து என் கையில் திணித்துவிட்டிருந்தார். ஆனால், ஏனோ அதனைச் சாப்பிட மனம் வரவில்லை எனக்கு. எதுவும் செய்யாமல் மாத்திரையை வெறித்துப் பார்த்தபடி சில நொடிகள் அமர்ந்திருந்தேன். பிறகு எதற்கென்றே தெரியாமல் விம்மி அழ ஆரம்பித்தேன்.

டீச்சர், “நரேன்! இப்போ என்ன ஆச்சு?” என்று பலமுறை கேட்டார். என் தோள்களை வருடினார். தலைமுடியைத் தாய்மையுடன் கோதினார். ஆனால், அவை அனைத்தும் எனது அழுகையை அடர்த்திபெறச் செய்வதாகவே இருந்தது.

ஒரு கட்டத்தில் லேசாகப் பொறுமையிழந்த சரோஜினி டீச்சர், “இவ்வளோ முடியலன்னா எதுக்கு வந்த நரேன்? வீட்டில இருக்கவேண்டிதானே? எல்லாரும் ஜாலியா போற இடம்… சந்தோஷமா டைம் ஸ்பென்ட் பண்ண வந்திருக்கப்போ நீ இப்படி இருக்கறது எல்லாருக்கும் கஷ்டம்தானே!” என்றார்.

நான் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டேன். டீச்சர் சொன்னவை உதிரிகளாகச் சிதறி என்னுள் வெவ்வேறு ஒலிமாறுதல்களுடன், பொருள் மாறுதல்களுடன் விரிந்தும் திரிந்தும் எதிரொலிக்கத் தொடங்கியது. என் அழுகை நின்றுவிட்டிருந்தது. மெல்ல நிமிர்ந்து அவரை ஒருமுறை ஏறெடுத்து நோக்கினேன். பின்னர் கையில் இருந்த மாத்திரையை வாயினுள் போட்டுக்கொண்டு கண்களை மீண்டும் மூடிக்கொண்டேன்.

மிகவும் அடர்த்தியான மரம் ஒன்றின் கிளைகளில் பட்டமொன்றைப் போல நான் சிக்குண்டிருப்பதைப் போலவும் கூர்மையான நகங்களும் அலகும் கொண்ட பருந்தொன்று என்னை அங்குலம் அங்குலமாகக் கொத்தி உண்பதைப் போலவும் கனவுகள் அந்த இரவு முழுக்க என்னை வந்தடைந்தன.

மறுநாள் விழித்துக் கொண்டபோது இரவில் நான் உகுத்த கண்ணீர் எனது கன்னங்களில் உலர்ந்த கோடுகளாகப் பதிந்திருந்தன. அதன் வறண்ட ஸ்பரிசம் என்னை ஏனோ ஆத்திரப்படுத்த, ஜன்னல் கம்பிகளில் பூத்திருந்த பனித்துளிகளை வெறியுடன் வருடி, உள்ளங்கையை ஈரப்படுத்திக்கொண்டு முகத்தைத் துடைத்துக்கொண்டேன்.

முந்தைய தினத்தின் களியாட்டம் அப்போது சற்று மங்கியிருந்தாலும் அனைவரும் வெளியே திரைபோல் படர்ந்திருந்த பனிமூட்டத்தை, ஆழங்களில் அடுக்கடுக்காய் இருந்த பெட்டிபோன்ற வீடுகளை, சாலையோரம் இருந்த திண்டுகளில் அமர்ந்தபடி பல்லிளித்தக் குரங்குகளை உவகையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களது சிரிப்புச் சத்தம் மிகும்தோறும் நான் என்னை அறியாமல் கண்களை மூடிக்கொண்டேன். அருகில் அமர்ந்திருந்த வேதராஜ் ஏதேனும் ஒன்றை ஆர்வத்துடன் சுட்டிக்காட்டும் போதெல்லாம் வேண்டுமென்றே அலட்சியத்தை வெளிப்படுத்தினேன்.

எங்கள் பள்ளிக்கூடத்தின் உரிமையாளரின் உறவினரின் மேற்பார்வையில் இந்த மலைப்பிரதேசத்தில் அமைந்திருந்த பள்ளிக்கூடம் ஒன்றில் நாங்கள் தங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பள்ளிக்கூடத்தின் கிழக்கு எல்லையில் மிகவும் விஸ்தீரணமாக, அழகழகான மர வேலைப்பாடுகளுடன் கூடியிருந்த அரங்கம் ஒன்றின் ஒரு புறத்தில் நாங்கள் இருபது ஆண்களும், மையத்தில் சிறிய தடுப்புச் சுவரைப்போல் போடப்பட்டிருந்த மூன்று கட்டில்களில் எங்களுடன் வந்திருந்த ஆசிரியர்களும், அதற்கு மறுபுறம் பத்துப் பெண்களும் படுப்பதற்குப் படுக்கைகள் அடுக்கப்பட்டிருந்தன. வெளியே பச்சைபசேலெனக் காட்சி தந்த மைதானத்தின் ஒருபுறத்தில் ஓலைக்கூரை வேய்ந்த சிறிய குடில் சமையலுக்கென ஒதுக்கப்பட்டிருந்தது.

காலை உணவுக்காகக் காத்திருக்கும்போது எங்கள் அனைவரையும் மைதானத்தில் குழுமச் செய்த சிவசுந்தர் சார் அன்றைக்கு நாங்கள் செல்லவிருந்த இடங்கள் குறித்து விளக்க ஆரம்பித்தார்.

காலையில் அருகில் இருந்த பழமைவாய்ந்த கிருஷ்ணன் கோவில் ஒன்றிற்கும் இரண்டொரு காட்சி முனைகளுக்கும் செல்வதாக இருந்தது. பிறகு மதிய உணவிற்கு இங்கே திரும்பி, இரண்டுமணி நேரம் ஓய்வுக்குப் பிறகு மாலையில் அருகே இருக்கும் மலர் பூங்காவையும் அதற்குத் தென்புறமாக இருக்கும் மலைவாழ் மக்களின் குடியிருப்புகளைப் பார்வையிட இருப்பதாகவும் தெரிவித்தார். மறுநாள் ஊரின் மையத்தில் இருந்த அறிவியல் அருங்காட்சியகத்திற்கும் மதிய வேளையில் இங்கே இருக்கும் பிரசித்திபெற்ற பிரிட்டிஷ் கட்டுமானம் ஒன்றிற்கும் மாலையில் ஷாப்பிங் முடித்துவிட்டு அப்படியே ஊரைநோக்கி புறப்படுவோம் என்றும் சொல்லி முடித்துப் பெருமூச்செறிந்தார்.

வாகனத்தில் அப்படி அமர்ந்திருந்ததாலோ என்னவோ இங்கே கூட்டமாகத் திரளும்பொழுதும் நான் என்னைக் கடைக்கோடி ஆளாகவே நிறுத்திக்கொண்டிருந்தேன். சிவசுந்தர் சார் திட்டங்களை விவரிக்க விவரிக்க மாணவர் கூட்டத்தினுள்ளிருந்து கிளம்பிய ஆரவாரம் என்னை மேலும் மேலும் உந்தித் தள்ளி விலக்குவதாக இருந்தது. ஒரு கட்டத்தில் என்னை நானே வலுக்கட்டாயமாகக் கூட்டத்துடன் பிணைத்து, ஒட்டி நின்றுகொண்டேன். ஆனால் உணவு தயாராகிவிட்டது என்கிற அறிவிப்பு வந்ததும் அனைவரும் கூச்சல் போட்டுக்கொண்டே அக்கூடாரத்தை நோக்கி ஓட்டம்பிடித்தார்கள். நான் நெடுந்தூரம் பின்தங்கிவிட்டதைக் கண்டுகொண்ட சிவசுந்தர் சார் நெற்றியை சொறிந்தபடி என் அருகே வந்து தனது முரட்டுக் கரங்களால் என் தோள்பற்றி அழைத்துச் சென்றார். அவர் முகம் இயல்பாக இருந்தாலும் அந்தப் பிடியில் ஒருவித ஆங்காரம் இருப்பதாக எனக்குப் பட்டது.

சாப்பிட்டானதும் அனைவரும் அவரவர் தோள்பைகளை எடுத்துக்கொண்டு ஆனந்தக் கூச்சல்கள் எழுப்பியபடி வாகனங்களை நோக்கி ஓடினர். இண்டு இடுக்காகவும் செங்குத்தாக ஏறி பின் அதே கோணத்தில் இறங்கி மீண்டும் ஏறும் சாலைகள் கொண்டிருப்பதாலும் ஏழு லோக்கல் ஜீப்புகளை ஏற்பாடு செய்திருந்தார் இந்தப் பள்ளியின் உரிமையாளர்.

பெரும் பாய்ச்சலுடன் ஓடிய மாணவர்கள் அவரவருக்குப் பிடித்த இடங்களை ஆக்கிரமித்துக்கொள்ள எங்குச் செல்வதென்று தெரியாமல் நான் ஸ்தம்பித்து நின்றிருந்தேன். அந்த வண்டியினுள் ஏறுவதற்கே எனக்குப் பிறரின் உதவி தேவைப்படும் என்பதால் மேலும் தயங்கினேன்.

நான் மந்தமாக நிற்பதைக் கண்டு வண்டியில் இருந்து இறங்கிவந்த சரோஜினி டீச்சர், “நரேன்! ஏன் இப்படி அசமந்தமா இருக்க… சீக்கிரம் வா… இந்த ஊர்ல சீக்கிரமாவே இருட்டிரும்!” என்றார்.

அவரும் எங்களுடன் வந்திருந்த மற்றுமொரு ஆசிரியரும் என்னைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று கடைசியாக இருந்த ஜீப்பின் பின்புறத்தில் ஒரு கைதியைப்போல் அமரவைத்தார்கள். ஏனோ எனக்கு அந்தக் குளிரிலும் வியர்க்க ஆரம்பித்திருந்தது.

குமட்டலெடுப்பதைப்போல் தோன்ற வண்டியின் இருக்கையில் என்னை நானே குறுக்கிக்கொண்டு அமர்ந்துகொண்டேன்.

கிருஷ்ணன் கோவில் செல்லும் வழியில் இருந்த சிறிய நீர்வீழ்ச்சியைக் காண்பதற்காக அனைவரும் இறங்கியபோது நான் வண்டியிலேயே இருந்துகொண்டேன். என்னை எவரும் எதுவும் கேட்கவில்லை. வரச்சொல்லி எவரும் வற்புறுத்தவும் இல்லை. இருபது நிமிடங்கள் கழித்து அனைவரும் திரும்பியபோது நான் இருந்த வண்டியில் அரவிந்தன் ஏறிக்கொண்டான்.

அந்த நீர்வீழ்ச்சியில் இருந்து கிருஷ்ணன் கோவிலைச் சென்றடைய முக்கால்மணி நேரம் பிடித்தது. அந்த நாற்பத்தியைந்து நிமிடங்களும் அரவிந்தனின் வாய் ஓயாமல் அனத்திகொண்டே இருந்தது. எங்கள் வகுப்பில் படிக்கும் மாலாவைப் பல்வேறு அருவருப்பூட்டும் சொற்களைக் கொண்டு அவன் பரிகாசம் செய்வதை அந்த வண்டியில் இருந்த அவனது கூட்டாளிகள் அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர். வண்டி நீர்வீழ்ச்சியை நெருங்கும்பொழுது ஒரு ஏற்றத்தில் ஏறி இறங்கிய அதிர்வினால் மாலா தனது பாவாடையிலேயே மலம் கழித்துவிட்டதாகவும் அந்த மலம் கெட்டியாக இல்லாமல், கொழகொழவென இருந்ததாகவும் சரோஜினி டீச்சர் நீர்வீழ்ச்சியின் அருகே இருந்த அடிபம்பில் கழுவிக்கொண்டிருந்தது அவளது பாவாடையைத்தான் எனவும் தெரிவித்தான். அவள் வண்டியைவிட்டு இறங்கி வராததற்கும் அதுவே காரணம் என்று சொன்னவன் சட்டென என் பக்கம் திரும்பி, “என்ன டாப்பர், நீ ஏன் வரல?” என்று கேட்டான்.

நான் எதுவும் சொல்லாமல் மறுபுறம் திரும்பிக்கொண்டாலும் அவனும் அங்கிருந்த பிற மாணவர்களும் எனது ட்ரவுசரை உற்றுப் பார்ப்பதை என்னால் உணரமுடிந்தது.

கிருஷ்ணன் கோவில் வந்ததும் அனைவரும் இறங்கிக்கொண்டனர். மஞ்சள்நிற மலர்களால் செறிந்திருந்த ஒரு மரத்தின் கீழ் அனைவரும் அணிவகுத்து நிற்க, சிவசுந்தர் சார் எங்களுக்குச் சில பல அறிவுரைகளைச் சொல்லத் தொடங்கினார். இது மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு ஸ்தலம் என்பதால் வளாகத்தினுள் அடியெடுத்து வைத்த நொடியில் துவங்கி வெளியே வரும்வரை எவரும் சத்தமெழுப்பக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார்.

ஒருவர் பின் ஒருவராக கோவில் உள்ளே செல்லத் துவங்கியபோது அரவிந்தன் கேலியாகத் தனது சுட்டுவிரலை இதழ்களின் மேல் வைத்துக்கொண்டான். அதனைக் கவனித்த சிவசுந்தர் சார் அவனைச் செல்லமாக அடித்து, “உனக்கு எம்புட்டு குசும்பு!” என்று சிரித்தார்.

நான் நுழைவை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தபோது என் அருகே வந்த சரோஜினி டீச்சர், “நரேன், உள்ள ரொம்ப ஏத்த இறக்கமா இருக்குமுன்னு சொல்றாங்க… வெளி பிரகாரத்துல வேற சின்னதா ஏதோ குட்டை மாதிரி இருக்குமாம், அதுல இறங்கித்தான் அந்தப் பக்கம் நடக்கணுமாம்… கால்ல போட்டிருக்கிற கட்டு ஈரமாகிட்டா, இல்ல ஸ்லிப் ஆகிட்டா கஷ்டம்… நீ வேணா ஜீப்ல வேய்ட் பண்ணு… இப்போ வந்துருவோம்… வியூபாயிண்ட்டுக்கு எல்லாரும் சேர்ந்து ஜாலியா போலாம்!” என்றார்.

நான் எதுவும் சொல்லாமல் கடைசியில் நின்ற ஜீப்பை நோக்கி நடந்தேன்.

அப்போது என்னை மீண்டும் அழைத்த டீச்சர், “நரேன், ஜீப் வேண்டாம்… இதோ இங்க சின்னதா பெஞ்சு இருக்குப்பாரு… மாலா அங்கதான் இருக்கா… அவளுக்கும் ஹெல்த் சரியில்ல… நீ அவகூட இருந்துக்கோ” என்றார்.

மரத்தின் அடியே இருந்த சிறிய திண்ணைபோன்ற அமைப்பில் இருந்த மாலா என்னைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

நான் தலைகுனிந்தபடி அங்கே சென்று ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டேன். கோவிலினுள் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே நடந்துசெல்வதை என்னால் உணரமுடிந்தது.

வகுப்பில் ஒரு சிலரைத் தவிர பிற அனைவருமே ஏதோ ஒரு கட்டத்தில் மாலாவுடன் அமர்ந்திருக்க நிர்பந்திக்கப்பட்டவர்களே. எந்நேரமும் கலைந்த சிகையுடனும் ஒழுகும் மூக்குடனும் அசுத்தமாகக் காட்சி தரும் அவளின் அருகே அமரவைக்கப்படுவதை உச்சபச்ச தண்டனையாக மாணவர்கள் கருதினர். அடித்தல், முட்டிப்போட வைத்தல், மேசை மீது நிற்கவைத்தல் போன்றவை முதற்கட்ட தண்டனை என்றால் பெண்களுடன் அமரவைக்கப்படுவது இரண்டாம் நிலையாகப் பார்க்கப்பட்டது. அதற்கும் பணியாதவர்கள் மாலாவுடன் அமர்த்தப்பட்டனர். ஏதேனும் ஒரு விஷமம் செய்து அகப்பட்டுக்கொள்ளும் அரவிந்தன் பலமுறை அவளுடன் இணைந்து உட்காரவைக்கப்பட்டுச் சூழ்ந்திருப்போரின் கேலிகளுக்கு ஆளாகியிருக்கிறான்.

கோவிலினுள்ளே அடியெடுத்து வைத்த மாணவர்கள் திடீரென எதற்கோ சிரித்தனர். மறுநொடி, “சைலன்ஸ்!” என்று டீச்சரின் குரல் கேட்டது. அவர்கள் எதை எண்ணி அல்லது எதைக் கண்டு சிரித்திருப்பார்கள் என்று யோசித்தபோது என் உடம்பெல்லாம் கூச்சமெடுத்தது.

என் பாதத்தில் சுற்றப்பட்டிருந்த துணியைக் கவனித்த மாலா, “நரேன், என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.

நான் ஒன்றும் சொல்லாமல் உடம்போடு எதிர்புறம் திரும்பினேன். ஜீப்பின் அருகே டிரைவர்கள் சிறு குழுவாக நின்று புகைபிடித்துக் கொண்டிருந்தனர்.

பொசுபொசுவென அடர்ந்த ரோமம் கொண்ட நான்கைந்து நாய்கள் அங்கும் இங்குமென லாந்திக்கொண்டிருந்தன. மாலா அந்த நாய்களைக் குறித்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

நான் அங்கிருந்து எழுந்துபோக முனைந்தபோது டிரைவர்களில் ஒருவர் என்னை அந்த இடத்திலேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த இடத்தில் அலைந்து திரிவது அத்தனைப் பாதுகாப்பான காரியம் இல்லை என்று மேலும் சொன்னவர், உள்ளே சென்றிருக்கும் எனது நண்பர்களும் ஆசிரியர்களும் இப்போது வந்துவிடுவார்கள் என்று ஆறுதல் சொன்னார். எனக்கு அழுகை வந்தது.

சென்றவர்கள் மீள்வதற்கு ஒருமணி நேரம் பிடித்தது. பெரும்பான்மையான நேரம் அமைதியே காத்துவந்த மாலா அவ்வப்போது எனது வேதனை குறித்தும் பசி குறித்தும் கேள்விகள் எழுப்பியபடியே இருந்தாள். அவளது குரல் என்னுள் மிகுந்த எரிச்சலைத் தோற்றுவித்திருந்தது. தொலைவில் தெரிந்த கோவிலின் வாயிலில் சிவசுந்தர் சாரின் தலை தென்பட்டதுமே நான் சட்டென எழுந்துகொண்டு விடுவிடுவென ஜீப்பை நோக்கிச் சென்று அதனுள் ஏறிக்கொண்டேன்.

மாணவர்கள் கோவிலின் வாசலில் சில மணி நிமிடங்கள் நின்றுகொண்டு உள்ளே அவர்கள் பார்த்த சிற்பங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். பிறகு அவர்கள் அனைவரும் காட்டுமாடுகளைப்போல் வண்டியை நோக்கி ஓடிவந்தபோது நான் எனது இமைகளை இறுக்கமாக மூடிக்கொண்டு உறங்கிவிட்டதைப்போல் நாடகமாடினேன். அதனை அவர்கள் நம்பிவிட்டிருந்தபடியால் என்னையும் மாலாவையும் இணைத்து வைத்து அவர்கள் இயற்றிய நகைச்சுவை வெகுவிரைவில் ஓய்ந்துபோனது.

மீதமிருந்த வியூபாயிண்ட்டுகளை வண்டியில் அமர்ந்தபடியே பார்த்துவிட்டுத் தங்குமிடம் நோக்கி பிரயாணித்தோம்.

பள்ளிக்கூடத்தில் மதிய உணவை உண்டபிறகும் நான் அதே உத்தியைக் கடைபிடித்தேன். நேராக எனது படுக்கைக்குச் சென்று படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டேன். ஆங்காங்கே என்னைப் பற்றி கிசுகிசுப்புகள் எழுவதும் எனது பெயர் மங்கிய தொனியில் உச்சரிக்கப்படுவதும் காதில் கேட்டவாறு இருந்தது. அவ்வேளைகளில் எல்லாம் எனது உடலெங்கும் எறும்புகள் ஊர்வதைப்போல் ஒருவித பதைபதைப்பு தோன்றியது. ஆனால் என்ன நிகழ்ந்தாலும் கண்களைத் திறந்துவிடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.

கதகதப்பை ஊட்டிக்கொண்டிருந்த வெயில் மெதுவாக இறங்கத் துவங்கியதும் அனைவரையும் மலர் பூங்காவைக் காண்பதற்குக் கிளப்புவதில் தீவிரமடைந்தனர் ஆசிரியர்கள். மாணவர்களில் பலர் அசதியில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தனர். நான் இமைகளை லேசாகத் திறந்தபோது அனைவரையும் உசுப்பி எழுப்பியபடி சரோஜினி டீச்சர் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

சட்டென எழுந்துகொண்டு டீச்சரிடம், “நான் ரெஸ்ட் எடுக்கட்டா டீச்சர்… எனக்கு ரொம்ப வலி இருக்கு… காய்ச்சல் வர மாதிரி இருக்கு!” என்று சொன்னேன்.

உடனடியாக அதனை மறுத்த டீச்சர், “நீ வந்ததுல இருந்து ஒரு இடம்கூட பாக்கல… கண்டிப்பா இங்க நீ வரணும்… கிளம்பு… வந்து எல்லார்கூடையும் ஜாலியா இருந்தா எல்லாம் சரி ஆயிடும்… கிளம்பு கிளம்பு!” என்று விரட்டியபடி விலகிச் சென்றார்.

எனக்கு மூச்சடைத்தது. தோள்களில் பெரும் எடை சுமத்தப்பட்டிருப்பதைப்போல் தோன்ற எழுந்து நிற்பதற்கே அத்தனை ஆற்றலைச் செலவிட வேண்டியிருந்தது. கையில் அகப்பட்ட சட்டையை அணிந்துகொண்டு முதல் ஆளாக வெளியே வந்து வழக்கம்போல் கடைசியாக நின்ற ஜீப்பின் பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டு பக்கவாட்டில் தலைசாய்த்துவைத்து இமைகளைத் தாழ்த்தினேன்.

மலர்ப் பூங்கா சென்றடைய அத்தனை நேரம் பிடிக்கவில்லை. சொல்லப்போனால் நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து நடந்துசெல்லும் தொலைவிலேயே அது இருந்தது. அனுமதிச் சீட்டைப் பெற்றுக்கொண்டு நாங்கள் உள்ளே சென்றபோது அந்தப் பிரம்மாண்டமான மலர்வெளி ஏறத்தாழ ஆட்களற்று காலியாக இருந்தது.

சரோஜினி டீச்சர் தலைமை தாங்க நாங்கள் உள்ளே வழிநடத்தப்பட்டோம். ஒவ்வொரு தாவரமாகச் சுட்டிக்காட்டி அதன் அறிவியல் பெயரை, அதன் குணாம்சங்களை, பிரத்யேக பலன்களை விவரித்தபடியே வந்த டீச்சர் கிட்டத்தட்ட அந்த மலர்வெளியை வகுப்பறையாக மாற்றிக்கொண்டிருந்தார்.

மிகச் செழுமையான ஒரு ரோஜா செடியின் முன் நின்றுகொண்டு அதனைப் பற்றிய குறிப்புகளை ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருந்தவர் திடீரென, “நரேன்! இங்க வா!” என்று என்னை அருகே அழைத்தார். வகுப்பில் ஒருவித மிடுக்குடன் நடைபோடும் எனக்கு அங்கே அவ்விடத்தில் மாணவர்கள் அனைவரையும் கடந்துசெல்ல ஏனோ சங்கோஜமாக இருந்தது.

குனிந்த தலை நிமிராமல் டீச்சர் அருகே சென்றதும் அவர் அந்தத் தாவரத்தைச் சுட்டிக் காண்பித்து, “இதோட சைன்டிஃபிக் நேம் சொல்லு நரேன்!” என்றார்.

எனக்கு அவர் கேட்ட கேள்வி நன்றாகப் புரிந்தது. அதற்கான சரியான விடை சட்டென எழுந்து தொண்டைவரை வந்தது. ஆனால், அதற்கு குரல் அளிக்க முனைந்த கணமே அது பஸ்பமாகி ஆழங்களினுள் மறைந்துபோனது. எந்தவித அசைவுமின்றி ஒரு சிலைபோல் அங்கே நின்றுகொண்டிருந்தேன். டீச்சரின் முகத்தில் ஏமாற்றத்தின் சுவடுகள் தென்பட்டன. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவர் எனது கன்னத்தை லேசாகக் கிள்ளிவிட்டு என்னைத் திரும்பிப்போகச் சொன்னார்.

கடைசி வரிசையில் சென்று நின்றபோது எனது உடல் நன்கு வியர்த்துவிட்டிருப்பதை உணர்ந்தேன். அதன் பிசுபிசுப்பை அனுபவித்தபோது எனக்கே என்மீது ஆத்திரமாக வந்தது. அறைக்குச் சென்று முடங்கிக்கொண்டால் போதும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

ஒவ்வொரு தாவரமாக நிறுத்தி நிறுத்திப் பார்த்துக்கொண்டிருந்ததால் அந்த மாபெரும் பூங்காவில் அரைவாசியை அடையும் முன்பே வானத்தில் மேகங்கள் திரண்டு மழை விழ ஆரம்பித்தது. காட்டுத்தீயைக் கண்டுவிட்ட விலங்குகள் போல அனைவரும் தலைதெறிக்க ஓட நான் நொண்டி நொண்டி வண்டியை அடைவதற்குள் நன்றாகவே நனைந்துவிட்டிருந்தேன்.

தங்குமிடம் அடைந்து அனைவரும் உடைமாற்றிக்கொண்ட பிறகு இரவு உணவு நாங்கள் படுத்திருந்த அரங்கத்திற்கு உள்ளாகவே விளம்பப்பட்டது. சாப்பிடவே மனமில்லை என்றாலும் பெயருக்கென்று கொஞ்சமாக வாயில் போட்டுக்கொண்டேன்.

மழை அந்த இரவு முழுக்க நிற்காமல் கொட்டித் தீர்த்தது. பலத்த இடிச்சத்தங்களாலும் புது இடம் என்பதாலும் மேலும் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றாலே உருவெடுத்துப் பெருகிய துர்சொப்பனங்களாலும் அந்த இரவு எனக்கு அத்தனை ஓய்வானதாக அமையவில்லை.

மழையின் காரணமாக மறுநாள் காலை பொழுதை நாங்கள் தங்குமிடத்திலேயே கழிக்கும் நிலை ஏற்பட்டது. அது எனக்குக் கடுகளவு ஆறுதலை வழங்குவதாகப் பட்டது. ஆனால், மதியத்திற்கு மேல் வானிலை தெளிவடையத் துவங்கியதால் அனைவரும் வேகவேகமாக அந்தப் பழங்காலத்து பிரிட்டிஷ் கட்டுமானத்தைப் பார்வையிட ஆயத்தமானார்கள். அறிவியல் அருங்காட்சியகம் செல்லும் திட்டம் வேறு வழியின்றிக் கைவிடப்பட்டிருந்தது.

அந்தப் பழமைவாய்ந்த பிரிட்டிஷ் கட்டுமானத்தை அடைய மலைப்பாதையைச் சுற்றி மேலும் சில கிலோமீட்டர்கள் பயணம்செய்ய வேண்டியிருந்தது. இரவெல்லாம் வீசிய சூறைக்காற்றின் காரணமாகச் சாலையோரம் செறிந்திருந்த மரங்கள் பல அதன் கிளைகளை இழந்திருந்தன. அவை அந்தச் சாலை நெடுக சிதறிக்கிடப்பதைக் காண ஏனோ நடுக்கமாக இருந்தது. தூரம் செல்லச் செல்ல பாதைகளில் ஒருசில இடங்களில் சிறிய மரங்கள் சரிந்திருப்பதையும் மலையில் இருந்து பாறைகள் சில ஓரங்களில் விழுந்து உடைபட்டுக் கிடப்பதையும் காணமுடிந்தது. துள்ளிக் குதித்துக் குதூகலம் அனுபவித்துக்கொண்டிருந்த குரங்குகள் எங்கே முடங்கி நடுங்கிக்கொண்டிருக்கின்றன எனத் தெரியவில்லை. மூடாக்கான அந்தப் பாதையே வெறிச்சோடி இருந்தது.

நீண்ட நேரமாக இறங்குமுகமாகச் சென்றுகொண்டிருந்த சாலை திடீரென செங்குத்தாக ஏறத்துவங்கியது. அக்கணம் வரை ஓரளவிற்கு அமைதியாக வந்த மாணவர்கள் திடீரென அச்சத்தில் கூச்சலிடத் துவங்கினார்கள். முன்னே சென்றுகொண்டிருந்த ஜீப்பில் இருந்து ஒருசில தலைகள் வெளியே நீண்டு வாந்தியெடுப்பதைக் காணமுடிந்தது.

பிரசித்தி பெற்ற அந்த பிரிட்டிஷ் காலத்துக் கட்டுமானம் அந்த மேட்டின் உச்சத்தில் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. பார்ப்பதற்குப் பேய் படங்களில் வரும் பங்களாவை நினைவூட்டிய அந்தக் கட்டிடத்தைச் சுற்றி மிகவும் உயரமான தடுப்புச்சுவர் எழுப்பப் பட்டிருந்தது. இரண்டு ஆள் உயரம் இருந்த வாயிற்கதவைக் கடந்து ஜீப்புகள் ஒன்றின்பின் ஒன்றாக உள்ளே நுழையும்போது எங்கெங்கோ பதுங்கியிருந்த பட்சிகள் பல கூக்குரல் எழுப்பியபடி சிதறிப் பறந்தன.

கட்டிடத்தின் முற்றம்போல் அமைந்திருந்த பகுதியில் எங்கள் வாகனங்கள் வட்டமாக நிறுத்தப்பட்டதும் வாயிற்கதவை அடைத்துவிட்டு காவலர் சீருடை அணிந்த ஒருவர் எங்கள் அருகே வந்து சிவசுந்தர் சாருடன் கைகுலுக்கினார். அவர் அருகே நின்ற சரோஜினி டீச்சருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுப் பொதுவாக மழைநேரத்தில் இந்த இடத்திற்கு எவரையும் அனுமதிப்பதில்லை என்றும் பள்ளிக்கூட உரிமையாளர் கேட்டுக் கொண்டதனாலும் தொலைதூரத்தில் இருந்து சிறுவர் சிறுமியர் வந்திருக்கின்றனர் என்பதாலும் மட்டுமே சிறப்பனுமதி தந்திருப்பதாகச் சொல்லிவிட்டு அழகாகச் சிரித்தார்.

பிறகு அவரது அறிவுறுத்தலின் பெயரில் நாங்கள் அனைவரும் ஒழுங்கானதோர் வட்டமாக அவரைச் சுற்றி நின்றுகொண்டோம். உற்சாகம் மிகுந்த, அதே வேளையில் மிகவும் திருத்தமாக ஒலித்தக் குரலில் பேசத் துவங்கியவர் இந்தக் கட்டுமானம் பிரிட்டிஷ் காலத்தில் ஒரு சிறைச்சாலையாக விளங்கியது என்றும் இந்தியர்கள் மட்டுமல்லாமல் பலதரப்பட்ட போர்களின் மூலமாகக் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த பிணைக்கைதிகள் இதனுள் அடைபட்டிருந்ததற்குத் தக்க சான்றுகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு இதனை ஒரு அருங்காட்சியகமாக மாற்றி, இவ்வூரைச் சார்ந்த விடுதலை வீரர்கள் மற்றும் இங்கே வாழ்ந்த பிரிட்டிஷ் கவர்னர்கள், அதற்கு முன்பாக இங்கே செல்வச் செழிப்புடன் திகழ்ந்த நிலக்கிழார்கள் மற்றும் பிற செல்வந்தர்கள் உபயோகப்படுத்திய, அந்தக் காலத்திற்கே உரித்தான பல்வேறு பொருட்கள் இங்கே சேகரிக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன என்று சொன்னார்.

பேசுவதை நிறுத்திவிட்டு தனது கைக்கடிகாரத்தை ஒருசில நொடிகளுக்குப் பார்வையிட்டவர், “போலாமா சார்?” என்று சிவசுந்தர் சாரைப் பார்த்து கேட்டார்.

அவர் தலையசைத்ததும் நாங்கள் அந்தக் கட்டிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அந்த முற்றம் நெடுக வியாபித்திருந்த செடி, கொடிகளும் கவர்ச்சிகரமான மலர்களை ஏந்தி நின்ற மரங்களும் அதற்கு மெருகேற்றும் விதத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு ஒளிவேலைப்பாடுகள் கொண்ட நீரூற்றுகளும் அந்த இடத்தின் இருண்ட வரலாற்றை மாற்றியெழுதும் முனைப்பில் இருந்தன.

நேர்த்தியான மரவேலைப்பாடுகளுடன் திடமாக இருந்த கதவுகளைக் கடந்து எங்களை உள்ளே அழைத்துச் சென்ற காவலர் ஒவ்வொரு அறையாகச் சுட்டிக்காட்டி அந்த இடத்தின் வரலாற்றைச் சிறு சிறு துணுக்குகளாகச் சொல்லிச் சென்றார். நீளமாக இருந்த அந்த இருண்ட தாழ்வாரம் நெடுக சிறிய கண்ணாடிப் பேழைகளினுள் அடுக்கப்பட்டிருந்த பழங்காலத்தைச் சார்ந்த பொருட்கள் மாணவர்களுக்கு அத்தனை உவப்பூட்டுவதாக இருக்கவில்லை. அந்தக் காலத்தில் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் ஒன்றிரண்டு படைக்கலன்கள் கூட விநோதமாகவே இருந்தது.

கட்டிடத்தின் மையத்தில் இருந்த முற்றப்பகுதியில் அந்த இடத்தைக் கண்காணித்து வந்த ஆங்கிலேய அதிகாரி தனது கைப்பட வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதனைக் கடந்து பக்கவாட்டு இணைப்பாக நீண்டு சென்ற குறுகிய பாதை வழியாகச் சென்றபோது அங்கே சின்னஞ்சிறு கூடுகளைப்போல வரிசையாக அமைக்கப்பட்டிருந்த சிறைகளை நாங்கள் வந்தடைந்தோம். கட்டமைப்பில் அவை அனைத்தும் ஒன்றுபோலவே தோன்றினாலும் அவற்றின் உட்புறங்களில் உழன்ற காற்றுக்கு வெவ்வேறு வாசம் மற்றும் எடை இருப்பதாகப் பட்டது.

அங்கே ஒருகாலத்தில் அடைபட்டுக் கிடந்த கைதிகள் சிலரைப் பற்றிய சுவாரசியமான தகவல்களையும் இந்தச் சிறையில் கடைப்பிடிக்கப்பட்ட நியமங்களையும் பரிமாறப்பட்ட உணவு வகைகளையும் அளிக்கப்பட்ட தண்டனைகளையும் பற்றி அந்த ஆங்கிலேய அதிகாரியின் தனிப்பட்ட நாட்குறிப்புகளின் மூலமாகத் தான் அறிந்துகொண்ட தகவல்களைச் சொல்லியபடியே சென்றார் காவலர்.

ஒடுக்கமாக இருந்த அந்தத் தாழ்வாரத்தின் கடைக்கோடியில் இருந்த மிகவும் சிறிய அறையைத் திறந்துகாட்டிய காவலர் அதனைத் தனிமைச் சிறை என்று அழைத்தார். நியமங்களுக்கு அடங்காத கைதிகள் தாங்கள் இயற்றிய குற்றச்செயலின் தீவிரத்திற்கு ஏற்றாற்போல் வழங்கப்படும் தண்டனைக்காலத்தை அதனுள் கழிப்பார்கள் எனவும் நிமிர்ந்து நிற்கவோ நீட்டிப் படுக்கவோ முடியாத அந்தச் சிறிய அறையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அடைபட்டுக் கிடப்பவர்களுக்குச் சித்தம் பிறழாமல் இருப்பது அபூர்வம் எனவும் தெரிவித்தார்.

ஏதோ ஒரு வழக்கிற்காக இந்தத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதியே இந்த இடத்தைக் கண்காணித்து வந்த ஆங்கிலேய அதிகாரியைக் கொன்றான் எனவும் அவனது அந்த மூர்க்கத்திற்குக் காரணம் அவனது புத்தி பேதலிப்பா அல்லது தேசப்பற்றா என்று எவராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது எனவும் ஆனால், அவன் ஒரு சாராரால் தற்போது சுதந்திரப் போராட்டத் தியாகியாகப் போற்றப்படுகிறான் எனவும் அவனுக்கென்று பிரத்யேகமாக ஒரு மணிமண்டபத்தை உருவாக்க அவர்கள் அரசாங்கத்தை முறையிடுவதாகவும் சொன்னார்.

கட்டிடத்தின் பின்புறத்தில் ஒரு காலத்தில் குதிரை லாயமாக இருந்த, தற்போது மூலிகைச் செடிகள் வளர்க்கப்படும் தோட்டமாக உருமாறிவிட்டிருந்த இடத்தைப் பார்வையிட்ட பின்னர் நாங்கள் அனைவரும் மீண்டும் உள்ளே வந்தோம். காவலர் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்திருந்த தேநீரும் பட்டர் பிஸ்கட்டுகளும் பரிமாறப்பட்டது.

மாணவர்கள் ஜோடி ஜோடியாக ஒவ்வொரு சிறையின் வாசலிலும் அமர்ந்துகொண்டு பேசிச் சிரித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நான் ஒவ்வொரு அறையாகக் கடந்து கடைசியில் இருந்த தனிமைச் சிறை நோக்கி நகர்ந்தேன். அங்கே சரோஜினி டீச்சர் மாலாவுடன் அமர்ந்திருந்ததால், நான் அப்படியே உறைந்து நின்று செய்வதறியாமல் தவித்தேன். அவக் அவக் என பிஸ்கட்டை மென்று மாவாக்கி உண்டுக் கொண்டிருந்த மாலா சட்டென என் பக்கம் பார்த்து புன்முறுவல் செய்ததும் டீச்சரும் நிமிர்ந்து என்னை நோக்கினார். நான் இடமில்லாமல் நிற்பதை அறிந்து என்னைத் தன்னருகே வந்து அமர்ந்துகொள்ளும்படி சைகை காண்பித்தார்.

நான் தயங்கித் தயங்கி நடந்து அவர் அருகே இருந்த சிறிய படிபோன்ற அமைப்பில் உட்கார்ந்துகொண்டேன். எனது பிடரியை லேசாக வருடிக்கொடுத்த டீச்சர் நான் கையில் வைத்திருந்த பிஸ்கட்டை சாப்பிடும்படி என்னை அறிவுறுத்தினார்.

ஆனால், சூடான அந்தத் தேநீரும் பிஸ்கட்டும் ஏனோ எனக்குக் குமட்டலை உண்டாக்கின. அதனை உட்கொண்டால் நிச்சயம் வாந்தியெடுத்து விடுவேன் என்று தோன்றியது. திரும்பும் வழியில் மீண்டும் அந்தச் சாலையில் செங்குத்தாக இறங்கி பின் ஏறுவதைக் கற்பனை செய்தபோது அக்கணமே வயிற்றை என்னமோ செய்தது.

டீச்சர் மாலாவிடம் எதையோ பேசிக்கொண்டிருந்தார்.

நான் மெதுவாக எழுந்துகொண்டு அவருக்குப் பின்புறமாக நடந்தேன். டீச்சர் சொல்வதை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்த மாலா வெடுக்கென என் பக்கம் பார்த்ததும் ஏனோ எனது உடல் அதிர்ந்து நடை பிறழ்ந்து வலது பாதம் மடங்கிக்கொண்டது. நகத்தை இழந்திருந்த கட்டைவிரல் சொரசொரப்பான அந்தத் தரையோடு உரசியதும் உடலே தீப்பற்றி எரிவதைப் போல் இருந்தது. நொடிப்பொழுதில் கண்கள் இரண்டும் கலங்கிப் போயின. நான் ஓசையெதுவும் எழுப்பியிருக்கவில்லை என்றாலும் அங்கிருந்தவர்களில் முக்கால் பங்கு நபர்கள் என் பக்கம் திரும்பியிருந்தனர்.

நான் எனது தேநீர் கோப்பையைக் கெட்டியாகப் பற்றியபடி அந்தத் தனிமைச் சிறையினுள் நுழைந்து தரையில் அமர்ந்துகொண்டு வாய்பிளந்து, சப்தமெழுப்பாமல் அழுதேன். ஆனால், இரண்டே நொடிகள் அந்த இடத்தின் சாரத்தை உணர்ந்து அஞ்சிப் பதற ஆரம்பித்தேன். எனது நெஞ்சில் இருந்து கிளர்ந்தெழுந்த மெல்லிய விசும்பல்கள் அங்குள்ள சுவர்களில் பட்டு எதிரொலித்து விசித்திரமான ஓசைகளாக என்னிடமே திரும்பியது. நான் எழுந்து ஓடிவிட விழைந்தேன். ஆனால், எனது வலது பாதம் முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டதைப் போல் மாயம் காட்டியது.

திடீரென எனது இடது செவிமடல் அருகே ஏதோ ஓசை கேட்டது. அடிவயிற்றில் பீதி கிளம்பி, சிறுநீர் சொட்டுகள் இரண்டு வெளிக்கசிந்துவிட கண்களைச் சிப்பென்று மூடிக்கொண்டேன்.

அடுத்த சில வினாடிகளில் அவ்வோசை மேலும் மேலுமென வலுவடைந்தது. காதருகே அமர்ந்துகொண்டு எவரோ பலமாக முத்தமிடுவதைப் போன்ற சத்தம். “சிப்! சிப்!” என்ற அந்தச் சத்தம் பல்வேறு எதிரொலிகளாகப் பெருகி என்னை வந்து மோதின. ஒருகணம் எனது உடலெங்கும் நூற்றுக்கணக்கான முத்தங்கள் பதிந்ததைப்போல் பிரமை எழ, “ஆ!” என்று கூச்சலிட்டபடி கண்களைத் திறந்தேன்.

பக்கவாட்டில் இருந்த சுவரில் தடித்த சாம்பல்நிற பல்லி ஒன்று நின்றுகொண்டிருந்தது. ஒருகணம் மனம் தளர்ந்தேன். மறுகணம் அந்தப் பல்லி ஒரே பாய்ச்சலில் எனது நெற்றிமேல் விழுந்தது.

“அம்மா!!” என அலறியபடி குப்புற விழுந்து வெளியே பாய்ந்தேன். மனப்பிறழ்வுக்கு உள்ளானவனைப் போல எனது சட்டையைக் கிழித்துக்கொண்டு மேலெல்லாம் அறைந்துகொண்டேன். “பல்லி! பல்லி!” என்று உச்சக்குரலில் கத்தினேன். டீச்சர் மற்றும் பிற மாணவர்கள் என்னைக் கட்டுப்படுத்த செய்த முயற்சிகள் அனைத்தும் பொய்த்துப்போயின. வெறிகொண்டவனாக எனது உடலை உதறிக்கொண்டே இருந்தேன். ஒருகட்டத்தில் எனதிந்த செயல் எத்தனை அபத்தமானது என்பதை உணர ஆரம்பித்தேன். ஆனால், அது எனது உக்கிரத்தை மேலும் அதிகப்படுத்தியது.

சிவசுந்தர் சார், அரவிந்தன், காவலர் எனக் கூடுதலாக ஆறு கரங்கள் என்னைப் பற்றி அழுத்தியபோது அந்த விசைக்குக் கட்டுப்படுவதைத் தவிர வழி இல்லாமல் போனது. தீவிரமாக மூச்சிரைத்துக் கொண்டிருக்க, ஒருகணம் சிரம் தாழ்த்திக் கொண்டேன். தொலைவில் எவரோ சிரிப்பதைப்போல் இருந்ததும் மெதுவாக நிமிர்ந்தேன். தாழ்வாரம் நெடுக வரிசையாக நின்றுகொண்டிருந்த மாணவ, மாணவிகள் அனைவரும் ஒருவித எள்ளலுடன் என்னை நோக்கிக் கொண்டிருந்தனர். ஓரவிழியால் நோக்கியபோது எனது தோள்களைப் பற்றியிருந்த அரவிந்தனின் முகத்தில் அருவருக்கத்தக்க முறுவல் ஒன்று மலர்ந்திருந்தது.

எனது பற்கள் கிட்டித்துக்கொண்டன. வாயை ஒரு முதலையைப் போல் பிளந்து மிகவும் கோரமாகக் கூச்சலிட்டேன். லேசாய் நடுக்குற்ற அரவிந்தன் தனது பிடியைக் கொஞ்சம் தளர்த்தியதும் சட்டென அவர்களிடம் இருந்து நழுவிக்கொண்டு அதே உக்கிரத்துடன் கத்திக்கொண்டே முன்னோக்கிப் பாய்ந்தேன்.

சித்தம், விழிகள் என அனைத்தும் ஒருகணம் குருடாகிப் போயிருந்தன. நான் விழுந்து எழுந்தபோது என் அருகே மாலா நின்றுக் கொண்டிருந்தாள். அவளது அழுக்கடைந்த நாசியில் இருந்து சளி கசிந்துகொண்டிருந்தது. ஒரே பாய்ச்சலில் அவளது ஒற்றை ஜடையைப் பற்றியிழுத்து அவளைக் கீழே தள்ளினேன். இடதுகாலால் அவளது தோள்பட்டையில் ஓங்கி உதைத்தேன். அக்கணம் வரை பதற்றத்துடன் ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்த சரோஜினி டீச்சர் என்னை நோக்கி ஓடிவந்து எனது பிடரியில் படாரென அறைந்தார். நான் ஒருநொடி ஸ்தம்பித்தேன். பின்னர் ஒன்றும் சொல்லாமல் பின்னந்தலையைப் பொத்தியபடி அப்படியே சுவரில் சாய்ந்து கொண்டேன்.

முகமெல்லாம் அழுகையில் நனைந்தபடி, துயரத்தில் உடல் குலுங்க எழுந்துகொண்ட மாலா தத்தித் தத்தி நடந்து டீச்சரின் பின்னால் மறைந்துகொண்டாள். அவள் விழுந்துகிடந்த இடத்தில் மடிந்துகிடந்த பச்சிளம் புற்களுக்கு இடையே ஒரு வண்ணத்துப்பூச்சி நசுங்கிக் கிடந்தது.

***

மலையின் உச்சியில் துவங்கி ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவையும் கடந்து தரைநோக்கி இறங்கிவந்த எங்களது பள்ளிக்கூடத்தின் வேன் மிகுந்த மௌனத்தைப் போர்த்தியிருந்தது. நான் அமர்ந்திருந்த கடைக்கோடி இருக்கையில் என்னைத் தவிர எவரும் அமர்ந்திருக்கவில்லை.

வேனின் முன்னிருக்கையில் மாலா, சரோஜினி டீச்சரின் தோள்மேல் சாய்ந்து அமர்ந்திருந்தாள். மாணவ, மாணவிகளில் சிலர் அவ்வப்போது அவளை அணுகிச் சென்று நலம் விசாரித்துவிட்டு மீண்டனர். அரவிந்தன் கூட இரண்டொரு தரம் அவளுக்குத் தன்னிடம் இருந்த உணவுப் பதார்த்தங்களை வழங்கிவிட்டு திரும்பினான்.

ஊர் திரும்பிய அந்த இரவிலேயே எனக்கு ஜுரம் வந்தது. இரண்டாவது நாள் ஜுரம் மிகவும் உக்கிரமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மூன்று நாட்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி மேலும் இரண்டு நாட்கள் ஓய்விற்குப் பிறகு வகுப்புக்குத் திரும்பியபோது அங்கே அனைத்தும் மாறிவிட்டதைப்போல் தோன்றியது. அதே முகங்கள், அதே இருக்கைகள், அதே வகுப்பு ஆனால் அனைத்தின் மீதும் ஏதோ விசித்திரம் படிந்துவிட்டதைப்போல் இருந்தது.

நான் எவரிடமும் பேசாமல், வகுப்பில் எனது வழக்கத்திற்கு முரணாகக் கடைசி இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டேன். முதல் வகுப்பைத் தொடங்கும் பொருட்டு தமிழ் ஆசிரியை அருள்மொழி உள்ளே நுழைந்ததும் நான் ஒருவித மலர்ச்சியுடன் எழுந்து நின்றேன். சுற்றுலா செல்வதற்கு முன்பாக எடுக்கப்பட்ட பாடத்தைக் குறித்த கேள்வி எழுந்தபோது நான் பழக்கதோஷத்தில் எனது நோட்டை கையிலெடுத்தபடி நிமிர்ந்தேன். ஆனால் அவர் என் பக்கம் ஏறெடுத்துக்கூட நோக்காமல் வேதராஜின் நோட்டை வாங்கிப் புரட்டிக்கொண்டிருந்தார்.

நான் நெடுமூச்செறிந்தபடி எனது இருக்கையில் சாய்ந்துகொண்டேன். எனது இதழ்கள் கட்டுப்பாடில்லாமல் நடுங்கிக் கொண்டிருந்தன. வெட்டப்படாமல் வளர்ந்திருந்த எனது கூர்மையான நகங்கள் மேசைப்பரப்பில் கோடுகள் கீச்சின. ஒருகணம் அனைத்து ஓசைகளும் முற்றாக ஓய்ந்ததைப்போல் கடும் நிசப்தம் என்னைச் சூழ்ந்தது. பிறகு செய்வதறியாமல் இடக்கையோரம் கிடந்த நோட்டை பக்கவாட்டில் வைத்திருந்த எனது தோள்பையினுள் நுழைத்தேன். மென்மையான துணியினால் ஆன அந்தப் பையின் உட்புறம் மிகவும் குளிராக இருந்தது. பார்வையைக் கொஞ்சம் தாழ்த்தி நோக்கியபோது பையின் இருண்ட ஆழத்தினுள் சாம்பல்நிற பல்லி ஒன்று நின்றுக் கொண்டிருப்பதைக் கண்டேன்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button