இணைய இதழ் 126

  • Aug- 2026 -
    26 August

    ஜனநாயகன் பிம்பச்சிறை 2.0 – ர. முகமது இல்யாஸ் ; நூல் அறிமுகம்: பீட்டர் துரைராஜ்

    நடிகர் விஜய், அரசியல்வாதியாகி இருக்கிறார். தமிழ்நாட்டில்  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற திரைநட்சத்திரங்கள் முதலமைச்சர்களாக அதிகாரத்திற்கு வந்துள்ளனர். விஜயும் முதலமைச்சர் ஆசையில்  இருக்கிறார். கரூரில், கடந்த செப்டம்பரில் ஏழு குழந்தைகள் உட்பட 41  பேர், அவரைக் காண வந்த நெரிசலில் மரித்துப் போனார்கள். விஜயைச் சுற்றி எத்தகைய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது, அதன் அரசியல் என்ன என்று இந்த நூலில் விவாதிக்கிறார் திரை ஆய்வாளரான ர. முகமது இல்யாஸ்.  விகடனில் பத்திரிகையாளராக இருந்த ர.முகமது இல்யாஸ் ஓர் ஆய்வு மாணவர். பெயரை மாற்றி கட்டுரை எழுத மறுத்து குரல் எழுப்பியவர். அவர் எழுதிய ‘ஜனநாயகன் பிம்பச்சிறை 2.0’ என்ற  நூல் புத்தகக் கண்காட்சியின் போது வெளிவந்துள்ளது. உடனே வாசித்தும் விட்டேன். சுவாரசியமாக உள்ளது. உணர்ச்சி கடந்து, அறிவுத்தளத்தில்  விவாதிக்க வேண்டிய பல புள்ளிகளை இந்த நூல் காட்டுகிறது.  மறைந்த ஆய்வாளரான எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ‘ பிம்பச்சிறை எம்.ஜி.ஆர். திரையிலும், அரசியலிலும்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். அதன் தாக்கத்தில், இந்த நூலுக்கான  பெயர் வைக்கப்பட்டுள்ளது. திரை நட்சத்திரங்களோடு, தொடர்புள்ள பல சம்பவங்களுக்குத் தத்துவ விளக்கம் கொடுக்கிறார் இல்யாஸ். நமக்கு வரும் செய்திகளை ஒரு குடிமகனாக எப்படிப் பார்க்க வேண்டும் என்று குறிப்புகளைத் தருகிறார். புகழ்பெற்ற ஒருவரின் நடவடிக்கைகளில் மறைபொருளாக இருக்கும் செய்திகளை நமது கவனத்திற்குக் கொண்டுவருகிறார். விஜய் நடித்த படங்கள், ரஜினி, அமிதாப், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற நட்சத்திரங்கள் ஊடாக தன்னுடைய வாதங்களை நம் முன்  வைக்கிறார்.  இந்த நூல் விஜயை நடிகராகவும் அரசியல்வாதியாகவும் ஊடகப் பிரதியாகவும் அணுகுகிறது.  ‘எம்ஜி.ஆரின் ஆட்சிக்காலம் ஓர் இருண்டகாலம்’ என்பதை நினைவுபடுத்தும் இந்த நூல், விஜயிடமும் இத்தகைய கூறுகள் உள்ளன என்று  சொல்லுகிறது. ‘விஜயிடம் எந்த விவகாரம் குறித்தும் தெளிவாக வெளிப்படாத நிலைப்பாடுகளின் வழியாக, தொண்டர்கள் அவர்மீதான கற்பனையைத் தங்கள் உணர்ச்சியின் வழியாக தாங்களே கட்டமைத்துக்கொள்கின்றனர்’, என்கிறார். ‘குடிமக்களின் இறையாண்மை மக்களின் கனவாகவே இருந்துவிட்ட நிலையில், மொழி, அடையாளம், அதிகாரம் முதலானவற்றின் ஊடாக தென்னிந்தியாவில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், அதில் வெற்றிபெறுவதும் இயல்பானது’ என்று திரை ஆய்வாளர் மாதவ பிரசாத் சொல்வதைச் சுட்டிக்காட்டுகிறார்.  நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த விஜயை, சென்னை வரவழைத்து 24 மணிநேரம் வருமானவரித்துறை விசாரணை நடத்தியபிறகு, அவர் வெளியிட்ட செல்ஃபி அந்த ஆண்டில் ட்விட்டரில் அதிகமாகப் பகிரப்பட்ட படமாகும். எனவே விஜயைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.  ஊழலை எதிர்ப்பதைத் தவிர அரசியல் நிலைப்பாடுகள் என்று ஒன்றில்லை என்பதை ரஜினியின் திரைப்படங்கள் முன்வைத்தன. வெகுமக்களிடம் ரஜினியின் இந்து தேசிய ஆதரவு செல்லுபடியாகவில்லை. திராவிட அரசியலை ‘அம்மா’ என்ற உருவகத்தால் நீர்த்துப்போகச் செய்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரும் அவரைப்பற்றி வெகுமக்களிடம் உருவாகியுள்ள ‘அனுதாபமான’  பிம்பத்தை விமர்சனம் செய்யாமல் திமுக இருக்கிறது என்கிறார் இல்யாஸ்.  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினி போன்றோர் பயணித்தவாறே விஜயின் பயணமும் உள்ளது என்கிறார் ஆசிரியர். விஜயின் பிம்பம் கட்டமைக்கப்பட்ட ஒன்று. ‘பாதுகாவலன், சகோதரன், தலைவன்’  முதலான பிம்பங்கள் ஒரே நாளில் உருவானவை அல்ல. இந்திப்படங்களில் கோபக்கார இளைஞனாக ‘விஜய்’  என்ற பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். இந்தப் பெயரையே,  அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் அவருக்குச்  சூட்டியிருக்கக்கூடும். நடிகர் விஜயகாந்தின் படங்களில் அவரது தம்பியாக, சிறுவயது விஜயகாந்தாக நடித்தார். ஊடகங்கள் செய்தியைத் தருவதைத் தாண்டி, அவற்றை உருவாக்கவும் செய்கின்றன.டேனியல் டயான் சொல்லும் News Event  என்பதை, கரூர் சம்பவங்களைக் கொண்டு விவரிக்கிறார். 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு விஜய் பொதுவெளியில் தலைகாட்டுவதைக் குறைத்துக்கொண்டார். டிஜிட்டல்  வெளியில் இருந்து விலக்கிக் கொண்டார். அவரைப் பார்க்க வேண்டும் என்றால்  அவருடைய திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இல்யாஸ் விஜயை, அனுதாபத்தோடு பார்க்கிறார். ‘தமிழ்ச் சமூகத்தின் கடந்த காலப் பெருமிதம், சமகால நெருக்கடி, எதிர்காலக் கனவு, பதற்றம் முதலானவற்றை வெளிப்படுத்தும் தொன்மமாக விஜய் இயங்குகிறார்’ என்கிறார் ஆசிரியர். ‘வெகுமக்களின் அன்றாடப் பிரச்சனைகளைப் பொறுப்போடு உரையாடத் தொடங்க வேண்டும். தானம் செய்வது அரசியல் செயல்பாடு அல்ல என்பதைத் தொண்டர்களுக்கு உணர்த்த வேண்டும்’ என்கிறார். இந்த நூலை ‘சீர்மைப் பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. 180 பக்கம். விலை ரூ. 240. ஆழமான அணிந்துரையும் உள்ளது. (சமீபத்திய திருப்பரங்குன்றம்  விஷயத்தில்கூட அவர் கருத்து சொல்லவில்லை). உதயநிதி ஸ்டாலினும் விஜயும் ‘பெரியாரின் பேரனாக’ பேசப்படுவது கண்டு மகிழ்கிறார் ஆசிரியர். இருவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்கிறார். இளைஞர்களையும் குடும்ப ரசிகர்களையும் ஒருங்கிணைத்த விஜயின் படங்கள், கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, மதுர போன்ற படங்களின் மூலம் கிராமங்களையும் நகரங்களையும்  ஒருசேர ஈர்க்கும் கதைக்களங்களைக் கொண்டவை. நவதாராளவாத உலகத்தின் இளைஞனாக வலம் வரும் விஜய் காதல், பெண்கள், கற்பு என்ற முதலான பழமைவாத சிந்தனைகள் மூலமாக முரண்பட்ட நாயகனாகவும் உள்ளார். அவருடைய திரைப்படங்கள் அவரை கலகக்காரனாகவோ, சமூகப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வையோ முன்வைக்கவில்லை.  இந்த நிலையில் திராவிட அரசியலும் இந்த நூலில் விமர்சிக்கப்படுகிறது. உதயநிதி, ஆ.ராசா, பொன்முடி ஆகியோர்மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்கொள்ளும் செயற்திட்டம் இன்றைய திமுகவில் இல்லை. இசுலாமியச் சமூகத்தினருக்கும் அந்தக் கட்சிக்கும் இடையிலான பாலமாக திமுகவில் இன்று யாரும் இல்லை. இசுலாமிய வெறுப்பை வைத்து அரசியல் செய்யும் இந்தச் சூழலில் தவெகவிற்கும் திமுகவிற்கும் இடையில் உள்ள முரண்களை நட்பு முரண்களாகக் கருத வேண்டும் என்கிறார்.  வெகுமக்களின் வேலை  வாக்கு அளிப்பதோடு முடிவடைந்து விடுவதில்லை. சாதி ஒழிப்புக்கும் பதிலாகச் சாதி மேலாண்மை, நாயக வழிபாடு போன்றவை குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்கிறார். ர.முகமது இல்யாஸ், ‘இந்துத் தேசியம் இந்தியச் சினிமா’ என்ற காத்திரமான நூலை எழுதியவர். Read between lines என்ற இணையத்தையும் நடத்தி வருகிறார். நூலின் முதல் பக்கத்தில் மேற்கோளாக உள்ள, அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் பேசிய வசனத்தோடு,  இதனை முடிக்கத் தோன்றுகிறது. “அரசியலில் நாயக வழிபாடும் பக்தியும் நிச்சயமாகச் சீரழிவுக்கான பாதையாகவும், தொடர்ந்து சர்வாதிகாரத்திற்கான பாதையாகவும் இருக்கின்றன” பிகு: விஜயின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய தஞ்சாவூர் விக்னேஷ், உயிருக்குப் போராடி மரணமடைந்த நாளன்று எழுதியது. 

    மேலும் வாசிக்க
  • 26 August

    லோக் நாயக்’ ஜெயபிரகாஷ் நாராயண் – ஆர் பட்டாபிராமன்; நூலறிமுகம்: அக்களூர் இரவி

    ஜெயபிரகாஷ் நாராயண் குறித்த  முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் தமிழில் ஒன்றிரண்டுதான். இல்லை எனவும் கூறலாம். தமிழறிஞர், காந்தியவாதி தமிழருவி மணியன் ‘மனிதப் புனிதர் ஜெயபிரகாஷ் நாராயண்’ என்றொரு குறுநூலை ஆக்கியுள்ளார்.  பெரும் வாசிப்பாளரும், இந்தியச் சிந்தனை மரபு குறித்தும், மார்க்ஸ், காந்தி,…

    மேலும் வாசிக்க
  • 26 August

    குறுங்கதை- இத்ரீஸ் யாக்கூப்

    அவர் என் அப்பா  அந்திக் குன்றாய் அவள் உடலிலும் உடையிலும் செம்மை அப்பியிருந்தது. இந்த வீட்டிற்கு மாறிய பின்னும் புதிதாக எதுவும் உண்டா என்ன? மாடி விளக்கைப் போட வந்தவள் அங்கேயே காற்றுக்கு விடை கொடுத்த மரமாய் நின்றுவிட்டாள். “என்ன ரேகா உங்க வீட்டுக்கு இன்னைக்கு விருந்தாடி யாரோ வந்திருந்தாங்க போல?” காணும்…

    மேலும் வாசிக்க
  • 26 August

    குறுங்கதை – காந்தி முருகன்

    நொறுங்குண்ட சதை அகலம் குறைவில் நீளமான கண்ணாடியது. இந்த உயர் ரகக் குடியிருப்பில் மிகச் சிறிய அறையில் கண்ணாடியும் ஒரு மேஜையும் மட்டுமே உள்ளன. மேஜையில் கூர்மையான  ஒரு பொருள், முனை மட்டும் துணியால் சுற்றப்பட்டுக் கிடந்தது. கண்ணாடி முன் நிற்கிறாள் அர்ஷா, நிர்வாணமாக. சில நிமிடங்கள் அல்ல. சில மணி நேரங்கள். அவளது முகத்தில் சோர்வுக்கான தடயங்கள் இல்லை. தன் வெற்றுடலை வெறிச்சோடிப் பார்க்கிறாள்.  இந்த உடல்‌ அருவருக்கத்தக்க ஒன்றாக இருப்பதாக உணர்கிறாள்.  நாற்பத்து ஐந்திலும் கட்டுக்கோப்பான உடலது. கூடுதலற்ற சதைகள் இல்லை. வயிறு தட்டையாகக் கொழுப்பின்றி உள்ளது. தோள் பட்டை கம்பீரமாக உள்ளது. தன்னை முழுவதுமாகப் பார்க்கிறாள், பல கோணங்களில். அவளுக்குச் சலிப்பு ஏற்படவே இல்லை. கண்களில் ஓரம் வழிந்த நீர்த்துளிகளைத் துடைத்திட முனையவில்லை. அவை சிறு கோடுகளாய்  மார்பைக் கடந்து போய்க்கொண்டிருந்தன. அழகான இந்த உடலை எதனோடு ஒப்பிட்டு வர்ணித்தாலும் அனைத்துக் காட்சிப் பிழைகளாகவே கடந்து விடுகின்றன.  கூர்மையான அந்தப் பொருளைக் கையில் எடுக்கிறாள். இந்த உடலுக்கான தேவை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அத்தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத்  திருமணப் பந்தத்தில் இணைய வாய்ப்பில்லாமல் போகும் வேளையில் உடலுக்கான பந்தத்தை மட்டும் நிகழ்த்திக்கொள்ள உறவுகளின் பெயரில் உரிமைகள் நிகழ்கின்றன. சில உரிமைகள் தடுக்கப்பட முடிகின்றன. சில உரிமைகள் தவிர்த்தல் என்பதனை சாகடித்துவிடுகின்றன.  உடலுக்கான தேவை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்தத் தேவையைத் தீர்க்கப் பல கட்டுப்பாடுகள், பல கட்டமைப்புகள் உடனிருந்து  வளர்ந்துவிட்டன. எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என்கிறபோது உடலுக்கான தேவையை மட்டும் எளிதில் பூர்த்தி செய்ய முடிவதில்லை, தனிமையில்.

    மேலும் வாசிக்க
  • 26 August

    அதிதி – மா. அண்ணாமலை

    அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். முகச் சவரம் செய்து ஒரு வாரமாகிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி வழக்கமாக முகச்சவரம் செய்யும் குமார் சலூன் கடைக்குச் சென்றேன். கடையின் பெயர் பலகையின் மேலே, ஸ்ரீ மூகாம்பிகை துணை என்று எழுதியிருந்தது. அது இன்றுதான்…

    மேலும் வாசிக்க
  • 26 August

    பிதிர் – ப்ரிம்யா கிராஸ்வின்

    பள்ளிப் பிள்ளைகள் குழு பயிற்சியின்போது கைதட்டுவதைப்போல, எப்போதும் ஒரே சீராக அலையடித்துக்கொண்டு கிடக்கும் அவர்களின் கடல், அன்று வழக்கத்துக்கு மாறாக ஒரு பசிகொண்ட வேட்டை விலங்கினைப்போல உறுமிக் கொண்டுகிடந்தது. வெலங்க வெடித்துக் கிளம்பின செந்நிற அலைகளின் ஆங்காரத்தில் நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்தன அவ்வூரின் விசைப்படகுகள். விவிலியத்தில்…

    மேலும் வாசிக்க
  • 26 August

    ராகதேவன் – சேவியர் ராஜதுரை

    மாலையில் நடைபெறவிருக்கும் இளையராஜாவின் 50 வது வருட கான்சர்ட்டிற்கு செல்வதற்காக ப்ளா ப்ளா காரில் சிவகாசியிலிருந்து சென்னைக்கு புக் செய்திருந்தான் ராஜா. நேற்று நடந்திருந்த வேலியண்ட்டிற்கே சென்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது அவன் துவங்கியிருக்கும் சோசியல் மீடியா நெட்வோர்க்கிங் கம்பெனி வேலை…

    மேலும் வாசிக்க
  • 26 August

    நீலச்சுடர்- ராஜேஷ் வைரபாண்டியன்

    மனிதர்கள் தங்கள் வாழ்நாளை நொடிகளாலும் மணிகளாலும் அளந்து கொள்ளும்போது, மலைகள் தங்களை யுகங்களால் அளந்துகொள்கின்றன. அந்த யுகங்களின் கணக்கை மனிதர்களுக்கு நினைவுபடுத்தும் கடிகாரமாகவே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலர்கள் இருந்தன. அதிகாலைப் பனிமூட்டம் தேயிலைச் செடிகளின் தலைகளுக்கு மேல் மெல்லிய…

    மேலும் வாசிக்க
  • 26 August

    காலி இருக்கை-பாக்கியராஜ் கோதை

    என் பக்கத்து இருக்கைக்கு வரவிருப்பவர் ஒரு பெண் என்று தெரிந்ததும், அந்த இருக்கை எனக்குக் காலியாகத் தோன்றவில்லை. வந்தே பாரத் புறப்படுவதற்கு இன்னும் எட்டு நிமிடங்கள் இருந்தன. “பயணிகள் உடனடியாக ரயிலில் ஏறி அமருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நன்றி,” என்ற பெண் குரல் எழும்பூர் நிலையத்தின் இரும்புக் கூரைக்குள் எதிரொலித்து மெல்லக் கரைந்தது. மூடிய கதவுகளுக்குள் குளிரூட்டியின் சீரான உறுமல் கேட்டுக்கொண்டிருந்தது. நடைமேடைக் காற்றில் காஃபியின் மணத்துடன் வெப்பமடைந்த இரும்பின் மணமும் கலந்திருந்தது. எனக்குக் கிடைத்திருந்தது பெட்டியின் கடைசி வரிசையிலிருந்த நடு இருக்கை. நேற்று இரவு பதினொரு மணிக்குத்தான் பயணச்சீட்டு உறுதியானது. திருச்சியில் நடைபெறவிருந்த அலுவலகக் கூட்டத்திற்கு மேலாளர் செல்ல வேண்டியிருந்தது. அதிகாலையில் அவருடைய மாமனார் இறந்த செய்தி வந்ததால், அந்தப் பயணம் என்னுடையதாகிவிட்டது. என் வலப்புறமிருந்த ஜன்னல் இருக்கை காலியாக இருந்தது. பயணிகள் பட்டியலில்— ‘V. வித்யா. 32. F.’ பெயர், வயது, பெண்—முகமற்ற மூன்று தகவல்கள். அந்தக் காலி இருக்கையை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். பையை மேலே வைத்தேன். கைப்பேசியை எடுத்தேன். காரணமில்லாமல் பயணிகள் பட்டியலை மறுபடியும் பார்த்தேன். இடப்புற வழியோர இருக்கையில் அமர்ந்திருந்த முதியவர் தனது கண்ணாடியை மூக்கின் மேல் ஏற்றிக்கொண்டார். கண்ணாடியின் வலது காதுப்பிடி கருநூலால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. சொட்டு நீலம் போட்ட வெள்ளைச் சட்டை அணிந்திருந்தார். கால்களுக்கிடையில் வைத்திருந்த துணிப்பையின் உள்ளே கண்ணாடிக் குடுவை ஒன்று இருப்பதுபோல் எதுவோ ஒவ்வொரு அசைவுக்கும் மெதுவாக மோதியது. “திருச்சியா?” என்று கேட்டார். “ஆமாம்.” “நானும் திருச்சிதான். மகள் வீடு. நார்த்தங்காய் ஊறுகாய் கேட்டிருந்தா. அவளுக்கே செய்யத் தெரியாது. கடையில வாங்கிச் சாப்பிட்டுட்டு அது ஊறுகாய்னு சொல்றா.” நான் புன்னகைத்தேன். “நீங்க என்ன வேலை?” நான் பதில் சொல்வதற்குள் அவர் ரயில்வே கணக்குப் பிரிவில் முப்பத்தாறு ஆண்டுகள் பணியாற்றிய கதையைத் தொடங்கிவிட்டார். முதல் பத்து ஆண்டுகள் மதுரை, பிறகு திருச்சி, கடைசியில் சென்னை. ஓய்வு பெற்றுப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. பழைய அலுவலகத்தில் அவர் எழுதிய எண்களை இப்போதும் யாராலும் உடனடியாகப் படிக்க முடியாது என்று பெருமையாகச் சொன்னார். என் கைப்பேசி ஒலித்தது. மனைவி. “ரயில் கிளம்பிடுச்சா?” “இன்னும் இல்லை.” “இட்லி பையில இருக்கு. ரயில் சாப்பாடு பிடிக்கலைன்னா—” “சரி.” சிறிது மௌனம். “நேத்து நான் கேட்டதுக்கு நீங்க பதிலே சொல்லல.” முதியவர் பேசுவதை நிறுத்தாமல், ஊறுகாய்க் குடுவையின் மூடி இறுக்கமாக இருக்கிறதா என்று பையைத் திறந்து பார்த்தார். “இப்ப ரயில்ல இருக்கேன். திரும்பி வந்ததும் பேசிக்கலாம்.” “எப்பவும் அதைத்தான் சொல்றீங்க.” “மீட்டிங்குக்கு பேப்பர் பார்க்கணும். அப்புறம் கூப்பிடுறேன்.”…

    மேலும் வாசிக்க
  • 26 August

    லக்க லக்க பேயே! லுக்கு விடாதே! – ஷாராஜ்

    1 தர்மபுரி நகர வெளியூர் பேருந்து நிலையத்தை அவர்கள் அடையும்போது அஸ்தமனமாகிவிட்டிருந்தது. அப்போது ஆறே கால். அங்கிருந்து நகரப் பேருந்து பிடித்து இவர்களுக்கான நகரப் பேருந்து நிலையத்தை அடையும்போது ஆறே முக்கால். கருக்கிருட்டு ஆகிவிட்டது. நகருக்குள்ளும், நகருக்கு வெளியிலும், தூரத்துக் கிராமங்களுக்குமாக வீடு திரும்புகிற மக்கள் கூட்டம்…

    மேலும் வாசிக்க
Back to top button